வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
பிப்ரவரி 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 12–13
“கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை”
“இதோ! ... எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”
2 அந்த வயலில் நடக்கும் சம்பவங்கள், கோதுமை வகுப்பார் எல்லோரையும், அதாவது இயேசுவோடு அவரது அரசாங்கத்தில் ஆட்சி செய்யவிருக்கும் எல்லோரையும், மனிதரிலிருந்து எப்போது, எப்படி இயேசு பிரித்தெடுப்பார் என்பதைச் சித்தரிக்கின்றன. விதைப்பது, கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பமானது. இந்த உலகத்தின் முடிவு காலத்தில் உயிரோடிருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், முடிவான முத்திரையைப் பெற்று, அதன் பிறகு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படும்போது இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை முடிவடையும். (மத். 24:31; வெளி. 7:1-4) ஒரு மலைமேல் நின்று பார்க்கும்போது சுற்றியுள்ள இடங்கள் நன்றாகத் தெரிவதுபோல், சுமார் 2,000 வருட காலப்பகுதியில் படிப்படியாக நிகழவிருக்கும் சம்பவங்களை இந்த உவமையின் மூலம் நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. விதை விதைப்பது, பயிர் வளர்வது, அறுவடை செய்வது ஆகியவை நிகழும் காலத்தை இந்த உவமை விவரிக்கிறது. இந்தக் கட்டுரையில் முக்கியமாக, அறுவடைக் காலத்தைப் பற்றியே சிந்திக்கப்போகிறோம்.
இயேசுவின் கவனிப்பில்
3 இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் “களைகள் வளர்ந்திருந்தன,” ஆம், உலகம் என்ற வயலில் போலி கிறிஸ்தவர்கள் தென்பட்டார்கள். (மத். 13:26) நான்காம் நூற்றாண்டிற்குள், களைகளைப் போன்ற இந்த கிறிஸ்தவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருந்தார்கள். உவமையில், களைகளைப் பிடுங்கிப் போட உத்தரவு தரும்படி எஜமானிடம் வேலைக்காரர்கள் கேட்டது நமக்கு நினைவிருக்கும். (மத். 13:28) அதற்கு அந்த எஜமான் என்ன சொன்னார்?
“இதோ! ... எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”
4 கோதுமை-களைகள் பற்றிப் பேசுகையில், “அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்” என்று இயேசு சொன்னார். முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையாக கோதுமையைப் போன்ற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சிலர், எப்போதும் பூமியில் இருந்திருக்கிறார்கள் என்பது இந்தப் பதிலிலிருந்து தெரிகிறது. பிற்பாடு சீடர்களிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகிறது: “இதோ! இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்.” (மத். 28:20) ஆம், இயேசு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் பாதுகாப்பார். ஆனால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைவிட களைகளைப் போன்ற கிறிஸ்தவர்கள் மேலோங்கி வளர்ந்திருந்ததால், அந்த நீண்ட காலப்பகுதியில் கோதுமை வகுப்பைச் சேர்ந்தவர்கள் யார் என்பது நமக்குச் சரியாகத் தெரியவில்லை. என்றாலும், அறுவடைக் காலம் துவங்குவதற்குச் சுமார் 30 வருடங்களுக்கு முன் அவர்கள் யார் என்பது தெரிய ஆரம்பித்தது. எப்படி?
“இதோ! ... எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”
10 முதலாவது, களைகளைப் பிடுங்குவது. “அறுவடைக் காலம் வந்ததும் அறுவடை செய்கிறவர்களை நோக்கி, “முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை . . . கட்டுகளாகக் கட்டுங்கள்” . . . என்று நான் சொல்லுவேன்” என்று இயேசு சொன்னார். 1914-க்குப் பிறகு, பரலோக நம்பிக்கையுள்ள “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” மத்தியிலிருந்து களைகளை, அதாவது போலி கிறிஸ்தவர்களை தேவதூதர்கள் ‘பிடுங்க’ ஆரம்பித்தார்கள்.—மத். 13:30, 38, 41.
