வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
செப்டம்பர் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்தர் 1-2
“எஸ்தரைப் போல அடக்கமாக இருக்க அதிக முயற்சி எடுங்கள்”
கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்!
11 யாராவது நம்மை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளும்போது, அடக்கமானவர்களாக இருப்பது நமக்குக் கஷ்டமாகிவிடலாம். எஸ்தருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவளுடைய வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அவள் தொடர்ந்து அடக்கமானவளாக இருந்தாள். பெர்சியாவில் இருந்த பெண்களிலேயே அவள்தான் ரொம்ப அழகு! ஒரு வருட காலத்துக்கு, மற்ற இளம் பெண்களோடு சேர்த்து இவளுடைய அழகும் மெருகூட்டப்பட்டது. ராஜா யாரிடம் ஈர்க்கப்படுவார் என்ற போட்டி இவர்களுக்குள் இருந்தது. பிறகு, எஸ்தரைத் தன்னுடைய மனைவியாக ராஜா தேர்ந்தெடுத்தார். இருந்தாலும் எஸ்தர் மாறிவிடவில்லை, சுயநலவாதியாகவும் ஆகிவிடவில்லை. தொடர்ந்து அடக்கத்தோடும், கனிவோடும், மரியாதையோடும் நடந்துகொண்டாள்.—எஸ்தர் 2:9, 12, 15, 17.
கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
15 அரசர்முன் எஸ்தர் செல்ல வேண்டிய சமயம் வந்தது; அவள் தனக்குத் தேவையான எதையும்... ஒருவேளை தன்னை இன்னும் அழகுபடுத்திக்கொள்ள தேவையான எதையும்... கேட்டு வாங்கிக்கொள்ள அனுமதி தரப்பட்டது. ஆனால் அவள் தன்னடக்கத்துடன் இருந்தாள், யேகாய் சொன்னதைத் தவிர வேறொன்றையும் கூடுதலாகக் கேட்கவில்லை. (எஸ்தர் 2:15) வெறும் அழகால் மட்டுமே அரசரின் இதயத்தைக் கொள்ளைகொள்ள முடியாது... அடக்கமும் மனத்தாழ்மையும்தான் அந்த அரசவையில் அரியதோர் அணிகலனாய் ஜொலிக்கும்... என்பதைப் புரிந்துகொண்டாள். அவளுடைய எண்ணம் சரியா?
கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்!
12 நாம் அடக்கமானவர்களாக இருந்தால், நம்மீதும் மற்றவர்கள்மீதும் நமக்கு மதிப்பு இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்தில் நாம் உடுத்துவோம், நடந்துகொள்வோம். பெருமையடிப்பதற்குப் பதிலாக அல்லது மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்குப் பதிலாக நாம் ‘அமைதியாகவும் சாந்தமாகவும்’ நடந்துகொள்வோம். (1 பேதுரு 3:3, 4-ஐ வாசியுங்கள்; எரே. 9:23, 24) நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நம்முடைய பேச்சும் செயலும் காட்டிவிடும். உதாரணத்துக்கு, நமக்கு விசேஷ பொறுப்புகள் இருக்கிறது என்பதையும், மற்றவர்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் நமக்குத் தெரியும் என்பதையும், அல்லது பொறுப்பிலுள்ள சகோதரர்களோடு நமக்கு நெருங்கிய நட்பு இருக்கிறது என்பதையும் நாம் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களுக்குக் காட்டிவிடலாம். அல்லது, மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தை நாமே செய்துவிட்டதாக மற்றவர்களை நினைக்க வைத்துவிடலாம். ஆனால், அதைச் செய்வதற்கு உண்மையிலேயே மற்றவர்களும் நமக்கு உதவி செய்திருப்பார்கள். இயேசுவைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தான் ஒரு ஞானி என்பதை அவர் மற்றவர்களுக்குக் காட்டியிருக்கலாம். ஆனால், கடவுளுடைய வார்த்தையிலிருந்துதான் அவர் மேற்கோள்காட்டி பேசினார். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. எல்லா புகழும் யெகோவாவுக்கே போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.—யோவா. 8:28.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்களுக்குத் தெரியுமா?
ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெர்சிய களிமண் பலகையைக் கண்டுபிடித்தார்கள். அதில் மார்டுக்கா என்ற ஒருவருடைய பெயர் இருக்கிறது (தமிழில், மொர்தெகாய்). அவர் சூசான் நகரத்தில் நிர்வாகியாக வேலை பார்த்தார். அநேகமாக, அவர் கணக்கராக இருந்திருக்கலாம். அந்தக் களிமண் பலகை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில், மொர்தெகாயின் பெயர் “பைபிளைத் தவிர இந்தப் பலகையில் மட்டும்தான் வந்திருக்கிறது” என்று கிழக்கு ஆசிய சரித்திர வல்லுநர் ஆர்த்தர் உங்குநாட் சொன்னார்.
உங்குநாட் கொடுத்த அறிக்கைக்குப் பிறகு, வல்லுநர்கள் இன்னும் ஆயிரக்கணக்கான பெர்சிய களிமண் பலகைகளை மொழிபெயர்த்தார்கள். அவற்றில் சில, பெர்ஸிபாலிஸ் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் பலகைகள். அவை நகரத்தின் மதில்களுக்குப் பக்கத்தில் இருந்த கஜானாவின் இடிபாடுகளுக்குள்ளே இருந்தன. முதலாம் சஷ்டா ராஜாவின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்தப் பலகைகளெல்லாம் ஏலாமியர்களுடைய மொழியில் இருந்தன. எஸ்தர் புத்தகத்தில் வரும் நிறையப் பெயர்கள் இந்தப் பலகைகளிலும் இருந்தன.
