உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • bhs அதி. 11 பக். 116-123
  • ஏன் இவ்வளவு வேதனை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் இவ்வளவு வேதனை?
  • பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • பைபிள் கற்பிக்கிறது-ல் காட்டவும்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “ஏன் இவ்வளவு வேதனை?”
  • கடவுள் ஏன் வேதனைகளை விட்டுவைத்திருக்கிறார்?
  • யெகோவா ஏன் இவ்வளவு காலத்தை அனுமதித்திருக்கிறார்?
  • தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவீர்கள்?
  • ஏன் இவ்வளவு பிரச்சினை?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
மேலும் பார்க்க
பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
bhs அதி. 11 பக். 116-123

அதிகாரம் 11

ஏன் இவ்வளவு வேதனை?

1, 2. நிறைய பேர் என்ன கேட்கிறார்கள்?

ஒவ்வொரு நாளும் பல சோக சம்பவங்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். உதாரணத்துக்கு, சுனாமி தாக்கி ஒரு கிராமமே அழிந்துபோகிறது. தீவிரவாதிகள் திடீரென்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கு இருக்கிறவர்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள். ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் ஒரு பெண்மணி புற்றுநோய்க்குப் பலியாகிறார்.

2 இப்படிப்பட்ட சோக சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்று நிறைய பேர் கேட்கிறார்கள். “இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு பகை? ஏன் இவ்வளவு வேதனை?” என்று பலர் கேட்கிறார்கள். உங்கள் மனதிலும் இந்தக் கேள்விகள் வந்திருக்கின்றனவா?

3, 4. (அ) ஆபகூக் என்ன கேள்விகளைக் கேட்டார்? (ஆ) யெகோவா அவருக்கு என்ன பதில் கொடுத்தார்?

3 கடவுள்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த ஆட்கள்கூட இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டதாக பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, ஆபகூக் தீர்க்கதரிசி யெகோவாவிடம், “என்னை ஏன் அக்கிரமங்களைப் பார்க்க வைக்கிறீர்கள்? கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்? நாச வேலைகளும் வன்முறைகளும் ஏன் என்னுடைய கண் முன்னாலேயே நடக்கின்றன? எங்கு பார்த்தாலும் ஏன் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது?” என்று கேட்டார்.—ஆபகூக் 1:3.

4 ஆபகூக் கேட்ட கேள்விகளுக்குக் கடவுள் தந்த பதிலைப் பற்றி ஆபகூக் 2:2, 3-ல் வாசிக்கிறோம்; நிலைமையை சரிசெய்யப்போவதாகக் கடவுள் கொடுத்த வாக்குறுதியைப் பற்றியும் அதில் வாசிக்கிறோம். மக்கள்மேல் யெகோவா நிறைய அன்பு வைத்திருக்கிறார். “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 5:7) மக்கள் வேதனைப்படுவதைப் பார்க்க நாமே விரும்பாதபோது அவர் கொஞ்சமாவது விரும்புவாரா? கண்டிப்பாக விரும்ப மாட்டார். (ஏசாயா 55:8, 9) அப்படியென்றால், “இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனை?” இதற்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

“ஏன் இவ்வளவு வேதனை?”

5. மக்களுக்கு வரும் வேதனைகளைப் பற்றி மதப் போதகர்கள் பலர் என்ன சொல்கிறார்கள்? ஆனால், பைபிள் என்ன சொல்கிறது?

5 மக்கள் வேதனைப்பட வேண்டும் என்பதுதான் கடவுளுடைய சித்தம் என்று பாதிரிமார்களும் சாமியார்களும் மதப் போதகர்களும் அடிக்கடி சொல்கிறார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாமே கடவுள் ஏற்கெனவே தீர்மானித்ததுதான் என்று சிலர் சொல்லலாம். அதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது என்றும் சொல்லலாம். யாராவது சாகும்போது, முக்கியமாகச் சின்னப் பிள்ளைகள் சாகும்போது, கடவுள்தான் அவர்களைப் பரலோகத்துக்கு எடுத்துக்கொண்டார் என்று சிலர் சொல்லலாம். ஆனால், அது உண்மை கிடையாது. யெகோவா ஒருபோதும் கஷ்டங்களைக் கொடுப்பது இல்லை. “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்” என்று பைபிள் சொல்கிறது.—யோபு 34:10.

