நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்திற்கு சரியான இடம்
“நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.”—சங்கீதம் 145:2.
1. வணக்கத்தைப் பற்றியதில் யெகோவா எதை எதிர்பார்க்கிறார்?
“யெகோவாவாகிய நான் தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற தேவன்.” (யாத்திராகமம் 20:5, NW) மோசே யெகோவாவிடமிருந்து இந்த அறிவிப்பைக் கேட்டார். பின்னால் இஸ்ரவேல் தேசத்தாரிடம் பேசுகையில் அதைத் திரும்பச் சொன்னார். (உபாகமம் 5:9) யெகோவா தேவன் தம்முடைய ஊழியர்கள் தம்மை மாத்திரமே வணங்கவேண்டும் என்று எதிர்பார்த்ததைக் குறித்து மோசேயின் மனதில் எந்தச் சந்தேகமுமிருக்கவில்லை.
2, 3. (அ) சீனாய் மலையின் அருகே சம்பவித்தது அசாதாரணமானது என்பதை இஸ்ரவேலர் மனதில் பதியவைத்தது என்ன? (ஆ) இஸ்ரவேலர் மற்றும் கடவுளுடைய மக்களின் வணக்கத்தைப் பற்றி என்ன கேள்விகளை நாம் ஆராய்வோம்?
2 சீனாய் மலையின் அருகில் கூடாரங்களில் தங்கியிருந்தபோது, இஸ்ரவேலரும் அவர்களோடுகூட எகிப்தைவிட்டு புறப்பட்டுவந்த “பல ஜாதியான ஜனங்க”ளும் அசாதாரணமான ஒன்றைக் கண்டார்கள். (யாத்திராகமம் 12:38) பத்து அடிகள் அல்லது வாதைகளால் அவமானப்படுத்தப்பட்ட எகிப்திய கடவுட்களின் வணக்கத்தைப் போல இது இல்லை. யெகோவா தம்முடைய பிரசன்னத்தை மோசேக்கு வெளிப்படுத்திய போது, பயத்தைத் தோற்றுவிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது: இடி, மின்னல், கூடாரம் முழுவதையும் நடுங்க வைத்த மகா பலத்த எக்காள சத்தம். அடுத்து முழு மலையும் அதிர்ந்தபோது, அக்கினியும் புகையும் வந்தன. (யாத்திராகமம் 19:16-20; எபிரெயர் 12:18-21) சம்பவித்துக்கொண்டிருந்தது அசாதாரணமானது என்பதற்கு எந்த ஒரு இஸ்ரவேலனுக்கும் கூடுதலான அத்தாட்சி தேவையாக இருந்தால், அது விரைவில் வர இருந்தது. சீக்கிரத்தில் கடவுளுடைய கட்டளைகளடங்கிய இரண்டாவது நகலைப் பெற்றுக்கொண்டு மலையிலிருந்து மோசே இறங்கிவந்தார். ஏவப்பட்ட பதிவின்படி, “[மோசேயின்] முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, [மக்கள்] அவன் சமீபத்தில் சேரப் பயந்தார்கள்.” உண்மையிலேயே, மறக்கமுடியாத மனித தன்மைக்கு மேற்பட்ட ஓர் அனுபவம்!—யாத்திராகமம் 34:30.
3 கடவுளுடைய தேசம் என்பதற்கு மாதிரி எடுத்துக்காட்டாக இருந்த அவர்களுக்கு, யெகோவாவின் வணக்கம் பெற்றிருந்த அந்த இடத்தைக் குறித்ததில் எந்தக் கேள்வியும் இருக்கவில்லை. அவர்களுடைய மீட்பராக அவர் இருந்தார். அவர்களுடைய உயிருக்காக அவருக்குக் கடன்பட்டிருந்தார்கள். அவர்களுடைய நியாயப்பிரமாணிகராகவும் அவர் இருந்தார். ஆனால் யெகோவாவின் வணக்கத்தை அவர்கள் முதலிடத்தில் வைத்தார்களா? கடவுளுடைய நவீன நாளைய ஊழியர்களைப் பற்றி என்ன? யெகோவாவின் வணக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன இடத்தைப் பெற்றிருக்கிறது?—ரோமர் 15:4.
