‘புறப்பட்டுப் போய் சீஷராக்கி, முழுக்காட்டுதல் கொடுங்கள்’
“நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து [அதாவது, முழுக்காட்டுதல் கொடுத்து], நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
1. சீனாய் மலை அடிவாரத்தில் கூடிவந்திருந்த இஸ்ரவேலர் என்ன செய்ய உறுதி பூண்டார்கள்?
சுமார் 3,500 வருடங்களுக்கு முன், இஸ்ரவேல் தேசத்தார் அனைவருமாக கடவுளிடம் ஒரு பொருத்தனை செய்தார்கள். சீனாய் மலை அடிவாரத்தில் கூடிவந்திருந்த அவர்கள், ‘யெகோவா சொன்ன எல்லாவற்றையும் செய்ய மனதாயிருக்கிறோம்’ என பகிரங்கமாக அறிவித்தார்கள். அவர்கள், அந்தச் சமயத்திலிருந்து கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஜனமாக, அவருடைய ‘விசேஷ சொத்தாக’ ஆனார்கள். (யாத்திராகமம் 19:5, 8, NW; 24:3) அவருடைய பாதுகாப்புடன், “பாலும் தேனும் ஓடுகிற” ஒரு தேசத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ ஆவலோடு காத்திருந்தார்கள்.—லேவியராகமம் 20:24.
2. கடவுளுடன் ஜனங்கள் இன்று எத்தகைய உறவை அனுபவிக்கலாம்?
2 ஆனால் பிற்பாடு அந்த இஸ்ரவேலர், “தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்” போனார்கள் என்று சங்கீதக்காரனான ஆசாப் ஒப்புக்கொண்டார். (சங்கீதம் 78:10) தங்கள் முற்பிதாக்கள் யெகோவாவிடம் செய்த பொருத்தனைக்கு இசைவாக நடந்துகொள்ள அந்த இஸ்ரவேலர் தவறினார்கள். கடைசியில், கடவுளுடன் இருந்த விசேஷ உறவையே இழந்துபோனார்கள். (பிரசங்கி 5:4; மத்தேயு 23:37, 38) அதனால் கடவுள், ‘புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொண்டார்.’ (அப்போஸ்தலர் 15:14) இந்தக் கடைசி நாட்களில், ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்களை’ அவர் கூட்டிச்சேர்த்து வருகிறார்; அவர்கள் சந்தோஷமாக இவ்வாறு சொல்கிறார்கள்: “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக.”—வெளிப்படுத்துதல் 7:9, 10.
3. கடவுளோடு தனிப்பட்ட உறவை அனுபவிப்பதற்கு ஒருவர் என்ன படிகளை எடுக்க வேண்டும்?
3 கடவுளோடு அந்த விசேஷ உறவை அனுபவிக்கும் ஜனங்களில் ஒருவராய் இருக்க எவராவது விரும்பினால், அவர் யெகோவாவுக்குத் தன்னையே ஒப்புக்கொடுக்க வேண்டும், பிறகு தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் யாவரறிய அதை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும். இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த பின்வரும் நேரடியான கட்டளைக்குக் கீழ்ப்படிவதை அது குறிக்கிறது: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து [அதாவது, முழுக்காட்டுதல் கொடுத்து], நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) அன்று, ‘உடன்படிக்கையின் புஸ்தகம்’ வாசிக்கப்பட்டபோது இஸ்ரவேலர் கவனித்துக் கேட்டார்கள். (யாத்திராகமம் 24:3, 7, 8) அதன் காரணமாக, யெகோவாவுக்குத் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் புரிந்துகொண்டார்கள். அதேபோல் இன்று, பைபிளில் உள்ள கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்ட பின்னரே ஒருவர் முழுக்காட்டுதல் என்ற படியை எடுக்க வேண்டும்.
4. முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்? (மேலே உள்ள பெட்டியைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.)
