வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஏப்ரல் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 26
“பஸ்கா மற்றும் நினைவுநாள் நிகழ்ச்சி—ஒற்றுமைகளும் வித்தியாசங்களும்”
மத் 26:18-க்கான nwtsty மீடியா
பஸ்கா உணவு
பஸ்காவின்போது சாப்பிட வேண்டியிருந்த உணவுகள் இவைதான்: நெருப்பில் வாட்டப்பட்ட ஆட்டுக்குட்டி (எந்த எலும்புகளும் முறிக்கப்படாத ஆட்டுக்குட்டி) (1); புளிப்பில்லாத ரொட்டி (2); கசப்பான கீரை (3). (யாத் 12:5, 8; எண் 9:11) இந்தக் கசப்பான கீரை, எகிப்தில் அடிமைகளாக இருந்த கசப்பான அனுபவத்தை இஸ்ரவேலர்களுக்கு அநேகமாக ஞாபகப்படுத்தியிருக்கும். புளிப்பில்லாத ரொட்டியை இயேசு தன்னுடைய பரிபூரணமான மனித உடலுக்கு அடையாளமாகப் பயன்படுத்தினார். (மத் 26:26) அப்போஸ்தலன் பவுல் இயேசுவை “நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார். (1கொ 5:7) முதல் நூற்றாண்டில், பஸ்கா உணவு பரிமாறப்பட்டபோது திராட்சமதுவும் (4) பரிமாறப்பட்டது. திராட்சமதுவை மனிதர்களுக்காகத் தான் சிந்திய இரத்தத்துக்கு அடையாளமாக இயேசு பயன்படுத்தினார்.—மத் 26:27, 28.
மத் 26:26-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
குறிக்கிறது: கிரேக்கில், ஈஸ்ட்டீன். இந்த வசனத்தில் இதன் அர்த்தம், “சுட்டிக்காட்டுகிறது; அடையாளப்படுத்துகிறது; பிரதிநிதித்துவம் செய்கிறது.” இந்த அர்த்தம் அப்போஸ்தலர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசுவின் பரிபூரண உடல் அவர்களுடைய கண்ணெதிரிலேயே இருந்தது; அவர்கள் சாப்பிடவிருந்த புளிப்பில்லாத ரொட்டியும் அவர்களுடைய கண் முன்னால் இருந்தது. அதனால், அந்த ரொட்டி இயேசுவின் நிஜமான உடலாக இருந்திருக்க முடியாது. இதே கிரேக்க வார்த்தை மத் 12:7-லும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. “கருத்து,” “பொருள்” என்றெல்லாம் சில பைபிள்களில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மத் 26:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை: யெகோவாவுக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் இயேசுவுடைய பலியின் மூலம் அமலுக்கு வந்தது. (எபி 8:10) ஒரு மத்தியஸ்தராக சீனாய் மலையில் இஸ்ரவேலர்களோடு திருச்சட்ட ஒப்பந்தத்தைச் செய்தபோது மோசே பயன்படுத்திய அதே வார்த்தைகளைத்தான் இயேசு இங்கே பயன்படுத்தியிருக்கிறார். (யாத் 24:8; எபி 9:19-21) கடவுளுக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையிலான திருச்சட்ட ஒப்பந்தத்தைக் காளைகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் எப்படி செல்லுபடியாக்கியதோ, அப்படித்தான் ஆன்மீக இஸ்ரவேலர்களோடு யெகோவா செய்யவிருந்த புதிய ஒப்பந்தத்தை இயேசுவின் இரத்தம் செல்லுபடியாக்கும். அந்த ஒப்பந்தம் கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில் அமலுக்கு வந்தது.—எபி 9:14, 15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 26:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதலாம் நாளில்: புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை பஸ்கா பண்டிகைக்கு (நிசான் 14) அடுத்த நாள், அதாவது நிசான் 15-ஆம் தேதி ஆரம்பமாகி, ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டது. (இணைப்பு B15-ஐப் பாருங்கள்) ஆனால் இயேசுவின் காலத்தில், பஸ்காவும் இந்தப் பண்டிகையும் பின்னிப்பிணைந்துவிட்டன; அதனால், நிசான் 