படிப்பு 7
படிப்பு பலன்தருகிறது
1 உங்கள் விசுவாசம் விருத்தியடைவதைக் காண, கடவுளிடமாக உங்கள் அன்பு பலமாக வளருவதை உணர, மேலான பகுத்துணர்தலையும் உங்கள் ஊழிய முயற்சிகளிலிருந்து மிகுதியான கனியையும் அனுபவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த எல்லா அம்சங்களிலும் நீங்கள் செய்யும் முன்னேற்றம், கணிசமான அளவு, தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பின் வகையில் என்ன செய்கிறீர்கள் என்பதையே சார்ந்திருக்கிறது. கிறிஸ்தவர்களாக இப்படிப்பட்ட படிப்பு நம்முடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பாகமாகும். கடவுளைச் சேவிப்பதற்கு இப்பொழுது நம்மை ஆயத்தம்செய்வது மாத்திரமல்லாமல், அது கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கைக்குத் தயாரிப்பின் ஒரு பாகமாக இருக்கிறது. நீங்கள் படிக்கவேண்டிய விதத்தில் தனிப்பட்டவிதமாக படிக்கிறீர்களா?—மத். 4:4.
2 படிப்புக்கு போதுமான அளவு நேரத்தைக் கண்டடைவது அநேகமாக ஒரு பிரச்சினையாய் இருக்கிறது, ஆனால் அது சமாளிக்கமுடியாத ஒன்றல்ல. உங்கள் படிப்புத் திட்டத்தில் முன்னேற்றம் அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் வாராந்தர நடவடிக்கைகளின் அட்டவணையை கவனமாக ஆராய்ந்துபாருங்கள். ஏற்கெனவே பயன்படுத்தப்படாமல் அதிக நேரமிருப்பதை நீங்கள் காணமாட்டீர்கள். ஆனால் பைபிள் மற்ற வேலைகளிலிருந்து ‘நேரத்தை வாங்கும்படி’ நம்மைத் துரிதப்படுத்துகிறது. (எபே. 5:15-17, NW) உங்களிடம் தொலைக்காட்சி பெட்டி இருக்குமானால், வாரத்தில் அதை பார்ப்பதில் நீங்கள் செலவிடும் நேரத்தைப்பற்றிய ஒரு பதிவை ஏன் வைக்கக்கூடாது? அவ்விதமாக செலவழிக்கப்படும் நேரத்தின் அளவு உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும். எவ்வளவு நேரத்தை நீங்கள் தொலைபேசியில் “முக்கியமில்லாத பேச்சை” பேசுவதில், அயலகத்தாரைச் சென்றுபார்ப்பதில், அல்லது செய்தித்தாள் அல்லது உலகப்பிரகாரமான பத்திரிகைகளை வாசிப்பதில் செலவிடுகிறீர்கள்? இதிலிருந்து கொஞ்ச நேரம் ஒவ்வொரு வாரமும் நீடித்த நன்மைபயக்கக்கூடிய ஒன்று அல்லது அதிகமான படிப்பு நேரங்களாக பயன்படுத்த வழி உண்டாக்கப்படமுடியுமா? இப்படிப்பட்ட படிப்பை பகல்நேரத்தில், மாலையில் அல்லது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும் எப்பொழுதாயினும் செய்யலாம். பொதுவாக ஒரு நபர் தனக்கு அதிமுக்கியமாக இருக்கும் காரியங்களுக்காக நேரத்தைக் கண்டடைகிறார், யெகோவாவோடு தன்னுடைய உறவை உயர்வாக மதிக்கும் ஒரு நபருக்கு கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது “அதிமுக்கியமான காரியங்க”ளில் ஒன்று என்பதைப் பற்றி எந்தக் கேள்வியுமில்லை.—பிலி. 1:9-11, NW; நீதி. 2:1-5.
3 ஆரம்பத்தில், உட்கார்ந்து கவனத்தை ஒருமுகப்படுத்திப் படிப்பதை நீங்கள் கடினமாக காணலாம், காலப்போக்கில் அது அதிக சுலபமாகவும் அதிக இன்பமாகவும் ஆகிவிடும். ஆனால் நீங்கள் அதன் முக்கியத்துவத்தைப் போற்றுவதும், அதை ஒழுங்காகச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவதும் ஊக்கமாக முயற்சிசெய்வதும் அவசியமாகும்.
