உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 1/15 பக். 15-20
  • உத்தம கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உத்தம கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஜெபத்தைப் பற்றி முன்கூட்டியே யோசியுங்கள்
  • பயபக்தியோடு கடவுளை அணுகுங்கள்
  • பணிவோடு ஜெபம் செய்யுங்கள்
  • இருதயத்திலிருந்து ஜெபம் செய்யுங்கள்
  • நன்றியையும் துதியையும் மறந்துவிடாதீர்கள்
  • ஜெபம் செய்ய ஒருபோதும் வெட்கப்படாதீர்கள்
  • ஜெபத்திலிருந்து ஆறுதலடையுங்கள்
  • உத்தமர்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள்
  • உங்கள் ஜெபங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • நாம் ஏன் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • மற்றவர்களுக்கு முன்பாக மனத்தாழ்மையுள்ள இருதயத்துடன் ஜெபம் செய்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • கடவுளிடம் நீங்கள் எவ்வாறு நெருங்கிவரலாம்
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 1/15 பக். 15-20

உத்தம கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்

“கோபத்தையும் தர்க்கத்தையும் ஆண்கள் தவிர்த்து, உத்தம கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் செய்யவேண்டுமென்று விரும்புகிறேன்.”—1 தீமோத்தேயு 2:8, NW.

1, 2. (அ) கடவுளுடைய மக்கள் சார்பில் செய்யும் ஜெபத்தில், 1 தீமோத்தேயு 2:8 எவ்வாறு பொருந்துகிறது? (ஆ) இப்போது நாம் எதைப் பற்றி கலந்தாலோசிக்க போகிறோம்?

தம்முடைய மக்கள், தம்மிடத்திலும், அவர்களுக்குள்ளும் உத்தமத்தோடு இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். “கோபத்தையும் தர்க்கத்தையும் ஆண்கள் தவிர்த்து, உத்தம கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, உத்தம குணத்தை ஜெபத்தோடு இணைத்துப் பேசினார். (1 தீமோத்தேயு 2:8, NW) கிறிஸ்தவர்கள் ஒன்றாக கூடிவரும் இடங்களையே “எல்லா இடங்களிலேயும்” என்று பவுல் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படியென்றால், கடவுளுடைய மக்கள் சார்பில் யார்தான் சபைக் கூட்டங்களில் ஜெபம் செய்வார்கள்? கடவுளுக்காக பைபிளில் சொல்லியிருக்கும் கடமைகளை எல்லாம் கவனமாக நிறைவேற்றி, பயபக்தியோடு இருக்கும் பரிசுத்தவான்களும், நீதிமான்களும் மாத்திரமே ஜெபம் செய்ய முடியும். (பிரசங்கி 12:13, 14) அவர்கள் ஆவிக்குரிய ரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் கறைபடாதவர்களாகவும், கடவுளுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களாகவும் இருத்தல் அவசியம்.

2 குறிப்பாக சபை மூப்பர்கள், ‘உத்தம கைகளை உயர்த்தி . . . ஜெபம் செய்ய வேண்டும்.’ இயேசு கிறிஸ்துவின் மூலம் செய்யும் உள்ளப்பூர்வமான ஜெபங்கள் கடவுளிடத்தில் அவர்கள் உத்தமத்தோடு இருப்பதை வெளிக்காட்டுவதோடு, கோபத்தையும் தர்க்கத்தையும் தவிர்க்க உதவும். கிறிஸ்தவ சபையில் ஜெபம் செய்யும் பாக்கியம் பெற்ற எவரும் கடுங்கோபமடையாத, கெட்ட எண்ணம் இல்லாத, யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் துரோகம் செய்யாத நபராக இருக்க வேண்டும். (யாக்கோபு 1:19, 20) மற்றவர்கள் சார்பில் ஜெபம் செய்யும் பாக்கியம் பெற்றவர்களுக்கு பைபிள் இன்னும் என்னென்ன வழிநடத்தும் குறிப்புகளை தருகிறது? நாம் தனியாகவும், குடும்பமாகவும் ஜெபம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய ஒருசில பைபிள் கொள்கைகள் யாவை?

ஜெபத்தைப் பற்றி முன்கூட்டியே யோசியுங்கள்

3, 4. (அ) மற்றவர்கள் சார்பில் செய்யப்படும் ஜெபத்தைக் குறித்து முன்கூட்டியே யோசித்து பார்ப்பதால் என்ன நன்மை? (ஆ) ஜெபத்தின் அளவைக் குறித்து வேதவசனங்களிலிருந்து என்ன தெரிகிறது?