நிறைய பெர்ஸிபாலிஸ் பலகைகளில் மார்டுக்கா என்ற பெயர் இருக்கிறது. முதலாம் சஷ்டா ராஜாவின் ஆட்சிக் காலத்தில், சூசான் அரண்மனையில் ராஜாவின் செயலாளராக இவர் வேலை பார்த்ததாக அவை சொல்கின்றன. மார்டுக்கா மொழிபெயர்ப்பாளராக இருந்ததாக ஒரு பலகை சொல்கிறது. மொர்தெகாயைப் பற்றி பைபிள் சொல்கிற விஷயத்தோடு இவை ஒத்துப்போகின்றன. மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுடைய அரண்மனையில் அதிகாரியாக வேலை பார்த்ததாகவும், குறைந்தது இரண்டு மொழிகளை பேசியதாகவும் பைபிள் சொல்கிறது. மொர்தெகாய் சூசான் அரண்மனை வாசலில்தான் பொதுவாக உட்கார்ந்துக்கொண்டிருந்தார் என்றும் பைபிள் சொல்கிறது. (எஸ்தர் 2:19, 21; 3:3) அரண்மனை வாசல் என்பது ஒரு பெரிய கட்டிடம். அங்குதான் அரண்மனை அதிகாரிகள் எல்லாரும் வேலை பார்த்தார்கள்.
களிமண் பலகைகளில் சொல்லப்பட்டிருக்கிற மார்டுக்காக்கும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற மொர்தெகாய்க்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் வாழ்ந்தார்கள். அதேபோல், ஒரே இடத்தில் அவர்கள் அதிகாரிகளாக வேலை பார்த்தார்கள். இந்த எல்லா ஒற்றுமைகளையும் வைத்துப் பார்க்கும்போது, மார்டுக்காவும் மொர்தெகாயும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது புரிகிறது.
செப்டம்பர் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்தர் 3-5
“அதிகமாக சேவை செய்ய மற்றவர்களுக்கு உதவுங்கள்”
it-2-E பக். 431 பாரா 7
மொர்தெகாய்
ஆமானுக்கு முன் சாஷ்டாங்கமாக விழ மறுக்கிறார். அகாஸ்வேரு ராஜா ஆமானை பிரதம மந்திரியாக நியமித்தார். அரண்மனை வாசலில் இருந்த எல்லாரும் ஆமானுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழ வேண்டும் என்று ராஜா கட்டளை போட்டார். ஆனால், மொர்தெகாய் ஒரு யூதராக இருந்ததால் அப்படி செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். (எஸ்தர் 3:1-4) ஆமானுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுவதில் மரியாதை காட்டுவது மட்டுமில்லாமல் வேறு சில விஷயங்களும் உட்பட்டுள்ளது என்பதை மொர்தெகாய் புரிந்துவைத்திருந்தார். அந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் மத்தியில் இருந்த ஒரு பழக்கம் என்னவென்றால், ராஜாவாக ஒருவருக்கு இருந்த அதிகாரத்தை மதிப்பதற்காக சாஷ்டாங்கமாக விழுவார்கள். (2சா 14:4; 18:28; 1ரா 1:16) ஆமானுடைய விஷயத்தில் மொர்தெகாய் அப்படி செய்யாமல் இருப்பதற்கு ஒரு நல்ல காரணம் இருந்தது. ஆமான் ஒரு அமலேக்கியராக இருந்திருக்கலாம். யெகோவா அமலேக்கியர்களோடு “தலைமுறை தலைமுறையாக” போர் செய்வதாக சொல்லியிருந்தார். (யாத் 17:16) அதனால், ராஜாவுக்கு கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு உண்மையாக இருப்பதுதான் முக்கியம் என்று மொர்தெகாய் நினைத்தார்.
it-2-E பக். 431 பாரா 9
மொர்தெகாய்
இஸ்ரவேலர்களை காப்பாற்ற பயன்படுத்தப்படுகிறார். யூதர்கள் எல்லாரையும் கொலை செய்ய ராஜா கட்டளை போட்டிருப்பதை கேள்விப்பட்டதும், யூதர்களை காப்பாற்றுவதற்காகத்தான் சரியாக இந்த சமயத்தில் எஸ்தர் ராணியாக ஆகியிருக்கிறார் என்பதை மொர்தெகாய் புரிந்துகொண்டார். அதனால், எஸ்தருக்கு இருந்த பெரிய பொறுப்பை புரியவைத்தார்; ராஜாவிடம் போய் உதவி கேட்க சொன்னார். அப்படி செய்வதற்காக, எஸ்தர் தன்னுடைய உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தாலும் அவள் அதை செய்தாள்.—எஸ்தர் 4:7–5:2.
கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
22 அந்தச் செய்தியைக் கேட்டதும் எஸ்தர் மிகவும் துடிதுடித்துப் போயிருக்க வேண்டும். இது அவளுடைய விசுவாசத்திற்கு மாபெரும் பரீட்சை. அவள் தன் மனதிலுள்ள பயத்தை மொர்தெகாய்க்குச் சொல்லி அனுப்பினாள். அரசரின் ஆணையை அவருக்கு நினைப்பூட்டினாள்: அரசருடைய அழைப்பின்றி அவரிடம் சென்றால் மரண தண்டனைதான். அரசர் தனது பொற்செங்கோலை நீட்டினால் மட்டுமே குற்றவாளியின் உயிர் தப்பும். ஆனால், ராஜா தனக்குக் கருணை காட்டுவார் என்று அவள் எதிர்பார்க்க முடியுமா? அதுவும், ராஜா அழைத்தபோது வர மறுத்த வஸ்தியின் கதியைப் பற்றித் தெரிந்த பின்பும் எதிர்பார்க்க முடியுமா? கடந்த 30 நாட்களாக ராஜா தன்னை அழைக்கவில்லை என்பதையும் மொர்தெகாயிடம் சொன்னாள். இதனால், ராஜாவின் மனம் மாறிவிட்டதோ... அவருக்குத் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டதோ... என்றெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டாள்.—எஸ்தர் 4:9-11.
23 எஸ்தருடைய விசுவாசத்தைப் பலப்படுத்த அவளுக்கு மொர்தெகாய் உறுதியாய்ப் பதிலளித்தார். அவள் செயல்படத் தவறினால், யூதருக்கு உதவியும் மீட்பும் வேறொரு வழியில் நிச்சயம் வரும் என்றும், யூதருக்கு எதிரான தாக்குதல் தீவிரமடையும்போது அவளால் மட்டும் தப்பிக்க முடியாது என்றும் சொன்னார். இவ்வாறு, யெகோவா தமது மக்கள் பூண்டோடு அழிக்கப்படுவதற்கு... தமது வாக்குறுதிகள் நிறைவேறாமல் போவதற்கு... ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதில் மொர்தெகாய் உறுதியான விசுவாசத்தைக் காட்டினார். (யோசு. 23:14) பின்பு எஸ்தரிடம், “யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று சொன்னார். (எஸ்தர் 4:12-14, ERV) நாம் பின்பற்றுவதற்கு மொர்தெகாய் மிகச் சிறந்த முன்மாதிரி, அல்லவா? யெகோவா தேவன்மீது மொர்தெகாய் முழு நம்பிக்கை வைத்தார். நாமும் அப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறோமா?—நீதி. 3:5, 6.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வணக்கச் சுதந்திரத்துக்காகப் போராடுதல்
14 வணக்க விஷயத்தில் இன்றும் யெகோவாவின் மக்கள் எஸ்தர், மொர்தெகாயைப் போல செயல்படுகிறார்கள். யெகோவா எதிர்பார்க்கிறபடி அவரை வணங்குவதற்கான சுதந்திரத்தைப் பெற போராடுகிறார்கள். (எஸ்தர் 4:13-16) இந்த விஷயத்தில் நீங்கள் என்ன செய்யலாம்? வழக்குகளில் நியாயம் கிடைக்காததால் கஷ்டங்களை அனுபவிக்கிற சகோதர சகோதரிகளுக்காகத் தவறாமல் ஜெபம் செய்யலாம். கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவிக்கிற நம் சகோதர சகோதரிகள் சார்பாக நாம் செய்யும் ஜெபங்களுக்கு அதிக சக்தி இருக்கிறது. (யாக்கோபு 5:16-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கிறாரா? அவர் கண்டிப்பாகப் பதிலளிக்கிறார் என்பதற்கு வழக்குகளில் கிடைத்த வெற்றிகள் மிகப் பெரிய அத்தாட்சி!—எபி. 13:18, 19.
செப்டம்பர் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்தர் 6-8
“பேசும் கலை—கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!”
ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
15 எஸ்தர் பொறுமையாக இருப்பதால், அரசரிடம் தன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அடுத்த நாள்வரை காத்திருப்பதால், ஆமான் தனக்குத்தானே குழிதோண்ட சந்தர்ப்பம் கிடைக்கிறது. அரசர் உறங்காமல் இருப்பதற்கு யெகோவா காரணமாக இருந்திருக்கலாம், அல்லவா? (நீதி. 21:1) ‘காத்திருக்க’ வேண்டுமெனக் கடவுளுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துவதில் ஆச்சரியமே இல்லை. (மீகா 7:7-ஐ வாசியுங்கள்.) நாம் கடவுளுக்காகக் காத்திருக்கும்போது, நம் பிரச்சினைகளுக்கு அவர் தரும் தீர்வுகள் நாம் கண்டுபிடிக்கும் தீர்வுகளைவிட மிக மிக அருமையாக இருப்பதைக் காணலாம்.
தைரியமாய்ப் பேசுகிறாள்
16 அரசரின் பொறுமையை இதற்கு மேலும் சோதிக்க எஸ்தர் துணிவதில்லை; இரண்டாம் விருந்தில், எல்லாவற்றையும் அவரிடம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி? அரசரே அவளுக்கு வாய்ப்பு அளிக்கிறார், அவளுடைய வேண்டுகோள் என்ன என்று மீண்டும் கேட்கிறார். (எஸ்தர் 7:2) எஸ்தர் ‘பேச வேண்டிய காலம்’ வந்துவிட்டது.
ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
17 அரசரிடம் பேசுவதற்கு முன்னால் எஸ்தர் தன் கடவுளிடம் மௌனமாய் ஜெபம் செய்வதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதன்பின், ‘உம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசே! உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கு இணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!’ என்று சொல்கிறாள். (எஸ்தர் 7:3, பொ.மொ.) ராஜாவுக்கு நலமெனப் படுகிற எந்தத் தீர்மானத்திற்கும் தான் தலைவணங்குவதாகச் சொல்லி அவருக்கு அவள் உறுதியளிப்பதைக் கவனியுங்கள். வேண்டுமென்றே தன் கணவனை அவமானப்படுத்திய வஸ்திக்கும், அதாவது மன்னரின் முன்னாள் மனைவிக்கும், எஸ்தருக்கும் எவ்வளவு வேறுபாடு! (எஸ்தர் 1:10-12) அதோடு, ஆமான்மீது அரசர் நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று சொல்லி அவரை எஸ்தர் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, தன் உயிருக்கு வரும் ஆபத்திலிருந்து பாதுகாக்கச் சொல்லித்தான் மன்றாடுகிறாள்.
ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
18 அதைக் கேட்டு அரசர் பதறிப்போகிறார், திகைத்துப்போகிறார். அரசியைக் கொல்ல யாருக்குத் துணிச்சல் வரும்? மேலும் எஸ்தர் அவரிடம், “என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்; ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடுசெய்ய முடியாது” என்று சொல்கிறாள். (எஸ்தர் 7:4, பொ.மொ.) பிரச்சினையை எஸ்தர் அம்பலப்படுத்தியபோதிலும், தானும் தன் இனத்தாரும் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட அமைதியாய் இருந்திருப்பதாகச் சொல்கிறாள். ஆனால், இப்படிப்பட்ட இனப் படுகொலையால் அரசருக்கே பேரிழப்பு ஏற்படும்போது எப்படி அவளால் பேசாமல் இருக்க முடியும்!
19 பக்குவமாய்ப் பேசும் கலையைப் பற்றி எஸ்தருடைய முன்மாதிரி நமக்கு நிறையக் கற்பிக்கிறது. முக்கியமான ஒரு பிரச்சினையை அன்பானவரிடமோ அதிகாரத்தில் இருப்பவரிடமோ சுட்டிக்காட்டும்போது, பொறுமையாகவும் மரியாதையாகவும் எதார்த்தமாகவும் பேசுவது மிகவும் கைகொடுக்கும்.—நீதி. 16:21, 23, NW.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எஸ்தர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
7:4—யூதர்களை அழிப்பதால் ‘ராஜாவுக்கு நஷ்டம் உண்டாவது’ எப்படி? யூதர்களை அடிமைகளாக விற்பதற்கு வாய்ப்பிருந்தும், அப்படிச் செய்யாமல் அவர்களை அழித்துவிடுவது ராஜாவுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பதை எஸ்தர் சாதுரியமாக எடுத்துச் சொல்கிறாள். யூதர்களைக் கொலை செய்ய ஆமான் 10,000 வெள்ளி தாலந்துகளைக் கொடுப்பதாகச் சொன்னது உண்மைதான்; ஆனால் அவன் யூதர்களை அடிமைகளாக விற்க திட்டம் தீட்டியிருந்தால் இன்னும் எவ்வளவோ அதிகமான பணம் ராஜாவின் கஜானாவுக்கு வந்துசேர்ந்திருக்கும். இந்த நஷ்டம் ஒருபுறமிருக்க, அந்தச் சதித்திட்டத்தால் ராணியையும்கூட ராஜா இழக்க வேண்டியிருக்கும்.
செப்டம்பர் 25–அக்டோபர் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்தர் 9-10
“தனக்கு கிடைத்த அதிகாரத்தை சுயநலம் இல்லாமல் பயன்படுத்தினார்”
it-2-E பக். 432 பாரா 2
மொர்தெகாய்
ஆமானுக்கு பதிலாக மொர்தெகாய் பிரதமராக ஆனார். அரசு ஆவணங்களில் முத்திரை போடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ராஜாவின் முத்திரை மோதிரம் அவருடைய கைக்கு வந்தது. ராஜா கொடுத்த அதிகாரத்தை வைத்து, யூதர்கள் தங்களையே பாதுகாத்துக்கொள்வதற்கு ஒரு சட்டத்தை மொர்தெகாய் போட்டார். இதனால், யூதர்கள் நிம்மதி அடைந்தார்கள், ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். ஆதார் மாதம் 13-ம் தேதி அன்று யூதர்கள் கொலை செய்யப்படுவதற்காக போடப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட இருந்தது. அப்போது, யூதர்கள் திரும்ப தாக்குவதற்கு தயாரானார்கள். சூசானில் பயங்கரமான சண்டை நடந்தது, அது அடுத்த நாளும் நீடித்தது. பெர்சிய சாம்ராஜ்யம் முழுவதும் 75,000-க்கும் அதிகமான எதிரிகளை யூதர்கள் கொன்றார்கள். இதில் ஆமானுடைய பத்து மகன்களும் கொல்லப்பட்டார்கள். (எஸ்தர் 8:1–9:18) ஆதார் மாதத்தின் 14, 15-தேதிகளை ‘பூரீம் பண்டிகையின்’ நாட்களாக ஒவ்வொரு வருஷமும் அனுசரிக்க வேண்டும் என்று மொர்தெகாய் யூதர்களுக்கு கட்டளை கொடுத்தார். அந்த நாட்களை அவர்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும், ஒருவருக்கொருவர் உணவை பகிர்ந்துகொள்ள வேண்டும், ஏழைகளுக்கு பரிசுகளையும் கொடுக்க வேண்டும். மொர்தெகாய் அந்த சாம்ராஜ்யத்தின் இரண்டாவது இடத்தில் இருந்தார். யூதர்கள் அவரை ரொம்ப மதித்தார்கள், யூதர்களுடைய நலனுக்காக அவர் தொடர்ந்து உழைத்தார்.—எஸ்தர் 9:19-22, 27-32; 10:2, 3.
