வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
மார்ச் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 1-4
“உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்”
(எரேமியா 1:7-10) அப்போது யெகோவா என்னிடம், “நீ சின்னப் பையன் என்று சொல்லாதே. யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடமெல்லாம் நீ போக வேண்டும். எதையெல்லாம் சொல்லச் சொல்கிறேனோ அதையெல்லாம் நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்களைப் பார்த்துப் பயப்படாதே. ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்” என்றார். பின்பு, யெகோவா தன்னுடைய கையை நீட்டி என் வாயைத் தொட்டார். யெகோவா என்னிடம், “என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன். தேசங்கள்மேலும் ராஜ்யங்கள்மேலும் இன்று உனக்கு அதிகாரம் தருகிறேன். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உனக்கு அதிகாரம் தருகிறேன்” என்றார்.
(எரேமியா 1:17-19) நீ தயாராகிக்கொள். எழுந்து நின்று, நான் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல். அவர்களைப் பார்த்து நடுங்காதே. அப்படி நடுங்கினால், அவர்களுக்கு முன்பாக நான் உன்னை நடுங்க வைப்பேன். யூதாவின் ராஜாக்களையும், அதிகாரிகளையும், குருமார்களையும், ஜனங்களையும் நீ சமாளித்து நிற்பதற்காக இன்று நான் உன்னை மதில் சூழ்ந்த நகரமாகவும், இரும்புத் தூணாகவும், செம்புச் சுவராகவும் ஆக்கியிருக்கிறேன். அவர்கள் உன்னோடு மோதுவார்கள். ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள். ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
jr -E பக். 88 பாரா.14-15
“களைத்துப்போனவர்களுக்கு நான் புத்துணர்ச்சி கொடுப்பேன்”
களைத்துப்போனவர்களுக்கு நீங்கள் புத்துணர்ச்சி கொடுப்பீர்களா?
14 எரேமியாவுக்கு எப்படி உற்சாகம் கிடைத்தது என்றும் ‘களைத்துப்போனவர்களை’ அவர் எப்படி உற்சாகப்படுத்தினார் என்றும் கவனியுங்கள். (எரே. 31:25) எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சி கிடைத்தது. “இன்று நான் உன்னை மதில் சூழ்ந்த நகரமாக . . . ஆக்கியிருக்கிறேன். அவர்கள் உன்னோடு மோதுவார்கள். ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள். ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.” (எரே. 1:18, 19) இந்த வார்த்தைகளை யெகோவாவே உங்களிடம் சொன்னால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! இந்த வார்த்தைகள் எரேமியாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்ததால்தான் அவர் யெகோவாவை, “என் பலமே, என் கோட்டையே, இக்கட்டு நாளில் ஓடி ஒளிந்துகொள்வதற்கான அடைக்கலமே” என்றெல்லாம் சொன்னார்.—எரே. 16:19.
15 “நான் உன்னோடு இருக்கிறேன்” என்று சொல்லி யெகோவா எரேமியாவை உற்சாகப்படுத்தினார். நாமும்கூட மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொள்கிறோம். நம் சகோதர சகோதரிகளுக்கும் உறவினர்களுக்கும் உற்சாகம் தேவை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அவர்களுக்கு தேவையான உற்சாகத்தை நாம் கொடுக்க வேண்டும். இதை எப்படி செய்வது? எரேமியாவுக்கு யெகோவா எப்படி உற்சாகத்தை கொடுத்தாரோ அதேபோல் நாமும் செய்ய வேண்டும். சகோதரர்கள் துவண்டு போயிருக்கும் சமயத்தில் நாம் அவர்கள் பக்கத்தில் இருந்தாலே அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். அவர்களிடம் வளவளவென்று பேசாமல் உற்சாகப்படுத்தும் சில வார்த்தைகளை சொல்லலாம். இதை செய்வதற்கு நமக்கு பேச்சு திறமை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்கும் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலே போதும், அவர்கள்மேல் உங்களுக்கு உண்மையான அன்பு, அக்கறை, பாசம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வார்கள்.—நீதிமொழிகள் 25:11-ஐ வாசியுங்கள்.