14-ஆம் தேதி உட்பட அந்த எட்டு நாட்களும் சேர்த்து, “புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை” என்று சிலசமயங்களில் அழைக்கப்பட்டது. (லூ 22:1) இந்த வசனத்தில், “முதலாம் நாளில்” என்ற வார்த்தைகளை “முந்தின நாளில்” என்றும் மொழிபெயர்க்கலாம். (யோவா 1:15, 30-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்; “அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்” என்று அந்த வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது; ‘முன்பிருந்தே’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள ப்ரோட்டாஸ் என்ற கிரேக்க வார்த்தைதான் இந்த வசனத்தில் ‘முதலில்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) அதனால், மூல கிரேக்க வார்த்தைகளையும் யூதர்களின் வழக்கத்தையும் வைத்துப் பார்க்கும்போது, நிசான் 13-ஆம் தேதியில் சீஷர்கள் அந்தக் கேள்வியை இயேசுவிடம் கேட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நிசான் 13-ன் பகல் நேரத்தில் சீஷர்கள் பஸ்காவுக்காக ஏற்பாடுகளைச் செய்தார்கள். “சாயங்காலம் ஆனபோது,” அதாவது நிசான் 14 ஆரம்பமானபோது, பஸ்காவைக் கொண்டாடினார்கள்.—மாற் 14:16, 17.
மத் 26:39-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
இந்தக் கிண்ணம் . . . நீங்கும்படி செய்யுங்கள்: பைபிளில், “கிண்ணம்” என்பது அடையாள அர்த்தத்தில் கடவுளுடைய சித்தத்தை, அதாவது ஒருவருக்கு “நியமிக்கப்படும் பங்கை,” குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. தெய்வ நிந்தனையும் தேசத் துரோகமும் செய்த குற்றவாளி என்ற பெயரோடு சாவது கடவுளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கிவிடுமோ என்று இயேசு மிகவும் கவலைப்பட்டார்; அதனால்தான், இந்தக் “கிண்ணம்” தன்னைவிட்டு நீங்க வேண்டுமென்று ஜெபம் செய்தார்.
ஏப்ரல் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 27-28
“புறப்பட்டுப் போய், சீஷர்களாக்குங்கள்—ஏன், எங்கே, எப்படி?”
‘புறப்பட்டுப் போய் சீஷராக்குங்கள்’
4 இயேசுவுக்கு தமது சபையின் மீது அதிகாரம் இருக்கிறது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின் மீது 1914 முதற்கொண்டு அவர் அதிகாரம் செலுத்தி வந்திருக்கிறார். (கொலோசெயர் 1:13; வெளிப்படுத்துதல் 11:15) அவரே பிரதான தூதர், ஆகவே கோடிக்கணக்கான தூதர்கள் அடங்கிய பரலோக சேனை அவருடைய அதிகாரத்தில் இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:16; 1 பேதுரு 3:22; வெளிப்படுத்துதல் 19:14-16) அதோடு, நீதியுள்ள நியமங்களை எதிர்க்கும் “சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும்” அழிக்கிற அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. (1 கொரிந்தியர் 15:24-26; எபேசியர் 1:20-23) இயேசு உயிருள்ளோர் மீது மாத்திரமே அதிகாரம் செலுத்துவதில்லை. “அவர் உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் . . . நியாயாதிபதி” என்பதால் மரணத்தில் உறங்குகிறவர்களை உயிர்த்தெழுப்பும் அதிகாரத்தையும் கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 10:42; யோவான் 5:26-28) நிச்சயமாகவே, அவ்வளவு அதிகாரத்தைப் பெற்ற ஒருவர் கொடுக்கும் கட்டளையை மிக முக்கியமாக கருத வேண்டும். ஆகவே, ‘புறப்பட்டுப் போய், சீஷராக்குங்கள்’ என்ற கிறிஸ்துவின் கட்டளைக்கு நாம் மதிப்பு கொடுத்து மனப்பூர்வமாக கீழ்ப்படிகிறோம்.
