உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwbr20 செப்டம்பர் பக். 1-6
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2020)
  • துணை தலைப்புகள்
  • செப்டம்பர் 7-13
  • செப்டம்பர் 14-20
  • செப்டம்பர் 21-27
  • செப்டம்பர் 28–அக்டோபர் 4
வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2020)
mwbr20 செப்டம்பர் பக். 1-6

வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

செப்டம்பர் 7-13

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 23-24

“ஊர் உலகத்தோடு ஒத்துப்போகாதீர்கள்”

w18.08 பக். 4 பாரா. 7-8

எல்லா உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா?

7 உங்கள் நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்புவதும் மெசேஜ் அனுப்புவதும் உங்களுக்குப் பிடிக்குமா? செய்திகளில் ஏதாவது ஆர்வமூட்டும் தகவல்களைப் பார்க்கும்போது அல்லது வித்தியாசமான அனுபவங்களைக் கேட்கும்போது, அதை உடனடியாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று துடிக்கிற ஒரு பத்திரிகை நிருபரைப் போல் நீங்கள் உணர்கிறீர்களா? அப்படியென்றால், மற்றவர்களுக்கு எதையாவது அனுப்புவதற்கு முன்பு, ‘இந்த தகவல் உண்மைதானா? இத பத்தின முழு விவரமும் எனக்குத் தெரியுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உறுதியாகத் தெரியாத ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு அனுப்புவது, பொய்களைப் பரப்புவதற்குச் சமம். அதனால், ஒரு விஷயம் உண்மைதானா என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால், அதை மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள்; அந்தத் தகவலை அழித்துவிடுங்கள்.

8 இ-மெயில்களையும் மெசேஜ்களையும் யோசிக்காமல் மற்றவர்களுக்கு அனுப்புவது ஆபத்தில்தான் போய் முடியும் என்று சொல்வதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. சில நாடுகளில், நம் வேலைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கலாம் அல்லது நம் வேலை தடைகூட செய்யப்பட்டிருக்கலாம். இதுபோன்ற நாடுகளில் இருக்கிற நம் எதிரிகள், நம் சகோதரர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக அல்லது ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதற்காக சில கட்டுக்கதைகளைப் பரப்பலாம். முன்னால் சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். முக்கியப் பொறுப்புகளிலிருந்த சில சகோதரர்கள் மற்ற சகோதரர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்ற வதந்தியை, ரகசிய போலீசார் (கேஜிபி) பரப்பினார்கள். (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) வருத்தமான விஷயம் என்னவென்றால், நிறைய சகோதரர்கள் அந்தக் கட்டுக்கதையை நம்பி, அமைப்பைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அதில் பலர், பிற்பாடு திரும்பிவந்தார்கள். ஆனால், சிலர் வரவே இல்லை. அந்தக் கட்டுக்கதை தங்களுடைய விசுவாசக் கப்பலை மூழ்கடிக்கும்படி அவர்கள் விட்டுவிட்டார்கள். (1 தீ. 1:19) இதுபோன்ற ஆபத்தை நாம் எப்படித் தவிர்க்கலாம்? தவறான அல்லது நம்பகமற்ற தகவல்களைப் பரப்பக் கூடாது. காதில் விழுவதையெல்லாம் நம்பக் கூடாது. அதற்குப் பதிலாக, அவை உண்மைதானா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

it-1-E பக். 11 பாரா 3

ஆரோன்

ஆரோன் மூன்று முறை தவறு செய்தபோதிலும் அவர் அதற்கு முக்கியமான காரணம் கிடையாது. நெருக்கடியான சூழ்நிலையாலோ மற்றவர்களுடைய வற்புறுத்தலாலோ அவர் அந்தத் தவறை செய்ததாகத் தெரிகிறது. ‘ஊர் உலகத்தோடு ஒத்துப்போகாதீர்கள்’ என்ற கட்டளையை அவர் பின்பற்றியிருந்தால் அந்த முதல் தவறை அவர் செய்திருக்க மாட்டார். (யாத் 23:2) இருந்தாலும் ஆரோனின் பெயர் பைபிளில் நல்ல விதமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுடைய மகன்கூட பூமியில் வாழ்ந்த சமயத்தில் ஆரோனின் வழியில் வந்த குருத்துவ சேவையை மதித்தார்.—சங் 115:10, 12; 118:3; 133:1, 2; 135:19; மத் 5:17-19; 8:4.

