நம்பிக்கை துரோகத்தை யெகோவா வெறுக்கிறார்
‘அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம் பண்ணாதிருங்கள்.’—மல்கியா 2:10.
1. நாம் நித்திய ஜீவனைப் பெற வேண்டுமென்றால் கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்?
உங்களுக்கு நித்திய ஜீவன் வேண்டுமா? பைபிள் வாக்குக் கொடுக்கும் அந்த நம்பிக்கையில் உங்களுக்கு விசுவாசமிருந்தால், ‘வேண்டும்’ என நீங்கள் சொல்லலாம். ஆனால், புதிய உலகில் கடவுள் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்து தயவுகாட்ட வேண்டுமென விரும்பினால் அவர் எதிர்பார்க்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். (பிரசங்கி 12:13; யோவான் 17:3) அபூரண மனிதர்களிடம் கடவுள் இவ்வாறு எதிர்பார்ப்பது நியாயமற்றதா? இல்லை, ஏனெனில் யெகோவாவே இந்த உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூறுகிறார்: “பலியை அல்ல இரக்கத்தையும், தகன பலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.” (ஓசியா 6:6) ஆகவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதர்களாலும் கடவுள் எதிர்பார்ப்பவற்றை செய்ய முடியும்.
2. அநேக இஸ்ரவேலர்கள் எவ்வாறு யெகோவாவுக்கு விரோதமாக துரோகம் பண்ணினார்கள்?
2 என்றாலும், அனைவருமே கடவுளுடைய சித்தத்தை செய்ய விரும்புவதில்லை. அநேக இஸ்ரவேலர்கள்கூட அதைச் செய்ய விரும்பவில்லை என ஓசியா சொல்கிறார். கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியும் ஓர் உடன்படிக்கைக்குள் அல்லது ஒப்பந்தத்திற்குள் வர ஒரு தேசமாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். (யாத்திராகமம் 24:1-8) ஆனால், சீக்கிரத்திலேயே அவருடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் போய் ‘உடன்படிக்கையை மீறினார்கள்.’ அதனால்தான் அந்த இஸ்ரவேலர்கள் அவருக்கு “விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்” என யெகோவா கூறினார். (ஓசியா 6:7) அன்று முதல் இன்று வரை அநேகர் அவ்வாறே செய்திருக்கிறார்கள். ஆனால், யெகோவா தமக்கோ தம்மை அன்புடன் சேவிக்கிறவர்களுக்கோ செய்யப்படும் நம்பிக்கை துரோகத்தை அடியோடு வெறுக்கிறார்.
3. இந்தக் கட்டுரையில் எதை ஆராய்வோம்?
3 நாம் சந்தோஷமாக வாழ விரும்பினால் நம்பிக்கை துரோகம் பற்றிய கடவுளுடைய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதைக் குறித்து சொன்னவர் தீர்க்கதரிசியாகிய ஓசியா மட்டுமே அல்ல. முந்தைய கட்டுரையில், மல்கியா புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் ஆரம்பித்து அவருடைய தீர்க்கதரிசனங்களிலிருந்து அதிகத்தை ஆராய ஆரம்பித்தோம். இப்போது அந்தப் புத்தகத்தின் இரண்டாவது அதிகாரத்திற்கு கவனம் செலுத்துவோம்; நம்பிக்கை துரோகத்தை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என அங்கே வலியுறுத்தப்படுவதை காண்போம். கடவுளுடைய மக்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து பல ஆண்டுகளான பிறகு அவர்கள் மத்தியிலிருந்த நிலைமை பற்றியே மல்கியா கூறினார்; என்றாலும் இந்த இரண்டாம் அதிகாரத்திலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
குற்றமுள்ள ஆசாரியர்கள்
4. ஆசாரியர்களுக்கு என்ன எச்சரிப்பை யெகோவா கொடுத்தார்?
