உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • bhs அதி. 3 பக். 29-39
  • கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்?
  • பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • பைபிள் கற்பிக்கிறது-ல் காட்டவும்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய எதிரி
  • இந்த உலகத்தை ஆட்சி செய்வது யார்?
  • சாத்தானுடைய உலகம் எப்படி அழிக்கப்படும்?
  • புதிய உலகம் விரைவில்!
  • ஏன் இவ்வளவு வேதனை?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • நம்மைவிட உயர்ந்தவர்கள்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
மேலும் பார்க்க
பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
bhs அதி. 3 பக். 29-39

அதிகாரம் 3

கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்?

1. கடவுள் எதற்காக மனிதர்களைப் படைத்தார்?

கடவுள், முதல் மனித ஜோடியான ஆதாமையும் ஏவாளையும் படைத்து அவர்களை ஒரு அழகான தோட்டத்தில் குடிவைத்தார். அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்... முழு பூமியையும் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும்... மிருகங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும்... என்றெல்லாம் விரும்பினார். இதற்காகத்தான் மனிதர்களைப் படைத்தார்.—ஆதியாகமம் 1:28; 2:8, 9, 15; பின்குறிப்பு 6-ஐப் பாருங்கள்.

2. (அ) கடவுள், தான் செய்ய நினைத்ததை நிச்சயம் செய்து முடிப்பார் என்று நாம் எப்படிச் சொல்லலாம்? (ஆ) எப்படிப்பட்ட மனிதர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்று பைபிள் சொல்கிறது?

2 நாம் பூஞ்சோலை பூமியில் வாழும் காலம் வருமென்று நினைக்கிறீர்களா? “நான் தீர்மானித்தேன், அதை நிறைவேற்றுவேன்” என்று யெகோவா சொல்கிறார். (ஏசாயா 46:9-11; 55:11) அவர் செய்ய நினைத்ததை நிச்சயம் செய்து முடிப்பார், யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. யெகோவா இந்தப் பூமியை “காரணம் இல்லாமல் படைக்கவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 45:18) மனிதர்கள் வாழ்வதற்காகத்தான் இந்தப் பூமியை அவர் படைத்தார். எப்படிப்பட்ட மனிதர்கள் இங்கே வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்? அவர்கள் எவ்வளவு காலத்துக்கு வாழ வேண்டுமென்று விரும்புகிறார்? “நீதிமான்கள் [அதாவது, கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள்] இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

3. மனிதர்கள் வியாதிப்பட்டு சாவதைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன கேள்விகள் வரலாம்?

3 இன்று மனிதர்கள் வியாதிப்பட்டு சாகிறார்கள். நிறைய இடங்களில், ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டு, கொலைகூட செய்துவிடுகிறார்கள். ஆனால், இப்படி வாழ்வதற்காகக் கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை. அப்படியென்றால், கடவுள் நினைத்தபடி மனிதர்களால் ஏன் வாழ முடியவில்லை? என்ன நடந்தது? இதற்கு பைபிள்தான் பதில் சொல்ல முடியும்.

கடவுளுடைய எதிரி

4, 5. (அ) ஏதேன் தோட்டத்தில் ஒரு பாம்பின் மூலமாக ஏவாளிடம் பேசியது யார்? (ஆ) நேர்மையான ஒருவர் எப்படித் திருடனாக மாற முடியும்?

4 கடவுளுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. அவன், ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறான்.’ ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் பேசுவதற்கு சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தினான். (வெளிப்படுத்துதல் 12:9; ஆதியாகமம் 3:1) அந்தப் பாம்புதான் பேசியதாக ஏவாளை அவன் நினைக்க வைத்தான்.—பின்குறிப்பு 7-ஐப் பாருங்கள்.

