உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 16 பக். 78-84
  • கட்டியெழுப்பும் சம்பாஷணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கட்டியெழுப்பும் சம்பாஷணை
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • இதே தகவல்
  • உரையாடும் திறமைகளை வளர்ப்பது எப்படி
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் நோக்கத்தோடு பேச்சை ஆரம்பியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • உரையாடல் ஒரு கலை
    விழித்தெழு!—1995
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் உரையாடலை ஆரம்பியுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 16 பக். 78-84

படிப்பு 16

கட்டியெழுப்பும் சம்பாஷணை

1 நம்முடைய தினசரி சம்பாஷணையில் கடவுளுக்குக் கனத்தைக் கொண்டுவரும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். “தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்,” என்று பைபிள் சங்கீதக்காரன் எழுதினார். இது கடவுளுடைய வணக்கத்தார் அனைவருக்கும் போற்றத்தக்கதொரு மனநிலை அல்லவா? இது யெகோவாவின் விருப்பத்துக்கிசைவாக ஒருவருடைய உதடுகளைப் பயன்படுத்த தீர்மானமாயிருப்பதைத் தெரிவிக்கிறது.—சங். 44:8.

2 இப்படிப்பட்ட தீர்மானம் அத்தியாவசியமாகும், ஏனென்றால் சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தின் காரணமாக மற்றவர்களைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவர்களை இடித்து அழித்துவிடக் கூடியவற்றை சொல்லிவிடும் மனச்சாய்வு இருக்கலாம். (யாக். 3:8-12) ஆகவே, ‘பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாக’ பேசும்படியான வேதாகம ஊக்குவிப்பை நாம் எப்பொழுதும் மனதில் கொண்டிருப்பது எத்தனை நன்மையாக இருக்கிறது.—எபே. 4:29.

3 நிச்சயமாகவே, சம்பாஷணை என்பது செவிகொடுத்துக் கேட்பதையும்கூட உட்படுத்துவதை மனதில் வைக்க வேண்டும். ஏனென்றால் சம்பாஷணை எண்ணங்களின் பரிமாற்றமாக இருக்கிறது. கட்டியெழுப்புகிறவற்றை பேசுங்கள், ஆனால் மற்றவர்களும்கூட தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புக்கொடுங்கள். பொருத்தமான கேள்விகளைக் கேட்டு, ஒருவரைப் பேச வைக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அவர் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தை, நீங்கள் அடுத்து என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை திட்டமிட பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர் சொல்லவிருப்பதில் உண்மையான அக்கறையைக் காட்டுங்கள். மற்றவர்களின் எண்ணங்களில் இப்படிப்பட்ட அக்கறையை நீங்கள் காண்பிப்பது அவர்களைக் கட்டியெழுப்பும்.

4 கட்டியெழுப்பும் சம்பாஷணைக்கு அநேக வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, நீங்கள் வீட்டில் குடும்பத்தோடு இருக்கையில்; சகவேலையாட்களோடு அல்லது பள்ளித்தோழர்களோடு இருக்கையில்; மற்றும் உடன் விசுவாசிகளோடு கூட்டுறவுகொண்டிருக்கையில். ஊழியப் பள்ளியில் நம்முடைய அநேக பேச்சுக்கள் சம்பாஷணையின் கலையை வளர்த்துக்கொள்வதற்கு நமக்கு வாய்ப்புகளை அளிக்கின்றன.

5 வீட்டில். வீட்டில் சம்பாஷணை குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அதிகத்தைச் செய்யக்கூடும், ஆகவே அதை மேம்படுத்த தேவைப்படும் முயற்சி தகுதியுள்ளதாக இருக்கிறது. கணவன்மார்களும் மனைவிமார்களும் தங்களுடைய துணைவர்கள் தாங்கள் சொல்வதில் உண்மையான அக்கறையைக் காண்பிக்கையில் உற்சாகமாக உணருகின்றனர். மேலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர் தாங்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்டு அவர்களுக்கு உண்மையான அக்கறையை காண்பிக்கையில் அதை போற்றுகின்றனர். ஆனால் எவராவது உங்களோடு பேசிக்கொண்டிருக்கையில் நீங்கள் குறுக்கிட்டால் அல்லது ஒரு பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந்தால், அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் அக்கறையின்மையைத் தெரிவித்தால், உங்கள் வீட்டில் சம்பாஷணை சீக்கிரத்தில் மதிப்புக்குறைந்துவிடும். தான் சொல்வதில் அக்கறையற்றவராக இருக்கும் ஒரு நபரோடு பேசுவதை யாருமே உண்மையில் மகிழ்ந்து அனுபவிப்பதில்லை.

