வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மே 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 7–8
“உன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வா”
மாற் 8:34-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
அவர் தன்னையே துறந்து: வே.வா., “தனக்குரிய எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்து.” ஒருவர் தன்னையே முழுமையாகத் துறந்துவிட, அதாவது தனக்குத்தானே மறுப்பு சொல்லிவிட, அல்லது கடவுளிடம் தன்னையே முழுமையாக ஒப்படைத்துவிட மனமுள்ளவராக இருப்பதை இது குறிக்கிறது. இதற்கான கிரேக்க வார்த்தைகளை, “தனக்குத்தானே வேண்டாம் என்று சொல்லி” என்றும் மொழிபெயர்க்கலாம். இது பொருத்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால், ஒருவர் தன்னையே துறக்கும்போது, தன்னுடைய ஆசைகளையும் லட்சியங்களையும் சௌகரியங்களையும் வேண்டாமென்று ஒதுக்க வேண்டியிருக்கலாம், அதாவது அவற்றுக்கு மறுப்பு சொல்ல வேண்டியிருக்கலாம். (2கொ 5:14, 15) இயேசுவைத் தெரியாது என்று சொல்லி பேதுரு மறுத்ததைப் பற்றி விவரிக்கும்போதும் மாற்கு அதே கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.—மாற் 14:30, 31, 72.
w92 11/1 17 ¶14
ஜீவனுக்கான பந்தயத்தில் நீங்கள் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?
14 “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, (“வேண்டாம்” என்று தனக்கே அவன் சொல்லிக்கொள்ள வேண்டும், சார்ல்ஸ் B. வில்லியம்ஸ்-ன் மொழிபெயர்ப்பு) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்,” என்று இயேசு கிறிஸ்து சீஷர்களும், மற்றவர்களும் அடங்கியிருந்த கூட்டத்தை நோக்கிச் சொன்னார். (மாற்கு 8:34) இந்த அழைப்பை நாம் பெற்றுக்கொள்ளும்போது, நாம் அதை “தொடர்ந்து” செய்வதற்கு தயாராயிருக்க வேண்டும். சுய-நலன் தவிர்ப்பு ஏதோ விசேஷ மதிப்பு இருப்பதன் காரணமாக அல்ல. ஒரு கணம் அறியாப்பிழை செய்து விடுதல், நல்ல தீர்ப்பு செய்வதில் தவறி விடுதல் ஆகியவை ஏற்கெனவே உருவாக்கிய அனைத்தையும் துடைத்தழித்துவிடும், நம்முடைய நித்திய நலனையும்கூட இடருக்கு உட்படுத்தும். பொதுவாக ஆவிக்குரிய வளர்ச்சியின் வேகம் மெதுவாக இருக்கிறது. ஆனால் நாம் எப்போதும் கவனமாக இல்லையென்றால் அது எவ்வளவு விரைவாகப் பயனற்றுப் போகும்!
நித்திய ஜீவனைப் பெற என்ன தியாகம் செய்வீர்கள்?
3 அதே சந்தர்ப்பத்தில், சிந்தனையைத் தூண்டும் இரண்டு கேள்விகளை இயேசு கேட்டார். “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” என்றும், “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்றும் கேட்டார். (மாற். 8:36, 37) முதல் கேள்விக்கான பதில் நன்றாகத் தெரிந்ததே. மனிதன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை இழந்துவிட்டால் அவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவன் உயிரோடிருந்தால்தான் சொத்துசுகங்களை அனுபவிக்க முடியும். “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என இயேசு கேட்ட இரண்டாவது கேள்வி, யோபுவின் காலத்தில் சாத்தான் சுமத்திய குற்றச்சாட்டை அங்கிருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கலாம். ‘தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்’ என்று சாத்தான் சொன்னான். (யோபு 2:4) யெகோவாவை வணங்காத சிலருக்கு, சாத்தான் சொன்னது சரியெனப் படலாம். அநேகர், தங்கள் ஜீவனைக் காப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள்; தங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடவும் துணிவார்கள். ஆனால், கிறிஸ்தவர்களின் கண்ணோட்டமே வேறு.
4 மனிதருக்கு இவ்வுலகில் நோயில்லா வாழ்வையும், வசதி வாய்ப்புகளையும், நீண்ட ஆயுளையும் அருளுவதற்காக இயேசு பூமிக்கு வரவில்லை என்பது நமக்குத் தெரியும். மாறாக, புதிய உலகில் என்றென்றும் வாழும் வாய்ப்பை அருளுவதற்காகவே அவர் வந்தார்; இந்த வாழ்க்கையை நாம் பொக்கிஷமாகக் கருதுகிறோம். (யோவா. 3:16) இயேசுவின் முதல் கேள்வியை ஒரு கிறிஸ்தவர் இவ்வாறுதான் புரிந்துகொள்வார்: ‘மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையை இழந்துவிட்டால் அவனுக்கு லாபம் என்ன?’ ஒரு லாபமும் இல்லை என்பதே அதற்கான பதில். (1 யோ. 2:15–17) இயேசுவின் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்க நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘புதிய உலகில் வாழும் என்னுடைய நம்பிக்கை நிறைவேறுவதற்கு இன்று என்ன தியாகங்களைச் செய்ய நான் தயாராய் இருக்கிறேன்?’ இந்தக் கேள்விக்கு, நாம் வாழும் விதமே பதிலளிக்கும்; நம் இருதயத்தில் அந்த நம்பிக்கை எந்தளவு வேரூன்றி இருக்கிறது என்பதை அது காட்டும்.—யோவான் 12:25-ஐ ஒப்பிடுங்கள்.
மனிதகுமாரன் யார்?