it-2-E பக். 716 பாரா 5
பூரீம்
நோக்கம். எதிரிகளின் கைகளிலிருந்து தன்னுடைய மக்களை யெகோவா காப்பாற்றியதை நினைத்து பார்ப்பதற்காக பூரீம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆனால், யூதர்கள் இன்றைக்கு இதை வேறு விதமாக கொண்டாடுகிறார்கள்.
வல்லமையை பயன்படுத்துவதில் “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்”
12 கிறிஸ்தவ சபையை தலைமைதாங்கி நடத்துவதற்கு யெகோவா கண்காணிகளை அளித்திருக்கிறார். (எபிரெயர் 13:17) இந்தக் கண்காணிகள் கடவுள் தந்திருக்கும் அதிகாரத்தை மந்தையின் நலனுக்காக, அதற்கு தேவையான உதவியளிக்க பயன்படுத்த வேண்டும். மூப்பர்களின் ஸ்தானம், உடன் விசுவாசிகள்மீது ஆதிக்கம் செலுத்த அவர்களுக்கு உரிமை அளிக்கிறதா? இல்லவே இல்லை! சபையில் தாங்கள் வகிக்கும் பங்கை மூப்பர்கள் சமநிலையோடும் பணிவோடும் கருத வேண்டும். (1 பேதுரு 5:2, 3) ‘கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்க்கும்படி’ பைபிள் கண்காணிகளுக்கு சொல்கிறது. “கடவுள் தன்னுடைய சொந்த மகனின் இரத்தத்தால் வாங்கிய சபை அது.” (அப்போஸ்தலர் 20:28) மந்தையிலுள்ள ஒவ்வொருவரையும் கனிவோடு நடத்த வேண்டியதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.
13 உதாரணத்திற்கு, உங்கள் நெருங்கிய நண்பர் தான் பொக்கிஷமாக கருதும் ஒன்றை உங்களிடம் ஒப்படைத்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அப்பொருளை உங்கள் நண்பர் மிகுந்த விலை கொடுத்து வாங்கியிருப்பது உங்களுக்கு தெரியும். அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள மாட்டீர்களா? அதேவிதமாக கடவுள் தாம் பொக்கிஷமாக கருதும் உடைமையாகிய சபையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மூப்பர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்; இச்சபையின் அங்கத்தினர்கள் செம்மறியாடுகளுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். (யோவான் 21:16, 17) யெகோவாவின் ஆடுகள் அவருக்கு பிரியமானவை; சொல்லப்போனால் அவை அவருக்கு அவ்வளவு பிரியமானவை என்பதால் தமது ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவின் மதிப்புமிக்க இரத்தத்தால் அவற்றை வாங்கியிருக்கிறார். யெகோவா தமது ஆடுகளுக்கு இதைக் காட்டிலும் உயர்ந்த விலையை செலுத்தியிருக்க முடியாது. மனத்தாழ்மையுள்ள மூப்பர்கள் இதை மனதில் வைத்து அதற்கேற்ப யெகோவாவின் ஆடுகளை நடத்துகிறார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எஸ்தர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
9:7, 9, 10, 15, 16—கொள்ளையிடுவதற்குச் சட்டம் அனுமதித்தபோதிலும், யூதர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? தங்களுடைய உயிரைப் பாதுகாக்க வேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கமாய் இருந்தது, செல்வத்தைச் சேர்க்க வேண்டுமென்பதல்ல.
அக்டோபர் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 1-3
“யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்”
நோவா, தானியேல், யோபு—இவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றுங்கள்
16 யோபுவுக்கு சில சவால்கள் இருந்தன. தன் வாழ்க்கையில் யோபு பெரிய மாற்றங்களைச் சந்தித்தார். ஆரம்பத்தில், “கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த எல்லாரையும்விட அவர் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார்.” (யோபு 1:3) அவர் மிகப் பெரிய பணக்காரராக, பிரபலமானவராக இருந்தார். ஜனங்களுக்கு அவர்மேல் மதிப்பு மரியாதை இருந்தது. (யோபு 29:7-16) இருந்தாலும், மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்றோ, தனக்குக் கடவுள் தேவையில்லை என்றோ யோபு நினைக்கவில்லை. இது நமக்கு எப்படித் தெரியும்? யெகோவா அவரை, “என் ஊழியன்” என்றார். அதோடு, “பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன். எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான்” என்றும் சொன்னார்.—யோபு 1:8.