5 சாத்தானைக் கடவுள்தான் படைத்தாரா? இல்லவே இல்லை. ஆதாமுக்காகவும் ஏவாளுக்காகவும் இந்தப் பூமியைக் கடவுள் தயார்ப்படுத்தியபோது அவன் பரலோகத்தில் ஒரு தேவதூதனாக இருந்தான். பின்பு, கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டவனாக மாறி, சாத்தானாக ஆனான். (யோபு 38:4, 7) ஆனால், ஒரு தேவதூதன் எப்படி சாத்தானாக மாற முடியும்? இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நேர்மையான ஒருவர் எப்படித் திருடனாக மாற முடியும்? அவர் தனக்குச் சொந்தமில்லாத ஒன்றை அடைய ஆசைப்பட்டு, எப்போதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கலாம். அந்தக் கெட்ட ஆசை தீவிரமாகலாம். பிறகு, வாய்ப்புக் கிடைக்கும்போது அவர் அதைத் திருடிவிடலாம். அவர் பிறப்பிலிருந்தே திருடன் கிடையாது; கெட்ட ஆசைதான் அவரை ஒரு திருடனாக மாற்றிவிடுகிறது.—யாக்கோபு 1:13-15-ஐ வாசியுங்கள்; பின்குறிப்பு 8-ஐப் பாருங்கள்.

6. ஒரு தேவதூதன் எப்படிக் கடவுளுடைய எதிரியாக ஆனான்?

6 இப்படித்தான் அந்தத் தேவதூதனும் சாத்தானாக மாறினான். யெகோவா ஆதாமையும் ஏவாளையும் படைத்த பிறகு, ‘பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்புங்கள்’ என்று அவர்களிடம் சொன்னார். (ஆதியாகமம் 1:27, 28) அப்போது அந்தத் தேவதூதன், பூமியில் வாழப்போகிற எல்லாரும் யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாகத் தன்னை வணங்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கலாம். இதைப் பற்றி அவன் யோசித்துக்கொண்டே இருந்ததால் யெகோவாவுக்குச் சொந்தமானதை அடைய வேண்டும் என்ற ஆசை அவனுக்குத் தீவிரமானது. எல்லாரும் தன்னை வணங்க வேண்டுமென்று ஆசைப்பட்டதால், அவன் ஏவாளிடம் பொய் சொல்லி அவளை ஏமாற்றினான். (ஆதியாகமம் 3:1-5-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்ததால் அவன் சாத்தானாக, அதாவது கடவுளுடைய எதிரியாக, ஆனான்.

7. (அ) ஆதாமும் ஏவாளும் ஏன் செத்துப்போனார்கள்? (ஆ) நாம் ஏன் வயதாகி சாகிறோம்?

7 ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய பேச்சைக் கேட்காமல் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார்கள். (ஆதியாகமம் 2:17; 3:6) அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். அதனால், யெகோவா சொன்னபடியே அவர்களுக்குச் சாவு வந்தது. (ஆதியாகமம் 3:17-19) ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த பிள்ளைகளும் பாவிகளாக இருந்ததால் அவர்களுக்கும் சாவு வந்தது. (ரோமர் 5:12-ஐ வாசியுங்கள்.) அந்தப் பிள்ளைகள் எப்படிப் பாவிகளானார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஏதாவது ஒரு பேப்பரை ஜெராக்ஸ் அல்லது ஃபோட்டோகாப்பி எடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பேப்பரில் ஒரு கறை இருந்தால், நீங்கள் எத்தனை முறை ஜெராக்ஸ் எடுத்தாலும் ஒவ்வொரு பேப்பரிலும் அந்தக் கறை இருக்கும். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது ஆதாம் ஒரு பாவியானான். நாம் எல்லாரும் அவனுடைய பிள்ளைகளாக இருப்பதால் நாமும் பாவிகளாக ஆகிவிட்டோம். அதாவது, அவனிடம் இருந்த பாவம் என்ற “கறை” நம் எல்லாருக்கும் வந்துவிட்டது. அதனால் நாமும் வயதாகி சாகிறோம்.—ரோமர் 3:23; பின்குறிப்பு 9-ஐப் பாருங்கள்.

8, 9. (அ) ஆதாமும் ஏவாளும் கடவுளைப் பற்றி என்ன நினைக்க வேண்டுமென்று சாத்தான் விரும்பினான்? (ஆ) யெகோவா அந்த மூன்று பேரையும் ஏன் உடனடியாக அழிக்கவில்லை?