இயேசுவின் அங்கீகாரம் வேண்டுமென்றால், அவருடைய சீஷர்கள் தைரியமாக இருக்க வேண்டும்; தியாகங்கள் செய்ய வேண்டும். “விசுவாசதுரோகமும் பாவமும் செய்கிற இந்தத் தலைமுறையினரில் ஒருவன் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவார்” என்று இயேசு சொல்கிறார். (மாற்கு 8:38) இயேசு அப்படி வரும்போது, “அவரவருடைய நடத்தைக்கு ஏற்றபடி அவரவருக்குப் பலன் கொடுப்பார்.”—மத்தேயு 16:27.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
சீடர்கள் கை கழுவாததைப் பற்றி இயேசுவின் எதிரிகள் ஏன் குறை சொன்னார்கள்?
▪ இயேசுவின் எதிரிகள், அவரிடமும் அவருடைய சீடர்களிடமும் கண்டுபிடித்த குறைகளில் இதுவும் ஒன்று. எவையெல்லாம் ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்பதைப் பற்றி மோசேயின் திருச்சட்டத்தில் இருந்தது. உதாரணத்துக்கு, ஆண் அல்லது பெண்ணுடைய பிறப்புறுப்புகளில் கசிவு ஏற்பட்டாலோ, தொழுநோய் வந்தாலோ, மனிதருடைய அல்லது மிருகங்களுடைய பிணங்களைத் தொட்டாலோ ஒருவர் தீட்டுப்படலாம். சுத்தமாவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதும் திருச்சட்டத்தில் இருந்தது. பலிகளைக் கொடுப்பது, கழுவுவது அல்லது தெளிப்பதன் மூலம் இது செய்யப்பட்டது.—லேவி. அதிகாரங்கள் 11-15; எண். அதிகாரம் 19.
யூத மத ரபீக்கள், இந்தச் சட்டங்களில் இருந்த ஒவ்வொரு நுணுக்கமான விவரங்களுக்கும் புதுப்புது சட்டங்களைப் போட்டார்கள். ஒருவரை எது தீட்டுப்படுத்தலாம், அந்த நபர் மற்றவர்களை எப்படித் தீட்டுப்படுத்திவிடலாம் என்பதைப் பற்றி அவர்கள் கூடுதலான சட்டங்களைச் சேர்த்துக்கொண்டதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எந்த மாதிரியான பாத்திரங்களும் பொருள்களும் ஒருவரைத் தீட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றியும், மக்கள் மறுபடியும் சுத்தமாவதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளைப் பற்றியும் அவர்கள் சட்டங்கள் போட்டார்கள்.
இயேசுவின் எதிரிகள் அவரிடம், “உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காமல் ஏன் தீட்டான கைகளால் சாப்பிடுகிறார்கள்?” என்று கேட்டார்கள். (மாற். 7:5) கை கழுவாமல் சாப்பிடுவது சுகாதாரமாக இருக்காது என்ற அர்த்தத்தில் அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. சடங்காச்சார முறைப்படி, சாப்பிடுவதற்கு முன்பு கைகள்மீது தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று யூத மத ரபீக்கள் சொல்லியிருந்தார்கள். “எந்தப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும், எப்படிப்பட்ட தண்ணீர் ஊற்ற வேண்டும், யார் தண்ணீர் ஊற்ற வேண்டும், எதுவரை கைகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும்” என்பதைப் பற்றியும் அவர்கள் விவாதம் செய்ததாக இங்கே சொல்லப்பட்ட ஆராய்ச்சி சொல்கிறது.
இஷ்டத்துக்குச் சட்டங்களைப் போட்ட யூத மதத் தலைவர்களிடம் இயேசு என்ன சொன்னார்? “வெளிவேஷக்காரர்களான உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்; ‘இந்த மக்கள் தங்களுடைய உதடுகளால் என்னைப் போற்றிப் புகழ்கிறார்கள், இவர்களுடைய இருதயமோ என்னைவிட்டுத் தூரமாய் விலகியிருக்கிறது. இவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனென்றால் மனிதர்களுடைய கட்டளைகளைக் கடவுளுடைய கோட்பாடுகளாக இவர்கள் கற்பிக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார்; அதன்படியே, நீங்கள் கடவுளுடைய கட்டளையை விட்டுவிட்டு மனிதர்களுடைய பாரம்பரியத்தைப் பிடித்துக்கொள்கிறீர்கள்” என்று சொன்னார்.—மாற். 7:6-8.
உங்களுக்கு “கிறிஸ்துவின் சிந்தை” இருக்கிறதா?
9 அந்த மனிதன் செவிடனாகவும் சரியாக பேச முடியாதவனாகவும் இருந்தான். இவனுடைய பயத்தை அல்லது கூச்சத்தை இயேசு உணர்ந்திருக்கலாம். பின்பு இயேசு சற்று வழக்கத்திற்கு மாறான ஒன்றை செய்தார். ஜனக்கூட்டத்திலிருந்து ஒதுக்கமான ஓரிடத்திற்கு அந்த மனிதனை தனியே அழைத்துச் சென்றார். பின்பு தாம் செய்யப்போவதை அந்த மனிதனுக்கு சைகைகளால் தெரிவித்தார். ‘தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டார்.’ (மாற்கு 7:33) அடுத்தபடியாக, இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, ஜெபம் செய்தவாறே பெருமூச்சுவிட்டார். இவ்வாறு, ‘நான் உனக்குச் செய்யவிருப்பது கடவுளுடைய வல்லமையினாலேயே’ என்பதை அந்த மனிதனுக்கு சொல்லாமல் சொன்னார். கடைசியாக இயேசு, “திறக்கப்படுவாயாக” என்று சொன்னார். (மாற்கு 7:34) அப்போது, அந்த மனிதனின் செவி திறந்தது, இப்பொழுது அவனால் இயல்பாக பேசவும் முடிந்தது.
