வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஆகஸ்ட் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள்|2 தீமோத்தேயு 1-4
‘கடவுள் தருகிற சக்தி நமக்குக் கோழைத்தனத்தைக் கொடுப்பதில்லை’
w09 5/15 15 ¶9
இளைஞர்களே, உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்
9 தீமோத்தேயுவுக்கு உதவ, பிற்பாடு பவுல் இவ்வாறு அவருக்கு நினைப்பூட்டினார்: “கடவுள் அருளும் சக்தி நமக்குக் கோழைத்தனத்தை அல்ல, வல்லமையையும் அன்பையும் தெளிந்த புத்தியையுமே கொடுக்கிறது.” (2 தீ. 1:7) “தெளிந்த புத்தி” என்பது புத்திசாலித்தனமாகச் சிந்திப்பதையும் பகுத்தறிவதையும் குறிக்கிறது. நீங்கள் விரும்புகிறபடிதான் எல்லாம் நடக்க வேண்டுமென எதிர்பார்க்காமல் விரும்பாத சூழ்நிலையைக்கூட சகித்துக்கொள்கிற மனப்பக்குவமும் இதில் உட்பட்டிருக்கிறது. முதிர்ச்சியில்லாத சில இளைஞர்கள் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க கோழைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்; எப்படியெனில், அளவுக்குமீறி தூங்குகிறார்கள், சதா டிவி பார்க்கிறார்கள், போதைப்பொருளுக்கோ மதுபானத்திற்கோ அடிமையாகிறார்கள், பார்ட்டியே கதியென்று கிடக்கிறார்கள், அல்லது ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிறார்கள். எனவே, ‘தேவபக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டொழித்து தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதியுள்ளவர்களாக, தேவபக்தியுள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழும்படி’ கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.—தீத். 2:12.
‘பலங்கொண்டு தைரியமாயிருங்கள்!’
7 தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுகையில், ‘தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்து வெட்கப்பட வேண்டாம்’ என்று சொன்னார். (2 தீமோத்தேயு 1:7, 8; மாற்கு 8:38) இந்த வசனங்களை வாசிக்கும்போது நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய நம்பிக்கைகளைக் குறித்துப் பேச நான் வெட்கப்படுகிறேனா, அல்லது தைரியமாக சொல்கிறேனா? வேலை பார்க்கும் இடத்தில் (அல்லது பள்ளியில்) நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்லிக் கொள்கிறேனா, அல்லது உண்மையைச் சொல்ல தயங்குகிறேனா? மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வெட்கப்படுகிறேனா, அல்லது யெகோவாவுடன் கொண்டுள்ள உறவின் காரணமாக வித்தியாசமாக இருப்பதில் பெருமைப்படுகிறேனா?’ நம்மில் யாரேனும் நற்செய்தியை பிரசங்கிக்க பயந்தாலோ வித்தியாசமான நிலைநிற்கையை எடுக்க தயங்கினாலோ “பலங்கொண்டு தைரியமாயிரு” என யோசுவாவுக்கு யெகோவா கொடுத்த புத்திமதியை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடன் வேலை செய்பவர்கள் அல்லது பள்ளித் தோழர்களுடைய நோக்குநிலை முக்கியம் அல்ல, ஆனால் யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்துவின் நோக்குநிலையே முக்கியம் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.—கலாத்தியர் 1:10.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உண்மையான செல்வங்களை நாடுங்கள்!
