வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜனவரி 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 1–3
“பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”
மத் 3:2-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
பரலோக அரசாங்கம்: இவற்றுக்கான கிரேக்க வார்த்தைகள் கிட்டத்தட்ட 30 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன, அதுவும் மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்களில் இவற்றுக்கு இணையான வார்த்தைகள், அதாவது ‘கடவுளுடைய அரசாங்கம்’ என்ற வார்த்தைகள், பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்பட்டு, அங்கிருந்து ஆட்சி செய்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.—மத் 21:43; மாற் 1:15; லூ 4:43; தானி 2:44; 2தீ 4:18.
அரசாங்கம்: வே.வா., “ராஜ்யம்.” கிரேக்கில், பஸிலீயா. இந்த வசனத்தில்தான் இந்த வார்த்தை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு அரசரின் ஆட்சியை மட்டுமல்லாமல், அவரால் ஆட்சி செய்யப்படும் பகுதியையும் மக்களையும்கூட குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை 162 தடவை வருகிறது. அதில் 55 தடவை மத்தேயுவின் பதிவில் வருகிறது; அதிலுள்ள பெரும்பாலான வசனங்களில் கடவுளுடைய பரலோக ஆட்சியைக் குறிக்கிறது. மத்தேயு இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதால் அவருடைய சுவிசேஷத்தை அரசாங்கத்தின் சுவிசேஷம் என்றுகூட அழைக்கலாம்.
நெருங்கி வந்துவிட்டது: அதாவது, பரலோக அரசாங்கத்தின் எதிர்கால ராஜா வரவிருந்தார்.
பிரசங்கித்துக்கொண்டிருந்தார்: ‘பிரசங்கிப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “ஒரு பொதுத் தூதுவராக எல்லாருக்கும் ஒரு செய்தியை அறிவிப்பது.” இந்த வார்த்தை, பிரசங்கிக்கும் விதத்தை வலியுறுத்துகிறது; அதாவது, ஒரு தொகுதிக்கு முன்பு பிரசங்கம் செய்வதைக் குறிக்காமல், வெளிப்படையாக எல்லாருக்கும் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது.
மத் 3:4-க்கான nwtsty மீடியா
யோவான் ஸ்நானகரின் உடையும் தோற்றமும்
யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார். சின்னச் சின்னப் பொருள்களை எடுத்துச்செல்வதற்கு வசதியாக இடுப்பில் தோல் வாரைக் கட்டியிருந்தார். தீர்க்கதரிசியான எலியாவும் இதேபோன்ற உடையைத்தான் போட்டிருந்தார். (2ரா 1:8) ஒட்டக ரோமத்தாலான துணி சொரசொரப்பாக இருந்தது. பொதுவாக, ஏழைகள்தான் அவற்றை உடுத்தினார்கள். ஆனால் பணக்காரர்கள், பட்டுத் துணியால் அல்லது நாரிழைத் துணியால் செய்யப்பட்ட விலை உயர்ந்த உடைகளை உடுத்தினார்கள். (மத் 11:7-9) பிறந்ததிலிருந்தே யோவான் ஒரு நசரேயராக இருந்ததால், ஒருவேளை தன்னுடைய தலைமுடியை வெட்டியிருக்கவே மாட்டார். அவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததையும்... கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்ததையும்... அவருடைய உடையும் தோற்றமும் பளிச்சென்று காட்டியிருக்கும்.
வெட்டுக்கிளிகள்
பைபிளில் இந்த வார்த்தை, சின்னக் கொம்புகளைக் கொண்ட எல்லா வகையான வெட்டுக்கிளிகளையும் குறிக்கிறது. முக்கியமாக, ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கூட்டம் கூட்டமாகப் பறந்து போகிற வெட்டுக்கிளிகளைக் குறிக்கிறது. பாலைவன வெட்டுக்கிளிகளின் உடல் 75 சதவீதம் புரதச்சத்தினால் நிறைந்திருக்கிறது என எருசலேமில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. இன்று மத்தியக் கிழக்கு நாடுகளில் அவற்றைச் சாப்பிடுகிறவர்கள், அவற்றின் தலையையும் கால்களையும் சிறகுகளையும் அடிவயிற்றுப் பகுதியையும் நீக்கிவிடுகிறார்கள். மிச்சமுள்ள பகுதியை அப்படியே பச்சையாகவோ சமைத்தோ அவர்கள் சாப்பிடுகிறார்கள். இவற்றின் சுவை கூன் இறால் போலவோ, நண்டு போலவோ இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பூச்சிகள் புரதச்சத்து நிறைந்தவை.