4 யெகோவாவின் நீதியுள்ள வழிகளைவிட்டு விலகிய யூத ஆசாரியர்களை அவர் கண்டனம் செய்வதோடு 2-ம் அதிகாரம் துவங்குகிறது. அவருடைய ஆலோசனையை கேட்டு ஆசாரியர்கள் தங்களை திருத்திக்கொள்ளாவிட்டால் விபரீதமான விளைவுகளைச் சந்திப்பது நிச்சயம். முதல் இரண்டு வசனங்களை கவனியுங்கள்: “இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது. நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன் . . . என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” ஆசாரியர்கள், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு போதித்து அதற்கு கீழ்ப்படிந்திருந்தால் ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பார்கள். ஆனால், கடவுளுடைய சித்தத்தை அசட்டை செய்ததால் இப்போது சாபம்தான் வரும். ஆசாரியர்கள் கூறும் ஆசீர்வாதங்களும் சாபமாக மாறிவிடும்.
5, 6. (அ) ஆசாரியர்கள் ஏன் அதிக குற்றமுள்ளவர்களாக இருந்தனர்? (ஆ) யெகோவா, அந்த ஆசாரியர்களை வெறுப்பதை எவ்வாறு கூறினார்?
5 ஆசாரியர்கள் ஏன் அதிக குற்றமுள்ளவர்களாக இருந்தனர்? ஒரு காரணத்தை 7-ம் வசனம் தெளிவாக கூறுகிறது: “ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்க வேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.” யெகோவா “இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்” பொறுப்பு ஆசாரியர்களுக்கு இருந்தது; இதை, மோசே மூலம் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டங்கள் ஆயிரத்திற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பே கூறின. (லேவியராகமம் 10:11) ஆனால் பிற்காலத்தில், “இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை” என 2 நாளாகமம் 15:3-ஐ எழுதியவர் அறிக்கை செய்தது வருத்தகரமானதே.
6 பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டிலும், அதாவது மல்கியாவின் காலத்திலும், ஆசாரியர்களின் நிலைமை அவ்வாறே இருந்தது. அவர்கள் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு போதிக்க தவறினர். ஆகவே அந்த ஆசாரியர்கள் கண்டிக்கப்பட தகுதியானவர்கள். அவர்களுக்கு விரோதமாக யெகோவா உபயோகிக்கும் கடும் வார்த்தைகளை கவனியுங்கள். “உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்” என மல்கியா 2:3 கூறுகிறது. எப்பேர்ப்பட்ட கண்டனம்! பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் சாணி பொதுவாக பாளயத்திற்கு புறம்பே எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட வேண்டும். (லேவியராகமம் 16:27) ஆனால், அதற்கு பதிலாக அந்தச் சாணியை அவர்கள் முகங்களில் இறைப்பதாக யெகோவா கூறுகையில் அந்தப் பலிகளையும் அவற்றை செலுத்தியவர்களையும் அவர் எந்தளவுக்கு வெறுத்து, ஒதுக்கினார் என்பதையே தெளிவாக காட்டுகிறது.
7. நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிறவர்கள் மீது யெகோவா ஏன் கோபம் கொண்டார்?
7 மல்கியா வாழ்ந்த காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்பே, முதலில் ஆசரிப்பு கூடாரத்தையும் பின்னர் ஆலயத்தையும் அதன் பரிசுத்த ஊழியத்தையும் கவனித்துக்கொள்ள யெகோவா லேவியர்களை நியமித்திருந்தார். அவர்களே இஸ்ரவேல் தேசத்தில் போதகர்களாக இருந்தனர். அந்த நியமிப்பை அவர்கள் சரிவர செய்திருந்தால் அவர்களுக்கும் அந்தத் தேசத்திற்கும் ஜீவனும் சமாதானமும் கிடைத்திருக்கும். (எண்ணாகமம் 3:5-8) ஆனால், லேவியர்களுக்கு ஆரம்பத்தில் கடவுளிடமிருந்த பயபக்தி பின்னர் இல்லாமல் போனது. ஆகவேதான், யெகோவா அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக் குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் . . . நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ள”வில்லை. (மல்கியா 2:8, 9) இந்த ஆசாரியர்கள், சத்தியத்தைப் போதிக்க தவறியதாலும் தங்கள் கெட்ட முன்மாதிரியாலும் அநேக இஸ்ரவேலரை தவறாக வழிநடத்தியதால் யெகோவா அவர்கள் மீது கோபம் கொள்ள நியாயமான காரணங்கள் இருந்தன.