4 தம் சீஷர்கள் விசுவாசத்தில் நன்கு வேரூன்றிய பிறகே முழுக்காட்டப்பட வேண்டுமென இயேசு விரும்பியது இதிலிருந்து தெளிவாகிறது. புறப்பட்டுப் போய், சீஷராக்கும்படி மட்டுமே தம்மைப் பின்பற்றியவர்களிடம் அவர் சொல்லவில்லை, ‘தாம் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளுமாறு’ அவர்களுக்கு உபதேசம் பண்ணும்படியும் சொன்னார். (மத்தேயு 7:24, 25; எபேசியர் 3:17-19) எனவே, முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெறுகிறவர்கள் பொதுவாக பைபிளை சில மாதங்களுக்கு, ஏன் ஓரிரு வருடங்களுக்கும்கூட படிக்கிறார்கள்; அப்போதுதான் அவர்களுடைய தீர்மானம் அவசரப்பட்டு எடுக்கப்பட்டதாகவோ அரைகுறையாகத் தெரிந்துகொண்டு எடுக்கப்பட்டதாகவோ இருக்காது. முழுக்காட்டுதல் தினத்தன்றும், முக்கியமான இரண்டு கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று அவர்கள் பதில் அளிக்கிறார்கள். ‘ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் நாம் அர்த்தப்படுத்த வேண்டும்’ என்று இயேசு வலியுறுத்திச் சொன்னதால், முழுக்காட்டுதலின்போது கேட்கப்படும் முக்கியமான அந்த இரண்டு கேள்விகளை நாம் எல்லாருமே கவனமாக மீண்டும் சிந்தித்துப் பார்ப்பது நமக்கு உதவியாய் இருக்கும்.—மத்தேயு 5:37, NW.
மனந்திரும்புதலும் ஒப்புக்கொடுத்தலும்
5. முழுக்காட்டுதலுக்கான முதல் கேள்வி என்ன முக்கியமான இரண்டு படிகளை வலியுறுத்திக் காண்பிக்கிறது?
5 முழுக்காட்டுதல் பெறப்போகிறவரிடம் முதல் கேள்வி இவ்வாறு கேட்கப்படுகிறது: ‘உங்கள் முன்னாள் வாழ்க்கை முறையைவிட்டு மனந்திரும்பி, யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி உங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா?’ இந்தக் கேள்வி, முழுக்காட்டுதலுக்கு முன் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான இரண்டு படிகளை வலியுறுத்திக் காண்பிக்கிறது; ஒன்று மனந்திரும்புதல், மற்றொன்று ஒப்புக்கொடுத்தல்.
6, 7. (அ) முழுக்காட்டுதல் பெறப்போகும் அனைவரும் மனந்திரும்புவது ஏன் அவசியம்? (ஆ) மனந்திரும்பிய பிறகு, ஒருவர் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?
6 முழுக்காட்டப்படுவதற்கு முன் ஒரு நபர் ஏன் மனந்திரும்ப வேண்டும்? ‘நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்தோம்’ என அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (எபேசியர் 2:3) கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவதற்கு முன்னர், இந்த உலகம் போகும் போக்கில் நாம் போய்க்கொண்டிருந்தோம்; அதன் கருத்துகள், தராதரங்கள் ஆகியவற்றிற்கு இசைய வாழ்ந்து வந்தோம். நம்முடைய வாழ்க்கை முறை இவ்வுலகத்தின் தேவனான சாத்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. (2 கொரிந்தியர் 4:4) ஆனால், கடவுளுடைய சித்தத்தைத் தெரிந்துகொண்ட பிறகு, ‘மனுஷருடைய இச்சைகளின்படி அல்லாமல், தேவனுடைய சித்தத்தின்படி’ வாழ உறுதிபூண்டிருக்கிறோம்.—1 பேதுரு 4:2.