காட்டுத் தேன்
காட்டுத் தேனீக்கள் கட்டுகிற ஒரு கூட்டின் படமும் (1), தேன் நிறைந்த ஒரு கூட்டின் படமும் (2) பயிற்சி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. யோவான் சாப்பிட்ட தேன், அந்தப் பகுதியில் வாழும் ஒரு வகையான காட்டுத் தேனீயின் (ஆப்பிஸ் மெல்லிஃபெரா சிரியாக்கா) கூட்டிலிருந்து கிடைத்திருக்கலாம். யூதேயா வனாந்தரத்தின் வெப்பமான, வறண்ட சீதோஷ்ண நிலையை நன்றாகத் தாக்குப்பிடிக்கின்றன. ஆனால், இவை ஆக்ரோஷமாகத் தாக்கும் என்பதால் இவற்றை மனிதர்களால் வளர்க்க முடியாது. இருந்தாலும், இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள் ரொம்பக் காலத்துக்கு முன்பே, அதாவது கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, களிமண் உருளைகளில் தேனீக்களை வளர்த்தார்கள். இப்படிப்பட்ட நிறைய தேன்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு நகர்ப்புறப் பகுதியின் (இன்று டெல் ரெஹோவ் என்று அழைக்கப்படும் பகுதியின்) நடுவிலிருந்து அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுகளில் இருந்த தேன், இன்றைய துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகை தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 1:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
தாமாருக்கும்: தாமார் என்பவள் மேசியாவின் வம்சாவளியைப் பற்றிய மத்தேயுவின் பதிவில் வரும் ஐந்து பெண்களில் முதல் பெண். மற்ற நான்கு பெண்கள்: இஸ்ரவேலர் அல்லாத மற்ற தேசத்துப் பெண்களான ராகாப் மற்றும் ரூத் (வச. 5); ‘உரியாவின் மனைவியான’ பத்சேபாள் (வச. 6); மரியாள் (வச. 16). இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் மூதாதையாக ஆனதில் ஒரு விசேஷம் இருக்கிறது; அதனால்தான், ஆண்களுடைய பெயர்களையே பெரும்பாலும் குறிப்பிடும் இந்த வம்சாவளிப் பட்டியலில் இவர்களுடைய பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
மத் 3:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஞானஸ்நானம் கொடுக்கிறேன்: வே.வா., “அமிழ்த்தியெடுக்கிறேன்.” கிரேக்கில், பாப்டைசோ. இதன் அர்த்தம், “முக்கியெடுப்பது.” ஞானஸ்நானம் என்பது தண்ணீரில் முழுமையாக முக்கியெடுக்கப்படுவதைக் குறிக்கிறது என்பதை மற்ற பைபிள் வசனங்கள் காட்டுகின்றன. ஒரு சந்தர்ப்பத்தில், யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்த சாலிமுக்குப் பக்கத்தில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்; “ஏனென்றால், அங்கே நிறைய தண்ணீர் இருந்தது.” (யோவா 3:23) எத்தியோப்பிய அதிகாரிக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்தபோது, இரண்டு பேரும் “தண்ணீருக்குள் இறங்கினார்கள்.” (அப் 8:38) இதே கிரேக்க வார்த்தையைத்தான் 2ரா 5:14-ல் செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது; நாகமான் ‘யோர்தான் ஆற்றில் ஏழு தடவை முங்கியெழுந்ததை’ பற்றி அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
ஜனவரி 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 4–5
“இயேசுவின் மலைப்பிரசங்கம் சொல்லித்தரும் பாடங்கள்”
மத் 5:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்: வே.வா., “தங்களுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்தவர்கள்.” “உணர்ந்தவர்கள்” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “ஏழைகள் (தேவையில் இருப்பவர்கள்; வறுமையில் இருப்பவர்கள்; பிச்சை கேட்கிறவர்கள்).” இந்த வசனத்தில், ஏதோவொரு தேவையில் இருப்பவர்களை, அதுவும் அதை நன்றாக உணர்ந்தவர்களை, குறிப்பதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே வார்த்தைதான் லூ 16:20, 22-ல் “பிச்சைக்காரன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில மொழிபெயர்ப்புகளில், “ஆவியில் எளிமையுள்ளவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றுக்கான கிரேக்க வார்த்தைகள், ஆன்மீக விதத்தில் தாங்கள் வறுமையில் இருப்பதையும், கடவுளுடைய வழிநடத்துதல் தங்களுக்குத் தேவை என்பதையும் நன்றாக உணர்ந்தவர்களைக் குறிக்கிறது.
சந்தோஷமானவர்கள்: ‘சந்தோஷம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, குஷியாகவும் ஜாலியாகவும் இருப்பதை மட்டுமே குறிப்பதில்லை. இந்த வார்த்தை மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும்போது, கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் கருணையையும் பெற்றவர்களுடைய மனநிலையைக் குறிக்கிறது. இந்த வார்த்தை கடவுளையும், பரலோக மகிமையைப் பெற்றிருக்கும் இயேசுவையும் விவரிப்பதற்குக்கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.—1தீ 1:11; 6:15.