13 தீமோத்தேயு விசுவாசமுள்ள மனிதராக இருந்தார். அப்போஸ்தலன் பவுல், அவரை ‘கிறிஸ்து இயேசுவின் சிறந்த படைவீரன்’ என்று அழைத்தார். பிறகு, தீமோத்தேயுவிடம் இப்படிச் சொன்னார்: “படைவீரனாகச் சேவை செய்கிற எந்த மனிதனும் மற்ற தொழில்களில் ஈடுபட மாட்டான்; தன்னைப் படைவீரனாகச் சேர்த்துக்கொண்டவரின் பிரியத்தைச் சம்பாதிக்கவே முயற்சி செய்வான்.” (2 தீ. 2:3, 4) பத்து லட்சத்துக்கும் அதிகமான முழுநேர ஊழியர்கள் உட்பட, இன்று இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாரும் பவுலின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்கிறார்கள். இந்தப் பேராசை பிடித்த உலகத்தில் இருக்கும் கவர்ச்சியான விளம்பரங்களை அவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். “கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை” என்ற நியமத்தை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். (நீதி. 22:7) தன்னுடைய வியாபார உலகத்துக்காகவே நாம் நம் நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்த வேண்டும் என்று சாத்தான் ஆசைப்படுகிறான். வீடு, கார், படிப்பு அல்லது கல்யாணம் ஆகியவற்றுக்காக சிலர் பெரியளவில் கடன் வாங்குகிறார்கள். நாம் கவனமாக இல்லை என்றால் பல வருஷங்களுக்குக் கடனாளிகளாக இருக்க வேண்டியிருக்கும். நாம் எளிமையாக வாழ்ந்தால்... கடன் வாங்காமல் இருந்தால்... செலவுகளைக் குறைத்துக்கொண்டால்... நாம் ஞானமாக நடந்துகொள்கிறோம் என்று சொல்லலாம். இப்படி, இன்றைய வியாபார உலகத்துக்கு அடிமையாகாமல், நம்மால் கடவுளுக்குச் சுதந்திரமாகச் சேவை செய்ய முடியும்.—1 தீ. 6:10.
யெகோவாவின் மக்கள் ‘அநீதியைக் கைவிடுகிறார்கள்’
10 முதல் நூற்றாண்டைப்போல் இன்று விசுவாச துரோகிகளைச் சபைக்குள் நாம் பார்ப்பதில்லை. ஆனால், விசுவாசதுரோக கருத்துகள் வேறு எந்த விதத்தில் தெரியவந்தாலும் சரி, அதை நாம் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். விசுவாசதுரோகிகளுடன் நாம் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இன்டர்நெட் மூலமாக அவர்கள் வெளியிடும் தகவல்களை வாசிக்கவும் கூடாது, நம் கருத்துகளைத் தெரிவிக்கவும் கூடாது. அவர்களுக்கு உதவும் எண்ணத்தோடுகூட அவர்களிடம் பேச கூடாது. அப்படி செய்தால் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடுவோம். எனவே, யெகோவாவின் மக்களாக நாம் விசுவாசதுரோகக் கருத்துகளை “கைவிட வேண்டும்.”
ஆகஸ்ட் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள்|தீத்து 1–பிலேமோன்
“மூப்பர்களை நியமியுங்கள்”
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒவ்வொரு நியமிப்பும் எப்படி செய்யப்பட்டது என்று பைபிளில் தெளிவாக இல்லை. இருந்தாலும், அதை பற்றி ஓரளவு புரிந்துகொள்ள சில பைபிள் வசனங்கள் நமக்கு உதவும். உதாரணத்திற்கு, பவுலும் பர்னபாவும் முதல் மிஷனரி பயணத்தை முடித்த பிறகு, “ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை நியமித்து, விரதமிருந்து, ஜெபம் செய்து, யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்த அவர்களை அவர் பாதுகாக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.” (அப். 14:23) தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இப்படி சொன்னார்: “சீர்கேடுகளைச் சரிசெய்வதற்காகவும், என் கட்டளைப்படி நகரங்கள்தோறும் மூப்பர்களை நியமிப்பதற்காகவும் நான் உன்னை கிரேத்தா தீவில் விட்டுவந்தேன்.” (தீத். 1:5) தீமோத்தேயுவுக்கும் பவுல் இதேபோல ஒரு பொறுப்பை கொடுத்ததாக தெரிகிறது. (1 தீ. 5:22) தீத்து, தீமோத்தேயு மற்றும் பவுல் பல சபைகளை சந்தித்தார்கள், பயணக் கண்காணிகளாக சேவை செய்தார்கள். அப்படியென்றால், மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பயணக் கண்காணிகளே நியமித்தார்கள், எருசலேமிலிருந்த ஆளும் குழு நியமிக்கவில்லை.
