வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
‘யாசேரின் புஸ்தகத்தையும்’ ‘கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தையும்’ பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (யோசு. 10:13; எண். 21:15) இந்த இரண்டு புஸ்தகங்களும் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லை. அப்படியென்றால், இவை கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டு, பிற்பாடு காணாமல் போய்விட்டனவா?
இந்த இரண்டு புஸ்தகங்களும் கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டு, பிற்பாடு காணாமல் போய்விட்டன என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. கடவுளுடைய தூண்டுதலால் பைபிளை எழுதியவர்கள் வேறு பல புஸ்தகங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை பைபிள் புஸ்தகங்களாகவே இருக்கலாம், ஆனால் நவீன வாசகர்களுக்குப் பழக்கமில்லாத பெயர்களில் இருக்கலாம். உதாரணத்திற்கு, 1 நாளாகமம் 29:30-ல், ‘ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தம்,’ ‘தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தம்,’ ‘ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தம்’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இம்மூன்றும் சேர்ந்து, இன்று நாம் அழைக்கிற 1 சாமுவேல் மற்றும் 2 சாமுவேல் புஸ்தகமாகவோ, நியாயாதிபதிகள் புஸ்தகமாகவோ இருக்கலாம்.
மறுபட்சத்தில், சில புஸ்தகங்களின் பெயர்கள் பைபிளிலுள்ள புஸ்தகங்களின் பெயர்களைப் போலவே இருந்தாலும் உண்மையில் அவை பைபிள் புஸ்தகங்களாக இல்லாதிருக்கலாம். இதற்கு உதாரணமாக, பின்வரும் நான்கு புஸ்தகங்களைக் குறிப்பிடலாம்: ‘யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகம்,’ ‘யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகம்,’ ‘இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகம்,’ ‘இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகம்.’ இந்தப் புஸ்தகங்களின் பெயர்கள், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள் என்று நாம் அழைக்கிற புஸ்தகங்களின் பெயர்களைப் போலவே இருந்தாலும், அவை கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டவை அல்ல; அவை பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலிலும் இடம்பெறுவதில்லை. (1 இரா. 14:29; 2 நா. 16:11; 20:34; 27:7) ஆகவே இந்தப் புஸ்தகங்கள், தீர்க்கதரிசியாகிய எரேமியாவும் எஸ்றாவும் பைபிள் பதிவுகளை எழுதிய காலப்பகுதியில் கிடைத்த வெறும் சரித்திரப் பதிவுகளாக இருந்திருக்கலாம்.
ஆம், பைபிள் எழுத்தாளர்கள் அன்று இருந்த, ஆனால் கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்படாத சரித்திரப் பதிவுகளையோ ஆவணங்களையோ பற்றிக் குறிப்பிட்டார்கள் அல்லது அவற்றை ஆராய்ந்தார்கள். ‘மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தைப்’ பற்றி எஸ்றா 10:2 குறிப்பிடுகிறது. அவ்வாறே, லூக்கா தனது சுவிசேஷத்தை எழுதுவதற்கு ‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததாக’ குறிப்பிட்டார். தன்னுடைய சுவிசேஷத்தில் இயேசுவின் வம்சாவளிப் பட்டியலைத் தொகுத்து எழுதுவதற்காக அன்று கிடைத்த பதிவுகளையெல்லாம் தான் அலசி ஆராய்ந்ததை அவர் அர்த்தப்படுத்தியிருக்கலாம். (லூக். 1:3; 3:23-38) லூக்கா ஆராய்ந்த பதிவுகள் கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்படவில்லை என்றாலும் அவர் தன்னுடைய சுவிசேஷத்தைக் கடவுளுடைய தூண்டுதலால்தான் எழுதினார். அது இன்றும் நமக்கு மிகுந்த பயனளிக்கிறது.
ஆரம்பக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘யாசேரின் புஸ்தகத்தையும்’ ‘கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தையும்’ பற்றி என்ன சொல்லலாம்? அவை கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்படாத பதிவுகளாக இருந்திருக்கலாம். அதனால்தான் கடவுள் அவற்றைப் பாதுகாக்கவில்லை. பைபிள் எழுத்தாளர்களுடைய குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, அவை இஸ்ரவேலர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடந்த போர்களைப் பற்றிய பாடல் தொகுப்பாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு அறிஞர்கள் வருகிறார்கள். (2 சா. 1:17-27) அவை, “பூர்வ இஸ்ரவேலின் பாடகர்கள் சேகரித்து வைத்திருந்த கவிதைகள் மற்றும் பாடல்களின் பேர்போன தொகுப்பாக” இருந்திருக்கலாமென ஒரு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. சிலசமயங்களில், தீர்க்கதரிசனங்களைச் சொல்லவோ தரிசனங்களைக் காணவோ கடவுளால் பயன்படுத்தப்பட்டவர்கள் எழுதிய பதிவுகள்கூட கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்படவில்லை; நம் நாளில் ‘உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், பிரயோஜனமுள்ளவையாய்’ இருக்கிற பைபிளின் புஸ்தகங்களோடு அந்தப் பதிவுகளைக் கடவுள் சேர்க்கவில்லை.—2 தீ. 3:17; 2 நா. 9:29; 12:15; 13:22.
சில புஸ்தகங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்ட காரணத்திற்காகவும் அவை பிரயோஜனமான பதிவுகளாயிருந்த காரணத்திற்காகவும் அவை கடவுளுடைய தூண்டுதலால்தான் எழுதப்பட்டன என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. இருந்தாலும், ‘தேவனுடைய வசனம்’ அடங்கிய எல்லா பதிவுகளையும் யெகோவா தேவன் பாதுகாத்து வைத்திருக்கிறார்; அவை “என்றென்றைக்கும் நிற்கும்.” (ஏசா. 40:8) ஆம், நம்மிடமுள்ள 66 பைபிள் புஸ்தகங்களில் யெகோவா அளித்திருக்கும் தகவல்கள், ‘நாம் தேறினவர்களாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும் இருப்பதற்குப்’ போதுமானவையாக இருக்கின்றன.—2 தீ. 3:16, 17.