ஆராய்ச்சி செய்வது எப்படி
சாலொமோன் ராஜா, “தீர யோசித்து, தீவிரமாக ஆராய்ந்து, அநேக நீதிமொழிகளை வரிசையாக எழுதினார்.” ஏன்? ஏனெனில் “திருத்தமான சத்திய வார்த்தைகளையே” எழுத விரும்பினார். (பிர. 12:9, 10, NW) கிறிஸ்துவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கிரமமாக விவரிக்க லூக்கா ‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்தார்.’ (லூக். 1:3) கடவுளது ஊழியர்களான இவர்கள் இருவருமே ஆராய்ச்சி செய்தனர்.
ஆராய்ச்சி என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட விஷயத்தின்பேரில் தகவலைத் திரட்ட கவனமாக ஆய்வு செய்வதாகும். அதில் வாசிப்பு உட்பட்டிருக்கிறது; படிப்பு சம்பந்தப்பட்ட நியமங்களை கடைப்பிடிப்பதை அது தேவைப்படுத்துகிறது. மற்றவர்களை பேட்டி காண்பதும் ஆராய்ச்சியில் உட்படலாம்.
என்னென்ன சூழ்நிலைகளில் ஆராய்ச்சி தேவைப்படும்? இதோ சில உதாரணங்கள்: தனிப்பட்ட படிப்பின்போது அல்லது பைபிள் வாசிப்பின்போது சில கேள்விகள் எழலாம்; அவை உங்களுக்கு முக்கியமானவையாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் சாட்சிகொடுக்கையில் யாரேனும் கேள்வி கேட்கலாம்; அதற்கேற்ற குறிப்பான பதிலை அவருக்கு அளிக்க நீங்கள் விரும்பலாம். அல்லது சபையில் பேச்சு கொடுக்க நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம்.
பேச்சு கொடுக்கும் நியமிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அளிக்க வேண்டிய பேச்சிற்குரிய தகவல் பொதுப்படையாக இருக்கலாம். அதை சபையின் தேவைக்கேற்ப எப்படி பொருத்துவது? ஆராய்ச்சியின் மூலம் அதற்கு மெருகூட்டுங்கள். தகவலுக்கு பொருத்தமான, சபையாரின் ஆர்வத்திற்கு உகந்த சில புள்ளிவிவரங்களை அல்லது ஒரு உதாரணத்தை சொல்லும்போது, எல்லாரும் அறிந்த செய்தியும்கூட விஷயம் நிறைந்ததாகவும் உள்ளத்தைத் தூண்டுவதாகவும் ஆகும். உங்கள் பேச்சிற்குரிய கட்டுரை, உலகெங்கும் உள்ள வாசகர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு சபைக்கு அல்லது ஒரு நபருக்கு ஏற்றவாறு நீங்கள் குறிப்புகளை பொருத்த வேண்டும், விரிவாக்க வேண்டும், உதாரணத்தோடு விளக்க வேண்டும். இதை எப்படி செய்யலாம்?