இந்த விஷயங்களை மனதில் வைத்துதான் ஆளும் குழு ஒரு புதிய மாற்றத்தை செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 1, 2014-ல் இருந்து மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் வட்டார கண்காணிகள்தான் நியமிக்கிறார்கள். ஒவ்வொரு சபையின் மூப்பர் குழுவும் தகுதியுள்ள நபரைப் பற்றி அவர்களுடைய வட்டாரக் கண்காணிக்கு தெரியப்படுத்துவார்கள். வட்டாரக் கண்காணி அந்த சபையை சந்திக்கும்போது அந்த நபரைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்; முடிந்தால் அவரோடு ஊழியம் செய்வார். அதன்பின் அந்த நபரைப் பற்றி மூப்பர் குழுவிடம் பேசுவார். பிறகு, அந்த நபரை நியமிப்பார். முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே நாமும் செய்கிறோம் என்பதை இது காட்டுகிறது.
மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிப்பதில் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது? ‘ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிக்கும்’ முக்கிய பொறுப்பு ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ அதாவது, ஆளும் குழுவுக்கு இருக்கிறது. (மத். 24:45-47) உலகம் முழுவதிலும் இருக்கும் சபைகள் ஒழுங்காக செயல்பட, ஆளும் குழு நடைமுறையான ஆலோசனைகளை கொடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளுடைய சக்தியின் உதவியோடு பைபிளை ஆராய்ச்சி செய்கிறார்கள். அதோடு வட்டாரக் கண்காணிகளையும் கிளை அலுவலக குழுவில் இருக்கும் சகோதரர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். கிளை அலுவலகம், ஆளும் குழு கொடுக்கும் ஆலோசனைகளை கடைப்பிடிக்க சபைகளுக்கு உதவுகிறது. சபையின் மூப்பர் குழு ஒரு சகோதரரை சிபாரிசு செய்வதற்கு முன் பைபிளில் சொல்லப்பட்ட தகுதிகள் அவருக்கு இருக்கிறதா என்பதை கவனமாகப் பார்க்கிறார்கள். மூப்பர்கள் கொடுத்த குறிப்புகளை வட்டாரக் கண்காணி கவனமாகப் பார்க்கிறார். அந்த சகோதரரை நியமிப்பதற்கு முன் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்கிறார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w89-E 5/15 31 ¶5
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிரேத்தர்களுடைய இனத்துக்கு எதிராகச் சொல்லப்பட்டிருந்த எந்தக் கெட்ட விஷயத்தையும் பவுல் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் கிரேத்தாவில் இருந்தார்கள் என்பது பவுலுக்குத் தெரியும். (அப்போஸ்தலர் 2:5, 11, 33) சபைகள் உருவாகும் அளவுக்குப் போதுமான கிறிஸ்தவர்கள், அதுவும் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள், “ஒவ்வொரு நகரத்திலும்” இருந்தார்கள். அந்தக் கிறிஸ்தவர்கள் பாவ இயல்புள்ள மனிதர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், அவர்கள் பொய் சொல்கிறவர்களாகவும், வேலைவெட்டியில்லாத பெருந்தீனிக்காரர்களாகவும் இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் அப்படி இருந்திருந்தால், யெகோவா அவர்களை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். (பிலிப்பியர் 3:18, 19; வெளிப்படுத்துதல் 21:8) நல்மனமுள்ள ஆட்கள் இன்று எல்லா தேசங்களிலும் இருப்பது போலவே அன்று கிரேத்தாவிலும் அநேகமாக இருந்திருப்பார்கள். அந்த ஆட்கள், தங்களைச் சுற்றி நடக்கும் ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பார்த்து வேதனைப்பட்டிருப்பார்கள், கடவுளுடைய செய்தியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்திருப்பார்கள்.—எசேக்கியேல் 9:4; ஒப்பிடுங்கள்: அப்போஸ்தலர் 13:48.