இஸ்ரவேலருடைய யெகோவாவின் வணக்கம்
4. வனாந்தரப் பயணத்தின்போது இஸ்ரவேலருடைய கூடாரத்தின் அமைப்புத் திட்டம் என்னவாக இருந்தது, கூடாரங்களின் நடுப்பகுதியில் என்ன இருந்தது?
4 வனாந்தரத்தில் கூடாரமடித்து தங்கியிருந்த இஸ்ரவேலரை நீங்கள் உயிரோடிருந்து பார்க்க முடிந்திருந்தால், நீங்கள் எதைப் பார்த்திருப்பீர்கள்? ஒருவேளை 30 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான ஆட்களுக்கு இடவசதி அளிக்கும் மிகப் பிரமாண்டமான, ஆனால் ஒழுங்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் வடக்கேயும் தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் திசைக்கு மூன்று கோத்திர வாரியாக பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இன்னும் சற்று அருகாமையில் நோக்கும் போது, கூடாரத்தின் நடுப் பகுதிக்கு அருகே மற்றொரு தொகுதிப் பிரிவையும் கவனித்திருப்பீர்கள். இந்த நான்கு சிறிய கூடார கொத்துக்கள் லேவி கோத்திரத்தாரின் குடும்பங்கள் தங்கும் இடமாக இருந்தன. கூடாரத்தின் நடுப்பகுதியில், துணியால் ஆன ஒரு மதிலால் பிரிக்கப்பட்டிருந்த ஓர் இடத்தில் தனிச்சிறப்பான கட்டமைப்பு இருந்தது. இது “ஞான இருதயமுள்ள” இஸ்ரவேலர் யெகோவாவின் திட்டப்படி கட்டி அமைத்திருந்த “ஆசரிப்புக் கூடாரமாக” அல்லது வாசஸ்தலமாக இருந்தது.—எண்ணாகமம் 1:52, 53; 2:3, 10, 17, 18, 25; யாத்திராகமம் 35:10.
5. இஸ்ரவேலில் ஆசரிப்புக் கூடாரம் என்ன நோக்கத்தைச் சேவித்தது?
5 இஸ்ரவேலர் தங்களுடைய வனாந்தரப் பயணத்தின் போது கூடாரமிட்டுத் தங்கிய சுமார் 40 இடங்கள் ஒவ்வொன்றிலும் ஆசரிப்புக் கூடாரத்தை எழுப்பினர், அது அவர்களுடைய கூடாரவாசத்தில் மைய கவனத்துக்குரிய இடமாக ஆனது. (எண்ணாகமம், அதிகாரம் 33) யெகோவா அவருடைய ஜனங்கள் மத்தியில் அவர்களுடைய கூடாரத்தின் நடுவில் வாசம் பண்ணுவதாக பொருத்தமாகவே பைபிள் விவரிக்கிறது. (யாத்திராகமம் 29:43-46; 40:34; எண்ணாகமம் 5:3; 11:20; 16:3) அவர் லிவிங் பைபிள் இவ்வாறு குறிப்பு சொல்கிறது: “இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லக்கூடிய இந்தக் கூடாரம் அதிமுக்கியமான ஒன்றாக இருந்தது, ஏனென்றால் அது கோத்திரங்களுக்கு மத சம்பந்தமான புத்தாற்றல் பெறும் ஒரு மையத்தை உண்டுபண்ணியது. இவ்விதமாக வனாந்தரத்தில் நீண்ட வருடங்களாக அலைந்து திரிந்த சமயத்தில் ஐக்கியப்பட்டவர்களாக நிலைத்திருக்க செய்து ஐக்கியப்பட்ட செயல் நடவடிக்கைகளைச் சாத்தியமாக்கிற்று.” அதற்கும் மேலாக, ஆசரிப்புக் கூடாரம், படைப்பாளரின் வணக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் முதன்மையானது என்பதை இஸ்ரவேலருக்கு இடைவிடாமல் நினைப்பூட்டினது.