மார்ச் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 5-7
“இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்”
(எரேமியா 7:8-15) ““ஆனால், மற்றவர்கள் சொல்லும் பொய்களை நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்; அந்தப் பொய்களால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீங்கள் திருட்டும், கொலையும், மணத்துணைக்குத் துரோகமும், பொய் சத்தியமும் செய்துகொண்டு, பாகாலுக்குத் தகன பலி செலுத்திக்கொண்டு, முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் அருவருப்பான இந்த எல்லா காரியங்களையும் செய்துவிட்டு, என் பெயர் தாங்கிய இந்த ஆலயத்துக்கு வந்து என்முன் நின்றுகொண்டு, ‘நாங்கள் காப்பாற்றப்படுவோம்’ என்று சொல்வது நியாயமா? என் பெயர் தாங்கிய இந்த ஆலயம் கொள்ளைக்காரர்களின் குகையைப் போல உங்களுக்குத் தெரிகிறதோ? உங்களுடைய அட்டூழியங்களை என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார். “ ‘நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள். நான் மறுபடியும் மறுபடியும் உங்களோடு பேசியும் நீங்கள் கேட்கவில்லை. உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் நீங்கள் பதில் சொல்லவே இல்லை. அதனால், என் பெயரின் மகிமைக்காக சீலோவில் நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு இப்போது போங்கள்; என் ஜனங்களான இஸ்ரவேலர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக நான் அதை என்ன செய்தேன் என்று பாருங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். ‘சீலோவுக்குச் செய்ததைப் போலவே நீங்கள் நம்பியிருக்கிற இந்த ஆலயத்துக்கும், அதாவது என் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த இடத்துக்கும், செய்யப்போகிறேன். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த இந்தத் தேசத்தைக்கூட அதேபோல் பாழாக்கப்போகிறேன். உங்கள் சகோதரர்களான எப்பிராயீமியர்களை நான் ஒதுக்கித்தள்ளியதைப் போலவே உங்கள் எல்லாரையும் என் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளுவேன்.’ ”
jr -E பக். 21 பாரா 12
“கடைசி நாட்களில்” செய்யப்படும் ஊழியம்
12 யோயாக்கீம் ஆட்சி செய்ய ஆரம்பித்த சமயத்தில், யெகோவா எரேமியாவை ஆலயத்துக்கு போக சொன்னார். அங்குபோய், யூத தேசத்துக்கு எதிராக கடுமையான எச்சரிப்பு செய்தியை சொல்ல சொன்னார். அந்த மக்கள் நிறைய பாவங்களை செய்தார்கள். ஆலயத்துக்கு மந்திர சக்தி இருந்தது என்று அவர்கள் நினைத்தார்கள். அதனால், அது தங்களை பாதுகாக்கும் என்று நம்பினார்கள். ‘திருட்டு, கொலை, மணத்துணைக்குத் துரோகம், பொய் சத்தியம் செய்வது, பாகாலுக்குத் தகன பலி செலுத்துவது, முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்குவது’ போன்ற பாவங்களை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் யெகோவா தன்னுடைய ஆலயத்தை நிராகரிப்பதாக சொன்னார். தலைமைக் குருவாகிய ஏலி வாழ்ந்த காலத்தில் சீலோவிலிருந்த வழிபாட்டுக் கூடாரத்தைக் யெகோவா நிராகரித்தார். அதுபோல, இந்த ஆலயத்தையும் அதில் தன்னை வணங்கிய வெளிவேஷக்காரர்களையும் நிராகரிப்பேன் என்று யெகோவா எச்சரித்தார். கடைசியில், யூத தேசம் ‘அழிந்து சின்னாபின்னமாகும்’ என்று யெகோவா சொன்னார். (எரே. 7:1-15, 34; 26:1-6) யெகோவாவின் இந்த செய்தியை சொல்ல எரேமியாவுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அதுவும், பொது இடத்தில் பெரிய அதிகாரிகளுக்கு முன்னால் இந்த செய்தியை சொல்ல எரேமியாவுக்கு நிறைய தைரியம் தேவைப்பட்டிருக்கும். இன்றும், தெரு ஊழியம் செய்யும்போது, பணக்காரர்கள் மற்றும் பெரிய அதிகாரிகளிடம் சாட்சி கொடுக்கும்போது நிறைய சகோதர சகோதரிகளுக்கு அதிக தைரியம் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். யெகோவா எரேமியாவுக்கு உதவி செய்ததுபோல நமக்கும் நிச்சயம் உதவி செய்வார்.—எபி. 10:39; 13:6.