தீத்து, பிலேமோன், மற்றும் எபிரெயருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
15, 16—ஒநேசிமுவுக்கு விடுதலை கொடுக்கும்படி பிலேமோனிடம் பவுல் ஏன் கேட்கவில்லை? பவுல், ‘தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசேஷங்களை உபதேசிப்பதில்’ உறுதியாய் இருக்கவே விரும்பினார். ஆகவே, அடிமைத்தனம் போன்ற சமூகப் பிரச்சினைகளில் அவர் தலையிடவில்லை.—அப். 28:31.
ஆகஸ்ட் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 1-3
“நீதியை நேசியுங்கள், அநியாயத்தை வெறுத்திடுங்கள்”
மகிமையின் ராஜாவான கிறிஸ்துவை வாழ்த்துங்கள்!
8 யெகோவா அவருடைய மகனை 1914-ல் பரலோகத்தில் மேசியானிய ராஜாவாக நியமித்தார். ‘அவருடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.’ அதனால், அவருடைய ஆட்சியில் நீதியும் சமத்துவமும் தழைத்தோங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ‘தேவனே அவருடைய சிங்காசனமாக’ இருப்பதால், (NW) அவருடைய அதிகாரம் சட்டப்பூர்வமானது. அதாவது, அவரை ஆட்சியில் அமர்த்தியது யெகோவாவே. அதோடு, இயேசுவின் சிங்காசனம் “என்றென்றைக்குமுள்ளது.” கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவுக்கு அடிபணிந்து யெகோவாவுக்குச் சேவை செய்வதில் நீங்கள் பெருமைப்படுகிறீர்கள், அல்லவா?
மகிமையின் ராஜாவான கிறிஸ்துவை வாழ்த்துங்கள்!
7 சங்கீதம் 45:6, 7-ஐ வாசியுங்கள். இயேசு நீதியை மிகவும் நேசித்தார்; அவருடைய தகப்பனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அனைத்தையும் அறவே வெறுத்தார். அதனால், யெகோவா அவரை மேசியானிய அரசாங்கத்தின் ராஜாவாக முடிசூட்டினார். அவருடைய ‘தோழருக்கும்’ மேலாக, அதாவது தாவீதின் வம்சாவளியில் வந்த யூதாவின் ராஜாக்களுக்கும் மேலாக, இயேசுவை ‘ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.’ எப்படி? இயேசுவை யெகோவா நேரடியாக நியமித்தார். அதுமட்டுமல்ல, அவரை ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் நியமித்தார். (சங். 2:2; எபி. 5:5, 6) மேலும் தைலத்தினால் அல்ல, தம்முடைய சக்தியினால் அவரை அபிஷேகம் செய்தார். அதோடு, இயேசுவின் அரசாட்சி பூமிக்குரியதல்ல, பரலோகத்துக்குரியது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 1185 ¶1
சாயல்
இயேசு எப்போதுமே ஒரே அளவில்தான் தன் அப்பாவின் மகிமையைப் பிரதிபலித்திருக்கிறாரா?