3 மற்றவர்கள் சார்பாக ஜெபிக்கும்படி நம்மிடத்தில் கேட்டால், என்ன சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்று கொஞ்சமாவது முன்கூட்டியே யோசித்து பார்க்க வேண்டும். இவ்வாறு முன்கூட்டியே யோசித்தால், பொருத்தமான முக்கிய விஷயங்களை மறந்துவிடாமல் ஜெபத்தில் குறிப்பிட முடியும். அதோடு வார்த்தைகளுக்காக திக்கி, திணறி ரொம்ப நேரம் ஜெபம் செய்வதையும் தவிர்க்க முடியும். ஆனால், வாய்விட்டு சத்தமாகவும், எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் தனியாக ஜெபிக்கலாம். இயேசு தம்முடைய 12 சீஷர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன், இரவு முழுவதும் ஜெபம் செய்தார். ஆனால், அவர் தம்முடைய மரணத்தை நினைவுகூர ஏற்பாடு செய்தபோது அப்பத்தின் பேரிலும், திராட்சரசத்தின் பேரிலும் சுருக்கமாக ஜெபம் செய்தார். (லூக்கா 6:12-16; மாற்கு 14:22-24) இயேசு செய்த சுருக்கமான ஜெபத்தைக்கூட கடவுள் முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் அறிவோம்.

4 சாப்பிடுவதற்கு முன், ஒரு குடும்பத்தின் சார்பாக ஜெபம் செய்யும் வாய்ப்பு கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த ஜெபம் ஓரளவுக்கு சுருக்கமாக இருக்கும். ஜெபத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டாலும், கண்டிப்பாய் உணவுக்காக நன்றி சொல்ல வேண்டும். கிறிஸ்தவ கூட்டங்களின் துவக்கத்திலோ முடிவிலோ மற்றவர்கள் சார்பில் ஜெபம் செய்யும்போது, நிறைய விஷயங்களை குறிப்பிட்டு, நீண்டநேரம் செய்யவேண்டிய அவசியமில்லை. மற்றவர்களின் ‘பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணிய’ வேதபாரகரை இயேசு குற்றஞ்சாட்டினார். (லூக்கா 20:46, 47) இப்படிப்பட்ட ஜெபத்தை கடவுள் பக்தியுள்ள எவரும் செய்யமாட்டார்கள். ஆனால், ஒருசில நேரங்களில் பொது ஜெபம் நீண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, மாநாட்டின் முடிவாக ஜெபம் செய்ய அழைக்கப்படும் மூப்பர், பல குறிப்புகளை முன்கூட்டியே யோசித்து, அவற்றை ஜெபத்தில் குறிப்பிட விரும்பலாம். அதற்காக, ரொம்ப நேரம் செய்யவேண்டிய அவசியமில்லை.

பயபக்தியோடு கடவுளை அணுகுங்கள்

5. (அ) மற்றவர்களின் சார்பில் ஜெபம் செய்யும்போது எதை நினைவில்வைக்க வேண்டும்? (ஆ) ஏன் மரியாதையோடும், மதிப்போடும் ஜெபம் செய்ய வேண்டும்?

5 மனிதர்களின் சார்பாக நாம் ஜெபம் செய்தாலும், மனிதர்களிடத்தில் பேசவில்லை என்பது நினைவிருக்கட்டும். உன்னத கடவுள் யெகோவாவினிடத்தில் பாவிகளாகிய நாம் விண்ணப்பம் செய்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். (சங்கீதம் 8:3-5, 9; 73:28, NW) ஆகவே, எதையாவது, சொல்லத்தெரியாமல் தப்பும் தவறுமாக உளறி, கடவுளுடைய வெறுப்பை சம்பாதிக்காதபடி, பயபக்தியோடு செய்யவேண்டும். (நீதிமொழிகள் 1:7) சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு பாடினார்: “நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்குநேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.” (சங்கீதம் 5:7) நமக்கும் இவரைப்போன்ற மனநிலை இருந்தால், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்தில் மற்றவர்களின் சார்பாக ஜெபம் செய்யும்படி கேட்டுக்கொண்டால், எப்படி செய்வோம்? ஒரு அரசனுக்கு முன் நாம் பேசுவதாக வைத்துக்கொள்வோம். கண்டிப்பாக ரொம்ப மரியாதையோடும், மதிப்போடும் பேசுவோம். மனித அரசனுக்கே இப்படியென்றால், “நித்திய ராஜாவாகிய” யெகோவாவினிடத்தில் நாம் ஜெபிக்கும்போது இன்னும் எவ்வளவு மதிப்போடும், மரியாதையோடும் செய்யவேண்டும்? (வெளிப்படுத்துதல் 15:3, NW) ஆகவே, நாம் ஜெபம் செய்யும்போது, “குட்மார்னிங் யெகோவா,” “உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்,” அல்லது “போயிட்டு வருகிறோம்” போன்ற கூற்றுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயேசு, கடவுளுடைய ஒரே மகனாக இருந்தபோதிலும், தம் தகப்பனிடத்தில் பேசும்போது இப்படியெல்லாம் மரியாதைக்குறைவாக பேசவில்லை என்று வேதவசனங்கள் காட்டுகின்றன.