மத் 5:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
இரக்கம் காட்டுகிறவர்கள்: “இரக்கம் காட்டுகிறவர்கள்” என்றும் “இரக்கம்” என்றும் மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தைகள், மன்னிப்பதையோ தீர்ப்பின் கடுமையைக் குறைப்பதையோ மட்டும் குறிப்பதில்லை. அது பெரும்பாலும், தேவையில் இருப்பவருக்கு வலியப்போய் உதவி செய்யும்படி ஒருவரைத் தூண்டுகிற கரிசனையையும் பரிதாப உணர்ச்சியையும் குறிக்கிறது.
மத் 5:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சமாதானம் பண்ணுகிறவர்கள்: இவர்கள் சமாதானத்தைக் கட்டிக்காப்பவர்களாக மட்டுமல்லாமல், சமாதானம் இல்லாதபோது அதை உருவாக்குகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
w07 12⁄1 17
சமாதானமாய்ப் பழக பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
“சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடர” பிள்ளைகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டுமென்பதில் யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் பெற்றோர் மிகக் கவனமாய் இருக்கிறார்கள். (1 பேதுரு 3:11) சமரசம் செய்பவராய் இருப்பதில் கிடைக்கிற சந்தோஷத்தோடு ஒப்பிட, அவநம்பிக்கை, விரக்தி, பகைமை போன்ற உணர்வுகளை அடக்கியாள எடுக்கிற எந்த முயற்சியும் தகுந்ததுதான்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 4:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஒரேவொரு தடவை . . . என்னை வணங்கினால்: “வணங்குவதற்காக” என்ற அர்த்தமுள்ள கிரேக்க வினைச்சொல் இங்கே பொது இறந்தகாலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது கணநேரம் மட்டுமே நடக்கும் ஒரு செயலைக் குறிக்கிறது. ‘ஒரேவொரு தடவை வணங்கினால்’ என்று அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, இயேசு எப்போதுமே தன்னை வணங்க வேண்டுமென்று பிசாசு கேட்காததைக் காட்டுகிறது; ஒரேவொரு தடவைதான் தன்னை ‘வணங்கும்படி’ அவன் இயேசுவைக் கேட்டான்.
மத் 4:23-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கற்பித்தார் . . . பிரசங்கித்தார்: பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், கற்பிப்பவர் ஒரு விஷயத்தை அறிவிப்பது மட்டுமல்லாமல் அறிவுரையும் சொல்கிறார், விளக்குகிறார், பக்குவமாக எடுத்துச் சொல்கிறார், அத்தாட்சி அளிக்கிறார்.
ஜனவரி 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 6–7
“கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்”
ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
12 நம்முடைய ஜெபங்களில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? யெகோவாவுக்கும் அவருடைய விருப்பத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அவர் நமக்குச் செய்திருக்கிற எல்லாவற்றுக்காகவும் நாம் அவருக்கு இதயப்பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும். (1 நாளாகமம் 29:10-13) இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது தன் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்த ஜெபத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம். (மத்தேயு 6:9-13-ஐ வாசியுங்கள்.) முதலில், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டுமென்று ஜெபம் செய்யும்படி அவர் சொன்னார். பிறகு, கடவுளுடைய அரசாங்கம் வருவதற்காகவும் அவருடைய விருப்பம் பூமி முழுவதும் நிறைவேறுவதற்காகவும் ஜெபம் செய்யும்படி சொன்னார். இந்த மிக முக்கியமான விஷயங்களுக்காக ஜெபம் செய்த பிறகுதான், நம்முடைய சொந்த தேவைகளைப் பற்றி ஜெபம் செய்ய வேண்டுமென்று அவர் சொன்னார். நம்முடைய ஜெபங்களில் யெகோவாவுக்கும் அவருடைய விருப்பத்துக்கும் முதலிடம் கொடுக்கும்போது, நம் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதைக் காட்டுவோம்.
மத் 6:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
அடிமையாக இருக்க: இதற்கான கிரேக்க வினைச்சொல், அடிமையாக வேலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாக, ஒரு அடிமை ஒரே எஜமானுக்குத்தான் சொந்தமானவராக இருப்பார். ஒரு கிறிஸ்தவர் சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்துகொண்டு, அதேசமயத்தில் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய முழு பக்தியைச் செலுத்த முடியாது என்பதைத்தான் இயேசு இங்கே சொன்னார்.
