-
ஏன் வாழ வேண்டும்?விழித்தெழு!—2014 | ஜூலை
-
-
அட்டைப்பட கட்டுரை
ஏன் வாழ வேண்டும்?
துருதுரு அனிதாவைa பார்த்தால் எல்லோருக்கும் பிடிக்கும். அவள் ரொம்ப புத்திசாலி, கலகலவென இருப்பாள். ஆனால் அனிதாவின் அடிமனதில், தான் எதற்கும் லாயக்கற்றவள் என்ற எண்ணம் இருந்தது; இது அவளுக்கு நாள்கணக்கில், வாரக்கணக்கில் ஏன், மாதக்கணக்கில்கூட நீடித்தது. அவள் சொல்கிறாள், “செத்துட்டா நல்லா இருக்கும்னு நான் தினமும் யோசிப்பேன். நான் செத்தா யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லைன்னு தோனும்.”
‘இந்தியாவில், 2012-ல் மட்டும் 1,35,445 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். சராசரியாக, ஒரு மணிநேரத்திற்கு 15 பேர் அல்லது ஒரு நாளுக்கு 371 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்.’—தி ஹிந்து, இந்தியா
அனிதாவுக்குத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இருந்தாலும், உயிர்வாழ்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று அவளுக்குத் தோன்றும். அவள் சொல்கிறாள்: “நான் ஏதாவது ஒரு விபத்துல செத்துட்டா நல்லா இருக்கும். நான் சாவ நினைச்சு பயப்படல, அது எப்போ வரும்னு காத்திட்டு இருக்கேன்.”
நிறைய பேர் அனிதாவைப் போல உணர்கிறார்கள். இன்னும் சிலர் தற்கொலை செய்ய நினைத்திருக்கிறார்கள், அதற்காகத் துணிந்திருக்கிறார்கள். உண்மையில் யாருமே தற்கொலை செய்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், தங்களுடைய பிரச்சினைக்கு முடிவுகட்டுவதற்காக தங்கள் வாழ்க்கைக்கே முடிவுகட்டிவிடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாவதற்குக் காரணம் தேடும் இவர்கள் வாழ்வதற்குக் காரணம் தேடினால் நிச்சயம் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள்.
வாழ மூன்று காரணங்கள், இதோ...
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
-
-
சூழ்நிலை மாறும்விழித்தெழு!—2014 | ஜூலை
-
-
அட்டைப்பட கட்டுரை | ஏன் வாழ வேண்டும்?
1 சூழ்நிலை மாறும்
“நாங்கள் எல்லா விதத்திலும் நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை; குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.”—2 கொரிந்தியர் 4:8.
தற்கொலை என்பது “தற்காலிக பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. எவ்வளவு மோசமான பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது தற்காலிகமானதே. சிலசமயம், பிரச்சினைகளைச் சரிசெய்யவே முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் சூழ்நிலை திடீரென மாறலாம்.—“அவர்களுடைய சூழ்நிலை மாறியது” என்ற கீழேயுள்ள தகவலைப் பாருங்கள்.
ஒருவேளை உங்கள் சூழ்நிலை மாறாவிட்டால் என்ன செய்வது? ஒரே சமயத்தில் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்ய நினைக்காமல், அந்தந்த நாளுக்கான பிரச்சினையைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 6:34.
ஆனால், உங்கள் சூழ்நிலை மாறவே மாறாது என்றால் என்ன செய்வது? ஒருவேளை, நீங்கள் குணப்படுத்த முடியாத நோயால் கஷ்டப்பட்டால், உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டால் அல்லது உங்கள் பாசத்துக்குரியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது?