17 திடீரென்று யோபுவின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. எல்லாமே அவருடைய கையைவிட்டுப் போனது; மனச்சோர்வு அவரை வாட்டியது, சாவதே மேல் என்று அவர் நினைத்தார். எல்லாவற்றுக்கும் சாத்தான்தான் காரணம் என்பது இன்று நமக்குத் தெரியும். சுயநலத்துக்காகத்தான் யோபு யெகோவாவுக்குச் சேவை செய்கிறார் என்று அவன் குற்றம்சாட்டினான். (யோபு 1:9, 10-ஐ வாசியுங்கள்.) இந்த மோசமான குற்றச்சாட்டை யெகோவா லேசாக எடுத்துக்கொள்ளவில்லை. சாத்தான் ஒரு பொய்யன் என்பதைக் காட்ட நடவடிக்கை எடுத்தார். அதாவது, யோபு தன் உத்தமத்தை நிரூபிக்கவும், அன்பால்தான் தன்னை வணங்குகிறார் என்பதை நிரூபிக்கவும், யெகோவா அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
10 யோபுவைப் பற்றிக் குறைசொன்னது போலவே நம்மைப் பற்றியும் சாத்தான் குறைசொல்கிறான். சாத்தான் எழுப்பியிருக்கும் இந்தச் சவாலில் நீங்கள் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு உண்மையிலேயே யெகோவாமீது அன்பு இல்லை என்றும், ஏதாவது பிரச்சினை வந்தால் உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அவருக்குச் சேவை செய்வதை நிறுத்திவிடுவீர்கள் என்றும் அவன் சொல்கிறான். இப்படி, நீங்கள் காட்டும் உத்தமம் பொய்யானது என்று சொல்கிறான். (யோபு 2:4, 5; வெளி. 12:10) இதைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது, இல்லையா? இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: யெகோவா உங்களை ரொம்பவே நம்புவதால், உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பைக் கொடுக்கிறார். உங்கள் உத்தமத்தைச் சோதிக்க சாத்தானை அனுமதிக்கிறார். உங்கள் உத்தமத்தை நீங்கள் விட்டுவிட மாட்டீர்கள் என்றும் சாத்தான் ஒரு பொய்யன் என்பதை நிரூபிக்க நீங்கள் உதவுவீர்கள் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார். இப்படிச் செய்ய உங்களுக்கு உதவுவதாகவும் வாக்குக் கொடுக்கிறார். (எபி. 13:6) இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசரே நம்மை நம்புகிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்! உத்தமத்தைக் காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா? நாம் உத்தமமாக இருக்கும்போது, சாத்தான் சொல்வதெல்லாம் சுத்தப் பொய்தான் என்பதை நிரூபிக்க முடிகிறது. அதோடு, நம் பரலோகத் தந்தையின் பெயருக்கு எந்தக் களங்கமும் வராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது என்றும் நிரூபிக்க முடிகிறது. அதனால், உத்தமம் என்ற முக்கியமான குணத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இயேசுவின் கடைசி வார்த்தைகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்
9 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? உயிர்விடுவதற்கு கொஞ்சம் முன்பு, “என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?” என்று இயேசு கேட்டார். (மத். 27:46) அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கு பைபிளில் எந்த விளக்கமும் இல்லை. ஒருவேளை, சங்கீதம் 22:1-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதோடு, அவர் இப்படிச் சொன்னதிலிருந்து, அவரைச் “சுற்றி வேலி போட்டு” யெகோவா பாதுகாக்கவில்லை என்பது தெரிகிறது. (யோபு 1:10) அதுவரைக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் வராத மிகப் பெரிய சோதனையை சந்திப்பதற்காக எதிரிகளுடைய கையில் யெகோவா தன்னை விட்டுவிட்டார் என்பதும் இயேசுவுக்குப் புரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, மரண தண்டனை கிடைக்கிற அளவுக்கு அவர் எந்தத் தப்பும் செய்யவில்லை என்பதையும் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.
அக்டோபர் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 4-5
“பொய் தகவல்கள்—ஜாக்கிரதை!”
it-1-E பக். 713 பாரா 11
எலிப்பாஸ்
2. யோபுவின் மூன்று நண்பர்களில் எலிப்பாஸும் ஒருவர். (யோபு 2:11) அவர் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர், யோபுவின் தூரத்து சொந்தக்காரர். இவரும் இவருடைய வம்சத்தை சேர்ந்தவர்களும் தங்களையே ஞானிகள் என்று பெருமையடித்துக்கொண்டார்கள். (எரே 49:7) “ஆறுதல்” சொல்வதற்காக வந்த மூன்று பேரில், எலிப்பாஸ் முக்கியமானவராக தெரிகிறார். ஒருவேளை அவர் வயதில் பெரியவராக இருந்திருக்கலாம். அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் மூன்று முறை பேசினார்கள். எல்லா சமயத்திலும் இவர்தான் முதலில் பேசுகிறார், நிறையவும் பேசுகிறார்.
தவறான சிந்தனையை அறவே தவிர்த்திடுங்கள்!
