உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 39 பக். 220-பக். 222 பாரா. 6
  • திறம்பட்ட முடிவுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திறம்பட்ட முடிவுரை
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • பொருத்தமான முடிவுரையும் உங்கள் நேரமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • பொருத்தமான முடிவுரை
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 39 பக். 220-பக். 222 பாரா. 6

படிப்பு 39

திறம்பட்ட முடிவுரை

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கேட்ட விஷயத்தின் பேரில் சபையாரை செயல்படத் தூண்டும் விதத்தில் பேச்சின் கடைசி வாக்கியங்களை அமையுங்கள்.

ஏன் முக்கியம்?

பெரும்பாலும் முடிவுரையில் சொல்லப்படுவதே வெகுகாலம் நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்கும். இதுவே முழு பேச்சையும் சிறப்பாக்குகிறது.

பேச்சின் பொருளுரைக்குரிய தகவலை நீங்கள் நன்கு ஆராய்ச்சி செய்து ஒழுங்கமைத்திருக்கலாம். ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரையையும் தயாரித்திருக்கலாம். இருந்தாலும், இன்னொரு காரியமும் தேவைப்படுகிறது. அதுதான் திறம்பட்ட முடிவுரை. அதன் முக்கியத்துவத்தைக் குறைவாக மதிப்பிடாதீர்கள். நீங்கள் கடைசியாக என்ன சொல்கிறீர்களோ அதுவே பெரும்பாலும் நெஞ்சைவிட்டு நீங்காமல் நிற்கும். முடிவுரை திறம்பட்டதாக இல்லையென்றால், அதுவரை கொடுத்த பேச்சின் வலிமை சாரமற்று போய்விடலாம்.

இதை சிந்தித்துப் பாருங்கள்: யோசுவா தன் மரணத்திற்கு சற்று முன்பு, இஸ்ரவேல் தேசத்தின் மூப்பர்களுக்கு நெஞ்சைவிட்டு நீங்காத ஒரு சொற்பொழிவை ஆற்றினார். ஆபிரகாமின் காலந்தொட்டு இஸ்ரவேலருக்கு யெகோவா செய்த எல்லாவற்றையும் எடுத்துரைத்த பிறகு, வெறுமனே முக்கிய குறிப்புகளைச் சுருக்கமாக யோசுவா குறிப்பிட்டாரா? இல்லை. மாறாக, ‘[யெகோவாவுக்கு] பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவியுங்கள்’ என்று உணர்ச்சிப்பொங்க அறிவுரை கூறினார். யோசுவா 24:14, 15-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள யோசுவாவின் முடிவுரையை நீங்களே வாசித்துப் பாருங்கள்.

குறிப்பிடத்தக்க மற்றொரு சொற்பொழிவு அப்போஸ்தலர் 2:14-36-⁠ல் காணப்படுகிறது; அது பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் கூடிவந்த கூட்டத்தாரிடம் அப்போஸ்தலன் பேதுரு ஆற்றியது. கடவுளுடைய ஆவி ஊற்றப்படுவதைப் பற்றிய யோவேலின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்கு அவர்கள் சாட்சிகளாக இருப்பதை முதலில் விளக்கினார். அடுத்து, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படுவதையும் கடவுளுடைய வலது பாரிசத்திற்கு உயர்த்தப்படுவதையும் பற்றி சங்கீதம் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்ட மேசியானிய தீர்க்கதரிசனங்களோடு இது எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை காட்டினார். பிறகு முடிவுரையில், கூட்டத்தார் அனைவரும் எதிர்ப்பட வேண்டிய விஷயத்தைக் குறித்து பேதுரு தெளிவாக எடுத்துரைத்தார். “ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்” என்று சொன்னார். கூடிவந்திருந்தவர்கள் இதைக் கேட்டபோது, “சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் . . . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என பதிலளித்தார். (அப். 2:37, 38) கேட்ட விஷயங்கள் மனதைத் தொட்டதால் அன்றைய தினம் கூடிவந்தவர்களில் சுமார் 3,000 பேர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

மனதில் வைக்க வேண்டிய குறிப்புகள். உங்களுடைய முடிவுரைக்கும் பேச்சின் மையப்பொருளுக்கும் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். பேச்சில் நீங்கள் விரிவாக்கிய முக்கிய குறிப்புகளுக்குத் தர்க்க ரீதியிலான முடிவுரையாக இருக்க வேண்டும். மையப்பொருளில் உள்ள முக்கிய வார்த்தைகளை அல்லது மையப்பொருளையே நேரடியாக முடிவுரையில் நீங்கள் சேர்த்துக்கொள்ள விரும்பலாம்.

