அதிகாரம் 14
கடவுளுடைய அரசாங்கத்தை மட்டுமே உண்மையோடு ஆதரிப்பது
1, 2. (அ) இயேசுவை உண்மையோடு பின்பற்றுகிறவர்கள் இன்றுவரை எந்த நியமத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள்? (ஆ) நம்மைத் துடைத்தழிக்க எதிரிகள் என்ன செய்திருக்கிறார்கள், ஆனால் என்ன நடந்திருக்கிறது?
யூத தேசத்திலேயே மிகவும் அதிகாரம் படைத்த நீதிபதியான பிலாத்துவுக்கு முன்பாக இயேசு நின்று, “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல. என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள். ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொன்னார். (யோவா. 18:36) இந்த வசனத்தில் இருக்கும் நியமத்தைத்தான் இயேசுவை உண்மையோடு பின்பற்றுகிறவர்கள் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசுவுக்கு பிலாத்து மரண தண்டனை கொடுத்தார். அந்த வெற்றி ரொம்பக் காலத்துக்கு நீடிக்கவில்லை. ஏனென்றால், இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார். ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களைத் துடைத்தழிக்க நினைத்தாலும் அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் வீணாகிவிட்டன. அன்றிருந்த உலகம் முழுவதிலும், கிறிஸ்தவர்கள் நல்ல செய்தியைப் பரப்பினார்கள்.—கொலோ. 1:23.
2 கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகு, சில பலம்படைத்த ராணுவச் சக்திகள் கடவுளுடைய மக்களைத் துடைத்தழிக்க முயற்சி செய்திருக்கின்றன. ஆனால், யாராலும் நம்மை ஜெயிக்க முடியவில்லை. நிறைய அரசாங்கங்களும் அரசியல் கட்சிகளும், அவை நடத்தும் போராட்டங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கும்படி நம்மை வற்புறுத்தியிருக்கின்றன. ஆனாலும், யெகோவாவின் மக்கள் மத்தியில் அவர்களால் பிரிவினையை உண்டாக்க முடியவில்லை. இன்று, கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். ஆனாலும், நாம் ஒரே குடும்பம்போல் ஒற்றுமையாக இருக்கிறோம். உலகத்தின் அரசியல் விவகாரங்களில் நடுநிலையோடு இருக்கிறோம். கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதற்கு நம் ஒற்றுமை ஒரு சிறந்த அத்தாட்சி. நம் ராஜாவான இயேசு கிறிஸ்து தன் மக்களைத் தொடர்ந்து வழிநடத்தி, புடமிட்டு, பாதுகாத்து வருகிறார் என்பதற்கும் நம் ஒற்றுமை சிறந்த அத்தாட்சி. அதை அவர் எப்படிச் செய்திருக்கிறார் என்று இப்போது பார்க்கலாம். அதோடு, “இந்த உலகத்தின் பாகமாக” இல்லாத நமக்கு, நீதிமன்ற வழக்குகளில் இயேசு கொடுத்திருக்கிற சில வெற்றிகளைப் பற்றியும் பார்க்கலாம். (யோவா. 17:14) இது நம் விசுவாசத்தை நிச்சயம் பலப்படுத்தும்.
ஒரு முக்கியமான பிரச்சினை
3, 4. (அ) இயேசு ராஜாவானபோது என்ன சம்பவங்கள் நடந்தன? (ஆ) கடவுளுடைய மக்கள் நடுநிலையோடு இருப்பதைப் பற்றிச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார்களா? விளக்குங்கள்.
3 இயேசு ராஜாவான பிறகு, பரலோகத்தில் ஒரு போர் நடந்தது. அதன்பின், சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்டான். (வெளிப்படுத்துதல் 12:7-10, 12-ஐ வாசியுங்கள்.) அப்போது, பூமியிலும் ஒரு போர் நடந்தது, அதுதான் முதல் உலகப் போர். அது கடவுளுடைய மக்கள் எடுத்திருந்த தீர்மானத்துக்கு ஒரு சோதனையாக இருந்தது. ஏனென்றால், இயேசுவைப் போலவே இந்த உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது என்று அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். ஆனால், அரசியல் விவகாரங்களில் எந்தளவுக்கு விலகியிருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் அவர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை.
