குடும்பங்களே, சபையாகவும் கடவுளை துதியுங்கள்
“சபைகளிலே நான் கர்த்தரைத் [“யெகோவாவை,” NW] துதிப்பேன்.”—சங்கீதம் 26:12.
1. வீட்டில் பைபிள் வாசித்து, ஜெபிப்பதோடுகூட உண்மை வணக்கத்தில் வேறு என்ன முக்கிய அம்சமும் உட்பட்டுள்ளது?
வீட்டில் பைபிளைப் படிப்பதும் ஜெபம் செய்வதும் மட்டுமே, யெகோவாவின் வணக்கத்தைக் குறிப்பதில்லை. கடவுளுடைய சபையின் பாகமாக செய்ய வேண்டிய செயலும் அதில் அடங்குகிறது. கடவுளுடைய சட்டங்களை கற்றுக்கொண்டு, அவருடைய வழியில் நடக்க ‘புருஷர்களையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் கூட்டும்படி’ பூர்வ இஸ்ரவேலர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. (உபாகமம் 31:12, 13; யோசுவா 8:35) யெகோவாவின் பெயரை துதிப்பதில் முதியோரும் ‘வாலிபரும் கன்னிகைகளும்’ சேர்ந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர். (சங்கீதம் 148:12, 13) இப்படிப்பட்ட ஏற்பாடுகள் கிறிஸ்தவ சபைக்கும் பொருந்துகின்றன. உலகம் முழுவதிலும் இருக்கும் ராஜ்ய மன்றங்களில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒன்றுகூடி வருகின்றனர். அங்கு நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும், தாராளமாக பதில்கள் சொல்வதிலும் அநேகர் மிக்க மகிழ்ச்சி அடைகின்றனர்.—எபிரெயர் 10:23-25.
2. (அ) இளைஞர்கள் சபை கூட்டங்களில் மகிழ்ச்சியாக கலந்துகொள்ள தயாரிப்பு ஏன் முக்கியம்? (ஆ) யாருடைய முன்மாதிரி அவசியம்?
2 சபை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளும் பழக்கம் நன்மை அளிக்கும் ஒன்று. ஆனால், இந்தப் பழக்கத்தைத் தொடர இளைஞர்களுக்கு உதவுவது சுலபமான காரியம் அல்ல. ஆனால், பெற்றோருடன் கூட்டங்களுக்கு வரும் சில பிள்ளைகள் அவற்றில் மகிழ்ச்சியோடு கலந்துகொள்வதில்லை என்பது வெளிப்படையான ஒன்று. அப்படியென்றால், பிரச்சினை என்னவாக இருக்கலாம்? அநேக பிள்ளைகள் சீக்கிரத்தில் கவனம் சிதறிப்போய், சலிப்படைந்து விடுகின்றனர். கூட்டங்களுக்கு தயாரித்துச் செல்வதன் மூலம் இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம். இல்லையென்றால், பிள்ளைகள் கூட்டங்களில் அர்த்தமுள்ள வகையில் பங்குகொள்ள முடியாது. (நீதிமொழிகள் 15:23) அவர்கள் திருப்தியளிக்கும் விதத்தில் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யவும் முடியாது. (1 தீமோத்தேயு 4:12, 15) இதற்கு என்ன செய்வது? முதலாவது, பெற்றோர் கூட்டங்களுக்கு தயாரிக்கிறார்களா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்களுடைய முன்மாதிரிதான் அதிக சக்திவாய்ந்தது. (லூக்கா 6:40) மேலும், குடும்ப படிப்புக்காக கவனமாக திட்டமிடுதலும் முக்கியமான அம்சம்.
இருதயத்தை பக்குவப்படுத்துதல்
3. இருதயங்களை பக்குவப்படுத்த குடும்ப படிப்பின்போது என்ன சிறப்பான முயற்சி எடுக்க வேண்டும், இதை எவ்வாறு செய்வது?
3 குடும்ப படிப்பு, வெறுமனே அறிவை தலைக்குள் திணிப்பதற்கான நேரம் மட்டுமல்ல. இருதயங்களைப் பக்குவப்படுத்துவதற்கான நேரமும்கூட. இதை எவ்வாறு செய்வது? குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்படும் பிரச்சினைகளை தெரிந்துகொண்டு அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அன்பைப் பொழிய வேண்டும். யெகோவா ‘இருதயத்தை சோதிக்கிறவர்.’—1 நாளாகமம் 29:17.