மத் 28:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
எல்லா தேசத்தாரையும்: இதற்கான கிரேக்க வார்த்தைகளின் நேரடி அர்த்தத்தின்படி, இயேசுவின் சீஷர்கள் “எல்லா தேசங்களுக்கும்” கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் இந்த வார்த்தைகள், எல்லா தேசங்களையும் சேர்ந்த தனி நபர்களுக்குக் கற்றுக்கொடுப்பதைப் பற்றித்தான் சொல்கிறது. ஏனென்றால், ஞானஸ்நானம் கொடுங்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை ஒட்டுமொத்த ‘தேசங்களுக்கு’ ஞானஸ்நானம் கொடுப்பதை அல்ல, தேசங்களிலுள்ள தனி நபர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறிக்கிறது. ‘எல்லா தேசத்தாரிடமும்’ போக வேண்டுமென்ற கட்டளை புதிதாக இருந்தது. இயேசு ஊழியம் செய்த காலத்திற்கு முன்பு, மற்ற தேசத்தார் இஸ்ரவேலுக்கு வந்து இஸ்ரவேலர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க முடிந்தது. (1ரா 8:41-43) ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், மற்ற தேசத்தாரிடம் போய்ப் பிரசங்கிக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். இப்படி, சீஷராக்கும் வேலையைக் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.—மத் 10:1, 5-7; வெளி 7:9.
சீஷர்களாக்கி: இதற்கான கிரேக்க வினைச்சொல் மாத்தெட்யூயோ. “கற்றுக்கொடுத்து” என்று இதை மொழிபெயர்க்கலாம்; சீஷர்களாக்கும் குறிக்கோளோடு கற்றுக்கொடுப்பதை இது அர்த்தப்படுத்தலாம். (மத் 13:52-ல் இந்த வினைச்சொல் “கற்றுக்கொண்டு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; இதை “கற்றுக்கொடுக்கப்பட்டு” என்றும் மொழிபெயர்க்கலாம்.) “ஞானஸ்நானம் கொடுங்கள்,” “கற்றுக்கொடுங்கள்” என்ற வினைச்சொற்கள், ‘சீஷர்களாக்க’ வேண்டுமென்ற கட்டளையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
மத் 28:20-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்: ‘கற்றுக்கொடுப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை அறிவுரை சொல்வது, விளக்குவது, பக்குவமாக எடுத்துக் காட்டுவது, அத்தாட்சி அளிப்பது போன்றவற்றைக் குறிக்கிறது. (மத் 3:2; 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது, தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு வேலை. அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதும் அதில் அடங்கும்.—யோவா 13:17; எபே 4:21; 1பே 2:21.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மத் 27:51-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
ஆலயத்தின்: ஆலயம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, நாயோஸ். இந்த வசனத்தில் இந்த வார்த்தை, பரிசுத்த அறையும் மகா பரிசுத்த அறையும் சேர்ந்த முக்கியக் கட்டிடத்தைக் குறிக்கிறது.
திரைச்சீலை: அழகிய வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் இருந்தது. யூதப் பாரம்பரியத்தின்படி, இந்தக் கனமான திரைச்சீலையின் நீளம் சுமார் 18 மீ. (60 அடி), அகலம் சுமார் 9 மீ. (30 அடி), தடிமன் சுமார் 7 செ.மீ. (2.9 அங்.). யெகோவா இந்தத் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்ததன் மூலம், தன் மகனைக் கொன்றவர்கள்மேல் தன் கோபத்தைக் காட்டினார். அதோடு, பரலோகத்துக்குப் போகும் வாய்ப்பு அப்போது திறக்கப்பட்டதைக் காட்டினார்.—எபி 10:19, 20; சொல் பட்டியலைப் பாருங்கள்.
மத் 28:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள்: இயேசு உயிரோடு எழுப்பப்பட்டிருந்த செய்தி இந்தப் பெண்களிடம்தான் முதலில் சொல்லப்பட்டது; மற்ற சீஷர்களிடம் அதைத் தெரிவிக்கும்படியும் இவர்களிடம்தான் சொல்லப்பட்டது. (மத் 28:2, 5, 7) பைபிளுக்கு முரணான யூதப் பாரம்பரியத்தின்படி, நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, யெகோவாவின் தூதர் இந்தச் சந்தோஷமான வேலையைக் கொடுத்து இந்தப் பெண்களைக் கௌரவப்படுத்தினார்.
