படிப்பு 50
இருதயத்தை எட்ட முயலுதல்
ஜனங்களுக்கு சாட்சி கொடுப்பதோடு அவர்களுடைய இருதயத்தை எட்ட முயற்சி செய்வதும் அவசியம். ஒருவருடைய வெளிப்புற தோற்றத்தையும் இருதயத்தையும் பைபிள் அடிக்கடி வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. அடையாளப்பூர்வமான இருதயம், ஒருவர் உள்ளூர எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை குறிக்கிறது; அவர் எப்படி உணர்கிறார், எதைப் பற்றி சிந்திக்கிறார், ஏன் அப்படி சிந்திக்கிறார், அவருடைய செயல்களை அது எப்படி பாதிக்கிறது என்ற அனைத்தையும் அது குறிக்கிறது. இந்த அடையாளப்பூர்வ இருதயத்தில்தான் சத்தியம் என்ற விதை விதைக்கப்படுகிறது. (மத். 13:19) இந்த இருதயத்திலிருந்தே கடவுளுக்குரிய கீழ்ப்படிதல் முளைக்க வேண்டும்.—நீதி. 3:1; ரோ. 6:17, NW.
நீங்கள் போதிப்பது இருதயத்திற்குள் செல்ல பின்வரும் குறிக்கோள்கள் மீது கவனம் செலுத்துங்கள்: (1) கேட்போரின் இருதயத்தை எது ஏற்கெனவே ஆட்கொண்டிருக்கிறது என்பதை பகுத்துணருங்கள். (2) அன்பு, தேவ பயம் போன்ற நற்குணங்களை பலப்படுத்துங்கள். (3) யெகோவாவை முழுமையாக பிரியப்படுத்துவதற்கு தங்கள் உள்ளெண்ணங்களை பரிசோதித்துப் பார்க்கும்படி கேட்போரை உற்சாகப்படுத்துங்கள்.
பகுத்துணர்வை பயன்படுத்துதல். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குரிய காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன. பைபிள் படிப்பை நடத்தும்போது, நீங்கள் மாணாக்கருடைய தப்பெண்ணத்தை களைந்து அவரது தவறான கருத்துக்களை தகர்க்கும் உண்மைகளை அளிக்க வேண்டியிருக்கலாம், அல்லது வெறுமனே அத்தாட்சிகளை தர வேண்டியிருக்கலாம். ஆகவே உங்களையே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘ஒரு மனிதனாக ஆன்மீக தேவைகள் தனக்கிருப்பதை அவர் உணர்கிறாரா? அவர் எதையெல்லாம் ஏற்கெனவே நம்புகிறார்? எதை நம்புவதில்லை? ஏன் அப்படிப்பட்ட முடிவுகளுக்கு வந்திருக்கிறார்? சத்தியத்தை அறிந்துகொள்வதோடு வரும் பொறுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஆசைகள் ஏதேனும் அவருக்கு உண்டா, அவற்றை மேற்கொள்ள அவருக்கு உதவி தேவையா?’
சில விஷயங்களை ஜனங்கள் ஏன் நம்புகிறார்கள் என்பதை கண்டறிவது எப்போதுமே சுலபமல்ல. “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது” என நீதிமொழிகள் 20:5 சொல்கிறது; ஆனால், “புத்திமானோ [“பகுத்துணர்வுள்ளவனோ,” NW] அதை மொண்டெடுப்பான்” என்றும் சொல்கிறது. தெளிவாக தெரியாதவற்றை புரிந்துகொள்ளும் திறமையே பகுத்துணர்வு. இதற்கு கூர்ந்து கவனிப்பதும் அக்கறை காட்டுவதும் அவசியம்.
பேச்சுத்தொடர்பு எல்லாமே வாய்மொழியில் இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயம் மாணாக்கருடைய முகபாவனையில் அல்லது குரலில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் பிள்ளையின் நடத்தையில் மாற்றத்தை காணும்போது, அவன் வாழ்க்கையில் ஏதோ புதிய காரியம் செல்வாக்கு செலுத்துவதை தெரிந்துகொள்வீர்கள். மாற்றத்தை சுட்டிக்காட்டும் அப்படிப்பட்ட அறிகுறிகளை அசட்டை செய்யாதீர்கள். இவையெல்லாம் இருதயத்தில் இருப்பதை காட்டும் கண்ணாடிகள்.