4. (அ) “நல்ல உள்ளெண்ணம் தேவை” என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) ‘ஞானத்தைப் பெற்றுக் கொள்வது’ எதை உட்படுத்துகிறது?
4 நம் பிள்ளைகளுடைய இருதயங்களை யெகோவா சோதிக்கும்போது அவர் காண்பது என்ன? கடவுளை தாங்கள் நேசிப்பதாக பெரும்பாலானோர் சொல்வர். அது பாராட்டுக்குரியதே. இருந்தாலும், ஓர் இளைஞரோ அல்லது யெகோவாவைப் பற்றி புதிதாக கற்றுக்கொள்கிறவரோ யெகோவாவின் வழிகளில் அனுபவம் குறைந்தவராய் இருக்கிறார். அதனால் பைபிள் சொல்லுகிறபடி, அவருக்கு “நல்ல உள்ளெண்ணம் தேவை.” [NW] அதனால் அவருடைய நோக்கங்கள் எல்லாமே தவறு என்று சொல்ல முடியாது. ஆனாலும், கடவுளை உண்மையில் பிரியப்படுத்தும் நிலைக்கு ஒருவருடைய இருதயத்தைப் பக்குவப்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும். ஒருவருடைய எண்ணங்கள், ஆசாபாசங்கள், விருப்பங்கள், உணர்ச்சிகள், வாழ்க்கை இலக்குகள் அனைத்தையும் கடவுளுடைய நோக்கங்களுக்கு இசைய கொண்டு வருவதை இது குறிக்கிறது. அபூரண மனிதர்களாகிய நம்மால் முடிந்தளவு அப்படி செய்வதை உட்படுத்துகிறது. தெய்வீக வழியில், உள்ளான ஆள்தன்மையை ஒருவர் வடிவமைக்கும்போதுதானே, “ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறர்.”—நீதிமொழிகள் 9:4; 19:8.
5, 6. பிள்ளைகள் ‘ஞானத்தைப் பெற்றுக் கொள்ள’ பெற்றோர் எப்படி உதவலாம்?
5 பிள்ளைகள் ‘ஞானத்தைப் பெற’ பெற்றோர் உதவ முடியுமா? நல்ல இருதய நிலையை ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கொடுப்பது சாத்தியமல்ல என்பது மெய்யே. தெரிவு செய்யும் சுதந்திரம் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோம் என்பதன்பேரிலேயே அது அதிகம் சார்ந்திருக்கிறது. என்றாலும் பிள்ளைகளுடைய இருதயத்தில் இருப்பதை வெளியே கொண்டு வரவும் எங்கே உதவி தேவை என்பதையும் பெற்றோர் பகுத்தறிய முடியும். உதாரணமாக ‘இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உண்மையிலேயே நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?’ என்ற கேள்விகளை பிள்ளைகளிடம் கேளுங்கள். அவர்கள் சொல்வதை பொறுமையோடு காது கொடுத்து கேளுங்கள். அளவுக்கு மிஞ்சி உணர்ச்சி வசப்படாதீர்கள். (நீதிமொழிகள் 20:5) ஆம், இருதயத்தை சென்றெட்ட, இரக்கம், பரிவு, மற்றும் அன்பு நிறைந்த சூழல் மிக முக்கியம்.
6 நல்ல உள்ளெண்ணங்களை வளர்க்க, ஆவியின் கனிகளைப் பற்றி அடிக்கடி கலந்து பேசுங்கள். ஒவ்வொரு கனியைப் பற்றியும் அவற்றை வளர்க்க குடும்பமாக என்ன செய்யலாம் என்பதையும் சிந்தியுங்கள். (கலாத்தியர் 5:22, 23) யெகோவாவின் மீதும் இயேசு கிறிஸ்துவின் மீதும் அன்பை வளருங்கள். அவர்கள் இருவரிலும் அன்புகூர வேண்டும் என வெறுமனே வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிராமல், அதற்கான காரணங்களையும் அதை எப்படி நாம் காண்பிக்க முடியும் என்பதையும் கலந்து பேசுங்கள். (2 கொரிந்தியர் 5:14, 15) சரியானதை செய்வதால் விளையும் நன்மைகளை காரணங்களோடு தெளிவுபடுத்துங்கள். இதன் மூலம் சரியானவற்றை செய்வதற்கான ஆவலை அதிகரியுங்கள். தவறான எண்ணங்கள், பேச்சு, நடத்தையால் வரும் கெட்ட விளைவுகளை விளக்குங்கள். இப்படிப்பட்ட காரியங்களை அறவே வெறுப்பதற்கான விருப்பத்தை இது வளர்க்கும். (ஆமோஸ் 5:15; 3 யோவான் 11) சிந்தனை, பேச்சு, நடத்தை—நல்லவையோ கெட்டவையோ—யெகோவாவோடு ஒருவருக்குள்ள உறவை பாதிக்கும் என்பதை விளக்குங்கள்.