6. இந்த உலகத்தில் இருக்கும் எல்லா வேதனைகளுக்கும் கடவுள்தான் காரணம் என்று ஏன் நிறைய பேர் சொல்கிறார்கள்?

6 இந்த உலகத்தில் இருக்கும் எல்லா வேதனைகளுக்கும் காரணம் கடவுள்தான் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஏனென்றால், இந்த உலகத்தைக் கடவுள்தான் ஆட்சி செய்கிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்தப் புத்தகத்தின் 3-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, இப்போது இந்த உலகத்தை ஆட்சி செய்வது உண்மையில் பிசாசாகிய சாத்தான்தான்.

7, 8. இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனை இருக்கிறது?

7 “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) இந்த உலகத்தை ஆட்சி செய்கிற சாத்தான் பொல்லாதவன், கொடூரமானவன். அவன் ‘உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9) நிறைய பேர் அவனைப் போலவே நடந்துகொள்கிறார்கள். இந்த உலகத்தில் பொய்யும் பித்தலாட்டமும் பகையும் கொடூரமும் நிறைந்திருப்பதற்கு இது முதலாவது காரணம்.

8 இந்த உலகம் வேதனைகளால் நிறைந்திருப்பதற்கு இரண்டாவது காரணத்தைக் கவனியுங்கள். ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய பேச்சை மீறி பாவிகளானதால், அவர்களுடைய பாவம் அவர்களுடைய பிள்ளைகளான எல்லா மனிதர்களுக்கும் வந்துவிட்டது. அதனால், அவர்கள் ஒருவரை ஒருவர் வேதனைப்படுத்துகிறார்கள். மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்க ஆசைப்பட்டு சண்டை போடுகிறார்கள்... போர் செய்கிறார்கள்... மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறார்கள். (பிரசங்கி 4:1; 8:9) இந்த உலகம் வேதனைகளால் நிறைந்திருப்பதற்கு மூன்றாவது காரணம், “எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள்” நடப்பதுதான். (பிரசங்கி 9:11) எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் விபத்துகளும் மற்ற அசம்பாவிதங்களும் சிலருக்கு நடக்கின்றன.

9. யெகோவா வேதனைகளை விட்டுவைத்திருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கும் என்று ஏன் நம்பலாம்?

9 யெகோவா ஒருபோதும் வேதனைகளைக் கொடுக்க மாட்டார். உலகத்தில் நடக்கும் போர்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் அநியாயங்களுக்கும் அவர் காரணம் கிடையாது. நிலநடுக்கங்கள், சூறாவளிகள், வெள்ளங்கள் போன்ற இயற்கைப் பேரழிவுகளை அவர் ஏற்படுத்துவதில்லை. ஆனால், ‘இந்தப் பிரபஞ்சத்திலேயே யெகோவாதான் ரொம்ப சக்தியுள்ளவர் என்றால், இந்தச் சோக சம்பவங்களை அவர் ஏன் தடுத்து நிறுத்துவதில்லை?’ என்று நீங்கள் நினைக்கலாம். கடவுளுக்கு நம்மேல் ரொம்ப அக்கறை இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அதனால், அவர் வேதனைகளை விட்டுவைத்திருப்பதற்கு நிச்சயமாகவே நியாயமான காரணம் இருக்கும்.—1 யோவான் 4:8.

கடவுள் ஏன் வேதனைகளை விட்டுவைத்திருக்கிறார்?

10. சாத்தான் யெகோவாவுக்கு எதிராக என்ன சவால்விட்டான்?

10 ஏதேன் தோட்டத்தில் ஆதாமையும் ஏவாளையும் சாத்தான் ஏமாற்றினான். கடவுள் ஒரு கெட்ட ஆட்சியாளர் என்று அவன் குற்றம் சுமத்தினான். ஆதாமும் ஏவாளும் ஒரு நல்ல விஷயத்தை அனுபவிக்க முடியாதபடி கடவுள் செய்துவிட்டதாக அவன் சொன்னான். யெகோவாவைவிட தன்னால் நன்றாக ஆட்சி செய்ய முடியும் என்று அவர்களை நம்ப வைக்க முயற்சி செய்தான். அவர்களுக்குக் கடவுளுடைய உதவி தேவையே இல்லை என்றும் நினைக்க வைக்கப் பார்த்தான்.—ஆதியாகமம் 3:2-5; பின்குறிப்பு 27-ஐப் பாருங்கள்.