it-1-E பக். 343 பாரா 5

குருட்டுத்தன்மை

நியாயத்தைப் புரட்டுவதைக் குருட்டுத்தன்மையோடு சம்பந்தப்படுத்தி பைபிள் சொல்கிறது. லஞ்சமோ அன்பளிப்புகளோ கொடுப்பதைப் பற்றி அல்லது பாரபட்சம் காட்டுவதைப் பற்றி திருச்சட்டத்தில் நிறைய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மாதிரியான விஷயங்கள் ஒரு நியாயாதிபதியின் கண்களை குருடாக்கி அவரை நியாயத்தைப் புரட்ட வைத்திடலாம். “லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும்.” (யாத் 23:8; உபா 16:19) ஒரு நியாயாதிபதி எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் அன்பளிப்புகளைக் கொடுக்கும்போது அவர் தெரிந்தோ தெரியாமலோ நியாயத்தைப் புரட்டிவிடலாம். அன்பளிப்புகள் மட்டுமல்ல உணர்ச்சிகள்கூட கண்களைக் குருடாக்கும் என்று கடவுளுடைய சட்டம் சொல்கிறது. அதனால்தான் “ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது” என்று அது சொல்கிறது. (லேவி 19:15) அதேசமயத்தில், ஒரு நியாயாதிபதி உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தோ மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்று நினைத்தோ பணக்காரருக்கு எதிராக தீர்ப்பு சொல்லக் கூடாது என்றும் எதிர்பார்க்கப்பட்டது.—யாத் 23:2, 3.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w16.10 பக். 9 பாரா 4

“அந்நியர்களுக்குத் தயவு காட்ட மறந்துவிடாதீர்கள்”

4 இஸ்ரவேலர்கள் அந்நியர்களை மதிக்க வேண்டும் என்று யெகோவா அவர்களுக்கு வெறுமென கட்டளை போடுவதற்குப் பதிலாக, அந்நியர்களாக வாழ்வது எப்படி இருக்கும் என்பதை அவர்கள் ஞாபகப்படுத்திப்பார்க்க வேண்டும் என்று விரும்பினார். (யாத்திராகமம் 23:9-ஐ வாசியுங்கள்.) எகிப்தியர்களுக்கு இனப்பெருமை அல்லது தப்பெண்ணம் இருந்தது; அதனால், இஸ்ரவேலர்கள் தங்களுக்கு அடிமைகளாவதற்கு முன்பிருந்தே அவர்களை எகிப்தியர்களுக்குப் பிடிக்காது. (ஆதி. 43:32; 46:34; யாத். 1:11-14) இஸ்ரவேலர்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்தபோது அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்த விஷயத்தை மனதில் வைத்து, தங்கள் மத்தியில் இருந்த அந்நியர்களுக்கு இஸ்ரவேலர்கள் தயவு காட்ட வேண்டும் என்று யெகோவா விரும்பினார்.—லேவி. 19:33, 34.

it-2-E பக். 393

மிகாவேல்

1. காபிரியேல் என்ற தேவதூதரின் பெயரைத் தவிர பைபிளில் இன்னொரு தேவதூதரின் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேவதூதரின் பெயர்தான் மிகாவேல். இவரை மட்டும்தான் ‘தலைமைத் தூதர்’ என்று பைபிள் சொல்கிறது. (யூதா 9) தானியேல் 10-வது அதிகாரத்தில்தான் முதல் தடவையாக இந்தப் பெயர் வருகிறது. அவரை ‘பெரிய அதிபதிகளில் ஒருவர்’ என்று அந்த வசனம் குறிப்பிடுகிறது. ‘பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிபதியால்’ எதிர்க்கப்பட்ட ஒரு தேவதூதனுக்கு உதவி செய்ய இவர் வந்தார். தானியேலின் மக்களுடைய அதிபதி அதாவது தானியேலின் “ஜனங்களுக்குத் துணையாக நிற்கிற மகா அதிபதி” என்று மிகாவேல் அழைக்கப்பட்டார். (தானி 10:13, 20, 21; 12:1) இதிலிருந்து இஸ்ரவேலர்களை வனாந்தரம் வழியாக வழிநடத்தியது மிகாவேல்தான் என்பது தெரிகிறது. (யாத் 23:20, 21, 23; 32:34; 33:2) மோசேயின் உடலைப் பற்றி தலைமைத் தூதரான மிகாவேலுக்கும் பிசாசுக்கும் ஏற்பட்ட விவாதம் இதற்கு இன்னொரு அத்தாட்சியாக இருக்கிறது.—யூ 9.