கடவுளுடைய முதல் மகன், அதாவது பிற்பாடு மனிதனாக வந்த இயேசு, தன்னுடைய தகப்பனின் சாயலில் இருக்கிறார். (2கொ 4:4) “மனிதனை நம்முடைய சாயலில் . . . உண்டாக்கலாம்” என்று கடவுள் தன்னுடைய முதல் மகனிடம்தான் சொன்னார். படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே இந்த மகன், படைப்பாளராகிய தன் தகப்பனைப் போலவே இருக்கிறார். (ஆதி 1:26; யோவா 1:1-3; கொலோ 1:15, 16) இயேசு பூமியில் இருந்தபோது, ஒரு மனிதராக எந்தளவுக்குத் தன்னுடைய தகப்பனின் குணங்களைப் பிரதிபலிக்க முடியுமோ அந்தளவுக்கு அவற்றை முழுமையாகப் பிரதிபலித்தார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா 14:9; 5:17, 19, 30, 36; 8:28, 38, 42) ஆனால், இயேசு பரலோகத்துக்குரிய உடலில் உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, தன்னுடைய தகப்பனின் சாயலை முன்பைவிட இன்னும் அதிகமாகப் பிரதிபலித்தார். ஏனென்றால், அப்போது அவருடைய தகப்பன் அவருக்கு ‘பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரத்தையும்’ கொடுத்தார். (1பே 3:18; மத் 28:18) இயேசு “மேலான நிலைக்கு” உயர்த்தப்பட்டதால், பரலோகத்திலிருந்து பூமிக்கு வருவதற்கு முன்பு பிரதிபலித்ததைவிட இன்னும் அதிகமாகவே தன்னுடைய தகப்பனின் மகிமையைப் பிரதிபலித்தார். (பிலி 2:9; எபி 2:9) அதுமுதல் இயேசு, “[கடவுளுடைய] இயல்பின் அச்சுப் பதிவாக” இருக்கிறார்.—எபி 1:2-4, பொது மொழிபெயர்ப்பு.
it-1-E 1063 ¶7
லோகம்
சங்கீதம் 102:25, 26-ல் இருக்கிற வார்த்தைகள் யெகோவாவுக்குப் பொருந்தும். ஆனால், அப்போஸ்தலன் பவுல் அதை இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்திச் சொல்கிறார். ஏனென்றால், கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தபோது, அவருடைய ஒரே மகனாகிய இயேசு அவருக்கு உதவியாளராக இருந்தார். படைப்புகள் அழிந்துபோகலாம் (கடவுள் நினைத்தால் அவற்றை ‘சால்வையைப் போல் சுருட்டிப்போட’ முடியும்), ஆனால் கடவுளுடைய மகன் என்றென்றும் நிலைத்திருப்பார் என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார்.—எபி 1:1, 2, 8, 10-12; ஒப்பிடுங்கள்: 1பே 2:3, அடிக்குறிப்பு.
ஆகஸ்ட் 26–செப்டம்பர் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 4-6
“கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்”
கடவுளுடைய ஓய்வு என்றால் என்ன?
3 இயேசுவும் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் வாழ்ந்த காலப்பகுதி ஏழாம் நாளின் காலப்பகுதியாகவே இருந்தது; அதற்கு இரண்டு காரணங்களை நாம் சொல்லலாம். இயேசு தம் எதிரிகள் சிலரிடம் சொன்ன விஷயத்திலிருந்து அதற்கான முதல் காரணத்தைத் தெரிந்துகொள்கிறோம். இயேசு ஓய்வுநாளில் மக்களைக் குணப்படுத்தியதால் அந்த எதிரிகள் கோபத்தில் கொதித்தார்கள். ஓய்வுநாளில் எந்த வேலையையும் செய்யக் கூடாதெனத் திருச்சட்டம் சொன்னதால் இயேசு அந்நாளில் மக்களைக் குணப்படுத்தியது தவறென அவர்கள் நினைத்தார்கள். ஆகவே இயேசு அவர்களிடம், “என் தகப்பன் இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார், நானும் வேலை செய்து வருகிறேன்” என்று சொன்னார். (யோவா. 5:16, 17) அவர் உண்மையில் என்ன சொல்ல வந்தார்? இதைத்தான் சொல்ல வந்தார்: “என் தகப்பனும் நானும் ஒரேவித வேலையைச் செய்துவருகிறோம். என் தகப்பன், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கிற தம்முடைய ஓய்வுநாளில் வேலை செய்து வந்திருக்கிறார், இன்னமும் வேலை செய்து வருகிறார். ஆகவே, நானும் ஓய்வுநாளில் வேலை செய்வது தவறல்ல.” இயேசுவின் வார்த்தைகள் என்ன காட்டுகின்றன? அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நாளாகவே, அதாவது பூமியில் தம் கைவண்ணங்களைப் படைப்பதிலிருந்து கடவுள் ஓய்ந்திருக்கும் நாளாகவே, இருந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், பூமிக்கும் மனிதருக்குமான தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் அப்போதும் வேலை செய்துகொண்டுதான் இருந்தார்.