11. எந்தக் கேள்விக்கு நாம் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்?

11 ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் பேச்சை மீறினார்கள். சரி எது, தவறு எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கே இருந்ததாக நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது தவறு என்பதையும், மனிதர்களுக்கு எது சிறந்ததென்று தனக்கு மட்டும்தான் தெரியும் என்பதையும் யெகோவா எப்படி நிரூபித்தார்?

12, 13. (அ) கீழ்ப்படியாதவர்களை யெகோவா ஏன் உடனடியாக அழிக்கவில்லை? (ஆ) இந்த உலகத்தை ஆட்சி செய்ய சாத்தானையும் மனிதர்களையும் யெகோவா ஏன் அனுமதித்திருக்கிறார்?

12 ஆதாமையும் ஏவாளையும் யெகோவா உடனடியாக அழித்துவிடவில்லை. அவர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கு அவர் அனுமதித்தார். பிறகு, தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தப் பிள்ளைகளே தேர்ந்தெடுக்கும்படி விட்டுவிட்டார். இந்தப் பூமி பரிபூரணமான மனிதர்களால் நிரப்பப்பட வேண்டும் என்பதுதான் யெகோவாவின் நோக்கமாக இருந்தது. சாத்தான் என்னதான் முயற்சி செய்தாலும் அந்த நோக்கம் நிறைவேறுவதைத் தடுக்க முடியாது.—ஆதியாகமம் 1:28; ஏசாயா 55:10, 11.

13 கோடிக்கணக்கான தேவதூதர்களின் முன்னிலையில் சாத்தான் யெகோவாவிடம் சவால்விட்டான். (யோபு 38:7; தானியேல் 7:10) அவனுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க அவனுக்கு யெகோவா கால அவகாசம் கொடுத்தார். சாத்தானின் உதவியோடு மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்து பார்க்கவும் அவர் கால அவகாசம் கொடுத்தார். தன்னுடைய உதவி இல்லாமல் மனிதர்களால் சந்தோஷமாக வாழ முடியாது என்பதைப் புரிய வைப்பதற்கு அவர் அப்படிச் செய்தார்.

14. கடவுள் காலம் அனுமதித்ததால் எது தெளிவாகத் தெரிகிறது?

14 ஆயிரக்கணக்கான வருஷங்களாக முயற்சி செய்தும், மனிதர்களால் தங்களை நல்லபடியாக ஆட்சி செய்ய முடியவில்லை. சாத்தான் ஒரு பொய்யன் என்பது தெளிவாகிவிட்டது. மனிதர்களுக்குக் கடவுளுடைய உதவி கண்டிப்பாகத் தேவை. அதனால்தான், எரேமியா தீர்க்கதரிசி இப்படிச் சொன்னார்: “யெகோவாவே, மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை என்றும், தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.”—எரேமியா 10:23.

யெகோவா ஏன் இவ்வளவு காலத்தை அனுமதித்திருக்கிறார்?

15, 16. (அ) யெகோவா ஏன் இவ்வளவு காலத்துக்கு வேதனைகளை விட்டுவைத்திருக்கிறார்? (ஆ) சாத்தான் ஏற்படுத்தியிருக்கிற பிரச்சினைகளை யெகோவா ஏன் சரிசெய்யவில்லை?

15 யெகோவா ஏன் இவ்வளவு காலத்துக்கு வேதனைகளை விட்டுவைத்திருக்கிறார்? கெட்ட காரியங்களை அவர் ஏன் தடுத்து நிறுத்துவதில்லை? சாத்தானுடைய ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதை நிரூபிக்க காலம் தேவைப்பட்டது. மனிதர்கள் எல்லா விதமான ஆட்சிமுறைகளையும் முயற்சி செய்து பார்த்து தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பல முன்னேற்றங்கள் செய்திருந்தாலும் அநீதி, வறுமை, குற்றச்செயல், போர் போன்றவை சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாக நடக்கின்றன. அப்படியென்றால், கடவுளுடைய உதவி இல்லாமல் அவர்களாகவே நல்லபடியாக ஆட்சி செய்ய முடியாது.