6 உணவுவேளைகள் கட்டியெழுப்பும் குடும்ப சம்பாஷணைக்கு ஒரு நல்ல வாய்ப்பினை அளிக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஓர் உணவுவேளையின்போது, சம்பாஷணையில் கொஞ்சம், தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் சிறுபுத்தகத்தில் காணப்படுகிறபடி ஒரு பைபிள் வசனத்தைச் சுற்றி இருக்கலாம். சில உணவுநேரங்களில், சமீப கால காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! இதழ்களில் வாசிக்கப்பட்ட தலைப்புப் பொருள்கள் அக்கறையூட்டும் மற்றும் பிரயோஜனமான கலந்தாலோசிப்புக்கு வகைசெய்யலாம். ஆனால் உணவுவேளை சம்பாஷணையை அவ்வளவு ஒழுங்கமைத்துவிடுவதால் அங்கே இயல்பான பேச்சுக்கும் சாவகாசமாக உணவை அனுபவிப்பதற்கும் இடமில்லாதபடி ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.

7 இயல்பான முறையில் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் உணவுவேளையின்போது கட்டியெழுப்பும் சம்பாஷணைக்குப் பங்களிக்கக்கூடும். இது புகார்செய்வதற்குரிய நேரமில்லை; அத்தகைய ஒரு காரியம் செரிமானத்தோடு குறுக்கிடக்கூடும். ஆனால் ஒரு நாள் முழுவதிலும் ஒரு நபர் தகவலளிக்கும் அல்லது ஒருவேளை வேடிக்கையான காரியங்களைப்பற்றிக் கேள்விப்படலாம். வெளி ஊழியத்தில் மகிழ்வளிக்கும் அனுபவம் கிடைக்கலாம். ஒருவேளை அக்கறைக்குரிய ஏதோவொன்றை செய்தித்தாளில் வாசிக்கலாம் அல்லது வானொலியில் கேட்கலாம். உணவுவேளையில் குடும்பத்திலுள்ள மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள இதை ஏன் மனதில் வைத்துக்கொள்ளக்கூடாது? விரைவில், வேகமாகச் சாப்பிட்டுவிட்டு அவசரமாக வெளியேறுவதற்குப் பதிலாக, நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பேசுவதற்குரிய இந்தச் சந்தர்ப்பங்களுக்காக எதிர்நோக்கியிருப்பதைக் காண்பீர்கள்.

8 குடும்பத்திலுள்ள மற்றவர்கள் இல்லாதபோது, தங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரோடும், தனிப்பட்டவிதமாக சம்பாஷிப்பதும்கூட பெற்றோருக்கு முக்கியமாக இருக்கிறது. வீட்டில் இருந்தாலும்சரி அல்லது தெருவில் நடந்துகொண்டிருந்தாலும்சரி, இது தளர்த்தப்பட்ட ஒரு சூழ்நிலையில் செய்யப்படும்போது மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சம்பாஷணைகள் ஓர் இளைஞன் வளர்ந்துவருகையில் அனுபவிக்கப் போகும் சரீர மாற்றங்களுக்கு அவனைத் தயார்செய்வதற்குச் சந்தர்ப்பத்தை அளிக்கின்றன. மேலும் இளைஞனின் இருதயத்தில் என்ன இருக்கிறது, வாழ்க்கையில் அவனுடைய உண்மையான ஆசைகளும் இலக்குகளும் என்ன என்பவற்றை இந்தக் கலந்தாலோசிப்புகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன, இவற்றை பயனுள்ள வழியில் உருவாக்க அவை வாய்ப்பளிக்கின்றன.