4 உதாரணத்துக்கு, 1904–ல் பிரசுரிக்கப்பட்ட ஆயிரமாண்டு உதயம் என்ற ஆங்கிலப் புத்தகத்தின் ஆறாவது தொகுதியில்,a கிறிஸ்தவர்கள் போரில் கலந்துகொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனாலும், ஒரு கிறிஸ்தவர் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டால், அவர் போரோடு சம்பந்தப்படாத ஒரு வேலையைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று அந்தப் புத்தகம் குறிப்பிட்டது. ஆனால், அப்படிப்பட்ட வேலை கிடைக்காமல், அவர் கண்டிப்பாக போருக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அவர் யாரையும் கொலை செய்யாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் இருந்த சூழ்நிலையைப் பற்றி பிரிட்டனில் வாழ்ந்த ஹர்பட் சீனியர் (1905-ல் ஞானஸ்நானம் எடுத்தவர்) இப்படிச் சொன்னார்: “என்ன செய்வது என்று சகோதரர்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ராணுவத்தில் ஒரு படைவீரனாகச் சேர்ந்துகொண்டு போரோடு சம்பந்தப்படாத வேலைகளைச் செய்வது மட்டும் சரியாக இருக்குமா என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.”
5. செப்டம்பர் 1, 1915, காவற்கோபுரம் எப்படி இன்னும் தெளிவான விளக்கத்தைக் கொடுத்தது?
5 செப்டம்பர் 1, 1915, காவற்கோபுரம் இன்னும் தெளிவான விளக்கம் கொடுத்தது. வேதாகமத்தில் படிப்புகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் அந்த காவற்கோபுர கட்டுரை இருந்தது. “இப்படிச் செய்வது கிறிஸ்தவ நடுநிலையை விட்டுக்கொடுப்பது போல் இருக்கும் என்று நினைக்கிறோம்” என்று அந்தக் கட்டுரை சொன்னது. ராணுவச் சேவையில் ஈடுபடவும் ராணுவ உடையைப் போட்டுக்கொள்ளவும் மறுப்பதற்காக ஒரு கிறிஸ்தவர் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டப்பட்டால் என்ன செய்வது? அதே கட்டுரை இப்படிச் சொன்னது: ‘சமாதானத்தின் அதிபதிக்கு உண்மையாக இருந்து, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதால் நாம் சுட்டுக்கொல்லப்பட விரும்புவோமா? அல்லது இந்தப் பூமியின் ராஜாக்களுக்கு ஆதரவு கொடுத்து, நம் பரலோக ராஜாவின் போதனைகளை விட்டுக்கொடுப்பதால் சுட்டுக்கொல்லப்படுவதை விரும்புவோமா? நிச்சயமாக, நம் பரலோக ராஜாவுக்கு உண்மையாக இருந்து அவருக்காக மரிப்பதையே நாம் விரும்புவோம்.’ இப்படித் தெள்ளத் தெளிவாகச் சொன்ன பிறகு, அந்தக் கட்டுரையின் முடிவில், “நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நாங்கள் ஒரு ஆலோசனையாகத்தான் இதைச் சொல்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
6. சகோதரர் ஹர்பட் சீனியரின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?
6 சகோதரர்கள் சிலர் இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்கவும் தயாராக இருந்தார்கள். ஹர்பட் சீனியர் இப்படிச் சொன்னார்: “என்னைப் பொறுத்தவரை, தோட்டாக்களைக் கப்பலிலிருந்து இறக்குவதும் [போரோடு சம்பந்தப்படாத பணி], சுடுவதற்காக அவற்றைத் துப்பாக்கியில் போடுவதும் ஒன்றுதான்.” (லூக். 16:10) மனசாட்சியின் அடிப்படையில் ராணுவச் சேவையை மறுத்ததற்காக சகோதரர் சீனியர் சிறையில் போடப்பட்டார். இப்படி மறுத்ததற்காக மொத்தம் 16 பேர் பிரிட்டனிலுள்ள ரிச்மண்ட் சிறையில் போடப்பட்டிருந்தார்கள். சகோதரர் சீனியரையும் 4 சகோதரர்களையும் தவிர மற்றவர்கள் வேறு மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கொஞ்சக் காலத்துக்கு பிரிட்டனிலுள்ள ரிச்மண்ட் சிறையில் இருந்ததால் ரிச்மண்ட் 16 என்று அழைக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில், ஹர்பட்டும் மற்றவர்களும் பிரான்சில் போர் செய்வதற்காக ரகசியமாக கப்பலில் அனுப்பப்பட்டார்கள். அங்கே அவர்களைச் சுட்டுக்கொல்ல கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் மற்றவர்களும் கொல்லப்படுவதற்காக துப்பாக்கி ஏந்திய படைவீரர்கள்முன் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். ஆனால், அவர்கள் கொல்லப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு 10 வருஷ சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.