ஆராய்ச்சியை துவங்குவதற்கு முன் சபையாரைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு என்ன விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்திருக்கும்? என்ன தெரிய வேண்டும்? அதன்பின் உங்கள் குறிக்கோளை தீர்மானியுங்கள். விளக்க வேண்டுமா? நம்ப வைக்க வேண்டுமா? தவறென நிரூபிக்க வேண்டுமா? அல்லது தூண்டியெழுப்ப வேண்டுமா? விளக்குவது, ஒரு விஷயத்தைத் தெளிவாக்க கூடுதலான தகவல் அளிப்பதைத் தேவைப்படுத்துகிறது. அடிப்படையில் விஷயங்கள் புரிந்துகொள்ளும்படி இருந்தாலும், எப்போது செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் போன்றவற்றை நீங்கள் விவரிக்க வேண்டியிருக்கலாம். நம்ப வைப்பது, காரணங்கள் சொல்லி ஏன் என்பதை விளக்குவதையும் அத்தாட்சி அளிப்பதையும் தேவைப்படுத்துகிறது. தவறென நிரூபிப்பது, ஒரு விஷயத்தின் இரு பக்கங்களையும் முழுமையாக அறிவதையும் பயன்படுத்தும் அத்தாட்சியை கவனமாக பகுத்தறிவதையும் தேவைப்படுத்துகிறது. நாம் வலுவான வாதங்களை மட்டுமே அளிக்க விரும்புவதில்லை, ஆனால் உண்மைகளை அன்போடு எடுத்துச் சொல்லவே விரும்புகிறோம். தூண்டியெழுப்புவதற்கு இருதயத்தை எட்ட வேண்டும். அப்படியென்றால் சபையாரின் மனதைத் தூண்டி, சொல்லப்படுவதைக் கடைப்பிடிக்கும் ஆர்வத்தை கிளற வேண்டும். கஷ்டத்தின் மத்தியிலும் அப்படி கடைப்பிடித்திருப்போரின் உண்மை உதாரணங்கள் இருதயத்தை எட்ட உதவும்.
இப்போது நீங்கள் ஆராய்ச்சிக்கு தயார் என அர்த்தமா? இல்லை, சிந்திப்பதற்கு இன்னும் சில விஷயங்கள் உண்டு. எவ்வளவு தகவல் தேவை என்பதை சிந்தியுங்கள். நேரத்தை கவனத்தில் வைப்பது அவசியமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இந்தத் தகவலை சொல்லப் போகிறீர்கள் என்றால், எவ்வளவு நேரத்தில் சொல்ல வேண்டும்? ஐந்து நிமிடத்திலா? நாற்பத்து ஐந்து நிமிடத்திலா? சபைக் கூட்டங்கள் போல், உரிய நேரத்திற்குள் முடிக்க வேண்டுமா, அல்லது பைபிள் படிப்பையும் மேய்ப்பு சந்திப்பையும் போல் கொஞ்சம் அதிகமாகவோ குறைவாகவோ நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்குமா?
இறுதியாக, ஆராய்ச்சிக்கு என்னென்ன சாதனங்கள் கைவசம் இருக்கின்றன? வீட்டில் இருப்பதுபோக, உங்கள் ராஜ்ய மன்ற நூலகத்தில் இன்னும் அதிக சாதனங்கள் இருக்கின்றனவா? அநேக வருடங்களாக யெகோவாவை சேவித்துவரும் சகோதரர்கள் தங்கள் சாதனங்களை பயன்படுத்த உங்களை அனுமதிப்பார்களா? தேவைப்பட்டால் வேறு புத்தகங்களை புரட்டிப் பார்க்க வசதியாக நீங்கள் வசிக்கும் பகுதியில் பொது நூலகம் இருக்கிறதா?
ஆராய்ச்சிக்கான தலைசிறந்த சாதனமாகிய பைபிளை பயன்படுத்துதல்
ஒருவேளை பைபிள் வசனம் ஒன்றின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் பைபிளிலிருந்தே ஆராய்ச்சியை துவங்குங்கள்.
சூழமைவை ஆராயுங்கள். ‘இந்த வசனம் யாரிடம் சொல்லப்பட்டது? அது சொல்லப்பட்ட சூழ்நிலைகளைப் பற்றி, அல்லது அதில் உட்பட்டிருக்கும் நபர்களின் மனப்பான்மையைப் பற்றி முந்திய, பிந்திய வசனங்கள் என்ன காட்டுகின்றன?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட விவரங்கள் வசனத்தைப் புரிந்துகொள்ள உதவும், உங்கள் பேச்சிற்கும் உயிரூட்டும்.