9 இப்படிப்பட்ட ஒரு சம்பாஷணையின்போது, உங்கள் பிள்ளை அவன் சிக்குண்டிருக்கும் கஷ்டங்களைப்பற்றி குறிப்பிட்டால், உடனடியாக அவனைத் திட்டுவது ஒருவேளை கலந்தாலோசிப்பை அந்த இடத்திலேயே நிறுத்திவிடலாம். மேலும், தன் கடந்த கால அனுபவத்தை மனதில்கொண்டவனாய், ஒருவேளை இந்த விஷயங்களை அவன் மறுபடியுமாக பேசமாட்டான். செவிகொடுத்துக் கேட்பதும் உங்களுடைய பங்கில் புரிந்துகொள்ளும் ஒரு மனநிலையைக் காட்டும் கேள்விகளைக்கொண்டு ஆராய்வதுமே பொதுவாக மேலானதாய் இருக்கிறது. பின்னர் தயவாகவும் ஆனால் உறுதியாகவும் அவன் பைபிள் நியமங்களிலிருந்து விலகிச்சென்றிருக்கும் இடங்களைத் திருத்திக்கொள்வதற்கு உதவிசெய்யலாம்.

10 மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கைக்கு சம்பாஷணை இன்றியமையாததாக இருந்தபோதிலும், எவராவது ஒருவர் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், சில சமயங்களில் நீங்கள் சொந்தமாக யோசனைப் பண்ணிக்கொண்டிருப்பதற்கு, மெளனமாக காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு வாய்ப்பைக்கொண்டிருப்பது நல்லதாக இருக்கிறது. ஆகவே அமைதியான காலப்பகுதிகள் அநேகமாக குடும்ப அங்கத்தினர்களால் போற்றப்படுகின்றன.

11 சாட்சிகொடுக்க சந்தர்ப்பங்களை உண்டுபண்ணிக்கொள்ளுதல். இயற்கையான முறையில் சம்பாஷிக்கும் திறமை ஒருவருடைய ஊழியத்தை எவ்வாறு பாதிக்கிறது? ஆம், ஒருசில சாட்சிகள் ஏன் எப்போதும் நேர்த்தியான அனுபவங்களைக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது என்பதாக நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அவர்கள் சம்பாஷணையில் முந்திக்கொள்வதே அதற்குக் காரணமாக இருக்கலாமல்லவா? பைபிள் நீதிமொழி சொல்கிறது: “ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்.”—நீதி. 15:7.

12 வழக்கமான வெளி ஊழியம் நீங்கலாகவும்கூட, மக்களை சம்பாஷணையில் ஈடுபடுத்தி அவர்களிடம் யெகோவாவைப்பற்றி பேசுவதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, கிறிஸ்தவ மனைவிமார்கள் அயலாரிடம் அல்லது வீட்டுக்கு வருகின்ற வியாபாரிகளிடம் சாட்சிகொடுக்கலாம். பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் வழியிலோ வகுப்புகளிடையேயோ சக மாணாக்கர்களை பைபிளைப்பற்றிய சம்பாஷணையில் ஈடுபடுத்துவதற்குச் சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கலாம். வீட்டுக்கு வெளியே வேலைசெய்பவர்கள் வேலைசெய்யுமிடங்களில், ஒருவேளை மதிய உணவுவேளையின்போது சாட்சிகொடுக்க முடிகிறவர்களாக இருக்கலாம். ஒரு பூங்காவில் நீங்கள் நடந்துகொண்டிருக்கையில், ஒரு கடையில் வரிசையில் நின்றுகொண்டிருக்கையில், அல்லது பேருந்துக்காக காத்திருக்கையிலும்கூட கட்டியெழுப்புகிற சம்பாஷணையில் மற்றவர்களை ஈடுபடுத்துவது சாத்தியமாகும். ராஜ்ய பிரசங்கிப்பு வேலை தடைசெய்யப்பட்டுள்ள சில தேசங்களில், ஊழியமானது முக்கியமாக முறைப்படி அமையாத சம்பாஷணைகளின் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்தப் பிரசங்கிப்பு முறை பயனுள்ளதாய் இருக்கிறது என்பது உண்மை கடவுளின் ஊழியர்களுடைய எண்ணிக்கையில் அந்த இடங்கள் அடிக்கடி அனுபவிக்கும் வேகமான வளர்ச்சியில் காணமுடிகிறது.