“போர் நடக்கும் சமயங்களில்கூட கடவுளுடைய மக்கள் எல்லாரோடும் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.” —சைமன் க்ரேக்கர் (பாரா 7)
7. இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்குள் யெகோவாவின் மக்கள் எதைப் புரிந்துகொண்டார்கள்?
7 இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்குள் யெகோவாவின் மக்கள் எல்லாருமே, நடுநிலையோடு இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் இயேசுவைப் பின்பற்ற என்ன செய்ய வேண்டும் என்றும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். (மத். 26:51-53; யோவா. 17:14-16; 1 பே. 2:21) உதாரணத்துக்கு, நவம்பர் 1, 1939, காவற்கோபுரத்தில் “நடுநிலையோடு இருப்பது” என்ற தலைப்பில் ஒரு முக்கியமான கட்டுரை வெளிவந்தது. “யெகோவாவுக்குச் சொந்தமான மக்கள், போரில் ஈடுபடும் எந்த ஒரு நாட்டுக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலையோடு இருக்க வேண்டும். இந்தக் கட்டளைக்கு அவர்கள் கண்டிப்பாகக் கீழ்ப்படிய வேண்டும்” என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. நியு யார்க், புருக்லினிலுள்ள தலைமை அலுவலகத்தில் சேவை செய்த சகோதரர் சைமன் க்ரேக்கர் அந்தக் கட்டுரையைப் பற்றி இப்படிச் சொன்னார்: “போர் நடக்கும் சமயங்களில்கூட கடவுளுடைய மக்கள் எல்லாரோடும் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.” அது ஏற்ற வேளையில் கொடுக்கப்பட்ட ஆன்மீக உணவு போல இருந்தது. அதோடு, கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருப்பதால் வரும் பயங்கரமான தாக்குதலுக்கு யெகோவாவின் மக்களைத் தயார்படுத்தியது.
“ஆறுபோல்” பாய்ந்து வந்த எதிர்ப்பு
8, 9. அப்போஸ்தலன் யோவானின் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?
8 கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் அதன் ஆட்சியை ஆரம்பித்த பிறகு ராட்சதப் பாம்பு (அதாவது, பிசாசாகிய சாத்தான்) அந்த அரசாங்கத்தின் ஆதரவாளர்களைத் துடைத்தழிக்க முயற்சி செய்யும் என்று அப்போஸ்தலன் யோவான் தீர்க்கதரிசனம் சொன்னார். அதற்காக அந்த ‘ராட்சதப் பாம்பு தன்னுடைய வாயிலிருந்து தண்ணீரை ஆறுபோல் பாய வைக்கும்’ என்றும் சொன்னார்.b (வெளிப்படுத்துதல் 12:9, 15-ஐ வாசியுங்கள்.) இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? 1920-களிலிருந்து கடவுளுடைய மக்களுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. இரண்டாவது உலகப் போரின்போது வட அமெரிக்காவில் கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருந்த நிறைய சகோதரர்கள் சிறையில் போடப்பட்டார்கள். அவர்களில் சகோதரர் க்ரேக்கரும் ஒருவர். மத நம்பிக்கைகளின் காரணமாக போரில் ஈடுபட மறுத்ததால் அமெரிக்காவிலுள்ள தேசிய சிறைகளில் போடப்பட்டவர்களில் அதிகமானோர் யெகோவாவின் சாட்சிகள்தான்.
