-
பைபிள் புத்தக எண் 64—3 யோவான்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
1. மூன்று யோவான் யாருக்கு எழுதப்பட்டது, அவரைப் பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம்?
யோவான் அதிகம் நேசித்த உண்மை கிறிஸ்தவரான காயுவுக்கு எழுதப்பட்டிருக்கிறது இந்த நிருபம். காயு என்ற இந்தப் பெயர், ஆரம்ப கால சபையில் பொதுவாக நன்கு அறியப்பட்ட பெயர். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இன்னும் நான்கு இடங்களில் இப்பெயர் காணப்படுகிறது. குறைந்தது மூன்று அல்லது ஒருவேளை நான்கு பேர் அப்பெயரில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. (அப். 19:29; 20:4; ரோ. 16:23; 1 கொ. 1:15) யோவான் இந்த நிருபத்தைக் காயுவுக்கு எழுதினபோதிலும் அவர் மேற்குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவர் என திட்டமாய் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. காயுவைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் இதுவே: அவர் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர், யோவானின் பிரத்தியேக நண்பர், இந்த நிருபம் தனிப்பட்ட விதத்தில் அவருக்காகவே எழுதப்பட்டது. அதன் காரணமாகவே இந்நிருபத்தில் எப்போதும் “நீ” என்பதாக ஒருமையில் சொல்லப்படுகிறது.
2. மூன்று யோவானின் எழுத்தாளர், எழுதப்பட்ட காலம், இடம் ஆகியவற்றை எது அடையாளம் காட்டுகிறது?
2 தொடக்க வார்த்தைகளும், முடிவான வாழ்த்துதல்களும் இரண்டு யோவானில் காணப்படுவதைப் போன்றே உள்ளன; எழுத்தாளர் தன்னை ‘மூப்பர்’ என மறுபடியுமாக அடையாளம் காட்டுவதால், இந்த நிருபத்தின் எழுத்தாளரும் அப்போஸ்தலனாகிய யோவானே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (2 யோ. 1) பொருளடக்கத்திலும் மொழிநடையிலும் ஒத்திசைவு காணப்படுகிறது. எனவே, மற்ற இரண்டு நிருபங்களைப் போலவே இதுவும் எபேசுவில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் ஏறக்குறைய பொ.ச. 98-ல் எழுதப்பட்டதைத் தெரிவிக்கிறது. இது சுருக்கமாக இருப்பதால், ஆரம்ப கால எழுத்தாளர்கள் இதிலிருந்து மிக அரிதாகவே மேற்கோள் காட்டினர். ஆனால், தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் ஆரம்ப கால புத்தகப் பெயர் பட்டியல்களில் இரண்டு யோவானுடன் இந்த நிருபமும் காணப்படுகிறது.a
3. மூன்று யோவானின் மூலம் யோவான் எதை குறிப்பிடுகிறார், ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் சகோதரத்துவத்தைப் பற்றி ஆர்வத்திற்குரிய என்ன காட்சியை நாம் பெறுகிறோம்?
3 பயணிகளாக வரும் சகோதரர்களை காயு உபசரித்தார்; அதற்கான போற்றுதலை அவருக்கு யோவான் தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார். முதன்மையாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு என்பவனின் தொல்லையையும் குறிப்பிடுகிறார். தெமேத்திரியு என பெயர் குறிப்பிடப்பட்டவரே இந்த நிருபத்தைக் காயுவுக்கு எடுத்துச் சென்றதாக தோன்றுகிறது. எனவே, இவர் யோவானால் அனுப்பப்பட்டவராகவும் அவருடைய பயணத்தின்போது காயுவின் உபசரிப்பு தேவைப்பட்டவராகவும் இருந்திருக்கலாம். காயுவின் உபசரிப்பை பெற இந்த நிருபம் தெமேத்திரியுவுக்கு நிச்சயம் உதவியிருக்கும். காயுவைப் போலவே இந்தத் தியோத்திரேப்புவையும் தெமேத்திரியுவையும் பற்றி இங்கே நாம் வாசிப்பதற்கும் அதிகமாக வேறு எதுவும் தெரியாது. எனினும், ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடம் நிலவிய நெருங்கிய சர்வதேச சகோதரத்துவத்தைப் பற்றி கருத்தைக் கவரும் காட்சியை இந்த நிருபம் அளிக்கிறது. மற்ற விஷயங்களோடு, ‘அவருடைய நாமத்தினிமித்தம்’ பயணம் செய்து வருவோரை உபசரிக்கும் பழக்கமும் இதில் உட்பட்டிருந்தது. விருந்தினரைத் தனிப்பட்ட விதமாய் அறிந்திராத போதிலும் அவர்கள் உபசரித்தனர்.—வச. 7.