7. யெகோவாவோடு உள்ள நெருங்கிய உறவை பாதிக்காதவாறு பிரச்சினைகளைத் தீர்க்கவும் தீர்மானங்களை எடுக்கவும் பிள்ளைகளுக்கு உதவ என்ன செய்யலாம்?
7 ஒரு பிள்ளை ஏதாவது ஒரு பிரச்சினையில் இருந்தாலோ அல்லது முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருந்தாலோ, நாம் பின்வரும் கேள்விகளை அந்தப் பிள்ளையிடம் கேட்கலாம்: ‘யெகோவா இதை எப்படி கருதுவாரென நீ நினைக்கிறாய்? யெகோவாவைப் பற்றி நீ தெரிந்திருக்கும் எந்த விஷயம் இப்படி சொல்லும்படி தூண்டுகிறது? இதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபித்தாயா?’ கடவுளுடைய சித்தத்தை உறுதியாய் தெரிந்து கொள்ளவும் அதை செய்யவும் விடாமுயற்சி தேவை. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் போக்கை அமைத்துக் கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துவக்குங்கள். யெகோவாவோடு நெருங்கிய, தனிப்பட்ட உறவை பிள்ளைகள் வளர்க்க, வளர்க்க கடவுளுடைய வழிகளில் நடப்பதில் அதிக மகிழ்ச்சியை அடைவார்கள். (சங்கீதம் 119:34, 35) மெய் கடவுளுடைய சபையோடு கூட்டுறவு கொள்ளும் சிலாக்கியத்துக்கான போற்றுதலை இது அவர்களில் வளர்க்கும்.
சபை கூட்டங்களுக்கு தயாரித்தல்
8. (அ) கவனம் செலுத்த வேண்டிய எல்லா விஷயங்களையும் குடும்ப படிப்பில் சேர்க்க எது நமக்கு உதவும்? (ஆ) இந்தப் படிப்பு எவ்வளவு அத்தியாவசியமானது?
8 குடும்ப படிப்பின்போது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் குடும்ப படிப்பில் எப்படி சிந்திக்கலாம்? எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் சிந்திப்பது சாத்தியமல்ல. ஆனால், செய்ய வேண்டிய காரியங்களை ஒரு பட்டியலிட்டு வரிசையாக சிந்திப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். (நீதிமொழிகள் 21:5) அவ்வப்போது, அந்த பட்டியலை மறுபரிசீலனை செய்து, எதற்கு உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமோ, அதை சிந்திக்க வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடைய அதிக கவனம் செலுத்துங்கள். குடும்ப படிப்பு என்ற ஏற்பாடு கிறிஸ்தவ போதிப்பின் முக்கிய பாகம். இப்போதைய வாழ்க்கைக்கும் வரவிருக்கும் நித்திய வாழ்க்கைக்கும் இது நம்மை தயார்படுத்துகிறது.—1 தீமோத்தேயு 4:8.
9. குடும்ப படிப்பில், கூட்டங்களுக்காக தயாரிப்பதில் படிப்படியாக முன்னேறுவதற்கு என்ன இலக்குகளை வைக்கலாம்?