10 மற்றவர்களிடம் எப்பேர்ப்பட்ட கரிசனையை இயேசு காட்டினார்! அவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொண்டார், இத்தகைய பரிவிரக்கம் அவர்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்தாத வகைகளில் செயல்பட அவரை உந்துவித்தது. இந்த விஷயத்தில், கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் சிந்தையை வளர்க்கவும் செயலில் காட்டவும் வேண்டும். பைபிள் நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: ‘நீங்களெல்லாரும் ஒரே மனதும் அனுதாபமும் சகோதர சிநேகமும் உருக்கமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாயிருங்கள்.’ (1 பேதுரு 3:8, தி.மொ.) இது நிச்சயமாகவே, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு கவனம் செலுத்தும் விதத்தில் நாம் பேசுவோராயும் செயல்படுவோராயும் இருக்கும்படி நம்மை செய்கிறது.
11 சபையில் மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்து, நம்மை மற்றவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புவோமோ அவ்வாறே அவர்களை நடத்துவதன்மூலம் பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு காட்டலாம். (மத்தேயு 7:12) இது, நாம் என்ன சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதைப் பற்றி கவனமாய் இருப்பதையும் உட்படுத்துகிறது. (கொலோசெயர் 4:6) ‘யோசனையின்றி பேசும் வார்த்தைகள் பட்டயத்தைப்போல் குத்தும்’ என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 12:18, தி.மொ.) குடும்பத்தில் என்ன செய்வது? உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிக்கும் கணவனும் மனைவியும் பிறருடைய உணர்ச்சிகளை மதித்து நடந்துகொள்வார்கள். (எபேசியர் 5:33) கடுகடுத்த வார்த்தைகளையும், குறைகூறுதலையும், குத்தலான பேச்சையும் தவிர்க்கிறார்கள். இவை யாவும் எளிதில் ஆறாத புண்பட்ட உணர்ச்சிகளை உண்டாக்கலாம். சிறுபிள்ளைகளுக்கும் உணர்வுகளுண்டு, அன்புள்ள பெற்றோர் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். பிள்ளைகளை திருத்த வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது, அவர்களது மதிப்பு குறையாதவாறு கண்டிப்பார்கள். இதனால் பிள்ளைகள் தேவையின்றி மனசங்கடம் அடைவதை தவிர்ப்பார்கள். (கொலோசெயர் 3:21) இவ்வாறு நாம் மற்றவர்களிடம் கரிசனை காட்டுகையில், கிறிஸ்துவின் சிந்தை நமக்கு இருக்கிறதென்று காட்டுகிறோம்.
கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு:
உங்களுடைய அருமையான பிள்ளைகள் யெகோவாவை நேசிக்க வேண்டுமென்றும், தங்களுடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்றும் ஒரு பெற்றோராக நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஞானஸ்நானத்துக்குத் தகுதிபெற நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவுவீர்கள்? இந்த முக்கியமான படியை எடுக்க அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்? இயேசு, தன்னைப் பின்பற்றியவர்களிடம் இப்படிச் சொன்னார்: “எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுங்கள்.” (மத். 28:19) இந்த வசனத்தின்படி, ஞானஸ்நானத்துக்கான முக்கியத் தகுதி ஒரு சீஷராக ஆவதுதான், அதாவது, கிறிஸ்துவின் போதனைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நம்புவது மட்டுமில்லாமல் அவற்றை நெருக்கமாகப் பின்பற்றுவதுதான். இதைச் சின்னப் பிள்ளைகளாலும்கூட செய்ய முடியும்.
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருங்கள்; யெகோவாவின் போதனைகளை அவர்களுடைய மனதில் பதிய வையுங்கள். (உபா. 6:6-9) அவர்களுக்கு அடிப்படை பைபிள் சத்தியங்களைச் சொல்லிக்கொடுத்து, பைபிள் நியமங்களின் அடிப்படையில் சிந்திக்க உதவுங்கள்; அதற்காக, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? மற்றும் ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகங்களைப் பயன்படுத்துங்கள். சொந்த வார்த்தையில் தங்களுடைய நம்பிக்கைகளை விளக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். (1 பே. 3:15) தனிப்பட்ட படிப்பிலிருந்தும், சபைக் கூட்டங்களிலிருந்தும், நல்ல நண்பர்களிடமிருந்தும், உங்களிடமிருந்தும் அவர்கள் பெற்றுக்கொள்கிற அறிவும் உற்சாகமும் ஞானஸ்நானம் என்ற படியை நோக்கி முன்னேற அவர்களுக்கு உதவும்; அதற்குப் பிறகும்கூட முன்னேற்றம் செய்ய அவர்களுக்கு உதவும். ஆன்மீகக் குறிக்கோள்களை வைக்க அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
நீதிமொழிகள் 20:11 இப்படிச் சொல்கிறது: “சிறுபிள்ளையைக்கூட அவனுடைய செயலை வைத்தே எடைபோட முடியும். அவனுடைய நடத்தை சுத்தமாகவும் சரியாகவும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்.” அப்படியானால், உங்கள் மகனோ மகளோ இயேசு கிறிஸ்துவின் சீஷராக ஆகிவிட்டதையும் ஞானஸ்நானத்துக்குத் தயாராகிவிட்டதையும் அவர்களுடைய செயல்களை வைத்து எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?
ஞானஸ்நானத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளை தன்னுடைய பெற்றோருக்குக் கண்டிப்பாகக் கீழ்ப்படிய வேண்டும். (கொலோ. 3:20) 12 வயது சிறுவனாக இருந்த இயேசு “தொடர்ந்து [தன்னுடைய பெற்றோருக்கு] கட்டுப்பட்டு நடந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (லூக். 2:51) உண்மைதான், உங்களுடைய பிள்ளையிடமிருந்து நீங்கள் பரிபூரணத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், ஞானஸ்நானம் எடுக்க விரும்பும் பிள்ளைகள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற கடுமையாக முயற்சி செய்வார்கள்; தங்களுடைய பெற்றோருக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.