7 இந்தப் புதிய வாழ்க்கை முறை ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. முக்கியமாக, யெகோவாவோடு அருமையான உறவை அனுபவிக்க வழிசெய்கிறது; அந்த உறவை, கடவுளுடைய ‘கூடாரத்திலும்,’ ‘பரிசுத்த பர்வதத்திலும்’ நுழைவதற்கான அழைப்போடு தாவீது ஒப்பிட்டுப் பேசினார்—உண்மையிலேயே அது மாபெரும் பாக்கியம்தான். (சங்கீதம் 15:1) ஆனால், கண்டவர்களுக்கெல்லாம் யெகோவா அழைப்பு விடுக்க மாட்டார்; ‘உத்தமமாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிற’ நபர்களுக்கு மட்டுமே அவர் அழைப்பு விடுப்பார். (சங்கீதம் 15:2) சத்தியத்தைப் படிப்பதற்கு முன்னிருந்த நம்முடைய பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக, நடத்தையிலும் சரி, சுபாவத்திலும் சரி, அந்த வசனத்திற்கிசைய குறிப்பிட்ட மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். (1 கொரிந்தியர் 6:9-11; கொலோசெயர் 3:5-10) அத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு நம்மைத் தூண்டுவது மனந்திரும்புதல் ஆகும்; அதாவது, நம்முடைய முன்னாள் வாழ்க்கை முறையைக் குறித்து மனதார வருந்துவதும், யெகோவாவைப் பிரியப்படுத்த உறுதியாகத் தீர்மானமெடுப்பதும் ஆகும். இது முற்றுமுழுமையான மாற்றங்களைச் செய்ய வழிவகுக்கிறது, அதாவது, உலகத்தின் சுயநலப் போக்கை விட்டுவிட்டு, எப்போதும் கடவுளுக்குப் பிடித்தமான விதத்தில் வாழ வழிவகுக்கிறது.—அப்போஸ்தலர் 3:19, 20.
8. கடவுளுக்கு எவ்வாறு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம், ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது?
8 முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்களுக்கான முதல் கேள்வியின் பிற்பகுதி, ‘யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி உங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா?’ என்று கேட்கிறது. ஒப்புக்கொடுத்தல் என்பது முழுக்காட்டுதலுக்கு முன் எடுக்கப்பட வேண்டிய ஒரு முக்கியப் படியாகும். கிறிஸ்து மூலமாக யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க நாம் மனதார விரும்புகிறோம் என்பதை ஜெபத்தில் தெரியப்படுத்துவதே ஒப்புக்கொடுத்தலாகும். (ரோமர் 14:7, 8; 2 கொரிந்தியர் 5:15) அவ்வாறு நம்மை அர்ப்பணித்த பிறகு யெகோவா நம்முடைய எஜமானராகவும் உரிமையாளராகவும் ஆகிறார்; நாமும் இயேசுவைப் போல கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மனமகிழ்கிறோம். (சங்கீதம் 40:8; எபேசியர் 6:6) பயபக்தியுடன்கூடிய இந்தப் பொருத்தனை யெகோவாவிடம் ஒருதரம் மட்டுமே செய்யப்படுகிறது. என்றாலும், நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நாம் தனிப்பட்ட விதத்தில் செய்வதால், முழுக்காட்டுதல் தினத்தன்று அதை யாவர் முன்பாகவும் நம்மால் அறிவிக்க முடிகிறது.—ரோமர் 10:10.
9, 10. (அ) கடவுளுடைய சித்தத்தைச் செய்வது எதை உட்படுத்துகிறது? (ஆ) நாசி அதிகாரிகள்கூட நம்முடைய ஒப்புக்கொடுத்தலின் முக்கியத்துவத்தை எவ்வாறு புரிந்திருந்தார்கள்?