13 சாட்சிகொடுப்பதற்காகப் பல்வேறு சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு, வெறுமனே ஆரம்பத் தயக்கத்தை நீக்குவதற்கு சிநேகமுள்ள ஒரு வார்த்தையே நமக்குத் தேவையாக இருக்கலாம், பேச்சு ஆரம்பித்துவிடும். இயேசு இதற்கு ஒரு முன்மாதிரியை வைத்தார். ஒரு நண்பகலின்போது சமாரியாவில் ஓய்வெடுக்க சற்று நின்றபோது அங்கே தண்ணீர் மொள்ள வந்திருந்த ஒரு பெண்ணிடமிருந்து தண்ணீர் கேட்டார். யூதர்கள் சாதாரணமாக சமாரியரோடு பேசுவதில்லை என்பதால், இது அவளுடைய ஆர்வத்தைத் தூண்டியது. அவள் ஒரு கேள்வியைக் கேட்டாள். இயேசு அவளுடைய ஆர்வத்தை மேலுமாகத் தூண்டுபவராக, நித்திய ஜீவனை அளிக்கக்கூடிய தண்ணீர் தம்மிடமிருப்பதைப் பற்றிய ஒரு குறிப்போடு பதிலளித்தார். இதன் விளைவாக, அவளுக்குச் சாட்சிகொடுக்க வாய்ப்புக் கிடைத்தது. அவர் விரிவான ஒரு சாட்சிகொடுத்தலோடு ஆரம்பிக்கவில்லை என்பதை கவனியுங்கள்; வழியை தயார்செய்வதற்கு சிநேகப்பான்மையுள்ள சம்பாஷணையைப் பயன்படுத்தினார்.—யோவா. 4:5-42.

14 நீங்களும்கூட இப்படிப்பட்ட கட்டியெழுப்பும் சம்பாஷணைகளை ஆரம்பிக்கலாம். ஒரு பேருந்துக்காகக் காத்திருக்கையில், தூய்மைக்கேடு அல்லது போர் போன்ற ஏதோவொரு பிரச்சினையைப் பற்றி பேசும் ஒரு செய்தித்தாள் அல்லது பத்திரிகையின் கட்டுரைக்கு மற்றொரு நபரின் கவனத்தைத் திருப்பி, இவ்விதமாகக் கேட்கலாம்: “சமீப ஆண்டுகளில் இந்த நிலைமைகள் ஏன் இவ்வளவு மோசமாகியிருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? முழு பூமியும் வாழ்வதற்கு இன்பகரமான ஓரிடமாக மாறும் சமயம் எப்போதாவது வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” தற்போதிருக்கும் உள்ளூர் பிரச்சினை ஒன்றைப்பற்றி பேச ஆரம்பித்து பின்னர் இவ்விதமாகக் கேட்பதும்கூட பயனுள்ளதாக இருப்பது காணப்பட்டிருக்கிறது: “பரிகாரம் என்னவென்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?” இது இயற்கையாக மெய்யான பரிகாரத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு வழிநடத்துகிறது—கடவுளுடைய ராஜ்யம். நிச்சயமாகவே பகுத்துணர்வு பயன்படுத்தப்பட வேண்டும். மக்கள் பிரதிபலிக்காதபோது சம்பாஷணையைத் திணிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கிணற்றருகே சமாரியப் பெண் செய்தது போலவே, சிலர் மகிழ்ச்சியோடு செவிசாய்ப்பதை நீங்கள் காண்பீர்கள்.