அதோடு, பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். (லூக். 2:46) கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதற்கும் அதில் பங்குகொள்வதற்கும் உங்கள் பிள்ளைகள் விரும்புகிறார்களா? (சங். 122:1) பைபிள் வாசிப்பையும் தனிப்பட்ட படிப்பையும் ஆசை ஆசையாகச் செய்கிறார்களா?—மத். 4:4.
ஞானஸ்நானத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்கே முதலிடம் தருவார்கள். (மத். 6:33) ஞானஸ்நானம் எடுக்காத ஒரு பிரஸ்தாபியாகத் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை எப்போதும் மனதில் வைத்திருப்பார்கள்; வெளி ஊழியத்துக்குப் போய் ஆட்களிடம் பேச தாங்களாகவே முன்வருவார்கள். ஊழியத்தின் வித்தியாசமான அம்சங்களில் பங்குகொள்வார்கள்; தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று தங்களுடைய பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் சொல்வதற்கு வெட்கப்பட மாட்டார்கள். அதோடு, வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் தங்களுக்குக் கொடுக்கப்படுகிற நியமிப்புகளைப் பொறுப்பாகச் செய்வார்கள்.
அதோடு, கெட்ட சகவாசங்களை அறவே தவிர்ப்பதன் மூலம் ஒழுக்கச் சுத்தத்தைக் காத்துக்கொள்ள கடுமையாக முயற்சி எடுப்பார்கள். (நீதி. 13:20; 1 கொ. 15:33) இசை, திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் போன்ற விஷயங்களில் அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் கெட்ட சகவாசத்தை அவர்கள் தவிர்க்கிறார்கள் என்பதைக் காட்டும்.
பெற்றோர்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பலனாக, நிறைய பிள்ளைகள் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், இளம் வயதிலேயே ஞானஸ்நானத்துக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். அதனால் பெற்றோர்களே, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவுகிற இந்த முக்கியமான படியை எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்; அதற்காக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பாராக!
மே 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 9–10
“விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஒரு தரிசனம்”
கிறிஸ்து—தீர்க்கதரிசனங்களின் மையம்
9 தாமே மேசியா என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை இயேசு அளித்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகிவிட்டிருக்கிறது. பொ.ச. 32-ம் வருடத்தின் பஸ்கா பண்டிகையும் முடிந்துவிட்டிருக்கிறது. துன்புறுத்தல், பொருளாசை அல்லது வாழ்க்கை கவலைகள் காரணமாகவோ என்னவோ, அநேக விசுவாசிகள் அவரைப் பின்பற்றுவதையே நிறுத்திவிட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் குழப்பமோ ஏமாற்றமோ அடைந்திருக்கலாம், ஏனெனில் அவரை ராஜாவாக்குவதற்கு ஜனங்கள் முயற்சி செய்தபோது அவர் மறுத்துவிட்டிருந்தார். அதோடு, யூத மதத் தலைவர்கள் வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காண்பிக்குமாறு சவால்விட்டபோது தமக்கு மகிமை உண்டாகும் விதத்தில் எந்தவொரு அடையாளத்தைக் கொடுக்கவும் அவர் மறுத்துவிட்டிருந்தார். (மத்தேயு 12:38, 39) அவர் அப்படி மறுத்தது சிலரைக் குழப்பமடையச் செய்திருக்கலாம். அதுமட்டுமல்ல, சீஷர்களால் கிரகித்துக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை, அதாவது “தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலை” செய்யப்படவிருந்த விஷயத்தை அவர் சொல்ல ஆரம்பித்திருந்தார்.—மத்தேயு 16:21-23.
10 இன்னும் சுமார் ஒன்பது அல்லது பத்து மாதங்களில் “இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான” வேளை வந்துவிடும். (யோவான் 13:1) அதனால் தம்முடைய உண்மையுள்ள சீஷர்கள் மீதிருந்த ஆழ்ந்த அக்கறையினால், அவர்களில் சிலருக்கு வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காண்பிக்கப் போவதாக வாக்குறுதி அளிக்கிறார்; ஆம், உண்மையற்ற யூதர்களுக்கு எதை மறுத்தாரோ அதையே இவர்களில் சிலருக்குச் செய்துகாட்டப் போவதாக வாக்குறுதி அளிக்கிறார். “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷ குமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என கூறுகிறார். (மத்தேயு 16:28) 1914-ல் மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் வரை தம் சீஷர்களில் சிலர் உயிரோடு இருப்பார்கள் என்பதை அவர் இங்கு அர்த்தப்படுத்தவே இல்லை. மாறாக, ராஜ்ய வல்லமையில் தாம் பெறப்போகும் மகிமையைப் பற்றிய, கண்ணைப் பறிக்கும் ஒரு தரிசனத்தை மிக நெருக்கமான தம்முடைய மூன்று சீஷர்களுக்குக் காண்பிக்க வேண்டுமென்பதே அவருடைய மனதில் இருந்தது. இந்த முற்காட்சி மறுரூபமாகுதல் என அழைக்கப்படுகிறது.
கிறிஸ்து—தீர்க்கதரிசனங்களின் மையம்
11 ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு உயர்ந்த ஒரு மலைக்கு அழைத்துச் செல்கிறார்; அது எர்மோன் மலையிலுள்ள ஒரு மேட்டுப்பகுதியாக இருந்திருக்கலாம். அங்கே இயேசு ‘அவர்களுக்கு முன்பாக மறுரூபமாகிறார்; அவர் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று.’ தீர்க்கதரிசிகளான மோசேயும் எலியாவும்கூட தோன்றுகிறார்கள். அவர்கள் இயேசுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிரமிப்பூட்டுகிற இச்சம்பவம் பெரும்பாலும் இரவு நேரத்தில் நடைபெறுவதால் அது இன்னுமதிகமாக கண்ணைப் பறிப்பதாக இருக்கிறது. சொல்லப்போனால், அது அவ்வளவு தத்ரூபமாக இருப்பதால் இயேசுவுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றும் என மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா என்பதாக பேதுரு கேட்கிறார். அவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே, ஒளிமயமான ஒரு மேகம் அவர்கள் மீது நிழலிடுகிறது, அப்போது அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்று சொல்கிறது.—மத்தேயு 17:1-6.