கடவுளுடைய தராதரங்களைப் பின்பற்றுதல்
8. கடவுளுடைய தராதரங்களைப் பின்பற்றும்படி மனிதர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமற்றதா? விளக்குக.
8 அந்த ஆசாரியர்கள் வெறும் அபூரண மனிதர்கள் என்பதால் கடவுளுடைய தராதரங்களை பின்பற்றும்படி அவர்களிடம் எதிர்பார்த்திருக்க முடியாது, எனவே அவர்கள் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றிருக்க தகுதியானவர்களே என்று நினைக்காதிருப்போமாக. மனிதர்களால் உண்மையில் கடவுளுடைய சட்டங்களைப் பின்பற்ற முடியும், ஏனெனில் அவர்களால் செய்ய முடியாததை செய்யும்படி யெகோவா அவர்களிடம் கேட்பதில்லை. அன்றிருந்த ஆசாரியர்களில் சிலர் கடவுளுடைய தராதரங்களை பின்பற்றியிருக்க வாய்ப்புண்டு; எப்படியும், பின்னர் வந்த ஒருவர் அவற்றை முழுமையாக பின்பற்றியதில் சந்தேகமே இல்லை, அவரே சிறந்த ‘பிரதான ஆசாரியராகிய’ இயேசு. (எபிரெயர் 3:1) அவரைப் பற்றி பின்வருமாறு கூறுவது மிகவும் பொருத்தமானதே: “சத்திய வேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.”—மல்கியா 2:6.
9. நம் நாட்களில் சத்தியத்தை உண்மையோடு பகிர்ந்துகொடுப்பது யார்?
9 அதைப் போலவே, பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக, “தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாக” சேவித்து வந்திருக்கிறார்கள். (1 பேதுரு 2:5) பைபிள் சத்தியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் அவர்கள் முன்னின்று வழிநடத்தியிருக்கிறார்கள். அவர்கள் போதிக்கும் சத்தியங்களைக் கற்று வருகையில், சத்திய வேதம் அவர்களுடைய வாயில் இருப்பதை உங்கள் அனுபவத்தில் பார்த்ததில்லையா? மத சம்பந்தமான தவறுகளைச் செய்து வந்த அநேகர் சரியான பாதைக்குத் திரும்ப அவர்கள் உதவியிருக்கிறார்கள்; இதனால் பைபிள் சத்தியங்களை கற்றுக்கொண்டு நித்திய ஜீவ நம்பிக்கை பெற்ற லட்சக்கணக்கானோர் இன்று உலகமுழுவதிலும் உள்ளனர். இன்னும் லட்சக்கணக்கானோருக்கு சத்திய வேதத்தை போதிக்கும் விசேஷித்த பாக்கியம் இவர்களுக்கு உள்ளது.—யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9.