4 பொருளை நினைவில் வைக்கவும் அதைத் தெளிவாக விளக்க முடிகிறவர்களாய் இருக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தோடு படிப்பு செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வாசிப்பது, நம்முடைய வாழ்க்கையில் சரியான ஓரிடத்தைக் கொண்டிருந்தபோதிலும், அது படிப்பாகாது. படிப்பு ஆராய்ச்சி, சிந்தனை மற்றும் பொருத்தத்தைத் தேவைப்படுத்துகிறது. உங்களால் பலன்தரத்தக்கமுறையில் செய்யமுடிகிறதற்கும் அதிகமான பொருளை வாசித்துமுடிக்க திட்டமிடாதீர்கள் அல்லது உங்கள் படிப்பு மேலோட்டமாயும் பலனற்றதாயும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். மாறாக, ஆராய்ச்சிக்கும் தியானிப்புக்கும் நேரத்தை அனுமதியுங்கள். இருப்பினும், நீங்கள் உண்மையில் எதையாவது சாதிப்பதை காணும்வகையில் போதுமான பொருளை வாசித்துமுடிக்க திட்டமிடுங்கள்.
5 கிறிஸ்தவ மாணாக்கர் கடவுளுடைய சத்திய வார்த்தையின் ஆழமான காரியங்களைப் புரிந்துகொள்ள தன்னுடைய திறமையின்மீதே சார்ந்திருப்பதில்லை. கடவுளுடைய பரிசுத்த ஆவி, பக்தியுள்ள ஊழியர்களடங்கிய கடவுளுடைய அமைப்பு, வார்த்தை ஆகியவற்றின் உதவி தனக்குத் தேவை என்பதை அவர் உணருகிறார். இதன் காரணமாகவே படிப்பு சமயங்களில் ஜெபத்தின் மூலம் கடவுளுடைய ஆசீர்வாதத்தை நாடுவது பொருத்தமாயிருக்கிறது.—யாக். 1:5; லூக். 11:9-13.
6 பைபிள் படிப்பு. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் பைபிளிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி வாசிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அடிக்கடி இதை ஒரு குடும்பத் தொகுதியாக செய்யலாம், மாலையில் பைபிளின் ஓரிரு அதிகாரங்களை வாசிக்கலாம். இந்த வாசிப்பிலிருந்து நன்மையடைய ஒவ்வொரு பாராவுக்குப் பிறகும் வாசிப்பவரோ அல்லது தொகுதியில் ஒருவரோ பாராவிலுள்ள முக்கிய கருத்தின்பேரில் குறிப்புச் சொல்வது உதவியாக இருக்கிறது. பொருளை நீங்களே வாசித்துக்கொண்டால், வெளிப்படுத்தப்படும் கருத்து, அது எவ்விதமாக மீதமுள்ள அதிகாரத்தோடு பொருந்துகிறது மற்றும் தனிப்பட்டவிதமாக உங்களை எவ்வாறு அது பாதிக்கிறது என்பதை தியானம்செய்ய ஒரு கணநேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
7 பைபிள் வாசிப்பை நீங்கள் முடித்தபிறகு, குறிப்புகள் தெளிவில்லாமல் இருந்தால், ஆராய்வதற்கு கொஞ்சம் நேரத்தை எடுத்துக்கொள்வது பொருத்தமாயிருக்கும். ஒருவேளை குறிப்பிட்ட ஒரு வேதவசனத்தின் கருத்து அல்லது சொற்பொருள் உங்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். அதன்பேரில் எவ்விதமாக அதிகமான தகவலை பெற்றுக்கொள்ளமுடியும்? நீங்கள் முதலில் உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-களில் வேதவசன இன்டெக்ஸ் பகுதியை அந்த வேதவசனம் விளக்கப்பட்டிருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்கப் பார்க்க வேண்டும். உங்கள் கேள்வி “பரிசுத்தப்படுதல்” அல்லது “மகா பாபிலோன்” போன்ற வேதவசனத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு சொற்றொடரைப் பற்றியதாக இருந்தால், உங்கள் நூலகத்தில் உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-களில் தலைப்புப் பொருள் இன்டெக்ஸ் பகுதியில் தகவல்பெற தேடுவதன் மூலம் கூடுதலான குறிப்புகளை நீங்கள் கண்டடையலாம். அதே செயல்முறையே பைபிளில் குறிப்பிடப்பட்ட ஒரு நபர் அல்லது இடத்தைப் பற்றி அதிகமான தகவலைப்பெற பின்பற்றப்படலாம். வேதாகமங்களின்பேரில் உட்பார்வை-யிலும்கூட (Insight on the Scriptures) ஆட்களையும் இடங்களையும் பற்றிய கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வெறுமனே உங்கள் பைபிளின் பின்புறத்தில் அகர வரிசையிலுள்ள வேதவசன இன்டெக்ஸை பார்த்து பின்னர் காண்பிக்கப்பட்டிருக்கும் வேதவசன குறிப்புகளை எடுத்துப்பார்க்கலாம்.