11 களைகளைப் பிடுங்கப் பிடுங்க, இரண்டு வகுப்பாருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் பளிச்சென தெரிய ஆரம்பித்தது. (வெளி. 18:1, 4) 1919-ல் மகா பாபிலோன் வீழ்ந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. போலி கிறிஸ்தவர்களிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களை முக்கியமாக வித்தியாசப்படுத்திக் காட்டியது எது? பிரசங்க வேலை! பைபிள் மாணாக்கர்களை முன்நின்று வழிநடத்தியவர்கள், சபையிலுள்ள எல்லோரும் பிரசங்க வேலையில் ஈடுபடுவது முக்கியம் என்பதை வலியுறுத்த ஆரம்பித்தார்கள். உதாரணத்திற்கு, 1919-ல் பிரசுரிக்கப்பட்ட யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது (ஆங்கிலம்) என்ற கைப்பிரதி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரையும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட உந்துவித்தது. “இது ஒரு மாபெரும் வேலையாகத் தெரிந்தாலும், இது எஜமானருடைய வேலை. அவருடைய பலத்தால் அதைச் செய்ய முடியும். அதைச் செய்ய நீங்கள் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள்” என்று அந்தக் கைப்பிரதி குறிப்பிட்டது. அதன் பலன்? அது முதற்கொண்டு பைபிள் மாணாக்கர்கள் பிரசங்க வேலையில் முழு மூச்சுடன் களமிறங்கினார்கள் என்று 1922-ல் த உவாட்ச் டவர் அறிக்கையிட்டது. சீக்கிரத்தில், வீட்டுக்கு வீடு ஊழியம் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமாகவே ஆனது; இன்றும் இதுவே உண்மை.
12 இரண்டாவது, கோதுமையைச் சேர்ப்பது. “கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்” என்று தேவதூதர்களுக்கு இயேசு கட்டளையிடுகிறார். (மத். 13:30) 1919 முதற்கொண்டு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சுத்திகரிக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், இந்தப் பொல்லாத உலகின் முடிவின்போது உயிரோடிருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், மரித்து பரலோகத்திற்குச் சென்ற பிறகு கடைசியாக களஞ்சியத்தில் சேர்க்கப்படுவார்கள்.—தானி. 7:18, 22, 27.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 12:20-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
மங்கியெரிகிற எந்தத் திரியையும்: அன்று வீடுகளில் பொதுவாக, சின்ன களிமண் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுக்கு ஒலிவ எண்ணெயும் நாரிழைத் திரியும் பயன்படுத்தப்பட்டன. ‘மங்கியெரிகிற திரி’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, நெருப்பு மங்கியெரியும்போது அல்லது அணைக்கப்பட்டிருக்கும்போது புகைந்துகொண்டிருக்கும் கரிந்துபோன திரியைக் குறிக்கலாம். ஏசா 42:3-ல் உள்ள தீர்க்கதரிசனம் இயேசுவின் கரிசனையைப் பற்றிச் சொன்னது. அடக்கி ஒடுக்கப்படுகிற தாழ்மையான மக்களின் மனதில் மங்கியெரிகிற நம்பிக்கைச் சுடரை அவர் ஒருபோதும் அணைக்க மாட்டார்.
உங்களுக்குத் தெரியுமா ?
பழங்காலங்களில், ஒருவர் இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது என்று நம்பலாமா?
“பரலோக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவனுடைய எதிரி வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் வளர்ந்திருந்தன” என்று மத்தேயு 13:24-26-ல் இயேசு சொல்கிறார். இந்த உதாரணத்தில் இருக்கிற சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்று நிறைய எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், இது உண்மையிலேயே நடந்திருக்கலாம் என்று பழங்காலத்தைச் சேர்ந்த ரோம சட்டப்பூர்வ ஆவணங்கள் சொல்கின்றன.
“பழிவாங்கும் எண்ணத்தில், டார்னெல் என்ற களைகளை வயல்களில் விதைப்பது . . . ரோம சட்டத்தின்படி குற்றம். இந்தச் சம்பவங்கள் அடிக்கடி நடந்ததால்தான் இதற்கென்று ஒரு சட்டம் இருந்தது” என்று ஒரு பைபிள் டிக்ஷனரி சொல்கிறது. கி.பி 533-ல் ரோமப் பேரரசன் ஜஸ்டினியன், டைஜஸ்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டார் என்றும் அதில் ரோம சட்டத்தின் சுருக்கமும் சட்டத்தின் இலக்கிய காலத்தில் (சுமார் கி.பி 100-250 வரை) வாழ்ந்த சட்ட நிபுணர்களின் சில குறிப்புகளும் இருக்கின்றன என்றும் சட்டவியல் அறிஞர் அலெஸ்டர் கெர் விளக்குகிறார். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம அரசியல் மேதை ஸெல்சஸ் என்பவரால் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கைப் பற்றி சட்ட நிபுணர் உல்பியன் குறிப்பிட்டதாக இந்தப் புத்தகம் (டைஜஸ்ட், 9.2.27.14) சொல்கிறது. இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்ததால் பயிர்களெல்லாம் நாசமாக்கப்பட்டன. அந்த வயலின் சொந்தக்காரருக்கோ குத்தகைக்காரருக்கோ ஏற்பட்ட இழப்புக்கு, பயிரை நாசமாக்கியவர் என்ன நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய சட்டப்பூர்வ நிவாரணங்கள் டைஜஸ்ட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
பழங்காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தில் நடந்த இதுபோன்ற கெடுதல் உண்டாக்குகிற சம்பவங்கள், இயேசு சொன்ன உதாரணம் உண்மையிலேயே நடந்தன என்பதை நிரூபிக்கின்றன.