பொதுவாக, பேச்சு கொடுப்பதன் நோக்கமே நீங்கள் தரும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மற்றவர்களை ஊக்கப்படுத்துவதுதான். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என காட்டுவதே முடிவுரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. மையப்பொருளையும் முக்கிய குறிப்புகளையும் நீங்கள் தேர்ந்தெடுத்தபோது, சபையாருக்கு இந்தத் தகவல் ஏன் முக்கியம் என்பதையும் இதைக் கொடுப்பதில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதையும் யோசித்துப் பார்த்தீர்களா? அப்படியானால், அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது, அந்த நடவடிக்கை என்ன என்பதையும் எப்படி அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்பதை சபையாருக்கு காண்பிப்பதோடு, நீங்கள் தரும் முடிவுரை அவர்களை உந்துவிக்க வேண்டும். அவ்வாறு செயல்படுவதற்கு தகுந்த காரணங்களையும் அதனால் வரும் நன்மைகளையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பேச்சின் கடைசி வாக்கியத்தை கவனமாக யோசித்து நன்கு அமைத்தால், அது முழு பேச்சிற்கும் வலிமை சேர்க்கும்.

பேச்சு முடிவுக்கு வருவதை மனதில் வைத்திருங்கள். நீங்கள் சொல்வது அதை சுட்டிக்காட்ட வேண்டும். உங்களுடைய பேச்சின் வேகமும் அதற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். பேச்சின் கடைசிவரை முழுவீச்சில் பேசிக்கொண்டு போய் சட்டென்று நிறுத்தாதீர்கள். மறுபட்சத்தில், வெறுமனே உங்களுடைய சத்தத்தை குறைக்காதீர்கள். உங்களுடைய சத்தம் போதுமானதாக இருக்க வேண்டும், ஆனால் மிதமிஞ்சி போகக்கூடாது. கடைசி சில வாக்கியங்கள் உங்களுடைய பேச்சு முடிவடையப் போவதை காண்பிக்க வேண்டும். அவற்றை சொல்லும் விதம் ஊக்கத்தையும் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்த வேண்டும். உங்களுடைய பேச்சை தயாரிக்கையில் முடிவுரையையும் ஒத்திகை பார்க்க தவறாதீர்கள்.

முடிவுரை எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும்? இது கடிகாரத்தை வைத்து தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. முடிவுரை இழுத்துக்கொண்டே போகக்கூடாது. கேட்போருக்கு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து அதன் நீளத்தை சரியாக தீர்மானிக்கலாம். எளிமையான, நேரடியான, நம்பிக்கையூட்டுகிற முடிவுரையே எப்போதும் சிறந்தது. கவனமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டால், சிறிய உதாரணத்துடன் முடிக்கப்படும் ஓரளவு நீளமான முடிவுரையும் திறம்பட்டதாக இருக்கலாம். பிரசங்கி 12:13, 14-⁠ல் காணப்படும் முழு பிரசங்கி புத்தகத்திற்குரிய சுருக்கமான முடிவுரையையும், மத்தேயு 7:24-27-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள மிகச் சிறிய மலைப் பிரசங்கத்தின் முடிவுரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

வெளி ஊழியத்தில். வெளி ஊழியத்தைவிட வேறெங்கும் நாம் அவ்வளவு அடிக்கடி முடிவுரைக்கான அவசியத்தை எதிர்ப்படுவதில்லை. தயாரிப்பும் ஜனங்கள் மீது அன்பான அக்கறையும் இருந்தால், நீங்கள் நிறைய சாதிக்க முடியும். நீங்கள் ஒருவரோடு மாத்திரமே உரையாடினாலும், முந்தின பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றினால் பயன் பெறலாம்.