மாற் 9:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஒரு குரல்: சுவிசேஷப் புத்தகங்களில், யெகோவா மனிதர்களிடம் நேரடியாகப் பேசியதைப் பற்றிக் குறிப்பிடுகிற மூன்று பதிவுகளில் இது இரண்டாவது பதிவு.—மாற் 1:11; யோவா 12:28-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மாற்கு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
10:6-9. கணவனும் மனைவியும் ஒன்றாக வாழவேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம். ஆகவே, அவசரப்பட்டு விவாகரத்து செய்வதற்குப் பதிலாக, மணவாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை பைபிள் நியமங்களைக்கொண்டு சரிசெய்ய கணவர்களும் மனைவிகளும் முயல வேண்டும்.—மத். 19:4-6.
மாற் 10:17, 18-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
நல்ல போதகரே: இயேசுவைப் போலியாகப் புகழ்வதற்காக அல்லது ஒரு பட்டப்பெயரால் அழைப்பதற்காக அந்த நபர் அவரை “நல்ல போதகரே” என்று கூப்பிட்டிருக்கலாம். பொதுவாக, மதத் தலைவர்கள் அப்படிப்பட்ட மதிப்புமரியாதையை மக்களிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். ஆனால் இயேசு, “போதகர்” என்றோ “எஜமான்” என்றோ (யோவா 13:13) மற்றவர்கள் தன்னை அழைப்பது தவறு என்று சொல்லாவிட்டாலும், தன் தகப்பனுக்கே எல்லா புகழையும் சேர்த்தார்.
கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது: நல்லவராக இருப்பதில் யெகோவாவுக்கு இணை யாருமே இல்லை என்பதையும், எது நல்லது, எது கெட்டது என்பதைத் தீர்மானிக்கிற முழு உரிமையும் யெகோவாவுக்குத்தான் இருக்கிறது என்பதையும் இயேசு இங்கே சுட்டிக்காட்டினார். ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தைச் சாப்பிட்டு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, அந்த உரிமையைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசு அப்படிச் செய்யாமல், எது நல்லது, எது கெட்டது என்ற தராதரங்களைத் தன் தகப்பனே தீர்மானிப்பதற்கு விட்டுவிடுகிறார். கடவுள் தன்னுடைய கட்டளைகளை பைபிளில் பதிவு செய்வதன் மூலம், நல்லது எதுவென்று தெளிவாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்.—மாற் 10:19.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மாற் 10:4-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
விவாகரத்துப் பத்திரத்தை: வே.வா., “மணவிலக்குப் பத்திரத்தை.” விவாகரத்து செய்ய நினைத்த ஒருவர் சட்டப்பூர்வ ஆவணத்தை எழுதிக் கொடுக்க வேண்டுமென்றும், அநேகமாக மூப்பர்களைப் பார்த்துப் பேச வேண்டுமென்றும் திருச்சட்டம் சொன்னது. இப்படி, அந்த முக்கியமான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. அவசரப்பட்டு விவாகரத்து செய்வதைத் தடுப்பதும், பெண்களுக்கு ஓரளவு சட்டப்பூர்வ பாதுகாப்பைக் கொடுப்பதும்தான் திருச்சட்டத்தின் நோக்கமாக இருந்ததென்று தெரிகிறது. (உபா 24:1) ஆனால் இயேசுவின் காலத்தில், சுலபமாக விவாகரத்து செய்துகொள்ள மதத் தலைவர்கள் மக்களை அனுமதித்தார்கள். “எந்தவொரு காரணத்துக்காகவும் (ஆண்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்)” விவாகரத்து செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாக முதல் நூற்றாண்டு சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் குறிப்பிட்டார்; அவர்கூட விவாகரத்து செய்துகொண்ட ஒரு பரிசேயர்தான்.
மாற் 10:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு: வே.வா., “மனைவியை அனுப்பிவிட்டு.” மாற்கு பதிவு செய்திருக்கும் இயேசுவின் வார்த்தைகளை நாம் மத் 19:9-ல் உள்ள வார்த்தைகளை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே, இந்த வாக்கியம் இன்னும் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, “பாலியல் முறைகேட்டை தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும்” என்ற வார்த்தைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், ‘பாலியல் முறைகேட்டை’ (கிரேக்கில், போர்னியா) தவிர வேறெந்தக் காரணத்துக்காவது மணத்துணையை விவாகரத்து செய்கிறவர்களுக்குத்தான் மாற்குவின் பதிவிலுள்ள இந்த வார்த்தைகள் பொருந்துகின்றன.
மனைவிக்குத் துரோகம் செய்கிறான்: ஆண்கள் “எந்தக் காரணத்துக்கு வேண்டுமானாலும்” மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற ரபீக்களின் போதனையை இயேசு ஒதுக்கித்தள்ளினார். (மத் 19:3, 9) ஆண்கள் தங்கள் மனைவிக்குத் துரோகம் செய்ய வாய்ப்பே இல்லை என்றுதான் பெரும்பாலான யூதர்கள் நினைத்தார்கள். ஏனென்றால், கணவன் தன் மனைவிக்குத் துரோகம் செய்யவே முடியாது என்றும், மனைவிதான் கணவனுக்குத் துரோகம் செய்ய முடியும் என்றும் அவர்களுடைய ரபீக்கள் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருக்க வேண்டிய கடமை மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும் இருப்பதை இயேசு சுட்டிக்காட்டினார். இப்படி, அவர் பெண்களைக் கண்ணியப்படுத்தினார், சமுதாயத்தில் அவர்களுடைய மதிப்பை உயர்த்தினார்.
