உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 8/1 பக். 8-பக். 12 பாரா. 3
  • இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எலியாவுக்குப் பின் எலிசா தீர்க்கதரிசியாகிறார்
  • (2 இராஜாக்கள் 1:1–8:29)
  • இஸ்ரவேலும் யூதாவும் சிறைபிடிக்கப்படுகின்றன
  • (2 இராஜாக்கள் 9:1–25:30)
  • நமக்குப் பயனுள்ளது
  • பைபிள் புத்தகம் எண் 12—2 இராஜாக்கள்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைப்பவர் யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • 2 ராஜாக்கள் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 8/1 பக். 8-பக். 12 பாரா. 3

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது

இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

ஒன்று இராஜாக்கள் புத்தகத்தின் தொடர்ச்சியே இப்புத்தகம். இது 29 ராஜாக்களைப் பற்றிய ஒரு பதிவாகும்; அதாவது, வடக்கு ராஜ்யமான இஸ்ரவேலை ஆண்ட 12 ராஜாக்களையும் தெற்கு ராஜ்யமான யூதாவை ஆண்ட 17 ராஜாக்களையும் பற்றிய ஒரு பதிவாகும். எலியா, எலிசா, ஏசாயா ஆகிய தீர்க்கதரிசிகளின் செயல்களைப் பற்றியும் இரண்டு ராஜாக்கள் புத்தகம் விவரிக்கிறது. இப்பதிவுகள் காலவரிசைப்படி இல்லாவிட்டாலும், சமாரியாவும் எருசலேமும் அழிக்கப்படும் காலப்பகுதி வரையான சம்பவங்களை உள்ளடக்குகிறது. மொத்தத்தில் 340 வருட காலப்பகுதியை இப்புத்தகம் உள்ளடக்குகிறது; அதாவது, பொ.ச.மு. 920 முதல் எரேமியா இப்புத்தகத்தை எழுதி முடித்த வருடமான பொ.ச.மு. 580 வரையான காலப்பகுதியை உள்ளடக்குகிறது.

இரண்டு இராஜாக்கள் புத்தகத்தில் நமக்கு பயனுள்ள என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன? யெகோவாவையும் அவருடைய செயல்களையும் பற்றி இது நமக்கு என்ன கற்பிக்கிறது? இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ராஜாக்கள், தீர்க்கதரிசிகள், இன்னும் பிறரின் செயல்களிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்? இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து இதை ஆராய்ந்து பார்க்கலாம்.

எலியாவுக்குப் பின் எலிசா தீர்க்கதரிசியாகிறார்

(2 இராஜாக்கள் 1:1–8:29)

அகசியா ராஜா தன் வீட்டில் கீழே விழுந்து, வியாதிப்படுகிறார். தான் இறக்கப்போவதை எலியா தீர்க்கதரிசி மூலம் அறிந்துகொள்கிறார். அகசியா இறந்துவிடுகிறார், அவருக்குப் பின் அவருடைய சகோதரனான யோராம் ராஜாவாகிறார். இந்தச் சமயத்தில், யூதாவிலே யோசபாத் ராஜாவாக இருக்கிறார். எலியா, சுழல்காற்றில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்; அதன் பிறகு அவருடைய உதவியாளரான எலிசா தீர்க்கதரிசியாக ஆகிறார். அது முதல் சுமார் 60 வருடம் எலிசா தீர்க்கதரிசியாக சேவை செய்கிற காலத்தில், அநேக அற்புதங்கள் செய்கிறார்.​—⁠“எலிசாவின் அற்புதங்கள்” என்ற பெட்டியைக் காண்க.

இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாக மோவாபின் ராஜா கலகம் செய்கையில், யோராமும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனுக்கு எதிராக யுத்தம்பண்ண செல்கிறார்கள். யோசபாத் உண்மையுள்ளவராய் இருப்பதால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது. பிற்பாடு, சீரியாவின் ராஜா இஸ்ரவேலைத் திடீரென தாக்குவதற்குத் திட்டமிடுகிறான். ஆனால் எலிசா அத்திட்டத்தை முறியடிக்கிறார். இதனால், சீரிய ராஜா சீற்றமடைந்து, எலிசாவைப் பிடிப்பதற்காக “குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும்” அனுப்புகிறான். (2 இராஜாக்கள் 6:14) எலிசா இரண்டு அற்புதங்களை நடப்பித்து, அந்தச் சீரியர்களைச் சமாதானத்தோடே அனுப்பி வைக்கிறார். அதற்குப் பின்பு சீரிய ராஜாவான பெனாதாத், சமாரியாவை முற்றுகையிடுகிறார். இதனால் கடும் பஞ்சம் நிலவுகிறது, ஆனால் இந்தப் பஞ்சம் தீரும் என எலிசா முன்னறிவிக்கிறார்.

சில காலத்திற்குப் பின், எலிசா தமஸ்குவுக்கு போகிறார். இப்போது வியாதியாய் கிடக்கிற பெனாதாத் ராஜா, அவரிடத்திற்கு ஆசகேல் என்பவரை அனுப்பி, தன்னுடைய வியாதி குணமாகுமா என விசாரிக்கிறார். அவர் செத்து போவார் என்றும், அவருடைய இடத்தில் ஆசகேல் ஆட்சி செய்வார் என்றும் எலிசா முன்னறிவிக்கிறார். மறுநாளிலேயே, ஆசகேல் ஒரு “சமுக்காளத்தை” தண்ணீரில் நனைத்து, ராஜாவின் முகத்தை மூடி சாகடிக்கிறார், இவ்வாறு அவர் ராஜாவாகிறார். (2 இராஜாக்கள் 8:15) யூதாவிலே, யோசபாத்தின் மகனான யோராம் ராஜாவாகிறார், அவருக்குப் பிறகு அவரது மகன் அகசியா ராஜாவாகிறார்.​—⁠“யூதா மற்றும் இஸ்ரவேலின் இராஜாக்கள்” என்ற பெட்டியைக் காண்க.

வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:

2:9​—⁠‘எலியாவின் ஆவியில் இரட்டிப்பான பங்கைத்’ தரும்படி எலிசா ஏன் கேட்டார்? இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசியாக தன் பொறுப்பை நிறைவேற்ற, எலியாவிடமிருந்த அதே ஆவி எலிசாவுக்குத் தேவைப்படும்; அதாவது, தைரியமும் அஞ்சா நெஞ்சமும் தேவைப்படும். இதை அறிந்தே, எலியாவின் ஆவியில் இரட்டிப்பான பங்கைத் தரும்படி எலிசா கேட்டார். எலியா தனக்கு பிறகு தீர்க்கதரிசியாக சேவை செய்ய எலிசாவை நியமித்தார்; அதுமட்டுமல்ல, எலிசா ஆறு வருடம் எலியாவுக்கு உதவியாளராக இருந்திருந்ததால், அவரைத் தன் ஆவிக்குரிய தகப்பனாக கருதினார்; எலிசாவும் எலியாவின் ஆவிக்குரிய தலைப்பிள்ளை போல் இருந்தார். (1 இராஜாக்கள் 19:19-21; 2 இராஜாக்கள் 2:12) அதனால்தான், அப்பாவுடைய சொத்திலிருந்து தலைப்பிள்ளை இரண்டு பங்கைப் பெற்றுக்கொள்வது போல, எலிசாவும், எலியாவின் ஆவிக்குரிய சொத்திலிருந்து இரண்டு பங்கைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

2:11​—⁠‘எலியா சுழல்காற்றிலே ஏறிப்போன’ அந்தப் ‘பரலோகம்’ எது? இது இப்பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதியும் அல்ல, கடவுளும் தேவதூதர்களும் வாசஞ்செய்கிற ஆவிப் பகுதியும் அல்ல. (உபாகமம் 4:19; சங்கீதம் 11:4; மத்தேயு 6:9; 18:10) எலியா ஏறிச்சென்ற அந்தப் ‘பரலோகம்’ வளிமண்டலமாகிய ஆகாயத்தைக் குறிக்கிறது. (சங்கீதம் 78:26; மத்தேயு 6:26) அந்த அக்கினி ரதம், வளிமண்டத்தின் வழியே வேகமாக சென்று பூமியில் வேறொரு இடத்திற்கு எலியாவை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது; அங்கே அவர் சில காலம் வாழ்ந்து வந்தார். சொல்லப்போனால், சில வருடங்களுக்குப் பிறகு யூதாவின் ராஜாவான யோராமுக்கு அவர் கடிதமும் எழுதியிருக்கிறார்.​—⁠2 நாளாகமம் 21:1, 12-15.