எச்சரிக்கையாயிருக்க காரணம்
10. நாம் ஏன் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
10 என்றாலும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இல்லையெனில், மல்கியா 2:1-9-லுள்ள முக்கிய பாடங்களை புரிந்துகொள்ள நாம் தவறிவிடலாம். தனிப்பட்டவர்களாக நம்முடைய உதடுகளில் அநியாயம் காணப்படாதபடி நாம் எச்சரிக்கையாய் இருக்கிறோமா? உதாரணத்திற்கு, நாம் சொல்வதை நம் குடும்ப அங்கத்தினர்களால் முழுமையாக நம்ப முடியுமா? சபையிலுள்ள சகோதர, சகோதரிகள் நம்மை நம்ப முடியுமா? நுணுக்கமாக பார்த்தால் தவறில்லாத, ஆனால் மற்றவர்களை வேண்டுமென்றே தவறாக எண்ண வைக்கும் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகளை பேசும் பழக்கத்தை பெறுவது எளிது. அல்லது வியாபாரம் சம்பந்தப்பட்ட காரியங்களில் உண்மைகளை மறைத்தோ மிகைப்படுத்தியோ பேசலாம். அது யெகோவாவுக்கு தெரியாமல் போய்விடுமா? இதுபோன்ற காரியங்களை நாம் செய்துவந்தால் நம் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலிகளை அவர் ஏற்றுக்கொள்வாரா?
11. யார் அதிக கவனமாயிருக்க வேண்டும்?
11 இன்று கடவுளுடைய வார்த்தையை சபைகளில் போதிக்கும் சிலாக்கியம் பெற்றவர்களுக்கு மல்கியா 2:7 உண்மையில் ஓர் எச்சரிப்பாக அமைகிறது. ‘அவர்களுடைய உதடுகள் அறிவைக் காக்க வேண்டும், வேதத்தை அவர்கள் வாயிலே தேடுவார்களே’ என அது கூறுகிறது. அப்படிப்பட்ட போதகர்களுக்கு பெரும் உத்தரவாதம் உள்ளது, ஏனெனில் அவர்கள் ‘அதிக ஆக்கினையை அடைவார்கள்’ என யாக்கோபு 3:1 சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் வைராக்கியத்தோடும் உற்சாகத்தோடும் போதிக்க வேண்டுமென்றாலும் அவர்களுடைய போதனை, கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையையும் யெகோவாவின் அமைப்பு அளிக்கும் ஆவிக்குரிய உணவையும் முழுமையாய் சார்ந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு ‘மற்றவர்களுக்கு போதிக்க அவர்கள் ஏற்ற தகுதி பெற்றிருப்பார்கள்.’ (NW) ஆகவே, அவர்களுக்கு இவ்வாறு ஆலோசனை கொடுக்கப்படுகிறது: “வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.”—2 தீமோத்தேயு 2:2, 15.
12. போதிக்கிறவர்கள் எதைப் பற்றி கவனமாயிருக்க வேண்டும்?
12 நாம் கவனமாக இல்லையென்றால் நம் சொந்த விருப்பங்களை அல்லது எண்ணங்களை நமது போதகத்திற்குள் புகுத்தும் சோதனையை எதிர்ப்படலாம். யெகோவாவின் அமைப்பு போதிக்கிறவற்றிற்கு முரணாக இருக்கிறபோதிலும் தனது தீர்மானங்களில் அளவுக்கதிகமான நம்பிக்கை வைக்கும் ஒருவருக்கு இது பெரும் சோதனையாக இருக்கலாம். ஆனால், சபையிலுள்ள போதகர்களிடம் ஆடுகளை இடறலடையச் செய்யும் தங்களுடைய கருத்துகளை அல்ல, மாறாக கடவுளிடமிருந்து வரும் அறிவையே போதிக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறது என்று மல்கியா 2-ம் அதிகாரம் வலியுறுத்துகிறது. “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” என இயேசு கூறினார்.—மத்தேயு 18:6.
அவிசுவாசியை மணம் முடித்தல்
13, 14. மல்கியா சுட்டிக்காண்பித்த ஒரு நம்பிக்கை துரோகம் என்ன?