8 பதில்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சி. சில சமயங்களில் ஒரு மறுசந்திப்பில் அல்லது ஒரு பைபிள் படிப்பில் ஒரு கேள்வி எழுப்பப்படலாம், எவ்விதமாக பதிலளிப்பது என்பதைப்பற்றி நீங்கள் நிச்சயமில்லாமல் இருக்கலாம். வீட்டில் படிப்பு சமயங்களின்போது இப்படிப்பட்ட கேள்விகளின்பேரில் ஆராய்ச்சி செய்யப்படலாம். இவ்விதமாக நீங்கள் ‘சத்திய வார்த்தையை சரியாகக் கையாளுவதை’ நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். (2 தீ. 2:15, NW) சிறிதளவு முயற்சியோடு பொதுவாக திருப்திகரமான பதிலை கண்டுபிடிக்க முடியும். முதலாவது, தேவைப்படுவது ஒரு வேதவசனத்தின் விளக்கமாக இருக்குமானால், சூழமைவை வாசிக்க நிச்சயமாயிருங்கள். அதைச் சுற்றியுள்ள பொருள் எதைப்பற்றி பேசுகிறது, ஆகவே கலந்தாலோசிக்கப்படும் வேதவசனத்தின் பொருள் என்ன? அதை நிச்சயப்படுத்திக்கொண்டபிறகு, கூடுதலான உதவிக்காக உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-களில் வேதவசன இன்டெக்ஸ் பகுதியை ஆராய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். கேள்வி கோட்பாடு அல்லது தீர்க்கதரிசனத்தைப் பற்றியதா, அல்லது அது மாணாக்கரின் வாழ்க்கையில் வேதப்பூர்வமான நியமங்கள் பொருத்துவதை உட்படுத்துகிறதா? உவாட்ச் டவர் பப்பிளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-களின் தலைப்புப் பொருள் மற்றும் வேதவசன இன்டெக்ஸ் பகுதிகள் ஆகிய இரண்டுமே, தேவையான தகவலைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவக்கூடும்.
9 பதில் உங்களிடமிருப்பதைக் குறித்து திருப்தியுள்ளவராக இருந்தால், அதற்கு உங்களிடம் என்ன நிரூபணங்கள் உண்டு என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய பதில் கேட்பவருக்கு பிடிவாதமாகத் தோன்றக்கூடிய வெறுமனே ஓர் உண்மையின் கூற்றா அல்லது சொஸைட்டியின் பிரசுரங்களில் அளிக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கான காரணத்தை உங்களால் பார்க்கமுடிகிறதா? அது உண்மை என்பதை உங்களால் காட்டமுடியுமா? நீங்கள் சந்திக்கிற நபர் உங்கள் முடிவுகளுக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்றோ வேதப்பூர்வமான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்றோ விரும்பலாம். குறிப்பை உங்களால் விளக்கமுடியுமா? மாணாக்கர் சரியான முடிவுக்கு வர உதவுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய வழிநடத்தும் கேள்விகளை மனதில் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய தலைப்புப் பொருளைப் பற்றிய படிப்பு பதிலைப் பலன்தரத்தக்கவிதமாக அளிப்பதற்கு ஆயத்தம்செய்ய உங்களுக்கு உதவக்கூடும்.