மே 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 11–12
“மற்ற எல்லாரும் போட்டதைவிட அவள் அதிகமாகப் போட்டாள்”
மாற் 12:41, 42-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
காணிக்கைப் பெட்டிகளை: இந்தக் காணிக்கைப் பெட்டிகள் எக்காளங்களை அல்லது ஊதுகொம்புகளைப் போல இருந்ததாகப் பழங்கால யூதப் பதிவுகள் சொல்கின்றன. அவற்றின் மேல்பகுதியில் சின்ன துவாரங்கள் இருந்ததாகத் தெரிகிறது. பல விதமான காணிக்கைகளை மக்கள் அவற்றில் போட்டார்கள். இதே கிரேக்க வார்த்தை யோவா 8:20-லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கே அது, “காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த பகுதி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி பெண்களுக்கான இடத்தில் இருந்தது. (மத் 27:6-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், இணைப்பு B 11-ஐயும் பாருங்கள்.) ரபீக்களுடைய பதிவுகளின்படி, அந்த இடத்திலிருந்த சுவர்களைச் சுற்றிலும் 13 காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. எல்லா காணிக்கைப் பெட்டிகளிலிருந்தும் எடுத்து வரப்பட்ட பணம் ஆலயத்திலிருந்த ஒரு பெரிய பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது.
மிகக் குறைந்த மதிப்புள்ள: நே.மொ., “ஒரு குவாட்ரன் மதிப்புள்ள.” குவாட்ரன் என்பதற்கான கிரேக்க வார்த்தை கோட்ரான்ட்டீஸ். (இது குவாட்ரன்ஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.) இது செம்பினால் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு ரோம நாணயம்; ஒரு தினாரியுவில் 1/64 பங்கு மதிப்புள்ளது. யூதர்கள் பொதுவாகப் பயன்படுத்திய காசுகளின் மதிப்பை விளக்குவதற்கு மாற்கு இங்கே ரோம நாணயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இரண்டு சிறிய காசுகளை: நே.மொ., “இரண்டு லெப்டன் காசுகளை.” லெப்டன் என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம், சின்னது, மெல்லியது. ஒரு லெப்டன் என்பது ஒரு தினாரியுவில் 1/128 பங்கு மதிப்புள்ள ஒரு நாணயம். இஸ்ரவேலில் பயன்படுத்தப்பட்ட மிகச் சிறிய செம்பு அல்லது வெண்கல நாணயம் இதுதான் என்று தெரிகிறது.—சொல் பட்டியலில் “லெப்டன்” என்ற தலைப்பையும், இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.
w97 10/15 16-17 ¶16-17
முழு ஆத்துமாவோடு செய்யும் உங்கள் சேவையை யெகோவா போற்றுகிறார்
16 இரண்டு நாட்களுக்குப் பின்பு, நிசான் 11 அன்று, இயேசு பெரும்பாலான நேரத்தை ஆலயத்தில் செலவிட்டார். அங்கே அவருடைய அதிகாரத்தைக் குறித்து கேள்விகேட்கப்பட்டது; அங்கே வரிகளையும், உயிர்த்தெழுதலையும், மற்ற காரியங்களையும் பற்றி கேட்கப்பட்ட தந்திரமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். மற்ற காரியங்களோடுகூட, ‘விதவைகளின் வீடுகளைப் பட்சித்ததற்காக’ வேதபாரகரையும் பரிசேயரையும் வெளிப்படையாகக் கண்டனம் செய்தார். (மாற்கு 12:40) பின்பு அவர் ஓரிடத்தில் உட்கார்ந்தார், அது பெண்களின் பிராகாரமாகத் தோன்றுகிறது. அங்கே, யூத பாரம்பரியத்தின்படி, 13 காணிக்கைப் பெட்டிகள் இருந்தன. அவர் சிறிது நேரம் உட்கார்ந்து, ஜனங்கள் தங்கள் நன்கொடைகளைப் போடுகையில் கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் பலர் வந்தனர்; சிலர் ஒருவேளை சுயநீதிக்குரியத் தோற்றத்துடன், பகட்டாரவாரத்தோடுங்கூட இருந்திருக்கலாம். (மத்தேயு 6:2-ஐ ஒப்பிடுக.) இயேசு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீயைக் கவனித்தார். அவளை அல்லது அவளுடைய காணிக்கையைப் பற்றி குறிப்பிடத்தக்க எதையும் சாதாரண ஆளின் கண்கள் ஒருவேளை கவனித்திருக்க முடியாது. ஆனால், மற்றவர்களின் இருதயங்களை அறியக்கூடியவராக இருந்த இயேசு, அவள் “ஏழையான ஒரு விதவை” என்று அறிந்திருந்தார். அவளுடைய அன்பளிப்பின் மதிப்பையும் அவர் சரியாக அறிந்திருந்தார். அது, ‘ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசே.’—மாற்கு 12:41, 42.