6, 7. ஆசரிப்புக் கூடாரத்துக்குப் பதிலாக வணக்கத்திற்கான என்ன கட்டட அமைப்பு ஏற்பட்டது, இது இஸ்ரவேல் தேசத்துக்கு எவ்வாறு பயனுள்ளதாய் இருந்தது?
6 இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வந்துசேர்ந்தபோது ஆசரிப்புக் கூடாரம் தொடர்ந்து இஸ்ரவேலரின் வணக்கத்திற்கு மையமாக இருந்துவந்தது. (யோசுவா 18:1; 1 சாமுவேல் 1:3) காலப்போக்கில், தாவீது ராஜா நிரந்தரமான கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு விருப்பம் தெரிவித்தார். இது அவருடைய மகன் சாலொமோன் பின்னால் கட்டிய ஆலயமாக இருந்தது. (2 சாமுவேல் 7:1-10) அதனுடைய பிரதிஷ்டையின் போது அந்தக் கட்டடத்தின் மீது யெகோவாவின் அங்கீகாரத்தைச் சுட்டிக்காட்டும் வண்ணமாக மேகம் ஒன்று இறங்கியது. “தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்,” என்று சாலொமோன் ஜெபித்தார். (1 இராஜாக்கள் 8:12, 13; 2 நாளாகமம் 6:2) புதிதாகக் கட்டப்பட்ட அந்த ஆலயம் இப்பொழுது தேசத்தின் வழிபாட்டுக்கு முக்கிய மையமாக ஆனது.
7 வருடத்துக்கு மூன்று தடவைகள், எல்லா இஸ்ரவேல ஆண்மக்களும் கடவுளுடைய ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆலயத்தில் சந்தோஷமான கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக எருசலேமுக்குச் சென்றனர். பொருத்தமாகவே, இந்தச் சந்திப்புகள் கடவுளுடைய வணக்கத்துக்குக் கவனத்தை ஒருமுகப்படுத்தும் வகையில் ‘யெகோவாவுடைய பண்டிகை நாட்கள்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டன. (லேவியராகமம் 23:2, 4) பக்தியுள்ள பெண்கள் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களோடு சேர்ந்து இதில் கலந்துகொண்டனர்.—1 சாமுவேல் 1:3-7; லூக்கா 2:41-44.
8. சங்கீதம் 84:1-12 யெகோவாவினுடைய வணக்கத்தின் முக்கியத்துவத்தை எவ்வாறு வலியுறுத்துகிறது?
8 தங்களுடைய வாழ்க்கையில் வணக்கம் எத்தனை அதிமுக்கியமானதாக கருதப்பட்டது என்பதை ஆவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரர்கள் சொல்வன்மையோடு ஒப்புக்கொண்டார்கள். “சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!” என்பதாக கோராகின் புத்திரர் பாடினார்கள். அவர்கள் நிச்சயமாகவே வெறுமனே ஒரு பெரிய கட்டடத்தைப் புகழ்ந்துபேசிக்கொண்டில்லை. மாறாக, அவர்கள் யெகோவா தேவனுக்குத் துதிப்பாடி தங்கள் குரல்களை உயர்த்தி இவ்விதமாக அறிவித்தனர்: “என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.” லேவியருக்குரிய சேவை அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. “உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்,” என்பதாக அவர்கள் அறிவித்தார்கள். “அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள்.” உண்மையில், இஸ்ரவேலர் அனைவரும் இவ்விதமாக பாடமுடியும்: “உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். . . . அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.” எருசலேமுக்கு இஸ்ரவேலன் ஒருவனின் பயணம் நீண்டதாயும் களைப்பூட்டுவதாயும் இருந்தபோதிலும், தலைநகரை வந்தடைந்தபோது அவனுடைய பலம் புதுப்பிக்கப்பட்டது. யெகோவாவை வணங்கும் தன்னுடைய சிலாக்கியத்தைக்குறித்து அவன் உயர்வாக பேசுகையில் அவனுடைய இருதயம் சந்தோஷத்தால் நிறைந்தது: “ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்வேன். . . . சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” யெகோவாவின் வணக்கத்துக்கு இஸ்ரவேலர் கொடுத்த முதன்மையான இடத்தை இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.—சங்கீதம் 84:1-12.