13 மல்கியா 2-ம் அதிகாரத்தில் 10-ம் வசனம் முதற்கொண்டு நம்பிக்கை துரோகத்திடம் இன்னும் நேரடியாக கவனம் செலுத்தப்படுகிறது. ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு விதமான நடத்தைகளுக்கு மல்கியா கவனம் செலுத்துகிறார், அவற்றைக் குறிப்பிடுகையில் “துரோகம்” என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறார். முதலில், மல்கியா தன் ஆலோசனையை பின்வரும் கேள்விகளுடன் ஆரம்பிப்பதை கவனியுங்கள்: “நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம் பண்ணுவானேன்?” பிறகு, இஸ்ரவேலரின் நம்பிக்கை துரோகம் ‘கர்த்தரின் பரிசுத்தத்தை’ பரிசுத்தக் குலைச்சலாக்குகிறது என்றும் வசனம் 11 கூறுகிறது. அப்படி என்னதான் மோசமான தவறை அவர்கள் செய்தனர்? அவர்களுடைய தவறான பழக்கங்களில் ஒன்றை அந்த வசனமே சுட்டிக்காட்டுகிறது: அவர்கள் “அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்.”
14 வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த தேசத்தின் பாகமான சில இஸ்ரவேலர்கள் அவரை சேவிக்காதவர்களை திருமணம் செய்திருந்தார்கள். அந்தச் சூழமைவை கவனித்தால் அது ஏன் மிகப் பெரிய தவறு என புரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு “ஒரே பிதா” இருந்ததாக 10-ம் வசனம் கூறுகிறது. இது (இஸ்ரவேல் என மறுபெயர் பெற்ற) யாக்கோபையோ, ஆபிரகாமையோ, ஏன் ஆதாமையோகூட குறிக்கவில்லை. யெகோவாவே அந்த “ஒரே பிதா” என மல்கியா 1:6 கூறுகிறது. அவர்களுடைய பிதாக்களுடன் யெகோவா செய்திருந்த உடன்படிக்கையில் அவர்களும் ஒரு சாராராக இருந்ததால் இஸ்ரவேலர்களுக்கு அவரோடு ஓர் உறவு இருந்தது. அந்த உடன்படிக்கையின் சட்டம் ஒன்று இவ்வாறு கூறியது: “அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.”—உபாகமம் 7:3.
15. (அ) அவிசுவாசியை மணம் முடிப்பதை சிலர் எவ்வாறு நியாயப்படுத்த முயலலாம்? (ஆ) திருமணம் சம்பந்தமாக யெகோவா என்ன கூறுகிறார்?
15 இன்று சிலர் இவ்வாறு நியாய விவாதம் செய்யலாம்: ‘நான் காதலிப்பவர் உண்மையிலேயே ரொம்ப நல்லவர். சீக்கிரத்தில் உண்மை வணக்கத்தை ஏற்பார்.’ இவ்வாறு யோசிப்பது பின்வரும் ஏவப்பட்ட எச்சரிப்பு உண்மை என்பதையே வலியுறுத்துகிறது: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.” (எரேமியா 17:9) புறதேசத்தாரை மணம் முடிப்பதை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பது மல்கியா 2:12-ல் கூறப்பட்டுள்ளது: “இப்படிச் செய்கிறவன் எவனோ, . . . அவனை . . . கர்த்தர் சங்கரிப்பார்.” ஆகவே, ‘கர்த்தருக்குள்’ மட்டுமே திருமணம் செய்துகொள்ளும்படி கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி கொடுக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 7:39) கிறிஸ்தவ ஏற்பாட்டில், ஓர் அவிசுவாசியை மணம் முடிக்கையில் அந்த விசுவாசி ‘சங்கரிக்கப்படுவதில்லை.’ ஆனால், அந்த அவிசுவாசி தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் சீக்கிரத்தில் கடவுள் இந்தக் காரிய ஒழுங்குமுறையை அழிக்கையில் அவருடைய கதி என்னவாகும்?—சங்கீதம் 37:37, 38.
மணத்துணையை தவறாக நடத்துதல்
16, 17. சிலர் என்ன நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டனர்?