17 இயேசு தம்முடைய சீஷர்களைத் தம்மிடம் வரும்படி அழைத்தார்; ஏனெனில், தாம் அப்போது கற்பிக்கவிருந்த பாடத்தை அவர்கள் நேரில் காணவேண்டும் என அவர் விரும்பினார். “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள்” என்று இயேசு சொன்னார். அவருடைய மதிப்பீட்டில், மற்ற எல்லாரும் போட்ட மொத்தத் தொகையைப் பார்க்கிலும் அவள் அதிகமாகப் போட்டாள். “தன் ஜீவனுக்கு உண்டாயிருந்ததெல்லாம்”—தன் கடைசி துட்டு வரையாக—அவள் கொடுத்துவிட்டாள். அவ்வாறு செய்ததன்மூலம், யெகோவாவின் கவனித்துக் காக்கும் கரங்களில் அவள் தன்னை வைத்தாள். இவ்வாறு, கடவுளுக்கு கொடுப்பதில் ஒரு முன்மாதிரியாகத் தனிப்படுத்திக் காட்டப்பட்ட நபர், பொருள்சம்பந்தமாக மதிப்பிடுகையில் சொற்பமான அன்பளிப்பைக் கொடுத்தவரே. எனினும், கடவுளுடைய பார்வையில் அது விலையேறப்பெற்றதாக இருந்தது!—மாற்கு 12:43, 44; யாக்கோபு 1:27.
w97 10/15 17 ¶17
முழு ஆத்துமாவோடு செய்யும் உங்கள் சேவையை யெகோவா போற்றுகிறார்
17 இயேசு தம்முடைய சீஷர்களைத் தம்மிடம் வரும்படி அழைத்தார்; ஏனெனில், தாம் அப்போது கற்பிக்கவிருந்த பாடத்தை அவர்கள் நேரில் காணவேண்டும் என அவர் விரும்பினார். “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள்” என்று இயேசு சொன்னார். அவருடைய மதிப்பீட்டில், மற்ற எல்லாரும் போட்ட மொத்தத் தொகையைப் பார்க்கிலும் அவள் அதிகமாகப் போட்டாள். “தன் ஜீவனுக்கு உண்டாயிருந்ததெல்லாம்”—தன் கடைசி துட்டு வரையாக—அவள் கொடுத்துவிட்டாள். அவ்வாறு செய்ததன்மூலம், யெகோவாவின் கவனித்துக் காக்கும் கரங்களில் அவள் தன்னை வைத்தாள். இவ்வாறு, கடவுளுக்கு கொடுப்பதில் ஒரு முன்மாதிரியாகத் தனிப்படுத்திக் காட்டப்பட்ட நபர், பொருள்சம்பந்தமாக மதிப்பிடுகையில் சொற்பமான அன்பளிப்பைக் கொடுத்தவரே. எனினும், கடவுளுடைய பார்வையில் அது விலையேறப்பெற்றதாக இருந்தது!—மாற்கு 12:43, 44; யாக்கோபு 1:27.
உங்களுடைய கொடுத்தல் ஒரு தியாகமா?
இந்தப் பதிவிலிருந்து நாம் அநேக மதிப்புள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இதில் முக்கியப் பாடமானது, நம்முடைய பொருள் சம்பந்தமான உடைமைகளின் மூலமாக மெய் வணக்கத்துக்கு ஆதரவைக் காண்பிக்கும் சிலாக்கியம் நம் அனைவருக்கும் இருந்தபோதிலும், கொடுக்கையில் எதையும் இழக்காமல் நாம் என்ன கொடுக்கிறோம் என்பது அல்ல, ஆனால் நாம் நமக்கு மதிப்புள்ளதாக இருப்பதைக் கொடுப்பதே கடவுளுடைய பார்வையில் ஒரு வேளை உண்மையில் விலையேறப்பெற்றதாக இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால், உண்மையில், தேவைப்படாத எதையாவது கொடுக்கிறோமா? அல்லது நாம் கொடுப்பது உண்மையில் ஒரு தியாகமாக இருக்கிறதா?
‘தேவ வசனத்தில்’ ஞானம்
15 அன்று ஆலயத்திற்கு சென்ற எல்லாரிலும் அந்த விதவை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு பைபிளில் குறிப்பிடப்பட்டது விசேஷமானது அல்லவா? இந்த உதாரணத்தின் வாயிலாக, தாம் போற்றுதல் காண்பிக்கும் கடவுள் என்பதை யெகோவா நமக்கு கற்பிக்கிறார். இருதயப்பூர்வமாக நாம் வழங்கும் காணிக்கைகள், மற்றவர்களுடையதைவிட எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். மனதிற்கு இதமளிக்கும் இந்த சத்தியத்தை நமக்கு கற்பிக்க யெகோவாவால் இதைவிட சிறந்த வழியை நிச்சயம் தேர்ந்தெடுக்க முடிந்திருக்காது!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மாற் 11:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக: மூன்று சுவிசேஷ எழுத்தாளர்கள் ஏசா 56:7-ஐ மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்; அவர்களில் மாற்கு மட்டும்தான், “எல்லா தேசத்தாருக்கும்” என்ற வார்த்தைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். (மத் 21:13; லூ 19:46) இஸ்ரவேலர்களும் சரி, கடவுள்பக்தியுள்ள மற்ற தேசத்தாரும் சரி, யெகோவாவை வணங்குவதற்கும் அவரிடம் ஜெபம் செய்வதற்கும் ஏற்ற இடமாக எருசலேமின் ஆலயம் இருந்தது. (1ரா 8:41-43) அதனால்தான், ஆலயத்தை வியாபாரத்துக்காகப் பயன்படுத்தி அதை ‘கொள்ளைக்காரர்களின் குகையாக்கிய’ யூதர்களை இயேசு கண்டனம் செய்தார். அவர்கள் செய்த அட்டூழியத்தால், மற்ற தேசங்களைச் சேர்ந்த மக்கள் யெகோவாவின் ஜெப வீட்டுக்கு வரத் தயங்கினார்கள்; அவர்களால் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியாமலும் போனது.
அத்தி மரத்தை வைத்து ஒரு பாடம்
சீக்கிரத்திலேயே, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குள் நுழைகிறார்கள். வழக்கம்போல, இயேசு ஆலயத்துக்குப் போய்க் கற்பிக்க ஆரம்பிக்கிறார். முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அங்கே வந்து, “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? இதையெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்று கேட்கிறார்கள். (மாற்கு 11:28) முந்தின நாள், ஆலயத்திலிருந்த காசு மாற்றுபவர்களை இயேசு துரத்தியதை மனதில் வைத்து அவர்கள் இப்படிக் கேட்டிருக்கலாம்.