செப்டம்பர் 14-20

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 25-26

“வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருள்”

ijwbq-பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

ஒப்பந்தப் பெட்டி என்பது என்ன?

வடிவமைப்பு. அந்த ஒப்பந்தப் பெட்டியின் நீளம் 2.5 முழம், அகலம் 1.5 முழம், உயரம் 1.5 முழம் (111 x 67 x 67 செ.மீ; 44 x 26 x 26 அங்.). அது வேல மரத்தினால் செய்யப்பட்டிருந்தது; அதன் உள்ளேயும் வெளியேயும் தங்கத்தால் தகடு அடிக்கப்பட்டிருந்தது; அதன் விளிம்பைச் சுற்றிலும் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சுத்தமான தங்கத்தாலான அதன் மூடியின் இரண்டு முனைகளிலும் தங்கத்தாலான இரண்டு கேருபீன்கள் இருந்தன. எதிரெதிரே இருந்த அந்தக் கேருபீன்களின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன. அந்தக் கேருபீன்களின் இரண்டு சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருந்தன. தங்கத்தால் வார்க்கப்பட்ட நான்கு வளையங்கள், பெட்டியின் நான்கு கால்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்தன. வேல மரத்தில் செய்யப்பட்ட கம்புகள் தங்கத் தகடு அடிக்கப்பட்டு, பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அந்த வளையங்களில் செருகி வைக்கப்பட்டிருந்தன.—யாத்திராகமம் 25:10-21; 37:6-9.

it-1-E பக். 166 பாரா 2

ஒப்பந்தப் பெட்டி

ஒப்பந்தப் பெட்டி பரிசுத்தமான நினைப்பூட்டுதல்களை வைப்பதற்கான இடமாக இருந்தது. முக்கியமாக பத்து கட்டளைகள் அடங்கிய சாட்சி பலகைகள் அதில் வைக்கப்பட்டன. (யாத் 25:16) பிறகு, “மன்னா வைக்கப்பட்ட தங்க ஜாடியும் ஆரோனின் துளிர்விட்ட கோலும்” அந்தப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் சாலொமோனின் ஆலயம் கட்டப்படுவதற்கு சில காலத்துக்கு முன் அவை அந்தப் பெட்டியிலிருந்து நீக்கப்பட்டன. (எபி 9:4; யாத் 16:32-34; எண் 17:10; 1ரா 8:9; 2நா 5:10) மோசே, தான் இறப்பதற்கு கொஞ்சம் முன் ‘திருச்சட்டப் புத்தகத்தின்’ ஒரு நகலை லேவியர்களிடம் கொடுத்து “யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்குப் பக்கத்தில் வையுங்கள். கீழ்ப்படியாதவர்களுக்கு எதிராக இது ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று அவர்களிடம் சொன்னார்.—உபா 31:24-26.

