இந்த முடிவு காலத்தில் திருமணமும் பிள்ளை வளர்ப்பும்
‘இனிவரும் காலம் குறுகினது.’—1 கொ. 7:29.
1. (அ) தற்போது நிகழும் என்ன மாற்றங்கள், “கையாளுவதற்குக் கடினமான” விஷயங்களில் அடங்குகின்றன? (ஆ) குடும்பத்தில் ஏற்படும் என்ன மாற்றங்கள் நமக்குக் கவலை தருகின்றன?
போர்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள் ஆகியவை ‘முடிவு காலத்தை’ தெளிவாய் அடையாளம் காட்டுமென கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது. (தானி. 8:17, 19; லூக். 21:10, 11) மனித சரித்திரத்தின் முக்கியமான இந்தக் காலப்பகுதியில், மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் நிகழும் என்றும் பைபிள் எச்சரித்தது. இந்தக் கொடிய “கடைசி நாட்களில்,” குடும்பத்தில் தலைதூக்கும் பெரும் பிரச்சினைகளும் “கையாளுவதற்குக் கடினமான” விஷயங்களில் அடங்கும். (2 தீ. 3:1-4; NW) இத்தகைய மாற்றங்கள் ஏன் நமக்குக் கவலை தருகின்றன? ஏனெனில், அவை பரவலாகவும், அதிக செல்வாக்கு செலுத்துபவையாகவும் இருப்பதால் திருமணத்தையும் பிள்ளை வளர்ப்பையும் பற்றிய கிறிஸ்தவர்களின் நோக்குநிலையை அவை பாதிக்கலாம். எந்த விதத்தில்?
2. திருமணத்தையும் விவாகரத்தையும் இந்த உலகம் எப்படிக் கருதுகிறது?
2 இன்று விவாகரத்து செய்வது சுலபமாகிவிட்டது, அதோடு பரவலாகவும் காணப்படுகிறது. அநேக நாடுகளில் விவாகரத்து விகிதம் மளமளவென அதிகரித்து வருகிறது. ஆனால், திருமணத்தையும் விவாகரத்தையும் பொருத்ததில் யெகோவா தேவனின் நோக்குநிலை, இந்த உலகம் பொதுவாக ஏற்றுக்கொள்கிற நோக்குநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அப்படியென்றால், யெகோவாவின் நோக்குநிலை என்ன?
3. யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் திருமணத்தை எப்படிக் கருதுகிறார்கள்?
3 மணமுடித்தவர்கள், தங்கள் திருமண உறுதிமொழிக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் எப்போதும் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென யெகோவா தேவன் எதிர்பார்க்கிறார். முதல் மனிதனையும் மனுஷியையும் மணவாழ்வில் அவர் இணைத்து வைத்தபோது, “புருஷன் . . . தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்று சொன்னார். இதே வார்த்தைகளை இயேசு கிறிஸ்து மீண்டும் குறிப்பிட்டபோது, “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று சொன்னார். அதோடு, “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்” என்றும் அவர் சொன்னார். (ஆதி. 2:24; மத். 19:3-6, 9) எனவே, தம்பதியரில் ஒருவர் இறக்கும்போது மட்டுமே திருமண பந்தம் முறிவடைகிறது; மற்றபடி, வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் பந்தமாகவே அதை யெகோவாவும் இயேசுவும் நோக்குகிறார்கள். (1 கொ. 7:39) திருமணம் என்பது புனிதமான ஏற்பாடாய் இருப்பதால் விவாகரத்து செய்வதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சொல்லப்போனால், பைபிளுக்கு முரணாக விவாகரத்து செய்வதை யெகோவா வெறுக்கிறார் என்பதாக அவருடைய வார்த்தை சொல்கிறது.a—மல்கியா 2:13-16; 3:6-ஐ வாசியுங்கள்.
திருமணத்தைப் பொறுப்பாகக் கருதுங்கள்
4. அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டதற்காக இளம் கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் வருத்தப்படுகிறார்கள்?
