படிப்பு 44
கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துதல்
கேள்விகள் பதிலை எதிர்பார்ப்பதால்—அவை வாய்மொழி பதிலாக இருந்தாலும்சரி மனதிலேயே சொல்லிக்கொள்ளும் பதிலாக இருந்தாலும்சரி—செவிசாய்ப்போர் உங்களுடைய பேச்சை ஈடுபாட்டுடன் கேட்க உதவுகின்றன. உரையாடலை ஆரம்பிப்பதற்கும் கருத்துக்களை ஆர்வத்தோடு பரிமாறிக்கொள்வதற்கும் கேள்விகள் உதவலாம். ஆர்வத்தை தூண்டுவதற்கு, ஒரு பொருளின் பேரில் நியாயங்காட்டி பேசுவதற்கு, அல்லது சொல்வதை வலியுறுத்திக் காட்டுவதற்கு பேச்சாளரும் போதகருமாக நீங்கள் கேள்விகளை பயன்படுத்தலாம். கேள்விகளை நன்கு பயன்படுத்தும்போது, மந்தமாக இருப்பவர்களையும் மும்முரமாக யோசித்துப் பார்க்க உற்சாகப்படுத்துகிறீர்கள். மனதில் ஓர் இலக்கு வையுங்கள், அதை அடைய உதவும் விதத்தில் கேள்விகளைக் கேளுங்கள்.
உரையாடத் தூண்டுவதற்கு. வெளி ஊழியத்தில் ஈடுபடுகையில், தங்கள் கருத்தை மனந்திறந்து சொல்லும்படி வீட்டுக்காரரைக் கேட்க தவறாதீர்கள்.
“ . . . இதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா?” என வெறுமனே கேட்பதன் மூலம் அநேக சாட்சிகள் ஆர்வமூட்டும் உரையாடலை ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலோருடைய மனதில் ரீங்காரமிடும் ஒரு கேள்வியை அவர்கள் கேட்கும்போது, நிச்சயமாகவே ஊழியத்தை மகிழ்ந்து அனுபவிப்பார்கள். அந்தக் கேள்வி வீட்டுக்காரருக்கு புதிதாக இருந்தாலும்கூட, அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை அது தூண்டலாம். “ . . . இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “ . . . இதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” “ . . . நீங்கள் இதை நம்புகிறீர்களா?” என கேட்பது பல்வேறு விஷயங்களில் பேசுவதற்கு உதவும்.
ஏசாயா தீர்க்கதரிசனத்தை சத்தமாக வாசித்துக் கொண்டிருந்த எத்தியோப்பிய அரசவை அதிகாரியை சுவிசேஷகராகிய பிலிப்பு அணுகியபோது, அவர் இப்படித்தான் கேட்டார்: “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா [அல்லது, புரிகிறதா]”? (அப். 8:30) இந்தக் கேள்வி, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்களை விளக்க பிலிப்புவிற்கு உதவியது. நவீனகால சாட்சிகள் சிலர் இதுபோன்ற கேள்விகளைப் பயன்படுத்தி, பைபிள் சத்தியத்தைத் தெளிவாக புரிந்துகொள்ளத் துடிக்கும் மக்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கும்போது, நீங்கள் சொல்வதை அநேகர் செவிகொடுத்துக் கேட்பார்கள். ஒரு கேள்வியை கேட்ட பிறகு, கூர்ந்து செவிகொடுங்கள். அவர்களுடைய பதிலில் குறைகாண்பதற்குப் பதிலாக தயவோடு பேசுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது உள்ளப்பூர்வமாக பாராட்டுங்கள். ஒரு சந்தர்ப்பத்தில் வேதபாரகன் ஒருவன் “விவேகமாய் உத்தரவு சொன்னதை” இயேசு பாராட்டி, “நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல” என்றார். (மாற். 12:34) பிறருடைய கருத்தோடு நீங்கள் ஒத்துப்போகவில்லை என்றாலும், தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம். அந்த பதில் அவருடைய மனப்பான்மையை வெளிப்படுத்தலாம்; அவரோடு பைபிள் சத்தியத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது இந்த மனப்பான்மையை நீங்கள் மனதில் வைப்பது உதவியாக இருக்கலாம்.