மார்ச் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 8-11
“யெகோவாவுடைய வழிநடத்துதல் இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்”
(எரேமியா 10:2-5) ‘யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசத்தாரின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளாதீர்கள். அவர்கள் வானத்திலுள்ள அடையாளங்களைப் பார்த்துப் பயப்படுவதைப் போல நீங்கள் பயப்படாதீர்கள். அந்த ஜனங்களுடைய சம்பிரதாயங்கள் வீணானவை. கைத்தொழிலாளிகள் காட்டிலுள்ள மரத்தை வெட்டுகிறார்கள். பின்பு, அதைச் செதுக்கி சிலை செய்கிறார்கள். வெள்ளியினாலும் தங்கத்தினாலும் அந்தச் சிலையை அலங்கரிக்கிறார்கள். அது விழாமல் இருப்பதற்காக ஆணிகள் வைத்து சுத்தியால் அடிக்கிறார்கள். அந்தச் சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் உள்ள சோளக்காட்டு பொம்மை போல இருக்கின்றன; அவற்றால் பேச முடியாது. அவற்றால் நடக்கவும் முடியாது; யாராவது சுமந்துகொண்டுதான் போக வேண்டும். அவற்றைப் பார்த்துப் பயப்படாதீர்கள்; ஏனென்றால், அவற்றால் கெட்டது செய்ய முடியாது. அவற்றால் நல்லது செய்யவும் முடியாது.” ’
(எரேமியா 10:14, 15) “மனுஷர்கள் எல்லாருமே அறிவும் புத்தியும் இல்லாமல் நடக்கிறார்கள். சிலைகளைச் செதுக்கிய ஆசாரிகள் எல்லாருமே வெட்கப்பட்டுப்போவார்கள். அவர்கள் வார்த்த சிலைகள் பொய்யானவை. உயிர்மூச்சே இல்லாதவை. அவை ஒன்றுக்கும் உதவாதவை, கேலிக்குரியவை. கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் நாளில் அவை அழிந்துபோகும்.”
it -1-E பக். 555
வெள்ளரிக்காய்
வயல் நிலங்களை மிருகங்கள் நாசப்படுத்தாமல் இருக்க தூண், கம்பு போன்றவற்றை நாட்டி வைப்பார்கள். அப்படிப்பட்ட உயிரற்ற சடப்பொருள்களுக்கு எரேமியா பொய் தெய்வங்களை ஒப்பிட்டார். ‘வெள்ளரித் தோட்டத்தில் உள்ள சோளக்காட்டு பொம்மை போல இருக்கும்’ அவற்றால் பேசக்கூட முடியாது என்று சொன்னார்.—எரேமியா 10:5.
மார்ச் 27—ஏப்ரல் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 12-16
“இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்”
(எரேமியா 13:1-5) ‘யெகோவா என்னிடம், “நீ போய், ஒரு நாரிழை இடுப்புவாரை வாங்கி உன் இடுப்பில் கட்டிக்கொள்; ஆனால், அதைத் தண்ணீரில் நனைக்காதே” என்று சொன்னார். யெகோவா சொன்னபடியே நான் இடுப்புவாரை வாங்கி என் இடுப்பில் கட்டிக்கொண்டேன். பின்பு, யெகோவா இரண்டாவது தடவையாக என்னிடம் பேசினார். “இப்போது நீ எழுந்து, நீ கட்டியிருக்கிற இடுப்புவாரை எடுத்துக்கொண்டு யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போ. அங்கே ஒரு பாறை இடுக்கில் அதை மறைத்து வை” என்று சொன்னார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே நான் யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போய் அதை மறைத்து வைத்தேன்.’
jr - E பக். 51 பாரா 17
வஞ்சகமான இதயத்தை குறித்து எச்சரிக்கை!