9 கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, அவர்களுடைய உத்தமத்தை முறிக்க வேண்டும் என்பதில் சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் தீவிரமாக இருந்தார்கள். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா முழுவதிலும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவர்கள் நடுநிலையோடு இருக்கத் தீர்மானமாக இருந்ததால் சிறையில் போடப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், ஊனமாக்கப்பட்டார்கள். ஜெர்மனியில், கடவுளுடைய மக்கள் போரில் கலந்துகொள்ளவும், ‘ஹிட்லர் வாழ்க’ என்று சொல்லவும் மறுத்ததால் நிறைய பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்கள். ஹிட்லர் ஆட்சியின்போது கிட்டத்தட்ட 6,000 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். ஜெர்மனியையும் மற்ற நாடுகளையும் சேர்ந்த 1,600-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். ஆனாலும், சாத்தானால் கடவுளுடைய மக்களுக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.—மாற். 8:34, 35.
“ஆறுபோல்” பாய்ந்துவந்த வெள்ளத்தை “பூமி” குடிக்கிறது
10. “பூமி” எதைக் குறிக்கிறது, அது கடவுளுடைய மக்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறது?
10 அப்போஸ்தலன் யோவான் தீர்க்கதரிசனத்தில் சொன்ன “பூமி,” நியாயமாக நடந்துகொள்ளும் சில அதிகாரிகளை அல்லது அமைப்புகளை குறிக்கிறது. இந்தப் பூமி, “ஆறுபோல்” பாய்ந்துவரும் எதிர்ப்புகளை அடையாள அர்த்தத்தில் குடிப்பதன் மூலம் கடவுளுடைய மக்களுக்கு உதவி செய்கிறது. இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியிருக்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பின்வந்த வருஷங்களில், மேசியானிய அரசாங்கத்துக்கு உண்மையோடு ஆதரவு காட்டியவர்களின் சார்பாக இந்த “பூமி” நடவடிக்கை எடுத்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:16-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு ராணுவச் சேவையை மறுப்பதற்கோ, தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கோ யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கும் உரிமையை பல நீதிமன்றங்கள் மதித்து சாதகமான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. ராணுவச் சேவையில் ஈடுபடுவது சம்பந்தமான வழக்குகளில், யெகோவா தன்னுடைய மக்களுக்குக் கொடுத்த சில முக்கியமான வெற்றிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.—சங். 68:20.
11, 12. சகோதரர் செக்குரலாவுக்கும் சகோதரர் த்லிமெனோஸுக்கும் என்ன பிரச்சினை வந்தது, அதன் விளைவு என்ன?
11 அமெரிக்கா. ஆன்த்தணி செக்குரலா என்பவர் யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் பிறந்தவர். அவர் 15 வயதில் ஞானஸ்நானம் எடுத்தார். 21 வயதில் ராணுவச் சேவைக்குப் பதிவு செய்ய வேண்டிய சமயம் வந்தபோது, தான் ஒரு மத ஊழியர் என்று பதிவு செய்தார். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, 1950-ல், மனசாட்சியின் அடிப்படையில் ராணுவச் சேவையை மறுப்பவராக தன்னைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கையை மறுக்கும் விதத்தில் அமெரிக்க புலனாய்வுத் துறையின் (FBI) அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், நீதித்துறை அவருடைய கோரிக்கையை மறுத்துவிட்டது. அவருடைய வழக்கு கீழ் நீதிமன்றத்தில் பலமுறை விசாரிக்கப்பட்டாலும் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. பிறகு, அமெரிக்க உச்ச நீதிமன்றம் சகோதரர் செக்குரலாவின் வழக்கை விசாரித்தது. அது, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. மனசாட்சியின் அடிப்படையில் ராணுவச் சேவையை மறுத்த அமெரிக்கக் குடிமக்களுக்கு அந்தத் தீர்ப்பு உதவியாக இருந்தது.