10 “காவற்கோபுர” படிப்புக்காக தயாரித்தல். சில தேசங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எதிர்ப்பு இருப்பதன் காரணமாக காவற்கோபுரம் ஒழுங்காக கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட இடங்களில் சகோதரர்கள் பழைய பிரதிகளை மறுபார்வை செய்யவோ முன்னால் படித்தவற்றில் அவர்கள் நினைவில் வைத்திருப்பதை சார்ந்தோ இருக்கவேண்டியுள்ளது. நீங்கள் படித்த அண்மையில் வெளிவந்த காவற்கோபுர பிரதிகளிலுள்ள முக்கிய குறிப்புகள் நினைவிலிருக்கிறதா? நாம் படிக்கும் பொருளை நினைவில் வைத்து பின்னர் நம் சொந்த வாழ்க்கையிலோ வெளி ஊழியத்திலோ பொருத்திப்பிரயோகிக்கும் நோக்கத்தோடு படிக்க வேண்டும்.
11 பத்திரிகையை முதலில் பெற்றுக்கொண்டவுடனே அதை முழுவதுமாக வாசித்துவிடுவது அனுகூலமாக இருக்கும், இவ்விதமாக பொருளின் அனைத்தையும் உள்ளிட்ட நோக்கைப் பெறமுடியும். பின்னர், பொருளைச் சபையில் படிப்பதற்கு கொஞ்சம் முன்பாக, அதை தனிப்பட்டவிதமாக மறுபார்வை செய்யவோ ஒரு குடும்பமாக அதை கலந்தாலோசிக்கவோ செய்வது நல்லது. இதை நீங்கள் செய்யும்போது, முதலாவது கட்டுரையின் தலைப்பையும் முக்கிய வேதவசனத்தையும் முழுக்கட்டுரையிலும் தடித்த எழுத்திலுள்ள உபதலைப்புகளையும் கவனியுங்கள். இது தலைப்புப் பொருளைப் பற்றிய அனைத்தையும் உள்ளிட்ட நோக்கை உங்களுக்குத் தருகிறது, தனித்தனி பாராவிலுமுள்ள விவரங்களின் சம்பந்தத்தைப் போற்றுவதற்கு உங்களுக்கு உதவிசெய்யும். இப்பொழுது முழு பாடத்தையும் ஒவ்வொரு பாராவாக வாசித்து, கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடித்து, எதிர்காலத்தில் பார்ப்பதற்காக முக்கிய குறிப்புகளை மாத்திரம் கோடிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாராவையும் முடித்தப்பிறகு, கேள்விக்கு உங்களுடைய சொந்த வார்த்தைகளில் பதில்சொல்ல முடியாதிருப்பதை நீங்கள் கண்டால், அவ்விதமாகச் செய்யும்பொருட்டு பாராவை மறுபடியுமாக வாசிப்பது நல்லது. கொடுக்கப்பட்டுள்ள பதில்களுக்கான வேதப்பூர்வமான காரணங்களுக்கு கவனம்செலுத்தி, மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள வேதவசனங்களை எடுத்துப்பார்த்து, கூட்டத்தில் குறிப்புச்சொல்ல விரும்பும் வேதவசனங்களைக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு உபதலைப்பின் கீழுள்ள எல்லா பாராக்களையும் முடித்தப்பிறகு, கொஞ்ச நேரம் நிறுத்தி, முழு தலைப்புப் பொருளையும் விரிவாக்குவதற்கு அந்தப் பொருள் எவ்விதமாக பங்களித்திருக்கிறது என்பதை மறுபார்வை செய்யுங்கள். கட்டுரையின் முடிவில் மறுபடியும் இதைச் செய்யுங்கள். நீங்கள் கற்றுக்கொண்டதை எங்கே உங்களால் பயன்படுத்தமுடியும், உங்கள் சொந்த வாழ்க்கையை இது எவ்வாறு பாதிக்கிறது அல்லது வேறு எவருக்காவது இதை எவ்வாறு விளக்குவீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இவ்விதமாக நீங்கள் வெறுமனே பதில்களைக் குறிப்பதாக இல்லாமல் ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் சம்பாதித்துக்கொண்டிருப்பீர்கள். (நீதி. 4:7, NW) சபையோடு காவற்கோபுரம் படிக்கையில் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். சபை புத்தகப்படிப்புக்கு தயாரிக்கையிலும்கூட அதே செயல்முறை பின்பற்றப்படலாம்.