16 சாத்தான் ஏற்படுத்தியிருக்கிற பிரச்சினைகளை யெகோவா சரிசெய்யவில்லை. அப்படிச் சரிசெய்தால், சாத்தானுடைய ஆட்சியை ஆதரிப்பதுபோல் ஆகிவிடும். அதை அவர் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். அதுமட்டுமல்ல, அவர் பிரச்சினைகளைச் சரிசெய்தால், மனிதர்கள் தங்களையே நல்லபடியாக ஆட்சி செய்ய முடியும் என்று நினைத்துக்கொள்வார்கள். அந்தப் பொய்க்கு யெகோவா துணைபோகவே மாட்டார். அவர் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்.—எபிரெயர் 6:18.

17, 18. சாத்தான் ஏற்படுத்தியிருக்கிற எல்லா பாதிப்புகளையும் யெகோவா எப்படிச் சரிசெய்வார்?

17 சாத்தானும் மனிதர்களும் கீழ்ப்படியாமல் போனதால் வந்திருக்கும் மோசமான பாதிப்புகளை யெகோவாவினால் சரிசெய்ய முடியுமா? நிச்சயம் முடியும். கடவுளால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. சரியான சமயத்தில், அதாவது சாத்தானுடைய சவால்களுக்கு முழு பதில் கொடுக்கப்பட்ட பிறகு, அவர் தன்னுடைய நோக்கத்தின்படி இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுவார். “நினைவுக் கல்லறைகளில்” இருக்கிற எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள். (யோவான் 5:28, 29) யாருக்கும் நோய்நொடியோ சாவோ வராது. இயேசுவின் மூலம் யெகோவா ‘பிசாசின் செயல்களை ஒழிப்பார்.’ (1 யோவான் 3:8) சாத்தான் ஏற்படுத்தியிருக்கிற எல்லா பாதிப்புகளையும் இயேசு சரிசெய்வார். அதுவரைக்கும், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரை நம் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கவும் நமக்கு அவர் பொறுமையோடு காலம் அனுமதித்திருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும். (2 பேதுரு 3:9, 10-ஐ வாசியுங்கள்.) நாம் வேதனை அனுபவித்தாலும், அதைத் தாங்கிக்கொள்ள அவர் உதவி செய்கிறார்.—யோவான் 4:23; 1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.

18 யெகோவாவை நம் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கும்படி அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவது இல்லை. சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தை அவர் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அருமையான பரிசை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று பார்க்கலாம்.

தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

19. என்ன அருமையான பரிசை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்? அந்தப் பரிசுக்காக நாம் ஏன் நன்றியோடு இருக்க வேண்டும்?

19 சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அருமையான பரிசு, மிருகங்களிலிருந்து நம்மை ரொம்பவே வித்தியாசப்படுத்துகிறது. எப்படி? மிருகங்கள் வெறும் உள்ளுணர்வினால், அதாவது இயல்பாகவே இருக்கும் உணர்வினால், எல்லாவற்றையும் செய்கின்றன; ஆனால் நாம் அப்படிக் கிடையாது. எப்படி வாழ வேண்டும் என்றும், யெகோவாவுக்குப் பிரியமாக நடக்கலாமா வேண்டாமா என்றும் நம்மால் தீர்மானிக்க முடியும். (நீதிமொழிகள் 30:24) நாம் இயந்திரம்போல் படைக்கப்படவில்லை; ஒரு இயந்திரம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை மட்டும்தான் அதனால் செய்ய முடியும். ஆனால், நாம் சொந்தமாகத் தீர்மானங்கள் எடுக்க முடியும். உதாரணத்துக்கு, எப்படிப்பட்டவர்களாக இருக்க விரும்புகிறோம்... யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்... வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறோம்... என்றெல்லாம் சொந்தமாகத் தீர்மானிக்க முடியும். நாம் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றுதான் யெகோவா விரும்புகிறார்.

20, 21. இப்போது நீங்கள் எடுக்க வேண்டிய சிறந்த தீர்மானம் எது?