16 இப்போது மல்கியா இரண்டாவது நம்பிக்கை துரோகத்தைப் பற்றி கூறுகிறார்: நியாயமற்ற விவாகரத்தின் மூலம் மணத்துணையை தவறாக நடத்துதல். இரண்டாம் அதிகாரம் 14-ம் வசனம் இவ்வாறு கூறுகிறது: “கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே.” யூத கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு துரோகம் செய்ததினால் யெகோவாவின் பலிபீடத்தை அடையாள அர்த்தத்தில் ‘கண்ணீரினால் நிரப்பினார்கள்.’ (மல்கியா 2:13) அவர்கள் தவறான காரணங்களை காட்டி விவாகரத்து செய்தனர்; இளமையான அல்லது புறமத பெண்களை மணம் முடிக்க தங்கள் இளவயதின் மனைவிகளை காரணமே இல்லாமல் கைவிட்டனர். ஊழல்மிக்க ஆசாரியர்களும் அதை அனுமதித்தனர்! இருந்தாலும், “தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என மல்கியா 2:16 கூறுகிறது. குற்றமற்றவர் மறுமணம் புரிய வழிசெய்யும் விவாகரத்தைப் பெறுவதற்கான ஒரே காரணம் ஒழுக்கக்கேடு மட்டுமே என பின்னர் இயேசு காண்பித்தார்.—மத்தேயு 19:9.
17 மல்கியாவின் வார்த்தைகளை கவனமாக சிந்தித்து, அவை எவ்வாறு நம் இதயத்தை தொட்டு இயல்பான இரக்க உணர்ச்சிகளை தூண்டுகின்றன என்பதை பாருங்கள். ‘உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியும்’ என்று அவர் குறிப்பிடுகிறார். இங்கு குற்றம் சாட்டப்படும் ஒவ்வொரு ஆணும் ஓர் உடன் வணக்கத்தாளை அதாவது இஸ்ரவேல பெண்ணை மணம் முடித்திருந்தார்; அவளை அருமையான தோழியாக, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்திருந்தார். அவர்களுடைய இளமை காலத்தில் அந்தத் திருமணம் நடந்திருக்கலாம்; ஆனால், காலம் உருண்டோடி முதிர் வயதை நெருங்கினாலும் அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கை அதாவது திருமண ஒப்பந்தம் செல்லாமல் போய்விடாது.
18. துரோகம் பற்றிய மல்கியாவின் ஆலோசனைகள் இன்று எவ்வாறு பொருந்துகின்றன?
18 இந்தப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் இன்றும் பயனுள்ளவையே. கர்த்தருக்குட்பட்டவர்களை மட்டுமே திருமணம் செய்வதைப் பற்றிய கடவுளின் கட்டளையை சிலர் உதாசீனப்படுத்துவது வருந்தத்தக்கதே. மேலுமாக, சிலர் தங்கள் திருமண பந்தத்தை பலப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்க தவறுவதும் வருத்தகரமானதே. ஆனால் அவர்கள் சாக்குப்போக்குகளைக் கூறி, வேறொருவரை மணம் முடிக்க வேதப்பூர்வமற்ற விவாகரத்தை பெற்று கடவுள் வெறுக்கும் காரியத்தை செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து அவர்கள் ‘யெகோவாவை வருத்தப்படுத்துகிறார்கள்.’ மல்கியாவின் காலத்தில் கடவுளுடைய ஆலோசனையை அசட்டை செய்தோர், யெகோவாவின் நோக்குநிலையே சரியில்லை என்று நினைக்குமளவிற்கு துடுக்குத்தனமாக நடந்துகொண்டனர். “நியாயந்தீர்க்கிற தேவன் எங்கே” என அவர்கள் கேட்டனர். எவ்வளவு மோசமான எண்ணம்! நாம் அந்தக் கண்ணியில் விழாதபடி எச்சரிக்கையாய் இருப்போமாக.—மல்கியா 2:17.
19. கணவர்களும் மனைவிகளும் கடவுளுடைய ஆவியை எவ்வாறு பெறலாம்?
