உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவாவை மகிமைப்படுத்த மற்றவர்களுக்கு உதவுதல்
    ராஜ்ய ஊழியம்—2002 | செப்டம்பர்
    • யெகோவாவை மகிமைப்படுத்த மற்றவர்களுக்கு உதவுதல்

      1 உலகம் முழுவதிலும் ஒரு முக்கியமான செய்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தச் செய்தி இதுவே: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” (வெளி. 14:6, 7) அந்த அறிவிப்பில் பங்கேற்பது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். யெகோவாவுக்குப் பயந்து அவரை தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் அவரைப் பற்றி என்ன அறிந்துகொள்ள வேண்டும்?

      2 அவருடைய பெயர்: இன்று ஜனங்கள் பொய்க் கடவுள்களிலிருந்து மெய்க் கடவுளை அவருடைய பெயரை வைத்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். (உபா. 4:35; 1 கொ. 8:5, 6) உண்மையில், பைபிள் எழுத்தாளர்கள் யெகோவா என்ற சிறப்பு பெயரை பைபிளில் 7,000-⁠க்கும் அதிக தடவை பயன்படுத்தினர். கடவுளுடைய பெயரை எப்பொழுது அறிமுகப்படுத்துவது என்பதில் நாம் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டியது பொருத்தமானாலும் அதை மறைக்கவோ அதைப் பயன்படுத்தாதிருக்கவோ கூடாது. மனிதகுலம் முழுவதும் தம் பெயரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம்.​—⁠சங். 83:⁠17.

      3 அவருடைய ஆளுமை: யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கு அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஜனங்கள் அறிந்திருக்க வேண்டும். அவருடைய தலைசிறந்த அன்பு, ஒப்பற்ற ஞானம், வழுவாத நீதி, சர்வ வல்லமை ஆகிய குணங்களையும், அத்துடன் இரக்கம், அன்புள்ள தயவு, இன்னும் பிற அருமையான குணங்களையும் அவர்கள் அறிய வழிசெய்ய வேண்டும். (யாத். 34:6, 7) தங்கள் உயிர் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதையே சார்ந்திருப்பதை புரிந்துகொண்டு, கடவுளிடம் ஆரோக்கியமான பயத்தோடிருக்கவும், அவரை உயர்வாக மதிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.​—⁠சங். 89:⁠7.

      4 தேவனிடம் நெருங்கி வருதல்: வரவிருக்கும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பில் காப்பாற்றப்படுவதற்கு ஜனங்கள் விசுவாசத்துடன் யெகோவாவை தொழுதுகொள்ள வேண்டும். (ரோ. 10:13, 14; 2 தெ. 1:7, 8) இதற்கு, கடவுளுடைய பெயரையும் அவருடைய குணங்களையும் பற்றி அறிவது மட்டும் போதாது. யெகோவாவின்மீது முழு இருதயத்தோடு நம்பிக்கை வைத்து, அவருடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள நாம் ஜனங்களுக்கு உதவ வேண்டும். (நீதி. 3:5, 6) கற்றுக்கொண்டதை அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து, அவரிடம் உருக்கமாக ஜெபித்து மன்றாடுவதன் மூலம் அவருடைய உதவியை தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கையில், அவர்களுடைய விசுவாசம் அதிகரிக்கும், அது, யெகோவாவிடம் நெருங்கி வர உதவும்.​—⁠சங். 34:⁠8.

      5 கடவுளுடைய பெயரை நாம் வைராக்கியத்துடன் அறிவிப்போமாக; அவரில் முழு நம்பிக்கை வைத்து அவருக்குப் பயப்படும்படி மற்றவர்களுக்கு உதவுவோமாக. யெகோவாவை அறிந்துகொண்டு அவரை தங்கள் “இரட்சிப்பின் தேவ”னாக மகிமைப்படுத்துவதற்கு இன்னும் அநேகருக்கு தொடர்ந்து உதவலாம்.​—⁠சங். 25:⁠5.