it-1-E பக். 166 பாரா 3

ஒப்பந்தப் பெட்டி

கடவுளுடைய பிரசன்னத்தோடு சம்பந்தப்பட்டது. ஒப்பந்தப் பெட்டி இருந்தவரை அது கடவுளுடைய பிரசன்னத்தோடு சம்பந்தப்பட்டிருந்தது. யெகோவா இப்படி வாக்குக் கொடுத்தார்: “அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன். பெட்டிக்கு முன்னாலிருந்து நான் உன்னிடம் பேசுவேன். . . . சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான்” பேசுவேன். “மூடிக்கு மேலாக ஒரு மேகத்தில் நான் தோன்றுவேன்” என்றும் சொன்னார். (யாத் 25:22; லேவி 16:2) யெகோவா ‘கேருபீன்களுக்கு மேலாக . . . உட்கார்ந்திருக்கிறார்’ என்று சாமுவேல் எழுதினார். (1சா 4:4) அதனால், இந்தக் கேருபீன்கள் “கடவுளுடைய ரதத்துக்கு அடையாளமாக” இருந்தன. (1நா 28:18) “கடவுளோடு பேசுவதற்காக மோசே சந்திப்புக் கூடாரத்துக்குள் போகும்போதெல்லாம் சாட்சிப் பெட்டியின் மூடிக்கு மேலிருந்து கடவுள் பேசுவதைக் கேட்பார். இரண்டு கேருபீன்களுக்கு நடுவிலிருந்து கடவுள் அவரிடம் பேசுவார்” என்று பைபிள் சொல்கிறது. பிற்பாடு யோசுவாவும் தலைமைக் குருவான பினெகாசும் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் யெகோவாவிடம் விசாரித்தார்கள். (யோசு 7:6-10; நியா 20:27, 28) இருந்தாலும், தலைமைக் குருவால் மட்டுமே வருஷத்துக்கு ஒருமுறை, அதாவது பாவ பரிகார நாளில் மகா பரிசுத்த அறைக்குள் சென்று ஒப்பந்தப் பெட்டியைப் பார்க்க முடிந்தது. அந்த நாளில் யெகோவாவிடம் பேசுவதற்காக அல்ல பாவ பரிகார நாளுடன் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்காக அவர் செல்வார்.—லேவி 16:2, 3, 13, 15, 17; எபி 9:7.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

it-1-E பக். 432 பாரா 1

கேருபீன்

வனாந்தரத்தில் வழிபாட்டு கூடாரத்துக்காக செய்யப்பட்ட பொருள்களில் கேருபீன்களுடைய உருவங்களும் இருந்தன. தங்கத்தைச் சுத்தியால் அடித்து செய்யப்பட்ட இரண்டு கேருபீன்கள் ஒப்பந்தப் பெட்டியின் மூடியின்மேல் இருந்தன. மூடியின் ஒரு முனையில் ஒரு கேருபீனும் இன்னொரு முனையில் இன்னொரு கேருபீனும் எதிரெதிரே இருந்தன. அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன. இது கடவுளுக்கு வணக்கத்தைச் செலுத்துவதுபோல் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டு சிறகுகள் இருந்தன. அந்தச் சிறகுகள் பெட்டியைப் பாதுகாக்கும் விதத்தில் பெட்டியின் மேலாக விரிந்திருந்தன. (யாத் 25:10-21; 37:7-9) அதோடு, வழிபாட்டு கூடாரத்தின் உள்ளே இருக்கும் விரிப்புகளிலும் பரிசுத்த அறையையும் மகா பரிசுத்த அறையையும் பிரிக்கும் திரைச்சீலையிலும் கேருபீன்களின் வடிவத்தில் தையல் வேலைப்பாடுகள் இருந்தன.—யாத் 26:1, 31; 36:8, 35.

it-2-E பக். 936

படையல் ரொட்டி

வழிபாட்டு கூடாரத்தின் அல்லது ஆலயத்தின் பரிசுத்த அறைக்குள் இருந்த மேஜையின் மீது 12 ரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஓய்வுநாளிலும் பழைய ரொட்டிகளை எடுத்துவிட்டு புதிய ரொட்டிகள் வைக்கப்பட்டன. (யாத் 35:13; 39:36; 1ரா 7:48; 2நா 13:11; நெ 10:32, 33) இதற்கான எபிரெய வார்த்தையின் நேரடி அர்த்தம் “முகத்தின் ரொட்டி“. “முகம்“ என்ற வார்த்தை சில சமயங்களில் “சந்நிதியில்“ அல்லது “முன்னிலையில்“ இருப்பதைக் குறிக்கிறது. (2ரா 13:23) அதனால், எப்போதும் யெகோவாவுக்கு கொடுக்கும் காணிக்கையாக படையல் ரொட்டிகள் அவருடைய முகத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன.—யாத் 25:30.