முக்கிய கருத்துக்களை அறிமுகப்படுத்துவதற்கு. ஒரு கூட்டத்தாரிடம் அல்லது தனிப்பட்ட நபரிடம் பேசும்போது, முக்கிய கருத்துக்களுக்கு வழிநடத்தும் கேள்விகளைக் கேட்பதற்கு முயற்சி செய்யுங்கள். கேட்பவருடைய ஆர்வத்தை உண்மையிலேயே தூண்டுகிற விஷயங்களைப் பற்றி மட்டுமே கேளுங்கள். பதில் எளிதாக இல்லாததால் ஆர்வத்தைத் தூண்டுகிற கேள்விகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஒரு கேள்வியைக் கேட்ட பிறகு சற்று நிறுத்துவீர்களானால், கேட்பவர் நீங்கள் சொல்லப்போவதை இன்னும் அதிக ஆர்வத்தோடு கேட்கலாம்.
ஒரு சந்தர்ப்பத்தில், மீகா தீர்க்கதரிசி அநேக கேள்விகளைக் கேட்டார். தம்மை வணங்குபவர்களிடம் கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை கேட்ட பிறகு, அந்தத் தீர்க்கதரிசி இன்னும் நான்கு கேள்விகளைக் கேட்டார், ஒவ்வொன்றுக்கும் நியாயமாக எதிர்பார்க்கக்கூடிய பதில்கள் அந்தக் கேள்வியில் அடங்கியிருந்தன. அக்கேள்விகள் அனைத்தும், அவர் முடிவாக சொன்ன கருத்தாழமிக்க பதிலுக்கு வாசகர்களை தயார்படுத்தின. (மீ. 6:6-8) கற்பிக்கும்போது இதுபோன்ற ஒரு முறையை நீங்கள் பயன்படுத்த முடியுமா? முயன்று பாருங்கள்.
ஒரு பொருளில் நியாயங்காட்டி பேசுவதற்கு. ஒரு விவாதத்திலுள்ள நியாயத்தைக் காண உதவுவதற்கு கேள்விகளைப் பயன்படுத்தலாம். இஸ்ரவேலரிடம் முக்கியமான ஓர் அறிவிப்பை கொடுத்தபோது, யெகோவா இப்படி செய்ததாக மல்கியா 1:2-10-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நான் உங்களைச் சிநேகித்தேன்” என அவர் முதலில் சொன்னார். அந்த சிநேகத்தை அவர்கள் மதிக்கத் தவறியதால், “ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ?” என கேட்டார். பின்பு ஏதோமுடைய பாழான நிலைமையை சுட்டிக்காட்டி, அவர்களுடைய பொல்லாப்பின் நிமித்தமாக தமது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதன் விளைவே அது என விளக்கினார். அதன் பிறகு, தம்முடைய அன்பிற்கு இஸ்ரவேலர் சரியாக பிரதிபலிக்கவில்லை என்பதை வலியுறுத்திக் காட்டுவதற்கு இடையிடையே கேள்விகளோடுகூடிய உதாரணங்களைப் பயன்படுத்தினார். அந்தக் கேள்விகளில் சில, உண்மையற்ற ஆசாரியர்கள் கேட்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்றவையோ ஆசாரியர்களிடம் யெகோவா கேட்பது போன்ற கேள்விகள். இந்த உரையாடல் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது, நம்முடைய கவனத்தையும் ஈர்க்கிறது; தர்க்க ரீதியிலான இந்த விவாதம் மறுக்க முடியாதது; அதன் செய்தியோ மறக்க முடியாதது.
இதுபோன்ற முறையில் பேச்சாளர்கள் சிலர் கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துகிறார்கள். சபையார் பதிலை வாய்விட்டு சொல்லுமாறு எதிர்பார்க்கப்படுவதில்லை; என்றாலும் அவர்கள் ஓர் உரையாடலில் பங்குகொள்வதைப் போல பேச்சில் ஒன்றிவிட கேள்விகள் உதவுகின்றன.