பிப்ரவரி 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 14-15
“சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்”
சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
2 அந்தக் கூட்டத்தாரைப் பார்த்து இயேசு மனதுருகி, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்துகிறார், கடவுளுடைய அரசாங்கம் பற்றி அநேக விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார். வெகுநேரமானபோது, சீடர்கள் இயேசுவிடம் வந்து “கூட்டத்தாரை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் அவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்” என்று சொல்கிறார்கள். இயேசுவோ, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்கிறார். அதைக் கேட்ட சீடர்கள் குழம்பி போயிருப்பார்கள், ஏனென்றால் அவர்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் இருக்கின்றன.
சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
3 இயேசு அவர்கள்மேல் இரக்கப்பட்டு ஓர் அற்புதத்தைச் செய்கிறார்; நான்கு சுவிசேஷங்களிலும் பதிவான ஒரே அற்புதம் இதுதான். (மாற். 6:35-44; லூக். 9:10-17; யோவா. 6:1-13) இயேசு தம் சீடர்களிடம் சொல்லி அந்தக் கூட்டத்தாரை பசும்புல் தரையில் ஐம்பதுஐம்பது பேராகவும் நூறுநூறு பேராகவும் உட்கார வைக்கிறார். ஜெபம் செய்துவிட்டு ரொட்டியைப் பிட்டு, மீன்களைப் பங்கிடுகிறார். பிறகு, உணவை அவரே நேரடியாக கொடுக்காமல், ‘அங்கிருந்தவர்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடர்களிடம் கொடுக்கிறார்.’ அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகும் ஏராளமான உணவு மீந்திருக்கிறது; என்னே ஓர் அற்புதம்! இதை யோசித்துப் பாருங்கள்: சிலரைக்கொண்டு, அதாவது தம் சீடர்களைக் கொண்டு பல ஆயிரம் பேருக்கு இயேசு உணவளித்தார்.
மத் 14:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர: இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்கும்போது மத்தேயு மட்டும்தான் பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். இயேசு அற்புதமாக உணவளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,000-க்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
கி.பி. 32-ஆம் வருடம், பஸ்காவுக்கு சற்றுமுன் நடந்த ஒரு சம்பவத்தைக் கற்பனை செய்து பாருங்கள். (மத்தேயு 14:14-21-ஐ வாசியுங்கள்.) கலிலேய கடலுக்கு வடக்கேயுள்ள பெத்சாயிதா என்ற கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர சுமார் 5,000 ஆண்கள், இயேசுவையும் அவருடைய சீடர்களையும் பின்தொடர்ந்து அங்கு வந்திருக்கிறார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 15:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
வெளிவேஷக்காரர்களே: கிரேக்கில், ஹிப்போக்ரிட்டஸ். கிரேக்க (பிற்பாடு, ரோம) மேடை நடிகர்களைக் குறிப்பதற்காக இந்த வார்த்தை ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது; ஒலிபெருக்கிபோல் செயல்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த பெரிய முகமூடிகளை இவர்கள் அணிந்திருந்தார்கள். பிற்பாடு இந்த வார்த்தை, உள்ளுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக இருப்பவர்களைக் குறிக்கும் உருவகமாகப் பயன்படுத்தப்பட்டது; அதாவது, தங்களுடைய உண்மையான எண்ணங்களை அல்லது குணங்களை மறைப்பதற்காகப் பாசாங்கு செய்கிறவர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த வசனத்தில், யூத மதத் தலைவர்களை ‘வெளிவேஷக்காரர்கள்’ என்று இயேசு குறிப்பிட்டிருக்கிறார்.—மத் 6:5, 16.