செப்டம்பர் 21-27

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 27-28

“குருமார்களுடைய உடைகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?”

it-2-E பக். 1143

ஊரீம் மற்றும் தும்மீம்

ஊரீம் மற்றும் தும்மீம் குலுக்கல் சீட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டன என்று சில பைபிள் குறிப்புரையாளர்கள் நம்புகிறார்கள். யாத்திரகாமம் 28:30-ன் ஜேம்ஸ் மொஃபட் மொழிபெயர்ப்பு அவற்றை “பரிசுத்த சீட்டுகள்” என சொல்கிறது. சிலர் இதில் மூன்று துண்டுகள் இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஒன்றில், “ஆம்” என்றும் இன்னொன்றில் “இல்லை” என்றும் பொறிக்கப்பட்டிருந்தன. இன்னொன்றில் எதுவுமே பொறிக்கப்படவில்லை. ஏதாவது ஒரு கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்காக இவை குலுக்கல் போடப்பட்டன. எதுவும் பொறிக்கப்படாத சீட்டு விழுந்தால் எந்தப் பதிலும் இல்லை என்று அர்த்தம். வேறுசிலர், அவை இரண்டு தட்டையான கற்களாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள். அவற்றின் ஒரு பக்கம் வெள்ளையாகவும் இன்னொரு பக்கம் கருப்பாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவற்றை குலுக்கிப் போடும்போது வெள்ளையான பக்கம் தெரிந்தால் “ஆம்” என்றும் கருப்பான பக்கம் தெரிந்தால் “இல்லை” என்றும் ஒன்று கருப்பாகவும் மற்றொன்று வெள்ளையாகவும் இருந்தால் எந்தப் பதிலும் இல்லை என்றும் அர்த்தம். ஒருசமயம், சவுல் பெலிஸ்தியர்களை மறுபடியும் தாக்கலாமா என்று குருவானவர் மூலம் விசாரித்தபோது அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. தன்னுடைய மக்களில் யாரோ பாவம் செய்துவிட்டார்கள் என்று நினைத்து அவர் கடவுளிடம் இப்படி விசாரித்தார்: “‘இஸ்ரவேலின் கடவுளே, தும்மீம் மூலம் எனக்குப் பதில் சொல்லுங்கள்!’” பிறகு, சவுலும் யோனத்தானும் அங்கிருந்தவர்களிடமிருந்து பிரிந்து வந்து நின்றார்கள். அவர்கள் இருவரில் யாரென்று தெரிந்துகொள்ள குலுக்கல் போடப்பட்டது.—1சா 14:36-42.

it-1-E பக். 849 பாரா 3

நெற்றி

இஸ்ரவேலின் தலைமைக் குரு. இஸ்ரவேலின் தலைமைக் குரு அணிந்திருந்த தலைப்பாகையின் முன் பக்கத்தில் அவருடைய நெற்றிமேல் ‘அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளமாக’ ஒரு தங்கத் தகடு இருந்தது. அதில் “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருந்தன. (யாத் 28:36-38; 39:30) தலைமைக் குரு இஸ்ரவேலில் கடவுளுடைய வணக்கத்தை முன்னின்று வழிநடத்தியதால் அவர் தன்னுடைய சேவையை பரிசுத்தமாக செய்ய வேண்டியிருந்தது. அந்தத் தங்கத் தகட்டில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் இஸ்ரவேலர்கள் யெகோவாவின் வழிபாட்டில் எப்போதும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்தியது. இது மாபெரும் தலைமைக் குருவான இயேசுவுக்கும் யெகோவாவால் நியமிக்கப்பட்டு அவர் செய்யும் குருத்துவ சேவைக்கும் படமாக இருந்தது. அவர் செய்த குருத்துவ சேவை கடவுளுடைய பரிசுத்தத்தன்மைக்கு ஏற்றவாறு இருந்தது.—எபி 7:26.

w08 8/15 பக். 15 பாரா 17

மரியாதைக்குரிய விதத்தில் நடந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்

17 நாம் யெகோவாவை வணங்கும்போது மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்வதற்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும். “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்“ என பிரசங்கி 5:1 சொல்கிறது. மோசேயும் யோசுவாவும் பரிசுத்தமான இடத்தில் இருந்தபோது தங்களுடைய காலணிகளைக் கழற்றிப்போடுமாறு கட்டளையிடப்பட்டார்கள். (யாத். 3:5; யோசு. 5:15) பயபக்தி அல்லது மரியாதை காட்டுவதற்கு அடையாளமாக அவர்கள் இதைச் செய்ய வேண்டியிருந்தது. இஸ்ரவேலில் இருந்த ஆசாரியர்கள் தங்களுடைய “நிர்வாணத்தை மூடும்படிக்கு“ சணல்நூல் கால்சட்டைகளை அணிய வேண்டியிருந்தது. (யாத். 28:42, 43) இதனால் அவர்கள் பலிபீடத்தில் சேவை செய்யும்போது தங்கள் நிர்வாணம் தெரியாதபடி மறைத்துக்கொள்ள முடிந்தது. ஆசாரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மதிப்பு மரியாதையை வெளிக்காட்டுவதற்கு கடவுள் கொடுத்துள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w12-E 8/1 பக். 26 பாரா. 1-3

உங்களுக்குத் தெரியுமா?