ஏப்ரல் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 1-2
“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
கூட்டமாக இருக்கிற அந்த அறையில் இயேசு கற்பித்துக்கொண்டிருக்கும்போது, பக்கவாத நோயாளி ஒருவனை நான்கு பேர் படுக்கையோடு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். தங்களுடைய நண்பனை இயேசு குணமாக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், கூட்டம் அதிகமாக இருப்பதால் “இயேசுவுக்குப் பக்கத்தில் அவனைக் கொண்டுபோக முடியவில்லை.” (மாற்கு 2:4) அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! அதனால், அவர்கள் தட்டையாக இருக்கிற வீட்டுக்கூரையின் மேல் ஏறி, ஓடுகளைப் பிரிக்கிறார்கள். பிறகு, அந்தப் பக்கவாத நோயாளியைப் படுக்கையோடு வீட்டுக்குள் இறக்குகிறார்கள்.
இதைப் பார்த்து இயேசுவுக்கு கோபம் வருகிறதா? இல்லவே இல்லை! அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து இயேசு அசந்துபோகிறார். அவர் பக்கவாத நோயாளியிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன” என்று சொல்கிறார். (மத்தேயு 9:2) இயேசுவினால் பாவங்களை மன்னிக்க முடியுமா? இயேசு சொன்னதைக் கேட்டு வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கோபப்படுகிறார்கள். “இந்த மனுஷன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் தெய்வ நிந்தனை செய்கிறான். கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று யோசிக்கிறார்கள்.—மாற்கு 2:7.
அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை இயேசு உடனடியாகப் புரிந்துகொள்கிறார். அதனால், “உங்கள் இதயத்தில் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? இந்தப் பக்கவாத நோயாளியிடம், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வது சுலபமா?” என்று கேட்கிறார். (மாற்கு 2:8, 9) இயேசு சீக்கிரத்தில் தன்னுடைய உயிரைப் பலியாகக் கொடுக்கப்போகிறார். அந்தப் பலியின் அடிப்படையில் அந்த மனிதனுடைய பாவத்தை அவரால் மன்னிக்க முடியும்.
மாற் 2:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சுலபமா: பாவங்களை மன்னிப்பதாகச் சொல்வது சுலபம்; ஏனென்றால், அதை நிரூபிப்பதற்கு எந்தக் கண்கூடான அத்தாட்சியும் தேவைப்படாது. ஆனால், எழுந்து . . . நட என்று சொல்லும்போது, ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டும். அப்போதுதான், பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் இயேசுவுக்கு இருப்பது எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும். இந்தப் பதிவும் ஏசா 33:24-வது வசனமும், நோயை நம்முடைய பாவ இயல்போடு சம்பந்தப்படுத்திப் பேசுகின்றன.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மாற் 1:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
நீ என் . . . மகன்: இயேசு பரலோகத்தில் கடவுளுடைய மகனாக இருந்தார். (யோவா 3:16) பூமியில் மனிதனாகப் பிறந்த சமயத்திலிருந்து, பரிபூரணமான ஆதாமைப் போலவே ‘கடவுளுடைய மகனாக’ இருந்தார். (லூ 1:35; 3:38) ஆனாலும், இயேசு யார் என்று மட்டுமே கடவுள் இங்கு குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. தன்னுடைய மகன் என்று சொல்லி தன்னுடைய சக்தியைப் பொழிந்ததன் மூலம், மனிதராக இருந்த இயேசு விசேஷமான விதத்தில் தன்னுடைய மகனாக ஆனதை அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. அதாவது, பரலோகத்துக்குத் திரும்பிப்போகும் நம்பிக்கையைப் பெற்றவராக இயேசு ‘மறுபடியும் பிறந்ததையும்,’ எதிர்கால ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் தன்னுடைய சக்தியால் நியமிக்கப்பட்டதையும் கடவுள் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.—யோவா 3:3-6; 6:51; ஒப்பிடுங்கள்: லூ 1:31-33; எபி 2:17; 5:1, 4-10; 7:1-3.