8 கடவுளுடைய பேச்சை மீறும்படி ஆதாமையும் ஏவாளையும் சாத்தான் தூண்டினான். இப்படி, அந்த மூன்று பேரும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். யெகோவாவைப் பற்றி ஆதாமும் ஏவாளும் தவறாக நினைக்க வேண்டுமென்று சாத்தான் விரும்பினான். அதாவது, யெகோவா ஒரு பொய்யர், அக்கறை இல்லாத ஒரு கெட்ட ஆட்சியாளர் என்றெல்லாம் அவர்கள் நினைக்க வேண்டுமென்று விரும்பினான். சாத்தான் இரண்டு விஷயங்களை மறைமுகமாகச் சொன்னான். அதாவது, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் மனிதர்களுக்குக் கடவுள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், எது சரி எது தவறு என்ற முடிவை ஆதாம் ஏவாளே எடுக்க வேண்டும் என்றும் மறைமுகமாகச் சொன்னான். இந்தச் சூழ்நிலையில் யெகோவா என்ன செய்தார்? கீழ்ப்படியாமல்போன அந்த மூன்று பேரையும் அவர் அழித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், சாத்தான்தான் பொய்யன் என்பது எல்லாருக்கும் தெரியவந்திருக்குமா? கண்டிப்பாகத் தெரியவந்திருக்காது.

9 அதனால்தான், யெகோவா அவர்களை உடனடியாக அழிக்கவில்லை. அதற்குப் பதிலாக, கொஞ்சக் காலத்துக்கு மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளும்படி அனுமதித்தார். இது, சாத்தான் ஒரு பொய்யன் என்பதையும், மனிதர்களுக்கு எது நல்லது என்று யெகோவாவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதையும் தெளிவாகக் காட்டியிருக்கிறது. இதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 11-வது அதிகாரத்தில் நாம் கூடுதலாகக் கற்றுக்கொள்வோம். ஆனால், ஆதாமும் ஏவாளும் செய்ததைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சாத்தானின் பேச்சை நம்பி அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனது சரியா? ஆதாமிடமும் ஏவாளிடமும் இருந்த எல்லாமே யெகோவா கொடுத்ததுதான். எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கை, குடியிருப்பதற்கு ஒரு அழகான இடம், சந்தோஷத்தைத் தரும் வேலை என எல்லாவற்றையுமே யெகோவாதான் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். ஆனால், சாத்தான் அவர்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. நீங்கள் அவர்களுடைய இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

10. நாம் ஒவ்வொருவரும் என்ன முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டும்?

10 இன்று, நாமும் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டும். யெகோவாவை நம் ஆட்சியாளராக ஏற்றுக்கொள்வோமா அல்லது சாத்தானை நம் ஆட்சியாளராக ஏற்றுக்கொள்வோமா என்ற தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். இதைப் பொறுத்துதான் நம் எதிர்காலமே இருக்கிறது. நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்க முடியும். (சங்கீதம் 73:28; நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தில் கொஞ்சம் பேர்தான் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார்கள். உண்மை என்னவென்றால், இப்போது இந்த உலகத்தை ஆட்சி செய்வது கடவுள் கிடையாது. அப்படியென்றால், இந்த உலகத்தை ஆட்சி செய்வது யார்?

இந்த உலகத்தை ஆட்சி செய்வது யார்?

உலக அரசாங்கங்களை அல்லது ராஜ்யங்களை இயேசுவுக்குக் கொடுப்பதாக சாத்தான் சொல்கிறான்

உலக ராஜ்யங்கள் சாத்தானுக்குச் சொந்தமில்லை என்றால் இயேசுவுக்கு அவற்றைக் கொடுப்பதாக அவனால் சொல்லியிருக்க முடியுமா?

11, 12. (அ) இயேசுவுக்கு எதைக் கொடுப்பதாக சாத்தான் சொன்னான்? இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) சாத்தான்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்கிறான் என்பதை எந்த வசனங்கள் காட்டுகின்றன?