12 கிரீஸ். 1983-ல், யாக்கோவோஸ் த்லிமெனோஸ் என்பவர் ராணுவ உடையைப் போடும்படி கொடுக்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாததால் சிறையில் போடப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, அக்கவுண்டன்ட் வேலைக்கு விண்ணப்பித்தார். அவர் சிறைக்குச் சென்றவர் என்பதால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைக் குறித்து அவர் வழக்குத் தொடுத்தார். கிரீஸ் நீதிமன்றத்தில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை. அதனால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (ECHR) அவர் முறையிட்டார். 2000-ல், 17 நீதிபதிகள் கொண்ட ஒரு குழு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இதேபோன்ற மற்ற வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பு உதவியாக இருந்தது. இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பு கிரீஸ் நாட்டில் 3,500-க்கும் அதிகமான சகோதரர்கள் குற்றவாளிகள் என்று பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். ஏனென்றால், நடுநிலையோடு இருந்ததால் அவர்கள் சிறை தண்டனை அனுபவித்திருந்தார்கள். இந்தச் சாதகமான தீர்ப்புக்குப் பிறகு, கிரீஸ் அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் நம் சகோதரர்களுக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன. கிரீஸ் அரசாங்கத்தின் சட்டங்கள் திருத்தப்பட்டபோது, முன்பு அமல்படுத்தப்பட்ட மற்றொரு சட்டம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி கிரீஸ் நாட்டு மக்கள் ராணுவத்தில் சேராமல் மற்ற அரசாங்க வேலைகளைச் செய்ய உரிமை இருந்தது.
“நீதிமன்றத்தில் நுழைவதற்கு முன் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தேன். அப்போது அவர் தந்த மன அமைதியை என்னால் உணர முடிந்தது.”—இவைல்லோ ஸ்டெஃபனாஃப் (பாரா 13)
13, 14. இவைல்லோ ஸ்டெஃபனாஃப் மற்றும் வாஹான் பயாட்டியான் சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
13 பல்கேரியா. 1994-ல், 19 வயது இவைல்லோ ஸ்டெஃபனாஃப் ராணுவத்தில் சேரும்படி உத்தரவிடப்பட்டார். ஆனால், ராணுவத்திலோ ராணுவத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற சேவைகளிலோ ஈடுபட அவர் மறுத்துவிட்டார். அதனால் அவருக்கு 18 மாத சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால், மனசாட்சியின் அடிப்படையில் ராணுவச் சேவையை மறுக்க அவருக்கு உரிமை இருந்ததால் அவர் மேல்முறையீடு செய்தார். கடைசியில், அவருடைய வழக்கு ECHR-க்குப் போனது. ஆனால், 2001-ல் அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே பல்கேரியா அரசாங்கம் சகோதரர் ஸ்டெஃபனாஃப்வோடு சமரசம் செய்து, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியது. அவருக்கு மட்டுமல்ல, ராணுவத்தில் சேராமல் மற்ற அரசாங்க வேலைகளைச் செய்ய விரும்பிய குடிமக்கள் எல்லாருக்குமே பொது மன்னிப்பு வழங்கியது.c
14 ஆர்மீனியா. 2001-ல், வாஹான் பயாட்டியான் என்பவர் கட்டாய ராணுவச் சேவைக்கான வயதை எட்டியபோது, மனசாட்சியின் அடிப்படையில் அதை மறுத்துவிட்டார்.d ஆனால், உள்ளூர் நீதிமன்றங்களில் அவருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. செப்டம்பர் 2002-ல், அவருக்கு இரண்டரை வருஷ சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால், பத்தரை மாதங்களுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் அவர் ECHR-ல் மேல்முறையீடு செய்தார். அவருடைய வழக்கை விசாரிக்க அந்த நீதிமன்றம் ஒத்துக்கொண்டது. ஆனாலும், அக்டோபர் 27, 2009-ல் அந்த நீதிமன்றம் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. இதே பிரச்சினையை எதிர்ப்பட்ட ஆர்மீனியா நாட்டுச் சகோதரர்களுக்கு அந்தத் தீர்ப்பு பேரிடியாக இருந்தது. ECHR-ன் உயர்குழு அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்தது. ஜூலை 7, 2011-ல் அந்த நீதிமன்றம் வாஹான் பயாட்டியானுக்கு சாதகமாகத் தீர்ப்பு கொடுத்தது. மத நம்பிக்கைகளின் காரணமாக மனசாட்சியின் அடிப்படையில் ராணுவச் சேவையை ஒருவர் மறுக்கும்போது, அதை அவருக்கு இருக்கும் ‘சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமையாக’ கருத வேண்டும் என்று ECHR முதல் முறையாக ஒத்துக்கொண்டது. அந்தத் தீர்ப்பு யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகளை மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளின் மன்றத்தின் பாகமான நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுடைய உரிமைகளையும் பாதுகாக்கிறது.e
ECHR-ன் தீர்ப்புக்குப் பிறகு ஆர்மீனியாவிலுள்ள சகோதரர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்
தேசிய நிகழ்ச்சிகள் சம்பந்தமான பிரச்சினை
15. யெகோவாவின் மக்கள் தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஏன் மறுக்கிறார்கள்?