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்: வே.வா., “நான் உன்னை அங்கீகரிக்கிறேன்; உன்மேல் மிகவும் பிரியமாக இருக்கிறேன்; உன்னைக் குறித்துப் பூரிப்படைகிறேன்.” இதே வார்த்தைகளைத்தான் மத் 12:18-லும் வாசிக்கிறோம்; வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவை அல்லது கிறிஸ்துவைப் பற்றி ஏசா 42:1-ல் சொல்லப்பட்டிருந்ததை அது மேற்கோள் காட்டுகிறது. கடவுளுடைய சக்தி இயேசுமேல் பொழியப்பட்டதும், அவரைத் தன் மகனாகக் கடவுள் அறிவித்ததும், இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதற்குத் தெளிவான அடையாளங்களாக இருந்தன.
வானத்திலிருந்து ஒரு குரல்: சுவிசேஷப் புத்தகங்களில், யெகோவா மனிதர்களிடம் நேரடியாகப் பேசியதைப் பற்றிக் குறிப்பிடுகிற மூன்று பதிவுகளில் இது முதல் பதிவு.—மாற் 9:7; யோவா 12:28.
மாற் 2:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஓய்வுநாளுக்கும் எஜமானாக: இயேசு தன்னையே இப்படி அழைத்தார். (மத் 12:8; லூ 6:5) தன்னுடைய பரலோகத் தகப்பன் கொடுத்திருந்த வேலையை ஓய்வுநாளில் செய்யும் அதிகாரம் தனக்கு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். (ஒப்பிடுங்கள்: யோவா 5:19; 10:37, 38) அற்புதங்களிலேயே பெரிய அற்புதங்களை ஓய்வுநாள் சமயங்களில் இயேசு செய்தார்; உதாரணத்துக்கு, நோயாளிகளைக் குணப்படுத்தினார். (லூ 13:10-13; யோவா 5:5-9; 9:1-14) அவர் அப்படிச் செய்தது, ஓய்வுநாளைப் போன்ற அவருடைய ஆட்சியில் எப்படிப்பட்ட நிம்மதியைக் கொடுப்பார் என்பதைக் காட்டியதாகத் தெரிகிறது.—எபி 10:1.
ஏப்ரல் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 3-4
“ஓய்வுநாளில் குணப்படுத்துதல்”
ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி?
வேறொரு ஓய்வுநாளில், இயேசு ஒரு ஜெபக்கூடத்துக்குப் போகிறார். ஒருவேளை, அந்த ஜெபக்கூடம் கலிலேயாவில் இருந்திருக்கலாம். அங்கே வலது கை சூம்பிய ஒருவனை அவர் பார்க்கிறார். (லூக்கா 6:6) வேத அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு இயேசுவிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று கேட்கிறார்கள்; அவர்கள் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தக் கேள்வியே காட்டுகிறது.—மத்தேயு 12:10.
உயிரே போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டும்தான் ஓய்வுநாளில் குணப்படுத்த வேண்டும் என்று யூத மதத் தலைவர்கள் நினைக்கிறார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில் முறிந்த எலும்பைக் கட்டவோ, சுளுக்குக்குக் கட்டுப் போடவோ கூடாது என்று சொல்கிறார்கள். ஏனென்றால், இவையெல்லாம் உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள் கிடையாது. வேத அறிஞர்களும் பரிசேயர்களும் இந்தப் பாவப்பட்ட மனிதனின் மேலிருந்த அக்கறையால் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை, இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காகத்தான் இதைக் கேட்கிறார்கள்.
ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி?