20 மனிதர்கள் தன்னை நேசிக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (மத்தேயு 22:37, 38) ஒரு பிள்ளை கட்டாயத்தினால் இல்லாமல் தானாகவே தன் அப்பாவிடம் போய், “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லும்போது அந்த அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? யெகோவாவும் அந்த அப்பாவைப் போலத்தான் இருக்கிறார். அவருக்குச் சேவை செய்வதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். சாத்தானும் ஆதாமும் ஏவாளும் யெகோவாவை ஒதுக்கித்தள்ள முடிவு செய்தார்கள். சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

21 அந்தப் பரிசைப் பயன்படுத்தி, யெகோவாவுக்குச் சேவை செய்யத் தீர்மானம் எடுங்கள். கடவுளைப் பிரியப்படுத்தவும் சாத்தானை ஒதுக்கித்தள்ளவும் லட்சக்கணக்கானவர்கள் தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 27:11) கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகத்தில் எந்த வேதனையும் இருக்காது. அங்கே வாழ்வதற்கு இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த அதிகாரம் இதற்குப் பதில் தரும்.

முக்கியக் குறிப்புகள்

உண்மை 1: வேதனைகளுக்கு யெகோவா காரணம் கிடையாது

“உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.”—யோபு 34:10

இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனை இருக்கிறது?

  • 1 யோவான் 5:19

    இந்த உலகத்தை ஆட்சி செய்வது பிசாசாகிய சாத்தான்.

  • பிரசங்கி 8:9

    மனிதர்கள் ஒருவரை ஒருவர் வேதனைப்படுத்துகிறார்கள்.

  • பிரசங்கி 9:11

    எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் இருப்பதால் சிலர் வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.

  • 1 பேதுரு 5:7

    மக்கள்மேல் யெகோவா நிறைய அன்பு வைத்திருக்கிறார். அவர்கள் வேதனைப்படுவதைப் பார்க்க அவர் விரும்புவதே இல்லை.

உண்மை 2: யெகோவாவின் ஆட்சி உரிமையைப் பற்றி சாத்தான் சவால்விட்டான்

“உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்.”—ஆதியாகமம் 3:5

சாத்தானுடைய சவாலை யெகோவா ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை?

  • ஆதியாகமம் 3:2-5

    கடவுள் ஒரு கெட்ட ஆட்சியாளர் என்று சாத்தான் குற்றம் சுமத்தினான். சரி எது, தவறு எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கே இருந்ததாக மனிதர்களை நம்ப வைக்கப் பார்த்தான்.

  • யோபு 38:7

    கோடிக்கணக்கான தேவதூதர்களின் முன்னிலையில் சாத்தான் யெகோவாவிடம் சவால்விட்டான்.

உண்மை 3: சவாலில் சாத்தான் தோற்றுவிட்டான்

“மனுஷனுக்கு . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.”—எரேமியா 10:23

மனிதர்கள் ஏன் இவ்வளவு காலமாக வேதனைகளை அனுபவிக்கிறார்கள்?

  • ஏசாயா 55:9

    மனிதர்கள் பல விதமான ஆட்சிமுறைகளை முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய உதவி இல்லாமல் அவர்களாகவே நல்லபடியாக ஆட்சி செய்ய முடியாது.

  • 2 பேதுரு 3:9, 10

    யெகோவா பொறுமையாக இருக்கிறார்; அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரை நம் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கவும் நமக்குக் காலம் கொடுத்திருக்கிறார்.

  • 1 யோவான் 3:8

    சாத்தான் ஏற்படுத்தியிருக்கிற எல்லா பாதிப்புகளையும் இயேசுவின் மூலம் யெகோவா சரிசெய்வார்.

உண்மை 4: யெகோவாவுக்குச் சேவை செய்ய தீர்மானம் எடுங்கள்

“என் மகனே, ஞானமாக நட . . . அப்போதுதான், என்னைப் பழித்துப் பேசுகிறவனுக்கு என்னால் பதிலடி கொடுக்க முடியும்.”—நீதிமொழிகள் 27:11

யெகோவா, தனக்குச் சேவை செய்ய வேண்டுமென்று ஏன் நம்மைக் கட்டாயப்படுத்துவது கிடையாது?

  • நீதிமொழிகள் 30:24

    மிருகங்கள் வெறும் உள்ளுணர்வினால், எல்லாவற்றையும் செய்கின்றன. ஆனால் நமக்கு, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். யெகோவாவுக்குச் சேவை செய்வதா வேண்டாமா என்று நம்மால் தீர்மானிக்க முடியும்.

  • மத்தேயு 22:37, 38

    நாம் அன்பினால் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்