6. ‘கிருபை நிறைந்த சிங்காசனத்தை அணுகி, தாராளமாக பேசும்போது’ எதை மனதில் வைக்க வேண்டும்?

6 பவுல் இவ்வாறு கூறினார்: “நாம் . . . கிருபை நிறைந்த சிங்காசனத்தை அணுகி, தாராளமாக பேசுவோமாக.” (எபிரெயர் 4:16, NW) இயேசுவின் கிரய பலியில் நாம் விசுவாசம் வைத்திருப்பதால், பாவிகளாக இருந்தபோதிலும் யெகோவாவினிடத்தில் ‘தாராளமாக பேச’ முடியும். (அப்போஸ்தலர் 10:42, 43; 20:20, 21) ‘தாராளமாக பேச’ முடியும் என்பதன் அர்த்தம், கடவுளோடு எதை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம் என்பது அல்ல. மற்றவர்கள் சார்பில் செய்யப்படும் ஜெபங்களை, மரியாதையோடும், மதிப்போடும் செய்தீர்களென்றால் யெகோவாவின் மனதை மகிழ்விக்க முடியும். ஜெபம் செய்யும் சாக்கில், அறிவிப்புகளை செய்வது, தனிப்பட்டவர்களுக்குப் புத்திமதி சொல்வது, சபையாரை கண்டிப்பது பொருத்தமற்றது.

பணிவோடு ஜெபம் செய்யுங்கள்

7. யெகோவாவின் ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் ஜெபிக்கையில் எவ்வாறு பணிவைக் காட்டினார்?

7 நாம் மற்றவர்கள் சார்பில் ஜெபம் செய்தாலும்சரி, தனியாக ஜெபம் செய்தாலும்சரி, பணிவோடு செய்யவேண்டும் என்பதே மனதில் வைக்கவேண்டிய முக்கிய வேதாகம கொள்கை. (2 நாளாகமம் 7:13, 14) எருசலேமில் யெகோவாவின் ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் ராஜா மற்றவர்கள் சார்பில் பணிவோடு ஜெபம் செய்தார். உலகில் அதுவரை கட்டப்பட்டிராத அழகு கொஞ்சும் பிரமாண்டமான கட்டிடம் ஒன்றை அப்போதுதான் சாலொமோன் கட்டிமுடித்திருந்தார். ஆனாலும் அவர் பணிவோடு இவ்வாறு ஜெபம் செய்தார்: “தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?”—1 இராஜாக்கள் 8:27.

8. மற்றவர்கள் சார்பில் ஜெபிக்கும்போது பணிவைக் காட்டும் சில வழிகள் யாவை?