அவர்கள் யோசிக்கிற விதம் தவறு என்று இயேசுவுக்குத் தெரியும். ஓய்வுநாளில் வேலை செய்யக் கூடாது என்ற சட்டம் இருந்தது உண்மைதான். (யாத்திராகமம் 20:8-10) ஆனால், எந்தெந்த வேலைகளைச் செய்யக் கூடாது என்பது சம்பந்தமாக இவர்களுக்குச் சில கருத்துகள் இருக்கின்றன. அவை அளவுக்கு அதிகமாக மக்களைக் கட்டுப்படுத்துகின்றன, வேதவசனங்களுக்கு முரணாக இருக்கின்றன என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். ஓய்வுநாளில் அவர் நல்லது செய்தபோதெல்லாம் இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை அவர் சந்தித்திருந்தார். இப்போது, கருத்து மோதலுக்காகக் களம் தயாராகிறது. ஏனென்றால், சூம்பிய கையுடைய அந்த மனிதனைப் பார்த்து, “எழுந்து வந்து நடுவில் நில்” என்று இயேசு சொல்கிறார்.—மாற்கு 3:3.
மாற் 3:5-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கோபத்தோடு . . . பார்த்தார்; . . . மிகவும் துக்கப்பட்டார்: இந்தச் சந்தர்ப்பத்தில், மதத் தலைவர்களின் இதயம் மரத்துப்போயிருந்ததை நினைத்து இயேசு துக்கப்பட்டதைப் பற்றி மாற்கு மட்டும்தான் பதிவு செய்திருக்கிறார். (மத் 12:13; லூ 6:10) எப்போதும் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய பேதுருதான், அநேகமாக மாற்குவிடம் இயேசுவின் உணர்ச்சிகளைப் பற்றி இவ்வளவு தத்ரூபமாக விவரித்திருப்பார்.—“மாற்கு புத்தகத்துக்கு அறிமுகம்” என்ற வீடியோவைப் பாருங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மாற் 3:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை: நிந்தனை என்பது கடவுளுக்கு அல்லது பரிசுத்தமான காரியங்களுக்கு எதிராகப் பேசப்படும் தவறான பேச்சை, மோசமான பேச்சை, அல்லது பழிப்பேச்சைக் குறிக்கிறது. ‘கடவுளுடைய சக்தி’ கடவுளிடமிருந்தே வருவதால், அது செயல்படுவதை வேண்டுமென்றே எதிர்ப்பதோ மறுப்பதோ கடவுளுக்கு எதிரான நிந்தனையாக இருந்தது. மத் 12:24, 28 மற்றும் மாற் 3:22 காட்டுகிறபடி, இயேசு அற்புதங்களைச் செய்தபோது கடவுளுடைய சக்தி அவரிடம் செயல்பட்டதை யூத மதத் தலைவர்கள் பார்த்தார்கள்; ஆனாலும், பிசாசாகிய சாத்தானுடைய சக்தியால்தான் அவர் அற்புதங்கள் செய்ததாகச் சொன்னார்கள்.
தீராத பாவத்துக்கே அவன் ஆளாவான்: வேண்டுமென்றே செய்யப்படும் பாவத்தைப் பற்றி இங்கே சொல்லப்பட்டுள்ளது. அதன் விளைவுகளை என்றென்றும் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட பாவத்தைப் போக்குவதற்கு எந்தப் பலியும் இல்லை.—முந்தின ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
நீங்கள் ‘அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்களா’?
6 இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இயேசு சொன்ன உதாரணத்தில் இருந்து நாம் 3 விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். ஒன்று, பைபிள் படிக்கிறவர்கள் வேகமாக முன்னேற்றம் செய்வதும் செய்யாததும் நம் கையில் இல்லை. அவர்கள் முன்னேற்றம் செய்வதற்கு நாம் என்னதான் உதவி செய்தாலும், ஞானஸ்நானம் எடுக்க சொல்லி அவர்களை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், முழு மனதோடு யெகோவாமீது அன்பு காட்டும் ஆட்களைத்தான் யெகோவாவுக்கு பிடிக்கும்.—சங். 51:12; 54:6; 110:3.
7 இரண்டாவதாக, நம்மோடு பைபிள் படிக்கிறவர்கள் முன்னேற்றம் செய்யும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும், சோர்ந்து போய்விடக் கூடாது. (யாக். 5:7, 8) ஒருவேளை, அவர்கள் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்றால், நாம் ஒழுங்காக பைபிள் படிப்பு எடுக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், மனத்தாழ்மையாக இருக்கிறவர்கள் மட்டும்தான் நாம் சொல்கிற செய்தியை கேட்டு மாற்றங்கள் செய்வார்கள். அப்படிப்பட்ட மனது இருக்கிற ஆட்களுக்குத்தான் யெகோவா உதவுவார். (மத். 13:23) நம்முடைய பைபிள் படிப்புகள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்தால்தான் நாம் நன்றாக ஊழியம் செய்கிறோம் என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால், நாம் எந்தளவு முயற்சி எடுக்கிறோம் என்றுதான் யெகோவா பார்க்கிறார்.—லூக்கா 10:17-20-ஐயும்; 1 கொரிந்தியர் 3:8-ஐயும் வாசியுங்கள்.