4 இயேசுவும் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் வாழ்ந்த காலப்பகுதி ஏழாம் நாளின் காலப்பகுதியாகவே இருந்தது என்பதை இன்னொரு காரணத்தை வைத்தும் நாம் சொல்லலாம். எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் கடவுளுடைய ஓய்வைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அதன் 4-ஆம் அதிகாரத்தில் ஆதியாகமம் 2:2-ஐ மேற்கோள் காட்டுவதற்குமுன், ‘விசுவாசம் வைத்திருக்கிற நாமே அந்த ஓய்வை அனுபவிக்கிறோம்’ என்று எழுதினார். (எபி. 4:3, 4, 6, 9) ஆகவே, பவுல் வாழ்ந்த காலப்பகுதி ஏழாம் நாளின் காலப்பகுதியாகவே இருந்தது. அப்படியென்றால், ஏழாம் நாள் எப்போது முடிவடையும்?
5 இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, ஏழாம் நாளை ஒரு விசேஷ நோக்கத்திற்காக யெகோவா தேர்ந்தெடுத்தார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். “கடவுள் ஏழாம் நாளை ஆசீர்வதிக்கத் தொடங்கி அதைப் புனிதமாக்கினார்” என்று ஆதியாகமம் 2:3 சொல்கிறது. யெகோவா ஏன் அந்நாளைப் புனிதமாக்கினார்? ஏனென்றால், பூமிக்குரிய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க அந்நாளை அவர் தேர்ந்தெடுத்தார். கீழ்ப்படிதலுள்ள ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியில் வாழ்ந்து அதிலுள்ள எல்லாவற்றையும் பராமரிக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. (ஆதி. 1:28) அந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் யெகோவா தேவனும் ‘ஓய்வுநாளுக்கு எஜமானரான’ இயேசு கிறிஸ்துவும் ‘இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார்கள்.’ (மத். 12:8) ஆகவே, யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கும்வரை அவரது ஓய்வுநாள் நீடிக்கும்; ஆம், கிறிஸ்துவின் ஆயிரமாண்டு ஆட்சியின் முடிவுவரை அது நீடிக்கும்.
கடவுளுடைய ஓய்வு என்றால் என்ன?
6 கடவுள் பூமிக்கான தமது நோக்கத்தை ஆதாமிடமும் ஏவாளிடமும் தெளிவாகச் சொன்னார்; ஆனால், அவர்கள் அந்த நோக்கத்திற்கு இசைவாக நடக்கவில்லை. அவர்களுக்குப்பின் லட்சக்கணக்கான மற்றவர்களும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போயிருக்கிறார்கள். கடவுளுடைய மக்களான இஸ்ரவேலர்கூட மீண்டும் மீண்டும் அவர் பேச்சை மீறினார்கள். பவுல், தன்னுடைய காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களில் சிலர் அந்த இஸ்ரவேலரைப் போலவே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வாய்ப்பிருந்ததாக எச்சரித்தார். “அந்த ஓய்வை அனுபவிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக; நம்மில் எவரும் கீழ்ப்படியாதவர்களுடைய மாதிரியைப் பின்பற்றிப் பாவத்தில் விழுந்துவிடக் கூடாதே” என்று அவர் எழுதினார். (எபி. 4:11) ஆக, கீழ்ப்படியாதவர்கள் கடவுளுடைய ஓய்வை அனுபவிக்க முடியாது. இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? நாம் ஏதோவொரு விதத்தில் கடவுளுடைய நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டோம் என்று அர்த்தப்படுத்துகிறதா? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்; ஆகவே, இந்தக் கட்டுரையில் அதை விவரமாகப் பார்ப்போம். ஆனால் அதற்குமுன், இஸ்ரவேலருடைய கெட்ட உதாரணத்தையும், அவர்கள் ஏன் கடவுளுடன் சேர்ந்து ஓய்வை அனுபவிக்கவில்லை என்பதையும் பற்றிச் சிந்திப்போம்.