ஓர் உரையாடல் மிகவும் சுருக்கமாக இருக்கலாம். அந்த நபர் அதிக வேலையாக இருக்கலாம். உங்களுடைய முழு சந்திப்பும் ஒரே நிமிடத்திற்குள் முடிந்துவிடலாம். பொருத்தமானால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நீங்கள் அதிக பிஸியாக இருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் ஆர்வமூட்டுகிற ஒரேவொரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம்மைப் படைத்த கடவுள் ஓர் அருமையான நோக்கத்தை வைத்திருக்கிறார், அதாவது ஜனங்கள் நித்திய காலமாக சந்தோஷத்துடன் வாழும் இடமாக இந்தப் பூமியை மாற்றப் போகிறார். பூங்காவனம் போன்ற அந்தப் பரதீஸில் நாம் வாழலாம், ஆனால் கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.” அல்லது அவர்களுக்கு வசதியான வேறொரு சமயத்தில் வருவதாக சொல்லலாம்.

வீட்டுக்காரர் வெடுக்கென்று​—⁠கடுகடுப்பாகவும்கூட​—⁠பேசி உரையாடல் பாதியிலேயே நின்றுவிட்டாலும் நீங்கள் சிறந்த விதத்தில் முடிக்க முடியும். மத்தேயு 10:12, 13 மற்றும் ரோமர் 12:17, 18-⁠ல் உள்ள ஆலோசனையை மனதில் வையுங்கள். உங்களுடைய சாந்தமான பதில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய அவருடைய கருத்தை மாற்றலாம். அது சிறந்த சாதனையாக இருக்கும்.

மறுபட்சத்தில், வீட்டுக்காரரோடு நீங்கள் சுவாரஸ்யமான உரையாடலை நடத்தியிருந்திருக்கலாம். அவர் நினைவில் வைக்க வேண்டிய முக்கிய குறிப்புகளை ஏன் மீண்டும் எடுத்துச் சொல்லக் கூடாது? செயல்படுவதற்கு அவரைத் தூண்டும் விஷயங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதாக தெரிந்தால், அவர் அதை ஆவலோடு எதிர்பார்க்கும்படி செய்யுங்கள். வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்தோ அல்லது பைபிள் படிப்பை நடத்துவதற்கு தயாரிக்கப்பட்ட பிரசுரத்திலிருந்தோ ஒரு கேள்வியை கேட்கலாம். மத்தேயு 28:19, 20-⁠ல் இயேசு குறிப்பிட்ட விதமாக உங்களுடைய இலக்கை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருங்கள்.

பைபிள் படிப்பின் முடிவில் என்ன சொல்லலாம்? மையப்பொருளை மீண்டும் சொல்வது கலந்தாலோசிக்கப்பட்ட விஷயங்களை மாணாக்கர் ஞாபகத்தில் வைப்பதற்கு உதவும். மறுபார்வை கேள்விகளைக் கேட்பது, அதுவும் அவசரப்படாமல் நிதானமாக கேட்பது, மாணாக்கருடைய மனதில் முக்கிய குறிப்புகளை பதிய வைப்பதற்கு உதவும். படித்த விஷயங்கள் எப்படி நன்மை தரும் அல்லது அதை எப்படி மற்றவர்களிடம் சொல்வது என்பதன் சம்பந்தமாக மாணாக்கரிடம் கேள்வி கேட்பது, கற்றுக்கொண்டதை நடைமுறையில் பொருத்துவதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க அவருக்கு உதவும்.​—⁠நீதி. 4:7.

முடிவுரையே உங்களுடைய முழுப் பேச்சையும் சிறப்பாக்குகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

எப்படி செய்வது

  • நீங்கள் ஏற்கெனவே சொன்ன கருத்துக்களோடு முடிவுரை நேரடித் தொடர்புடையதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • கேட்டவற்றைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை சபையாருக்கு காண்பியுங்கள்.

  • சொல்லும் விஷயத்தின் மூலமும் அதை சொல்லும் விதத்தின் மூலமும் கேட்போரை உந்துவியுங்கள்.

பயிற்சி: வெளி ஊழியத்திற்கு இரண்டு முடிவுரைகளைத் தயாரியுங்கள்: (1) வீட்டுக்காரர் வெடுக்கென்று பேசும்போதும், பேசுவதற்கு அதிக நேரம் இல்லாதபோதும் என்ன சொல்வது (2) அடுத்த சந்திப்பில் பேசுவதற்கு திட்டவட்டமான ஒரு கேள்வி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்