15 யெகோவாவின் மக்கள், ராணுவச் சேவைக்கு மட்டுமல்ல, தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். அதை மரியாதையோடு தெரிவிக்கிறார்கள். இப்படி, மேசியானிய அரசாங்கத்துக்கு உண்மையாக இருக்கிறார்கள். இரண்டாவது உலகப் போரின் சமயத்திலிருந்து மக்கள் மத்தியில் தேசப்பற்று அதிகமாகியிருக்கிறது. அதனால், நிறைய நாடுகளில் மக்கள் தங்களுடைய தேசபக்தியைக் காட்டுவதற்காக நாட்டின் உறுதிமொழியைச் சொல்லவோ... தேசியகீதம் பாடவோ... தேசியக் கொடிக்கு சல்யூட் செய்யவோ... வேண்டியிருக்கிறது. ஆனால், நாம் யெகோவாவுக்கு மட்டும்தான் நம்முடைய முழு பக்தியையும் காட்டுகிறோம். (யாத். 20:4, 5) அதனால், வெள்ளம்போல் பாய்ந்து வரும் துன்புறுத்தல்களை நாம் அனுபவித்திருக்கிறோம். ஆனாலும், யெகோவா மறுபடியும் ‘பூமியை’ பயன்படுத்தி இந்த எதிர்ப்புகள் சிலவற்றை ‘குடிக்கும்படி’ செய்திருக்கிறார். இந்த விஷயத்தில், கிறிஸ்து மூலமாக யெகோவா கொடுத்த சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை இப்போது பார்க்கலாம்.—சங். 3:8.
16, 17. லில்யன் மற்றும் வில்லியம் கொபைட்டஸுக்கு என்ன பிரச்சினை வந்தது, அவர்களுடைய வழக்கிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?
16 அமெரிக்கா. 1940-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்த மைனர்ஸ்வில் ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட் v. கொபைட்டஸ் என்ற வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய குழு விசாரித்தது. அதில் ஒருவரிடமிருந்து மட்டும்தான் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. 12 வயது, லில்யன் கொபைட்டஸ்f மற்றும் அவளுடைய 10 வயது தம்பி வில்லியம் கொபைட்டஸ், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க விரும்பியதால் தேசியக் கொடிக்கு சல்யூட் செய்யவும் நாட்டின் உறுதிமொழியைச் சொல்லவும் மறுத்தார்கள். அதனால் அவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ‘தேசிய ஒற்றுமையை’ காப்பதற்காக அந்தப் பள்ளி எடுத்த நடவடிக்கை அமெரிக்க சட்டத்தின்படி சரியானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு, யெகோவாவின் மக்களுக்குப் பயங்கரமான துன்புறுத்தல் வந்தது. இன்னும் நிறைய பிள்ளைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள், நிறைய பேர் வேலையை இழந்தார்கள், பலர் கலகக் கும்பல்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். த லஸ்டர் ஆஃப் அவர் கன்ட்ரி என்ற புத்தகம் இப்படிச் சொன்னது: “மதவெறி காரணமாக இருபதாம் நூற்றாண்டின்போது அமெரிக்க மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட கொடுமைகளிலேயே, 1941 முதல் 1943 வரை யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகச் செய்யப்பட்ட கொடுமைதான் ரொம்பப் பயங்கரமானது.”
17 கடவுளுடைய எதிரிகளுக்குக் கிடைத்த இந்த வெற்றி ரொம்பக் காலத்துக்கு நீடிக்கவில்லை. 1943-ல் கொபைட்டஸ் வழக்கைப் போலவே இன்னொரு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அந்த வழக்கின் பெயர் வெஸ்ட் வெர்ஜினியா ஸ்டேட் போர்ட் ஆஃப் எஜுக்கேஷன் v. பார்னெட். இந்தத் தடவை உச்ச நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அமெரிக்கச் சரித்திரத்திலேயே, இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் முதல் முறையாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை மாற்றியிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக வந்த வெளிப்படையான துன்புறுத்தல்கள் ரொம்பவே குறைந்துவிட்டன. இதனால், அமெரிக்கக் குடிமக்கள் எல்லாருடைய உரிமைகளும் பலப்படுத்தப்பட்டன.