கடவுளுடைய ஓய்வு என்றால் என்ன?
16 கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால்தான் மீட்புப் பெற முடியுமென நம்மில் ஒருவரும் நினைப்பதில்லை. பவுல் எபேசியர்களுக்கு எழுதிய வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன: “இந்த அளவற்ற கருணையினால்தான் விசுவாசத்தின் மூலம் நீங்கள் மீட்புப் பெற்றிருக்கிறீர்கள்; இதை நீங்களாகவே சம்பாதித்துக்கொள்ளவில்லை, இது கடவுளுடைய அன்பளிப்பு; ஆம், இதைச் செயல்களினால் பெற முடியாது.” (எபே. 2:8, 9) ஆக, இன்று கிறிஸ்தவர்கள் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்? பூமிக்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்குமுரிய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க ஓய்வுநாளை யெகோவா தேர்ந்தெடுத்தார் என்பதை நினைவில் வையுங்கள். அவர் தம்முடைய நோக்கத்தையும் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றையும் பற்றித் தம்முடைய அமைப்பின் மூலம் தெரியப்படுத்துகிறார். நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அமைப்புடன் ஒத்துழைக்கும்போது அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்.
17 நாம் அடிமை வகுப்பாருக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அல்லது நமக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ அதற்கு மட்டுமே கீழ்ப்படிந்தால் யெகோவாவின் நோக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம். அப்படிச் செயல்பட்டால் அவருடைய நண்பர்களாக இருக்க முடியாது. அடுத்த கட்டுரையில், கீழ்ப்படிதலைக் காட்ட நமக்கு வாய்ப்பளிக்கும் சில சூழ்நிலைகளைப் பற்றிச் சிந்திப்போம். அந்தச் சூழ்நிலைகளில் நாம் செய்யும் தீர்மானங்கள், கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கிறோமா என்பதைக் காட்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
“உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்று எபிரெயர் 4:12-ல் சொல்லப்பட்டிருக்கும் அந்த “கடவுளுடைய வார்த்தை” எது?
▪ பைபிளில் இருக்கும் செய்தியை அல்லது திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருக்கும் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார் என்பதை இந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது.
வாழ்க்கையை மாற்றும் சக்தி பைபிளுக்கு இருப்பதைப் பற்றி விளக்க, நம் பிரசுரங்கள் எபிரெயர் 4:12-ஐ அடிக்கடி பயன்படுத்துகின்றன. நம் பிரசுரங்கள் அப்படி விளக்குவது பொருத்தமானதுதான். இருந்தாலும், இந்த வசனத்தின் சூழமைவை இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்ப்பது நல்லது. கடவுளுடைய நோக்கங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி எபிரெய கிறிஸ்தவர்களை பவுல் உற்சாகப்படுத்தினார். அதைப் பற்றி பரிசுத்த எழுத்துக்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. எகிப்திலிருந்து காப்பாற்றப்பட்ட இஸ்ரவேலர்களை பவுல் உதாரணம் காட்டினார். கடவுள் வாக்குக் கொடுத்திருந்த “பாலும் தேனும் ஓடுகிற” தேசத்தில் நுழையும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது; உண்மையான இளைப்பாறுதலை, அதாவது ஓய்வை அவர்களால் அங்கே அனுபவிக்க முடியும்.—யாத். 3:8; உபா. 12:9, 10.