மத் 15:26-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
பிள்ளைகளின் . . . நாய்க்குட்டிகளுக்கு: திருச்சட்டத்தின்படி நாய் அசுத்தமான விலங்காக இருந்ததால், நாய் என்ற வார்த்தையைத் தரக்குறைவான கருத்தில்தான் பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. (லேவி 11:27; மத் 7:6; பிலி 3:2, அடிக்குறிப்பு; வெளி 22:15) ஆனால், இயேசுவின் உரையாடலைப் பற்றிய மாற்குவின் பதிவிலும் சரி (7:27), மத்தேயுவின் பதிவிலும் சரி, ‘நாய்’ என்பதற்கான குறுமை வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம், “நாய்க்குட்டி” அல்லது “வீட்டு நாய்.” மனதைப் புண்படுத்தாத விதத்தில் இந்த ஒப்புமையை இயேசு பயன்படுத்தினார் என்பதை இது காட்டுகிறது. ஒருவேளை, யூதர்கள் அல்லாத மற்ற தேசத்தார் தங்களுடைய செல்லப்பிராணிகளைப் பாசமாக அழைப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தையையே இயேசுவும் பயன்படுத்தியிருக்கலாம். இஸ்ரவேலர்களை ‘பிள்ளைகள்’ என்றும், மற்ற தேசத்தாரை ‘நாய்க்குட்டிகள்’ என்றும் சொல்வதன் மூலம், யாருக்கு முன்னுரிமை தரப்படும் என்பதை இயேசு சுட்டிக்காட்ட விரும்பியதாகத் தெரிகிறது. பிள்ளைகளும் நாய்களும் இருந்த வீடுகளில், பிள்ளைகளுக்குத்தான் முதலில் உணவு கொடுக்கப்பட்டது.
பிப்ரவரி 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 16–17
“நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?”
“கணவர்களே—கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்று பின்பற்றுங்கள்”
17 இன்னொரு சந்தர்ப்பத்தில், தாம் எருசலேமில் துன்பப்பட வேண்டும் என்றும் அங்கே “மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும்” என்றும் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு விளக்கினார். அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துச் சென்று, “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று கடிந்துகொள்ளத் தொடங்கினார். உணர்ச்சிவசப்பட்டதால் பேதுருவின் கருத்து தவறாக இருந்தது தெளிவாகத் தெரிகிறது. சரிப்படுத்துதல் தேவைப்பட்டது. எனவே இயேசு, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்று பேதுருவிடம் கூறினார்.—மத்தேயு 16:21-23.
விழித்திருங்கள்! சாத்தான் உங்களை விழுங்க பார்க்கிறான்
16 யெகோவாவை முழுமூச்சோடு சேவித்துக்கொண்டிருக்கும் அவருடைய ஊழியர்களைக்கூட சாத்தான் ஏமாற்றுகிறான். உதாரணத்திற்கு, தன்னை சீக்கிரத்தில் கொன்றுவிடுவார்கள் என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னபோது பேதுரு அவரிடம், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று சொன்னார். அப்போது இயேசு, “விலகிப் போ, சாத்தானே!” என்று சொன்னார். (மத். 16:22, 23) பேதுருவை “சாத்தான்” என்று இயேசு ஏன் சொன்னார்? சீக்கிரத்தில் தனக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதாவது, மக்களை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத் தன்னுடைய உயிரை பலியாக கொடுக்க வேண்டும்... சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்க வேண்டும்... என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மனித சரித்திரத்திலேயே இது ஒரு முக்கியமான சமயமாக இருந்தது. அந்த சமயத்தில் இயேசு விழிப்பாக இல்லாமல், இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ‘எனக்கு நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? சாத்தானுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்திருக்கும் இல்லையா!
17 நாமும் இயேசுவைப் போல் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் வாழ்கிறோம். ஏனென்றால், இந்தக் கெட்ட உலகத்திற்கு சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது. அதனால், சாத்தான் நம்மையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கிறான். இந்த உலகத்தில் நமக்கு ‘எந்தக் கஷ்டமும் வரக்கூடாது,’ சந்தோஷமாக வாழ வேண்டும், வாழ்க்கையில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்றெல்லாம் நம்மை நினைக்க வைக்கிறான். நாம் விழிப்பாக இருக்கக் கூடாது... கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டும்... என்று அவன் ஆசைப்படுகிறான். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்காதபடி கவனமாக இருங்கள், “விழிப்புடன் இருங்கள்!” (மத். 24:42) இந்தக் கெட்ட உலகத்திற்கு முடிவு உடனே வராது அல்லது முடிவு வரவே வராது என்று சாத்தான் நம்மை நம்ப வைக்கிறான். சாத்தான் பரப்பிவரும் இந்தப் பொய்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்!