9. இஸ்ரவேல் தேசத்தார் யெகோவாவின் வணக்கத்தை முன்னிலையில் வைக்கத் தவறியபோது அவர்களுக்கு என்ன சம்பவித்தது?
9 வருந்தத்தக்கவிதமாகவே, இஸ்ரவேலர் மெய் வணக்கத்தை முன்னிலையில் வைக்கத் தவறிவிட்டனர். பொய் கடவுட்களிடமாக பக்தி, யெகோவாவுக்கான அவர்களுடைய வைராக்கியத்தை அழித்துவிட அனுமதித்தார்கள். இதன் விளைவாக, யெகோவா அவர்களை தங்களுடைய சத்துருக்களுக்கு ஒப்புக்கொடுத்து, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டவர்களாக அழைத்துச் செல்லப்பட அனுமதித்தார். அவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பின்பு, தங்களுடைய தாயகத்துக்கு திரும்ப நிலைநாட்டப்பட்ட பின்பு, உண்மையுள்ள தீர்க்கதரிசிகளாகிய ஆகாய், சகரியா மற்றும் மல்கியாவின் தூண்டி எழுப்பும் அறிவுரைகளை யெகோவா இஸ்ரவேலருக்கு அளித்தார். ஆசாரியனாகிய எஸ்றாவும் அதிபதியாகிய நெகேமியாவும் ஆலயத்தை மீண்டும் கட்டி அங்கே மெய் வணக்கத்தைத் திரும்பவும் ஆரம்பிக்கும்படியாக கடவுளுடைய மக்களைத் தூண்டினார்கள். ஆனால் நூற்றாண்டுகள் கடந்துசென்ற போது, மெய் வணக்கம் தேசத்தில் மறுபடியுமாக தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது.
மெய் வணக்கத்துக்கு முதல் நூற்றாண்டில் வைராக்கியம்
10, 11. இயேசு பூமியில் இருந்தபோது உண்மையுள்ளவர்களின் வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கம் எந்த இடத்தைக் கொண்டிருந்தது?
10 யெகோவாவின் நியமிக்கப்பட்ட காலத்தில், மேசியா தோன்றினார். உண்மையுள்ள தனிநபர்கள் இரட்சிப்புக்காக யெகோவாவில் நம்பியிருந்தனர். (லூக்கா 2:25; 3:15) லூக்காவின் சுவிசேஷ பதிவு 84 வயது நிரம்பிய அன்னாளை “தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்,” என்பதாக குறிப்பாக விவரிக்கிறது.—லூக்கா 2:37.
11 “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது,” என்று இயேசு சொன்னார். (யோவான் 4:34) காசுக்காரர்களை ஆலயத்தில் இயேசு சந்தித்தபோது எவ்விதமாக பிரதிபலித்தார் என்பதை நினைவுபடுத்திப்பாருங்கள். அவர் காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்துப் போட்டார். மாற்கு சொல்கிறார்: “ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோக விடாமல்: என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.” (மாற்கு 11:15-17) ஆம், நகரின் மற்றொரு பகுதிக்குப் பொருட்களை எடுத்துச்செல்லுகையில் இயேசு ஆலய பிராகாரங்களினூடே குறுக்கு வழியில் செல்லக்கூட எவரையும் அனுமதிக்கவில்லை. இயேசுவின் செயல்கள் இதற்கு முன் கொடுக்கப்பட்ட அவருடைய ஆலோசனையை வலுப்படுத்துவதாக இருந்தது. “முதலாவது . . . ராஜ்யத்தையும் [கடவுளுடைய] நீதியையும் தேடுங்கள்,” (மத்தேயு 6:33) யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தியைச் செலுத்துவதில் இயேசு நமக்கு மகத்தான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றிருக்கிறார்.—1 பேதுரு 2:21.