4 கடவுள் பக்தியில்லாத இந்த உலகம், பாலியல் பித்துப்பிடித்து அலைகிறது. ஒவ்வொரு நாளும் பாலியலைச் சித்தரிக்கும் எக்கச்சக்கமான படங்கள் நம் கண்முன் வந்தவண்ணம் இருக்கின்றன. அவை நம்மீதும், முக்கியமாக நம் சபையிலுள்ள அருமையான இளைஞர்கள்மீதும் ஏற்படுத்தும் பாதிப்பைப் பொருட்படுத்தாமல் இருந்துவிட முடியாது. இத்தகைய தவறான ஆசைகளை எதிர்க்க நினைத்தாலும் நம்மையும்மீறி இவை நம்மீது செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த மோசமான செல்வாக்கை கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படி எதிர்த்துச் சமாளிக்க வேண்டும்? இதைச் சமாளிக்க, பருவ வயதிலேயே திருமணம் செய்துகொள்வதுதான் நல்லதென சிலர் தீர்மானித்திருக்கிறார்கள். இது, பாலியல் ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடாமல் இருப்பதற்கான வழியென அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், இப்படி அவசரப்பட்டு முடிவெடுத்ததற்காகச் சீக்கிரத்திலேயே அவர்களில் சிலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஏன்? திருமணத்தின் புதுப் பொலிவு மங்கியதும், அன்றாட வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களில்கூட இருவரும் ஒத்துப்போகாதிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனால், இத்தகைய தம்பதியர் மிக மோசமான பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள்.
5. திருமண உறுதிமொழிக்கு இசைய எப்போதும் உண்மையுள்ளவர்களாய் இருக்க தம்பதியருக்கு எது உதவும்? (அடிக்குறிப்பையும் காண்க.)
5 நீங்கள் சக கிறிஸ்தவரை மணந்துகொண்டாலும்கூட அவர் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டவராய் இருந்தால் அதுவும்கூட கண்டிப்பாகக் கஷ்டம்தான். (1 கொ. 7:28) எனினும், மணவாழ்வில் எத்தனை கஷ்டங்களை எதிர்ப்பட்டாலும், பைபிளுக்கு முரணாக விவாகரத்து செய்வது அதற்கு சரியான தீர்வு அல்ல; இதை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே, இவர்கள் திருமண உறுதிமொழிக்கு இசைய எப்போதும் உண்மையுள்ளவர்களாய் இருக்க விரும்புவதால், திருமண பந்தம் நிலைத்திருக்க பெரும்பாடு படுகிறார்கள்; இவர்கள் கிறிஸ்தவ சபையின் மதிப்பு மரியாதையையும் அன்பான உதவியையும் பெறத் தகுதியானவர்கள்.b
6. திருமணம் செய்துகொள்வதை கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படிக் கருத வேண்டும்?
6 நீங்கள் திருமணமாகாத இளைஞரா? அப்படியென்றால், திருமணம் செய்துகொள்வதை நீங்கள் எப்படிக் கருத வேண்டும்? கிறிஸ்தவராய் இருக்கிற எதிர்பாலாரைக் காதலிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, திருமணம் செய்துகொள்ள உங்கள் உடலும் உள்ளமும் பக்குவப்பட்டு, ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி அடையும்வரை காத்திருந்தால் எத்தனையோ துன்பங்களை நீங்கள் தவிர்க்கலாம். எத்தனை வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென பைபிள் சொல்வதில்லை என்பது உண்மைதான்.c ஆனால், பாலியல் ஆசைகள் உச்சத்திலிருக்கிற காலப்பகுதி கடந்துபோகும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டுமென பைபிள் சொல்கிறது. (1 கொ. 7:36) ஏன்? ஏனென்றால், பலமான பாலியல் தூண்டுதல்கள் நல்ல தீர்மானம் எடுக்க முடியாதபடி கண்ணை மறைத்து, பின்னர் நினைத்து நினைத்து வருந்துமளவுக்கு முட்டாள்தனமான தீர்மானங்களை எடுக்கச் செய்துவிடும். திருமணம் குறித்து பைபிளில் யெகோவா கொடுத்திருக்கும் ஞானமான புத்திமதிகள், உங்களுடைய நன்மைக்கும் சந்தோஷத்திற்குமே என்பதை மறந்துவிடாதீர்கள்.—ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள்.
பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்த்திடுங்கள்
7. இளம் தம்பதியர் சிலர் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்படுகிறார்கள், இது ஏன் வாழ்க்கையைப் பாரமாக்கலாம்?
