உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • bhs அதி. 2 பக். 19-28
  • பைபிள்​—⁠கடவுள் தந்த புத்தகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள்​—⁠கடவுள் தந்த புத்தகம்
  • பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • பைபிள் கற்பிக்கிறது-ல் காட்டவும்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் துல்லியமானது
  • புத்திமதிகள் நிறைந்த புத்தகம்
  • பைபிளில் இருக்கும் தீர்க்கதரிசனங்களை நீங்கள் நம்பலாம்
  • பைபிள்—உங்கள் வாழ்க்கையையே மாற்றும்
  • தேவனை அறியும் அறிவை வெளிப்படுத்தும் அந்தப் புத்தகம்
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • வேத புத்தகத்தை நம்ப முடியுமா?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • வேத புத்தகத்தை நம்ப முடியுமா?
    இன்றும் என்றும் சந்தோஷம்!​—கடவுள் சொல்லும் வழி: ஓர் அறிமுகம்
  • ஒரு தீர்க்கதரிசனப் புத்தகம்
    எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
மேலும் பார்க்க
பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
bhs அதி. 2 பக். 19-28

அதிகாரம் 2

பைபிள்—கடவுள் தந்த புத்தகம்

1, 2. பைபிள், கடவுள் தந்திருக்கும் அருமையான பரிசு என்று ஏன் சொல்லலாம்?

உங்களுடைய நண்பர் ஒரு பரிசு கொடுக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? அதை உடனே திறந்து பார்ப்பீர்கள். உங்களுக்காக அவர் அந்தப் பரிசைக் கொண்டுவந்ததற்கு நீங்கள் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள். அதற்காக அவருக்கு நன்றி சொல்வீர்கள்.

2 பைபிள், கடவுள் தந்திருக்கும் ஒரு அருமையான பரிசு. வேறு எதிலும் இல்லாத விஷயங்கள் பைபிளில் இருக்கின்றன. உதாரணத்துக்கு, வானத்தையும் பூமியையும் முதல் மனுஷனையும் மனுஷியையும் கடவுள் படைத்ததாக பைபிள் சொல்கிறது. நம்முடைய பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும் நியமங்கள் அதில் இருக்கின்றன. கடவுள், தான் நினைத்தபடியே இந்தப் பூமியை எப்படி நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவார் என்று பைபிள் சொல்கிறது. உண்மையிலேயே பைபிள் ஒரு அருமையான பரிசு!

3. பைபிளைப் படிக்கும்போது நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்?

3 பைபிளைப் படிக்கும்போது, நீங்கள் கடவுளுடைய நண்பராக வேண்டுமென்று அவர் விரும்புவதைத் தெரிந்துகொள்வீர்கள். அவரைப் பற்றி நீங்கள் எந்தளவுக்குக் கற்றுக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு அவரோடு இருக்கும் உங்கள் நட்பு பலமாகும்.

4. பைபிளைப் பற்றிய எந்த விஷயம் உங்கள் மனதைக் கவருகிறது?

4 பைபிள் 2,800-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. கோடிக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான ஜனங்களால் பைபிளைத் தங்கள் சொந்த மொழியிலேயே வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் பத்து லட்சத்துக்கும் அதிகமான பைபிள்கள் விற்பனையாகின்றன. இந்த விஷயத்தில் பைபிளை வேறு எந்தப் புத்தகத்தோடும் ஒப்பிட முடியாது.

5. பைபிள் “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” எழுதப்பட்டிருக்கிறது என்று நாம் ஏன் சொல்லலாம்?

5 பைபிள் “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” எழுதப்பட்ட ஒரு புத்தகம். (2 தீமோத்தேயு 3:16-ஐ வாசியுங்கள்.) ஆனால் சிலர், ‘பைபிளை மனிதர்கள்தானே எழுதினார்கள்? அப்படியிருக்கும்போது, அதைக் கடவுள் கொடுத்ததாக எப்படிச் சொல்ல முடியும்?’ என்று கேட்கலாம். “மனிதர்கள் . . . கடவுள் கொடுத்த வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 1:21) ஒரு மேனேஜரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சொல்லச் சொல்ல அவருடைய செக்ரெட்டரி ஒரு கடிதத்தை எழுதுகிறார். அப்படியென்றால், அந்தக் கடிதம் யாருடையது? அதை எழுதியது செக்ரெட்டரியாக இருந்தாலும் அது மேனேஜருடையதுதான். அதேபோல், பைபிளை மனிதர்கள் எழுதியிருந்தாலும் அதன் நூலாசிரியர் கடவுள்தான். அவர் மனிதர்களுக்குத் தன்னுடைய சக்தியைத் தந்து தன்னுடைய எண்ணங்களை எழுத வைத்தார். பைபிள் “உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்.”—1 தெசலோனிக்கேயர் 2:13; பின்குறிப்பு 2-ஐப் பாருங்கள்.