5:15, 16​—⁠நாகமான் கொடுத்த காணிக்கையை எலிசா ஏன் வாங்கவில்லை? நாகமானை யெகோவாவின் வல்லமையினால் அற்புதமாகச் சுகப்படுத்தினாரே தவிர, தன்னுடைய வல்லமையினால் அல்ல என்பதை எலிசா அறிந்திருந்தார். அதனால்தான் அந்தக் காணிக்கையை அவர் வாங்க மறுத்தார். கடவுள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயமாக இருந்திருக்கும். உண்மை கிறிஸ்தவர்கள், யெகோவாவின் சேவையிலிருந்து தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்ள முயலுவதில்லை. அவர்கள் இயேசு கொடுத்த இந்த அறிவுரைக்குக் கவனம் செலுத்துகிறார்கள்: “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.”​—⁠மத்தேயு 10:8.

5:18, 19​—⁠மத சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டியிருந்ததால் தன்னை மன்னிக்கும்படியாகவா நாகமான் கேட்டார்? சீரிய ராஜா வயதானவராயும் பலவீனராயும் இருந்ததால் அவருக்கு நாகமான் கைலாகு கொடுக்க வேண்டியிருந்தது. ரிம்மோன் எனும் தெய்வத்தை ராஜா பணிந்து வணங்குகையில் நாகமானும் தலைக் குனிந்தார். அத்தெய்வத்தை வணங்குவதற்காக நாகமான் குனியவில்லை, மாறாக, ராஜாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பதற்காகவே அவ்வாறு குனிந்தார். ராஜாவுக்கு இந்தப் பணியைச் செய்ததற்காக தன்னை மன்னிக்கும்படியே யெகோவாவிடம் அவர் கேட்டார். நாகமான் சொன்னதை நம்பியதால்தான் “சமாதானத்தோடே போ” என்று அவரிடம் எலிசா சொன்னார்.

நமக்குப் பாடம்:

1:13, 14. காரியங்களை கூர்ந்து கவனித்து அறிவதும் தாழ்மையோடு நடந்துகொள்வதும் பல உயிர்களைப் பாதுகாக்கலாம்.

2:2, 4, 6. எலிசா ஒருவேளை ஆறு வருடம் எலியாவின் உதவியாளராக சேவை செய்திருந்தபோதிலும், அவரை விட்டுப் பிரிந்து போக எலிசா சம்மதிக்கவே இல்லை. உண்மையான பற்றுதலுக்கும் நட்புக்கும் எப்பேர்ப்பட்ட முன்மாதிரி!​—⁠நீதிமொழிகள் 18:24.

2:23, 24. இவ்வாறு கேலி செய்வதற்கு முக்கிய காரணம், எலியாவின் சால்வையை வழுக்கைத் தலையான ஒருவர், அதாவது எலிசா, உடுத்தியிருந்ததே. அவர் யெகோவாவின் ஒரு பிரதிநிதி என்பதை அந்தப் பிள்ளைகள் அறிந்திருந்தார்கள்; தங்களுடைய பகுதியில் அவர் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவரிடம், “ஏறிப் போ” என்று சொன்னார்கள், அதாவது பெத்தேலுக்கு போகும்படி, அல்லது எலியாவைப் போல எடுத்துக் கொள்ளப்படும்படி சொன்னார்கள். அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோர் காட்டியதைப் போன்ற அதே எதிர்க்கும் மனப்பான்மையைக் காட்டினர். கடவுளுடைய பிரதிநிதிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும்படி பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது எவ்வளவு முக்கியம்!

3:14, 18, 24. யெகோவாவின் வார்த்தை எப்போதுமே நிறைவேறும்.