12 குடும்ப படிப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் முழுமையாக பயனடையும்பொருட்டு உங்கள் படிப்பு ஏற்பாடுகளில் உங்கள் குடும்பத்தையும் உட்படுத்த நிச்சயமாயிருங்கள். தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் ஆவிக்குரிய விதமாக வறுமையிலிருக்க, குடும்பத்தின் தலைவர் கவனமாக படிப்பது அன்புள்ளதாக இருக்குமா? சரீரப்பிரகாரமாக மாத்திரமல்லாமல், ஆவிக்குரியவிதமாகவும்கூட குடும்பத் தலைவர் ‘தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரிக்கவேண்டிய’ பொறுப்புள்ளவராக இருக்கிறார். (1 தீ. 5:8) ஒருவருடைய பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே பைபிள் பயிற்றுவிப்பை கொடுப்பதிலிருக்கும் ஞானம் நீதிமொழிகள் 22:6-லுள்ள புத்திமதியில் காணப்படுகிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” உங்கள் பிள்ளை பயனடைவதற்கு மிகவும் சிறியவன் என்று எண்ணாதீர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். (2 தீ. 3:15) அதிவேகமாக முன்னேற்றஞ்செய்கிற குடும்ப அங்கத்தினர்கள் அநேகமாக குடும்ப வாசிப்பு மற்றும் படிப்பைக் கொண்டிருப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். தவறாமல் ஒழுங்காக இதைச் செய்வதே அதிக முக்கியமாகும்.
13 தினவாக்கியத்தை உங்கள் குடும்பத்தோடு நீங்கள் கலந்தாலோசித்து, குறிப்புச்சொல்ல அனுமதித்து, அவர்கள் புரிந்துகொண்டிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள கேள்விகளை கேட்கிறீர்களா? இது உங்கள் குடும்பத்துக்குச் சிறந்த ஆவிக்குரிய உணவை அளிக்கக்கூடும். அநேக குடும்பங்கள் உணவு வேளைகளில் இதைச் செய்கின்றனர். கூடுதலாக, ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு வாரமும் குடும்பமாக அதிக விரிவான படிப்புக்காக நேரத்தை ஒழுங்காக ஒதுக்கிவைக்க வேண்டும். அது ஒரு மாலைவேளையாகவோ வேறு ஒரு வசதியான நேரமாகவோ இருக்கலாம். அநேக பைபிள் தலைப்புப் பொருள்களை திருப்தியளிக்கும் வகையில் கிரகித்துக்கொள்ளவும், அவற்றின் பல்வேறு அம்சங்களை ஆராயவும், இருதயத்தில் பதியவைத்துக்கொள்ளவும் போதுமான நேரம் தேவைப்படுகிறது. ஒழுங்கான குடும்ப படிப்பு இப்படி ஒன்றாகச் சேர்ந்து படிப்பதிலிருந்து பயனடைய உங்கள் அனைவருக்கும் உதவிசெய்யும். இப்படிப்பட்ட ஒரு குடும்ப படிப்பு உங்களுக்கு இருக்கிறதா? வீட்டில் இது ஓர் ஒழுங்கான காரியமாக இல்லாவிடில், முழு குடும்பத்தோடும் இந்த விஷயத்தை இன்று கலந்துபேசி இதை உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாக்கிக்கொள்ள ஏன் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது?—எபே. 6:4; உபா. 6:4-7.
14 பிள்ளைகள் மிகவும் இளவயதுடையவர்களாக இருந்தால், ஒன்றாகச் சேர்ந்து படிப்பதற்கு அவர்கள் புரிந்துகொள்கிற பிரயோஜனமான பொருளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் எப்போதாவது அவர்கள் கிரகித்துக்கொள்ளக்கூடிய ஒரு குறிப்பின்பேரில் எளிய கேள்வியோடு இளம் பிள்ளைகளை உட்படுத்தும் வகையில் மிகவும் கடினமான பொருளும்கூட கலந்தாலோசிக்கப்படலாம். அநேக குடும்பங்கள் தங்கள் குடும்ப படிப்பு சமயத்தில் காவற்கோபுர படிப்பை தயார்செய்கின்றனர். ஆனால் குடும்பத்தின் தேவைகளுக்குப் பொருத்தமாயிருக்கும் எந்தப் பொருளும் படிப்புக்கு ஆதாரமாக பயன்படுத்தப்படலாம். இப்படிப்பட்ட பயிற்றுவிப்பு பலமான குடும்ப பந்தங்களையும் ஆவிக்குரிய போற்றுதலையும் கட்டியெழுப்பக்கூடும்.