11 இந்த உலகத்தை ஆட்சி செய்வது யார் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சாத்தான் ஒரு தடவை, “இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும்” இயேசுவுக்குக் காட்டினான். பிறகு, “நீ ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான். (மத்தேயு 4:8, 9; லூக்கா 4:5, 6) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அந்த ராஜ்யங்கள் சாத்தானுக்குச் சொந்தமில்லை என்றால் இயேசுவுக்கு அவற்றைக் கொடுப்பதாக அவனால் சொல்லியிருக்க முடியுமா? கண்டிப்பாகச் சொல்லியிருக்க முடியாது. இதிலிருந்து, எல்லா அரசாங்கங்களும் சாத்தானுடைய கையில்தான் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.

12 ‘சாத்தான் எப்படி இந்த உலகத்தின் ஆட்சியாளராக இருக்க முடியும்? யெகோவாதானே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த சர்வவல்லமையுள்ள கடவுள்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். (வெளிப்படுத்துதல் 4:11) அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்றாலும், இப்போது “இந்த உலகத்தை ஆளுகிறவன்” சாத்தான் என்று இயேசு சொன்னார். (யோவான் 12:31; 14:30; 16:11) அப்போஸ்தலன் பவுலும் சாத்தானை “இந்த உலகத்தின் கடவுள்” என்று சொன்னார். (2 கொரிந்தியர் 4:3, 4) “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று அப்போஸ்தலன் யோவானும் எழுதினார்.—1 யோவான் 5:19.

சாத்தானுடைய உலகம் எப்படி அழிக்கப்படும்?

13. நமக்கு ஏன் ஒரு புதிய உலகம் தேவை?

13 நாளுக்கு நாள் இந்த உலகம் மோசமாகிக்கொண்டே போகிறது. அது போரும் வன்முறையும் ஊழலும் பித்தலாட்டமும் நிறைந்ததாக இருக்கிறது. மனிதர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் இந்த எல்லா பிரச்சினைகளையும் ஒழித்துக்கட்ட முடியாது. ஆனால், சீக்கிரத்தில் அர்மகெதோன் என்ற போரில் கடவுள் இந்தப் பொல்லாத உலகத்தை அழித்துவிட்டு, நீதியான புதிய உலகத்தைக் கொண்டுவரப்போகிறார்.—வெளிப்படுத்துதல் 16:14-16; பின்குறிப்பு 10-ஐப் பாருங்கள்.

14. கடவுள் தன்னுடைய அரசாங்கத்துக்கு யாரை ராஜாவாக நியமித்திருக்கிறார்? இயேசுவைப் பற்றி பைபிள் முன்னதாகவே என்ன சொன்னது?

14 யெகோவா தன்னுடைய பரலோக அரசாங்கத்துக்கு அல்லது ராஜ்யத்துக்கு இயேசு கிறிஸ்துவை ராஜாவாக நியமித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பே, இயேசு ‘சமாதானத்தின் அதிபதியாக’ ஆட்சி செய்வார் என்றும், அவருடைய ஆட்சிக்கு முடிவே வராது என்றும் பைபிள் சொன்னது. (ஏசாயா 9:6, 7) இந்த அரசாங்கத்துக்காக ஜெபம் செய்யும்படிதான் இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று ஜெபம் செய்ய அவர் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:10) இன்று இருக்கும் உலக அரசாங்கங்களுக்குப் பதிலாகக் கடவுளுடைய அரசாங்கம் எப்படி ஆட்சி செய்யும் என்பதை இந்தப் புத்தகத்தின் 8-வது அதிகாரத்தில் கற்றுக்கொள்வோம். (தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கம் இந்த முழு பூமியையும் ஒரு அழகான பூஞ்சோலையாக மாற்றும்.—பின்குறிப்பு 11-ஐப் பாருங்கள்.

புதிய உலகம் விரைவில்!

புதிய உலகத்தில் இருப்பவர்கள் பாடுகிறார்கள், இசைக் கருவிகளை வாசிக்கிறார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள்

15. “புதிய பூமி” என்றால் என்ன?

15 “நீதி குடியிருக்கிற புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று” பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. (2 பேதுரு 3:13; ஏசாயா 65:17) “பூமி” என்று பைபிள் சொல்லும்போது சிலசமயம் அதில் வாழும் மக்களை அது அர்த்தப்படுத்துகிறது. (ஆதியாகமம் 11:1) அதனால், நீதி குடியிருக்கிற “புதிய பூமி” என்பது கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறப்போகும் மக்களைக் குறிக்கிறது.