உதாரணத்திற்கு, மக்களின் இருதயங்களைத் தொட்டு வாழ்க்கையை சீரமைப்பதில் கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையைக் காட்ட பெரும்பாலும் எபிரெயர் 4:12 மேற்கோள் காட்டப்படுகிறது. அது எவ்வாறு என்பதை இன்னும் நன்கு புரிந்துகொள்வதற்கு சூழமைவு உதவுகிறது. யெகோவா ஆபிரகாமுக்கு வாக்குக்கொடுத்த தேசத்திற்குள் நுழைவதற்குமுன் இஸ்ரவேலர் 40 வருடங்களாக வனாந்தரத்தில் எதிர்ப்பட்ட அனுபவங்களை அது குறிப்பிடுகிறது. (எபி. 3:7–4:13) ‘தேவனுடைய வார்த்தை,’ அதாவது ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைக்கு இசைவாக இளைப்பாறுதல் தரும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கடவுள் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி வீண் வார்த்தையாக இருக்கவில்லை, அது நிறைவேற்றத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரவேலர்கள் அதை விசுவாசிப்பதற்கு எல்லாவித ஆதாரமும் இருந்தது. எனினும் யெகோவா அவர்களை எகிப்திலிருந்து சீனாய் மலைக்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கும் வழிநடத்திச் சென்றபோது அவர்கள் மீண்டும் மீண்டும் அவிசுவாசத்தைக் காட்டினார்கள். இவ்வாறு, கடவுள் தம் வார்த்தையை நிறைவேற்றிய விதத்தை பார்த்தும் அவர்கள் நடந்துகொண்ட விதம், அவர்கள் இருதயநிலையை வெளிப்படுத்தியது. அதேபோல் நம் நாளில், வாக்குறுதிகள் அடங்கிய கடவுளுடைய வார்த்தை, மக்களின் இருதயநிலையை வெளிப்படுத்துகிறது.
குறுக்கு-வசனங்களை எடுத்துப் பாருங்கள். சில பைபிள்களில் குறுக்கு-வசனங்கள் உள்ளன. உங்கள் பைபிளில் இருக்கிறதா? இருந்தால் அவை உபயோகமாக இருக்கும். பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளிலிருந்து ஒரு உதாரணத்தை கவனியுங்கள். சாராள், கிறிஸ்தவ மனைவிகள் பின்பற்றத்தக்க சிறந்த முன்மாதிரி என 1 பேதுரு 3:6 சுட்டிக்காட்டுகிறது. அதற்கு ஆதியாகமம் 18:12 குறுக்கு-வசனமாக கொடுக்கப்பட்டிருக்கிறது; இவ்வசனம், சாராள் தன் “உள்ளத்திலே” ஆபிரகாமை ஆண்டவன் என சொன்னதாக காட்டி குறிப்பை வலியுறுத்துகிறது. ஆகவே அவள் காட்டிய கீழ்ப்படிதல் உள்ளப்பூர்வமானது. குறுக்கு-வசனங்கள் இப்படிப்பட்ட ஆழமான புரிந்துகொள்ளுதலை தருவதோடு, பைபிள் தீர்க்கதரிசனத்தின் அல்லது நியாயப்பிரமாண உடன்படிக்கை மாதிரியின் நிறைவேற்றத்தை எடுத்துக்காட்டும் வசனங்களுக்கு உங்கள் கவனத்தைத் திருப்பலாம். எனினும் எல்லா குறுக்கு-வசனங்களும் அப்படிப்பட்ட விளக்கங்களைத் தருவதில்லை என்பதை ஞாபகம் வையுங்கள். அவை வெறுமனே ஒத்த கருத்துக்களை சுட்டிக்காட்டலாம், அல்லது புவியியல் ரீதியான அல்லது வாழ்க்கை வரலாற்று ரீதியான தகவலை அளிக்கலாம்.