9 இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி கடவுளுடைய சித்தத்தைச் செய்வது எதை உட்படுத்துகிறது? இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, [“சொந்தம் கைவிட்டு,” NW] தன் சிலுவையை [“கழுமரத்தை,” NW] எடுத்துக்கொண்டு [“தொடர்ந்து,” NW] என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24) நாம் செய்ய வேண்டிய மூன்று காரியங்களை அவர் இங்கு குறிப்பிட்டார். முதலாவதாக, நம்மை நாமே ‘சொந்தம் கைவிட’ வேண்டும். வேறு விதத்தில் சொன்னால், நம்முடைய சுயநல, அபூரண மனச்சாய்வுகளுக்கு இடங்கொடுக்காதிருப்பதன் மூலம் ‘இல்லை’ என்றும், கடவுளுடைய ஆலோசனைகளுக்கும் வழிநடத்துதலுக்கும் கீழ்ப்படிவதன் மூலம் ‘ஆம்’ என்றும் சொல்ல வேண்டும். இரண்டாவதாக, நாம் ‘கழுமரத்தை எடுத்துக்கொள்ள’ வேண்டும். இயேசுவின் நாளில், கழுமரம் என்பது அவமானத்திற்கும் துன்பத்திற்கும் ஓர் அடையாளச் சின்னமாக இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நாம், நற்செய்தியின் நிமித்தம் துன்பங்களை அனுபவிப்போம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். (2 தீமோத்தேயு 1:8) இந்த உலகத்தின் ஏச்சுப்பேச்சுக்கும் பரிகாசத்துக்கும் ஆளானாலும், கிறிஸ்துவைப் போல, அதை ‘அவமானமாக எண்ணாமல்’ கடவுளைப் பிரியப்படுத்துகிறோம் என அறிந்து சந்தோஷப்பட வேண்டும். (எபிரெயர் 12:2) கடைசியாக, இயேசுவை நாம் ‘தொடர்ந்து பின்பற்ற’ வேண்டும்.—சங்கீதம் 73:26; 119:44; 145:2.
10 ஆர்வமூட்டும் விஷயம் என்னவென்றால், கடவுளுக்குச் சேவை செய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் நிபந்தனையின்றி தங்களை ஒப்புக்கொடுத்திருப்பதன் முக்கியத்துவத்தை சில எதிரிகளும்கூட புரிந்திருக்கிறார்கள். உதாரணமாக, நாசி ஜெர்மனியில் பூக்கன்வால்ட் சித்திரவதை முகாமில், தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மறுத்த யெகோவாவின் சாட்சிகள் ஒரு பேப்பரில் கையெழுத்திட வேண்டியிருந்தது; அதில், “நான் இன்னமும் பொறுப்பான ஒரு பைபிள் மாணாக்கர்; யெகோவாவிடம் செய்துகொண்ட உறுதிமொழியை மீறவே மாட்டேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த, உண்மையுள்ள ஊழியர்களது மனோபாவத்தை அவ்வார்த்தைகள் எவ்வளவு தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன!—அப்போஸ்தலர் 5:32.
ஒரு யெகோவாவின் சாட்சியாக அடையாளம் காட்டுதல்
11. முழுக்காட்டப்படும் ஒரு நபருக்கு என்ன பாக்கியம் கிடைக்கிறது?
11 முழுக்காட்டுதல் பெறப்போகிறவரிடம் கேட்கப்படும் இரண்டாவது கேள்வியின் முற்பகுதி இதுவே: ‘முழுக்காட்டப்படுவது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளம் காட்டும் என்பதைப் புரிந்திருக்கிறீர்களா?’ முழுக்காட்டுதலுக்குப் பின்னர், அந்நபர் யெகோவாவுடைய பெயரைத் தரித்திருக்கும் ஓர் ஊழியராகிறார். இது மாபெரும் ஒரு பாக்கியமாகும், அதேசமயம் முக்கியமான ஒரு பொறுப்பும்கூட. அதோடு, முழுக்காட்டப்பட்ட நபர் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்தால், அது அவரை நித்திய இரட்சிப்புக்கும்கூட வழிநடத்தும்.—மத்தேயு 24:13.
12. யெகோவாவின் பெயரைத் தரித்திருக்கும் கௌரவத்தோடுகூட, என்ன பொறுப்பும் நமக்கு வருகிறது?
12 நிச்சயமாகவே, சர்வவல்லமையுள்ள கடவுளான யெகோவாவின் பெயரைத் தரித்திருப்பது நமக்குக் கிடைத்துள்ள நிகரற்ற கெளரவமாகும். மீகா தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னார்: ‘சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’ (மீகா 4:5; NW) ஆனாலும் இந்தக் கௌரவத்தோடு, கூடவே ஒரு பொறுப்பும் நமக்கு வருகிறது. ஆம், நாம் தரித்துள்ள அந்தப் பெயருக்குப் புகழ்சேர்க்கும் விதத்தில் வாழ பிரயாசப்பட வேண்டும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என இருந்தால், ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் நினைப்பூட்டியதுபோல கடவுளுடைய பெயருக்குத்தான் ‘தூஷணம் உண்டாகும்,’ அதாவது அவப்பெயர் உண்டாகும்.—ரோமர் 2:21-24.
13. யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களாகிய நமக்கு அவரைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்கான பொறுப்பு ஏன் இருக்கிறது?
13 ஒரு நபர் யெகோவாவின் சாட்சியாக ஆகும்போது, கடவுளைப் பற்றி சாட்சி கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார். யெகோவா தமது நித்திய தேவத்துவத்திற்குச் சான்றளிப்பதற்காக, ஒப்புக்கொடுத்த தேசத்தாரான இஸ்ரவேலரைத் தம்முடைய சாட்சிகளாகத் தேர்ந்தெடுத்தார். (ஏசாயா 43:10-12, 21) ஆனால், அத்தேசத்தார் அந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறினார்கள்; இதனால் கடைசியில் யெகோவாவின் தயவை முற்றிலுமாக இழந்துபோனார்கள். இன்று, யெகோவாவைப் பற்றிச் சாட்சி கொடுக்க பாக்கியம் பெற்றிருப்பதைக் குறித்து மெய்க் கிறிஸ்தவர்களாகிய நாம் பெருமைப்படுகிறோம். யெகோவாவை நேசிப்பதாலும் அவருடைய பெயர் பரிசுத்தப்படுவதைக் காண ஆவலாய் இருப்பதாலுமே அவ்வாறு நாம் சாட்சி கொடுக்கிறோம். நம்முடைய பரலோகத் தந்தையையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய சத்தியத்தைத் தெரிந்துகொண்ட பிறகு, அதைப் பற்றி மற்றவர்களிடம் நம்மால் எப்படிச் சொல்லாதிருக்க முடியும்? “அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” என்று சொன்னபோது, அப்போஸ்தலன் பவுல் எப்படி உணர்ந்தாரோ அப்படியே நாமும் உணருகிறோம்.—1 கொரிந்தியர் 9:16.
14, 15. (அ) நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்தில் யெகோவாவின் அமைப்பு என்ன பங்கு வகிக்கிறது? (ஆ) ஆன்மீக ரீதியில் நமக்கு உதவ என்னென்ன ஏற்பாடுகள் இருக்கின்றன?
14 யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்படுகிற அமைப்போடு ஒத்துழைப்பதற்கான பொறுப்பு முழுக்காட்டுதல் பெறப்போகிறவருக்கு இருப்பதை இரண்டாவது கேள்வி நினைப்பூட்டுகிறது. ஆம், கடவுளுடைய சேவையை நாம் தனியாகச் செய்ய முடியாது, ‘முழு சகோதர கூட்டுறவின்’ உதவியும், ஆதரவும், ஊக்கமும் நமக்குத் தேவை. (1 பேதுரு 2:17, NW; 1 கொரிந்தியர் 12:12, 13) நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்தில் கடவுளுடைய அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. திருத்தமான அறிவை நாம் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கும், பிரச்சினைகளை எதிர்ப்படும்போது ஞானமாகச் செயல்படுவதற்கும், கடவுளோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதற்கும் அது ஏராளமான பைபிள் பிரசுரங்களை வெளியிடுகிறது. தன் பிள்ளைக்கு நல்ல உணவளித்து, கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்ளும் ஒரு தாயைப் போல, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பு நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்தை மனதில்வைத்து காலத்திற்கேற்ற ஆன்மீக உணவை அபரிமிதமாய் அளித்துவருகிறது.—மத்தேயு 24:45-47, NW; 1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