ஒருவருடைய இருதயத்தில் இருப்பதை வெளிக்கொணர்வதற்கு நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் உதவலாம். நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “ . . . இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “ . . . என்பதை எது உங்களை நம்ப வைத்தது?” “ . . . அப்பொழுது நீங்கள் எப்படி பிரதிபலிப்பீர்கள்?” ஆனாலும் சரமாரியாக கேள்வி கேட்டு அவர்களை திணறடிக்காதீர்கள். கேள்விகளை கேட்பதற்கு முன்பு சாதுரியமாக இவ்வாறு கேட்கலாம்: “நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா . . . ?” இதயத்தில் இருப்பதை கண்டுபிடிப்பது சிரமமான வேலை, அவசரப்பட்டால் நடக்காது. நம்பிக்கையை சம்பாதிப்பதற்கு பெரும்பாலும் காலம் எடுக்கும்; அதன் பிறகே அவர் உள்ளத்தின் ஆழத்திலுள்ள உணர்ச்சிகளை நமக்குத் தெரியப்படுத்துவார். அப்போதுகூட, சொந்த விஷயங்களில் நீங்கள் அநாவசியமாக தலையிடுவதாக அவர் உணராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 பே. 4:15.
மாணாக்கர் சொல்லும் விஷயங்களுக்கு நீங்கள் பிரதிபலிக்கும் விதத்திலும் பகுத்துணர்வு காட்டுவது அவசியம். ஜனங்களைப் புரிந்துகொள்வதே உங்களுடைய குறிக்கோள் என்பதை மறந்துவிடாதீர்கள்; அப்பொழுதுதான் எந்த பைபிள் விஷயம் அவர்களை உந்துவிக்கும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும். அவர்களுடைய கருத்துக்களில் தவறு இருந்தால் அதை உடனடியாக சுட்டிக்காட்ட துடிக்கும் நாவை அப்போதே அடக்குங்கள். மாறாக, அவர் அப்படி சொல்வதற்கு காரணமான உணர்ச்சிகள் என்ன என்பதை பகுத்துணருங்கள். அப்போது அதற்கு எப்படி பதிலளிப்பது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; உங்களுடைய மாணாக்கரும், தன் உணர்ச்சிகளை நீங்கள் புரிந்துகொண்டதை அறிந்து, நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்துவார் என்பது உறுதி.—நீதி. 16:23.
ஒரு பெரும் கூட்டத்திற்கு முன்பு பேசுவதாக இருந்தாலும், அங்குள்ள ஒவ்வொருவரையும் உங்களால் ஓரளவுக்கு உந்துவிக்க முடியும். நீங்கள் சபையாருடன் நல்ல தொடர்பு வைத்தால், அவர்களுடைய முகபாவனைகளுக்கு கூர்ந்த கவனம் செலுத்தினால், சிந்தையைத் தூண்டும் கேள்விகளை (rhetorical questions) கேட்டால், நீங்கள் சொல்வதைக் குறித்து அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று உங்களால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும். உங்களுடைய சபையாரைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருந்தால், அவர்களுடைய சூழ்நிலைகளுக்கு அக்கறை காட்டுங்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து நியாயங்காட்டிப் பேசுகையில் சபையின் பொதுவான மனோபாவத்தை கருத்தில் கொள்ளுங்கள்.—கலா. 6:18.
பயன்தரும் உணர்ச்சிகளைத் தூண்டியெழுப்புதல். ஒருவர் எதை நம்புகிறார், எதை நம்புவதில்லை, அதற்கு காரணம் என்ன போன்றவற்றை ஓரளவுக்கு அறிந்த பிற்பாடு அவற்றின் அடிப்படையில் நீங்கள் பேசலாம். இயேசு உயிர்த்தெழுந்தபின், சமீபத்திய சம்பவங்களைப் பற்றி தமது சீஷர்களிடம் ‘வேதவாக்கியங்களிலிருந்து விளக்கிக் காட்டுவதன்’ மூலம் அவர்களுடைய இருதயத்தை எட்டினார். (லூக். 24:32) ஒருவர் ஏற்கெனவே எதை அனுபவித்திருக்கிறார், எதைப் பெற விரும்புகிறார், கடவுளுடைய வார்த்தையில் எதை கவனிக்கிறார் போன்றவற்றை தொடர்புபடுத்திப் பார்க்க நீங்கள் முயல வேண்டும். “இதுதான் சத்தியம்!” என்பதை மாணாக்கர் தெளிவாக அறிந்துகொள்ளும்போது அது அவருடைய இருதயத்தைத் தொடும்.