9 உங்கள் குடும்ப படிப்பில், சபை கூட்டங்களுக்கு தயாரிப்பதையும் சேர்த்திருக்கிறீர்களா? நீங்கள் ஒன்றாக படிக்கும்போது, படிப்படியாக சேர்த்துக் கொள்ள வேண்டிய அநேக திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றை முடிக்க, வாரங்கள், மாதங்கள், ஏன் வருடங்கள்கூட ஆகலாம். பின்வரும் திட்டங்களை சற்று சிந்தியுங்கள்: (1) சபை கூட்டங்களில் பதில் சொல்வதற்கு குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் தயாராகுதல்; (2) தங்களுடைய சொந்த வார்த்தையில் பதில் சொல்வதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்தல்; (3) வசனங்களை உபயோகித்து பதில் சொல்லுதல்; (4) தனிப்பட்ட வாழ்க்கையில் பொருத்தும் நோக்கத்தோடு கட்டுரையை ஆராய்தல். இவை அனைத்தும் சத்தியத்தை தனதாக்கிக் கொள்ள ஒருவருக்கு உதவும்.—சங்கீதம் 25:4, 5.
10. (அ) சபை கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எப்படி நாம் கவனம் செலுத்தலாம்? (ஆ) இந்த முயற்சி ஏன் வீண்போகாது?
10 குடும்ப படிப்பில், அந்தந்த வாரத்திற்குரிய காவற்கோபுர கட்டுரைகளை படிப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம். இருந்தாலும், சபை புத்தக படிப்பு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம் போன்றவற்றை தனிப்பட்டவர்களாகவோ அல்லது குடும்பமாகவோ தயார்செய்வதன் முக்கியத்துவத்தை புறக்கணித்து விடாதீர்கள். யெகோவாவின் வழியில் நடக்க நமக்கு போதிக்கும் முக்கிய திட்டங்களுள் இவையும் அடங்குகின்றன. குடும்பமாக, எல்லா கூட்டங்களுக்கும் தவறாமல் நீங்கள் தயாரிக்கலாம். இப்படி நீங்கள் ஒன்று சேர்ந்து குடும்பமாக வேலை செய்வது, உங்கள் படிக்கும் திறமைகளை முன்னேற்றுவிக்கும். அதன் காரணமாக, கூட்டங்களில் இருந்து அதிகமான நன்மைகளை பெற முடியும். இந்தக் கூட்டங்களுக்கு தவறாமல் தயாரிப்பதன் நன்மைகளையும் அதற்காக திட்டவட்டமான நேரத்தை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் கலந்து பேசுங்கள்.—எபேசியர் 5:15-17.
11, 12. சபை கூட்டங்களில் பாடுவதற்கு தயாரிப்பது எப்படி நமக்கு நன்மையளிக்கும், இதை எப்படி செய்யலாம்?
11 “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாட்டில், நம்முடைய கூட்டங்களின் மற்றொரு அம்சத்திற்கும்—பாடுவதற்கும்—தயாரிக்கும்படி நமக்கு உற்சாகமளிக்கப்பட்டது. அந்த ஆலோசனையை நீங்கள் பின்பற்றி வருகிறீர்களா? இப்படி செய்வது, பைபிள் சத்தியங்களை நம் மனதிலும் இருதயத்திலும் பதிய வைக்க உதவுகிறது. அதே சமயம், சபை கூட்டங்களில் கலந்து கொள்வதால் கிடைக்கும் சந்தோஷத்தை இது அதிகரிக்கிறது.
12 அந்தந்த வாரத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை வாசிப்பதும், அப்பாடல்களில் வரும் வார்த்தைகளின் அர்த்தத்தை சிந்திப்பதையுமே தயாரிப்பு உட்படுத்துகிறது. இது, பாடல்களை நம்முடைய இருதயத்தில் இருந்து பாடுவதற்கு நமக்கு உதவும். பூர்வ இஸ்ரவேலில், வணக்கத்தில் இசைக் கருவிகள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டன. (1 நாளாகமம் 25:1; சங்கீதம் 28:7) உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இசைக் கருவி ஏதும் வாசிக்க தெரியுமா? அதன் உதவியோடு, அந்த வாரத்திற்குரிய பாடல்களில் ஒன்றை குடும்பமாக பாடிப் பழகலாமல்லவா? பாடல்களின் இசையை டேப்பில் போட்டு, பாடிப் பழகுவது மற்றொரு முறை. சில தேசங்களில், இசைக் கருவியின் உதவியே இல்லாமல் நம் சகோதரர்கள் இனிமையாக பாடுகின்றனர். சாலையில் நடக்கும்போதும், வயல்களில் வேலை செய்யும்போதும் அந்த வாரத்திற்குரிய சபைக் கூட்டங்களுக்கான பாடல்களை அடிக்கடி பாடுகின்றனர்.—எபேசியர் 5:19.