மே 28-ஜூன் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் |மாற்கு 13–14
“மனித பயம் என்ற கண்ணியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்”
மன்னிக்கக் கற்றுக்கொண்டார்
14 பதுங்கிப் பதுங்கி பின்தொடர்ந்த பேதுரு, எருசலேமில் கம்பீரமாய் வீற்றிருந்த ஒரு மாளிகையின் வாயிற்கதவைக் கடைசியாக வந்தடைந்தார். அது, செல்வமும் செல்வாக்கும் படைத்த தலைமைக் குரு காய்பாவின் வீடு. பொதுவாக அப்படிப்பட்ட வீடுகளின் முன்பக்கத்தில் வாயிற்கதவும் அதற்கடுத்து ஒரு முற்றமும் இருக்கும். பேதுரு வாயிற்கதவருகே சென்றார், ஆனால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலைமைக் குருவுக்குப் பரிச்சயமான யோவான் ஏற்கெனவே உள்ளே சென்றிருந்தார், அதனால் வாயிற்காவலரிடம் பேசி பேதுருவும் உள்ளே வர அனுமதி வாங்கித் தந்தார். பேதுரு, யோவானின் பக்கத்தில் இருக்கவுமில்லை... எஜமானருடன் இருப்பதற்காக வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்யவுமில்லை... எனத் தெரிகிறது. அவர் முற்றத்திலேயே இருந்துவிட்டார்; குளிரான அந்த இரவில் அங்கு தகதகவென்று எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கு முன்னால் சில அடிமைகளும் வேலைக்காரர்களும் குளிர் காய்ந்துகொண்டிருந்தார்கள். விசாரணை நடந்துகொண்டிருந்தபோது பொய் சாட்சிகள் உள்ளே போவதையும் வருவதையும் பேதுரு கவனித்துக்கொண்டிருந்தார்.—மாற். 14:54-57; யோவா. 18:15, 16, 18.
it-2-E 619 ¶6
பேதுரு
பேதுருவின் பின்னால் வந்த அல்லது அவர் கூடவே வந்த மற்றொரு சீஷர், தலைமைக் குருவின் வீட்டு முற்றத்துக்குள்ளேயே போக அவருக்கு உதவி செய்தார். (யோவா 18:15, 16) பேதுரு அங்கே உள்ளே போன பிறகு, இருட்டான ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அமைதியாக இருப்பதற்குப் பதிலாக, நெருப்புக்குப் பக்கத்தில் போய் குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அவர் இயேசுவோடு இருந்தவர் என்பதை நெருப்பு வெளிச்சம் மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுத்தது, அவருடைய கலிலேய உச்சரிப்பு அதை ஊர்ஜிதப்படுத்தியது. அவர் இயேசுவோடு இருந்தவர்தான் என்று குற்றம்சாட்டப்பட்டபோது, அவர் அதை மறுத்து தனக்கு இயேசுவைத் தெரியவே தெரியாது என்றுகூட சொன்னார்; தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன்மேல் சாபம் வரட்டும் என்று கடைசியில் சத்தியம் செய்யவும்கூட ஆரம்பித்தார். அப்போது, நகரத்தில் எங்கிருந்தோ சேவல் இரண்டாவது முறையாக கூவியது, “இயேசு திரும்பி, பேதுருவை நேராகப் பார்த்தார்.” பேதுரு உடனே வெளியே போய், மனமுடைந்து, கதறி அழுதார். (மத் 26:69-75; மாற் 14:66-72; லூ 22:54-62; யோவா 18:17, 18; சேவல் கூவுதல்; உறுதிமொழி என்ற தலைப்புகளைப் பாருங்கள்.) ஆனால், பேதுருவுக்காக இயேசு செய்த மன்றாட்டுக்குப் பதில் கிடைத்தது; பேதுரு தன் விசுவாசத்தை விட்டுவிடவில்லை.—லூ 22:31, 32.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மாற்கு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
14:51, 52—‘நிர்வாணமாய் ஓடிப்போன’ இளைஞன் யார்? இந்தச் சம்பவத்தை மாற்கு மட்டுமே குறிப்பிடுவதால், அவர் தன்னைப் பற்றியே பேசியிருக்கிறார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.
அன்னாவிடமும், பிறகு காய்பாவிடமும் கொண்டுபோகப்படுகிறார்
யாராவது தங்களைக் கடவுளுடைய மகன் என்று சொன்னால் யூதர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது காய்பாவுக்குத் தெரியும். முன்பு, கடவுள் தன்னுடைய தகப்பன் என்று இயேசு சொன்னபோது, அவர் “தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக” யூதர்கள் நினைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்யப் பார்த்தார்கள். (யோவான் 5:17, 18; 10:31-39) இதெல்லாம் காய்பாவுக்குத் தெரியும். அதனால் அவர் இயேசுவிடம், “உயிருள்ள கடவுள்மேல் ஆணையாகச் சொல், நீதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்துவா?” என்று தந்திரமாகக் கேட்கிறார். (மத்தேயு 26:63) தான் கடவுளுடைய மகன் என்பதை இயேசு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். (யோவான் 3:18; 5:25; 11:4) இப்போது அதை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தான் கடவுளுடைய மகன் என்பதையும், கிறிஸ்து என்பதையும் அவர் மறுப்பது போல ஆகிவிடும். அதனால் இயேசு, “நான் கிறிஸ்துதான்; மனிதகுமாரன் வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் வானத்து மேகங்களோடு வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்” என்று சொல்கிறார்.—மாற்கு 14:62.