மத் 6:33-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
எப்போதுமே . . . முதலிடம் கொடுங்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல் தொடர்ந்து நடக்கும் செயலைக் குறிக்கிறது; “தேடிக்கொண்டே இருங்கள்” என்றும் இதை மொழிபெயர்க்கலாம். இயேசுவின் உண்மையான சீஷர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குக் கொஞ்சக் காலம் மட்டும் முதலிடம் கொடுத்துவிட்டு, பிறகு மற்ற காரியங்களுக்குக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடக் கூடாது. தங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்குத்தான் அவர்கள் எப்போதுமே முக்கியத்துவம் தர வேண்டும்.
நீதிநெறிகளுக்கும்: கடவுளுடைய நீதிநெறிகளுக்கு முதலிடம் தருகிறவர்கள் அவருடைய விருப்பத்தை உடனடியாகச் செய்கிறார்கள்; கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்கிறார்கள். இயேசுவின் இந்தப் போதனை, பரிசேயர்களுடைய போதனைக்கு நேர்மாறாக இருந்தது. தங்களுடைய சொந்த நீதிநெறிகளைத்தான் அவர்கள் பின்பற்றினார்கள்.—மத் 5:20.
கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள், பொருளாசையை தவிர்த்திடுங்கள்
18 மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள். கடவுளுடைய அரசாங்கத்துக்கு நாம் முதலிடம் கொடுத்தால் நம் தேவைகளை எல்லாம் யெகோவா கவனித்துக்கொள்வார். இதை நாம் ஏன் உறுதியாக நம்பலாம் என்பதற்கான காரணத்தை இயேசு இப்படி விளக்கினார். “இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார்” என்று சொன்னார். நமக்கு என்ன தேவை என்று நாம் யோசிப்பதற்கு முன்பே யெகோவாவுக்கு தெரியும். (பிலி. 4:19) நம்மிடம் இருக்கும் எந்த துணி பழையதாகி போகும், என்ன உணவு நமக்கு தேவைப்படும், தங்குவதற்கு எப்படிப்பட்ட இடம் வேண்டும் என்பதையெல்லாம் அவர் தெரிந்துவைத்திருக்கிறார். நமக்கு என்ன தேவையோ அதை யெகோவா நிச்சயம் கொடுப்பார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஊழியத்தில் பொன்மொழியைப் பின்பற்றுங்கள்
14முன்பின் தெரியாத ஒருவர் உங்களுக்கு ஃபோன் செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமல், எடுத்த எடுப்பிலேயே உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப்பற்றிக் கேட்கிறார். ‘யாரு இவரு, இவருக்கு என்ன வேணும்’ என்று நீங்கள் யோசிப்பீர்கள். பேச்சை முடித்துக்கொள்ளவே விரும்புவீர்கள். ஆனால், அவர் தன்னுடைய பெயரைச் சொல்லிவிட்டு, ஊட்டச்சத்து துறையில் வேலை செய்வதாகவும், பயனுள்ள சில விஷயங்களைச் சொல்ல விரும்புவதாகவும் சொல்கிறார். அப்போது அவர் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பீர்கள். மற்றவர்கள் நம்மிடம் எதையும் மறைக்காமல், அதே சமயத்தில் கனிவோடு பேச வேண்டும் என்றுதான் நாம் எப்போதும் விரும்புவோம். ஊழியத்தில் சந்திப்பவர்களிடமும் இதே விதமாக எப்படிப் பேசலாம்?
15அநேக பிராந்தியங்களில், நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்வது அவசியம். மக்களுக்குத் தெரியாத முக்கியமான விஷயத்தை நாம் சொல்லப் போகிறோம். ஆனால், நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், “இந்த உலகத்தில இருக்கிற பிரச்சினையை உங்களால சரிசெய்ய முடிஞ்சா, எதை முதல்ல சரிசெய்வீங்க?” என்று திடீரென கேட்டால் அவர் என்ன நினைப்பார்? எதற்காக அந்தக் கேள்வியைக் கேட்கிறோம் என்பது நமக்குத் தெரியும். அந்த நபருடைய மனதிலிருப்பதை தெரிந்துகொள்வதற்கும், பைபிளிலிருந்து விளக்குவதற்குமே அப்படிக் கேட்கிறோம். ஆனால், ‘யாரு இவங்க, ஏன் என்கிட்ட இந்தக் கேள்விய கேட்குறாங்க? எதுக்கு இதெல்லாம் கேட்குறாங்க?’ என்று அவர் யோசிப்பார். அவரை இப்படித் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கக் கூடாது. (பிலி. 2:3, 4) அப்படியென்றால், நாம் என்ன செய்யலாம்?