16. புதிய உலகத்தில் வாழப்போகும் மக்களுக்குக் கடவுள் என்ன அருமையான பரிசைக் கொடுப்பார்? அதைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

16 கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகத்தில் வாழ்கிறவர்களுக்கு ‘முடிவில்லாத வாழ்வு’ கிடைக்கும் என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (மாற்கு 10:30) இந்தப் பரிசைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? பதிலைத் தெரிந்துகொள்ள யோவான் 3:16-ஐயும் 17:3-ஐயும் வாசியுங்கள். பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பைபிளிலிருந்து இப்போது பார்க்கலாம்.

17, 18. இந்தப் பூமி முழுவதும் சமாதானம் இருக்கும் என்றும், நாம் பாதுகாப்பாக வாழ்வோம் என்றும் எப்படிச் சொல்லலாம்?

17 அக்கிரமம், போர், குற்றச்செயல், வன்முறை போன்றவை இருக்காது. பூமியில் பொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். (சங்கீதம் 37:10, 11) கடவுள், ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்.’ (சங்கீதம் 46:9; ஏசாயா 2:4) கடவுளை நேசித்து அவருக்குக் கீழ்ப்படியும் ஜனங்களால் இந்தப் பூமி நிறைந்திருக்கும். சமாதானம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.—சங்கீதம் 72:7.

18 யெகோவாவை வணங்குபவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். இஸ்ரவேலர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தவரை அவர்களை அவர் பாதுகாத்தார். (லேவியராகமம் 25:18, 19) பூஞ்சோலை பூமியில் நாம் யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டோம். எப்போதுமே பாதுகாப்பாக இருப்போம்.—ஏசாயா 32:18-ஐயும் மீகா 4:4-ஐயும் வாசியுங்கள்.

19. புதிய உலகத்தில் உணவுக்குப் பஞ்சமே இருக்காது என்று நாம் ஏன் உறுதியாகச் சொல்லலாம்?

19 உணவுக்குப் பஞ்சமே இருக்காது. “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.” (சங்கீதம் 72:16) ‘நம் கடவுளாகிய யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார்,’ ‘பூமியும் விளைச்சல் தரும்.’—சங்கீதம் 67:6.

20. இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்று எப்படிச் சொல்லலாம்?

20 பூமி பூஞ்சோலையாக மாறும். எல்லாருக்கும் அழகான வீடும் தோட்டமும் இருக்கும். (ஏசாயா 65:21-24-ஐயும் வெளிப்படுத்துதல் 11:18-ஐயும் வாசியுங்கள்.) இந்தப் பூமி ஏதேன் தோட்டத்தைப் போல் அழகாக மாறும். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுத்துக்கொண்டே இருப்பார். “நீங்கள் உங்களுடைய கையைத் திறந்து, எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துகிறீர்கள்” என்று கடவுளைப் பற்றி பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 145:16.

21. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எப்படிப்பட்ட சமாதானம் இருக்கும்?

21 மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே சமாதானம் இருக்கும். மிருகங்கள் மனிதர்களைத் தாக்காது. இன்று ஆபத்தாக இருக்கிற மிருகங்களும் சாதுவாக மாறிவிடும். அதனால், சின்னப் பிள்ளைகள்கூட அவற்றைப் பார்த்துப் பயப்பட மாட்டார்கள்.—ஏசாயா 11:6-9-ஐயும் 65:25-ஐயும் வாசியுங்கள்.

22. உடம்பு சரியில்லாதவர்களுக்கு இயேசு என்ன செய்வார்?

22 எல்லாரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இயேசு பூமியில் இருந்தபோது நிறைய பேரைக் குணமாக்கினார். (மத்தேயு 9:35; மாற்கு 1:40-42; யோவான் 5:5-9) ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக அவர் எல்லாரையுமே குணமாக்குவார். “எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.—ஏசாயா 33:24; 35:5, 6.

23. இறந்தவர்களைக் கடவுள் என்ன செய்யப்போகிறார்?

23 இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள். இறந்துபோன கோடிக்கணக்கானோரை உயிரோடு கொண்டுவரப்போவதாகக் கடவுள் சொல்கிறார். “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள்; அப்போஸ்தலர் 24:15.