மூன்று யோவானின் பொருளடக்கம்
4. யோவான் எதற்காக காயுவைப் பாராட்டுகிறார், என்ன கீழ்ப்படியாத பண்பை அவர் கண்டிக்கிறார், என்ன நல்ல அறிவுரையை அவர் கொடுக்கிறார்?
4 உபசரிக்கும்படியும் நற்கிரியைகளை செய்யும்படியும் அப்போஸ்தலன் அறிவுரை கூறுகிறார் (வச. 1-14). காயு இன்னும் ‘சத்தியத்தில் நடக்கிறார்’ என்பதைக் கேள்விப்பட்டதில் யோவான் அகமகிழ்கிறார். சந்திக்க வரும் சகோதரர்களை அன்போடு கவனிப்பதன் மூலம் உண்மையுள்ள ஊழியம் செய்துவரும் காயுவை அவர் பாராட்டுகிறார். “நாம் சத்தியத்துக்கு உடன் ஊழியராகும்படி அப்படிப்பட்டவர்களை உபசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று யோவான் சொல்கிறார். முன்பு யோவான் சபைக்கு எழுதினார்; ஆனால் தன்னை எல்லாருக்கும் மேலாக உயர்த்திக்கொள்ளும் மனம்படைத்த தியோத்திரேப்பு யோவானிடமிருந்தோ பொறுப்புள்ள மற்றவர்களிடமிருந்தோ வரும் எதையும் மதிப்புடன் ஏற்பதில்லை. எனவே, யோவான் வருகையில், ‘பொல்லாத வார்த்தைகளை அலப்பிவருவதற்காக’ அவன் பதில் சொல்லியாக வேண்டும். பிரியத்திற்குரிய காயு, “தீமையானதையல்ல நன்மையானதையே பின்பற்று”ம்படி அறிவுரை பெறுகிறார். போற்றத்தக்க முன்மாதிரி வைப்பவராய் தெமேத்திரியு குறிப்பிடப்படுகிறார். பல விஷயங்களை எழுதுவதைப் பார்க்கிலும், சீக்கிரத்தில் காயுவை நேரில் காணும் வாய்ப்பிருப்பதை யோவான் வெளிப்படுத்துகிறார்.—வச. 4, 8, 10, 11, தி.மொ.
ஏன் பயனுள்ளது
5. (அ) முன்மாதிரியான கண்காணியாக தன்னை யோவான் எவ்வாறு வெளிக்காட்டினார், என்ன நிலைமையைப் பாதுகாத்து வருவது முக்கியமாயிருந்தது? (ஆ) தியோத்திரேப்புக்கு எதிராக யோவான் ஏன் ஒளிவுமறைவின்றி பேசினார்? (இ) நாம் இன்று எதற்கு ஆர்வமுள்ளோராக இருக்க வேண்டும், யோவான் குறிப்பிட்ட எந்த நியமம் இதற்கு இசைவாக உள்ளது?