15 விடாமுயற்சிக்கு பலன்கள். ஊக்கமான படிப்புக்கு கிடைக்கும் நேரடியான ஒரு பலன் பயிற்சி மற்றும் தூண்டுதலின் மூலமாக நினைவாற்றல் மேம்படுத்தப்படுவதாகும். வெளி ஊழியத்திலும் சபை கூட்டங்களிலும் படிக்கப்பட்ட குறிப்புகளை நினைவுக்குக்கொண்டுவருவதும் குறிப்புச்சொல்வதும் எளிதாக வந்துவிடுகிறது. புதிதாக அக்கறைக்காண்பிக்கும் ஆட்களின் கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஞாபகத்திலிருந்தே பதில்சொல்லவும், நம்முடைய குறிப்புகளை ஆதரிக்கும் வேதவசனங்களை உடனடியாக எடுக்கவும் முடிவதை நாம் காண்கிறோம். ஆனால் அதற்கும் மேலாக, படிப்பு கடவுளுடைய வார்த்தையின் சிறந்த, அனைத்தையும் உள்ளிட்ட அம்சங்களைப் பற்றிய அறிவை கொடுக்கிறது. அது பலமான விசுவாசத்தையும், பைபிள் நியமங்களைப்பற்றிய தெளிவான பகுத்துணர்வையும், யெகோவாவைச் சேவிப்பதில் அதிகமான சந்தோஷத்தையும் நமக்குக் கொடுக்கிறது.—எபி. 5:14.
16 ஞானமுள்ள ஆட்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட காரியங்களை முதன்மையான இடத்தில் வைக்கின்றனர். குறைந்த முக்கியத்துவமுள்ள காரியங்கள் நேரமில்லாமையால் விட்டுக்கொடுக்க வேண்டும், ஆனால் ஜீவவார்த்தையைப் படிப்பது ஒருபோதும் அப்படி செய்யப்படக்கூடாது. இந்த நோக்குநிலையை ஏற்றுக்கொள்கிறவர்களிடம்தாமே யெகோவா, ‘நான் உனக்குத் தென்படுவேன்,’ என்று வாக்களிக்கிறார். (1 நா. 28:9) வெறுமனே ஏட்டறிவை சம்பாதித்துக்கொள்வதற்காக மட்டுமல்லாமல் உங்கள் இருதயத்தைப் போஷிப்பதற்காக நீங்கள் படிப்பீர்களானால், இது விசேஷமாக உண்மையாய் இருக்கும். அவருடைய வார்த்தையைப் படிக்கையில் யெகோவாவுக்கும் அவருடைய அதிசயமான கிரியைகளுக்குமான உங்கள் அன்பும் போற்றுதலும் வளரட்டும்.
17 படிப்பதில் கடவுளுடைய ஊழியர்களின் உண்மையான நோக்கம், கொலோசெயர் 1:9, 10-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள அப்போஸ்தலன் பவுலின் இந்த ஜெபத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது: “நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள” வேண்டும்.
[கேள்விகள்]
1. படிப்பு நம்மை எதற்காக தயார் செய்கிறது?
2, 3. படிப்புக்கு நாம் எவ்வாறு நேரத்தைக் கண்டடையலாம்?
4, 5. படிப்பு எதை உட்படுத்துகிறது, படிப்பு சமயங்களை ஜெபத்தோடு ஆரம்பிப்பது ஏன் பொருத்தமாக உள்ளது?
6, 7. குடும்ப பைபிள் வாசிப்பிலிருந்து அதிகத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு பயனுள்ள என்ன ஆலோசனைகள் முயற்சிசெய்யப்படலாம்?
8, 9. பைபிள் கேள்விகளுக்கான பதில்களை எவ்விதமாக கண்டடையலாம், பதில்களோடுகூட நாம் எதை தேட வேண்டும்?
10, 11. காவற்கோபுர படிப்புக்கும் சபை புத்தகப்படிப்புக்கும் எவ்வாறு தயார்செய்வது என்பதன்பேரில் ஆலோசனைகள் கொடுங்கள்
12-14.குடும்ப படிப்பு ஏன் மிக முக்கியமானது, என்ன பொருள் படிக்கப்படலாம்?
15-17.ஒழுங்கான படிப்பின் பலன்கள் யாவை?