12. இயேசுவின் சீஷர்கள் யெகோவாவின் வணக்கத்துக்குத் தாங்கள் கொடுத்த முதன்மையான இடத்தை எவ்விதமாக காட்டினார்கள்?
12 நொறுங்குண்ட ஆனால் உண்மையுள்ள யூதர்களை பொய் மத பழக்கவழக்கங்களின் சுமைகளிலிருந்து விடுவிப்பதற்கு தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்றிய விதத்தின் மூலமாகவும்கூட இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பின்பற்றுவதற்கு ஒரு மாதிரியை வைத்தார். (லூக்கா 4:18) சீஷர்களை உண்டுபண்ணி அவர்களை முழுக்காட்டும்படியாக இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிதலாக ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தங்களுடைய உயிர்த்தெழுப்பப்பட்ட ஆண்டவரின் சம்பந்தமாக யெகோவாவின் சித்தத்தைத் தைரியமாக அறிவித்தனர். யெகோவா தம்முடைய வணக்கத்துக்கு அவர்கள் கொடுத்த முதன்மையான இடத்தைக்குறித்து மிகவும் திருப்தியடைந்தார். இதன் காரணமாக, கடவுளுடைய சொந்த தூதன் காவலில் இருந்த அப்போஸ்தலர்கள் பேதுருவையும் யோவானையும் அற்புதமாக விடுவித்து அவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிட்டார்: “நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.” மீண்டும் ஊக்குவிக்கப்பட்டவர்களாக, அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். ஒவ்வொரு நாளும், எருசலேம் ஆலயத்திலும் வீடு வீடாகவும் “இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.”—அப்போஸ்தலர் 1:8; 4:29, 30; 5:20, 42; மத்தேயு 28:19, 20.
13, 14. (அ) பூர்வ கிறிஸ்தவ காலங்கள் முதற்கொண்டே சாத்தான் கடவுளுடைய ஊழியர்களுக்கு என்ன செய்ய முயற்சி செய்து வந்திருக்கிறான்? (ஆ) கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் தொடர்ந்து எதைச் செய்துகொண்டிருக்கின்றனர்?
13 அவர்களுடைய பிரசங்கிப்புக்கு எதிர்ப்பு அதிகரித்தபோது, கடவுள் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களைக் காலத்துக்கேற்ற ஆலோசனையை எழுதும்படியாக வழிநடத்தினார். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்,” என்பதாக பேதுரு பொ.ச. 60-க்கு சற்றுபின்னர் எழுதினார். “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.” ஆரம்பக் கால கிறிஸ்தவர்களுக்கு நிச்சயமாகவே அந்த வார்த்தைகள் திரும்ப நம்பிக்கையூட்டுபவையாக இருந்தன. கொஞ்சகாலம் பாடநுபவித்தப் பிறகு கடவுள் அவர்கள் பயிற்றுவிப்பை முடிவுக்குக் கொண்டுவருவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். (1 பேதுரு 5:7-10) யூத காரிய ஒழுங்குமுறையின் அந்த முடிவான நாட்களின்போது, மெய்க் கிறிஸ்தவர்கள் யெகோவாவின் அன்பான வணக்கத்தை புதிய உச்சநிலைகளுக்கு உயர்த்தினர்.—கொலோசெயர் 1:23.