16ஒரு பயணக் கண்காணிக்குப் பலனளித்த அணுகுமுறையைக் கவனியுங்கள். ஊழியத்தில் சந்திப்பவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை அவரிடம் கொடுத்து, இப்படிச் சொல்வார்: “இங்க இருக்கிற எல்லாருக்கும் இந்தத் துண்டுப்பிரதிய கொடுக்குறோம். நிறைய பேரோட மனதைக் குடைகிற ஆறு கேள்விகள் இதுல இருக்கு. இதுல இருக்கிற கேள்விகள நீங்க எப்போதாவது கேட்டிருக்கீங்களா?” இப்படி, நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டால், நாம் சந்திப்பவர் குழம்பிப்போக மாட்டார்; நம்மால் தொடர்ந்து பேச முடியும் என்று அவர் சொல்கிறார். அடுத்ததாக, அதிலுள்ள ஒரு கேள்வியை அந்த நபர் தேர்ந்தெடுத்தால், துண்டுப்பிரதியைத் திறந்து அதைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை விளக்குவார். இல்லையென்றால், அவரே அதில் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்து அதைப்பற்றி விளக்குவார். அந்த நபர் தர்மசங்கடமாக உணராதபடி பயணக் கண்காணி பார்த்துக்கொள்வார். இதேபோல், உரையாடலை ஆரம்பிக்க பல வழிகள் இருக்கின்றன. சில இடங்களில், நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொல்வதற்குமுன் மக்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ற விதமாக சில விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். எனவே, உங்களுடைய பிராந்தியத்திலிருக்கும் மக்களுக்குத் தகுந்த விதத்தில் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மத் 7:28, 29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
அவர் கற்பித்த விதத்தை: இந்த வார்த்தைகள், இயேசு எப்படிக் கற்பித்தார் என்பதை, அதாவது எந்த முறைகளைப் பயன்படுத்திக் கற்பித்தார் என்பதை, குறிக்கின்றன. அவர் கற்பித்த விஷயங்களையும்கூட, அதாவது மலைப் பிரசங்கத்தில் அவர் கொடுத்த எல்லா அறிவுரைகளையும்கூட, இந்த வார்த்தைகள் குறிக்கின்றன.
அசந்துபோனார்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல், “திணறிப்போகும் அளவுக்கு ஆச்சரியத்தில் மூழ்கிப்போவதை” குறிக்கலாம். இந்த வினைச்சொல் தொடர்நிகழ்காலத்தில் இருப்பதால், இயேசுவின் வார்த்தைகள் மக்கள்மேல் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காட்டுகிறது.
அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல்: வேத அறிஞர்கள் தாங்கள் அதிகாரப்பூர்வமாகப் பேசுவதைக் காட்டுவதற்கு, உயர்வாக மதிக்கப்பட்ட ரபீக்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இயேசு, யெகோவாவின் பிரதிநிதியாகப் பேசினார். அதிகாரம் பெற்றவராக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்பித்தார்.—யோவா 7:16.
ஜனவரி 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 8–9
“இயேசு மக்களை நேசித்தார்”
மத் 8:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
அவனைத் தொட்டு: தொழுநோய் மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பதற்காகத் தொழுநோயாளிகளை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று திருச்சட்டம் சொன்னது. (லேவி 13:45, 46; எண் 5:1-4) ஆனால், யூத மதத் தலைவர்கள் இன்னும் நிறைய சட்டங்களைப் போட்டார்கள். உதாரணத்துக்கு, எல்லாரும் தொழுநோயாளியைவிட்டு நான்கு முழ தூரத்துக்கு, அதாவது கிட்டத்தட்ட 1.8 மீ. (6 அடி) தூரத்துக்கு, தள்ளியே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுவும் காற்று அதிகமாக வீசிய நாட்களில், 100 முழ தூரத்துக்கு, அதாவது கிட்டத்தட்ட 45 மீ. (150 அடி) தூரத்துக்கு, தள்ளியே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட சட்டங்களால் தொழுநோயாளிகள் ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்டார்கள். தொழுநோயாளிகளிடமிருந்து ஒளிந்துகொண்ட ஒரு ரபீயையும், அவர்களைப் பக்கத்தில் வரவிடாமல் இருப்பதற்காக அவர்கள்மேல் கற்களை எறிந்த இன்னொரு ரபீயையும் யூதப் பாரம்பரியம் பாராட்டிப் பேசுகிறது. இயேசு அவர்களுக்கு நேர்மாறாக இருந்தார். அந்தத் தொழுநோயாளியின் நிலைமையைப் பார்த்து மனம் உருகினார். மற்ற யூதர்களால் நினைத்தே பார்க்க முடியாத ஒன்றைச் செய்தார்—அந்தத் தொழுநோயாளியைத் தொட்டார்! இயேசு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்கூட அந்தத் தொழுநோயாளி குணமாகியிருப்பார்; ஆனாலும், இயேசு அவரைத் தொட்டுக் குணப்படுத்தினார்.—மத் 8:5-12.