7 சில தம்பதியர் இளம் வயதிலேயே பெற்றோர் ஆகிவிடுகிறார்கள். அதனால், பிள்ளை பிறப்பதற்கு முன்பாக, ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள அவர்களுக்கு உண்மையிலேயே நேரம் இல்லாமல் போய்விடுகிறது; பிள்ளை பிறந்ததும் அதற்கே 24 மணிநேரமும் செலவிட வேண்டியிருக்கிறது. இயல்பாகவே, தாய் அந்தப் பச்சிளங்குழந்தையிடம் தன் முழு கவனத்தையும் செலுத்தும்போது, அந்த இளம் கணவர் பொறாமைப்படலாம். அதோடு, அந்தப் பிள்ளையைப் பராமரிப்பதில் விடியவிடிய கண் விழிப்பதால் ஏற்படும் மன அழுத்தம், அந்தத் தம்பதியருக்கு இடையே பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். திடீரென தங்கள் சுதந்திரம் பறிபோனதைப் போல் அவர்கள் உணரலாம். குழந்தை பிறப்பதற்கு முன்னாலிருந்ததுபோல், அவர்களால் இப்போது நினைத்த இடத்திற்குப் போக முடியாது, பிடித்த காரியங்களைச் செய்ய முடியாது. தங்கள் சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அவர்கள் எப்படிக் கருத வேண்டும்?
8. பிள்ளை வளர்ப்பை எப்படிக் கருத வேண்டும், ஏன்?
8 திருமணத்தை எப்படிப் பொறுப்பானதாய் கருத வேண்டுமோ அப்படியே, பிள்ளை வளர்ப்பையும் கடவுள் தந்த பொறுப்பாகவும் மதிப்புள்ள பணியாகவும் கருத வேண்டும். குழந்தை பிறந்ததும் ஒரு கிறிஸ்தவத் தம்பதியர் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனாலும், அவற்றை எல்லாம் பொறுப்பான விதத்தில் செய்ய அனைத்து முயற்சிகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். பிள்ளைகளைப் பிறப்பிக்கும் திறனை மனிதருக்குக் கொடுத்தவர் யெகோவாவே. அதனால், தங்கள் பச்சிளம் குழந்தையை, ‘கர்த்தரால் வரும் சுதந்தரமாக,’ அதாவது யெகோவா தரும் சொத்தாக பெற்றோர் கருத வேண்டும். (சங். 127:4) ‘கர்த்தர் விரும்பும்’ விதத்தில் நடக்கிற ‘பெற்றோராய்’ இருந்து தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற கிறிஸ்தவ தாயும் தகப்பனும் முயற்சி செய்ய வேண்டும்.—எபே. 6:1, ஈஸி டு ரீட் வர்ஷன்.
9. (அ) பிள்ளையை வளர்ப்பதில் எது உட்படுகிறது? (ஆ) மனைவி ஆன்மீக ரீதியில் திடமாய் இருப்பதற்கு கணவர் என்னென்ன உதவிகள் செய்யலாம்?
9 பிள்ளையை வளர்ப்பதில் வருடக்கணக்காக தியாகங்கள் செய்வது உட்பட்டுள்ளது. இதில், பெருமளவு நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டியிருக்கிறது. குழந்தை பிறந்த பின் பல வருடங்களுக்கு, தன் மனைவியால் கூட்டங்களில் சரிவர கவனிக்க முடியாமல் போகலாம், தனிப்பட்ட விதமாகப் படிப்பதற்கும், தியானிப்பதற்கும் போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம் என்பதை ஒரு கணவர் புரிந்துகொள்ள வேண்டும். இவை கடவுளோடு இருக்கும் அவளுடைய பந்தத்தைப் பலவீனப்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது. பிள்ளையைக் கவனித்துக்கொள்வதற்குத் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் கணவர் செய்யும்போதுதான், அந்தக் கணவர் பொறுப்பான தகப்பனாகச் செயல்படுகிறார் என்று சொல்ல முடியும். கூட்டங்களில் கற்ற சில குறிப்புகளை பின்னர் வீட்டில் மனைவியுடன் கலந்து பேசுவதன்மூலம் தவறவிட்ட குறிப்புகளை அவள் தெரிந்துகொள்ள கணவர் உதவலாம். மேலும், ராஜ்ய பிரசங்க வேலையில் அவருடைய மனைவி அதிக நேரம் செலவிடுவதற்காக அவர் பிள்ளையைக் கவனித்துக்கொள்ளலாம்.—பிலிப்பியர் 2:3, 4-ஐ வாசியுங்கள்.