14 அப்போஸ்தலன் பவுல் முன்னுரைத்த விதமாகவே, விசுவாசதுரோகம், மெய் வணக்கத்திலிருந்து விலகிச்செல்லுதல் நடைபெற்றது. (அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3) முதல் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளிலிருந்து கிடைத்த சான்று இதற்கு அத்தாட்சியாக குவிந்தது. (1 யோவான் 2:18, 19) சாத்தான் போலி கிறிஸ்தவர்களை மெய்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்தான், இந்தக் “களைகளை” கோதுமைமணி போன்ற கிறிஸ்தவர்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினமானது. இருந்தபோதிலும், கடந்த நூற்றாண்டுகளினூடாக, ஒருசில தனி நபர்கள் தங்களுடைய சொந்த உயிரைப் பணயம் வைத்தும்கூட கடவுளுடைய வணக்கத்தை முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் ‘ஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்’ முடிவடையும் தறுவாயில் வந்த கடைசி பத்தாண்டுகளின் வரையாக கடவுள் மெய் வணக்கத்தை உயர்த்துவதற்கு தம்முடைய ஊழியர்களை மறுபடியுமாக கூட்டிச்சேர்க்கவில்லை.—மத்தேயு 13:24-30, 36-43; லூக்கா 21:24.
யெகோவாவின் வணக்கம் இன்று உயர்த்தப்பட்டிருக்கிறது
15. 1919 முதற்கொண்டு, ஏசாயா 2:2-4 மற்றும் மீகா 4:1-4 தீர்க்கதரிசனங்கள் எவ்விதமாக நிறைவேறி வந்திருக்கின்றன?
15 1919-ல் தைரியமாக உலகளாவிய ஒரு சாட்சிகொடுக்கும் வேலையை ஏற்று செய்வதற்காக அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருக்கு யெகோவா அதிகாரமளித்தார், இது மெய்க் கடவுளின் வணக்கத்தை உயர்த்தியிருக்கிறது. அடையாளமான ‘வேறே ஆடுகள்’ 1935 முதற்கொண்டு உள்ளே வந்துகொண்டிருக்க, ‘யெகோவாவுடைய ஆலயமாகிய பர்வதத்துக்கு’ ஆவிக்குரியவிதமாக ஏறிவருகிற மக்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. 1993 ஊழிய ஆண்டின்போது, யெகோவாவின் சாட்சிகள் 47,09,889 பேர் உயர்த்தப்பட்ட அவருடைய வணக்கத்தில் சேர்ந்துகொள்ளும்படியாக மற்றவர்களை அழைப்பதன் மூலம் அவரைத் துதித்திருக்கிறார்கள். பொய் மத உலகப் பேரரசின், குறிப்பாக கிறிஸ்தவமண்டலத்தின் பிரிவுகளாகிய ‘மலைகளின்’ ஆவிக்குரிய தாழ்த்தப்பட்ட நிலைமைக்கு இது எத்தனை எதிர்மாறாக உள்ளது!—யோவான் 10:16; ஏசாயா 2:2-4, NW; மீகா 4:1-4.
16. ஏசாயா 2:10-22-ல் முன்னுரைக்கப்பட்டிருப்பதை முன்னிட்டுப் பார்க்கையில், கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் என்ன செய்வது அவசியமாக இருக்கிறது?
16 பொய் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சர்ச்சுகளையும் கத்தீட்ரல்களையும் தங்கள் மதகுருமாரையும்கூட ‘உயர்வாக’ கருதி ஆடம்பரமான பட்டப்பெயர்களையும் மரியாதையையும் கொடுக்கின்றனர். ஆனால் ஏசாயா என்ன முன்னறிவித்தார் என்பதை கவனியுங்கள்: “நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.” இது எப்பொழுது நடக்கும்? வேகமாக நெருங்கிவரும் மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில், “விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோ”கும் போது நடக்கும். பயத்தைத் தோற்றுவிக்கும் அந்தக் காலம் சமீபித்திருப்பதை முன்னிட்டுப் பார்க்கையில், கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் யெகோவாவின் வணக்கம் தங்களுடைய வாழ்க்கையில் என்ன இடத்தில் இருக்கிறது என்பதை பொறுப்புணர்ச்சியுடன் ஆய்வுசெய்வது அவசியமாகும்.—ஏசாயா 2:10-22.