எனக்கு விருப்பம் இருக்கிறது: இயேசு அந்தத் தொழுநோயாளியின் விருப்பத்தைக் கேட்டது மட்டுமல்லாமல், அதை நிறைவேற்ற மிகவும் விரும்புவதாகவும் சொன்னார். இப்படி, அவர் வெறும் கடமைக்காக உதவி செய்யவில்லை என்பதைக் காட்டினார்.
மத் 9:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது: வே.வா., “மேஜைமேல் சாய்ந்து உட்கார்ந்திருந்தபோது.” ஒருவரோடு மேஜைமேல் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது நெருக்கமான நட்புக்கு அடையாளமாக இருந்தது. அதனால், இயேசுவின் காலத்தில் இருந்த யூதர்கள் மற்ற மக்களோடு அப்படி உட்கார்ந்து சாப்பிட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை.
வரி வசூலிப்பவர்கள்: நிறைய யூதர்கள் ரோம அதிகாரிகளுக்காக வரி வசூலித்தார்கள். மக்களுக்கு அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஏனென்றால், தாங்கள் வெறுக்கிற வேறொரு நாட்டுக்கு அவர்கள் துணைபோனதோடு, சட்டப்படி வசூலிக்க வேண்டிய தொகையைவிட அதிகமாக வசூலித்தார்கள். வரி வசூலித்த யூதர்களிடமிருந்து மற்ற யூதர்கள் பொதுவாக ஒதுங்கியே இருந்தார்கள். அவர்களைப் பாவிகள் போலவும் விலைமகள்கள் போலவும் பார்த்தார்கள்.—மத் 11:19; 21:32.
மத் 9:36-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
அவருடைய மனம் உருகியது: இதற்கான கிரேக்க வினைச்சொல், ஸ்ப்ளாக்னீசோமே. இது “குடல்கள்” (ஸ்ப்ளாக்னா) என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து, அதுவும் அடிஆழத்திலிருந்து, பெருக்கெடுக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில், கரிசனையைக் குறிக்கும் வார்த்தைகளிலேயே மிகவும் வலிமையான வார்த்தை இது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்’
16அதைப் போலவே, புறமதத்தானாக இருந்திருக்கும் ரோம நூற்றுக்கு அதிபதி ஒருவன் வியாதியாயிருந்த தன் வேலைக்காரனை சுகப்படுத்தும்படி இயேசுவிடம் கேட்டபோது அவனிடம் குறைகள் இருந்ததை இயேசு அறிந்திருந்தார். அக்காலத்திய நூற்றுக்கு அதிபதியின் வாழ்க்கை வன்முறையும், இரத்தம் சிந்துதலும், பொய் வணக்கமும் நிறைந்ததாய் இருந்திருக்கும். எனினும் விசுவாசம் என்ற அந்த மனிதனின் தலைசிறந்த குணத்திற்கு இயேசு கவனம் செலுத்தினார். (மத்தேயு 8:5-13) பிறகு, கழுமரத்தில் தமக்கு அருகில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளியிடம் பேசுகையிலும் குற்றங்கள் நிறைந்த அவனுடைய கடந்த கால வாழ்க்கைக்காக அவனை கண்டிக்காமல் எதிர்கால நம்பிக்கை அளித்து அவனை உற்சாகப்படுத்தினார். (லூக்கா 23:43) மற்றவர்களைப் பற்றிய சாதகமற்ற, குறைகாண்கிற மனப்பான்மை அவர்களை மேலும் சோர்வுற செய்யும் என்பதை இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். மற்றவர்களிடம் உள்ள நல்லதை காண அவர் முயற்சி செய்தது முன்னேற்றம் செய்ய அநேகரை தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இயேசுவின் சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?
சம்பிரதாயமாக விரதம் இருப்பது போன்ற பழைய யூத மத பழக்கவழக்கங்களை இயேசுவின் சீஷர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது; இந்த விஷயத்தை யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு இந்த உதாரணங்களைச் சொல்கிறார். பழைய, நைந்துபோன வழிபாட்டு முறையில் ஒட்டுப்போட்டு, அதை இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்க வைப்பதற்காக இயேசு வரவில்லை. சீக்கிரத்திலேயே, அந்த வழிபாட்டு முறை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித்தள்ளப்படும். மனித பாரம்பரியங்களைக் கொண்ட யூத மதத்தைப் பின்பற்றும்படி இயேசு சொல்லவில்லை. பழைய உடையில் புதிய துணியை வைத்து ஒட்டுப்போடவோ, விறைப்பாக இருக்கிற பழைய தோல் பையில் புதிய திராட்சமதுவை ஊற்றிவைக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை.