பைபிள் கன்கார்டன்ஸ் உதவியுடன் தேடுங்கள். பைபிளிலுள்ள வார்த்தைகளை அகர வரிசைப்படி பட்டியலிட்டிருக்கும் இன்டெக்ஸே பைபிள் கன்கார்டன்ஸ். நீங்கள் ஆராய்ச்சி செய்யும் விஷயத்தோடு சம்பந்தப்பட்ட வசனங்களை கண்டுபிடிக்க அது உங்களுக்கு உதவும். நீங்கள் அவற்றை ஆராய்கையில் மற்ற உபயோகமான விவரங்களையும் கற்றுக்கொள்வீர்கள். கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் சத்தியத்தின் ‘மாதிரிக்கு’ அத்தாட்சியைக் காண்பீர்கள். (2 தீ. 1:13, தி.மொ.) புதிய உலக மொழிபெயர்ப்பில் அடிப்படை “பைபிள் வார்த்தைகளின் இன்டெக்ஸ்” கொடுக்கப்பட்டிருக்கிறது. காம்ப்ரஹென்சிவ் கன்கார்டன்ஸ் இன்னும் விரிவானது. அது உங்கள் மொழியில் கிடைக்குமானால், பைபிளின் முக்கிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எந்தெந்த வசனங்களில் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
ஆராய்ச்சிக்கான மற்ற சாதனங்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்
‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ அளித்திருக்கும் இன்னுமநேக ஆராய்ச்சி சாதனங்களை பக்கம் 33-ல் உள்ள பெட்டி பட்டியலிடுகிறது. (மத். 24:45-47) பலவற்றில் பொருளடக்கப் பட்டியலும் பெரும்பாலும் பின்பக்கத்தில் இன்டெக்ஸும் கொடுக்கப்பட்டிருக்கும்; குறிப்பான தகவலை கண்டுபிடிக்க இவை உதவியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் இரண்டிலுமே பொருளடக்க அட்டவணைகள் பிரசுரிக்கப்படுகின்றன. அவ்வாண்டிற்குரிய கட்டுரைகள் அவற்றில் பட்டியலிடப்படுகின்றன.
எந்தெந்த பைபிள் பிரசுரங்களில் என்னென்ன தகவல் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பது வேகமாக ஆராய்ச்சி செய்ய உதவும். உதாரணத்திற்கு, தீர்க்கதரிசனம், கோட்பாடு, கிறிஸ்தவ நடத்தை, அல்லது பைபிள் நியமங்களை கடைப்பிடிப்பது போன்றவற்றை அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளலாம். நீங்கள் தேடும் விஷயங்கள் பெரும்பாலும் காவற்கோபுரத்தில் இருக்கும். சமீப சம்பவங்கள், தற்கால பிரச்சினைகள், மதம், அறிவியல், வெவ்வேறு தேசத்தவர் போன்ற விஷயங்கள் விழித்தெழு!-வில் காணப்படும். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம், சுவிசேஷங்களிலுள்ள ஒவ்வொரு பதிவையும் காலவரிசைப்படி விவரிக்கிறது. வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!, இரு தொகுதிகள் கொண்ட ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு போன்ற பிரசுரங்கள், முழு பைபிள் புத்தகங்களையும் ஒவ்வொரு வசனமாக கலந்தாலோசிக்கின்றன. வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், வெளி ஊழியத்தில் பொதுவாக கேட்கப்படும் நூற்றுக்கணக்கான பைபிள் கேள்விகளுக்கு திருப்தியான பதிலளிக்கிறது. மற்ற மதங்கள், அவற்றின் போதனைகள், சரித்திர பின்னணிகள் ஆகியவற்றை கடவுளைத் தேடி என்ற புத்தகம் தெளிவாக விளக்குகிறது. யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய சரித்திரத்தோடு சம்பந்தப்பட்ட சில விவரங்களை, யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற சிற்றேடு தருகிறது. நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிப்பதில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியைப் பற்றிய அறிக்கைக்கு ஜனவரி 1 தேதியிட்ட சமீப காவற்கோபுரத்தை எடுத்துப் பாருங்கள். வேதாகமங்களின்பேரில் உட்பார்வை என்பது பைபிள் என்ஸைக்ளோப்பீடியா மற்றும் அட்லஸாகும். மக்கள், இடங்கள், பொருட்கள், மொழிகள், சரித்திர சம்பவங்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களுக்கு இது தலைசிறந்த படைப்பு.
“உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ்.” இந்த இன்டெக்ஸ், 20-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு பிரசுரங்களிலுள்ள தகவலை கண்டுபிடிக்க உதவுகிறது. பொருளடக்க இன்டெக்ஸ், வசன இன்டெக்ஸ் என அது பிரிக்கப்பட்டிருக்கிறது. பொருளடக்க இன்டெக்ஸில், நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தையை தேர்ந்தெடுங்கள். வசன இன்டெக்ஸில் நீங்கள் அதிக தெளிவாக புரிந்துகொள்ள விரும்பும் ஒரு வசனத்தை பட்டியலிலிருந்து தேர்ந்தெடுங்கள். அந்த விஷயத்தின் பேரில் அல்லது அந்த வசனத்தின் பேரில் இன்டெக்ஸிலுள்ள வருடங்களில் தகவல் வெளியாகியிருந்தால், மேலும் உங்களுக்கு புரிகிற ஒரு மொழியில் இன்டெக்ஸ் கிடைக்கிறதென்றால், அதற்குரிய பட்டியலை காண்பீர்கள். பிரசுரங்களின் பெயர் சுருக்கங்களைப் புரிந்துகொள்ள இன்டெக்ஸ்-ன் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலைப் பயன்படுத்துங்கள். (உதாரணத்திற்கு, w99 3/1 15 என்பது 1999-ம் வருட காவற்கோபுரம், மார்ச் 1 இதழ், பக்கம் 15-ஐக் குறிக்கிறது என்பதை அதன் உதவியோடு புரிந்துகொள்வீர்கள்.) “வெளி ஊழிய அனுபவங்கள்,” “யெகோவாவின் சாட்சிகளது வாழ்க்கை சரிதைகள்” போன்ற முக்கிய தலைப்புகள், சபையினரை தூண்டுவிக்கும் பேச்சுக்களைத் தயாரிக்க உதவியாக இருக்கும்.
ஆராய்ச்சி செய்கையில் பொதுவாக நாம் அதில் ஆழ்ந்துவிடுவது வழக்கம் என்பதால் குறிக்கோளைவிட்டு பாதை மாறிவிடாதிருக்க கவனமாயிருங்கள். விஷயத்திற்குத் தகுந்த தகவலை தேடிக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருங்கள். இன்டெக்ஸ் ஒரு பிரசுரத்தைக் குறிப்பிடுகிறது என்றால் அந்தப் பக்கத்திற்கு/பக்கங்களுக்கு திருப்பி, உபதலைப்புகளையும் பாராக்களின் ஆரம்ப வரிகளையும் வாசியுங்கள். இதன் மூலம், உங்களுக்குத் தேவைப்படும் தகவல் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட பைபிள் வசனத்தின் அர்த்தத்தைத் தேடுகிறீர்கள் என்றால், குறிப்பிடப்பட்டிருக்கும் பக்கத்தில் அந்த வசனத்தை முதலாவதாக கண்டுபிடியுங்கள். அதன்பின் அதற்கு முன்னும் பின்னும் உள்ள குறிப்புகளை வாசியுங்கள்.
சிடி-ராமில் “உவாட்ச்டவர் லைப்ரரி.” கம்ப்யூட்டர் உபயோகிக்க வசதியிருந்தால் நீங்கள் சிடி-ராமில் உவாட்ச்டவர் லைப்ரரியைப் பயன்படுத்தி பலனடையலாம். நம்முடைய பிரசுரங்களில் திரளானவை அதில் உள்ளன. பயன்படுத்துவதற்கு சுலபமான இந்தப் புரோகிராம், ஒரு வார்த்தையையோ பல வார்த்தைகளையோ ஒரு வசனத்தையோ உவாட்ச்டவர் லைப்ரரியின் எந்தப் பிரசுரங்களிலும் தேடிக் கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த ஆராய்ச்சி சாதனம் உங்கள் மொழியில் கிடைக்காவிட்டாலும், உங்களுக்குத் தெரிந்த பிரபலமான சர்வதேச மொழி ஒன்றில் பயன்படுத்திப் பலனடையலாம்.