‘புறப்பட்டுப் போய் சீஷராக்கி, முழுக்காட்டுதல் கொடுங்கள்’
9 இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி கடவுளுடைய சித்தத்தைச் செய்வது எதை உட்படுத்துகிறது? இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, [“சொந்தம் கைவிட்டு,” NW]தன் சிலுவையை “கழுமரத்தை,” NW]
எடுத்துக்கொண்டு [“தொடர்ந்து,” NW]என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24) நாம் செய்ய வேண்டிய மூன்று காரியங்களை அவர் இங்கு குறிப்பிட்டார். முதலாவதாக, நம்மை நாமே ‘சொந்தம் கைவிட’ வேண்டும். வேறு விதத்தில் சொன்னால், நம்முடைய சுயநல, அபூரண மனச்சாய்வுகளுக்கு இடங்கொடுக்காதிருப்பதன் மூலம் ‘இல்லை’ என்றும், கடவுளுடைய ஆலோசனைகளுக்கும் வழிநடத்துதலுக்கும் கீழ்ப்படிவதன் மூலம் ‘ஆம்’ என்றும் சொல்ல வேண்டும். இரண்டாவதாக, நாம் ‘கழுமரத்தை எடுத்துக்கொள்ள’ வேண்டும். இயேசுவின் நாளில், கழுமரம் என்பது அவமானத்திற்கும் துன்பத்திற்கும் ஓர் அடையாளச் சின்னமாக இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நாம், நற்செய்தியின் நிமித்தம் துன்பங்களை அனுபவிப்போம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். (2 தீமோத்தேயு 1:8) இந்த உலகத்தின் ஏச்சுப்பேச்சுக்கும் பரிகாசத்துக்கும் ஆளானாலும், கிறிஸ்துவைப் போல, அதை ‘அவமானமாக எண்ணாமல்’ கடவுளைப் பிரியப்படுத்துகிறோம் என அறிந்து சந்தோஷப்பட வேண்டும். (எபிரெயர் 12:2) கடைசியாக, இயேசுவை நாம் ‘தொடர்ந்து பின்பற்ற’ வேண்டும்.—சங்கீதம் 73:26; 119:44; 145:2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 16:18-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
நீ பேதுரு; . . . இந்தக் கற்பாறைமேல்: பெட்ரோஸ் என்ற கிரேக்க வார்த்தை ஆண்பாலில் கொடுக்கப்பட்டுள்ளது; இதன் அர்த்தம், “கற்பாறை; கல்.” இது இங்கே ஒரு பெயராக (பேதுரு) பயன்படுத்தப்பட்டுள்ளது. சீமோனுக்கு இயேசு வைத்த பெயரின் கிரேக்க வடிவம் இது. (யோவா 1:42) இந்த வார்த்தையின் பெண்பால் பெட்ரா. இது “பாறை” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இது அடிநிலப்பாறையை, செங்குத்தான பாறையை, அல்லது ஒரு பெரிய கற்பாறையைக் குறிக்கலாம். இந்தக் கிரேக்க வார்த்தை மத் 7:24, 25; 27:60; லூ 6:48; 8:6; ரோ 9:33; 1கொ 10:4; 1பே 2:8 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “என்னுடைய சபையை இந்தக் கற்பாறைமேல் கட்டுவேன்” என்று இயேசு சொன்னபோது, அந்தக் கற்பாறை தான்தான் என்று பேதுரு நினைத்ததாகத் தெரியவில்லை; ஏனென்றால், ரொம்பக் காலத்துக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டு, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட “மூலைக்கல்” இயேசுதான் என்று 1பே 2:4-8-ல் அவர் எழுதினார். அதேபோல் அப்போஸ்தலன் பவுலும், இயேசுவை ‘அஸ்திவாரம்’ என்றும், “கற்பாறை” என்றும் குறிப்பிட்டார். (1கொ 3:11; 10:4) அதனால், இயேசு இங்கே சொல்வித்தையைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது; அதாவது, ‘நான் உன்னை பேதுரு (கற்பாறை) என்று அழைத்தேன். அப்படிப்பட்ட நீ “இந்தக் கற்பாறை” (கிறிஸ்து) யாரென்று சரியாகப் புரிந்துகொண்டாய். இந்தக் கற்பாறைதான் கிறிஸ்தவச் சபையின் அஸ்திவாரமாக இருப்பார்’ என்று இயேசு சொன்னதாகத் தெரிகிறது.