15 கடவுளுடைய வார்த்தையைப் பற்றி சம்பாஷிக்க சந்தர்ப்பங்களை உண்டுபண்ணிக்கொள்வதற்கு மற்றொரு வழி, எளிதில் பார்க்கமுடிகிற இடத்தில் பைபிள் இலக்கியங்களை வைப்பதாகும். வீட்டில் இது செய்யப்படும்போது, விருந்தினர்கள் அடிக்கடி அதைப்பற்றி ஏதாவது சொல்ல, நேர்த்தியான சாட்சிக்கு வழி திறந்துவைக்கப்படுகிறது. நீங்கள் ஒரு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தால், உங்கள் மேசையின்மீது வைக்கப்படும் ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை “அது என்ன?” என்பதாக எவரையாவது கேட்கத் தூண்டுவது பெரும்பாலும் நிச்சயம். அப்பொழுது அவருக்குச் சொல்ல, சாட்சிகொடுக்க ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. அல்லது உணவு இடைவேளையின்போது அல்லது பொது போக்குவரத்தில் பிரயாணம்செய்யும்போது நீங்கள் ஒரு பைபிள் இலக்கியத்தைப் படித்தால், இது ஆர்வமுள்ள ஆட்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி பேசுவதற்கு வழியைத் திறக்கக்கூடும்.

16 அறிமுகமானவர்களோடு சம்பாஷணைகளும்கூட பைபிள் சத்தியங்களைப் பற்றி பேசுவதற்கு இயற்கையாக வழிநடத்தக்கூடும். இப்படிப்பட்ட சம்பாஷணைகள் பொதுவாக மக்கள் என்ன செய்திருக்கின்றனர்—எங்கே சென்றிருந்தார்கள், அவர்கள் என்ன கேட்டார்கள் அல்லது பார்த்தார்கள்—அல்லது அவர்கள் செய்ய திட்டமிட்டிருக்கும் காரியங்கள் போன்றவற்றை உட்படுத்துகின்றன. ஆகவே பேசுவதற்கு உங்களுக்கு வாய்ப்பிருக்கும்போது, நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்பதைப் பற்றி ஏன் பேசக்கூடாது? வட்டார மாநாட்டிற்கு ஆஜரானபின்பு, நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள் என்பது பற்றியும் முக்கிய சொற்பொழிவின் தலைப்பைப்பற்றியும் உடன்வேலைசெய்பவரிடம் அல்லது அயலகத்தாரிடம் சொல்லுங்கள்; அதைக் குறித்து அவர் ஒருவேளை கேள்விகள் கேட்கலாம். மற்றவர்கள் அவர்கள் செய்வதைப் பற்றி பேசுவது போல நீங்கள் காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-வில் என்ன படித்தீர்கள் என்பதைப்பற்றி சொல்லுங்கள். பிரதிபலிப்பான ஓர் உணர்ச்சியை நீங்கள் தூண்டிவிட்டிருந்தால், அவர்கள் கூடுதலான தகவலைக் கேட்பார்கள். இப்பொழுது மேலுமான ஒரு சாட்சியை கொடுப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. கடவுளுடைய நோக்கங்களுக்குக் கவனத்தைத் திருப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட இப்படிப்பட்ட சம்பாஷணைகள் நிச்சயமாகவே கட்டியெழுப்புகின்றன.

17 உடன்விசுவாசிகளோடு இருக்கையில். ஆவிக்குரிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளோடு இருக்கையிலும்கூட, சம்பாஷணை நற்செய்தியின் ஊழியர்களுக்கு பொருத்தமாக உயர்மட்டத்தில் இருப்பது சரியாகவே இருக்கிறது. அதன் நோக்கம் வெறுமனே நேரப்போக்காக இல்லாமல் கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும்.

18 இராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் கட்டியெழுப்பும் சம்பாஷணைக்குச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன. கூட்டங்கள் முடிந்தவுடன் அவசரமாகக் கிளம்பிவிடுவதைப் பழக்கமாக்கிக்கொள்ளாதீர்கள். வயதான, அனுபவமுள்ள சகோதரர்களோடும் கூச்சமான சுபாவமுள்ளவர்களாய் ஒதுங்கியிருக்கும் மனச்சாய்வுள்ளவர்களோடும் சம்பாஷணையில் ஏன் ஈடுபடக்கூடாது? பேசுவதற்கு அவ்வளவு அதிகம் இருக்கிறது. சமீப மாத காவற்கோபுர இதழ்களிலிருந்து விசேஷமான அக்கறைக்குரிய குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வரவிருக்கும் பேச்சு நியமிப்பைப் பற்றி நீங்கள் பேசலாம். உங்கள் பேச்சில் பயன்படுத்துவதற்கு மற்றவர்கள் புதிய கருத்துக்களை உடையவர்களாக இருக்கலாம், அல்லது நீங்கள் ஒருவேளை வேறு ஒருவருக்கு அவருடைய நியமிப்பில் உதவிசெய்ய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். வெளி ஊழிய அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்படலாம், அல்லது அந்த நாளின் கூட்டத்தில் நீங்கள் குறிப்பாக அனுபவித்த ஒரு பாகத்தைப் பற்றி பேசலாம். இப்படிப்பட்ட சம்பாஷணைகள் நிச்சயமாகவே கட்டியெழுப்புகின்றன.