5 தீங்குண்டாக்கும் செல்வாக்குகளிலிருந்து சபையைப் பாதுகாக்கும் ஆர்வமுடைய, முன்மாதிரியான கண்காணி என அப்போஸ்தலனாகிய யோவான் தன்னை வெளிக்காட்டுகிறார். சபையில் நிலவிய அன்பும் உபசரிக்கும் பண்பும் பாராட்டுக்குரியது. இந்தச் சந்தோஷமான சூழ்நிலைமையைப் பாதுகாப்பது உண்மையிலேயே அவர்களுடைய கடமை. அப்போதுதான், அந்த இடத்திலுள்ள சகோதரரும், அவர்களுக்குள் வந்த “அந்நியரும்,” (கிறிஸ்தவ உபசரிப்பாளர்கள் முன்பின் அறிந்திராதோர்) ‘சத்தியத்துக்கு உடன் ஊழியராக’ ஒன்றுசேர்ந்து சேவிக்க முடியும். (வச. 5, 8, தி.மொ.) எனினும், தியோத்திரேப்பு மேட்டிமை கண்ணனாய் இருந்தான்; இது யெகோவா அருவருக்கும் குணங்களில் ஒன்று. மேலும் அவன் தேவராஜ்ய அதிகாரத்தை மதிக்காதவன்; ஏன், அப்போஸ்தலன் யோவானைப் பற்றியும் பொல்லாதவற்றை அலப்பிக் கொண்டிருந்தானே. (நீதி. 6:16, 17, தி.மொ.) சபையார் காட்டிய கிறிஸ்தவ உபசரிப்புக்கு இடைஞ்சலாய் இருந்தான். சபையில் இருந்த இந்த கெட்ட செல்வாக்கை யோவான் தைரியமாய் கண்டிக்கிறார். அதே சமயம், உண்மையான கிறிஸ்தவ அன்பை ஆதரித்து அதற்கு சாதகமாக, ஒளிவுமறைவின்றி யோவான் பேசுகிறார். இன்று நாம், மனத்தாழ்மையைக் காத்துவருவதற்கும், சத்தியத்தில் நடப்பதற்கும், கடவுளின் அன்பையும் தயாளத்தையும் பழக்கமாய் செயல்படுத்துவதற்கும் ஆர்வமுள்ளோராய் இருக்க வேண்டும். இது, யோவான் குறிப்பிட்ட இந்த நியமத்துக்கு இசைவாய் இருக்கிறது: “நன்மை செய்கிறவன் கடவுளுக்குரியவன்; தீமை செய்கிறவன் கடவுளைக் கண்டதேயில்லை.”—3 யோ. 11, தி.மொ.
-
-
பைபிள் புத்தக எண் 65—யூதா‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
பைபிள் புத்தக எண் 65—யூதா
எழுத்தாளர்: யூதா
எழுதப்பட்ட இடம்: பலஸ்தீனா (?)
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 65
1. சபைக்குள் நிலவிய என்ன நிலைமைகளால், தன் சகோதரர்களின் நன்மைக்காக உறுதியான ஒரு நிருபம் எழுதுவதை அவசியம் என யூதா உணர்ந்தார்?
யூதாவின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆபத்து! கிறிஸ்து இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு, அந்நிய போதகங்கள் கிறிஸ்தவ சபைக்குள் மெல்ல மெல்ல நுழைந்திருந்தன. பவுல் அப்போஸ்தலன் 14 ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தபடியே, விசுவாசத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு எதிரி படிப்படியாக ஊடுருவியிருந்தான். (2 தெ. 2:3) இந்த ஆபத்தைக் குறித்து சகோதரர்களை எச்சரிப்பதும், தற்காத்துக் கொள்ள செய்வதும் எவ்வாறு? வெளிப்படையாய் சொல்வதில் உறுதியும் கண்டிப்பும் மிக்க யூதாவின் நிருபத்தில் இதற்கான பதிலிருந்தது. யூதா தானே 3-ம் 4-ம் (தி.மொ.) வசனங்களில் தன் நிலையைத் தெளிவாக கூறினார்: ‘உங்களுக்கு எழுதுவது அவசியமென கண்டேன். சிலர் கள்ள வழியாய் நுழைந்துவிட்டார்களே; அவர்கள் நமது கடவுளின் கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுகிறவர்கள்.’ சரியான கோட்பாடு, ஒழுக்கநெறி ஆகியவற்றின் அஸ்திவாரங்களே ஆபத்திலிருந்தன. தன் சகோதரர்களின் நலனுக்காக போராடும்படி தான் அழைக்கப்பட்டிருப்பதாக யூதா உணர்ந்தார். அப்போதுதான், அதைப் பின்பற்றி அவர்களும் தங்கள் பாகத்தில் விசுவாசத்துக்காக கடினமாக போராட முடியும்.