10, 11. (அ) பிள்ளைகள் எப்படி ‘கர்த்தருக்கேற்ற . . . மனக்கட்டுப்பாட்டில்’ வளர்க்கப்படுகிறார்கள்? (ஆ) கிறிஸ்தவப் பெற்றோர் பலர் ஏன் பாராட்டைப் பெறத் தகுதியுள்ளவர்கள்?
10 பிள்ளையைப் பொறுப்பாக வளர்ப்பதில், அதற்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், உடல்நல பராமரிப்பு போன்றவற்றை அளிப்பது மட்டுமல்ல, இன்னும் அதிகம் செய்வதும் உட்படுகிறது. முக்கியமாய் ஆபத்தான இந்த முடிவு காலத்தில், வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிகளை பிஞ்சுப் பருவத்திலிருந்தே பிள்ளைகள் கற்றுக்கொள்வது அவசியம். பிள்ளைகளை, “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் [“மனக்கட்டுப்பாட்டிலும்,” NW]” வளர்க்க வேண்டும். (எபே. 6:4) இந்த ‘மனக்கட்டுப்பாடு’ என்பது, பச்சிளம் பருவம்முதல் கடினமான வருடங்களான வளரிளமைப் பருவம்வரை யெகோவாவின் எண்ணங்களைப் பிள்ளையின் மனதில் ஆழப் பதிய வைப்பதை உட்படுத்துகிறது.—2 தீ. 3:14, 15.
11 ‘சகல ஜாதிகளையும் சீஷராக்க’ வேண்டுமென தம்மைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னபோது, தங்கள் பிள்ளைகளும் சீஷராவதற்கு பெற்றோர் உதவ வேண்டும் என்றும் அர்த்தப்படுத்தினார் என்பது நிச்சயம். (மத். 28:19, 20) இந்த உலகம் இளம் பிள்ளைகள்மீது திணிக்கும் அழுத்தங்களைப் பார்க்கையில் அதைச் செய்வது உண்மையிலேயே கஷ்டமானதுதான். எனினும், ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாகும்படி தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்த பெற்றோர்கள், கிறிஸ்தவ சபையிலுள்ள எல்லாருடைய அன்பான பாராட்டைப் பெற உண்மையிலேயே தகுதியுள்ளவர்கள். இந்த உலகின் செல்வாக்கைத் தங்களுடைய விசுவாசத்தாலும் பெற்றோராக தங்கள் பொறுப்பை உண்மையோடு நிறைவேற்றியதாலும் இவர்கள் ‘ஜெயித்திருக்கிறார்கள்.’—1 யோ. 5:4.
உன்னத நோக்கத்திற்காக திருமணத்தையும் பிள்ளைப்பேற்றையும் தவிர்த்தல்
12. கிறிஸ்தவர்கள் சிலர் கொஞ்ச காலம் திருமணம் செய்யாதிருக்க ஏன் தீர்மானிக்கிறார்கள்?
12 ‘இனிவரும் காலம் குறுகினதாய்’ இருப்பதாலும், ‘இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோவதாலும்,’ திருமணம் செய்யாதிருப்பதால் வரும் நன்மைகளைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (1 கொ. 7:29-31) எனவே, சில கிறிஸ்தவர்கள் திருமணமே செய்யாதிருக்க விரும்புகிறார்கள் அல்லது அதைக் கொஞ்ச காலத்திற்குத் தள்ளிப்போடத் தீர்மானிக்கிறார்கள். அந்தச் சமயத்தில் தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைத் தன்னல காரியங்களுக்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்ளாதிருப்பது பாராட்டுக்குரியது. “கவலையில்லாமல் [“கவனச் சிதறல் இல்லாமல்,” NW]” யெகோவாவை சேவிப்பதற்காக அநேகர் திருமணம் செய்யாதிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:32-35-ஐ வாசியுங்கள்.) இவர்களில் சிலர் பயனியர்களாகவோ பெத்தேல் அங்கத்தினர்களாகவோ சேவை செய்கிறார்கள். யெகோவாவின் அமைப்புக்கு அதிக பயனுள்ளவர்களாய் இருப்பதற்காக, ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொள்வதற்கான தகுதியைப் பெற அநேகர் முயற்சி செய்கிறார்கள். சொல்லப்போனால், கொஞ்ச காலம் முழுநேர ஊழியம் செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்துகொள்ளும்போது, இளமையில் கற்ற மதிப்புமிக்க பாடங்கள் தங்களுடைய மணவாழ்க்கைக்கு இன்னும் உதவியாய் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.