8 மற்றவர்கள் சார்பில் நாம் ஜெபம் செய்யும்போது, சாலொமோனைப் போலவே பணிவைக் காட்ட வேண்டும். போலி பக்தியைத் தவிர்த்து, குரலில் பணிவைக் காட்ட வேண்டும். வார்த்தை ஜாலங்களோடும், நாடக பாணியிலும் உள்ள ஜெபங்கள் பணிவான ஜெபங்கள் அல்ல. அவை ஜெபம் செய்கிறவரிடம் நம் கவனத்தை ஈர்க்குமே ஒழிய, கடவுளிடம் அல்ல. (மத்தேயு 6:5) ஜெபத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட பணிவை வெளிப்படுத்தும். பணிவோடு ஜெபம் செய்யும்போது, நாம் விரும்பும் விதத்தில் சில விஷயங்களை கடவுள் செய்தே ஆகவேண்டும் என்ற தோரணையில் வற்புறுத்த மாட்டோம். அதற்கு பதிலாக, யெகோவாவின் பரிசுத்தமான விருப்பத்திற்கு ஏற்றாற்போல் செய்யும்படி நாம் அவரிடத்தில் விண்ணப்பம் செய்வோம். சங்கீதக்காரன் கடவுளிடத்தில் மன்றாடியபோது, சரியான மனநிலையை வெளிக்காட்டினார்: “யெகோவாவே, இப்போது தயவாய் காப்பாற்றி அருளும்! யெகோவாவே, இப்போது தயவாய் வெற்றியைத் தந்தருளும்!”—சங்கீதம் 118:25, NW; லூக்கா 18:9-14.

இருதயத்திலிருந்து ஜெபம் செய்யுங்கள்

9. இயேசு கொடுத்த என்ன நல்ல அறிவுரை மத்தேயு 6:7-ல் காணப்படுகிறது, அதை எவ்வாறு பொருத்தலாம்?

9 நாம் மற்றவர்கள் சார்பில் செய்யும் ஜெபங்களும், தனியாக செய்யும் ஜெபங்களும் யெகோவாவை பிரியப்படுத்த வேண்டுமென்றால், அவை நம் இருதயத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும். ஆகவே, நாம் என்ன சொல்கிறோம் என்பதைக்கூட உணராமல், தேய்ந்துபோன ரெக்கார்டுபோல் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கமாட்டோம். இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு அறிவுரை கூறினார்: “அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும் போது மற்றவர்களைப்போல் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். மிகுதியான வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போனால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று அவர்கள் [தவறுதலாக] நினைக்கிறார்கள்.” இயேசு சொன்னதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால்: “வெறுமனே வார்த்தைகளால் பிதற்ற வேண்டாம்; வீணாக சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.”—மத்தேயு 6:7, NW அடிக்குறிப்பு.

10. ஒரே விஷயத்தைப் பற்றி அடிக்கடி கேட்பதில் ஏன் தவறில்லை?

10 ஒரே விஷயத்தைப் பற்றி அடிக்கடி ஜெபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இதில் தவறு ஒன்றுமில்லை. ஏனென்றால் இவ்வாறு செய்யும்படி இயேசுவே கூறியிருக்கிறார்: “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:7, NW) உதாரணத்திற்கு, உள்ளூரில் செய்யப்படும் பிரசங்க ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்திருப்பதால், உங்களுக்கு ஒரு புதிய ராஜ்ய மன்றம் தேவையாக இருக்கலாம். (ஏசாயா 60:22) இதை நீங்கள் உங்களது தனி ஜெபத்திலும், யெகோவாவின் மக்கள் கூடிவரும் கூட்டங்களில் செய்யப்படும் ஜெபத்திலும் கேட்கலாம். இப்படி கேட்பது பொருத்தமானதே. இதன் அர்த்தம் ‘வீணாக சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறோம்’ என்பது அல்ல.

நன்றியையும் துதியையும் மறந்துவிடாதீர்கள்

11. பிலிப்பியர் 4:6, 7 எவ்வாறு நமது தனி ஜெபத்திலும், மற்றவர்கள் சார்பில் செய்யும் ஜெபத்திலும் பொருந்துகிறது?

11 பலர் தங்களுக்கு ஏதாகிலும் வேண்டுமென்றால் மாத்திரம் ஜெபம் செய்வார்கள். ஆனால் யெகோவா தேவன்மீது நாம் அன்பு வைத்திருப்பதால், நமது தனி ஜெபத்திலும், மற்றவர்கள் சார்பில் செய்யும் ஜெபத்திலும் அவருக்கு நன்றியையும், துதியையும் செலுத்துவோம். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்” என்று எழுதினார் பவுல். (பிலிப்பியர் 4:6, 7) விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், யெகோவா நம்மை ஆவிக்குரிய ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஆசீர்வதித்திருப்பதால் கண்டிப்பாக அவருக்கு நன்றி சொல்வோமாக! (நீதிமொழிகள் 10:22) சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள், மகா உன்னதருக்கு உங்கள் நேர்த்தி கடனை செலுத்துங்கள்.” (சங்கீதம் 50:14, NW)) தாவீது பாடிய ஒரு ஜெப கீர்த்தனையில் இருதயத்தை வருடும் பின்வரும் வார்த்தைகள் அடங்கியுள்ளன: “தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.” (சங்கீதம் 69:30) நாமும்கூட நமது தனி ஜெபத்திலும், மற்றவர்கள் சார்பில் செய்யும் ஜெபத்திலும் இதேபோல் செய்ய வேண்டாமா?