19 மறுபட்சத்தில், சில கணவன்மார் தங்கள் மனைவிகளுக்கு துரோகம் செய்யவில்லை என மல்கியா குறிப்பிடுவது உற்சாகமளிக்கிறது. ‘கடவுளுடைய பரிசுத்த ஆவியில் மீதியானது’ அவர்களிடமிருந்தது. (வசனம் 15, NW) இன்று, ‘தங்கள் மனைவிகளுக்கு கனத்தைச் செய்கிற’ அப்படிப்பட்ட ஆண்கள் கடவுளுடைய அமைப்பில் நிறைந்திருப்பது சந்தோஷத்தை தருகிறது. (1 பேதுரு 3:7) அவர்கள் தங்கள் மனைவிகளை சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டார்கள், மோசமான பாலுறவு பழக்கங்களில் ஈடுபட வற்புறுத்த மாட்டார்கள், மற்ற பெண்களோடு காதல் லீலைகளில் ஈடுபட்டு அல்லது ஆபாசப் படங்களை பார்த்து அவர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். கடவுளுக்கும் அவருடைய சட்டங்களுக்கும் உத்தமத்துடன் நடக்கும் உண்மையுள்ள கிறிஸ்தவ மனைவிகள் ஏராளமானோர் இருப்பதாலும் யெகோவாவின் அமைப்பு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆண்களும் பெண்களும் கடவுள் வெறுப்பவற்றை வெறுத்து அவர் விருப்பத்திற்கு இசைவாக யோசித்து செயல்படுகிறார்கள். நீங்களும், ‘அரசராக தேவனுக்குக் கீழ்ப்படிந்து’ அவருடைய பரிசுத்த ஆவியை அபரிமிதமாக பெற்று தொடர்ந்து அவர்களைப் போலவே இருங்கள்.—அப்போஸ்தலர் 5:29, NW.
20. மனிதவர்க்கம் முழுவதும் எந்தச் சமயத்தை நெருங்குகிறது?
20 சீக்கிரத்தில் யெகோவா இந்த முழு உலகத்தையும் நியாயந்தீர்க்கப் போகிறார். தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் செயல்களுக்காகவும் ஒவ்வொருவரும் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.” (ரோமர் 14:12) ஆகவே, யெகோவாவின் நாளில் யார் தப்பிக்க முடியும் என்பதே இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கிய கேள்வியாகும். இந்தத் தொடரில் மூன்றாவதும் கடைசியுமான கட்டுரை இந்தத் தலைப்பைக் கலந்தாராயும்.
உங்களால் விளக்க முடியுமா?
• இஸ்ரவேலிலிருந்த ஆசாரியர்களை என்ன முக்கிய காரணத்திற்காக யெகோவா கண்டித்தார்?
• கடவுளுடைய தராதரங்கள் மனிதர்களால் எட்ட முடியாத அளவிற்கு ஏன் உயர்ந்தவையாக இல்லை?
• இன்று போதிக்கையில் நாம் ஏன் கவனமாயிருக்க வேண்டும்?
• என்ன இரண்டு பழக்கங்களை யெகோவா முக்கியமாய் கண்டனம் செய்தார்?
[பக்கம் 15-ன் படம்]
மல்கியாவின் காலத்தில் யெகோவாவின் வழிகளை கடைப்பிடிக்காததால் ஆசாரியர்கள் கண்டிக்கப்பட்டனர்
[பக்கம் 16-ன் படம்]
சொந்த விருப்பங்களை அல்ல யெகோவாவின் வழிகளையே போதிக்க நாம் கவனமாயிருக்க வேண்டும்
[பக்கம் 18-ன் படம்]
அற்ப காரணங்களுக்காக தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு புறமத பெண்களை மணம் முடித்த இஸ்ரவேலர்களை யெகோவா கண்டித்தார்
[பக்கம் 18-ன் படக்குறிப்பு]
இன்று கிறிஸ்தவர்கள் தங்கள் திருமண ஒப்பந்தத்தை மதிக்கின்றனர்