இஸ்ரவேலின் தலைமைக் குருவின் மார்ப்பதக்கத்தில் இருந்த விலைமதிப்புள்ள கற்கள் எங்கிருந்து கிடைத்தன?

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வனாந்தரத்துக்கு வந்த சமயத்தில் இந்த மார்ப்பதக்கத்தைச் செய்யச்சொல்லி கடவுள் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தார். (யாத்திராகமம் 28:15-21) இந்த மார்ப்பதக்கத்தில் மாணிக்கம், புஷ்பராகம், மரகதம், நீலபச்சைக் கல், நீலமணிக்கல், சூரியக்காந்தக் கல், கெம்புக் கல், வைடூரியம், செவ்வந்திக் கல், படிகப்பச்சை, கோமேதகம் மற்றும் பச்சைக் கல் ஆகியவை இருந்தன. இதுபோன்ற விலைமதிப்புள்ள கற்கள் உண்மையிலேயே இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்ததா?

பைபிள் காலங்களில் மக்கள் விலைமதிப்புமிக்க கற்களை பொக்கிஷமாக நினைத்தார்கள். அவற்றை வியாபாரமும் செய்தார்கள். உதாரணத்துக்கு, எகிப்தியர்கள் இன்றுள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற தொலைதூர இடங்களிலிருந்து ரத்தினக் கற்களை வாங்கினார்கள். இந்தியாவிலிருந்துகூட வாங்கியிருக்கலாம். எகிப்திலிருந்த சுரங்கங்களிலிருந்து பல விதமான விலையுயர்ந்த கற்கள் கிடைத்தன. எகிப்திய மன்னர்களுக்கு மட்டும்தான் தங்களுடைய ஆட்சிப்பகுதியில் இருந்த தாதுப்பொருட்களை எடுப்பதற்கு முழு அதிகாரம் இருந்தது. தன்னுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் விலையுயர்ந்த கற்களை எடுப்பதற்காக சுரங்கப் பாதைகளை எப்படித் தோண்டினார்கள் என்பதை யோபு விவரித்திருக்கிறார். இப்படித் தோண்டியெடுக்கப்பட்ட விலை மதிப்புமிக்க கற்களில் நீலமணிக் கல்லையும் புஷ்பராகத்தையும் யோபு குறிப்பிடுகிறார்.—யோபு 28:1-11, 19.

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கிளம்பும்போது, எகிப்தியர்களிடமிருந்து விலைமதிப்புள்ள பொருள்களை “எடுத்துக்கொண்டார்கள்” என்று யாத்திராகமப் பதிவு சொல்கிறது. (யாத்திராகமம் 12:35, 36) இதிலிருந்து தலைமைக் குருவின் மார்ப்பதக்கத்திலிருந்த விலைமதிப்புள்ள கற்களை எகிப்திடமிருந்து இஸ்ரவேலர்கள் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது.