24. பூஞ்சோலை பூமியில் வாழ்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

24 நாம் எல்லாரும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். அதாவது, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருக்குச் சேவை செய்வோமா அல்லது நம் இஷ்டப்படி வாழ்வோமா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாம் யெகோவாவுக்குச் சேவை செய்ய தீர்மானம் எடுத்தால் நமக்கு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது. இறந்த பிறகு தன்னை ஞாபகம் வைக்கும்படி ஒருவன் இயேசுவிடம் கேட்டபோது, “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 23:43) இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், கடவுளுடைய அருமையான வாக்குறுதிகளை அவர் எப்படி நிறைவேற்றப்போகிறார் என்பதைப் பற்றியும் அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.

முக்கியக் குறிப்புகள்

உண்மை 1: ஒரு நல்ல காரணத்துக்காகத்தான் கடவுள் நம்மைப் படைத்தார்

“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29

கடவுள் எதற்காக மனிதர்களைப் படைத்தார்?

  • ஆதியாகமம் 1:28

    மனிதர்கள் பிள்ளைகளைப் பெற்று இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்ற வேண்டுமென்றும், மிருகங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும் கடவுள் விரும்பினார்.

  • ஏசாயா 46:9-11; 55:11

    கடவுள் என்ன செய்ய நினைக்கிறாரோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிப்பார். யாராலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது.

உண்மை 2: வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவதற்குக் காரணம்

“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.”—1 யோவான் 5:19

இந்த உலகத்தை ஆட்சி செய்வது யார்?

  • யோவான் 12:31

    சாத்தான்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்கிறான் என்று இயேசு சொன்னார்.

  • யாக்கோபு 1:13-15

    சாத்தான் தனக்குச் சொந்தமில்லாத ஒன்றுக்கு ஆசைப்பட்டான்.

  • ஆதியாகமம் 2:17; 3:1-6

    சாத்தான் ஏவாளை ஏமாற்றினான். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை. பிறகு, இரண்டு பேரும் செத்துப்போனார்கள்.

  • ரோமர் 3:23; 5:12

    ஆதாமிடமிருந்து நமக்குப் பாவம் வந்ததால் நாம் சாகிறோம்.

  • 2 கொரிந்தியர் 4:3, 4

    சாத்தான் மக்களை ஏமாற்றுகிறான்.

உண்மை 3: கடவுளுடைய அரசாங்கம் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும்

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் . . . பூமியிலும் நிறைவேற வேண்டும்.”—மத்தேயு 6:10

யெகோவா என்ன செய்யப்போகிறார்?

  • தானியேல் 2:44

    உலகத்தில் இருக்கும் அரசாங்கங்களுக்குப் பதிலாகக் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யும்.

  • வெளிப்படுத்துதல் 16:14-16

    அர்மகெதோன் என்ற போரில் இந்தப் பொல்லாத உலகத்தைக் கடவுள் அழிக்கப்போகிறார்.

  • ஏசாயா 9:6, 7

    யெகோவா தன்னுடைய பரலோக அரசாங்கத்துக்கு இயேசுவை ராஜாவாக நியமித்திருக்கிறார். இயேசு இந்தப் பூமியை ஆட்சி செய்வார்.

உண்மை 4: கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றும்

“நீங்கள் உங்களுடைய கையைத் திறந்து, எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துகிறீர்கள்.”—சங்கீதம் 145:16

கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை எப்படி மாற்றும்?

  • சங்கீதம் 46:9

    போர், குற்றச்செயல், வன்முறை போன்றவை இருக்காது.

  • ஏசாயா 32:18; 65:21-24

    புதிய உலகத்தில் எல்லாருக்குமே அழகான வீடும் தோட்டமும் இருக்கும்; எல்லாருமே சமாதானமாக வாழ்வார்கள்.

  • சங்கீதம் 72:16

    உணவுக்குப் பஞ்சமே இருக்காது.

  • ஏசாயா 11:6-9

    மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே சமாதானம் இருக்கும்.

  • ஏசாயா 33:24; அப்போஸ்தலர் 24:15

    யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போகாது. இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்