8 மூன்றாவதாக, பைபிள் படிக்கிறவர்களுடைய மனதிற்குள் என்ன மாற்றம் நடக்கிறது என்று நம்மால் பார்க்க முடியாது. இப்போது, ஒரு கணவன்-மனைவியுடைய அனுபவத்தை பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு மிஷனரி சகோதரர் பைபிள் படிப்பு எடுத்தார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அவர்கள் ஊழியத்திற்குப் போக ஆசைப்பட்டார்கள். அதை பற்றி அந்த மிஷனரி சகோதரரிடம் சொன்னார்கள். அதற்கு, கணவனும் மனைவியும் சிகரெட் பிடிப்பதை விடவேண்டும் என்று அந்த சகோதரர் சொன்னார். அவர்கள் இரண்டு பேரும் சிகரெட் பிடிப்பதை ரொம்ப நாட்களுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக அந்த சகோதரரிடம் சொன்னார்கள். அதைக் கேட்டதும் அந்த சகோதரர் ரொம்ப ஆச்சரியப்பட்டார். ஏனென்றால், அவர்கள் இரண்டு பேரும் அந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தியது இவருக்கு தெரியவே தெரியாது. அந்த கணவனும் மனைவியும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதற்கு என்ன காரணம்? ரகசியமாக சிகரெட் பிடிப்பதை மனிதர்கள் பார்க்கவில்லை என்றாலும் யெகோவா பார்க்கிறார் என்று அவர்கள் இரண்டு பேரும் புரிந்துகொண்டார்கள். அதனால், இனிமேல் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். யெகோவாமீது இருந்த அன்பினால்தான் இவ்வளவு பெரிய மாற்றத்தை அந்த கணவனும் மனைவியும் செய்தார்கள். ஆனால், அவர்கள் செய்த மாற்றம் அந்த சகோதரருக்கு தெரியவே இல்லை.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மாற்கு 4:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்: விதைக்கிறவனைப் பற்றிய உவமையைச் சொல்வதற்கு முன்பு, “கேளுங்கள்” என்று இயேசு சொன்னார். (மாற் 4:3) அந்த உவமையின் முடிவில்தான், “கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்ற அறிவுரையைக் கொடுத்தார். இப்படி, தன் சீஷர்கள் தன்னுடைய ஆலோசனையைக் கவனமாகக் கேட்டு நடப்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். இதேபோன்ற அறிவுரைகள் பின்வரும் வசனங்களிலும் இருக்கின்றன: மத் 11:15; 13:9, 43; மாற் 4:23; லூ 8:8; 14:35; வெளி 2:7, 11, 17, 29; 3:6, 13, 22; 13:9.
ஏப்ரல் 30–மே 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 5-6
“இறந்துபோன நம் அன்பானவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்பும் சக்தி இயேசுவுக்கு இருக்கிறது”
மாற் 5:39-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்: பைபிளில் சாவு பெரும்பாலும் தூக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது. (சங் 13:3, அடிக்குறிப்பு; யோவா 11:11-14; அப் 7:60, அடிக்குறிப்பு; 1கொ 7:39, அடிக்குறிப்பு; 15:51; 1தெ 4:13, அடிக்குறிப்பு) இயேசு அந்தச் சிறுமியை உயிரோடு எழுப்பவிருந்தார். அதனால், ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் நபர்களை எப்படி எழுப்ப முடியுமோ, அப்படித்தான் மரணம் அடைந்தவர்களையும் எழுப்ப முடியும் என்பதை அவர் காட்டவிருந்ததால் இப்படிச் சொல்லியிருப்பார். “இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவரும் நடக்கப்போகிறவற்றை நடந்ததுபோல் சொல்கிறவருமான” தன் தகப்பன் தந்த சக்தியால்தான் இயேசு அந்தச் சிறுமியை உயிரோடு எழுப்பினார்.—ரோ 4:17.