குடும்பமாக வெளி ஊழியத்திற்கு தயாராகுதல்
13, 14. வெளி ஊழியத்திற்காக நம் இருதயங்களை தயார் நிலையில் வைக்க குடும்பமாக சிந்திப்பது ஏன் மதிப்புமிக்கது?
13 யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்க வேண்டியது நம் வாழ்க்கையின் முக்கிய பாகமாகும். (ஏசாயா 43:10-12; மத்தேயு 24:14) வயோதிபராய் இருந்தாலும்சரி அல்லது வாலிபராய் இருந்தாலும்சரி, நல்ல தயாரிப்பால், இந்த வேலையில் அதிக சந்தோஷத்தை கண்டடையலாம், அதிகத்தை சாதிக்கவும் செய்யலாம். குடும்பத்தில் இதை எப்படி செய்யலாம்?
14 நம் வணக்கத்தில் உட்பட்ட எல்லா காரியங்களிலும் நம் இருதயங்களை தயார் நிலையில் வைக்க வேண்டியதும் அவசியம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை மட்டுமல்ல ஏன் செய்யப்போகிறோம் என்பதையும் கலந்து பேச வேண்டும். யோசபாத் ராஜாவின் நாட்களிலே, கடவுளுடைய சட்டங்கள் மக்களுக்கு போதிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் ‘தங்கள் இருதயத்தை இன்னும் நேராக்காதிருந்தார்கள்’ என பைபிள் குறிப்பிடுகிறது. உண்மை வணக்கத்தில் இருந்து வழி விலகச் செய்யும் கவர்ச்சிப் படுகுழிகளில் வீழ்ந்து போவதற்கு இது வழிநடத்தியது. (2 நாளாகமம் 20:33; 21:11) வெளி ஊழியத்தில் செலவிட்ட நேரத்தை அறிக்கையிடுவதோ அல்லது வெறுமனே பத்திரிகைகளையும் புத்தகங்களையும் கொடுப்பது மட்டுமோ நம் இலக்கல்ல. ஜீவனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புடைய மக்களுக்கானதாகவும் யெகோவாவுக்கான அன்பின் வெளிக்காட்டாகவும் நம் ஊழியம் இருக்க வேண்டும். (எபிரெயர் 13:15) நாம் “தேவனுக்கு உடன் வேலையாட்களாய்” இருக்கும் செயல் இது. (1 கொரிந்தியர் 3:9) எப்பேர்ப்பட்ட பாக்கியம் இது! நாம் ஊழியத்தில் கலந்து கொள்ளும்போது, தேவ தூதர்களோடு சேர்ந்து ஒத்துழைக்கிறோம். (வெளிப்படுத்துதல் 14:6, 7) வாராந்தர படிப்பாக இருந்தாலும்சரி அல்லது தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தில் இருந்து பொருத்தமான ஒரு வசனத்தை குடும்பமாக சிந்திப்பதாக இருந்தாலும்சரி, ஊழியத்திற்காக போற்றுதலை அதிகரிக்க இதைவிட சிறந்த நேரம் வேறு ஏது!
15. வெளி ஊழியம் சம்பந்தப்பட்ட காரியங்களை குடும்பமாக நாம் எப்போது சிந்திக்கலாம்?
15 அந்த வார வெளி ஊழியத்திற்கு தயாராக உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவ அவ்வப்போது குடும்ப படிப்பில் நேரம் ஒதுக்குகிறீர்களா? அப்படி செய்வது சிறந்த பலன்களை தரும். (2 தீமோத்தேயு 2:15) அதோடு அவர்களுடைய ஊழியத்தை அர்த்தமுள்ளதாகவும் பலன்தரத்தக்கதாகவும் ஆக்கும். இடையிடையே, அந்த வார குடும்ப படிப்புக்கான நேரம் முழுவதையுமே ஊழியத்திற்காக தயாராவதற்கு ஒதுக்கலாம். வெளி ஊழியம் பற்றிய சில அம்சங்களை குடும்ப படிப்பின் முடிவில் சுருக்கமாக சிந்திக்கலாம். அல்லது அந்த வாரத்தில் வேறு ஏதாவது சமயத்திலும் இதைப் பற்றி சிந்திக்கலாம்.