மாணாக்கரையும் சம்பாஷணையில் ஈடுபட வைக்கும் விதத்தில் நாம் பைபிள் படிப்புகள் நடத்துகிறோம். அவர் கேள்விகளுக்குரிய பதில்களை பாராவிலிருந்து வெறுமனே அப்படியே வாசிக்காமல் சொந்த வார்த்தைகளில் சொல்லும்போது அதிக பயன் கிடைக்கும். அந்த மாணாக்கரிடம் நியாயங்காட்டி பேசுவதற்கு அன்பு கலந்த தொனியில் துணைக் கேள்விகளைக் கேளுங்கள். முக்கிய கருத்துக்களை சிந்திக்கும்போது, பைபிளை அடிப்படையாக வைத்து பதில் சொல்லும்படி உற்சாகப்படுத்துங்கள். நீங்கள் இப்படியும் கேட்கலாம்: “நாம் இப்பொழுது படிக்கிற விஷயம் ஏற்கெனவே நாம் படித்த இந்த விஷயத்தோடு எப்படி ஒத்திருக்கிறது? இது ஏன் முக்கியம்? இது எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை பாதிக்க வேண்டும்?” உங்களுடைய நம்பிக்கைகளை நீங்களே சொல்லிவிடுவதற்கு அல்லது அதற்கு நீங்களே விரிவான விளக்கம் கொடுப்பதற்குப் பதிலாக இப்படிப்பட்ட முறை அதிக பலன்தரும். இந்த விதத்தில், கடவுளை வணங்குவதற்கு “நியாயங்காட்டி பேசும் திறமையை” பயன்படுத்தும்படி மாணாக்கருக்கு உதவி செய்கிறீர்கள்.—ரோ. 12:1, NW.
ஏதாவதொரு கருத்தை மாணாக்கரால் கிரகித்துக்கொள்ள முடியவில்லையென்றால், பொறுமையோடிருங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தை, பல வருஷமாக தான் நம்பி வந்ததோடு ஒப்பிட்டுப் பார்க்க அவர் முயன்று கொண்டிருக்கலாம். அந்தப் பொருளை வித்தியாசமான கோணத்தில் சொல்வது உதவலாம். என்றாலும், சில சமயங்களில் அடிப்படை விளக்கம் தேவைப்படுகிறது. வேதவசனங்களைத் தாராளமாக பயன்படுத்துங்கள். உவமைகளைப் பயன்படுத்துங்கள். அதோடு அத்தாட்சிகளிலுள்ள நியாயத்தைப் பார்க்க அந்த நபரை உந்துவிப்பதற்கு எளிய கேள்விகளைக் கேளுங்கள்.
உணர்ச்சிகளை வெளிக்கொணருவதற்கு. ஆட்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, உண்மையில் அதைப் பற்றி தங்கள் கருத்தை எப்பொழுதும் வெளிப்படையாக சொல்வதில்லை. வெறுமனே நீங்கள் எதிர்பார்க்கும் பதில்களை சொல்லலாம். ஆகவே பகுத்துணர்வு அவசியம். (நீதி. 20:5, NW) “இதை நீ நம்புகிறாயா?” என இயேசு கேட்டது போல நாமும் கேட்கலாம்.—யோவா. 11:26, பொ.மொ.
இயேசுவின் சீஷர்களில் பலர் அவர் சொன்னதைக் குறித்து இடறலடைந்து அவரைவிட்டு விலகியபோது, அப்போஸ்தலர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள அவர் விரும்பினார். ஆகவே ‘நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா?’ என அவர்களிடம் கேட்டார். அதற்கு பேதுரு அப்போஸ்தலர்களுடைய உணர்ச்சிகளை இவ்வாறு வார்த்தைகளில் வடித்தார்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம். நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.” (யோவா. 6:67-69) மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?’ என இயேசு தமது சீஷர்களிடம் கேட்டார். இக்கேள்வியை கேட்டுவிட்டு, அவர்களுடைய மனதிலுள்ளதை சொல்வதற்கு இன்னொரு கேள்வியைக் கேட்டார். ‘நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?’ அதற்கு பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என பதிலளித்தார்.—மத். 16:13-16.