யெகோவாவின் நற்குணம், அன்பு, தகுதியற்ற தயவு, நீதியான வழிகள் ஆகியவற்றை கேட்போருக்கு வலியுறுத்திக் காட்டும்போது, கடவுள் மீது அன்பை வளர்க்க உதவுகிறீர்கள். தனி நபர்களாக அவர்களிடத்தில் கடவுள் கவனிக்கும் நல்ல குணங்களை நீங்கள் பொறுமையாக எடுத்துக் காட்டும்போது, தனிப்பட்ட விதத்தில் கடவுளிடம் நல்லுறவு வைத்திருப்பது சாத்தியம் என்பதை அவர்கள் நம்புவதற்கு காரணத்தை தருகிறீர்கள். சங்கீதம் 139:1-3, லூக்கா 21:1-4, யோவான் 6:44 போன்ற வசனங்களை கலந்தாலோசிப்பதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம்; உண்மையுள்ள ஊழியர்களிடத்தில் யெகோவா எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதை கேட்போர் மதித்துணர உதவி செய்வதன் மூலமும் இதை நீங்கள் செய்யலாம். (ரோ. 8:38, 39) யெகோவா நம்முடைய தவறுகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பதில்லை, மாறாக நம்முடைய முழு வாழ்க்கைப் போக்கையும் தூய வணக்கத்தின் மீது நம்முடைய ஆர்வத்தையும் அவருடைய நாமத்தின் மீது நாம் காட்டுகிற அன்பையும் பார்க்கிறார் என்பதை விளக்குங்கள். (2 நா. 19:2, 3; எபி. 6:10) நம்மைப் பற்றிய நுணுக்கமான விவரங்களையும் அவர் நினைவில் வைத்திருக்கிறார்; ஆகவே, “ஞாபகார்த்த கல்லறையிலுள்ள அனைவரையும்” அற்புதகரமாக மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவார். (யோவா. 5:28, 29, NW; லூக். 12:6, 7) கடவுளுடைய சாயலிலும் ரூபத்திலும் மனிதர் படைக்கப்பட்டிருப்பதால் அவருடைய குணங்களைப் பற்றி பேசுவது பெரும்பாலும் இருதயத்தை தொடுகிறது.—ஆதி. 1:27.
யெகோவா கருதும் விதமாகவே மற்றவர்களை கருதுவதற்கு கற்றுக்கொள்ளும்போதும் அவர்களுடைய இருதயத்தைத் தொட முடியும். நம் ஒவ்வொருவரையும் யெகோவா உயர்வாக கருதுகிறார் என்றால், மற்றவர்களுடைய பின்னணி, தேசம், குலம் எதுவாக இருந்தாலும் அவர்களையும் அதே விதமாக கருதுகிறார் என எதிர்பார்ப்பது நியாயமானதல்லவா? (அப். 10:34, 35) ஒருமுறை ஒருவர் அந்த முடிவுக்கு வந்தபின், பகைமையையும் தப்பெண்ணத்தையும் இருதயத்திலிருந்து அறவே விட்டொழிப்பதற்கு அவருக்கு உறுதியான வேதப்பூர்வ ஆதாரம் இருக்கும். தெய்வீக சித்தத்தை செய்ய கற்றுக்கொள்கையில், மற்றவர்களுடன் சமாதானமாக வாழ அது அவருக்கு வழிவகுக்கும்.
தேவ பயம் என்பது மற்றவர்கள் வளர்ப்பதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டிய மற்றொரு உணர்ச்சியாகும். (சங். 111:10; வெளி. 14:6, 7) இந்த தேவ பயம் அல்லது ஆழ்ந்த பயபக்தி, சொந்த பலத்தால் அடைய முடியாதவற்றை அடைவதற்கு ஒருவரை உந்துவிக்கும். யெகோவாவின் வியத்தகு செயல்களையும் அவருடைய தலைசிறந்த அன்பையும் தயவையும் பற்றி பேசுவதன் மூலம் ஆரோக்கியமான பயத்தை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவலாம்.—சங். 66:5; எரே. 32:40.
தங்களுடைய நடத்தை யெகோவாவுக்கு மிகவும் முக்கியம் என்பதை செவிசாய்ப்போர் புரிந்திருக்கிறார்களா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். யெகோவாவிற்கு உணர்ச்சிகள் உண்டு, அவருடைய வழிநடத்துதலுக்கு நாம் எப்படி பிரதிபலிக்கிறோம் என்பதை பொறுத்து நாம் அவரை துக்கப்படுத்தலாம் அல்லது சந்தோஷப்படுத்தலாம். (சங். 78:40-42) கடவுளிடம் சாத்தான் விடுத்த சவாலுக்கு பதிலளிப்பதில் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட நடத்தையும் ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்கிக் காட்டுங்கள்.—நீதி. 27:11.