17 யெகோவா எரேமியாவுக்கு ஒரு நியமிப்பை கொடுத்தார். அந்த நியமிப்பை செய்து முடிக்க, யெகோவா சொன்ன எல்லாவற்றையும் எரேமியா அப்படியே செய்ய வேண்டியிருந்தது. ஒருவேளை, எரேமியாவின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் யெகோவா சொன்னதை அப்படியே செய்திருப்பீர்களா? அந்த நியமிப்பு என்னவென்று இப்போது பார்க்கலாம். முதலில், யெகோவா எரேமியாவிடம், ‘ஒரு நாரிழை இடுப்புவாரை வாங்கி, அதை உன் இடுப்பில் கட்டிக்கொள்’ என்று சொன்னார். அடுத்ததாக, யூப்ரடிஸ் ஆற்றுக்கு போகும்படி சொன்னார். ஒரு வரைபடத்தை எடுத்து பாருங்கள். அந்த ஆறு கிட்டத்தட்ட 500 கி.மீ. (300 மைல்) தூரத்தில் இருந்தது என்பதை தெரிந்துகொள்வீர்கள். அந்த இடுப்புவாரை அங்கிருந்த பாறை இடுக்கில் மறைத்து வைத்துவிட்டு எருசலேமுக்கு திரும்பி வரும்படி யெகோவா எரேமியாவிடம் சொன்னார். பல நாட்களுக்கு பிறகு, யெகோவா அவரிடம் திரும்பி போய் அந்த இடுப்புவாரை எடுத்து வரும்படி சொன்னார். (எரேமியா 13:1-9-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால் மொத்தமாக, அவர் சுமார் 1,900 கி.மீ. (1,200 மைல்) பயணம் செய்திருக்கலாம். மாதக்கணக்காக நடந்து இவ்வளவு தூரம் எரேமியா பயணம் செய்திருப்பாரா என்று பைபிள் விமர்சகர்களால் நம்பமுடியவில்லை (எஸ்றா 7:9) ஆனால், அப்படி செய்யும்படிதான் யெகோவா சொன்னார். எரேமியாவும் அப்படியே செய்தார்.
(எரேமியா 13:6, 7) “ஆனால், பல நாட்களுக்குப் பின்பு யெகோவா என்னிடம், “நீ எழுந்து, யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புவாரை அங்கிருந்து எடுத்து வா” என்று சொன்னார். அதனால், நான் யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போனேன். நான் மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து அந்த இடுப்புவாரைத் தோண்டி எடுத்தேன். ஒன்றுக்குமே உதவாத அளவுக்கு அது பாழாகிப்போயிருந்தது.”
jr -E பக். 52 பாரா 18
வஞ்சகமான இதயத்தை குறித்து எச்சரிக்கை!
18 எரேமியாவின் பயணத்தை கற்பனை செய்து பாருங்கள். யூத தேசத்தின் மலைகளில் கஷ்டப்பட்டு ஏறி இறங்கி... பாலைவனங்களை கடந்து... யூப்ரடிஸ் ஆற்றுக்கு எரேமியா போய் சேர்ந்திருப்பார். இதெல்லாம், வெறும் ஒரு நாரிழை இடுப்புவாரை மறைத்து வைப்பதற்காகதான்! அவர் ரொம்ப நாளாக திரும்பி வராததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர் எங்கே போயிருப்பார் என்று யோசித்திருக்கலாம். அவர் திரும்பி வந்தபோது அந்த இடுப்புவார் அவரிடம் இல்லை. மறுபடியும், யெகோவா அவரை அவ்வளவு தூரம் பயணம் செய்து அந்த இடுப்புவாரை எடுத்து வரும்படி சொன்னார். அவர் போய் பார்த்தபோது அந்த இடுப்புவார் ‘ஒன்றுக்குமே உதவாத அளவுக்கு பாழாகிப்போயிருந்தது.’ ‘கடவுள் எதுக்கு தேவையில்லாம இப்படியெல்லாம் செய்றாரு’ என்று எரேமியா நினைக்க வாய்ப்பிருந்தது. ஆனால், அவர் கடவுளால் வடிவமைக்கப்பட்டதால் எந்த குறையும் சொல்லாமல் கொடுக்கப்பட்ட நியமிப்புக்கு அப்படியே கீழ்ப்படிந்தார்.