15 யெகோவாவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாய் இருப்பதற்குத் தேவையான பயிற்சியையும் ஊக்கத்தையும் வாராந்தர சபை கூட்டங்கள் நமக்கு அளிக்கின்றன. (எபிரெயர் 10:24, 25) தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஜனங்கள் முன்னிலையில் பேச நமக்குக் கற்பிக்கிறது; அதோடு ஊழியக் கூட்டம், நம்முடைய செய்தியைச் சிறப்பான விதத்தில் எடுத்துச் சொல்ல நமக்குப் பயிற்சியும் அளிக்கிறது. நம்முடைய கூட்டங்களின்போதும் சரி, பைபிள் பிரசுரங்களைத் தனிப்பட்ட விதத்தில் வாசிக்கும்போதும் சரி, யெகோவாவின் ஆவி செயல்படுவதையும், அவருடைய அமைப்பை அது வழிநடத்துவதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தவறாமல் நடைபெறும் இந்தக் கூட்டங்களின் மூலம் ஆபத்துகளைக் குறித்து கடவுள் நம்மை எச்சரிக்கிறார், திறம்பட்ட ஊழியர்களாக இருப்பதற்கு நம்மைப் பயிற்றுவிக்கிறார், அதுமட்டுமின்றி ஆன்மீக ரீதியில் விழிப்புள்ளவர்களாய் இருக்க நமக்கு உதவியும் செய்கிறார்.—சங்கீதம் 19:7, 8, 11; 1 தெசலோனிக்கேயர் 5:6, 11; 1 தீமோத்தேயு 4:13.
முழுக்காட்டுதல் பெற உந்துவிப்பு
16. யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்க எவை நம்மை உந்துவிக்கின்றன?
16 இவ்விதமாக, முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன் கேட்கப்படும் இரண்டு கேள்விகள் தண்ணீர் முழுக்காட்டுதலின் முக்கியத்துவத்தையும், அதனுடன் சம்பந்தப்பட்ட பொறுப்புகளையும் முழுக்காட்டுதல் பெறப்போகிறவருக்கு நினைவுபடுத்துகின்றன. அப்படியானால், முழுக்காட்டுதல் பெறுவதற்கான தீர்மானத்தை எடுக்க எது அவர்களை உந்துவிக்க வேண்டும்? யாரோ ஒருவர் நம்மை வற்புறுத்துவதால் அல்ல, ஆனால் யெகோவா நம்மை ‘இழுத்துக்கொள்வதாலேயே’ நாம் முழுக்காட்டுதல் பெற்ற சீஷர்களாக ஆகிறோம். (யோவான் 6:44) “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதால், அவர் இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டாயத்தினால் அல்ல, அன்பினால் ஆளுகிறார். (1 யோவான் 4:8) யெகோவாவுடைய அன்பான குணங்களையும், அவர் நம்மை வழிநடத்துகிற விதத்தையும் கண்டு நாம் அவரிடமாகக் கவர்ந்திழுக்கப்படுகிறோம். அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனை நமக்காக அளித்திருக்கிறார், ஒளிமயமான எதிர்காலத்தையும் அளிக்கப்போகிறார். (யோவான் 3:16) இதனால், நம்முடைய வாழ்க்கையையே அவருக்கு அளிக்க—அவருக்கு அர்ப்பணிக்க—நாம் உந்துவிக்கப்படுகிறோம்.—நீதிமொழிகள் 3:9; 2 கொரிந்தியர் 5:14, 15.
17. நாம் எதற்காக நம்மை அர்ப்பணிக்கவில்லை?
