படிப்பு 18
பைபிளை பயன்படுத்தி பதிலளித்தல்
நம்முடைய நம்பிக்கைகளை, நம்முடைய வாழ்க்கை முறையை, தற்போதைய உலக சம்பவங்கள் சம்பந்தமாக நம்முடைய நோக்குநிலையை, அல்லது நம்முடைய எதிர்கால நம்பிக்கையைப் பற்றி யாராவது நம்மிடம் கேட்கும்போது நாம் பைபிளை பயன்படுத்தி பதிலளிக்க முயல்கிறோம். ஏன்? ஏனென்றால் இது கடவுளுடைய வார்த்தை. நாம் பைபிளிலிருந்தே நம்முடைய நம்பிக்கைகளைப் பெற்றிருக்கிறோம். இதை அடிப்படையாக கொண்டே நம்முடைய வாழ்க்கை முறையை அமைக்கிறோம். உலக சம்பவங்களைப் பற்றிய நம்முடைய நோக்குநிலையை பைபிள் வடிவமைக்கிறது. ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளின் வாக்குறுதிகளிலேயே நம்முடைய எதிர்கால நம்பிக்கை உறுதியாக வேரூன்றியிருக்கிறது.—2 தீ. 3:16, 17.
நாம் தாங்கியிருக்கும் பெயரால் வரும் உத்தரவாதத்தை நன்கு உணர்ந்திருக்கிறோம். நாம் யெகோவாவின் சாட்சிகள். (ஏசா. 43:12) ஆகவே நாம் பதிலளிக்கும்போது, மனித தத்துவத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் யெகோவா தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையில் என்ன சொல்கிறாரோ அதன் அடிப்படையிலேயே பதிலளிக்கிறோம். சில விஷயங்களில் நமக்கு சொந்த அபிப்பிராயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் நம்முடைய நோக்குநிலைகளை கடவுளுடைய வார்த்தை வடிவமைப்பதற்கு அனுமதிக்கிறோம்; ஏனென்றால் இதுவே சத்தியம் என நாம் உறுதியாக நம்புகிறோம். அநேக விஷயங்களில் நம்முடைய சொந்த விருப்பங்களின்படி செய்ய பைபிள் நமக்கு சுதந்திரம் அளிக்கிறது. மற்றவர்கள் மீது நம்முடைய விருப்பங்களை திணிப்பதற்குப் பதிலாக, வேதவசனங்களில் உள்ள நியமங்களைப் போதிக்க விரும்புகிறோம். இவ்வாறு, நாம் அனுபவிக்கும் அதே சுதந்திரத்தை நமக்கு செவிகொடுப்போரும் அனுபவிக்க அனுமதிக்கிறோம். அப்போஸ்தலன் பவுலைப் போலவே, “விசுவாசத்தினாலே கீழ்ப்படிதலை வளர்க்க” நாம் விரும்புகிறோம்.—ரோ. 16:26, NW.
வெளிப்படுத்துதல் 3:13-ல், “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி” என இயேசு கிறிஸ்து வர்ணிக்கப்படுகிறார். அவர் தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளித்து, சூழ்நிலைகளை கையாண்டார்? சில சந்தர்ப்பங்களில், மக்களை சிந்திக்க வைக்கும் உவமைகளைப் பயன்படுத்தினார். வேறு சில சந்தர்ப்பங்களில், கேள்வி கேட்பவர் ஒரு வேதவசனத்தை எப்படி புரிந்திருக்கிறார் என்பதை அவரிடமே கேட்பதன் மூலம் பதிலளித்தார். அடிக்கடி வேதவசனங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் அல்லது அவற்றை சுருக்கி உரைப்பதன் மூலம் அல்லது அவற்றை மறைமுகமாக குறிப்பிடுவதன் மூலம் பதிலளித்தார். (மத். 4:3-10; 12:1-8; லூக். 10:25-28; 17:32) முதல் நூற்றாண்டில், வேதாகம சுருள்கள் பொதுவாக ஜெப ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சுருள்களை இயேசு சொந்தமாக வைத்திருந்ததற்கு எந்த அத்தாட்சியும் இல்லை; ஆனால் வேதாகமத்தை அவர் நன்கு அறிந்திருந்தார், பிறருக்கு போதிக்கையில் அவற்றை தாராளமாக பயன்படுத்தினார். (லூக். 24:27, 44-47) சுயமாக கற்பிக்கவில்லை என அவரால் உண்மையாகவே சொல்ல முடிந்தது. தம்முடைய பிதாவிடமிருந்து கேட்டவற்றையே அவர் பேசினார்.—யோவா. 8:26.
இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுவதே நம்முடைய ஆசை. கடவுள் பேசியதை இயேசு நேரடியாக கேட்டதைப் போல நாம் தனிப்பட்ட முறையில் கேட்டதில்லை. ஆனால் பைபிள் கடவுளுடைய வார்த்தை. அதை ஆதாரமாக பயன்படுத்தி பதில்கள் அளிக்கையில், நம்மிடம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதை நாம் தவிர்க்கிறோம். அபூரண மனிதருடைய அபிப்பிராயத்தை பறைசாற்றுவதற்குப் பதிலாக, எது சத்தியம் என்பதை கடவுள் சொல்லும்படி விட்டுவிடுவதில் உறுதியாக இருக்கிறோம் என காட்டுகிறோம்.—யோவா. 7:18; ரோ. 3:4.
என்றபோதிலும், பைபிளை வெறுமனே பயன்படுத்துவது நமது விருப்பமல்ல, செவிகொடுத்து கேட்பவருக்கு மிகவும் பயன்தரும் விதத்தில் அதை உபயோகிப்பதே நமது விருப்பம். அவர் திறந்த மனதோடு செவிசாய்க்கும்படி விரும்புகிறோம். அந்த நபருடைய மனப்பான்மையைப் பொறுத்து, “கடவுள் என்ன சொல்கிறாரோ அதுதான் முக்கியம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா?” என கேட்பதன் மூலம் நீங்கள் பைபிள் கருத்துக்களை அறிமுகப்படுத்தலாம். அல்லது இப்படி கேட்கலாம்: “அந்தக் கேள்விக்கு பைபிளில் பதில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” பைபிளுக்கு அதிக மதிப்பு தராத ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தால், ஓரளவு வித்தியாசமான அறிமுகத்தை பயன்படுத்துவது அவசியம். நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இந்தப் பூர்வீக தீர்க்கதரிசனத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.” அல்லது இப்படி சொல்லலாம்: “மனித சரித்திரத்திலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் புத்தகம் இப்படி சொல்கிறது, . . . ”
சில சந்தர்ப்பங்களில், நீங்கள் ஒரு வசனத்தை சுருக்கமாக சொல்ல விரும்பலாம். ஆனால் சாத்தியமென்றால், பைபிளை திறந்து அது என்ன சொல்கிறது என்பதை அதிலிருந்தே வாசிப்பது மிகவும் நல்லது. முடிந்தால், அந்த நபருடைய பைபிளிலிருந்தே அந்த வசனத்தை அவருக்கு காட்டுங்கள். இப்படி நேரடியாக பைபிளை பயன்படுத்துவது மக்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.—எபி. 4:12.
கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது பைபிளை பயன்படுத்த வேண்டிய விசேஷ பொறுப்பு கிறிஸ்தவ மூப்பர்களுக்கு இருக்கிறது. மூப்பர்களுக்குரிய தகுதிகளில் ஒன்று, “போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்”வதாகும். (தீத். 1:9) சபையிலுள்ள அங்கத்தினர் ஒருவருக்கு மூப்பர் அறிவுரை வழங்கிய பிறகு அந்த நபர் வாழ்க்கையில் முக்கிய தீர்மானத்தை எடுக்கலாம். அப்படியானால், இந்த அறிவுரை பைபிளின் அடிப்படையில் இருப்பது எவ்வளவு முக்கியம்! இப்படி செய்யும் ஒரு மூப்பருடைய உதாரணம், இத்தகைய போதிக்கும் முறையையே பின்பற்ற அநேகரைத் தூண்டலாம்.