3:22. அதிகாலை சூரிய வெளிச்சத்தில் தண்ணீர் இரத்தத்தைப் போல் காட்சியளித்தது. ஒருவேளை புதிதாக வெட்டப்பட்ட வாய்க்கால்களில் செம்மண் காணப்பட்டதே இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா இயற்கை நிகழ்வுகளைப் பயன்படுத்தலாம்.

4:8-11. சூனேமைச் சேர்ந்த ஒரு பெண், எலிசாவை ‘தேவனுடைய பரிசுத்த மனிதர்’ என உணர்ந்து உபசரித்தாள். யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாருக்கு நாமும் இதுபோல் செய்ய வேண்டாமா?

5:3. அற்புதங்களைச் செய்ய கடவுளால் முடியும் என்பதில் இஸ்ரவேலைச் சேர்ந்த சிறுமிக்கு விசுவாசம் இருந்தது. தன் விசுவாசத்தைக் குறித்து பேச அவளுக்கு தைரியமும் இருந்தது. இளம் பிள்ளைகளே, கடவுளுடைய வாக்குறுதிகளில் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துகிறீர்களா, ஆசிரியர்களிடமும் சக மாணவர்களிடமும் சத்தியத்தைக் குறித்துப் பேச தைரியத்தை வளர்த்துக்கொள்கிறீர்களா?

5:9-19. பெருமைப்பிடித்த ஒருவரால் மனத்தாழ்மையைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நாகமானின் உதாரணம் காட்டுகிறதல்லவா?​—⁠1 பேதுரு 5:5.

5:20-27. ஏமாற்றி வாழ முயன்றால் எப்பேர்ப்பட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! இரட்டை வாழ்க்கை வாழ்வதால் வரும் மனவேதனையையும், விபரீதங்களையும் பற்றி சிந்தித்துப் பார்ப்பது அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்ப்பதற்கு உதவும்.

இஸ்ரவேலும் யூதாவும் சிறைபிடிக்கப்படுகின்றன

(2 இராஜாக்கள் 9:1–25:30)

யெகூ, இஸ்ரவேலில் ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுகிறார். அவர் சற்றும் தாமதிக்காமல், ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார். அவர் திறம்பட்ட முறையில் ‘இஸ்ரவேலிலிருந்து பாகால் வணக்கத்தை அழித்துப் போடுகிறார்.’ (2 இராஜாக்கள் 10:28) அகசியாவின் தாயாகிய அத்தாலியாள், தன் மகனை யெகூ கொன்று போட்டதை அறிந்ததும், அவள் ‘எழும்பி யூத ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணி’ அரசதிகாரத்தைப் பறித்துக் கொள்கிறாள். (2 இராஜாக்கள் 11:1) அகசியாவின் சின்னஞ்சிறு மகனான யோவாஸ் மட்டும் காப்பாற்றப்படுகிறார். ஒளித்து வைக்கப்பட்டிருந்த அவர், ஆறு வருடங்களுக்குப் பிறகு யூதாவில் ராஜாவாக முடிசூட்டப்படுகிறார். ஆசாரியனாகிய யோய்தாவின் சொல்படி கேட்டு நடப்பதால், யோவாஸ் தொடர்ந்து யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்கிறார்.

யெகூவின் ஆட்சிக்குப் பிறகு இஸ்ரவேலில் ஆட்சி செய்பவர்கள் எல்லாருமே யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறார்கள். யெகூவின் பேரனுடைய காலத்தில் எலிசா இறந்து விடுகிறார். யோவாசுக்குப் பிறகு ஆகாஸ் யூதாவில் நான்காவது ராஜாவாகிறார். இவர் ‘யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதில்லை.’ (2 இராஜாக்கள் 16:1, 2) ஆனால், அவரது மகன் எசேக்கியா ராஜாவோ, எப்போதும் ‘யெகோவாவைச் சார்ந்திருக்கிறார்.’ (2 இராஜாக்கள் 17:20; 18:6) பொ.ச.மு. 740-⁠ன்போது, யூதாவை எசேக்கியாவும் இஸ்ரவேலை ஓசெயாவும் ஆட்சிசெய்கையில், அசீரியாவின் ராஜாவான சல்மனாசார் ‘சமாரியாவைப் பிடித்து இஸ்ரவேலை அசீரியாவுக்கு சிறையாகக் கொண்டுபோகிறான்.’ (2 இராஜாக்கள் 17:6) அதன் பிறகு, பிற தேசத்தார் இஸ்ரவேல் தேசத்திற்கு கொண்டுவரப்படுகிறார்கள், அங்கே சமாரியரின் மதம் உருவாகிறது.