18, 19. உறுதியோடு இருக்க பாப்லோ பாரோஸுக்கு எது உதவியது, அவருடைய முன்மாதிரியை யெகோவாவின் ஊழியர்கள் எப்படிப் பின்பற்றலாம்?
18 அர்ஜென்டினா. 1976-ல், பாப்லோ பாரோஸ் (8 வயது) மற்றும் ஊகோ பாரோஸ் (7 வயது) கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஒரு சமயம் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பாப்லோவைத் தள்ளிவிட்டு, அவன் தலையில் அடித்தார். தேசப்பற்றைக் காட்டும் விஷயங்களில் அவர்களை ஈடுபட செய்வதற்காக, பள்ளி முடிந்த பிறகு ஒரு மணிநேரம் அவர்களைப் பள்ளியிலேயே இருக்க வைத்தார். அந்தச் சம்பவத்தைப் பற்றி பாப்லோ பிற்பாடு இப்படிச் சொன்னார்: “என் உத்தமத்துக்கு வந்த சோதனையை யெகோவாவின் உதவி இல்லாமல் என்னால் சமாளித்திருக்கவே முடியாது.”
19 அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது பாப்லோவையும் ஊகோவையும் பள்ளியிலிருந்து வெளியேற்றியது சரியானதுதான் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஆனால் அந்த வழக்கு, அர்ஜென்டினாவின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 1979-ல் உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி இப்படிச் சொன்னது: “இந்தத் தண்டனை [வெளியேற்றப்பட்டது] படிப்பு உரிமைக்கு (சட்டப்பிரிவு 14) எதிரானது. அதோடு, அடிப்படைக் கல்வி (சட்டப்பிரிவு 5) வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கடமைக்கும் எதிரானது.” அந்தத் தீர்ப்பினால் கிட்டத்தட்ட 1,000 யெகோவாவின் சாட்சி பிள்ளைகள் நன்மை அடைந்தார்கள். பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. பாப்லோ மற்றும் ஊகோவைப் போல பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகள் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
நிறைய இளம் யெகோவாவின் சாட்சிகள் சோதனைகள் மத்தியிலும் உண்மையாக இருந்திருக்கிறார்கள்
20, 21. ரோயெல் மற்றும் எமலீ எம்ப்ரலீனாக் சம்பந்தப்பட்ட வழக்கு உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்துகிறது?
20 பிலிப்பைன்ஸ். 1990-ல், ரோயெல் எம்ப்ரலீனாக் (9 வயது),g அவனுடைய அக்கா எமலீ எம்ப்ரலீனாக் (10 வயது), மற்றும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்த கிட்டத்தட்ட 66 பிள்ளைகள் கொடி வணக்கத்தில் ஈடுபடாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ரோயெல் மற்றும் எமலீயின் அப்பா லியனார்டோ, பள்ளி அதிகாரிகளிடம் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பிரச்சினை கைமீறிப் போனபோது லியனார்டோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தக் குடும்பத்தில் இருந்த எல்லாரும் வழிநடத்துதல் கேட்டு யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தார்கள். இதற்கிடையில், அந்தப் பிள்ளைகள் கேலி கிண்டலுக்கு ஆளானார்கள். சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லியனார்டோவுக்கு எந்த அனுபவமும் இல்லாததால் அந்த வழக்கில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார்.
21 கடைசியில், ஃபெலினோ கனால் என்ற சகோதரர் இவர்கள் சார்பாக வழக்கில் ஆஜரானார். அவர் அந்த நாட்டின் மிகப் பிரபலமான ஒரு சட்ட நிறுவனத்தில் வக்கீலாக வேலை செய்தவர். அந்த வழக்கு நடந்த காலப்பகுதியில்தான் அவர் அந்த நிறுவனத்தில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் ஒருமனதாக யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. அதோடு, பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து நீக்குவதற்கான உத்தரவு செல்லாது என அறிவித்தது. கடவுளுடைய மக்களின் உத்தமத்தை முறிக்க நினைத்தவர்களின் முயற்சி மறுபடியும் தோல்வி அடைந்தது.