வித்தியாசமான மொழிகளில் கிடைக்கும் பரிசுத்த பைபிளின் புதிய உலக மொழிபெயர்ப்பு

பரிசுத்த பைபிளின் புதிய உலக மொழிபெயர்ப்பு இன்று நிறைய மொழிகளில் கிடைக்கிறது

பைபிள் துல்லியமானது

6, 7. பைபிளில் இருக்கும் விஷயங்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன என்று நாம் ஏன் சொல்லலாம்?

6 பைபிளை எழுதி முடிக்க 1,600-க்கும் அதிகமான வருஷங்கள் எடுத்தன. வித்தியாசமான காலப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அதை எழுதினார்கள். அவர்களில் சிலர் படித்தவர்கள், சிலர் அவ்வளவாகப் படிக்காதவர்கள். உதாரணத்துக்கு, ஒருவர் மருத்துவராக இருந்தார். மற்றவர்கள் விவசாயிகளாக, மீனவர்களாக, மேய்ப்பர்களாக, தீர்க்கதரிசிகளாக, நீதிபதிகளாக, அல்லது ராஜாக்களாக இருந்தார்கள். இப்படி வித்தியாசமான ஆட்கள் பைபிளை எழுதியிருந்தாலும் அதில் இருக்கும் எல்லா விஷயங்களும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன. பைபிள், ஒரு அதிகாரத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு இன்னொரு அதிகாரத்தில் அதை மாற்றிச் சொல்வதில்லை.a

7 உலகத்தில் பிரச்சினைகள் எப்படி ஆரம்பித்தன என்று பைபிளின் முதல் சில அதிகாரங்கள் சொல்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்குக் கடவுள் எப்படி முடிவுகட்டப்போகிறார் என்றும், இந்தப் பூமியை எப்படி ஒரு பூஞ்சோலையாக மாற்றப்போகிறார் என்றும் கடைசி சில அதிகாரங்கள் சொல்கின்றன. ஆயிரக்கணக்கான வருஷங்களாக மனித சரித்திரத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது; கடவுளுடைய நோக்கம் எப்போதுமே நிறைவேறும் என்பதை அது காட்டுகிறது.

8. பைபிள் சொல்லும் அறிவியல் விஷயங்கள் எப்படித் துல்லியமாக இருக்கின்றன என்பதற்கு உதாரணங்கள் கொடுங்கள்.

8 அறிவியல் புத்தகமாகவோ பாட புத்தகமாகவோ இருப்பதற்காக பைபிள் எழுதப்படவில்லை. ஆனால், அறிவியல் சம்பந்தமாக அது சொல்லும் ஒவ்வொரு விஷயமும் துல்லியமாக இருக்கிறது. கடவுள் தந்திருக்கும் புத்தகம் இப்படி இருக்க வேண்டும் என்றுதானே நாம் எதிர்பார்ப்போம்? இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம். நோய் பரவாமல் இருப்பதற்காகக் கடவுள் இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த சட்டங்கள் லேவியராகமம் புத்தகத்தில் இருக்கின்றன. பாக்டீரியா கிருமிகளும் வைரஸ் கிருமிகளும் நோய்களைப் பரப்புகின்றன என்பதை மனிதர்கள் கண்டுபிடிப்பதற்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே அந்தச் சட்டங்கள் எழுதப்பட்டன. அதோடு, பூமி அந்தரத்தில் தொங்குகிறது என்ற உண்மையை பைபிள் சொன்னது. (யோபு 26:7) அதுமட்டுமல்ல, பூமி தட்டையாக இருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் நம்பிக்கொண்டிருந்த சமயத்தில், அது உருண்டையாக இருக்கிறது என்று பைபிள் சொன்னது.—ஏசாயா 40:22.

9. பைபிளை எழுதியவர்களின் நேர்மையைப் பார்க்கும்போது எது தெளிவாகத் தெரிகிறது?