it-1-E பக். 1130 பாரா 2

பரிசுத்தத்தன்மை

மிருகங்களும் விளைப்பொருள்களும். முதலில் பிறக்கிற காளைக் கன்று, செம்மறியாட்டு கடாக் குட்டி, வெள்ளாட்டு கடா குட்டி எல்லாம் யெகோவாவுக்கு பரிசுத்தமானதாக இருந்தது. அதை யாரும் மீட்கக் கூடாது. அவற்றை பலி செலுத்த வேண்டும். அவற்றின் ஒரு பகுதி குருமார்களுக்கு சேர வேண்டும். (எண் 18:17-19) முதல் விளைச்சலும் பத்தில் ஒரு பாகமும் பரிசுத்தமானவை. ஏனென்றால் அவை எல்லாம் கடவுளுக்கு செலுத்துகிற பலியாகவும் அவருக்கு அர்ப்பணிக்கிற காணிக்கையாகவும் இருந்தன. (யாத் 28: 38) யெகோவாவுக்கு பரிசுத்தமாக இருப்பவற்றை சாதாரணமாக கருதக்கூடாது. அவற்றை அர்ப்பமான விஷயத்துக்கு பயன்படுத்தவும் கூடாது, பரிசுத்தத்தைக் கெடுக்கும் விதத்திலும் அவற்றைப் பயன்படுத்தவும் கூடாது. அதற்கு ஒரு உதாரணம் பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பது. ஒருவர் பத்தில் ஒரு பாகத்துக்காக கோதுமை பயிரை எடுத்து வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரோ அல்லது வீட்டில் இருக்கும் வேறு யாரோ தெரியாத்தனமாக அதில் கொஞ்சத்தை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திவிட்டால் பரிசுத்தக் காரியங்களைக் குறித்து கடவுள் கொடுத்திருந்த சட்டத்தை மீறுபவராக இருப்பார். அதனால், அவர் செம்மறியாட்டுக் கடாவை பலியாக கொடுப்பதோடு, பரிசுத்த இடத்துக்கு விரோதமாக செய்த பாவத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பாகத்தைச் சேர்த்து குருவானவரிடம் கொடுக்க வேண்டும். இப்படி யெகோவாவின் பரிசுத்தக் காரியங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டது.—லேவி 5:14-16.

செப்டம்பர் 28–அக்டோபர் 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 29-30

“யெகோவாவுக்குக் கொடுக்கும் காணிக்கை”

it-2-E பக். 764-765

பெயர்ப்பதிவு

சீனாயில். இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்தில் சீனாய் வனாந்தரத்தில் முகாமிட்டிருந்தபோதுதான் முதன்முதலாக அவர்களுடைய பெயர்கள் யெகோவாவின் கட்டளைப்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டது. இந்த வேலையில் மோசேக்கு உதவ ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் தங்களுடைய கோத்திரத்தில் இருந்தவர்கள் பெயர்ப்பதிவு செய்யும்படி பார்த்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள் பெயர்ப்பதிவு செய்யப்படுவதோடு திருச்சட்டத்தின்படி அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் சேவைக்காக அரை சேக்கல் (ஏறக்குறைய 83 ரூபாய்) தலைவரியை கொடுக்க வேண்டியிருந்தது. (யாத் 30:11-16; எண் 1:1-16, 18, 19) பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,03,550. ஆனால், லேவியர்கள் பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை. ஏனென்றால், இஸ்ரவேல் தேசத்தில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் வழிபாட்டுக் கூடாரத்துக்கான வரியை செலுத்தவில்லை. இஸ்ரவேல் படையில் சேவை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.—எண் 1:44-47; 2:32, 33; 18:20, 24.

it-1-E பக். 502

காணிக்கை

திருச்சட்டத்தின்படி இஸ்ரவேலர்கள் சில காணிக்கைகளைக் கொடுக்க வேண்டியிருந்தது. இஸ்ரவேலர்களை மோசே கணக்கெடுத்தபோது 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் ஒவ்வொருவரும் தங்களின் உயிருக்கு மீட்புவிலையாக ‘அரை சேக்கல் [ஏறக்குறைய 83 ரூபாய்] கொடுக்க வேண்டியிருந்தது. பரிசுத்த சேக்கலின் கணக்குப்படி அதைக் கொடுக்க வேண்டியிருந்தது.’ அது அவர்களுடைய ‘பாவப் பரிகாரத்துக்காகவும்’ சந்திப்புக் கூடாரத்தின் சேவைக்காகவும் “யெகோவாவுக்காகக் கொடுக்கப்படும் காணிக்கையாக” இருந்தது. (யாத் 30:11-16) யூத சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் சொல்கிறபடி (த ஜூயிஷ் வார், VII, 218 [vi, 6]), இந்த “புனித வரி” பிற்பாடு ஒவ்வொரு வருஷமும் செலுத்தப்பட்டது.—2நா 24:6-10; மத் 17:24.

w11-E 11/1 பக். 12 பாரா. 1-2

உங்களுக்குத் தெரியுமா?

எருசலேமில் இருந்த யெகோவாவின் ஆலயத்தில் செய்யப்பட்ட சேவைகளுக்குப் பண உதவி எப்படிக் கிடைத்தது?