ஜனவரி 29–பிப்ரவரி 4
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 10–11
“இயேசு புத்துணர்ச்சி தந்தார்”
மத் 10:29, 30-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு: நே.மொ., “அசாரியன் காசுக்கு.” இது 45 நிமிட வேலைக்கு கொடுக்கப்பட்ட கூலி. (இணைப்பு B14-ஐப் பாருங்கள்.) இயேசு மூன்றாவது தடவையாக கலிலேயாவில் ஊழியம் செய்த இந்தச் சமயத்தில், ஒரு அசாரியன் காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டதாகச் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு அவர் யூதேயாவில் ஊழியம் செய்த சமயத்தில், இரண்டு அசாரியன் காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டதாகச் சொன்னார். (லூ 12:6) இந்த இரண்டு பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிட்டுக்குருவிகளை வியாபாரிகள் எந்தளவுக்குக் குறைவாக மதிப்பிட்டார்கள் என்று தெரிகிறது; ஐந்தாவது சிட்டுக்குருவியை அவர்கள் இலவசமாகவே கொடுத்துவிட்டார்கள்.
சிட்டுக்குருவிகளை: கிரேக்கில், ஸ்ட்ரௌத்தியான் என்ற வார்த்தை குறுமை வடிவத்தில் இருக்கிறது; அப்படியென்றால், அது எந்தவொரு சின்னஞ்சிறு பறவையையும் குறித்திருக்கலாம். ஆனாலும், அது பெரும்பாலும் சிட்டுக்குருவிகளைக் குறித்தது. உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளிலேயே அவைதான் விலை குறைவாக இருந்தன.
உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது: மனிதர்களுடைய தலையில் சராசரியாக 1,00,000-க்கும் அதிகமான முடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நுணுக்கமான விவரங்களைக்கூட யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருப்பது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவர் மீதும் அவர் காட்டுகிற அளவுகடந்த அக்கறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
nwtsty மீடியா
சிட்டுக்குருவி
உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளிலேயே சிட்டுக்குருவிகள்தான் விலை குறைவாக இருந்தன. 45 நிமிட வேலைக்குக் கிடைத்த கூலியை வைத்து இரண்டு சிட்டுக்குருவிகளை வாங்க முடிந்தது. இதற்கான கிரேக்க வார்த்தை, பல வகையான சின்னஞ்சிறு பறவைகளைக் குறிக்கலாம். இன்றும் இஸ்ரவேலில் அதிகமாகக் காணப்படும் சாதாரண வீட்டுச் சிட்டுக்குருவியையும் (பாஸர் டொமெஸ்ட்டிகஸ் பிப்ளிகஸ்), ஸ்பானிஷ் குருவியையும்கூட (பாஸர் ஹிஸ்பானியோலென்சிஸ்) அந்த வார்த்தை குறிக்கலாம்.
மத் 11:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே: ‘பாரமான சுமை சுமந்தவர்களை,’ அதாவது கவலையால் துவண்டுபோயிருந்த அல்லது உழைத்துக் களைத்துப்போயிருந்த ஆட்களை, தன்னிடம் வரும்படி இயேசு அழைத்தார். மதத் தலைவர்கள் திருச்சட்டத்தோடு நிறைய பாரம்பரியங்களைச் சேர்த்திருந்ததால், யெகோவாவின் வணக்கம் மக்களுக்குப் பாரமாக ஆகியிருந்தது. (மத் 23:4) புத்துணர்ச்சி தர வேண்டியிருந்த ஓய்வுநாளும்கூட பாரமாக ஆகியிருந்தது.—யாத் 23:12; மாற் 2:23-28; லூ 6:1-11.
நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்: “புத்துணர்ச்சி” என்பதற்கான கிரேக்க வார்த்தை ஓய்வெடுப்பதையும் குறிக்கலாம் (மத் 26:45; மாற் 6:31), களைப்பு நீங்கி புதுத்தெம்பு பெறுவதையும் குறிக்கலாம் (2கொ 7:13; பிலே 7). இந்த வசனத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, இயேசுவின் “நுகத்தடியை” (மத் 11:29) ஏற்றுக்கொள்வது ஓய்வெடுப்பதை அல்ல, சேவை செய்வதைக் குறிக்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வினைச்சொல் செய்வினை வடிவத்தில் இருப்பதால், இயேசுவே புத்துணர்ச்சி கொடுப்பதைச் சுட்டிக்காட்டுகிறது; சோர்ந்துபோனவர்கள் தன்னுடைய மென்மையான, லேசான நுகத்தடியை விரும்பி ஏற்றுக்கொள்வதற்காக அவர்களுக்குப் புதுத்தெம்பையும் பலத்தையும் அவர் அளிப்பதைக் குறிக்கிறது.