எசேக்கியாவுக்கு பின் யூதாவை அரசாளுகிற ஏழு ராஜாக்களில் யோசியா மட்டுமே தேசத்திலிருந்து பொய் வணக்கத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறார். கடைசியாக, பொ.ச.மு. 607-⁠ல் பாபிலோனியர் எருசலேமைக் கைப்பற்றுகிறார்கள்; ‘யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்படுகிறார்கள்.’​—⁠2 இராஜாக்கள் 25:21.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

13:20, 21​—⁠இந்த அற்புதம், மத உருவச் சின்னங்களை வணங்குவதை ஆதரிக்கிறதா? ஆதரிப்பதில்லை. எலிசாவின் எலும்புகள் வணங்கப்பட்டதாக பைபிள் சொல்வதே இல்லை. எலிசா உயிரோடிருக்கையில் செய்த எல்லா அற்புதங்களையும் போல இதுவும் கடவுளுடைய வல்லமையால்தான் நிகழ்ந்தது.

15:1-6​—⁠அசரியாவை (உசியா, 15:6, NW அடிக்குறிப்பு) யெகோவா ஏன் குஷ்டரோகத்தால் வாதித்தார்? “அவன் [உசியா] பலப்பட்டபோது, . . . அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.” ஆசாரியர்கள் ‘உசியாவுக்கு எதிர்த்துநின்று’ “பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்” என்று சொன்னபோது, அவர்களிடம் உசியா கோபப்பட்டார். அதனால் அவர் குஷ்டரோகத்தால் வாதிக்கப்பட்டார்.​—⁠2 நாளாகமம் 26:16-20.

18:19-21, 25​—⁠எகிப்துடன் எசேக்கியா ஒப்பந்தம் செய்துகொண்டாரா? இல்லை. ‘யெகோவாவின் கட்டளைப்படி’ வந்ததாக ரப்சாக்கே மார்தட்டி சொன்னதைப் போலவே அவரது இந்தக் குற்றச்சாட்டும் பொய்யாகவே இருந்தது. ஆனால் உண்மையுள்ள எசேக்கியா ராஜா யெகோவாவையே முற்றிலும் சார்ந்திருந்தார்.

நமக்குப் பாடம்:

9:7, 26. பொய் வணக்கமும், குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதும் யெகோவாவுக்கு அருவருப்பானவை என்பதை ஆகாபின் குடும்பத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கடும் நியாயத்தீர்ப்பு காட்டுகிறது.

9:20. இரதத்தை வேகமாக ஓட்டுபவரென யெகூ பெயரெடுத்திருந்தது, தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மிகுந்த ஆர்வத்தோடு நிறைவேற்றுபவர் என்பதற்கு அத்தாட்சி அளித்தது. நீங்கள் மிகுந்த ஆர்வத்தோடு பிரசங்கிப்பவர் என்ற பெயரெடுத்திருக்கிறீர்களா?​—⁠2 தீமோத்தேயு 4:2.

9:36, 37; 10:17; 13:18, 19, 25; 19:20, 32-36; 20:16, 17; 24:13. ‘யெகோவாவின் வாயிலிருந்து புறப்படுகிற வசனம் எப்போதுமே அதை அனுப்பின காரியத்தை வாய்க்கச் செய்யும்’ என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம்.​—⁠ஏசாயா 55:10, 11.

10:15. தன்னுடன் இரதத்தில் ஏறிக்கொள்ளும்படி யெகூ கொடுத்த அழைப்பை யோனதாப் முழுமனதோடு ஏற்றுக்கொண்டதுபோல, ‘திரள் கூட்டத்தாரும்’ நவீன நாளைய யெகூவான இயேசு கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றுகிற அபிஷேகம் செய்யப்பட்டோருக்கும் மனமுவந்து ஆதரவு அளிக்கிறார்கள்.​—⁠வெளிப்படுத்துதல் 7:9.