எலிப்பாஸ் தனக்கு நேரிட்ட ஓர் அசாதாரண அனுபவத்தைப் பற்றி இவ்வாறு விளக்கினார்: ‘அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது. அது ஒரு உருப் போல என் கண்களுக்கு முன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன்.’ (யோபு 4:15, 16) எப்படிப்பட்ட ஆவி எலிப்பாஸுடைய சிந்தனையின் மீது செல்வாக்கு செலுத்தியது? அந்த ஆவி கடவுளுடைய நல்ல தேவதூதனாக இருந்திருக்க முடியாது; ஏனென்றால், அடுத்துவரும் வசனங்கள் கண்டனத் தொனியை வெளிப்படுத்துகின்றன. (யோபு 4:17, 18) அப்படியானால் அது ஒரு கெட்ட ஆவியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் பொய்களைச் சொன்னதற்காக எலிப்பாஸையும் அவருடைய இரண்டு நண்பர்களையும் யெகோவா கடிந்துகொண்டார். (யோபு 42:7) ஆம், எலிப்பாஸ்மீது செல்வாக்கு செலுத்தியது பிசாசுதான். எலிப்பாஸுடைய பேச்சு தேவபக்தியற்ற சிந்தனையையே வெளிப்படுத்தியது
சாத்தானின் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்திடுங்கள்
மனிதர்கள் சாத்தானின் தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாதளவுக்குப் பலவீனமானவர்கள் என வாதிட எலிப்பாஸை சாத்தான் பயன்படுத்தினான்; யோபுவைச் சந்திக்கச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவன்தான் எலிப்பாஸ். மனிதர்கள், ‘களிமண் குடிசைகளில் குடியிருக்கிறவர்கள்’ என்றும், ‘புழுதியில் அஸ்திவாரம் போடப்பட்டவர்கள், அந்துப்பூச்சியைவிட விரைவாக நசுக்கப்படுவார்கள், காலையில் இருக்கும் அவர்கள் மாலையில் இல்லாமல் போய்விடுவார்கள்; பொருட்படுத்துவார் இல்லாமல் என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்’ என்றும் அவன் யோபுவிடம் சொன்னான்.—யோபு 4:19, 20, NW.
பலவீனமான ‘மண்பாத்திரங்கள்’ என்று பைபிள் வேறொரு இடத்தில் மனிதர்களாகிய நம்மைப் பற்றிக் குறிப்பிடுகிறது. (2 கொ. 4:7) வழிவழியாகப் பெற்றிருக்கிற பாவத்தினாலும் அபூரணத்தினாலும் நாம் பலவீனமானவர்களாக இருக்கிறோம். (ரோ. 5:12) அதனால், நம்மையே நாம் சார்ந்திருந்தால், சாத்தானின் தாக்குதலுக்கு எளிதில் பலியாகிவிடுவோம். என்றாலும், கிறிஸ்தவர்களாகிய நமக்கு யெகோவாவின் உதவி இருக்கிறது. நமக்குப் பலவீனங்கள் இருந்தாலும், அவருடைய கண்களில் நாம் அருமையானவர்களாக இருக்கிறோம். (ஏசா. 43:4) அவருடைய சக்தியைத் தரும்படி கேட்டால் அவர் அதைத் தருவார். (லூக். 11:13) அதனால், நாம் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெறுவோம், சாத்தானின் எந்தவொரு தாக்குதலையும் சமாளிப்போம். (2 கொ. 4:7; பிலி. 4:13) “விசுவாசத்தில் உறுதியாயிருந்து” அவனை எதிர்த்து நிற்கும்போது, கடவுள் நம்மை உறுதிப்படுத்துவார், பலப்படுத்துவார். (1 பே. 5:8-10) எனவே, பிசாசாகிய சாத்தானுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்
● ஒரு தகவல் எங்கிருந்து வருகிறது என்பதையும் அதில் என்ன இருக்கிறது என்பதையும் அலசிப்பாருங்கள்
பைபிள் இப்படி சொல்கிறது: “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லது எது என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:21.
ஒரு தகவலை நம்புவதற்கு முன்பு அல்லது மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, அது உண்மைதானா என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அது பிரபலமானதாக இருந்தாலும் சரி, செய்திகளில் திரும்ப திரும்ப சொல்லப்பட்டாலும் சரி! இதை எப்படி செய்யலாம்?
செய்தியை வெளியிட்ட நிறுவனம் நம்பகமானதா என்று யோசித்துப்பாருங்கள். நியூஸ் மீடியாவும் மற்ற அமைப்புகளும் அரசியல் ஆதாயத்துக்காகவும் வியாபார காரணங்களுக்காகவும் ஒரு தகவலை மாற்றிச் சொல்லலாம். அதனால், ஒரு செய்தி சேனலில் அல்லது பேப்பரில் நீங்கள் பார்ப்பதை மற்ற செய்தி சேனல்களிலும் பேப்பர்களிலும் ஒப்பிட்டு பாருங்கள். சிலசமயங்களில், நம் நண்பர்கள் தங்களுக்கே தெரியாமல் பொய்யான தகவல்களை மெசேஜிலோ ஈ-மெயிலிலோ சோஷியல் மீடியாவிலோ பரப்பலாம். அதனால், ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்பட்டால், அதை உண்மையிலேயே வெளியிட்டவர்கள் யார் என்று தெரியாமல் நம்பாதீர்கள்.
செய்தியில் இருக்கிற தகவல்கள் இன்றைய நிலவரப்படி இருக்கிறதா, துல்லியமாக இருக்கிறதா என்று பாருங்கள்; அதில் வரும் தேதிகளை கவனியுங்கள். எதையெல்லாம் சரிபார்க்க முடியுமோ அதையெல்லாம் உண்மைதானா என்று பாருங்கள். அதில் சொல்லியிருக்கிற விஷயங்களை நம்புவதற்கு உறுதியான ஆதாரங்களை கண்டுபிடியுங்கள். அதேபோல், சிக்கலான ஒரு விஷயத்தை ரொம்ப எளிமையாக சொல்லியிருந்தால் அல்லது உங்களை உணர்ச்சிவசப்படுத்துவது போல் ஒரு செய்தி இருந்தால் ஜாக்கிரதையாக இருங்கள்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உறுதியாக நிலைத்திருப்பீர், ஜீவனுக்கான ஓட்டத்தில் வெற்றி பெறுவீர்
உண்மை வணக்கத்தாரின் உலகளாவிய அமைப்பின் பாகமாக இருப்பது நம்மை உறுதிப்படுத்துவதற்கு வலிமைமிக்க தூண்டுகோலாக அமையலாம். அத்தகைய அன்பான உலகளாவிய சகோதரத்துவத்தோடு கூட்டுறவு வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! (1 பேதுரு 2:17, NW) நம்மால் சக கிறிஸ்தவர்களும் உறுதிப்படலாம்.