12. சங்கீதம் 100:4, 5 எவ்வாறு இன்று நிறைவேறுகிறது, ஆகவே நாம் எதற்காக கடவுளுக்கு நன்றியையும் துதியையும் செலுத்த வேண்டும்?

12 கடவுளைப் பற்றி, சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “நன்றிவோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில் ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.” (சங்கீதம் [திருப்பாடல்கள்] 100:4, 5, பொது மொழிபெயர்ப்பு) இன்று, யெகோவாவின் ஆலய வெளிப்பிரகாரத்தில் பல்வேறு நாட்டவர்களும் திரண்டுவருகிறார்கள். இதற்காக நாம் அவருக்கு துதியையும் நன்றியையும் செலுத்துவோமாக. உள்ளூர் ராஜ்ய மன்றத்திற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள் என்பதை யெகோவாவை நேசிக்கும் மக்கள் கூடிவரும் கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதன் மூலம் வெளிக்காட்டுகிறீர்களா? அவ்வாறு கூடிவரும்போது, நம் அன்பான பரலோக தந்தையை துதித்தும், நன்றி செலுத்தியும் பாடும் பாடல்களை நீங்கள் மனம் லயித்து பாடுகிறீர்களா?

ஜெபம் செய்ய ஒருபோதும் வெட்கப்படாதீர்கள்

13. குற்றவுணர்வால் கடவுளை அணுக அருகதையற்றவர்களாக நாம் உணர்ந்தாலும்கூட வேண்டுதல் செய்யலாம் என்பதற்கு என்ன வேதாகம உதாரணம் உள்ளது?

13 குற்றவுணர்வு வாட்டும்போது, கடவுளை அணுக அருகதையற்றவர்களாக நாம் உணருவோம். ஆனாலும்கூட கடவுளிடத்தில் உருக்கமாக வேண்டுதல் செய்யலாம். வேற்றுநாட்டு பெண்களை மணந்துகொண்ட பாவத்தை யூதர்கள் செய்தபோது, எஸ்றா முழங்கால்போட்டு, கடவுளை நோக்கி தன் உத்தம கைகளை உயர்த்தி, இவ்வாறு பணிவோடு ஜெபம் செய்தார்: “என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக்கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று. எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம்; . . . எங்கள் பொல்லாத செய்கைளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும் இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில், . . . நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச்செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ? இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல.”—எஸ்றா 9:1-15; உபாகமம் 7:3, 4.

14. எஸ்றாவின் நாளில் செய்ததுபோல், கடவுளிடம் மன்னிப்பு பெறவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

14 கடவுளிடத்தில் மன்னிப்பு பெறவேண்டுமென்றால், முதலில் செய்த தவறை அவரிடத்தில் சொல்லி, அந்தத் தவறுக்காக மனந்திருந்தி, “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக்கொடுங்கள்.” (லூக்கா 3:8; யோபு 42:1-6; ஏசாயா 66:2) எஸ்றாவின் நாளில், வேற்று நாட்டிலிருந்து கல்யாணம் கட்டிக்கொண்டுவந்த மனைவிகளை திருப்பி அனுப்பி வைப்பதன் மூலம் செய்த தவறை திருத்திக்கொள்ள முயன்றார்கள். (எஸ்றா 10:44; 2 கொரிந்தியர் 7:8-13-ஐ ஒப்பிடுக.) பயங்கரமான பாவத்தை செய்துவிட்டதற்காக நாம் கடவுளிடத்தில் கெஞ்சி மன்னிப்பு கேட்கிறோமென்றால், முதலில் பணிவோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு, மனந்திருந்தியதைச் செயல்களில் (கனிகளாக) வெளிக்காட்டுவோமாக. திருந்தவேண்டும் என்ற மனநிலையும், தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் நமக்கிருந்தால், கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியை நாடுவோம்.—யாக்கோபு 5:13-15.

