-
யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 1
யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்?
டென்மார்க்
தைவான்
வெனிசுவேலா
இந்தியா
யெகோவாவின் சாட்சிகள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? எங்களில் யாராவது உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் குடியிருக்கலாம், உங்களோடு வேலை செய்யலாம், உங்களோடு பள்ளிக்கூடத்தில் படிக்கலாம். இல்லையென்றால், பைபிளைப் பற்றி உங்களிடம் பேசியிருக்கலாம். நாங்கள் யார், ஏன் பைபிளைப் பற்றி எல்லாருக்கும் சொல்கிறோம்?
நாங்கள் சாதாரண ஜனங்கள்தான். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், என எல்லாரும் எங்கள் சபையில் இருக்கிறார்கள். வித்தியாசமான இனம், மொழி, கலாச்சாரத்திலிருந்து வந்தவர்களும் எங்கள் சபையில் இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சியாவதற்கு முன்பு எங்களில் சிலர் மற்ற மதங்களில் இருந்தார்கள், சிலர் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்தார்கள். ஆனால் நாங்கள் எல்லாருமே பைபிளை நன்றாகப் படித்தோம். (அப்போஸ்தலர் 17:11) பைபிளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாமே உண்மை என்று புரிந்துகொண்டோம். அதற்குப் பிறகுதான் யெகோவாவின் சாட்சியாக வேண்டும் என்று முடிவு செய்தோம்.
பைபிள் படிப்பது எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. எல்லாரையும் போல் எங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன, எங்களிடமும் குறைகள் இருக்கின்றன. ஆனால், பைபிள் சொல்வதுபோல் நடக்க முயற்சி செய்வதால், எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. (சங்கீதம் 128:1, 2) மற்றவர்களுடைய வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால்தான், பைபிளில் இருக்கும் அருமையான விஷயங்களை எல்லாருக்கும் சொல்கிறோம்.
பைபிள் சொல்வதுபோல் நடந்துகொள்ள முயற்சி செய்கிறோம். அதனால் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. சமுதாயத்திற்குப் பிரயோஜனமாக இருப்பதற்கும் நல்ல குடிமக்களாக இருப்பதற்கும் பைபிள் எங்களுக்கு உதவி செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மரியாதை காட்டுவதற்கு, நேர்மையாக நடந்துகொள்வதற்கு, அன்பாக பழகுவதற்கு பைபிளிலிருந்து கற்றுக்கொண்டோம். குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதற்கு பைபிள் உதவி செய்திருக்கிறது. ஒழுக்கமாக வாழ்வதற்குக்கூட கற்றுக்கொடுத்திருக்கிறது. ‘பாரபட்சம் காட்டாத கடவுளை’ வணங்குவதால் நாங்களும் பாரபட்சம் காட்டுவதில்லை. நாடு, இனம் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்பாக ஒரே குடும்பம் போல் இருக்கிறோம். நாங்கள் சாதாரண ஜனங்கள்தான், ஆனாலும் மற்றவர்களிலிருந்து நாங்கள் வித்தியாசமான ஜனங்களாக இருக்கிறோம்.—அப்போஸ்தலர் 4:13; 10:34, 35.
எந்த விதத்தில் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களைப் போல் இருக்கிறார்கள்?
பைபிள் சொல்வதுபோல் நடப்பதால் யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நன்மைகள் கிடைத்திருக்கிறது?
-
-
யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 2
யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?
நோவா
ஆபிரகாம், சாராள்
மோசே
இயேசு கிறிஸ்து
யெகோவாவின் சாட்சிகள்—இந்தப் பெயரை கேட்டதும், ஏதோ ஒரு புது மதம் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், 2,700 வருடங்களுக்கு முன்பே யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள். யெகோவாவை வணங்கிய ஜனங்களை அவருடைய ‘சாட்சிகள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 43:10-12) எங்களுக்கு 1931 வரை பைபிள் மாணாக்கர்கள் என்ற பெயர் இருந்தது. அதற்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது. ஏன் தெரியுமா?
இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய கடவுள் யார் என்று தெரிந்துகொள்ளலாம். பழங்காலத்து பைபிள் சுருள்களில் யெகோவா என்ற பெயர் ஆயிரக்கணக்கான தடவை இருக்கிறது. ஆனால், பைபிளை மொழிபெயர்த்தவர்கள் அந்தப் பெயரை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கர்த்தர், ஆண்டவர் என்று போட்டுவிட்டார்கள். மோசேயிடம் கடவுள் பேசியபோது யெகோவா என்ற அவருடைய பெயரைச் சொன்னார். அதோடு, “என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்” என்றும் சொன்னார். (யாத்திராகமம் 3:15) இப்படி, அவருக்கும் பொய் தெய்வங்களுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண்பித்தார். யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய முக்கியமான வேலையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் இருந்தே நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். ஆபேல்தான் யெகோவாவுக்கு முதல் சாட்சியாக இருந்தார். அதற்குப் பிறகு வந்த நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, தாவீது என நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்தார்கள். இவர்கள் எல்லாரும் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால்தான், “திரண்ட மேகம் போன்ற இத்தனை சாட்சிகள்” யெகோவாவுக்கு இருந்திருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:4–12:1) ஒரு நிரபராதிக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்வது போல் நாங்களும் கடவுளுக்கு ஆதரவாக சாட்சி சொல்கிறோம். அதாவது, அவரைப் பற்றிய உண்மைகளை எல்லாருக்கும் சொல்கிறோம்.
இயேசுவைப் போல் நடந்துகொள்கிறோம். இயேசுவை, “நம்பகமான, உண்மையான சாட்சி” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 3:14) ‘கடவுளுடைய பெயரை தெரியப்படுத்தினேன்’ என்று இயேசு பூமியில் இருந்தபோது சொன்னார். அதோடு, “சத்தியத்தைப் பற்றிச் சாட்சி” கொடுத்தார். அதாவது, கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார். (யோவான் 17:26; 18:37) இயேசுவைப் போல் நடந்துகொள்ள ஆசைப்படுகிற எல்லாரும் கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதைத்தான் யெகோவாவின் சாட்சிகள் செய்கிறார்கள்.
பைபிள் மாணாக்கர்களுக்கு ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது?
எவ்வளவு காலமாக யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள்?
யெகோவாவுக்கு முக்கியமான சாட்சி யார்?
-