அவர்கள் ஓய்வை அனுபவிக்க வேண்டும் என்பது கடவுளுடைய திட்டவட்டமான நோக்கமாக இருந்தது. சில காலத்துக்குப் பிறகு, இஸ்ரவேலர்களின் இதயம் இறுகிப்போனது, அவர்கள் விசுவாசத்தைக் காட்டவில்லை. அதனால், பெரும்பாலான இஸ்ரவேலர்கள் அந்த ஓய்வை அனுபவிக்கவில்லை. (எண். 14:30; யோசு. 14:6-10) இருந்தாலும், “[கடவுளோடு] சேர்ந்து ஓய்வை அனுபவிப்பது பற்றிய வாக்குறுதி” இன்னும் இருப்பதாக பவுல் சொன்னார். (எபி. 3:16-19; 4:1) கடவுளுடைய திட்டவட்டமான நோக்கத்தின் ஒரு பாகம்தான் அந்த “வாக்குறுதி.” எபிரெய கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் அந்த நோக்கத்தைப் பற்றி படித்து, அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம். பைபிள் வசனங்களின் அடிப்படையில்தான் அந்த வாக்குறுதி சொல்லப்பட்டது என்பதை வலியுறுத்துவதற்காக, ஆதியாகமம் 2:2 மற்றும் சங்கீதம் 95:11-ல் இருக்கும் சில பகுதிகளை பவுல் மேற்கோள் காட்டினார்.
“[கடவுளோடு] சேர்ந்து ஓய்வை அனுபவிப்பது பற்றிய வாக்குறுதி இன்னும் இருப்பதால்” நாம் சந்தோஷப்பட வேண்டும். இந்த வாக்குறுதி பைபிள் அடிப்படையிலானது. அதனால், கடவுளுடைய ஓய்வை அனுபவிப்பதற்கான வாய்ப்பு உண்மையிலேயே இருக்கிறது என்பதை நாம் நம்புகிறோம்; அதற்காகச் சில படிகளையும் எடுத்திருக்கிறோம். மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவோ மற்ற விஷயங்களைச் செய்து கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவோ கடினமாக முயற்சி செய்வதன் மூலம் நாம் அந்தப் படிகளை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, விசுவாசத்தால்தான் கடவுளுடைய திட்டவட்டமான நோக்கத்துக்கு சந்தோஷமாக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறோம், தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தும் வருகிறோம். ஏற்கெனவே பார்த்தபடி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பைபிளைப் படிக்கவும் கடவுளுடைய திட்டவட்டமான நோக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்திருக்கிறார்கள். நிறைய பேர், அவர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறார்கள், விசுவாசம் காட்டியிருக்கிறார்கள், ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்பதற்கு அவர்களுடைய வாழ்க்கை ஆணித்தரமான அத்தாட்சி! பைபிளில் இருக்கிற கடவுளுடைய திட்டவட்டமான நோக்கம், ஏற்கெனவே நம் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது, தொடர்ந்து அது நம் வாழ்க்கையில் வல்லமையோடு செயல்படும்.
it-1-E 1139 ¶2
நம்பிக்கை
‘பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்கள்’ (எபி 3:1) முடிவில்லாத வாழ்வையும் அழியாமையையும் பெற்றுக்கொள்வார்கள். இந்த நம்பிக்கை உறுதியானது, முழுக்க முழுக்க நம்பகமானது. எப்படி? கடவுளால் பொய் சொல்லவே முடியாத இரண்டு விஷயங்களின் அடிப்படையில்! அவற்றில் ஒன்று, அவருடைய வாக்குறுதி, மற்றொன்று அவருடைய ஆணை. இந்த நம்பிக்கை, பரலோகத்தில் இப்போது சாவாமையுள்ள வாழ்க்கையைப் பெற்றிருக்கும் இயேசுவைச் சார்ந்திருக்கிறது. அதனால்தான் இந்த நம்பிக்கையைப் பற்றி இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “[அது] நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது; [பாவப் பரிகார நாளில் மகா பரிசுத்த அறைக்குள் தலைமைக் குரு போனதுபோல்] திரைச்சீலைக்குள் போக அது நம்மை வழிநடத்துகிறது. மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் தலைமைக் குருவாகியிருக்கிற நம் முன்னோடியான இயேசு நம் சார்பில் அந்தத் திரைச்சீலைக்குள் போயிருக்கிறார்.”—எபி 6:17-20.