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களால் ஒன்றை மாற்ற முடியும். அதாவது, பிரச்சினையை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்ற முடியும். உங்களால் சில விஷயங்களை மாற்ற முடியாதபோது அதை ஏற்றுக்கொள்ளுங்கள், நம்பிக்கையாக இருங்கள். (நீதிமொழிகள் 15:15) அப்போது விபரீதமான முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக பிரச்சினையைச் சமாளிப்பதற்கு வழி தேடுவீர்கள். இதன் விளைவு? உங்கள் சூழ்நிலை கைமீறி போய்விட்டது என நினைக்க மாட்டீர்கள், அதைச் சமாளிக்க முடியும் என்று நினைப்பீர்கள்.—யோபு 2:10.
யோசித்து பாருங்கள்: ஒரே எட்டில் ஒரு பெரிய மலையைத் தாண்ட முடியாது; ஒவ்வொரு படியாக எடுத்து வைத்தால்தான் முடியும். அதேபோல் உங்கள் சூழ்நிலை மலைபோல் தெரிந்தாலும் அதை உங்களால் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்ய முடியும்.
இன்று நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் சூழ்நிலையைப் பற்றி நண்பரிடம் அல்லது குடும்பத்தில் இருக்கும் ஒருவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். பிரச்சினையை எதார்த்தமாகப் பார்க்க அவர் உங்களுக்கு உதவலாம்.—நீதிமொழிகள் 11:14.
-
-
2 உதவி கிடைக்கும்விழித்தெழு!—2014 | ஜூலை
-
-
அட்டைப்பட கட்டுரை | ஏன் வாழ வேண்டும்?
2 உதவி கிடைக்கும்
“[கடவுள்] உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
சூழ்நிலையை உங்களால் மாற்ற முடியாது என்று நினைக்கும்போது இனி வாழ்வதைவிட சாவதே மேல் என்ற எண்ணம் வரலாம். ஆனால், உங்களுக்கு உதவி கிடைக்கும். எப்படி?
ஜெபம். வெறுமனே மன ஆறுதலுக்காக சிலர் ஜெபம் செய்யலாம். இன்னும் சிலர், ‘வேற வழியே இல்ல, ஜெபமாவது செஞ்சு பாக்கலாம்’ என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் ஜெபம் என்பது நம் கடவுளாகிய யெகோவாவிடம் பேசுவதாகும். உங்கள்மீது அவருக்கு அதிக அக்கறை இருக்கிறது. நீங்கள் பேசுவதைக் கேட்க அவர் ஆர்வமாக இருக்கிறார். எனவே, உங்கள் மனதை அவரிடம் கொட்டிவிடுங்கள். “கர்த்தர்மேல் [யெகோவாமேல்] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 55:22.
இன்றே கடவுளிடம் பேசுங்கள். யெகோவா என்ற அவருடைய பெயரைச் சொல்லி மனதிலிருந்து ஜெபம் செய்யுங்கள். (சங்கீதம் 62:8) நீங்கள் அவருடைய நண்பராக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (ஏசாயா 55:6; யாக்கோபு 2:23) நீங்கள் எங்கிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் தாராளமாகப் பேசலாம்.
“தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது அவர்களில் 90%-ற்கும் அதிகமானோர் அந்தச் சமயத்தில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தது ஒருவேளை தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது அவர்கள் சரியாகச் சிகிச்சை பெறாமல் இருந்திருக்கலாம்” என்று தற்கொலை தடுப்புக்கான அமெரிக்க நிறுவனம் சொல்கிறது
உங்களை நேசிப்பவர்கள். உங்களை உயிருக்கு உயிராய் நேசிக்கும் குடும்பத்தாரும் நண்பர்களும் உங்களுக்காக இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல இதுவரை நீங்கள் பார்க்காத சிலரும்கூட உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்கள். அவர்கள்தான் யெகோவாவின் சாட்சிகள்! அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தபோது தற்கொலை செய்துகொள்ள நினைத்த சிலரைப் பார்த்திருக்கிறார்கள்; சரியான சமயத்தில் அவர்களுக்கு உதவியும் இருக்கிறார்கள். இயேசுவைப் போலவே அவர்களுக்கும் மக்கள்மீது அக்கறை இருக்கிறது. உங்கள் மீதும் அவர்களுக்கு அக்கறை இருக்கிறது.—யோவான் 13:35.