13. கிறிஸ்தவத் தம்பதியர் சிலர் பிள்ளை பெற்றுக்கொள்ளாதிருக்க ஏன் தீர்மானிக்கிறார்கள்?
13 உலகின் சில பகுதிகளில், குடும்ப வாழ்க்கையில் மற்றொரு மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, அநேக தம்பதியர் பிள்ளை பெற்றுக்கொள்ளாதிருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். சிலர் பொருளாதார காரணங்களாலும், இன்னும் சிலர் எந்தத் தொல்லையும் இல்லாமல் கைநிறைய சம்பாதிக்கும் ஆசையாலும் அப்படி இருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்களிலும்கூட சில தம்பதியர் பிள்ளை பெற்றுக்கொள்ளாதிருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக அப்படி இருக்கிறார்கள். இது, மணவாழ்வின் இயல்பான சந்தோஷத்தை இவர்கள் அனுபவிப்பதில்லை என அர்த்தப்படுத்தாது. இவர்களும் வாழ்க்கையை ருசிக்கிறார்கள். எனினும், ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்காக, திருமணம் தரும் ஆசீர்வாதங்கள் சிலவற்றை மனதார விட்டுக்கொடுக்கிறார்கள். (1 கொ. 7:3-5) இத்தகைய தம்பதியரில் சிலர் யெகோவாவுக்காகவும் தங்கள் சகோதரர்களுக்காகவும் வட்டாரக் கண்காணிகளாகவும் மாவட்டக் கண்காணிகளாகவும் பெத்தேலிலும் சேவை செய்கிறார்கள். இன்னும் சிலர் பயனியர்களாகவோ மிஷனரிகளாகவோ சேவை செய்கிறார்கள். இவர்களுடைய வேலையையும் தம்முடைய பெயருக்குக் காட்டுகிற அன்பையும் யெகோவா மறக்க மாட்டார்.—எபி. 6:10.
‘சரீரத்திலே உபத்திரவம்’
14, 15. எந்த விதத்தில் ‘சரீரத்திலே உபத்திரவத்தை’ கிறிஸ்தவப் பெற்றோர் எதிர்ப்படலாம்?
14 திருமணமான கிறிஸ்தவர்கள், ‘சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 7:28) இது, அந்தத் தம்பதியரோ, அவர்களுடைய பிள்ளைகளோ அவர்களுடைய வயதான பெற்றோரோ உடல்நலக் குறைவால் அவதிப்படுவதை உட்படுத்தலாம். பிள்ளைகளை வளர்ப்பதுடன் சம்பந்தப்பட்ட கஷ்டங்களையும் மனவேதனைகளையும்கூட இது உட்படுத்தலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டதைப் போல, ‘கடைசி நாட்களில் கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்’ வருமென பைபிள் முன்னறிவித்தது. கையாளுவதற்குக் கடினமான விஷயங்களில், ‘பெற்றோருக்குக் கீழ்ப்படியாத’ பிள்ளைகளைச் சமாளிப்பதும் அடங்கும்.—2 தீ. 3:1-3; NW.
15 பிள்ளைகளை வளர்ப்பது கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பெரும் சவாலை முன்வைக்கிறது. இந்தக் ‘கொடிய காலங்களின்’ மோசமான செல்வாக்கால் நாமும் பாதிக்கப்படலாம். எனவே, ‘இவ்வுலகத்தின்’ படுமோசமான பாதிப்பிலிருந்து தங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாக்க, கிறிஸ்தவப் பெற்றோர் அதை எதிர்த்து சதா போராட வேண்டியிருக்கிறது. (எபே. 2:2, 3) ஆனாலும் அந்தப் போராட்டத்தில் எப்போதுமே வெற்றி கிடைக்குமெனச் சொல்ல முடியாது. ஒரு கிறிஸ்தவப் பெற்றோரின் மகனோ மகளோ யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிடும்போது, பைபிள் சத்தியத்திற்கு இசைய பிள்ளையை வளர்க்க முயற்சி செய்த பெற்றோருக்கு அது உண்மையிலேயே ‘உபத்திரவம்தான்.’—நீதி. 17:25.
“மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்”
16. எந்த ‘உபத்திரவத்தைப்பற்றி’ இயேசு தீர்க்கதரிசனம் சொன்னார்?