மத் 11:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு: அதிகாரத்துக்கும் அறிவுரைக்கும் அடிபணிவதைக் குறிப்பதற்காக “நுகத்தடி” என்ற வார்த்தையை இயேசு அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். இரட்டை நுகத்தடியைப் பற்றி இயேசு இங்கே சொல்லியிருந்தால், கடவுள் தன்மேல் வைத்த நுகத்தடியைத் தன்னோடு சேர்ந்து சுமக்கும்படி தன் சீஷர்களை அழைக்கிறார் என்றும், அதைச் சுமக்க அவர்களுக்கு அவர் உதவுவார் என்றும் அர்த்தம். இந்த அர்த்தத்தின்படி, “என்னோடு சேர்ந்து என் நுகத்தடியின் கீழ் வாருங்கள்” என்றும் இந்த வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம். ஒருவேளை, மற்றவர்கள்மேல் தான் வைக்கும் நுகத்தடியைப் பற்றி அவர் சொல்லியிருந்தால், தன் சீஷராகத் தன்னுடைய அதிகாரத்துக்கும் அறிவுரைக்கும் அடிபணிய வேண்டும் என்று அவர் அர்த்தப்படுத்தியிருப்பார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இயேசுவைப் பற்றி யோவான் விசாரிக்கிறார்
யோவான் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? யோவான் கடவுள்பக்தி உள்ளவர். இரண்டு வருஷங்களுக்கு முன்னால், இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது கடவுளுடைய சக்தி அவர்மேல் இறங்குவதை யோவான் நேரில் பார்த்திருந்தார்; இயேசுவை ஏற்றுக்கொள்வதாகக் கடவுள் சொன்னதைக் கேட்டிருந்தார். ஆனால், இப்போது யோவானுக்கு விசுவாசம் குறைந்துவிட்டது என்று நாம் தவறாக நினைத்துவிடக் கூடாது. அப்படியிருந்தால், யோவானைப் பற்றி இயேசு பெருமையாகப் பேசியிருக்க மாட்டாரே! சரி, யோவானுக்கு எந்தச் சந்தேகமும் இல்லையென்றால், இயேசுவைப் பற்றி ஏன் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்?
இயேசுதான் மேசியா என்பதை அவர் வாயிலிருந்தே கேட்க வேண்டும் என்று யோவான் நினைத்திருக்கலாம். சிறையில் வாடுகிற யோவானுக்கு இந்தச் செய்தி பலத்தைத் தரும். அநேகமாக, யோவான் அந்தக் கேள்வியைக் கேட்டதற்கு வேறு காரணமும் இருந்திருக்கலாம். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு ராஜாவாக இருப்பார், மக்களை விடுதலை செய்வார் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இயேசு ஞானஸ்நானம் எடுத்து இத்தனை மாதங்கள் ஆகியும் யோவான் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அதனால், ‘இயேசுவுக்கு அடுத்தபடியாக வேறொரு மேசியா வருவாரா? மேசியா என்னவெல்லாம் செய்வார் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அவர்தான் நிறைவேற்றி முடிப்பாரா?’ என்று தெரிந்துகொள்ளத்தான் யோவான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.
திருந்தாத தலைமுறைக்குக் கேடு
யோவான் ஸ்நானகர்மேல் இயேசு ரொம்ப மரியாதை வைத்திருக்கிறார். ஆனால், பெரும்பாலான மக்கள் யோவானைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதிலை இயேசு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். “இந்தத் தலைமுறையை . . . சந்தையில் உட்கார்ந்திருக்கிற பிள்ளைகளுக்கு ஒப்பிடுவேன்; அவர்கள் தங்களோடு விளையாடுகிற பிள்ளைகளைப் பார்த்து, ‘உங்களுக்காகக் குழல் ஊதினோம், ஆனால் நீங்கள் நடனம் ஆடவில்லை; புலம்பி அழுதோம், ஆனால் நீங்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழவில்லை’ என்று சொல்கிறார்கள்” என்கிறார்.—மத்தேயு 11:16, 17.
இதற்கு என்ன அர்த்தம்? “யோவான் சாப்பிடவும் இல்லை, குடிக்கவும் இல்லை; ஆனாலும், அவருக்கு ‘பேய் பிடித்திருக்கிறது’ என்று மக்கள் சொல்கிறார்கள்; மனிதகுமாரனோ சாப்பிடுகிறார், குடிக்கிறார்; இருந்தாலும் மக்கள் அவரை, ‘பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறார்கள்” என இயேசு விளக்குகிறார். (மத்தேயு 11:18, 19) யோவான் ஒரு நசரேயராக, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் திராட்சமதுகூட குடிக்கவில்லை. ஆனால், அவருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். (எண்ணாகமம் 6:2, 3; லூக்கா 1:15) இயேசு எல்லாரையும்போல் வாழ்கிறார். அளவாகச் சாப்பிடுகிறார், குடிக்கிறார். ஆனால், அவர் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதாகவும் குடிப்பதாகவும் மக்கள் குறை சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, மக்களைத் திருப்திப்படுத்தவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.