மற்ற தேவராஜ்ய நூலகங்கள்
இளம் தீமோத்தேயுவுக்கு பவுல் ஏவுதலால் எழுதிய இரண்டாவது கடிதத்தில், “புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும்” ரோமுக்கு எடுத்துவருமாறு கூறினார். (2 தீ. 4:13) சில பதிவுகளை பவுல் உயர்வாக மதித்து தனக்கென்று வைத்துக்கொண்டார். நீங்களும் அதையே செய்யலாம். காவற்கோபுரம், விழித்தெழு!, நம் ராஜ்ய ஊழியம் ஆகியவற்றை, கூட்டங்களில் படித்து முடித்த பிறகும் பத்திரமாக வைத்துக்கொள்கிறீர்களா? வைத்துக்கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் சேகரித்திருக்கும் மற்ற கிறிஸ்தவ பிரசுரங்களோடு இவையும் ஆராய்ச்சி சாதனங்களாக பயன்பட உங்கள் கைவசம் இருக்கும். பெரும்பாலான சபைகள், ராஜ்ய மன்ற நூலகத்தில் தேவராஜ்ய பிரசுரங்களை சேகரித்து பராமரிக்க முயற்சி செய்கின்றன. இவை முழு சபையின் நன்மைக்காக, ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போது பயன்படுத்துவதற்காக வைக்கப்படுகின்றன.
தனிப்பட்ட ஃபைல்களை வைத்துக்கொள்ளுங்கள்
பேச்சு கொடுப்பதற்கும் கற்பிப்பதற்கும் ஏற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் தென்படுகிறதா என்பதில் எப்போதும் கண்ணாக இருங்கள். ஊழியத்திற்கு பிரயோஜனமான ஒரு செய்தியை, புள்ளிவிவரத்தை, அல்லது உதாரணத்தை செய்தித்தாளிலோ பத்திரிகையிலோ நீங்கள் பார்த்தால் அதை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேதி, பிரசுரத்தின் பெயர், பிரசுரிப்பாளர் அல்லது ஆசிரியரின் பெயர் ஆகியவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்ல உதவியாயிருக்கும் நியாய விவாதங்களையும் உதாரணங்களையும் சபைக் கூட்டங்களில் கேட்கையில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நல்ல உதாரணத்தை யோசித்து வைத்து, ஆனால் உடனடியாக பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போனதுண்டா? அதை எழுதி ஃபைலில் வையுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நீங்கள் கொஞ்ச காலமாக பயின்று வந்திருக்கிறீர்களென்றால் அநேக பேச்சுக்களைத் தயாரித்திருப்பீர்கள். அவற்றிற்காக தயாரித்த குறிப்புகளை தூக்கிப்போடுவதற்குப் பதிலாக பத்திரமாக வையுங்கள். நீங்கள் செய்த ஆராய்ச்சி பிற்பாடும் உதவியாக இருக்கும்.
மற்றவர்களிடம் பேசுங்கள்
ஜனங்கள், நடமாடும் தகவல் களஞ்சியங்கள் என்பதை ஞாபகம் வையுங்கள். லூக்கா தனது சுவிசேஷ பதிவை தொகுத்தபோது, கண்கண்ட சாட்சிகளை பேட்டி கண்டே பெரும் தகவலை திரட்டினார். (லூக். 1:1-4) நீங்கள் தேடிப் பார்க்க நினைத்த தகவலைப் பற்றி உடன் கிறிஸ்தவர் ஒருவர் உங்களுக்கு கூடுதல் விளக்கத்தை சொல்லலாம். எபேசியர் 4:8, 11-16 (NW) வசனங்களின்படி, ‘கடவுளுடைய குமாரனைப் பற்றிய திருத்தமான அறிவில்’ வளர நமக்கு உதவுவதற்காக ‘மனுஷர்களில் வரங்களை’ கிறிஸ்து பயன்படுத்துகிறார். கடவுளின் சேவையில் அனுபவமுள்ளவர்களை பேட்டி காண்பது பயன்மிக்க உத்திகளைக் கண்டடைய வாய்ப்பளிக்கும். மற்றவர்களோடு பேசும்போது அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்; இது, உண்மையிலேயே நடைமுறையான தகவலைத் தயாரிக்க உதவியாக இருக்கும்.