17. யெகோவாவின் ஊழியர்கள் இன்று எவ்விதமாக யெகோவாவின் வணக்கத்துக்கு முதன்மையான இடத்தைக் கொடுப்பதைக் காட்டுகிறார்கள்?
17 ஒரு சர்வதேச சகோதரத்துவமாக, யெகோவாவின் சாட்சிகள் ராஜ்யத்தை வைராக்கியமாக பிரசங்கிப்பதில் பிரசித்திப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய வணக்கம் வாரத்துக்கு சுமார் ஒரு மணிநேரம் போல ஒதுக்கி வைக்கப்படும் மேலோட்டமான, அக்கறைமட்டுமேயுடைய மதமாக இல்லை. இல்லை, அது அவர்களுடைய முழு வாழ்க்கைமுறையாகவும் இருக்கிறது. (சங்கீதம் 145:2) ஆம், கடந்த ஆண்டு 6,20,000 மேற்பட்ட சாட்சிகள் கிறிஸ்தவ ஊழியத்தில் முழு நேரம் பங்குகொள்வதற்காக தங்களுடைய விவகாரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டார்கள். ஏனையோரும் நிச்சயமாகவே யெகோவாவின் வணக்கத்தை அசட்டை செய்வது கிடையாது. அவர்களுடைய குடும்ப பொறுப்புகள் உலகப்பிரகாரமான வேலைகளில் கடினமாக உழைப்பதைத் தேவைப்படுத்தினாலும் அவர்களுடைய அன்றாட உரையாடல்களிலும் அவர்களுடைய பொது பிரசங்கிப்பிலும் அது கவனத்தைக் கவரும் விதமாக தெரிகிறது.
18, 19. சாட்சிகளுடைய வாழ்க்கை சரிதைகளைப் படிப்பதிலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய ஊக்குவிப்புக்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
18 காவற்கோபுர பத்திரிகையில் பிரசுரிக்கப்படும் வாழ்க்கை சரிதைகள் பல்வேறு சகோதர சகோதரிகளும் தங்களுடைய வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்தை எவ்விதமாக முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய உட்பார்வையை அளிக்கின்றன. ஆறு வயதாக இருக்கையில் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த ஒரு இளம் சகோதரி மிஷனரி சேவையைத் தன்னுடைய இலக்காக வைத்தாள். இளம் சகோதர சகோதரிகளே, நீங்கள் யெகோவாவின் வணக்கத்தை உங்களுடைய வாழ்க்கையில் முதன்மையாக வைப்பதற்கு உதவிசெய்ய நீங்கள் என்ன இலக்குகளைத் தெரிந்துகொள்ளலாம்?—ஜூன் 1, 1992 காவற்கோபுர பத்திரிகையில் பக்கங்கள் 26-30-ல் “ஆறு வயதில் தீர்மானித்த இலக்கை பின்தொடருதல்” கட்டுரையைக் காண்க.