(எரேமியா 13:8-11) ‘அப்போது யெகோவா என்னிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த இடுப்புவாரைப் போலவே நான் யூதாவின் ஆணவத்தையும் எருசலேமின் மட்டுக்குமீறிய அகம்பாவத்தையும் அழிப்பேன். இந்தக் கெட்ட ஜனங்கள் இந்த இடுப்புவாரைப் போலவே ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆவார்கள். ஏனென்றால், அவர்கள் என் பேச்சைக் கேட்பது இல்லை. தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போகிறார்கள். மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குகிறார்கள்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘இடுப்புவார் எப்படி ஒருவருடைய இடுப்போடு ஒட்டிக்கொண்டிருக்கிறதோ அதுபோலவே இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் என்னை ஒட்டிக்கொண்டிருக்கும்படி செய்தேன். எனக்குப் புகழும் மகிமையும் அழகும் சேர்க்கிற ஜனங்களாக அவர்கள் இருப்பதற்காகவே அப்படிச் செய்தேன். ஆனால், அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை.’’
jr -E பக். 52 பாரா. 19-20
வஞ்சகமான இதயத்தை குறித்து எச்சரிக்கை!
19 எரேமியா இரண்டு முறை பயணம் செய்து முடித்த பிறகுதான் இந்த நியமிப்பை கொடுத்ததற்கான காரணத்தை யெகோவா சொன்னார். அவருடைய நியமிப்பு ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்கு புரியவைக்க உதவியது. “இந்தக் கெட்ட ஜனங்கள் இந்த இடுப்புவாரைப் போலவே ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆவார்கள். ஏனென்றால், அவர்கள் என் பேச்சைக் கேட்பது இல்லை. தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போகிறார்கள். மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குகிறார்கள்.” (எரே. 13:10) எவ்வளவு அழகாக யெகோவா அவருடைய மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார்! பார்க்க அற்பமாக தோன்றும் விஷயத்தை செய்யும்படி எரேமியாவிடம் யெகோவா சொன்னாலும், அதை எரேமியா அப்படியே செய்தார். மக்களின் மனதை தொட யெகோவா எடுத்த முயற்சியை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.—எரே. 13:11.
20 யெகோவாவுக்கு சேவை செய்ய நாம் இன்று நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஆடை அலங்காரம், மேல்படிப்பு, வேலை, மதுபானம் போன்ற விஷயங்களில் நாம் கிறிஸ்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியும். இப்படிப்பட்ட விஷயங்களில் உலகத்தாரைப் போல் இல்லாமல் நாம் வித்தியாசமாக இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் நமக்கு தெரிந்தவர்களும் நம்மை வித்தியாசமாக பார்க்கலாம். ஏன் கேலி கிண்டல்கூட செய்யலாம். இருந்தாலும், இப்படிப்பட்ட விஷயங்களில் எரேமியாவைப் போலவே யெகோவாவின் ஆலோசனைகளுக்கு கீழ்ப்படிய தீர்மானமாக இருப்பீர்களா? யெகோவா உங்களை வடிவமைக்க நீங்கள் அனுமதித்தால் நீங்கள் நல்ல தீர்மானங்களை எடுப்பீர்கள். அதைப் பார்த்து மக்கள் யெகோவாவை புகழ்வார்கள். எல்லா சந்தர்பங்களிலும் பைபிள் கொடுக்கும் ஆலோசனைக்கு கீழ்ப்படியுங்கள்... உண்மையும் விவேகமும் உள்ள அடிமை கொடுக்கும் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளுங்கள்... அப்படி செய்தால் நிச்சயம் சந்தோஷமாக இருப்பீர்கள். வஞ்சகமான இதயம் சொல்வதை கேட்டு ஏமாந்து போவதற்கு பதிலாக எரேமியாவைப் போல நடந்துகொள்ளுங்கள். யெகோவா உங்களை வடிவமைக்க அனுமதியுங்கள். என்றென்றும் பிரயோஜனமாக இருக்கும் கண்ணியமான பாத்திரமாக அவர் உங்களை வடிவமைக்கட்டும்!