19 பெரிய மாநாடுகளில் வித்தியாசமான இடங்களிலிருந்து வரும் சகோதர சகோதரிகளோடு பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அநேக சாட்சிகள் சிற்றுண்டிக்காக வரிசையில் இருக்கையிலும் அல்லது மாநாட்டு மைதானத்திற்குப் போய்வர பிரயாணம் செய்கையிலும் சம்பாஷணைகளில் ஈடுபட தீர்மானித்துக்கொள்கின்றனர். இதைச் செய்வதற்கு ஒரு வழி சகோதரரிடமோ சகோதரியிடமோ உங்கள் பெயரை சொல்லிவிட்டு அவருடைய பெயரைக் கேட்பதாகும். அவர் எவ்விதமாக ஒரு சாட்சியானார் என்பதைப் பற்றி விசாரியுங்கள். இது பொதுவாக மகிழ்வளிக்கும், கட்டியெழுப்பும் சம்பாஷணைக்கு வழிநடத்துகிறது.

20 வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கு நீங்கள் செல்லும் வழியில் பயனுள்ள கலந்தாலோசிப்புக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அர்த்தமற்ற சம்பாஷணையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அந்தக் குறிப்பிட்ட பிராந்தியத்தில் வீட்டுக்காரர்களை எவ்விதமாக அணுகுவது, அல்லது பேசுவதற்கு அதிக பொருத்தமானதாக இருக்கக்கூடிய தலைப்புப் பொருள்களைப் பற்றி ஏன் கலந்துபேசக்கூடாது? எழுப்பப்படும் மறுப்புகளை எவ்விதமாக கையாளுவது என்பதைப் பற்றி கலந்துபேசுவதும்கூட நன்மையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சமயங்களில் ஆவிக்குரிய காரியங்களைப்பற்றி சிந்திப்பதும் பேசுவதும் அதிக புத்துயிரளிப்பதாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.—பிலி. 4:8, 9.

21 எப்போதாவது ஒரு சமயம் நீங்கள் சகோதர சகோதரிகளடங்கிய ஒரு குழுவில் இருக்கும்போது, சம்பாஷணை குறிக்கோள் இல்லாமல் அல்லது குறிப்பாக கட்டியெழுப்புவதாக இல்லாமல் போகையில் என்ன செய்யலாம்? ஏன் அதிக உபயோகமுள்ள வழிகளில் சம்பாஷணையைத் திருப்பிவிடுவதற்கு ஒரு கேள்வியை எழுப்ப முயற்சிசெய்யக்கூடாது? திட்டவட்டமான ஒரு தலைப்புப் பொருளைக் கொண்டுவந்து அதைக் குறித்து கேள்விகளைக் கேளுங்கள். கலந்துகொள்கிறவர்கள் ஒரே தலைப்புப் பொருளில் சிறிது நேரம் நிலைத்திருந்து, பங்குகொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது கருத்து தெரிவிக்க வாய்ப்பை அளிக்கும் இப்படிப்பட்ட சம்பாஷணை இன்னுமதிக பிரயோஜனமுள்ளதாய் இருக்கும்.