19 விதவையாக இருக்கும் வயதான ஒரு சகோதரி யெகோவாவின் வணக்கத்தை அதனுடைய சரியான இடத்தில் வைத்ததற்கு மற்றொரு நேர்த்தியான முன்மாதிரியை வைக்கிறார்கள். சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அவர்கள் உதவியிருந்த ஆட்களிடமிருந்து சகித்திருப்பதற்கு மிகுதியான ஊக்குவிப்பைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களே அவர்களுடைய ‘குடும்பமாக’ இருந்தார்கள். (மாற்கு 3:31-35) நீங்கள் அதேவிதமான ஒரு சூழ்நிலைமையில் உங்களைக் கண்டால், சபையிலுள்ள இளவயது ஆட்களின் ஆதரவையும் உதவியையும் ஏற்றுக்கொள்வீர்களா? (அக்டோபர் 1, 1992 காவற்கோபுர பத்திரிகையில் பக்கங்கள் 21-3-ல் வெளியான “அறுவடைக்காலத்தில் நான் பிரதிபலித்தேன்” என்ற கட்டுரையில் சகோதரி வின்னிஃபிரட் ரெமி எவ்வாறு தன் கருத்தைத் தெரிவித்தார்கள் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.) முழு நேர ஊழியர்களே, நீங்கள் நியமிக்கப்பட்டுள்ள இடத்தில் மனத்தாழ்மையோடு சேவை செய்வதன் மூலமும் தேவாட்சிக்கடுத்த வழிநடத்துதலுக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படுத்துவதன் மூலமும் யெகோவாவின் வணக்கம் உண்மையில் உங்கள் வாழ்க்கையில் முதலிடத்தில் வருகிறது என்பதைக் காண்பியுங்கள். (டிசம்பர் 1, 1991, பக்கங்கள் 24-7 ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில் “கடவுளுடைய அமைப்போடு நெருங்கி இருத்தல்” கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சகோதரர் ராய் ரயன் என்பவரின் முன்மாதிரியை தயவுசெய்து கவனிக்கவும்.) நாம் யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்கும் போது, அவர் நம்மை கவனித்துக்கொள்வார் என்ற உறுதி நமக்கிருப்பதை நினைவில் வையுங்கள். வாழ்க்கையின் தேவைகளை எப்படி நாம் பெற்றுக்கொள்வோம் என்பதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம். சகோதரிகள் ஆலிவ் மற்றும் சோனியா ஸ்பிரிங்கேட்டின் அனுபவங்கள் இதை விளக்குகின்றன.—பிப்ரவரி 1, 1994, காவற்கோபுரம், பக்கங்கள் 20-5-ல் “நாங்கள் முதலாவது ராஜ்யத்தை தேடியிருக்கிறோம்,” கட்டுரையைப் பார்க்கவும்.
20. என்ன பொருத்தமான கேள்விகளை நாம் இப்பொழுது நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
20 அப்படியென்றால், தனிப்பட்டவர்களாக நம்மைநாமே ஒருசில ஊடுருவி ஆராயும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டாமா? யெகோவாவின் வணக்கம் என்னுடைய வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறது? என்னால் இயன்றவரை சிறப்பாக கடவுளுடைய சித்தத்தைச் செய்வேன் என்ற என்னுடைய ஒப்புக்கொடுத்தலை நான் நிறைவேற்றுகிறேனா? வாழ்க்கையின் என்ன பகுதிகளில் நான் முன்னேற முடியும்? வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பதற்கு நாம் தெரிந்துகொண்டிருக்கும் காரியத்துக்கு—கர்த்தராகிய ஆண்டவரும் நம்முடைய அன்புள்ள தகப்பனுமாகிய யெகோவாவின் வணக்கத்துக்கு—இசைவாக நாம் நம்முடைய செல்வங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைச் சிந்திப்பதற்கு பின்வரும் கட்டுரைகளை ஆழ்ந்து சிந்திப்பது நமக்கு சந்தர்ப்பத்தை அளிக்கும்.—பிரசங்கி 12:13; 2 கொரிந்தியர் 13:5.
மறுபார்வை செய்கையில்
◻ வணக்கத்தைப் பற்றியதில், யெகோவா எதைப் பார்க்கிறார்?
◻ ஆசரிப்புக் கூடாரம் எதற்கு ஒரு நினைப்பூட்டுதலாக சேவித்தது?
◻ பொ.ச. முதல் நூற்றாண்டில், மெய் வணக்கத்துக்கான வைராக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்மாதிரிகளாக இருந்தவர்கள் யார், எவ்விதமாக?
◻ 1919 முதற்கொண்டு, யெகோவாவின் வணக்கம் எவ்விதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது?