வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜனவரி 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 1-2
“யெகோவா பூமியில் உயிர் வகைகளைப் படைக்கிறார்”
it-1-E பக். 527-528
படைப்பு
முதலாம் நாளில், “வெளிச்சம் வரட்டும்” என்று கடவுள் சொன்னபோது, அடுக்கடுக்கான மேகங்கள் வழியாக வெளிச்சம் ஊடுருவியதாகத் தெரிகிறது. ஆனாலும், அந்தச் சமயத்தில், வெளிச்சத்தைக் கொடுத்த ஒளிச்சுடர்களைப் பூமியிலிருந்து பார்க்க முடியவில்லை. ஜே. டபிள்யு. வாட்ஸ் என்பவருடைய மொழிபெயர்ப்பின்படி, “வெளிச்சம் படிப்படியாகத் தோன்றியது.” (ஆதி 1:3, அ டிஸ்டிங்டிவ் ட்ரான்ஸ்லேஷன் ஆஃப் ஜெனிசிஸ்) அதன்பின், கடவுள் வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரித்தார். வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு என்றும் பெயர் வைத்தார். அப்படியென்றால், பூமி அதன் அச்சில் சுழன்றுகொண்டே சூரியனைச் சுற்றிவரும்படி கடவுள் அதைப் படைத்திருந்தார். அதனால்தான், பூமியின் கிழக்கு அரைக்கோளத்திலும் மேற்கு அரைக்கோளத்திலும் வெளிச்சமும் இருட்டும் மாறிமாறி வருகின்றன.—ஆதி 1:3, 4.
இரண்டாம் நாளில் கடவுள் ‘தண்ணீரை இரண்டாகப் பிரித்து’ நடுவில் ஆகாயவிரிவை உண்டாக்கினார். பூமியிலிருந்த தண்ணீரின் பெரும் பகுதியைப் பூமியின் மேற்பரப்புக்கு மேலே உயர்த்தினார். இப்படி, பூமியிலிருந்த தண்ணீருக்கும் பூமிக்கு மேலே உயர்த்தப்பட்ட தண்ணீருக்கும் இடையில் ஆகாயவிரிவை உண்டாக்கினார். அந்த ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயர் வைத்தார். ஏனென்றால், அது பூமிக்கு மேலாக இருந்தது. ஆனால் அது மேல்வானத்தைக் குறிக்கவில்லை. ஏனென்றால், நட்சத்திரங்களோ மற்ற வான்கோள்களோ அந்த ஆகாயவிரிவுக்கு மேலே இருந்த தண்ணீரில் இருந்ததாகச் சொல்லப்படவில்லை.—ஆதி 1:6-8.
மூன்றாம் நாளில், கடவுளுடைய அற்புத சக்தியினால் பூமியிலிருந்த தண்ணீரெல்லாம் ஒருபக்கமாக ஒதுங்கி, காய்ந்த தரை உண்டானது. காய்ந்த தரைக்கு நிலம் என்று கடவுள் பெயர் வைத்தார். இந்த நாளில்தான் அணுக்களுக்குக் கடவுள் உயிர்சக்தியைக் கொடுத்து, புற்களையும் செடிகளையும் மரங்களையும் படைத்தார். அந்தந்த “இனத்தின்படியே” பெருகும் திறனை இந்த மூன்று பிரிவுகளுக்கும் கடவுள் கொடுத்தார். இவை எதுவும் தற்செயலாகவோ பரிமாணத்தினாலோ உண்டாகவில்லை.—ஆதி 1:9-13.
it-1-E பக். 528 பாரா. 5-8
படைப்பு
ஆதியாகமம் 1:16-ல் பாரா என்ற எபிரெய வினைச்சொல் (அர்த்தம் “படைத்தார்”) பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஆசாஹ் என்ற எபிரெய வினைச்சொல் (அர்த்தம், “செய்தார்”) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம் 1:1-ல் சொல்லப்பட்டிருக்கும் ‘வானத்தில்’ சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் அடங்குவதால், அவை நான்காம் நாளுக்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே படைக்கப்பட்டன என்று தெரிகிறது. அப்படியென்றால், நான்காம் நாளில் “பூமிக்கு வெளிச்சம் தருவதற்காகக் கடவுள் அவற்றை வானத்தில் வைத்தார்” என்பது, பூமியிலிருந்து அவற்றைப் பார்க்க முடிந்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. அதாவது, பூமியிலிருந்து பார்க்கும்போது அவை ஆகாயவிரிவில் இருப்பதுபோல் தெரிந்தன. அதோடு, “பருவ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறித்துக் காட்டுகிற அடையாளங்களாக” இருப்பதற்காகவும், மனிதர்களுக்குப் பல விதங்களில் வழிகாட்டுவதற்காகவும் அவை படைக்கப்பட்டன.—ஆதி 1:14.
ஐந்தாம் நாளில், மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள் முதன்முதலாகப் படைக்கப்பட்டன. எந்தவொரு உயிரினமும் மற்ற உயிரினங்களாகப் பரிணமிக்கும்படி படைக்கப்படவில்லை. ஆனால், கடவுள் தன்னுடைய சக்தியால் ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். “கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினங்களையும் கூட்டங்கூட்டமாக நீந்தும் உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே கடவுள் படைத்தார். பறக்கும் எல்லா பறவைகளையும் அந்தந்த இனத்தின்படியே படைத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தான் படைத்தவற்றைப் பார்த்துக் கடவுள் சந்தோஷப்பட்டார். அவற்றை ஆசீர்வதித்து, ‘ஏராளமாகப் பெருகும்படி’ சொன்னார். ஏனென்றால், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அந்த உயிரினங்களுக்கு “அந்தந்த இனத்தின்படியே” பெருகும் திறனைக் கடவுள் கொடுத்திருந்தார்.—ஆதி 1:20-23.
ஆறாம் நாளில், “காட்டு மிருகங்களை அந்தந்த இனத்தின்படியும் வீட்டு விலங்குகளை அந்தந்த இனத்தின்படியும் ஊரும் பிராணிகளை அந்தந்த இனத்தின்படியும் கடவுள் உண்டாக்க ஆரம்பித்தார்.” கடவுள் முன்பு படைத்தவற்றைப் போலவே இவையும் நன்றாக இருந்தன.—ஆதி 1:24, 25.
ஆறாம் நாளின் முடிவில், புத்தம்புதிய ஓர் உயிர் வகையைக் கடவுள் படைத்தார். அதாவது, விலங்குகளைவிட உயர்ந்த, ஆனால் தேவதூதர்களைவிடத் தாழ்ந்த உயிர் வகையாகிய மனிதனைப் படைத்தார். மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் தன்னைப் போலவே படைத்தார். “ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார்” என்று ஆதியாகமம் 1:27 சுருக்கமாகச் சொல்கிறது. அதன் இணைவசனங்களான ஆதியாகமம் 2:7-9-ன்படி, யெகோவா மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கி, அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார், அப்போது அவன் உயிருள்ளவன் ஆனான். யெகோவா அவனை ஒரு தோட்டத்தில் குடிவைத்தார், சாப்பிடுவதற்கு உணவையும் கொடுத்தார். மனிதனைப் படைப்பதற்கு அவர் பூமியின் மண்ணில் உள்ள தனிமங்களைப் பயன்படுத்தினார். அதன் பிறகு, ஆதாமுடைய விலா எலும்புகளில் ஒன்றை வைத்து ஒரு பெண்ணை உருவாக்கினார். (ஆதி 2:18-25) இப்படி, பெண் படைக்கப்பட்ட பிறகு ‘மனித இனத்தின்’ படைப்பு முழுமை அடைந்தது.—ஆதி 5:1, 2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w15-E 6/1 பக். 5
விஞ்ஞானமும் உங்கள் வாழ்க்கையும்
பூமி மற்றும் பிரபஞ்சத்தின் வயது
பூமியின் வயது சுமார் 4 பில்லியன் (400 கோடி) என்றும், கிட்டத்தட்ட 13-14 பில்லியன் (1300-1400 கோடி) வருஷங்களுக்கு முன்பு இந்தப் பிரபஞ்சம் உருவானது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் உண்மையில் எப்போது படைக்கப்பட்டது என்று பைபிள் சொல்வதில்லை. பூமி படைக்கப்பட்டு சில ஆயிரம் வருஷங்கள்தான் ஆகியிருப்பதாகவும் அது எங்கும் சொல்வதில்லை. பைபிளிலுள்ள முதல் வசனமே, “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்றுதான் சொல்கிறது. (ஆதியாகமம் 1:1) இப்படி, பைபிள் திட்டவட்டமான தேதியைச் சொல்லாததால், அறிவியல் நியதிகளை வைத்து இந்தப் பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிடும் வாய்ப்பு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்திருக்கிறது.
it-2-E பக். 52
இயேசு கிறிஸ்து
கடவுளைப் போல ஒரு படைப்பாளர் அல்ல. இயேசு படைப்பு வேலைகளில் பங்குகொண்டார். அதற்காக, தன்னுடைய தகப்பனைப் போல அவரும் ஒரு படைப்பாளராக ஆகிவிடவில்லை. கடவுளுடைய சக்தியினால்தான், அதாவது செயல் நடப்பிக்கும் ஆற்றலினால்தான், எல்லாமே படைக்கப்பட்டன. (ஆதி 1:2; சங் 33:6) யெகோவா உயிரின் ஊற்றாக இருப்பதால், கண்ணுக்குத் தெரிகிற உயிரினங்களும் சரி, கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களும் சரி, அவரால்தான் உண்டாயின. (சங் 36:9) அதனால், கடவுளுடைய மகன் கடவுளைப் போல ஒரு படைப்பாளர் அல்ல. கடவுளாகிய யெகோவா எல்லாவற்றையும் படைப்பதற்குத் தன்னுடைய மகனை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். கடவுள்தான் படைப்பாளர் என்று இயேசுவே சொன்னார், பைபிள் வசனங்களும் அதைத்தான் சொல்கின்றன.—மத் 19:4-6.
ஜனவரி 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 3-5
“முதல் பொய்யினால் வந்த விபரீதங்கள்”
யெகோவாவின் நோக்கம் நிறைவேறும்!
9 ஏவாள் தன்னுடைய அப்பாவான யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி, பிசாசாகிய சாத்தான் அவளை ஏமாற்றினான். அதற்கு அவன் ஒரு பாம்பைப் பயன்படுத்தினான். (ஆதியாகமம் 3:1-5-ஐ வாசியுங்கள்; வெளி. 12:9) “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும்” சாப்பிடுவதற்கு கடவுளுடைய பிள்ளைகள் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லி, சாத்தான் அதை ஒரு பிரச்சினையாக்கினான். ‘நீங்க ஆசைப்பட்டத கூடவா உங்களால செய்ய முடியாது?’ என்று கேட்பது போல அது இருந்தது. அடுத்ததாக, “நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள்” என்று சொன்னான். அது சுத்தப் பொய்! பிறகு, கடவுள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஏவாளை நம்ப வைக்க சாத்தான் முயற்சி செய்தான். ‘நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்பது கடவுளுக்குத் தெரியும்’ என்றும் சொன்னான். அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் ஏதோ விசேஷமான அறிவு கிடைக்கும் என்றும், அதில் யெகோவாவுக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை என்றும் அவன் சொன்னான். கடைசியாக, தவறான ஒரு வாக்குறுதியையும் கொடுத்தான்; அதாவது, “நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள்” என்று சொன்னான்.
ஆதி தம்பதியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்
ஏவாள் செய்த பாவம் தவிர்க்க முடியாத ஒன்றா? இல்லவே இல்லை! அவளுடைய இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். சாத்தான் சொன்னது, கடவுளும் ஆதாமும் சொன்னதற்கு முற்றிலும் முரணாக இருந்தது. உங்களுடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒருவரை ஏமாற்றுப் பேர்வழி என்று முன்பின் தெரியாத யாரோ ஒருவர் குற்றம்சாட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆகவே, சர்ப்பம் சொன்னதை ஏவாள் காதுகொடுத்து கேட்டிருக்கக் கூடாது. மாறாக, வெறுப்பையும் கோபத்தையும் காட்டி வித்தியாசமாக பிரதிபலித்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும், கடவுளுடைய நீதியின் மேலும் அவளுடைய கணவனுடைய வார்த்தையின் மேலும் சந்தேகமெழுப்புவதற்கு சர்ப்பம் யார்? தலைமைத்துவத்தின் நியமத்தை அவள் மதித்திருந்தால், எந்த ஒரு முடிவுக்கும் வருவதற்கு முன் அவனிடம் அவள் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். கடவுள் கொடுத்திருக்கும் போதனைகளுக்கு எதிராக எந்த தகவலை நாம் பெற்றுக்கொண்டாலும் இதையே நாம் செய்ய வேண்டும். ஆனால் ஏவாளோ சோதனைக்காரனின் வஞ்சக வார்த்தைகளை அப்படியே நம்பிவிட்டாள், எது சரி எது தவறு என்பதை தானே தீர்மானிக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். இதை எண்ணிப் பார்க்க பார்க்க அதிக இனிமையாக இருந்தது. அந்த எண்ணத்தை தன் மனதிலிருந்து உடனடியாக உதறிவிட்டிருக்க வேண்டும். அல்லது தன் குடும்ப தலைவனிடம் கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவளோ தவறான ஆசையை வளர்த்துக் கொண்டதால் என்னே ஒரு தவறை செய்துவிட்டாள்!—1 கொரிந்தியர் 11:3; யாக்கோபு 1:14, 15.
மனைவியின் பேச்சை கேட்கிறான்
ஏவாள் ஆதாமை பாவத்தில் தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி செய்துவிடுகிறாள். மறுத்து பேசாமல் ஆதாம் இதைச் செய்ய ஒப்புக்கொண்டதை நாம் எவ்வாறு விளக்குவோம்? (ஆதியாகமம் 3:6, 17) யாரிடம் உண்மையாக இருப்பது என்பதில் ஆதாமின் மனதில் ஒரு போராட்டம் எழுந்தது. மிகவும் பிரியமான துணைவியையும் தனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருந்த படைப்பாளருக்கு அவன் கீழ்ப்படிவானா? இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய கடவுளின் உதவியை நாடுவானா? அல்லது வருவது வரட்டும் என்றெண்ணி, ஏவாளுக்கு இணங்கிப்போக தீர்மானிப்பானா? விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம் என்றெல்லாம் ஏவாள் கண்ட கனவு நனவாகாமல் கானல் நீராகிவிடும் என்பது ஆதாமுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவன் தன் மனைவியின் பேச்சையே கேட்கிறான். அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஏவப்பட்டு எழுதினார்: “ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.” (1 தீமோத்தேயு 2:14) ஆகவே ஆதாம் வேண்டுமென்றே யெகோவாவை எதிர்க்கத் துணிந்துவிட்டான். இந்த நிலைமைக்குத் தீர்வுகாண கடவுளுக்கிருக்கும் திறமைமீது அவன் விசுவாசம் வைத்திருக்க வேண்டும்; அவனோ எங்கே தன் மனைவியை பிரிந்துவிட வேண்டியிருக்குமோ என்றே அதிகமாய் பயந்ததுபோல் தோன்றுகிறது.
w12-E 9/1 பக். 4 பாரா 2
கடவுளுக்குப் பெண்கள்மேல் கரிசனை இருக்கிறதா?
கடவுள் பெண்களைச் சபித்திருக்கிறாரா?
இல்லை. “பழைய பாம்பாகிய” ‘பிசாசைத்தான்’ உண்மையில் கடவுள் சபித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 12:9; ஆதியாகமம் 3:14) ஆதாம் தன் மனைவியை “அடக்கி ஆளுவான்” என்று கடவுள் சொன்னபோது, ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவது சரி என்பதாக அவர் சொல்லவில்லை. (ஆதியாகமம் 3:16) பாவத்தின் விளைவுகளை அந்த முதல் தம்பதி சந்திப்பார்கள் என்பதைத்தான் முன்கூட்டியே சொன்னார்.
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—I
3:17—எந்த விதத்தில் நிலம் சபிக்கப்பட்டது, எவ்வளவு காலத்திற்கு? பயிரிடுவது அதிக கடினமாக இருக்கும் என்பதையே நிலத்திற்கு கொடுக்கப்பட்ட சாபம் அர்த்தப்படுத்தியது. முட்செடிகளும் முட்புதர்களும் வளர்ந்திருந்த சபிக்கப்பட்ட அந்த நிலத்தின் பாதிப்புகளை ஆதாமின் சந்ததியினரால் நன்கு உணர முடிந்தது; அதனால்தான், ‘யெகோவா நிலத்தை சபித்ததால் கைகளுக்கு உண்டான வலியை’ பற்றி நோவாவின் தகப்பன் லாமேக்கு சொன்னார். (ஆதியாகமம் 5:29, NW) ஜலப்பிரளயத்திற்கு பிறகு, நோவாவையும் அவருடைய மகன்களையும் யெகோவா ஆசீர்வதித்து அவர்கள் பூமியில் பலுகிப் பெருக வேண்டுமென்ற தம் நோக்கத்தைத் தெரிவித்தார். (ஆதியாகமம் 9:1) அதன் பிறகு நிலத்திற்கு கொடுத்த சாபத்தையும் கடவுள் நீக்கிவிட்டதாக தெரிகிறது.—ஆதியாகமம் 13:10.
it-2-E பக். 186
பிரசவ வேதனை
பிரசவத்தின்போது ஏற்படும் கடும் வலியை இது குறிக்கிறது. முதல் மனுஷி ஏவாள் பாவம் செய்ததால் பிரசவத்தின்போது அவளுக்கு என்ன நடக்கும் என்று கடவுள் சொன்னார். அவள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருந்தால், தொடர்ந்து கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைத்திருக்கும். அதனால், குழந்தையைப் பெற்றெடுப்பது சந்தோஷத்திலும் சந்தோஷமான அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால், “யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து. அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும் கொடுக்க மாட்டார்.” (நீதி. 10:22) ஆனால் இப்போது, பாவ இயல்பின் காரணமாக மனிதர்களின் உடல் சரிவர இயங்காததால் வலி ஏற்படுகிறது. அதனால்தான் கடவுள் முதல் மனுஷியிடம், “நீ கர்ப்பமாக இருக்கும்போது உன் வலியை ரொம்பவே அதிகமாக்குவேன். வலியோடுதான் நீ பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய்” என்று சொன்னார். கடவுள் அனுமதிக்கும் ஒன்றை அவரே செய்வதாக சிலசமயங்களில் வசனங்கள் சொல்கின்றன. இங்கும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.—ஆதி. 3:16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 192 பாரா 5
லாமேக்கு
லாமேக்கு தன் மனைவிகளுக்காகச் சொன்ன கவிதை (ஆதி 4:23, 24) அன்று நடந்த வன்முறைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. “லாமேக்கின் மனைவிகளே, கேளுங்கள். என் வார்த்தைகளுக்குக் காதுகொடுங்கள்: ஒரு மனுஷனைக் கொன்றேன், என்னைக் காயப்படுத்தியதற்காக. ஆம், ஓர் இளைஞனைக் கொன்றேன், என்னை அடித்ததற்காக. காயீனுக்காக 7 தடவை பழிவாங்கப்படும் என்றால், லாமேக்குக்காக 77 தடவை பழிவாங்கப்படும்” என்று அவன் சொன்னான். அநேகமாக லாமேக்கு, தான் காயீனைப் போலத் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை என்று சொல்லித் தன்னை நியாயப்படுத்தியதாகத் தெரிகிறது. தற்காப்புக்காகத்தான், தன்னை அடித்துக் காயப்படுத்தியவனைக் கொலை செய்ததாக லாமேக்கு சொன்னான். அதனால், அந்தக் கொலைக்காகத் தன்னை யாரும் பழிவாங்கக் கூடாதென்று அவன் அந்தக் கவிதையின் மூலம் கேட்டதாகத் தெரிகிறது.
it-1-E பக். 338 பாரா 2
தெய்வநிந்தனை
பெருவெள்ளத்துக்கு முன்பு ஏனோசின் காலத்தில் “ஜனங்கள் யெகோவாவின் பெயரில் அழைக்க ஆரம்பித்தார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி 4:26, அடிக்குறிப்பு) ஆனால், அவர்கள் விசுவாசத்தோடும் நேர்மையோடும் யெகோவாவின் பெயரில் அழைக்க ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால், அதற்கு வெகு காலத்துக்கு முன்பே ஆபேல் யெகோவாவின் பெயரில் அழைக்க ஆரம்பித்திருந்தார். (எபி 11:4) அதனால், ஏனோசின் காலத்தில் ஜனங்கள் கடவுளுடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதையும், அந்தப் பெயரை மனிதர்களுக்கோ சிலைகளுக்கோ வைத்துக் களங்கப்படுத்தியதையும் பற்றித்தான் அந்த வசனம் சொல்வதாக சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அப்படியென்றால், அந்த ஜனங்கள் செய்தது தெய்வநிந்தனை.
ஜனவரி 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 6-8
“அவர் அப்படியே செய்தார்”
நோவா, தானியேல், யோபு — இவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றுங்கள்
4 நோவாவுக்கு சில சவால்கள் இருந்தன. நோவாவுடைய கொள்ளுத்தாத்தாவாகிய ஏனோக்கின் காலத்திலேயே, ஜனங்கள் படுமோசமானவர்களாக இருந்தார்கள். யெகோவாவைப் பற்றி அவர்கள் “அதிர்ச்சியூட்டும்” விதமாக ‘பேசினார்கள்.’ (யூ. 14, 15) வன்முறை அதிகமாகிக்கொண்டே போனது. நோவாவின் காலத்துக்குள், “பூமியெங்கும் வன்முறை நடந்தது.” பொல்லாத தேவதூதர்கள் மனித உருவெடுத்து வந்து, பெண்களைக் கல்யாணம் செய்தார்கள். அவர்களுக்குப் பிறந்த மகன்கள் கொடூரமானவர்களாக இருந்தார்கள், வன்முறையில் இறங்கினார்கள். (ஆதி. 6:2-4, 11, 12) ஆனால், நோவா வித்தியாசமாக இருந்ததை எல்லாராலும் பார்க்க முடிந்தது. “நோவா யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார்.” சுற்றியிருந்த ஜனங்களைப் போல் இல்லாமல், நோவா சரியானதைச் செய்தார். அவர் “உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.”—ஆதி. 6:8, 9.
w13-E 4/1 பக். 14 பாரா 1
அவர் “உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்”
கிட்டத்தட்ட 40 முதல் 50 வருஷங்களுக்கு நோவா பேழையைக் கட்டினார். மரங்களை வெட்டி... அவற்றின் துண்டுகளை இழுத்துவந்து... மரக்கட்டைகளைத் துண்டாக்கி... அவற்றைச் செதுக்கி இணைக்க வேண்டியிருந்தது. அந்தப் பேழைக்கு மூன்று தளங்களும், பல அறைகளும், பக்கவாட்டில் ஒரு கதவும் இருந்தன. அநேகமாக, பேழையின் கூரைக்குக் கீழே ஜன்னல்கள் இருந்தன. தண்ணீர் வடிந்துபோகும்படி பேழையின் மேற்கூரை சற்றுக் கூம்பு வடிவில் இருந்தது.—ஆதி 6:14-16.
ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுங்கள்
13 பந்தயத்தில் சகித்திருந்து வெற்றிபெற அந்த ஊழியர்களுக்கு எது உதவியது? நோவாவைப் பற்றி பவுல் எழுதியதைக் கவனியுங்கள். (எபிரெயர் 11:7-ஐ வாசியுங்கள்.) அதுவரை நோவா ஜலப்பிரளயத்தைப் பார்த்ததே இல்லை. (ஆதி. 6:17) அதற்கு முன்பு அதுபோன்ற ஒன்று நிகழ்ந்ததே இல்லை. இருந்தாலும், அது நடக்காது என்று நோவா நினைக்கவில்லை. ஏன்? ஏனென்றால், யெகோவா எதைச் சொன்னாலும் அதைச் செய்வார் என்பதில் அவர் விசுவாசம் வைத்திருந்தார். கடவுள் தன்னிடம் மிகக் கஷ்டமான காரியங்களைச் செய்யும்படி சொன்னதாக நோவா நினைக்கவில்லை. மாறாக, அவர் சொன்னதையெல்லாம் ‘அப்படியே செய்தார்.’ (ஆதி. 6:22) ஆம், பேழையைக் கட்டினார், மிருகங்களை கூட்டிச்சேர்த்தார், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களைப் பேழையில் சேமித்து வைத்தார், எச்சரிப்பின் செய்தியை அறிவித்தார், யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்க தன் குடும்பத்தாருக்கு உதவினார். யெகோவா கட்டளையிட்ட இந்த எல்லாவற்றையும் செய்வது நோவாவுக்கு நிச்சயமாகவே சவாலாக இருந்திருக்கும். என்றாலும், விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் காட்டினார். அதனால் அவரும் அவருடைய குடும்பத்தாரும் உயிர்பிழைத்து, பல ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—I
7:2—சுத்தமான மிருகங்கள், சுத்தமல்லாத மிருகங்கள் என எதன் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டன? எந்தெந்த மிருகங்களை சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதன் அடிப்படையில் அல்ல, ஆனால் வழிபாட்டு காரியங்களில் பலி செலுத்துவதற்கு பயன்படும் மிருகங்கள் எவை என்பதன் அடிப்படையிலேயே அவை பிரிக்கப்பட்டன. ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதர் இறைச்சியை சாப்பிடவில்லை. உணவைப் பொருத்ததில் ‘சுத்தமான’ மிருகங்கள், ‘அசுத்தமான’ மிருகங்கள் என்ற விவரம் நியாயப்பிரமாண சட்டத்தில் மட்டுமே காணப்பட்டன. அந்தச் சட்டம் நீக்கப்பட்டதும் அந்தக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன. (அப்போஸ்தலர் 10:9-16; எபேசியர் 2:15) யெகோவாவுக்கு பலி செலுத்த ஏற்ற மிருகம் எது என்பதை நோவா அறிந்திருந்ததாக தெரிகிறது. ஆகவேதான், பேழையை விட்டு அவர் வெளியே வந்ததும் ‘யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டார்.’—ஆதியாகமம் 8:20.
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—I
7:11—பூகோள ஜலப்பிரளயம் ஏற்பட்டபோது அந்தத் தண்ணீர் எங்கிருந்து வந்தது? சிருஷ்டிப்பின் இரண்டாம் காலக்கட்டத்தில், அல்லது ‘நாளில்,’ பூமியின் வளிமண்டலமாகிய “ஆகாயவிரிவு” உருவானபோது ‘ஆகாயவிரிவுக்குக் கீழேயும்’ ‘ஆகாயவிரிவுக்கு மேலேயும்’ தண்ணீர் இருந்தது. (ஆதியாகமம் 1:6, 7) ‘ஆகாயவிரிவுக்கு கீழே’ இருந்த தண்ணீர் என்பது பூமியில் ஏற்கெனவே இருந்த தண்ணீர் ஆகும். பூமிக்கு வெகு உயரத்தில் ‘மகா ஆழமாக’ இருந்த பிரமாண்டமான ஈரப் படலமே ‘ஆகாயவிரிவுக்கு மேலே’ இருந்த தண்ணீர் ஆகும். அந்தத் தண்ணீரே நோவாவின் காலத்தில் பூமியின் மீது பொழிந்தது.
ஜனவரி 27–பிப்ரவரி 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 9-11
“பூமியெங்கும் ஒரே மொழி இருந்தது”
it-1-E பக். 239
மகா பாபிலோன்
பழங்கால பாபிலோனைப் பற்றிய விவரங்கள். சினேயார் சமவெளியில் பாபிலோன் நகரம் அமைக்கப்பட்ட அதேசமயத்தில்தான் பாபேல் கோபுரத்தைக் கட்டுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. (ஆதி 11:2-9) அங்கிருந்தவர்கள் அந்தக் கோபுரத்தையும் நகரத்தையும் கட்டியதற்கு முக்கியக் காரணம் கடவுளுடைய பெயருக்குப் புகழ் சேர்ப்பதற்கு அல்ல; ஆனால், தங்களுக்கு ‘பேரும் புகழும் சம்பாதிப்பதற்குத்தான்.’ அந்த முதல் கோபுரம் எந்த வடிவத்தில் இருந்திருந்தாலும் சரி, அது மத சம்பந்தப்பட்டதாக இருந்ததென்று தெரிகிறது; பழங்கால பாபிலோனின் இடிபாடுகளிலும் மெசொப்பொத்தாமியாவின் மற்ற பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோபுரங்கள் இதை உறுதிசெய்கின்றன. அந்தக் கட்டிட வேலையை யெகோவா உடனே தடுத்து நிறுத்தியதை வைத்துப் பார்க்கும்போது, அது பொய் மத நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிகிறது. அந்த நகரத்துக்கு வைக்கப்பட்டிருந்த எபிரெயப் பெயரான பாபேல் என்பதற்கு “குழப்பம்” என்று அர்த்தம். அதனால், அந்த நகரத்தில் மீந்திருந்தவர்கள் அந்தப் பெயரை மாற்றிவிட்டார்கள். அவர்கள் புதிதாக வைத்த சுமேரியப் பெயருக்கும் (கா-டிங்கிர்-ரா) அக்காதியப் பெயருக்கும் (பாப்-இலு) “கடவுளுடைய வாசல்கதவு” என்று அர்த்தம். ஆனால், அந்தப் புதிய பெயர்களும்கூட அந்த நகரத்துக்கு மதத்தோடு சம்பந்தம் இருந்ததைக் காட்டின.
it-2-E பக். 202 பாரா 2
மொழி
பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்பும்படி நோவாவிடமும் அவருடைய மகன்களிடமும் கடவுள் சொல்லியிருந்தார். ஆனால், பெருவெள்ளத்துக்குப் பிறகு பெருகிய மனிதர்களில் சிலர் ஒரு கும்பலாகச் சேர்ந்துகொண்டு கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக நடந்துகொண்டதாக ஆதியாகமப் பதிவு சொல்கிறது. (ஆதி 9:1) ஏராளமாகப் பெருகி ‘பூமியை நிரப்புவதற்கு’ பதிலாக, ஒரே இடத்தில் (மெசொப்பொத்தாமியாவில் இருந்த சினேயார் சமவெளியில்) வாழ அவர்கள் திட்டம் போட்டார்கள். அங்கே ஒரு கோபுரத்தைக் கட்டி அந்த இடத்தை ஒரு வழிபாட்டு மையமாக்க வேண்டுமென்றும் அவர்கள் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது.—ஆதி 11:2-4.
it-2-E பக். 202 பாரா 3
மொழி
சர்வவல்லமையுள்ள கடவுள், அவர்களுடைய மொழியைக் குழப்புவதன் மூலம் அவர்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்ய முடியாதபடி செய்துவிட்டார். இப்படி, அவர்கள் துணிந்து செய்த கட்டுமான வேலையைத் தடுத்து நிறுத்தினார். அதற்குமேல் அவர்களால் ஒன்றுசேர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அவர்கள் பூமியின் எல்லா பகுதிகளுக்கும் சிதறிப்போனார்கள். மொழியில் குழப்பம் ஏற்பட்டதால், மனிதர்கள் அதேபோல் தொடர்ந்து கடவுளை எதிர்த்துக் கலகம் செய்ய முடியாமல்போனது. ஏனென்றால், மனிதர்களால் தங்கள் உடல் பலத்தையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி திட்டங்கள் தீட்டவும் நினைத்ததைச் சாதிக்கவும் முடியவில்லை. புதிதாக உருவான வெவ்வேறு மொழித் தொகுதியினரால் தங்கள் அறிவையும் (கடவுள் கொடுத்த அறிவை அல்ல, சொந்த ஆராய்ச்சியினாலும் அனுபவத்தினாலும் பெற்ற அறிவை) பகிர்ந்துகொள்ள முடியவில்லை. (ஒப்பிடுங்கள்: பிர 7:29; உபா 32:5.) இப்படி, மொழியில் ஏற்பட்ட குழப்பம் மனித சமுதாயத்தில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தினாலும், ஆபத்தான லட்சியங்களிலிருந்தும் தீங்கு விளைவிக்கிற குறிக்கோள்களிலிருந்தும் மனித சமுதாயத்தைப் பாதுகாத்தது. (ஆதி 11:5-9; ஒப்பிடுங்கள்: ஏசா 8:9, 10.) நம் காலத்தில் மனிதர்கள் தங்களுடைய அறிவையும் ஆராய்ச்சியையும் தவறாகப் பயன்படுத்தி சாதித்திருக்கும் சில காரியங்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. பாபேல் கோபுரத்தைக் கட்டி முடிக்க மனிதர்களை அனுமதித்தால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை ரொம்ப முன்னதாகவே யோசித்துப் பார்த்துத்தான் கடவுள் அதைத் தடுத்தார் என்பது தெளிவாகப் புரிகிறது.
it-2-E பக். 472
தேசங்கள்
மொழித் தொகுதிகளுக்கு இடையே பேச்சுத்தொடர்பு இல்லாமல்போனதால் வெவ்வேறு கலாச்சாரங்களும், கலைகளும், சம்பிரதாயங்களும், பழக்கவழக்கங்களும், மதங்களும் உருவாயின. ஒவ்வொரு தொகுதியினரும் அவரவர் இஷ்டப்படி நடந்துகொண்டார்கள். (லேவி 18:3) கடவுளைவிட்டுப் பிரிந்திருந்த அவர்கள் எல்லாரும் தங்களுடைய புராணக் கடவுள்களுக்குச் சிலைகளைச் செய்தார்கள்.—உபா 12:30; 2ரா 17:29, 33.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1023 பாரா 4
காம்
கானானுக்கும் அந்தத் தவறில் நேரடியான ஒரு பங்கு இருந்திருக்கலாம், அவருடைய அப்பா காம் அவரைக் கண்டித்துத் திருத்தாமல் விட்டிருக்கலாம். அல்லது, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் நோவா ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்லியிருக்கலாம்; அதாவது, காமுக்கு இருந்த கெட்ட எண்ணம் அவருடைய மகனாகிய கானானின் சந்ததிக்கும் வரும் என்று சொல்லியிருக்கலாம். (ஒருவேளை கானானுக்கு ஏற்கெனவே கெட்ட எண்ணம் இருந்திருக்கலாம்.) சேமின் சந்ததி கானானியர்களை வீழ்த்தியபோது அந்தச் சாபம் ஓரளவுக்கு நிறைவேறியது. அழிக்கப்படாதவர்கள் (உதாரணத்துக்கு, கிபியோனியர்கள் [யோசு 9]) இஸ்ரவேலர்களின் அடிமைகளானார்கள். காமின் மகனாகிய கானானின் சந்ததி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் போன்ற (யாப்பேத்தின் சந்ததியைச் சேர்ந்த) உலக வல்லரசுகளின் ஆதிக்கத்தின்கீழ் வந்தபோது அந்தச் சாபம் முழுமையாக நிறைவேறியது.
it-2-E பக். 503
நிம்ரோது
சினேயார் தேசத்திலிருந்த பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகியவைதான் நிம்ரோது முதன்முதலாக ஆட்சி செய்த நகரங்கள். (ஆதி 10:10) அதனால், அவனுடைய தலைமையில்தான் மக்கள் பாபேலையும் அதன் கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்திருப்பார்கள். இந்த முடிவு, யூதர்களுடைய பாரம்பரிய கருத்தோடும் ஒத்துப்போகிறது. ஜொசிஃபஸ் இப்படி எழுதினார்: “[நிம்ரோது] கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்கோல் ஆட்சி நடத்த ஆரம்பித்தான். மக்கள் தெய்வபயத்தை விட்டுவிட வேண்டுமென்றால் அவர்களை எப்போதுமே தன் அதிகாரப் பிடியில் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தான். கடவுள் இந்த உலகத்தை மறுபடியும் அழிக்க நினைத்தால் அவரைப் பழிவாங்கப்போவதாக மிரட்டினான். தண்ணீர் நுழைய முடியாதபடி மிக உயரமான கோபுரத்தைக் கட்டப்போவதாகவும், தன்னுடைய முன்னோர்கள் அழிக்கப்பட்டதற்காகப் பழிதீர்க்கப்போவதாகவும் சொன்னான். மக்கள் [நிம்ரோதுவின்] ஆலோசனைப்படி நடக்க விரும்பினார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிவதை அடிமைத்தனமாக நினைத்தார்கள். அதனால், அந்தக் கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள் . . . யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிக வேகமாக அந்த வேலை நடக்க ஆரம்பித்தது”.—ஜூயிஷ் ஆண்ட்டிக்விட்டீஸ், I, 114, 115 (iv, 2, 3).