பைபிள் படிப்பு நடத்தும்போது ஏதாவது கேள்விகள் எழும்புகையில், நீங்கள் இதுபோன்ற அணுகுமுறையைப் பயன்படுத்துவது பலன் தரலாம். “இதைப் பற்றி உங்களுடைய பள்ளி தோழர்கள் (அல்லது சக பணியாளர்கள்) என்ன நினைக்கிறார்கள்?” என நீங்கள் கேட்கலாம். அதன்பின்பு, “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என கேட்கலாம். ஒருவருடைய உண்மையான உணர்ச்சிகளை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, ஒரு போதகராக நீங்கள் அதிக உதவியளிக்க முடியும்.
வலியுறுத்துவதற்கு. கருத்துக்களை வலியுறுத்துவதற்கும் கேள்விகளைப் பயன்படுத்தலாம். அப்போஸ்தலன் பவுல் இதையே செய்தார்; ரோமர் 8:31, 32-ல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” ஒவ்வொரு கேள்வியும், அதற்கு முந்தைய வாக்கியத்தை விரிவாக்குவதை கவனியுங்கள்.
பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாக வரும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை பதிவு செய்த பிறகு, ஏசாயா தீர்க்கதரிசி தன் உறுதியான நம்பிக்கையை இவ்வாறு தெரிவித்தார்: “சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?” (ஏசா. 14:27) சொல்லப்படும் விஷயம் மறுக்க முடியாதது என்பதை இத்தகைய கேள்விகள் சுட்டிக் காட்டுகின்றன. அதற்கு பதில் எதிர்பார்க்கப்படுவதில்லை.
தவறான எண்ணத்தை அம்பலப்படுத்துவதற்கு. நன்கு சிந்தித்துக் கேட்கப்படும் கேள்விகளும் தவறான எண்ணத்தை அம்பலப்படுத்த உதவும் வலிமைமிக்க கருவிகளாகும். ஒரு மனிதனை சுகப்படுத்துவதற்கு முன்பு, பரிசேயர்களிடமும் நியாயப்பிரமாணத்தில் தேறினவர்களிடமும் இயேசு இவ்வாறு கேட்டார்: “ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா”? அவர் சுகப்படுத்திய பின்பு இன்னுமொரு கேள்வியைக் கேட்டார்: “உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ”? (லூக். 14:1-6) அவற்றிற்கு பதில் எதிர்பார்க்கப்படவுமில்லை, சொல்லப்படவுமில்லை. அந்தக் கேள்விகள் அவர்களுடைய தவறான எண்ணத்தை அம்பலப்படுத்தின.
சில சமயங்களில், உண்மை கிறிஸ்தவர்களையும் தவறான எண்ணங்கள் ஆட்கொள்ளலாம். முதல் நூற்றாண்டில் கொரிந்துவில் இருந்த சிலர் தாங்களே தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகளுக்கும்கூட சகோதரர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். இப்பிரச்சினையை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு கையாண்டார்? அவர்களுடைய எண்ணத்தை சரிப்படுத்த ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கென்று கேள்விகளை கேட்டார்.—1 கொ. 6:1-8.
பழகப் பழக, திறம்பட்ட கேள்விகளைக் கேட்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு, முக்கியமாக வயதில் பெரியவர்களுக்கு, முன்பின் தெரியாதவர்களுக்கு, உயர் பதவி வகிப்பவர்களுக்கு மதிப்புக் கொடுக்க மறந்துவிடாதீர்கள். மனதைக் கவரும் வண்ணம் பைபிள் சத்தியத்தை சொல்வதற்கு கேள்விகளைப் பயன்படுத்துங்கள்.