17 ஏதோவொரு கொள்கைக்காகவோ குறிப்பிட்ட ஒரு வேலைக்காகவோ நாம் நம்மை அர்ப்பணிக்கவில்லை, ஆனால் யெகோவாவுக்காகவே நம்மை அர்ப்பணிக்கிறோம். தமது மக்களுக்குக் கடவுள் கொடுக்கும் வேலைகள் மாறினாலும், அவர்களுடைய ஒப்புக்கொடுத்தல் என்றுமே மாறாது. உதாரணத்திற்கு, ஆபிரகாமிடம் அவர் செய்யச் சொன்ன வேலையும், எரேமியாவிடம் அவர் செய்யச் சொன்ன வேலையும் ரொம்பவே வித்தியாசமாக இருந்தன. (ஆதியாகமம் 13:17, 18; எரேமியா 1:6, 7) என்றாலும், கடவுள் குறிப்பாகச் சொன்ன வேலையை அவ்விருவருமே செய்து முடித்தார்கள், ஏனென்றால் யெகோவாவை அவர்கள் நேசித்தார்கள், அவருடைய சித்தத்தை உண்மையோடு நிறைவேற்றவும் விரும்பினார்கள். இந்த முடிவின் காலத்திலே, கிறிஸ்துவை பின்பற்றுகிற முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் அவருடைய கட்டளைப்படி ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும், சீஷராக்கும் வேலையிலும் கடுமையாக உழைக்கிறார்கள். (மத்தேயு 24:14; 28:19, 20) அந்த வேலையில் முழு இருதயத்தோடு ஈடுபடுவதுதான், பரலோகத் தந்தையின் மீது நமக்கு அன்பு இருக்கிறது என்பதையும், உண்மையிலேயே அவருக்கு ஒப்புக்கொடுத்த நபர்களாக இருக்கிறோம் என்பதையும் காண்பிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும்.—1 யோவான் 5:3.
18, 19. (அ) நம்முடைய முழுக்காட்டுதல் மூலம் பகிரங்கமாக நாம் என்ன தெரிவிக்கிறோம்? (ஆ) அடுத்த கட்டுரை எதைப் பற்றி ஆராயும்?
18 முழுக்காட்டுதல் அநேக ஆசீர்வாதங்களுக்கு வழிதிறக்கிறது என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், அலட்சிய மனப்பான்மையோடு நாம் அந்தப் படியை எடுக்கக் கூடாது. (லூக்கா 14:26-33) மற்ற எல்லாப் பொறுப்புகளைக் காட்டிலும் அதற்கே முதலிடம் கொடுக்க வேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தை அது வெளிப்படுத்துகிறது. (லூக்கா 9:62) சொல்லப்போனால், முழுக்காட்டப்படுவதன் மூலம் பகிரங்கமாக நாம் இவ்வாறு தெரிவிக்கிறோம்: “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.”—சங்கீதம் 48:14.
19 தண்ணீர் முழுக்காட்டுதல் சம்பந்தமாக மேலும் சில கேள்விகள் எழலாம்; அவற்றை அடுத்த கட்டுரை ஆராயும். ஒரு நபர் முழுக்காட்டுதலைத் தள்ளிப்போடுவதற்குத் தகுந்த காரணங்கள் இருக்குமா? வயது ஒரு தடையாக இருக்க வேண்டுமா? முழுக்காட்டுதல் சமயத்தில், மற்ற எல்லாரும் எப்படிக் கண்ணியமாக நடந்துகொள்ளலாம்?
உங்களால் விளக்க முடியுமா?
• முழுக்காட்டுதலுக்கு முன் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏன் மனந்திரும்ப வேண்டும்?
• கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
• யெகோவாவின் பெயரைத் தரித்திருப்பதோடுகூட, என்ன பொறுப்புகளும் நமக்கு வருகின்றன?
• முழுக்காட்டுதல் பெற வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்க எது நம்மை உந்துவிக்க வேண்டும்?
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
முழுக்காட்டுதல் தினத்தன்று கேட்கப்படும் இரண்டு கேள்விகள்
இயேசு கிறிஸ்துவுடைய பலியின் அடிப்படையில், உங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி, யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி உங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா?
நீங்கள் ஒப்புக்கொடுத்திருப்பதும் முழுக்காட்டப்படுவதும், கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிற அமைப்புடன் தொடர்புடைய யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளம் காட்டும் என்பதைப் புரிந்திருக்கிறீர்களா?
[பக்கம் 23-ன் படம்]
ஒப்புக்கொடுத்தல் என்பது யெகோவாவிடம் ஜெபத்தில் பயபக்தியுடன் செய்யும் பொருத்தனை ஆகும்
[பக்கம் 25-ன் படம்]
கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்திருக்கிறோம் என்பதை நம் பிரசங்க வேலை காண்பிக்கிறது