22 சம்பாஷணை கிறிஸ்தவ சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களைப் பற்றி பேசுவதை உட்படுத்தும்போது, அது கட்டியெழுப்புவதாக இருப்பதற்குப் பதிலாக அவமரியாதையாயும் குற்றங்காண்பதாயும் ஆகிவிடாதபடிக்கு எச்சரிப்பாய் இருப்பதற்கு அவசியம் இருக்கிறது. எவரோ ஒருவர் மற்றவரின் குறைபாடுகளைப் பற்றி பேச ஆரம்பிக்கும்போது, சம்பாஷணையை மீண்டும் கட்டியெழுப்பும் திசையில் திருப்புவதற்கு உங்களுக்கு தைரியம் இருக்குமா? யெகோவாவின் அமைப்புக்கு நீங்கள் பற்றுமாறாதவராக இருந்து அதன் அங்கத்தினர்களில் ஒருவரை பாதுகாப்பீர்களா? ஒரு சிறிய விஷயம், என்பதாக எவராவது சொல்லக்கூடும். ஆனால் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரிடம் குற்றங்கண்டுபிடிப்பது, கடவுளுடைய சொந்த ஏற்பாடுகளுக்கு விரோதமாக குறைகூறுவதற்கு வழிநடத்தக்கூடும் என்பது நினைவில் வைக்கப்படுகையில் அத்தனை சிறிய விஷயமாக இல்லை!—யாக். 5:9; 2 கொ. 10:5.

23 சில சமயங்களில் சம்பாஷணை விளையாட்டுத்தனமான போக்கில் செல்லவும் வேடிக்கையான செய்தித்துணுக்குகள் சொல்லப்படவுங்கூடும். இப்படிப்பட்ட சம்பாஷணை இளைப்பாறுதலாகவும் பிரயோஜனமானதாகவும்கூட இருக்கக்கூடும். ஆனால் கிறிஸ்தவ ஊழியர்களுக்குப் பொருத்தமாயிராத பேச்சாக தரங்குறைந்துவிடாதபடிக்கு கவனம் செலுத்துவது அவசியமாகும். பைபிள் ஆலோசனை மனதில் வைக்கப்பட வேண்டும்: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.”—எபே. 5:3, 4.

24 ஆகவே, யெகோவாவின் ஊழியர்களாக, எல்லா சமயங்களிலும் நம்முடைய சம்பாஷணை அவருக்கு கனமுண்டாக இருப்பதாக. இப்படிச் செய்வதன் மூலம் நாம் அப்போஸ்தலன் பவுல் பதிவுசெய்த நேர்த்தியான ஆலோசனையையும்கூட பொருத்திப் பிரயோகித்துக்கொண்டிருப்போம்: “நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.”—ரோ. 15:2.

[கேள்விகள்]

1, 2. நம்முடைய சம்பாஷணையை எது வேறுபடுத்திக் காட்ட வேண்டும்?

3, 4. சம்பாஷணையில் பேசுவதைத் தவிர வேறு எதுவும் உட்பட்டிருக்கிறது, அதை நாம் எங்கே பழகிக்கொள்ளலாம்?

5-7.குறிப்பாக உணவுவேளைகளில், குடும்ப சம்பாஷணையை முன்னேற்றுவிப்பதற்கு ஒருசில ஆலோசனைகள் கொடுங்கள்.

8-10.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே தனிப்பட்ட சம்பாஷணைகள் ஏன் முக்கியமாக இருக்கின்றன, அவர்கள் எவ்விதமாக பெற்றோரால் உற்சாகப்படுத்தப்படலாம்?

11, 12. வழக்கமான வெளி ஊழியம் நீங்கலாக, சாட்சிகொடுக்க என்ன சந்தர்ப்பங்கள் இருக்கின்றன?

13-16. சாட்சிகொடுப்பதற்கு வழியைத் திறந்துவைக்கும் சம்பாஷணையை ஊக்குவிக்க என்ன முறைகள் பயன்படுத்தப்படலாம்?

17-20. உடன்சாட்சிகளோடு இருக்கையில் கட்டியெழுப்பும் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்கள் சம்பந்தமாக சில ஆலோசனைகள் கொடுங்கள்.

21-24. ஒரு குழுவின் சம்பாஷணைக் கட்டியெழுப்பத் தவறினால் அதைக் குறித்து நாம் தனிப்பட்டவிதமாக என்ன செய்யலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்