ஒரு சிறுமி உயிரோடு எழுப்பப்படுகிறாள்
பொதுவாக, தான் குணப்படுத்துகிற ஆட்களிடம் அதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சொல்வார். அதைத்தான் யவீருவிடமும் அவருடைய மனைவியிடமும்கூட சொல்கிறார். ஆனாலும், இந்தச் செய்தி “அந்தப் பகுதியெங்கும்” பரவுகிறது. (மத்தேயு 9:26) உங்களுக்குப் பிரியமான ஒருவர் உயிரோடு எழுப்பப்படுவதை நீங்கள் பார்த்தால், அதைப் பற்றி எல்லாரிடமும் சந்தோஷமாகச் சொல்ல மாட்டீர்களா? பைபிள் பதிவுகளின்படி, இது இயேசு செய்த இரண்டாவது உயிர்த்தெழுதல்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மாற் 5:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சொந்தக்காரர்களிடம் சொல்: பொதுவாக, தான் செய்த அற்புதங்களைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்றுதான் இயேசு அறிவுரை தருவார். (மாற் 1:44; 3:12; 7:36) ஆனால் இந்த முறை, நடந்ததைப் பற்றி “உன் சொந்தக்காரர்களிடம் சொல்” என்று அந்த மனிதனிடம் சொன்னார். அந்தப் பகுதியைவிட்டுப் போகும்படி தன்னிடம் சொல்லப்பட்டிருந்ததால், தன்னால் சாட்சி கொடுக்க முடியாத ஆட்களிடம் அந்த மனிதனையே சாட்சி கொடுக்க அவர் சொல்லியிருக்கலாம். அதுமட்டுமல்ல, பன்றிகள் செத்துப்போனதால் தன்னைப் பற்றி வதந்திகள் பரவலாம் என்று அவர் நினைத்திருக்கலாம்; அதைத் தடுப்பதற்காக அந்த மனிதனிடம் அப்படிச் சொல்லியிருக்கலாம்.
மாற் 6:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
உங்கள் பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்: இப்படிச் செய்வது, இனி கடவுள் கொடுக்கப்போகும் தீர்ப்புக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று சீஷர்கள் சொல்வதற்கு அடையாளமாக இருந்தது. இதே வார்த்தைகள் மத் 10:14; லூ 9:5 ஆகிய வசனங்களிலும் வருகின்றன. மாற்குவின் பதிவிலும் லூக்காவின் பதிவிலும், இது அவர்களுக்கு ஒரு [அல்லது, “அவர்களுக்கு எதிரான”] சாட்சியாக இருக்கும் என்ற கூடுதலான வார்த்தைகளும் வருகின்றன. பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் பவுலும் பர்னபாவும் இந்த அறிவுரையைப் பின்பற்றினார்கள் (அப் 13:51); பவுல் கொரிந்துவில் இருந்தபோதும், இதேபோன்ற ஒன்றைச் செய்தார். அதாவது, தன் உடையை உதறி, “இனி உங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு, நான் பொறுப்பல்ல” என்று விளக்கினார். (அப் 18:6) இப்படிப்பட்ட சைகைகள், சீஷர்களுக்குப் புதிதாக இருந்திருக்காது. ஏனென்றால், மற்ற தேசங்களுக்குப் போய்விட்டுத் திரும்பிய யூதர்கள் தங்களுடைய பாதங்கள் அசுத்தமாகிவிட்டதாக நினைத்தார்கள்; அதனால், தங்களுடைய தேசத்துக்குள் மறுபடியும் நுழைவதற்கு முன்னால் தங்கள் செருப்புகளில் படிந்திருந்த தூசியை உதறிப்போட்டார்கள். ஆனால் இயேசு, அநேகமாக வேறொரு அர்த்தத்தில்தான் இந்த அறிவுரைகளைத் தன் சீஷர்களுக்குக் கொடுத்திருப்பார்.