சபையை: சபை என்பதற்கான கிரேக்க வார்த்தை எக்லிசீயா. இந்த வசனத்தில்தான் இது முதல் தடவை வருகிறது. எக் என்ற கிரேக்க வார்த்தையும் (அர்த்தம், “வெளியே”), கலீயோ என்ற கிரேக்க வார்த்தையும் (அர்த்தம், “அழைப்பது”) சேர்ந்ததுதான் எக்லிசீயா. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக வரவழைக்கப்பட்ட அல்லது ஒன்றுதிரட்டப்பட்ட தொகுதியை இது குறிக்கிறது. (சொல் பட்டியலைப் பாருங்கள்.) இந்த வசனத்தில், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அடங்கிய கிறிஸ்தவ சபை உருவாவதைப் பற்றி இயேசு முன்னறிவித்தார்; “உயிருள்ள கற்களாகிய” அவர்கள் ‘ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறார்கள்.’ (1பே 2:4, 5) “சபை” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு இந்தக் கிரேக்க வார்த்தையைத்தான் செப்டுவஜன்ட் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறது; சபை என்பது பெரும்பாலும் கடவுளுடைய மக்களை ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. (உபா 23:3; 31:30) எகிப்திலிருந்து அழைத்துவரப்பட்ட இஸ்ரவேலர்களை “ஒரு சபை” என்று அப் 7:38 குறிப்பிடுகிறது. அதேபோல், ‘இருளிலிருந்து . . . அழைக்கப்பட்டதாகவும்,’ ‘இந்த உலகத்திலிருந்து . . . தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்’ சொல்லப்படுகிற கிறிஸ்தவர்கள் ‘கடவுளுடைய சபையாக’ இருக்கிறார்கள்.—1பே 2:9; யோவா 15:19; 1கொ 1:1.
மத் 16:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
பரலோக அரசாங்கத்தின் சாவிகளை: பைபிள் பதிவுகளின்படி, ஒருவரிடம் நிஜமான சாவியோ அடையாளப்பூர்வ சாவியோ ஒப்படைக்கப்பட்டபோது, அவருக்கு ஓரளவு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (1நா 9:26, 27; ஏசா 22:20-22) அதனால், “சாவி” என்ற வார்த்தை அதிகாரத்துக்கும் பொறுப்புக்கும் அடையாளமாக ஆனது. பேதுருவிடம் இப்படிப்பட்ட “சாவிகள்” ஒப்படைக்கப்பட்டன. அவர் யூதர்களுக்கும் (அப் 2:22-41), சமாரியர்களுக்கும் (அப் 8:14-17), மற்ற மக்களுக்கும் (அப் 10:34-38) ஒரு கதவைத் திறந்துவைத்தார்; அதாவது, கடவுளுடைய சக்தியைப் பெற்று பரலோக அரசாங்கத்துக்குள் நுழையும் வாய்ப்பைத் திறந்துவைத்தார்.
பிப்ரவரி 26–மார்ச் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மத்தேயு 18–19
“பாவம் செய்யத் தூண்டாதீர்கள்—உங்களையும் சரி, மற்றவர்களையும் சரி!”
மத் 18:6, 7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை: வே.வா., “கழுதையை வைத்து இழுக்கப்படும் திரிகைக் கல்லை.” நே.மொ., “ஒரு கழுதையின் திரிகைக் கல்லை.” அப்படிப்பட்ட ஒரு திரிகை கல் அநேகமாக 1.2-1.5 மீ. (4-5 அடி) விட்டத்தில் இருந்திருக்கும். அது மிகவும் கனமாக இருந்ததால் ஒரு கழுதையை வைத்துத்தான் இழுக்க வேண்டியிருந்தது.
மக்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற: வே.வா., “முட்டுக்கட்டையாக இருக்கிற.” இதற்கான கிரேக்க வார்த்தை ஸ்கான்டேலான். ஆரம்பத்தில் இது ஒரு பொறியைக் குறித்ததாக நம்பப்படுகிறது. அதுவும், ஒரு பொறிக்குள் இருந்த குச்சியை (இரை வைக்கப்பட்ட குச்சியை) அது குறித்திருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். காலப்போக்கில், ஒருவரைத் தடுக்கி விழவைக்கும் எல்லா பொருள்களையுமே குறிப்பதற்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அடையாள அர்த்தத்தில், ஒருவரைத் தவறான பாதையில் போக வைக்கிற, அல்லது ஒழுக்க நெறிகளை மீற வைக்கிற, அல்லது பாவக் குழியில் விழ வைக்கிற செயலையோ சூழ்நிலையையோ அது குறிக்கிறது. இந்த வார்த்தையோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லான ஸ்கான்டலைசோ மத் 18:8, 9-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “பாவம் செய்ய வைத்தால்” என்று அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “உன்னை விழ வைத்தால்; உனக்குக் கண்ணியாக இருந்தால்” என்றெல்லாம்கூட அதை மொழிபெயர்க்கலாம்.
nwtsty மீடியா
மாவு அரைக்கும் கல்
இது திரிகைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. இது தானியங்களை அரைப்பதற்கும் ஒலிவப் பழங்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. சில திரிகைக் கற்கள் சின்னதாக இருந்ததால் கையினால் சுற்றப்பட்டன. ஆனால், மற்ற திரிகைக் கற்கள் மிகப் பெரியவையாக இருந்ததால் ஒரு விலங்கை வைத்து இழுக்கப்பட்டன. படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பெரிய திரிகைக் கல்லில்தான் ஒருவேளை சிம்சோனை பெலிஸ்தியர்கள் மாவு அரைக்க வைத்திருப்பார்கள். (நியா 16:21) விலங்குகளால் சுற்றப்பட்ட திரிகைக் கற்கள் இஸ்ரவேலில் மட்டுமல்லாமல், ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன.
திரிகையின் மேற்கல்லும் அடிக்கல்லும்
படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற பெரிய திரிகைக் கற்கள், கழுதை போன்ற வீட்டு விலங்குகளால் இழுக்கப்பட்டன. தானியங்களை அரைப்பதற்கோ ஒலிவப் பழங்களைப் பிழிவதற்கோ அவை பயன்படுத்தப்பட்டன. திரிகையின் மேற்கல் 1.5 மீ. (5 அடி) விட்டத்தில்கூட இருந்திருக்கலாம். அதைவிடப் பெரிய அடிக்கல்லின் மீது வைக்கப்பட்டு அது இழுக்கப்பட்டிருக்கலாம்.
மத் 18:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கெஹென்னாவுக்குள்: ‘கெஹென்னா’ என்ற வார்த்தை, “இன்னோம் பள்ளத்தாக்கு” என்ற அர்த்தத்தைத் தரும் ஃகேஹ் இன்னோம் என்ற எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு பூர்வ எருசலேமுக்கு மேற்கிலும் தெற்கிலும் அமைந்திருந்தது. (இணைப்பு B12-ஐயும், “எருசலேமும் சுற்றுப்புறமும்” என்ற வரைபடத்தையும் பாருங்கள்.) இயேசுவின் காலத்தில், அது குப்பைக்கூளங்களை எரிக்கும் இடமாக ஆகியிருந்தது. அதனால், “கெஹென்னா” என்ற வார்த்தை நிரந்தர அழிவைக் குறிப்பதற்குப் பொருத்தமான வார்த்தையாக இருந்தது.
nwtstg சொல் பட்டியல்
கெஹென்னா
பண்டைய எருசலேமின் தென்மேற்கில் இருந்த இன்னோம் பள்ளத்தாக்கின் கிரேக்கப் பெயர். (எரே 7:31) இது பிணங்கள் சிதறிக் கிடக்கிற இடமாக இருக்கும் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. (எரே 7:32; 19:6) மிருகங்களும் மனிதர்களும் கெஹென்னாவுக்குள் போடப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டதற்கோ சித்திரவதை செய்யப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அதனால், மனிதர்களுடைய ஆத்துமாக்கள் என்றென்றும் நெருப்பில் வாட்டி வதைக்கப்படுகிற, பார்க்க முடியாத ஓர் இடத்துக்கு இந்த வார்த்தை அடையாளமாக இருக்க முடியாது. மாறாக, நிரந்தரத் தண்டனையான “இரண்டாம் மரணத்துக்கு,” அதாவது நிரந்தர அழிவுக்கு, அடையாளமாகத்தான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.—வெளி 20:14; மத் 5:22; 10:28.
மத் 18:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள்: வே.வா., “என் தகப்பனின் முகத்தை எப்போதும் பார்க்கிறார்கள்.” தேவதூதர்களால் மட்டும்தான் கடவுளுடைய முகத்தைப் பார்க்க முடியும்; ஏனென்றால், கடவுளுடைய சன்னிதிக்குப் போய்வர அவர்களால் முடியும்.—யாத் 33:20.
w10 11/1 16
தூதர்கள்—நம்மீது அவர்களுடைய செல்வாக்கு
கடவுளுடைய ஊழியர்களின் ஆன்மீக நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை இயேசு சொன்னதிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். மற்றவர்களுக்கு இடறல் ஏற்படுத்திவிடாமல் இருக்குமாறு தம் சீடர்களை எச்சரித்தபோது, “இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட இழிவாகக் கருதாதபடி கவனமாயிருங்கள்; நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுடைய தேவதூதர்கள் பரலோகத்தில் என் தகப்பனுடைய முகத்திற்கு முன்பாக எப்போதும் இருக்கிறார்கள்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 18:10) இப்படிச் சொன்னபோது, தம் சீடர்கள் ஒவ்வொருவரையும் காப்பதற்கு ஒரு காவல் தூதர் இருப்பாரென்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்மீது மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள் என்றே அவர் அர்த்தப்படுத்தினார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 18:22-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
77 தடவை: நே.மொ., “ஏழு எழுபது தடவை.” இதற்கான கிரேக்க வார்த்தைகள், 7-ஐயும் 70-ஐயும் கூட்டினால் வரும் தொகையை (77) குறிக்கலாம், அல்லது 7-ஐயும் 70-ஐயும் பெருக்கினால் வரும் தொகையை (490) குறிக்கலாம். ஆதி 4:24-ல், “77 தடவை” என்பதற்கான எபிரெய வார்த்தைகளுக்கு இதே கிரேக்க வார்த்தைகளைத்தான் செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது. அதனால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அந்த வார்த்தைகளை “77 தடவை” என்று மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும் என்று தெரிகிறது. அது எந்தத் தொகையைக் குறித்தாலும் சரி, ஏழு என்ற எண் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருப்பது, “அளவே இல்லாமல்” அல்லது “கணக்கில்லாமல்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. “ஏழு தடவை” என்று பேதுரு சொன்னதை “77 தடவை” என்று இயேசு மாற்றிச் சொன்னபோது, மன்னிப்பதற்கு அளவே இருக்கக் கூடாது என்று தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதற்கு நேர்மாறாக, பாபிலோனிய தால்முட் (யோமா 86ஆ) இப்படிச் சொல்கிறது: “ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டால், முதல் தடவையும் இரண்டாவது தடவையும் மூன்றாவது தடவையும் மன்னிக்கப்படுகிறான், ஆனால் நான்காவது தடவை மன்னிக்கப்படுவதில்லை.”
மத் 19:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
விவாகரத்துப் பத்திரத்தை: வே.வா., “மணவிலக்குப் பத்திரத்தை.” விவாகரத்து செய்ய நினைத்த ஒருவர் சட்டப்பூர்வ ஆவணத்தை எழுதிக் கொடுக்க வேண்டுமென்றும், அநேகமாக மூப்பர்களைப் பார்த்துப் பேச வேண்டுமென்றும் திருச்சட்டம் சொன்னது. இப்படி, அந்த முக்கியமான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. அவசரப்பட்டு விவாகரத்து செய்வதைத் தடுப்பதும், பெண்களுக்கு ஓரளவு சட்டப்பூர்வ பாதுகாப்பைக் கொடுப்பதும்தான் திருச்சட்டத்தின் நோக்கமாக இருந்ததென்று தெரிகிறது. (உபா 24:1) ஆனால் இயேசுவின் காலத்தில், சுலபமாக விவாகரத்து செய்துகொள்ள மதத் தலைவர்கள் மக்களை அனுமதித்தார்கள். “எந்தவொரு காரணத்துக்காகவும் (ஆண்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்)” விவாகரத்து செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாக முதல் நூற்றாண்டு சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் குறிப்பிட்டார்; அவர்கூட விவாகரத்து செய்துகொண்ட ஒரு பரிசேயர்தான்.
nwtsty மீடியா
விவாகரத்துப் பத்திரம்
படத்தில் காட்டப்பட்டுள்ள விவாகரத்துப் பத்திரம் கி.பி. 71 அல்லது 72-ல் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டது. யூதேய பாலைவனத்தில் இருந்த ஒரு வறண்ட நதிப்படுகையின் (முராபாட் காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்) வடக்கில் அது கண்டெடுக்கப்பட்டது. யூதர்கள் கலகம் செய்த ஆறாவது வருஷத்தில், நாக்சன் என்பவரின் மகனான ஜோசஃப், மசாடா நகரத்தில் வாழ்ந்துவந்த ஜானத்தன் என்பவரின் மகளாகிய மிரியமை விவாகரத்து செய்ததாக அது குறிப்பிடுகிறது.