கடவுள் எதிர்பார்க்கும் காரியங்களுக்கு இசைவாக நடந்தால் தங்களுக்குத்தான் நன்மை என்பதை புரிந்துகொள்ள சபையாருக்கு உதவுங்கள். (ஏசா. 48:17) இதற்கு ஒரு வழி, கடவுளுடைய ஞானத்தை தற்காலிகமாகக்கூட புறக்கணிப்பதால் வரும் சரீர மற்றும் உணர்ச்சி ரீதியிலான பின்விளைவுகளை குறிப்பிட்டுக் காட்டுவதே. பாவம் நம்மை எவ்வாறு கடவுளிடமிருந்து விலக்கிவிடுகிறது, மற்றவர்கள் நம்மிடமிருந்து சத்தியத்தை கற்றுக்கொள்ளும் சிலாக்கியத்தை இழக்கச் செய்கிறது, அவர்களுடைய உரிமைகளைப் பறித்துவிடுகிறது ஆகியவற்றை விளக்குங்கள். (1 தெ. 4:6, NW) கடவுளுடைய சட்டங்களை கைக்கொள்வதால் ஏற்கெனவே அனுபவித்துவரும் ஆசீர்வாதங்களை சபையார் பொக்கிஷமாக போற்றுவதற்கு உதவுங்கள். யெகோவாவின் நீதியான வழிகளில் நடப்பது அநேக தீமைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது என்பதில் அவர்களுடைய போற்றுதலை அதிகரியுங்கள். கடவுளுடைய வழிகள் எவ்வளவு ஞானமானவை என்பதில் ஒருவர் விசுவாசம் வைக்க ஆரம்பித்ததும் அவற்றிற்கு எதிரான அனைத்து போக்கையும் அவர் தவிர்த்து விடுவார். (சங். 119:104) யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதை அவர் பாரமாக கருத மாட்டார்; மாறாக, அவர்மீது பற்றும் பாசமும் காட்டுவதற்குரிய வழியாகவே அதைக் கருதுவார்.
பரிசோதிக்க பிறருக்கு உதவுதல். ஆவிக்குரிய விதத்தில் தொடர்ந்து வளருவதற்கு, ஜனங்கள் தங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறதோ அதற்கு பிரதிபலிப்பது அவசியம். இதற்கு பைபிள் எப்படி உதவும் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள்.
பைபிள் என்பது கட்டளைகள், ஆலோசனைகள், சரித்திர சம்பவங்கள், தீர்க்கதரிசனங்கள் ஆகியவை மட்டுமே அடங்கிய ஒன்றல்ல என்பதை கேட்போருக்கு உணர்த்துங்கள். அது கடவுளுடைய சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:22-25 வசனங்களில், கடவுளுடைய வார்த்தை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடப்படுகிறது. அது சொல்பவற்றிற்கும் யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றும் விதத்திற்கும் நாம் காட்டும் பிரதிபலிப்பின் மூலம் நம் இருதய நிலையை பைபிள் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு “இருதயங்களைச் சோதிக்கிற” கடவுள் எவ்வாறு நம்மை கவனிக்கிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. (நீதி. 17:3) இதை எப்போதும் மனதில் வைக்கும்படி கேட்போரை ஊக்கப்படுத்துங்கள். பைபிளில் கடவுள் நமக்காக பதிவு செய்து வைத்திருப்பவற்றை பற்றியும் அவரை இன்னும் அதிகமாக பிரியப்படுத்துவதற்கு வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கும்படி அவர்களை உந்துவியுங்கள். “இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும்” யெகோவா எப்படி மதிப்பிடுகிறார் என்பதை அறிவதற்கு உதவும் ஒரு கருவியாக பைபிள் வாசிப்பை அவர்கள் கருதுவதற்கு உதவுங்கள்; அப்போதுதான் அவர்கள் கடவுளோடு ஒத்துழைத்து, தங்களுடைய வாழ்க்கையில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும்.—எபி. 4:12; ரோ. 15:4.