இதுவரை செய்த ஆராய்ச்சியை மதிப்பிடுங்கள்
அறுவடைக்குப் பிறகு, கோதுமை மணியை உமியிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். அதுபோல்தான் ஆராய்ச்சியின் அறுவடைக்குப் பிறகும் செய்ய வேண்டும். அவசியம் இல்லாதவற்றிலிருந்து மதிப்புள்ளதை பிரித்தெடுத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
ஆராய்ந்து எடுத்த தகவலை பேச்சில் பயன்படுத்துவதற்கு முன் இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் உபயோகிக்கப்போகும் குறிப்பு என் பேச்சிற்கு உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்குமா? அல்லது, இது சுவாரஸ்யமான தகவலாக இருந்தாலும் நான் பேச வேண்டிய விஷயத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்பிவிடுமா?’ சமீபத்திய சம்பவங்கள் அல்லது மாறிக்கொண்டே இருக்கும் துறைகளான அறிவியல் மற்றும் மருத்துவம் சம்பந்தமாக தகவலளிக்க நினைத்தால், அது லேட்டஸ்ட் தகவல்தானா என உறுதிசெய்து கொள்ளுங்கள். நம்முடைய பழைய பிரசுரங்களிலுள்ள சில குறிப்புகள்கூட இப்போது மாற்றப்பட்டிருக்கலாம் என்பதை மறவாதீர்கள். ஆகவே அந்த விஷயங்களின்பேரில் வெகு சமீபத்தில் வெளியான தகவலையே பயன்படுத்துங்கள்.
உலகப்பிரகாரமான புத்தகங்களிலிருந்து தகவலைத் திரட்ட நினைத்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையே சத்தியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். (யோவா. 17:17) கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் இயேசு முக்கிய பாகம் வகிக்கிறார். ஆகவே கொலோசெயர் 2:3 சொல்வதாவது: “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” ஆராய்ச்சியில் சேகரித்த தகவலை அந்தக் கோணத்திலிருந்து மதிப்பிடுங்கள். உலகப்பிரகாரமான புத்தகங்களிலிருந்து ஆராய்கையில் உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தத் தகவல் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறதா, ஊகிக்கப்பட்டிருக்கிறதா, அல்லது குறுகிய கண்ணோட்டத்தோடு சொல்லப்பட்டிருக்கிறதா? சுயநல அல்லது வியாபார நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறதா? மற்ற அதிகாரப்பூர்வ புத்தகங்கள் இதை ஏற்றுக்கொள்கின்றனவா? எல்லாவற்றிற்கும் மேலாக, இது பைபிள் சத்தியத்தோடு இசைந்திருக்கிறதா?’
அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் விவேகத்தையும் “வெள்ளியைப் போலவும் புதையல்களைப் போலவும்” தேட வேண்டுமென்று நீதிமொழிகள் 2:1-5 (NW) நம்மை உற்சாகப்படுத்துகிறது. கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும், அதேசமயத்தில் மிகுந்த பலன்கள் கிடைக்கும் என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது. ஆராய்ச்சிக்கு முயற்சி தேவை, ஆனால் விஷயங்களின் பேரில் கடவுளுடைய சிந்தனைகளைத் தெரிந்துகொள்ளவும், தவறான கருத்துக்களை மாற்றிக்கொள்ளவும், சத்தியத்தை இன்னும் இறுகப் பற்றிக்கொள்ளவும் அது உதவும். மேலும், அது உங்கள் பேச்சிற்கு உயிரூட்டி, அதை அர்த்தமுள்ளதாக்கும்; இவ்வாறு, பேச்சைக் கொடுப்பதிலும் கேட்பதிலும் மகிழ்ச்சியை அள்ளித்தரும்.