ஜெபத்திலிருந்து ஆறுதலடையுங்கள்

15. ஜெபத்திலிருந்து ஆறுதலடையலாம் என்பதை அன்னாளின் அனுபவத்திலிருந்து எப்படி அறிந்துகொள்ளலாம்?

15 ஏதோ காரணத்தால் மனம் புண்பட்டிருந்தால் ஜெபத்தில் நாம் ஆறுதலைக் கண்டடையலாம். (ஏசாயா 51:17, நீதிமொழிகள் 15:13) அன்னாள் என்கிற உத்தமி அதையே செய்தாள். அவள் வாழ்ந்த யூத சமுதாயத்தில் நிறைய பிள்ளைக்குட்டிகளோடு குடும்பங்கள் இருப்பது சகஜம். ஆனால் அவளுக்கோ பிள்ளை இல்லை. அவளுடைய கணவன் எல்க்கானாவுக்கு இன்னொரு மனைவி இருந்தாள். அவள் பெயர் பெனின்னாள். அவள் மூலம் பையன்களும், பெண்களும் இருந்தார்கள். அன்னாள் மலடியாய் இருந்ததால் பெனின்னாள் குத்திக்காட்டி பேசுவாள். அன்னாள் உருக்கமாக ஜெபம் செய்தாள். தனக்கு பிள்ளை பிறந்தால், ‘அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்’ என்று வேண்டுதல் செய்தாள். அவள் செய்த ஜெபத்தாலும், பிரதான ஆசாரியன் ஏலி சொன்ன ஆறுதல் வார்த்தைகளாலும், “அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.” அன்னாளுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு சாமுவேல் என்று பெயர் வைத்தாள். பிறகு யெகோவாவின் ஆலயத்தில் சேவைசெய்ய அவனை அங்குக் கொண்டுவிட்டாள். (1 சாமுவேல் 1:9-28) கடவுள் அவளிடத்தில் கருணைக் காட்டியதால், அவள் நன்றி பெருக்கால் ஜெபம் செய்தாள். அதில் யெகோவாவுக்கு நிகர் யாருமில்லை என்று புகழ்ந்தாள். (1 சாமுவேல் 2:1-10) அன்னாளைப்போல் நாமும் ஜெபத்திலிருந்து ஆறுதலடைய முடியும். கடவுளின் விருப்பத்திற்கு இசைவாக கேட்கப்படும் எல்லாவற்றையும் அவர் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நம் மனதில் உள்ளதை அவரிடத்தில் கொட்டிவிட்டால், அவர் நம் உள்ளத்தின் பாரத்தை நீக்கிவிடுவார் அல்லது அதை தங்கிக்கொள்ள பலம் தருவார். அப்போது நாமும் ‘துக்கமுகமின்றி இருக்கலாம்.’—சங்கீதம் 55:22.

16. யாக்கோபின் விஷயத்தில் பார்த்தப்பிரகாரம், பயம் அல்லது கவலை வரும்போது ஏன் ஜெபம் செய்யவேண்டும்?

16 பயமும், மனவேதனையும், கவலையும் நிறைந்த சூழலில் மாட்டித்தவிக்கும்போது, கடவுளை ஜெபத்தில் நாடினால் கண்டிப்பாக ஆறுதலை கண்டடைவோம். (சங்கீதம் 55:1-4) யாக்கோபின் அண்ணன் ஏசா. யாக்கோபின்மீது ஏசாவுக்கு பயங்கர பகை இருந்தது. அதனால் அண்ணனை சந்திக்க யாக்கோபு பயப்பட்டார். ஆனாலும் யாக்கோபு இவ்வாறு ஜெபம் செய்தார்: “என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.” (ஆதியாகமம் 32:9-12) யாக்கோபையும், அவனுடைய ஆட்களையும் ஏசா தாக்கவில்லை. அத்தருணத்தில் யெகோவா சொன்னபடியே யாக்கோபுக்கு ‘நன்மை செய்தார்.’

17. சங்கீதம் 119:52-ஐ மனதில் வைத்து, நாம் பயங்கரமாக சோதிக்கப்படும்போது ஜெபத்திலிருந்து எப்படி ஆறுதலடையலாம்?