மருத்துவ ஆலோசகர்கள். பொதுவாக, தற்கொலை எண்ணம் இருக்கிறவர்கள் மனச்சோர்வில் கஷ்டப்படலாம். மனச்சோர்வு என்பது நோய் அல்ல. ஜுரம், சளி போன்ற உடல் சுகவீனம்தான். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை நிச்சயம் குணப்படுத்த முடியும்.a
யோசித்து பாருங்கள்: நீங்கள் படுகுழியில் விழுந்துவிட்டால் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக மேலே ஏறி வரமுடியுமா? முடியாது! மனச்சோர்வில் நீங்கள் வாடினால் மற்றவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள தயங்காதீர்கள். மனச்சோர்வைச் சமாளிக்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
இன்று நீங்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கு மனச்சோர்வு இருந்தால் நல்ல மனநல மருத்துவரைப் பாருங்கள்.
a தற்கொலை எண்ணம் உங்களை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தால் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தையோ மருத்துவமனையிலுள்ள கவுன்சலிங் துறையையோ தொடர்புகொள்ளுங்கள். இப்படிப்பட்ட எண்ணம் இருப்பவர்களுக்கு உதவவே இவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
-
-
3 நம்பிக்கை இருக்கிறதுவிழித்தெழு!—2014 | ஜூலை
-
-
அட்டைப்பட கட்டுரை | ஏன் வாழ வேண்டும்?
3 நம்பிக்கை இருக்கிறது
“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருக்கும் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 14:1) நம் எல்லோருக்கும் ஏதோவொரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. சிலர் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். வாழ்க்கையில் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லாமல் தவிக்கிறார்கள். நீங்களும் அப்படித் தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! வாழ்க்கை நல்லபடியாக மாறும் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. உதாரணத்திற்கு:
நாம் சந்தோஷமாக இருக்கவே யெகோவா தேவன் நம்மைப் படைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:28.
பூமியை ஓர் அழகிய தோட்டமாக மாற்றப்போவதாக யெகோவா தேவன் வாக்கு கொடுத்திருக்கிறார்.—ஏசாயா 65:21-25.
கொடுத்த வாக்கை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். ஏனென்றால் வெளிப்படுத்துதல் 21:3, 4 சொல்கிறது:
“கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”
இது வெறும் கற்பனை அல்ல! இதை நிச்சயம் செய்யப்போவதாக யெகோவா தேவனே சொல்லியிருக்கிறார், இதைச் செய்வதற்கான சக்தியும் ஆசையும் அவருக்கு இருக்கிறது. பைபிள் கொடுக்கும் வாக்குறுதியில் நமக்குத் துளியும் சந்தேகம் வேண்டாம். நம்பிக்கையோடு வாழ இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்! ◼ (g14-E 04)
யோசித்து பாருங்கள்: வாழ்க்கையில் புயல்போன்ற பிரச்சினைகள் நம்மை சுழற்றிச் சுழற்றி அடித்தாலும் பைபிளிலுள்ள நம்பிக்கையான செய்தி நங்கூரம் போல நம்மைத் தாங்கிப் பிடிக்கும்.
இன்று நீங்கள் என்ன செய்யலாம்? பைபிளிலுள்ள நம்பிக்கையான செய்தியைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் பகுதியிலுள்ள சாட்சிகளைத் தொடர்புகொள்ள அல்லது இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள jw.org வெப் சைட்டைப் பாருங்கள்.a
a jw.org வெப் சைட்டில் வெளியீடுகள் > ஆன்லைன் லைப்ரரி என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் “மனச்சோர்வு” அல்லது “தற்கொலை” போன்ற வார்த்தைகளை டைப் செய்யுங்கள்.
-