16 திருமணம், பிள்ளை வளர்ப்பு சம்பந்தமாக எதிர்ப்படுகிற எந்த ‘உபத்திரவத்தையும்,’ வரவிருக்கும் மற்றொரு மாபெரும் உபத்திரவம் விஞ்சிவிடும். தம்முடைய பிரசன்னத்தையும் இந்த உலகத்தின் முடிவையும் பற்றிய தீர்க்கதரிசனத்தில், “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்று இயேசு குறிப்பிட்டார். (மத். 24:3, 21) இந்த ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ திரள் கூட்டத்தார் தப்பிப்பிழைப்பார்கள் என அவர் பின்னர் தெரிவித்தார். ஆனால், சமாதானமாய் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக சாத்தானின் உலகம் இறுதித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தும். பெரியோர், சிறியோர் என நம் எல்லாருக்குமே அது கடினமான காலமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
17. (அ) நாம் ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளலாம்? (ஆ) திருமணமும் பிள்ளை வளர்ப்பும் பற்றிய நம்முடைய நோக்குநிலையில் எது செல்வாக்கு செலுத்த வேண்டும்?
17 ஆனாலும், எதிர்காலத்தைக் குறித்து நாம் அநாவசியமாகக் கவலைப்படக் கூடாது. யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிற பெற்றோர் தங்கள் குழந்தைகளோடு காப்பாற்றப்படுவார்களென நம்பலாம். (ஏசாயா 26:20, 21-ஐ வாசியுங்கள்; செப். 2:2, 3; 1 கொ. 7:14) எனினும், இப்போது நாம் கொடிய காலத்தில் வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வு, இந்த முடிவு காலத்தில் திருமணத்தையும் பிள்ளை வளர்ப்பையும் பற்றிய நம் நோக்குநிலையில் செல்வாக்கு செலுத்துவதாக. (2 பே. 3:10-13) நாம் திருமணம் செய்திருக்கலாம் அல்லது செய்யாதிருக்கலாம், பிள்ளை பெற்றிருக்கலாம் அல்லது பெற்றுக்கொள்ளாதிருக்கலாம்; எப்படியிருந்தாலும், நம் வாழ்க்கை யெகோவாவுக்கும் கிறிஸ்தவ சபைக்கும் மதிப்பு மரியாதையையும் புகழையும் சேர்ப்பதாய் இருக்க வேண்டும்.
[அடிக்குறிப்புகள்]
a குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தில், அதிகாரம் 13-ஐயும் 2007, மே 1, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 19-23-ஐயும் காண்க.
b 2003, செப்டம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரம், 2001, பிப்ரவரி 8 தேதியிட்ட விழித்தெழு! போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ள திருமணம் பற்றிய கட்டுரைகளை மீண்டும் வாசித்துப் பார்க்கும்போது குடும்பப் பிரச்சினைகளுடன் போராடுகிறவர்கள் பலத்தைப் பெறுவார்கள்.
c இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தில், “நான் விவாகத்துக்குத் தயாரா?” என்ற தலைப்பிலுள்ள அதிகாரம் 30-ஐக் காண்க.
மறுபார்வைக்கு
• இளம் கிறிஸ்தவர்கள் திருமணம் செய்துகொள்ள ஏன் அவசரப்படக் கூடாது?
• பிள்ளையை வளர்ப்பதில் எது உட்படுகிறது?
• சில கிறிஸ்தவர்கள் ஏன் திருமணம் செய்யாதிருக்கவோ, அப்படியே செய்தாலும் பிள்ளை பெற்றுக்கொள்ளாதிருக்கவோ தீர்மானிக்கிறார்கள்?
• கிறிஸ்தவப் பெற்றோர் எந்த விதத்தில் ‘சரீரத்திலே உபத்திரவத்தை’ எதிர்ப்படலாம்?
[பக்கம் 17-ன் படம்]
இளம் கிறிஸ்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அவசரப்படாதிருப்பது ஏன் நல்லது?
[[பக்கம் 18-ன் படம்]
கடவுளுடைய சேவையில் மனைவி அதிக நேரம் செலவிடுதற்குக் கணவர் பெருமளவு உதவலாம்
[பக்கம் 19-ன் படம்]
கிறிஸ்தவத் தம்பதியர் சிலர் பிள்ளை பெற்றுக்கொள்ளாதிருக்க ஏன் தீர்மானிக்கிறார்கள்?