ஆலயத்தில் நடந்த நிறைய வேலைகளைப் பராமரிக்க வரி கட்டுவது உதவியது. முக்கியமாக பத்தில் ஒரு பாகம் செலுத்துவது உதவியது. வேறு சில வரிகளும் இருந்தன. உதாரணத்துக்கு வழிபாட்டு கூடாரம் கட்டும் சமயத்தில், பெயர் பதிவு செய்யப்படுகிற எல்லா இஸ்ரவேலர்களிடமும் ‘யெகோவாவுக்காக கொடுக்கப்படும் காணிக்கையாக’ அரை வெள்ளி சேக்கலை வசூலிக்க வேண்டும் என்று மோசேயிடம் யெகோவா சொன்னார்.—யாத்திராகமம் 30:12-16.

ஒவ்வொரு யூதரும் இந்தக் குறிப்பிட்ட தொகையை வருடாந்தர ஆலய வரியாக கட்டுவது வழக்கமாக ஆகியிருக்கலாம். இந்த வரியைக் கட்டுவதற்குதான் மீனின் வாயிலுள்ள காசை எடுத்துக்கொள்ளும்படி பேதுருவிடம் இயேசு சொன்னார்.—மத்தேயு 17:24-27.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

it-1-E பக். 1029 பாரா 4

கை

கைகளை வைப்பது. பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு நபர் மீதோ, ஒரு பொருள் மீதோ கைகள் வைக்கப்பட்டன. பொதுவாக, இப்படிச் செய்வது ஒரு நபரையோ அல்லது வேறொன்றையோ நியமிப்பதை அல்லது ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்தியது. குருத்துவச் சேவைக்காகப் புனிதப்படுத்தப்படும் சமயத்தில், ஆரோனும் அவருடைய மகன்களும் பலி செலுத்தப்படவிருந்த காளையின் தலைமீதும் இரண்டு ஆட்டுக்கடாக்களின் தலைமீதும் தங்கள் கைகளை வைக்க வேண்டியிருந்தது. இப்படிச் செய்வது, யெகோவாவுக்குச் சேவை செய்யும் குருமார்களாக ஆவதற்கு தங்கள் சார்பாக இந்த மிருகங்கள் பலி செலுத்தப்படும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக இருந்தது. (யாத் 29:10, 15, 19; லேவி 8:14, 18, 22) கடவுள் கொடுத்த கட்டளைப்படி இஸ்ரவேலர்களின் அடுத்த தலைவராக யோசுவாவை நியமித்தபோது அவர்மீது மோசே கைகளை வைத்தார். அப்போது அவர் “கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும்” நிறைந்தவரானார். (உபா 34:9) அதனால், இஸ்ரவேலர்களை அவரால் சரியாக வழிநடத்த முடிந்தது. ஆசீர்வதிப்பதற்காகவும் ஆட்கள்மீது கைகள் வைக்கப்பட்டன. (ஆதி 48:14; மாற் 10:16) இயேசு சிலரைத் தொட்டு, அதாவது அவர்கள்மீது கைகளை வைத்து குணப்படுத்தினார். (மத் 8:3; மாற் 6:5; லூ 13:13) சில சந்தர்ப்பங்களில், அப்போஸ்தலர்கள் கைகளை வைத்தபோது சிலருக்கு கடவுளுடைய சக்தி கிடைத்தது.—அப் 8:14-20; 19:6.

it-1-E பக். 114 பாரா 1

அபிஷேகம் செய்யப்பட்ட, அபிஷேகம் செய்வது

யெகோவா மோசேயிடம் கொடுத்த திருச்சட்டத்தில் அபிஷேகத் தைலத்தைச் செய்வதற்கான குறிப்புகளைத் தந்தார். வெள்ளைப்போளம், வாசனையான லவங்கப்பட்டை, வாசனையான வசம்பு, கருவாய்ப்பட்டை மற்றும் ஒலிவ எண்ணெய் ஆகிய தரமான பொருள்களால் செய்யப்பட்ட விசேஷ கலவையாக அது இருந்தது. (யாத் 30:22-25) இதேபோன்ற ஒரு கலவையைத் ஒருவன் தயாரித்து அதைத் தகுதி இல்லாத விஷயத்துக்கு பயன்படுத்தினால் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. (யாத் 30:31-33) இந்தக் கட்டளை, ஒரு நியமிப்பைச் செய்வதற்காக பரிசுத்த தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுவதன் முக்கியத்துவத்தையும் பரிசுத்தத்தன்மையையும் அடையாளப்படுத்தியது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்