பைபிள் படிக்கும் மாணாக்கர் சிலர் தாங்கள் கற்றுக்கொள்வதற்கு இசைவாக செயல்பட விரும்பலாம்; ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என கவலைப்படலாம். சில இச்சைகளை விட்டொழிக்க முடியாமல் அவர்கள் போராடிக் கொண்டிருக்கலாம். அல்லது இந்த உலகப் பழக்கங்களை துறக்காமலேயே கடவுளை சேவித்து தங்களை நியாயப்படுத்துவதற்கு வழியை தேடிக்கொண்டிருக்கலாம். இப்படி இருமனதாக இருப்பதால் வரும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டுங்கள். (1 இரா. 18:21) தங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து சுத்திகரிக்குமாறு ஜெபத்தில் கடவுளிடம் கேட்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.—சங். 26:2; 139:23, 24.
அவர்களுடைய போராட்டத்தை யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதையும் அப்போராட்டத்தை பைபிள் விளக்குகிறது என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். (ரோ. 7:22, 23) அபூரண இருதயத்தின் விருப்பங்களுக்கு இணங்கிப்போகாமல் ஜாக்கிரதையாய் இருக்க அவர்களுக்கு உதவுங்கள்.—நீதி. 3:5, 6; 28:26; எரே. 17:9, 10.
ஒவ்வொருவரும் அவரவருடைய உள்ளெண்ணங்களை ஆராய்ந்து பார்க்க உற்சாகப்படுத்துங்கள். ‘நான் ஏன் இதைச் செய்ய விரும்புகிறேன்? யெகோவா எனக்காக செய்திருக்கிற அனைத்திற்கும் நான் உண்மையில் போற்றுதல் காட்டுவதாக அது இருக்குமா?’ என்று கேட்டுக்கொள்ள கற்பியுங்கள். யெகோவாவுடன் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உறவுதான் ஒருவருடைய மதிப்புமிக்க சொத்து என்பதில் அவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்த முயலுங்கள்.
யெகோவாவை “முழு இருதயத்தோடு” சேவிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு சபையாருக்கு உதவுங்கள். (லூக். 10:27) அப்படியென்றால், அவர்களுடைய எல்லா உணர்ச்சிகளும் ஆசைகளும் உள்ளெண்ணங்களும் யெகோவாவின் வழிகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். ஆகவே, கேட்போர் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மட்டுமல்ல, கடவுள் எதிர்பார்ப்பவற்றைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதையும் அவரை சேவிப்பதில் தங்களுடைய உள்ளெண்ணங்கள் என்ன என்பதையும் அலசி ஆராய்வதற்கும்கூட அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். (சங். 37:4) எந்தெந்த விஷயங்களில் முன்னேற வேண்டும் என்பதை அவர்கள் பகுத்துணருகையில், “உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என யெகோவாவிடம் ஜெபிக்குமாறு உற்சாகப்படுத்துங்கள்.—சங். 86:11.
மாணாக்கர் ஒருவர் யெகோவாவுடன் தனிப்பட்ட உறவை வளர்க்கும்போது, அவர் வெறுமனே உங்களுடைய உந்துவிப்பினால் அல்ல ஆனால் விசுவாசத்தின் காரணமாக கடவுளுக்குக் கீழ்ப்படிவார். அதற்குப்பின் அவரே ‘[யெகோவாவுக்குப்] பிரியமானது இன்னதென்று சோதித்துப்பார்க்க’ ஆரம்பிப்பார். (எபே. 5:10; பிலி. 2:12) இத்தகைய இருதயப்பூர்வமான கீழ்ப்படிதல் யெகோவாவை மகிழ்விக்கிறது.—நீதி. 23:15.
யெகோவாவே ஜனங்களின் இருதயங்களை நிறுத்துப் பார்க்கிறார், தம்மோடு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்களை ஈர்க்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். (நீதி. 21:2; யோவா. 6:44) அவருடன் ஒத்துழைப்பதே நம் பங்கு. (1 கொ. 3:9) ‘கடவுளே நம் வாயிலாக [மற்றவர்களுக்கு] வேண்டுகோள் விடுக்கிறார்’ என சொல்லலாம். (2 கொ. 5:20, பொ.மொ.; அப். 16:14) சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா யாரையும் வற்புறுத்துவதில்லை. ஆனால் நாம் வேத வசனங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுகையில், அது அவர்களுடைய கேள்விகளுக்கு—அல்லது ஜெபங்களுக்கு—பதில் என்பதை அவர்களுக்கு உணர்த்துவார். பிறருக்கு கற்றுக்கொடுக்க கிடைக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் இதை மனதில் கொள்ளுங்கள்; வழிநடத்துதலுக்காகவும் உதவிக்காகவும் யெகோவாவிடத்தில் உள்ளப்பூர்வமாக கேளுங்கள்.—1 நா. 29:18, 19; எபே. 1:16-18, NW.