16. பத்தியில் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு குறிப்பின் மதிப்பையும் விளக்குங்கள்.
16 குடும்பமாக படிக்கும் இந்த நேரங்களில் பின்வரும் சில காரியங்களுக்கு கவனத்தை செலுத்தலாம்: (1) சந்தர்ப்பத்திற்கேற்ப, பைபிளில் இருந்து ஒரு வசனத்தை வாசித்து நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட ஓர் ஊழிய அளிப்பை தயாரியுங்கள். (2) முடிந்தால், வெளி ஊழியத்திற்காக ஒரு பை, பைபிள், ஒரு நோட்புக், பேனா அல்லது பென்சில், துண்டுப்பிரதிகள், கசங்காமல் நல்ல நிலையில் இருக்கும் மற்ற புத்தகங்கள் போன்றவை ஒவ்வொருவருக்கும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளி ஊழியத்திற்கு எடுத்து செல்லும் பை விலையுயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும். (3) சந்தர்ப்ப சாட்சி, எங்கே, எப்படி கொடுக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள். இப்படி ஆலோசனைப் பெற்ற ஒவ்வொரு படிப்பிற்கும் பிறகு, ஒன்றாக வெளி ஊழியம் செய்யுங்கள். பலன் தரும் ஆலோசனைகளை கொடுங்கள். ஆனால், ஒரே சமயத்தில் நிறைய குறிப்புகளின் பேரில் ஆலோசனை தராதீர்கள்.
17, 18. (அ) நம் ஊழியத்தை பலன்தரத்தக்கதாக ஆக்குவதற்கு என்ன வகை தயாரிப்பை குடும்பமாக செய்யலாம்? (ஆ) இந்த தயாரிப்பின் எந்த அம்சத்தை ஒவ்வொரு வாரமும் சிந்திக்க வேண்டும்?
17 சீஷராக்குதலே, இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுபவர்களுக்கு நியமித்த வேலையின் முக்கிய பாகம். (மத்தேயு 28:19, 20) பிரசங்கிப்பதைவிட அதிகத்தை இது உட்படுத்துகிறது. கற்பித்தலை தேவைப்படுத்துகிறது. இதைத் திறமையாக செய்வதற்கு குடும்ப படிப்பு உங்களுக்கு எப்படி உதவ முடியும்?
18 யார் யாரை எல்லாம் மறுசந்திப்பு செய்வது நல்லது என்பதை குடும்பமாக சிந்தியுங்கள். சிலர் பத்திரிகையையோ அல்லது புத்தகத்தையோ வாங்கியிருப்பார்கள். சிலர் வெறுமனே நாம் சொன்னதை கேட்டிருப்பார்கள். இவர்களை நாம் வீட்டுக்கு வீடு ஊழியத்திலோ அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் மூலம் மார்க்கெட்டிலோ அல்லது ஸ்கூலிலோ சந்தித்திருக்கலாம். கடவுளுடைய வார்த்தையே இதில் உங்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். (சங்கீதம் 25:9; எசேக்கியேல் 9:4) ஒவ்வொருவரும் அந்த வாரத்தில் யாரை எல்லாம் மறுபடியும் சந்திக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள். எதைப் பற்றி பேசுவீர்கள்? குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் இதற்காக தயாராவதற்கு குடும்பமாக சிந்திப்பது உதவும். ஆர்வம் காட்டியவர்களோடு பகிர்ந்து கொள்ள குறிப்பாக சில வசனங்களையும் கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேட்டில் இருந்தோ அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் இருந்தோ பொருத்தமான சில குறிப்புகளையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சந்திப்பிலேயே எல்லா குறிப்புகளையும் சொல்ல முயற்சி செய்யாதீர்கள். முடிவில் ஒரு கேள்வியை கேளுங்கள். அதற்கான பதிலை அடுத்த சந்திப்பில் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் எந்தெந்த மறுசந்திப்புகளுக்கு செல்கிறார்கள், எப்போது செல்வார்கள், என்ன பேசுவார்கள் என குடும்பமாக திட்டமிடுவதை நீங்கள் பழக்கமாக்கிக் கொள்ளலாம் அல்லவா? முழு குடும்பமும் வெளி ஊழியத்தில் பலன்தரும் வகையில் கலந்துகொள்ள இது உதவும்.