  • தேவராஜ்ய வளங்களுக்கு மதித்துணர்வை காட்டுங்கள்
    ராஜ்ய ஊழியம்—2002 | செப்டம்பர்
    • தேவராஜ்ய வளங்களுக்கு மதித்துணர்வை காட்டுங்கள்

      1 ஆலயத்தை செப்பனிட யோசியா ராஜா ஏற்பாடுகளை செய்கையில், அந்த வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்களை அவர் பாராட்டி சொன்னதாவது: ‘அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்க வேண்டியதில்லை.’ (2 இரா. 22:3-7) பரிசுத்த காரியங்களை இந்த மனிதர் மதித்துணர்ந்தது, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வளங்களை பயன்படுத்திய விதத்திலிருந்து தெளிவாக தெரிந்தது. அதைப் போலவே இன்று, “கடவுளுடைய நற்செய்தியின் பரிசுத்த வேலையில்” பங்கேற்றுள்ள நாம், நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள வளங்களைப் பயன்படுத்துவதில் உண்மையாய் இருக்க வேண்டும்.

      2 வெளி ஊழியத்தில்: நம் பிரசுரங்களில் அடங்கியுள்ள மிக முக்கிய செய்தியையும் அதை தயாரிப்பதற்கு ஆகும் செலவையும் மதித்துணர்வது, அவற்றை உயர்வாய் மதிக்க நமக்கு காரணத்தை அளிக்கிறது. பைபிள் செய்திக்கு உண்மையான போற்றுதலைக் காட்டாதவர்களிடம் வெறுமனே பிரசுரங்களை அள்ளி கொடுக்கக்கூடாது. நற்செய்தியிடம் ஒருவர் குறிப்பிடத்தக்க ஆர்வம் காட்டாதபோது அவருக்குப் பிரசுரத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக ஒரு துண்டுப்பிரதியை கொடுக்கலாம்.

      3 பிரசுரங்களை உயர்வாக மதிப்பதை அவற்றை விநியோகிக்கையில் காட்டுங்கள். அவற்றை பொதுவிடங்களில் போட்டுவிட்டு வருவதை தவிருங்கள்; ஏனெனில் அங்குமிங்குமாய் அவை சிதறடிக்கப்படும். பிரசுரங்கள் வீணாவதை தவிர்க்க, இன்னும் அதிகமானவற்றை வாங்குவதற்கு முன், வீட்டில் உங்கள் கையிருப்பில் உள்ள பிரசுரங்களை கணக்கெடுங்கள். வழக்கமாக ஒவ்வொரு இதழிலும் பத்திரிகைகள் மீதமாகின்றன என்றால், உங்கள் பத்திரிகை ஆர்டரை குறைப்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

      4 சொந்த உபயோகத்திற்கு பிரசுரங்கள்: இனி டீலக்ஸ் பைபிள்கள், ஆங்கில ஒத்துவாக்கிய பைபிள்கள் ஆகியவற்றோடு, கன்கார்டன்ஸ், இன்டெக்ஸ், உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதிகள், அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகம் போன்ற பிற பெரிய புத்தகங்களையும் நம்மால் ஆர்டர் செய்ய முடியாது; எனவே இவை எந்தளவு மதிப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் என்பதை நாம் வெகு நன்றாக அறிந்திருக்கிறோம். இவற்றை உங்கள் சொந்த லைப்ரரியில் வைத்திருக்கும் பாக்கியம் பெற்றிருந்தால், அவற்றை வெகு பத்திரமாக பாதுகாத்திடுங்கள். மற்றவர்கள், ராஜ்ய மன்ற லைப்ரரியிலுள்ள பிரதிகளை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இப்புத்தகங்கள் நல்ல நிலையில் இருக்கும்படியும் வேறு எங்காவது வைக்கப்படாதிருக்கும்படியும் பார்த்துக்கொள்வதில் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

      5 உங்கள் பெயரையும் முகவரியையும் ஞாபகமாக உங்கள் சொந்த பிரசுரங்களில் எழுதுகிறீர்களா? இது, தொலைந்துபோன பிரசுரங்களுக்குப் பதிலாக வேறு பிரதிகளை பெறும் தேவையைக் குறைக்க உதவுகிறது. ஒரு பாட்டுப் புத்தகத்தை, பைபிளை, அல்லது படிப்புக்கான பிரசுரத்தை நீங்கள் தொலைத்துவிட்டால், ஒருவேளை அது ராஜ்ய மன்றத்தில் அல்லது மாநாட்டு மன்றத்தில் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் இருப்பதை நீங்கள் காணலாம்.​—⁠லூக். 15:8, 9.

      6 நம் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்த ஊக்கமாக முயலுவோமாக. நம்மிடம் யெகோவா ஒப்படைத்துள்ள ராஜ்ய வளங்களை பயன்படுத்துவதில் நாம் உண்மையாய் இருப்பதை செயலில் காட்டுவதற்கு இது ஒரு வழியாகும்.​—⁠லூக். 16:⁠10.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்