2. (அ) யார் இந்த யூதா? (ஆ) இயேசுவுடன் இருந்த என்ன உறவை யூதா மிக உயர்வாய் மதித்தார்?
2 ஆனால், யார் இந்த யூதா? இந்த நிருபத்தை “இயேசுகிறிஸ்துவின் அடியானும் யாக்கோபின் சகோதரனுமான யூதா, . . . அழைக்கப்பட்டவர்களுக்கு” எழுதினாரென்று தொடக்க வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றன. இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் 2 பேர் யூதா என்ற பெயரில் இருந்ததால் இந்த யூதா, அல்லது யூதாஸ் ஓர் அப்போஸ்தலனா? (லூக். 6:16, NW) யூதா தன்னை அப்போஸ்தலன் என சொல்லிக் கொள்வதில்லை; அதற்குப் பதிலாக, அப்போஸ்தலர்களை ‘அவர்கள்’ என்ற படர்க்கைச் சொல்லால் குறிப்பிட்டு தன்னை அவர்களிலிருந்து பிரித்துக் காட்டுகிறார். (யூ. 17, 18) மேலும், அவர் தன்னை ‘யாக்கோபின் சகோதரன்’ என குறிப்பிடுகிறார். யாக்கோபு நிருபத்தின் எழுத்தாளரான, இயேசுவின் சகோதரனை இது குறிக்கிறது. (வச. 1) எருசலேமிலிருந்த சபையின் “தூண்களில்” ஒருவராக இருந்த இந்த யாக்கோபு எல்லாராலும் நன்கு அறியப்பட்டவர்; ஆகவேதான் யூதா தன்னை அவரோடு சம்பந்தப்படுத்தி அடையாளம் காட்டுகிறார். அப்படியென்றால் இவர் இயேசுவின் தம்பி, மற்றவர்களும் அவ்வாறே கருதினர். (கலா. 1:19; 2:9; மத். 13:55; மாற். 6:3) எனினும், இயேசுவுடனான இரத்த சம்பந்தமான உறவுக்கு யூதா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இயேசுகிறிஸ்துவின் அடியான்’ என தன் ஆவிக்குரிய உறவையே மனத்தாழ்மையுடன் வலியுறுத்தினார்.—1 கொ. 7:22; 2 கொ. 5:16; மத். 20:27.
3. யூதாவின் நம்பகத் தன்மையை எது நிரூபிக்கிறது?
3 பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மியூராடோரியன் சுருளில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது; இவ்வாறு இந்தப் பைபிள் புத்தகத்தின் நம்பகத் தன்மை ஆதரிக்கப்படுகிறது. மேலுமாக, (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த) இது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததென அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் ஒப்புக்கொண்டார். “ஒருசில வரிகளே இருந்தும், பரலோகக் கிருபைக்குரிய நற்பயன் விளைவிக்கும் வார்த்தைகள் நிறைந்த” படைப்பு என ஆரிகென் இதை குறிப்பிட்டார்.a டெர்ட்டுல்லியனும் இதை நம்பகமானதாக கருதினார். இது, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகம் என்பதில் சந்தேகமில்லை.
-