யெகோவாவின் வழிகளில் தொடர்ந்து போதியுங்கள்
19. குடும்ப அங்கத்தினர் எல்லாரும் யெகோவாவின் வழிகளில் தொடர்ந்து நடக்க வேண்டுமென்றால், அவர்கள் எதை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும், இதற்கு எது உதவக்கூடும்?
19 இந்தப் பொல்லாத உலகில், குடும்ப தலைவராக இருப்பதே மாபெரும் சவால். யெகோவாவின் ஊழியர்களுடைய ஆவிக்குரிய தன்மையை குலைக்க சாத்தானும் அவனுடைய பேய்களும் முயன்று வருகின்றனர். (1 பேதுரு 5:8) அதுமட்டுமல்ல, இன்று பெற்றோர்கள், குறிப்பாக தனிமரமாய் விடப்பட்ட தாய் தகப்பன்மார்கள் அளவுக்கதிகமான பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். நீங்கள் செய்ய விரும்பும் எல்லா காரியங்களுக்கும் நேரம் கிடைப்பதே அரிது. ஒரு சமயத்தில், ஒரே ஒரு ஆலோசனையை நீங்கள் நடைமுறைப்படுத்தலாம். இப்படியாக குடும்ப படிப்பு திட்டத்தை படிப்படியாக முன்னேற்றுவிக்கலாம். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி வீண்போகாது. உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் யெகோவாவின் வழிகளில் உண்மையாக நடப்பது உங்களுக்கு புத்துயிர்ச்சி அளிக்கும் ஒரு பரிசு. யெகோவாவின் வழிகளில் வெற்றிகரமாக நடக்க வேண்டுமானால், குடும்ப அங்கத்தினர்கள் சபை கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி காண வேண்டும். இதற்கு, ஒவ்வொருவருடைய இருதயங்களையும் பக்குவப்படுத்தும், ஊழியத்தில் பலன்தரும் விதத்தில் கலந்துகொள்ள உதவும் தயாரிப்பு அவசியம்.
20. 3 யோவான் 4-ல் குறிப்பிட்டுள்ள சந்தோஷத்தை மேலும் அதிகமான பெற்றோர் அனுபவிக்க எது உதவும்?
20 தன்னிடம் ஆவிக்குரிய உதவி பெற்றவர்களைப் பற்றி எழுதும்போது, “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிக சந்தோஷம் எனக்கு இல்லை” என யோவான் குறிப்பிட்டார். (3 யோவான் 4) இப்படிப்பட்ட சந்தோஷத்தை அனுபவிக்க, திட்டவட்டமான இலக்குகளை மனதில் வைத்து குடும்ப படிப்பு நடத்தப்பட வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவருடைய தேவைகளையும், கரிசனையோடும் பரிவோடும் குடும்பத் தலைவர்கள் கவனிக்க வேண்டும். கடவுள் காட்டும் ஜீவ வழிக்கு போற்றுதலை வளர்ப்பதன் மூலம், வாழ்க்கையில் மிகச் சிறந்ததை தங்கள் குடும்பங்கள் மகிழ்ந்து அனுபவிக்க பெற்றோர் உதவுகின்றனர்.—சங்கீதம் 19:7-11.
உங்கள் உள்ளத்திலிருந்து?
◻ கூட்டங்களுக்கு தயாரிப்பது பிள்ளைகளுக்கு ஏன் மிக மிக முக்கியம்?
◻ பிள்ளைகள் ‘ஞானத்தைப் பெற்றுக் கொள்ள’ பெற்றோர் எப்படி உதவலாம்?
◻ எல்லா கூட்டங்களுக்கும் தயாரிக்க குடும்ப படிப்பு எப்படி உதவும்?
◻ ஊழியத்தில் இன்னும் பலன்தரும் வகையில் இருப்பதற்கு குடும்பமாக தயாரிப்பது எப்படி உதவுகிறது?
[பக்கம் 20-ன் படம்]
உங்கள் குடும்ப படிப்பில் சபை கூட்டங்களுக்கு தயாரிப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்
[பக்கம் 21-ன் படம்]
கூட்டங்களில் பாட பழகுதல் பயனுள்ளது