17 நாம் வேண்டுதல்களை செய்கையில், கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நினைத்துப்பார்த்து ஆறுதல் கண்டடையலாம். எசேக்கியா ராஜாதான் இருப்பதிலேயே நீண்டதொரு சங்கீதத்தை, அதாவது இசையோடு சேர்த்து பாடலாக பாடப்படும் ஜெபத்தை பாடியிருக்க வேண்டும். அவர் பாடியதில் ஒரு வசனம்: “கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.” (சங்கீதம் 119:52) அதிகமாக சோதிக்கப்படும்போது பணிவோடு ஜெபம் செய்தால், நாம் எடுத்த நிலைநிற்கையில் உறுதியாய் இருக்க உதவும் பைபிள் கொள்கையோ சட்டமோ நம் நினைவுக்கு வரும். அதனால் நாம் நம் பரலோக தகப்பனின் உள்ளத்தை குளிர்விக்கிறோம் என்று ஆறுதலடையலாம்.

உத்தமர்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

18. “பக்தியுள்ளவனெவனும் உம்மை [கடவுளை] நோக்கி விண்ணப்பஞ்செய்வான்” என்று ஏன் சொல்லலாம்?

18 யெகோவாவிற்கு உத்தமத்தோடு இருக்கும் எல்லாரும், ‘இடைவிடாமல் ஜெபிப்பார்கள்.’ (ரோமர் 12:12, NW) 32-ம் சங்கீதத்தை, அநேகமாக தாவீது, பத்சேபாளுடன் பாவம் செய்தபிறகு இயற்றியிருக்க வேண்டும். அதில் கடவுளிடத்தில் மன்னிப்பு கேட்காதபோது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், அவரிடத்தில் பாவங்களையெல்லாம் சொல்லி அழுது, மனந்திருந்தியபோது ஏற்பட்ட ஆறுதலையும் விவரித்தார். அதன்பிறகு தாவீது இவ்வாறு பாடினார்: “இதற்காகச் [உண்மையில் மனந்திருந்துவோருக்கு யெகோவா மன்னிப்பு தருவதால்] சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் [உத்தமன்] உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்.”—சங்கீதம் 32:6.

19. ஏன் நாம் உத்தம கைகளை உயர்த்தி ஜெபிக்க வேண்டும்?

19 யெகோவா தேவனோடு நமக்கிருக்கும் உறவை நாம் மதிக்கிறோம் என்றால், இயேசு கிறிஸ்துவின் கிரய பலியின் அடிப்படையில் ஜெபத்தின் மூலம் இரக்கத்தைப் பெறலாம். அவரது இரக்கத்தையும், காலத்திற்கு ஏற்ற உதவியையும் பெற்றிட நாம் விசுவாசத்தோடே, கிருபை நிறைந்த சிங்காசனத்தை அணுகி, தாராளமாக பேசுவோமாக. (எபிரெயர் 4:16) அடேங்கப்பா! ஜெபம் செய்ய எத்தனை எத்தனை காரணங்கள்! ஆகவே நாம் ‘இடைவிடாமல் ஜெபம் செய்வோமாக.’ அவ்வாறு செய்யும்போது உள்ளத்திலிருந்து துதியையும் நன்றியையும் கடவுளுக்கு செலுத்துவோமாக. (1 தெசலோனிக்கேயர் 5:17) உத்தம கைகளை உயர்த்தி, இரவும் பகலும் ஜெபிப்போமாக.

நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

◻ மற்றவர்கள் சார்பில் செய்யப்படும் ஜெபத்தைப் பற்றி முன்கூட்டியே யோசிப்பதன் நன்மை யாது?

◻ நாம் எதற்காக மரியாதையோடும் மதிப்போடும் ஜெபம் செய்யவேண்டும்?

◻ ஜெபம் செய்யும்போது எத்தகைய மனநிலை இருக்கவேண்டும்?

◻ ஏன் நாம் ஜெபத்தில் நன்றியையும் துதியையும் மறக்காமல் சேர்க்க வேண்டும்?

◻ ஜெபத்திலிருந்து ஆறுதலடைய முடியும் என்பதை எப்படி பைபிள் சுட்டிக்காட்டுகிறது?

[பக்கம் 17-ன் படம்]

யெகோவாவின் ஆலயம் பிரதிஷ்டையின்போது சாலொமோன் ராஜா மற்றவர்களின் சார்பில் பணிவோடு ஜெபம் செய்தார்

[பக்கம் 18-ன் படம்]

அன்னாளைப்போல் நீங்களும்கூட ஜெபத்திலிருந்து ஆறுதலடையலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்