9 வரலாறு சம்பந்தமாக பைபிள் சொல்லும் விஷயங்களும் துல்லியமாகவே இருக்கின்றன. ஆனால், நிறைய வரலாற்றுப் புத்தகங்கள் அந்தளவுக்குத் துல்லியமாக இல்லை. ஏனென்றால், அதை எழுதியவர்கள் நேர்மையாக எழுதவில்லை. உதாரணத்துக்கு, அவர்களுடைய நாடு போரில் தோற்றுப்போனதைப் பற்றி அவர்கள் எழுதவில்லை. ஆனால், பைபிளை எழுதியவர்கள் தங்களுடைய நாடான இஸ்ரவேல் தோற்றுப்போனதைப் பற்றி மறைக்காமல் எழுதினார்கள். தங்களுடைய தவறுகளைக்கூட மறைக்காமல் எழுதினார்கள். உதாரணத்துக்கு, மோசே தான் செய்த பெரிய தவறைப் பற்றியும், அதற்குக் கடவுள் கொடுத்த தண்டனையைப் பற்றியும் மறைக்காமல் எழுதினார். (எண்ணாகமம் 20:2-12) பைபிளை எழுதியவர்களின் நேர்மையைப் பார்க்கும்போது, அவர்களை எழுத வைத்தது கடவுள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியென்றால், நாம் பைபிளை முழுமையாக நம்பலாம்.

புத்திமதிகள் நிறைந்த புத்தகம்

10. பைபிளில் இருக்கும் புத்திமதிகள் இன்றும் ஏன் பிரயோஜனமாக இருக்கின்றன?

10 “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக்கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும் . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16) பைபிளில் இருக்கும் புத்திமதிகள் இன்றும் பிரயோஜனமாக இருக்கின்றன. நாம் எப்படி உண்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால், நாம் எப்படி யோசிக்கிறோம் என்பதையும் எப்படி உணருகிறோம் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். நம்மைப் பற்றி நம்மைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார். நமக்கு எது நல்லது என்றும், எது கெட்டது என்றும் அவருக்குத்தான் நன்றாகத் தெரியும்.

11, 12. (அ) மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களில் இயேசு என்ன அருமையான புத்திமதிகளைக் கொடுத்திருக்கிறார்? (ஆ) பைபிளிலிருந்து நாம் வேறு எதைப் பற்றியும் கற்றுக்கொள்ளலாம்?

11 மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களில் இயேசு சில அருமையான புத்திமதிகளைக் கொடுத்திருக்கிறார். எப்படி சந்தோஷமாக இருப்பது, எப்படி மற்றவர்களோடு ஒத்துப்போவது, எப்படி ஜெபம் செய்வது, பணத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் இந்தப் புத்திமதிகளை 2,000 வருஷங்களுக்கு முன்பு கொடுத்திருந்தாலும் அவை இன்றும் ரொம்பப் பிரயோஜனமாக இருக்கின்றன.

12 பைபிளில் நிறைய நியமங்களையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பதற்கும், மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும், கடின உழைப்பாளிகளாக இருப்பதற்கும் அந்த நியமங்கள் நமக்கு உதவும். நாம் யாராக இருந்தாலும், எங்கு வாழ்ந்தாலும், எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்பட்டாலும் பைபிளில் இருக்கும் நியமங்கள் நமக்கு உதவும்.—ஏசாயா 48:17-ஐ வாசியுங்கள்; பின்குறிப்பு 3-ஐப் பாருங்கள்.

பைபிளில் இருக்கும் தீர்க்கதரிசனங்களை நீங்கள் நம்பலாம்

பாபிலோனின் அழிவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை ஒருவர் படிக்கிறார். அந்தச் சம்பவங்களை அவர் கற்பனை செய்து பார்க்கிறார்

பாபிலோனின் அழிவைப் பற்றி பைபிள் எழுத்தாளரான ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்னார்

13. பாபிலோனைப் பற்றி ஏசாயா என்ன சொல்லியிருந்தார்?

13 பைபிளில் இருக்கும் நிறைய தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறியிருக்கின்றன. உதாரணத்துக்கு, பாபிலோன் அழியும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார். (ஏசாயா 13:19) அந்த நகரம் எப்படி அழியும் என்பதற்கான தெளிவான விவரங்களையும் கொடுத்திருந்தார். பாபிலோனைப் பாதுகாக்க அதன் வாசல்களில் பெரிய கதவுகள் இருந்தன. அதோடு, நகரத்தைச் சுற்றி ஒரு ஆறும் ஓடியது. ஆனால், அந்த ஆறு வற்றிப்போகும் என்றும், நகரத்தின் வாசல்கதவுகள் திறந்து கிடக்கும் என்றும் ஏசாயா முன்கூட்டியே சொல்லியிருந்தார். போர் நடக்காமலேயே பாபிலோன் கைப்பற்றப்படும் என்றும் சொல்லியிருந்தார். அதைக் கைப்பற்றப்போகிறவரின் பெயர் கோரேஸ் என்பதையும்கூட சொல்லியிருந்தார்.—ஏசாயா 44:27–45:2-ஐ வாசியுங்கள்; பின்குறிப்பு 4-ஐப் பாருங்கள்.

14, 15. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?

14 ஏசாயா அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொல்லி 200 வருஷங்களுக்குப் பிறகு பாபிலோனைத் தாக்க ஒரு படை வந்தது. அந்தப் படை யாருடைய தலைமையில் வந்தது? ஏசாயா சொன்னபடியே, கோரேசின் தலைமையில் வந்தது; அவர் பெர்சிய நாட்டின் ராஜாவாக இருந்தார். ஏசாயா சொன்ன மற்ற விஷயங்களும் அப்படியே நடந்தன. எப்படி?

15 பெர்சியர்கள் பாபிலோனை ராத்திரியில் தாக்கியபோது பாபிலோனின் மக்கள் விருந்து கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். தங்களுடைய நகரத்தைச் சுற்றி ஓடிய ஆற்றையும் நகரத்தின் பெரிய மதில் சுவர்களையும் தாண்டி யாராலும் வர முடியாது என்று நினைத்தார்கள். ஆனால், கோரேசும் அவருடைய படையும் ஒரு கால்வாயை வெட்டி, ஆற்றின் தண்ணீரை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள். அதனால் அதன் நீர்மட்டம் குறைந்தது. பின்பு, பெர்சிய வீரர்கள் ஆற்றைக் கடந்துபோனார்கள். ஆனால், பாபிலோனின் மதில் சுவர்களை அவர்களால் தாண்டிப்போக முடிந்ததா? ஏசாயா சொன்னபடி நகரத்தின் வாசல்கதவுகள் திறந்தே இருந்ததால் அவர்கள் சுலபமாக நகரத்தின் உள்ளே போய், போர் செய்யாமலேயே அதைக் கைப்பற்றினார்கள்.

16. (அ) பாபிலோனுக்குக் காலப்போக்கில் என்ன நடக்கும் என்று ஏசாயா சொல்லியிருந்தார்? (ஆ) ஏசாயா சொன்னது நிறைவேறியது என்று எப்படிச் சொல்லலாம்?

16 பாபிலோன் காலப்போக்கில் மனுஷ நடமாட்டமே இல்லாத இடமாகிவிடும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்னார். “அங்கு இனி யாருமே குடியிருக்க மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக அது வெறுமையாகக் கிடக்கும்” என்று அவர் எழுதினார். (ஏசாயா 13:20) அது நிறைவேறியதா? முன்பு பாபிலோன் இருந்த இடம் இப்போது வெறும் மண்மேடாகத்தான் இருக்கிறது. அது ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரத்தின் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இன்றுகூட அங்கு மனுஷ நடமாட்டமே இல்லை. யெகோவா பாபிலோனை ‘அடியோடு அழித்துவிட்டார்.’—ஏசாயா 14:22, 23.b

பாபிலோன் இன்று மண்மேடாகக் கிடக்கிறது

பாபிலோன் இன்று மண்மேடாகக் கிடக்கிறது

17. கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளையும் நாம் ஏன் நம்பலாம்?

17 இதுவரை பைபிள் சொன்ன எல்லாமே நடந்திருப்பதால், எதிர்காலத்தைப் பற்றி அது சொல்வதும் நடக்கும் என்று நாம் நம்பலாம். யெகோவா தன்னுடைய வாக்குப்படி இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார். (எண்ணாகமம் 23:19-ஐ வாசியுங்கள்.) “பொய் சொல்ல முடியாத கடவுள் பல காலத்துக்கு முன்பே வாக்குறுதி தந்த முடிவில்லாத வாழ்வு என்ற நம்பிக்கை” நமக்கு இருக்கிறது.—தீத்து 1:3.c

பைபிள்—உங்கள் வாழ்க்கையையே மாற்றும்

18. “கடவுளுடைய வார்த்தை” பற்றி பவுல் என்ன எழுதினார்?

18 பைபிளைப் போல வேறு எந்தப் புத்தகமும் இல்லை என்று நாம் தெரிந்துகொண்டோம். அதில் இருக்கும் விஷயங்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன. அறிவியல் மற்றும் வரலாறு சம்பந்தமாக அது சொல்லும் விஷயங்கள் எப்போதுமே துல்லியமாக இருக்கின்றன. பைபிளில் புத்திமதிகளும் இருக்கின்றன. அதோடு, அதில் சொல்லப்பட்ட நிறைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன. பைபிளுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். அதன் அர்த்தம் என்ன?—எபிரெயர் 4:12-ஐ வாசியுங்கள்.

19, 20. (அ) உங்களையே நன்றாகத் தெரிந்துகொள்ள பைபிள் எப்படி உதவும்? (ஆ) பைபிள் என்ற பரிசுக்காக எப்படி நன்றி காட்டுவீர்கள்?

19 பைபிள் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். உங்களையே நன்றாகத் தெரிந்துகொள்ள அது உதவும். உங்களுடைய அடிமனதில் இருக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள அது உதவும். உதாரணத்துக்கு, கடவுள்மேல் நமக்கு அன்பு இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால், பைபிள் சொல்கிறபடி நடந்தால்தான் அதை நிரூபிக்க முடியும்.

20 பைபிள் உண்மையிலேயே கடவுள் தந்த புத்தகம்தான். நீங்கள் பைபிளை வாசிக்கவும் ஆராய்ந்து படிக்கவும் நெஞ்சார நேசிக்கவும் வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். இந்தப் பரிசுக்காக நன்றியோடு இருங்கள், அதைத் தொடர்ந்து படியுங்கள். அப்போது, மனிதர்களைக் கடவுள் ஏன் படைத்தார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் விவரமாகப் படிப்போம்.

a பைபிளில் இருக்கும் விஷயங்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் பைபிள் ஒரு கண்ணோட்டம் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 3-ஐயும் 31-ஐயும் பாருங்கள்.

b பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 27-29-ஐ வாசித்துப் பாருங்கள்.

c பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதற்கு ஒரு உதாரணம்தான் பாபிலோனுக்கு ஏற்பட்ட அழிவு. இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைத் தெரிந்துகொள்ள பின்குறிப்பு 5-ஐப் பாருங்கள்.

முக்கியக் குறிப்புகள்

உண்மை 1: பைபிள்—கடவுள் தந்த புத்தகம்

“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16

எந்தப் புத்தகத்தையும்விட பைபிள் எப்படி வித்தியாசமாக இருக்கிறது?

பைபிள் 2,800-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. அது கோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

வேறு எங்குமே கிடைக்காத தகவல்கள் பைபிளில் இருக்கின்றன.

  • 1 தெசலோனிக்கேயர் 2:13

    கடவுள்தான் பைபிளின் நூலாசிரியர்.

  • 2 பேதுரு 1:21

    கடவுள் மனிதர்களைப் பயன்படுத்தி தன்னுடைய எண்ணங்களை எழுதினார்.

உண்மை 2: பைபிள்—தீர்க்கதரிசனங்கள் அடங்கிய புத்தகம்

‘கடவுளால் பொய் சொல்ல முடியாது.’—தீத்து 1:3

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்?

  • ஏசாயா 44:27–45:2

    பாபிலோன் எப்படிக் கைப்பற்றப்படும் என்று எத்தனையோ வருஷங்களுக்கு முன்பே பைபிளில் சொல்லப்பட்டிருந்தது.

  • 2 தீமோத்தேயு 3:1-5

    பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம் நாளிலும் நிறைவேறுகின்றன.

  • எண்ணாகமம் 23:19

    எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களை நாம் நம்பலாம்.

உண்மை 3: பைபிள்—உங்களுக்கு உதவும் புத்தகம்

“யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன்.”—ஏசாயா 48:17

பைபிளைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • யோபு 26:7; ஏசாயா 40:22

    அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பைபிள் சொல்வது துல்லியமாக இருக்கிறது.

  • எண்ணாகமம் 20:2-12

    பைபிளை எழுதியவர்கள், நடந்ததையெல்லாம் நேர்மையாக எழுதினார்கள்.

  • மத்தேயு 5–7

    எப்படி சந்தோஷமாக இருப்பது, எப்படி மற்றவர்களோடு ஒத்துப்போவது, எப்படி ஜெபம் செய்வது, பணத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற விஷயங்களைப் பற்றி இயேசு புத்திமதிகள் கொடுத்தார்.

உண்மை 4: பைபிள்—உங்கள் வாழ்க்கையையே மாற்றும் புத்தகம்

“கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.”—எபிரெயர் 4:12

பைபிள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவும்?

  • கடவுளுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும்.

  • உங்களைப் பற்றி நீங்களே நன்றாகப் புரிந்துகொள்ள உதவும்.

  • கடவுள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

நீங்கள் பைபிளை வாசிக்கவும் அதை ஆராய்ந்து படிக்கவும் அதை நெஞ்சார நேசிக்கவும் வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்