10:30, 31. யெகூ தவறுகள் செய்தபோதிலும், அவர் செய்த எல்லா நல்ல காரியங்களையும் யெகோவா உயர்வாக மதித்தார். ஆம், ‘நம்முடைய பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல.’​—⁠எபிரெயர் 6:10.

13:14-19. யெகூவின் பேரனான யோவாஸ் அம்புகளால் தரையிலே அநேக தரம் அடிக்காமல் மூன்றுதரம் அடிப்பதோடு நிறுத்திக்கொண்டார், அதனால் சீரியர்களை முற்றிலுமாக முறியடிக்க முடியாமல் போனது. யெகோவாவின் வேலையை நாம் முழு இருதயத்தோடும் மிகுந்த ஆர்வத்தோடும் செய்ய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்.

20:2-6. யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’​—⁠சங்கீதம் 65:2.

24:3, 4. மனாசே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினதால், யூதாவுக்கு ‘மன்னிப்பை அருள [யெகோவா] சித்தமில்லாதிருந்தார்.’ குற்றமற்றவர்களின் இரத்தத்தைக் கடவுள் மதிக்கிறார். குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு காரணமானோரை அழிப்பதன் மூலம் அவர்களை யெகோவா பழிவாங்குவார் என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம்.​—⁠சங்கீதம் 37:9-11; 145:20.

நமக்குப் பயனுள்ளது

இரண்டு இராஜாக்கள் புத்தகம், வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறவராக யெகோவாவை வருணிக்கிறது. முதலில் இஸ்ரவேல் ராஜ்யத்தின் குடிமக்களும் பிற்பாடு யூதா ராஜ்யத்தின் குடிமக்களும் சிறைபிடித்து கொண்டுபோகப்பட்டது, உபாகமம் 28:15–29:28-⁠ல் முன்னறிவிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு அப்படியே நிறைவேறியதை நமக்கு வலியுறுத்திக் காட்டுகிறது. இந்தப் புத்தகம், எலிசாவை, யெகோவாவின் பெயரிலும் உண்மை வணக்கத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டிய ஒரு தீர்க்கதரிசியாக விவரிக்கிறது. எசேக்கியாவையும் யோசியாவையும் கடவுளுடைய சட்டத்திற்கு மதிப்பு காட்டிய பணிவான ராஜாக்களாக சித்தரிக்கிறது.

இரண்டு இராஜாக்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ராஜாக்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் பிறருடைய மனப்பான்மைகளையும் செயல்களையும் ஆழ்ந்து சிந்திக்கையில், எவற்றை பின்பற்றுவது, எவற்றை தவிர்ப்பது என்பதன் பேரில் பயனுள்ள பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம், அல்லவா? (ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11) ஆம், ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது.’​—⁠எபிரெயர் 4:12.

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

எலிசாவின் அற்புதங்கள்

1. யோர்தானின் தண்ணீர் இருபக்கமாகப் பிரிக்கப்படுகிறது.​—⁠2 இராஜாக்கள் 2:14

2. எரிகோ பட்டணத்தின் கெட்ட தண்ணீர் ஆரோக்கியமானதாக மாற்றப்படுகிறது.​—⁠2 இராஜாக்கள் 2:19-22

3. தவறு செய்த பிள்ளைகள் கரடிகளால் தாக்கப்படுகிறார்கள்.​—⁠2 இராஜாக்கள் 2:23, 24

4. படைவீரர்களுக்கு தண்ணீர் அளிக்கப்படுகிறது.​—⁠2 இராஜாக்கள் 3:16-26

5. ஒரு விதவை சமைப்பதற்கு எண்ணெயைப் பெறுகிறாள்.​—⁠2 இராஜாக்கள் 4:1-7

6. பிள்ளை இல்லாத ஒரு சூனேமிய பெண் கருத்தரிக்கிறாள்.​—⁠2 இராஜாக்கள் 4:8-17

7. ஒரு குழந்தை உயிர்த்தெழுப்பப்படுகிறது.​—⁠2 இராஜாக்கள் 4:18-37

8. விஷமுள்ள கூழ் சாப்பிடத்தக்க கூழாக மாறுகிறது.​—⁠2 இராஜாக்கள் 4:38-41

9. இருபது அப்பங்களைக் கொண்டு நூறு பேர் போஷிக்கப்படுகிறார்கள்.​—⁠2 இராஜாக்கள் 4:42-44