நடுநிலையோடு இருப்பதால் வரும் ஒற்றுமை
22, 23. (அ) நம்மால் எப்படி இவ்வளவு வழக்குகளில் ஜெயிக்க முடிந்திருக்கிறது? (ஆ) உலகம் முழுவதுமுள்ள நம் சகோதர சகோதரிகள் மத்தியில் இருக்கிற சமாதானம் எதற்கு ஆதாரமாக இருக்கிறது?
22 யெகோவாவின் மக்களால் எப்படி இவ்வளவு வழக்குகளில் ஜெயிக்க முடிந்திருக்கிறது? நமக்கு எந்த அரசியல் செல்வாக்கும் கிடையாது. ஆனாலும், நம்மை விடாப்பிடியாக எதிர்க்கும் ஆட்களின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாதுகாக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பாரபட்சம் இல்லாத நீதிபதிகள் இருந்திருக்கிறார்கள். அதோடு அவர்கள் கொடுத்த தீர்ப்புகள், நாட்டின் சட்டத்தையே திருத்தியமைக்க உதவியிருக்கின்றன. வெற்றிப் பெற நாம் எடுத்த முயற்சிகளுக்கு கிறிஸ்துவின் ஆதரவு இருந்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (வெளிப்படுத்துதல் 6:2-ஐ வாசியுங்கள்.) நாம் ஏன் இப்படி வழக்குகள் தொடுக்கிறோம்? சட்டத்தைத் திருத்தியமைப்பது நம் நோக்கமல்ல. அதற்குப் பதிலாக, எந்தத் தடையும் இல்லாமல் நம் ராஜாவான இயேசு கிறிஸ்துவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்காகத்தான் இப்படி வழக்குத் தொடுக்கிறோம்.—அப். 4:29.
23 அரசியல் சச்சரவுகளாலும் ஆழமாக வேரூன்றிய பகையாலும் பிளவுபட்டிருக்கிற இந்த உலகத்தில், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் நடுநிலையோடு இருக்க எடுத்திருக்கும் முயற்சிகளை நம் ராஜாவான இயேசு கிறிஸ்து ஆசீர்வதித்திருக்கிறார். நமக்குள் பிரிவினைகளை உண்டாக்க சாத்தான் எடுத்திருக்கிற முயற்சிகள் வீணாகத்தான் போயிருக்கின்றன. ‘போர் செய்ய கற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று சொல்லும் லட்சக்கணக்கான மக்களைக் கடவுளுடைய அரசாங்கம் கூட்டிச்சேர்த்திருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள நம் சகோதர சகோதரிகள் மத்தியில் இருக்கிற சமாதானம் ஒரு அற்புதம் என்றே சொல்லலாம். கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதற்கு இது மறுக்க முடியாத அத்தாட்சி!—ஏசா. 2:4.
a இந்தத் தொகுதி புதிய சிருஷ்டிப்பு (ஆங்கிலம்) என்றும் அழைக்கப்படுகிறது. ஆயிரமாண்டு உதயம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் தொகுதிகள் பிற்பாடு, வேதாகமத்தில் படிப்புகள் என்று அழைக்கப்பட்டன.
b இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் அதிகாரம் 27, பக்கங்கள் 184-186-ஐப் பாருங்கள்.
c சமரச ஒப்பந்தத்தின்படி, மனசாட்சியின் அடிப்படையில் ராணுவச் சேவையில் ஈடுபட மறுக்கும் எல்லாருக்கும் ராணுவம் சாராத நிர்வாகத்தின் கீழ் வேறு அரசாங்க வேலைகளை பல்கேரியா அரசாங்கம் கொடுக்க வேண்டியிருந்தது.
d முழு பதிவையும் தெரிந்துகொள்ள நவம்பர் 1, 2012 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 29-31-ஐப் பாருங்கள்.
e 20 வருஷக் காலப்பகுதியில் ஆர்மீனியா அரசாங்கம் 450 இளம் யெகோவாவின் சாட்சிகளைச் சிறையில் போட்டது. நவம்பர் 2013-க்குள் எல்லாரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
f நீதிமன்ற பதிவுகளில் குடும்பப் பெயரில் ஒரு எழுத்துப் பிழை இருந்தது.
g நீதிமன்ற பதிவுகளில் குடும்பப் பெயர், எப்ரலீனாக் என்று தவறாக எழுதப்பட்டது.