it -1-E பக். 1121 பாரா 2
இடுப்பு
இடுப்புவார் எப்படி ஒருவருடைய இடுப்போடு ஒட்டிக்கொண்டிருக்கிறதோ அதுபோலவே இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் தன்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும்படி யெகோவா செய்தார். தனக்கு புகழும் மகிமையும் அழகும் சேர்க்கிற ஜனமாக அவர்கள் இருப்பதற்காகவே அப்படிச் செய்தார். (எரே. 13:11) இயேசு கிறிஸ்து ஆட்சி செய்யும்போது நீதி அவருக்கு இடுப்புவார் போலவும் நம்பகத்தன்மை அவருக்கு இடுப்புக்கச்சை போலவும் இருக்கும் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? இயேசு கிறிஸ்து அவருடைய சக்தியை பயன்படுத்தி செய்யும் எல்லா விஷயங்களும் நீதியாகவும் நம்பகத்தன்மையுள்ளதாகவும் இருக்கும். யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதியாக சரியானதை செய்ய நீதி என்ற குணம் அவருக்கு உதவி செய்யும். ஏனென்றால், நீதி அவருக்கு இடுப்புவாரைப் போல் இருக்கிறது.—ஏசா. 11:1, 5.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எரேமியா 12:1, 2) “யெகோவாவே, நான் உங்களிடம் முறையிடும்போதும், நியாயத்தைப் பற்றி உங்களோடு வழக்காடும்போதும், நீங்கள் நீதியுள்ளவர் என்பதை நிரூபிக்கிறீர்கள். ஆனாலும், கெட்டவர்கள் ஏன் ஓகோவென்று வாழ்கிறார்கள்? துரோகிகள் ஏன் நிம்மதியாக இருக்கிறார்கள்? நீங்கள் அவர்களை நட்டு வைத்தீர்கள். அவர்கள் நன்றாக வேர்விட்டு வளர்ந்து காய்த்துக் குலுங்குகிறார்கள். உங்களிடம் நெருங்கியிருப்பதாக வாயளவில் சொல்கிறார்கள், ஆனால், அவர்களுடைய அடிமனது உங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.”
(எரேமியா 12:14) ‘யெகோவா சொல்வது இதுதான்: “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த சொத்தை அக்கம்பக்கத்து தேசத்தார் பறித்துக்கொண்டார்கள். அதனால் நான் அவர்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்தியடிப்பேன். அவர்கள் மத்தியிலிருந்து யூதா ஜனங்களைத் துரத்தியடிப்பேன்.’
jr - E பக். 118 பாரா 11
“யெகோவா எங்கே?” என்று தினமும் கேட்கிறீர்களா?
11 கெட்டவர்கள் ஓகோவென்று இருப்பதை பார்த்து எரேமியா வெறுத்துப் போனார். அதனால் யெகோவாவிடம் அவர் முறையிட்டார். (எரேமியா 12:1, 3-ஐ வாசியுங்கள்) யெகோவா நீதியானவார இல்லையா என்ற சந்தேகம் அவருக்கு வரவில்லை. ஆனால், அவருடைய ‘முறையிடுதலுக்கு’ யெகோவா பதில் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். எரேமியா யெகோவாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்டது, அவர்களுக்கு இடையே எப்படிப்பட்ட நெருக்கமான பந்தம் இருந்தது என்பதை தெளிவாக காட்டியது. ஒரு பிள்ளை தன் அப்பாவிடம் கேள்வி கேட்பதுபோல் எரேமியா யெகோவாவிடம் கேட்டார். நிறைய யூதர்கள் கெட்ட காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை செழிப்பாக இருந்தது. இதைப் பார்த்துதான் எரேமியா யெகோவாவிடம் முறையிட்டார். யெகோவா எரேமியாவுக்கு திருப்தியான பதிலை கொடுத்தாரா? பொல்லாதவர்களை வேரோடு பிடுங்கிப்போடுவேன் என்று யெகோவா எரேமியாவுக்கு உறுதியளித்தார். (எரே. 12:14) யெகோவா சொன்னது நிறைவேறி வருவதை எரேமியா பார்த்தார். அதனால், யெகோவா எதை செய்தாலும் அது நீதியாகவும் நியாயமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமானது. இதையெல்லாம் புரிந்துகொண்ட எரேமியா, ஒரு பிள்ளை தன் அப்பாவிடம் பேசுவதுபோல யெகோவாவிடம் தன் மனதில் இருப்பதையெல்லாம் சொல்ல அவர் ஒருபோதும் தயங்கி இருக்கமாட்டார்.