10. நாகமானின் குஷ்டரோகம் குணப்படுத்தப்படுகிறது.​—⁠2 இராஜாக்கள் 5:1-14

11. நாகமானின் குஷ்டரோகம் கேயாசியைப் பீடிக்கிறது.​—⁠2 இராஜாக்கள் 5:24-27

12. கோடாரி தண்ணீரில் மிதக்கும்படி செய்யப்படுகிறது.​—⁠2 இராஜாக்கள் 6:5-7

13. ஒரு வேலைக்காரன் தேவதூதர்களின் இரதங்களைக் காண்கிறான்.​—⁠2 இராஜாக்கள் 6:15-17

14. சீரிய படைவீரர்கள் குருடாக்கப்படுகிறார்கள்.​—⁠2 இராஜாக்கள் 6:18

15. சீரிய படைவீரர்கள் பார்வையடைகிறார்கள்.​—⁠2 இராஜாக்கள் 6:19-23

16. மரித்தவன் உயிரடைகிறான்.​—⁠2 இராஜாக்கள் 13:20, 21

[பக்கம் 12-ன் அட்டவணை/படங்கள்]

யூதா மற்றும் இஸ்ரவேலின் ராஜாக்கள்

சவுல்/தாவீது/சாலொமோன்: பொ.ச.மு. 1117/1077/1037a

யூத ராஜ்யம் வருடம் (பொ.ச.மு.) இஸ்ரவேல் ராஜ்யம்

ரெகொபெயாம் ․․․․․․ 997 ․․․․․․ யெரொபெயாம்

அபியா/ஆசா ․․․․ 980/978 ․․․․

․․ 976/975/952 ․․ நாதாப்/பாஷா/ஏலா

․․ 951/951/951 ․․ சிம்ரி/உம்ரி/திப்னி

․․․․․․ 940 ․․․․․․ ஆகாப்

யோசபாத் ․․․․․․ 937 ․․․․․․

․․․․ 920/917 ․․․․ அகசியா/யோராம்

யோராம் ․․․․․․ 913 ․․․․․․

அகசியா ․․․․․․ 906 ․․․․․․

(அத்தாலியாள்) ․․․․․․ 905 ․․․․․․ யெகூ

யோவாஸ் ․․․․․․ 898 ․․․․․․

․․․․ 876/859 ․․․․ யோவாகாஸ்/யோவாஸ்

அமத்சியா ․․․․․․ 858 ․․․․․․

․․․․․․ 844  ․․․․․․ இரண்டாம் யெரொபெயாம்

அசரியா (உசியா) ․․․․․․ 829 ․․․․․․

․․ 803/791/791 ․․ சகரியா/சல்லூம்/மெனாகேம்

․․․․ 780/778 ․․․․ பெக்காகியா/பெக்கா

யோதாம்/ஆகாஸ் ․․․․ 777/762 ․․․․

․․․․․․ 758 ․․․․․․ ஓசேயா

எசேக்கியா ․․․․․․ 746 ․․․․․․

․․․․․․ 740 ․․․․․․ சமாரியா கைப்பற்றப்பட்டது

மனாசே/ஆமோன்/யோசியா ․․ 716/661/659 ․․

யோவாகாஸ்/யோயாக்கீம் ․․․․ 628/628 ․․․․

யோகாக்கீன்/சிதேக்கியா ․․․․ 618/617 ․․․․

எருசலேம் அழிக்கப்பட்டது ․․․․․․ 607 ․․․․․․

[அடிக்குறிப்பு]

a சில வருடங்கள் ஆட்சியின் ஆரம்ப வருடத்தைத் தோராயமாகக் குறிக்கின்றன.

[பக்கம் 8, 9-ன் படம்]

நாகமான் தன்னையே தாழ்த்தினார், யெகோவாவின் வல்லமையால் குணமடைந்தார்

[பக்கம் 8, 9-ன் படம்]

எலியா ‘சுழல்காற்றிலே ஏறிப்போன போது’ அவருக்கு என்ன நடந்தது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்