நீதிமானாகிய யோபுவின் நற்செயல்களை கவனியுங்கள். போலி தேற்றரவாளனான எலிப்பாஸும்கூட அவரைப் பற்றி இவ்வாறு சொல்ல வேண்டியதாயிற்று: “விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.” (யோபு 4:4) இந்த விஷயத்தில் நாம் பிறருக்கு எப்படி உதவுகிறோம்? கடவுளுடைய சேவையில் நிலைத்திருக்கும்படி நம் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சகோதர சகோதரிகளிடம் பழகும்போது, “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகளுக்கு இணங்க நாம் செயல்படலாம். (ஏசாயா 35:3) அப்படியானால், சக கிறிஸ்தவர்களுடன் கூடி வரும்போதெல்லாம் அவர்களில் ஓரிருவரைப் பலப்படுத்தி உற்சாகப்படுத்துவது ஏன் உங்களுடைய குறிக்கோளாக இருக்கக் கூடாது? (எபிரெயர் 10:24, 25) யெகோவாவை பிரியப்படுத்த அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கையில் உற்சாகமளிக்கும் வார்த்தைகளால் தட்டிக்கொடுத்து பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் ஜீவனுக்கான ஓட்டத்தில் வெற்றி பெறும் நம்பிக்கையோடு உறுதியாய் நிலைத்திருக்க உண்மையிலேயே அவர்களுக்கு உதவும்.
அக்டோபர் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 6-7
“வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...”
யோபு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
7:1, NW; 14:14, NW—‘கட்டாய உழைப்பு’ அல்லது ‘கட்டாய சேவை’ என்பதன் அர்த்தம் என்ன? யோபுவுக்கு மிகக் கொடிய துன்பங்கள் வந்ததால், தன் வாழ்க்கை கடுமையாகப் பாடுபட வேண்டிய கட்டாய உழைப்பைப்போல் இருப்பதாக நினைத்தார். (யோபு 10:17, NW அடிக்குறிப்பு) ஷியோலில் ஒருவர் செலவிடும் காலம்—இறப்புமுதல் உயிர்த்தெழுதல்வரை ஒருவர் செலவிடும் காலம்—அவர்மீது பலவந்தமாய் சுமத்தப்பட்ட ஒரு காலப்பகுதியாக இருப்பதால், அதை அவர் கட்டாய சேவைக்கு ஒப்பிட்டார்.
சோர்ந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்
‘நாம வாழ்றதே கொஞ்ச காலம்தான். அதுவும் இவ்வளவு போராட்டமா இருக்கே!’ என்று நினைத்து நாம் சிலசமயங்களில் சோர்ந்து போகலாம். (யோபு 14:1) அந்தக் காலத்தில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்கள் நிறைய பேர் இப்படி சோர்ந்துபோயிருக்கிறார்கள். சாவதே மேல் என்றுகூட சிலர் நினைத்திருக்கிறார்கள். (1 ரா. 19:2-4; யோபு 3:1-3, 11; 7:15, 16) ஆனால், அவர்கள் நம்பிய கடவுளான யெகோவா, அவர்களைக் கைவிடவில்லை. திரும்பத் திரும்ப அவர்களை ஆறுதல்படுத்தினார், பலப்படுத்தினார். நம்மை ஆறுதல்படுத்துவதற்காக இந்த விஷயங்களை எல்லாம் பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.—ரோ. 15:4.
“வாழ்க்கையே வெறுத்து போச்சு” என்று நினைக்கிறீர்களா?
உண்மைதான், உங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிப்பது உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் ஒன்று, பிரச்சினையில் அல்லாடுபவர் நீங்கள் மட்டுமல்ல. எல்லாருமே ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள். “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பைபிளும் சொல்கிறது. (ரோமர் 8:22) இப்போதைக்கு உங்களுடைய பிரச்சினை தீரவே தீராது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உங்களுடைய பிரச்சினைகள் தீரலாம். சரி, இப்போது உங்கள் மனச்சோர்வுக்கு எது மருந்தாக இருக்கும் என்று பார்க்கலாம்.
அனுபவமுள்ள, நம்பகமான நண்பரிடம் மனம்விட்டு பேசுங்கள். “உண்மையான நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; கஷ்ட காலத்தில் உடன்பிறந்தவன்போல் உதவுவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17, NW) பழங்காலத்தில் வாழ்ந்த யோபு என்ற ஒரு நல்ல மனிதனை கஷ்டங்கள் வாட்டியெடுத்தபோது அவர் மற்றவர்களிடம் மனம்விட்டு பேசினார். “என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கிறது. என் மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பேன்; மன வெறுப்பில் நான் பேசி விடுவேன்” என்றார். (யோபு 10:1, NW) நம் மனதிலுள்ளதை மற்றவர்களிடம் கொட்டும்போது மனபாரம் கொஞ்சம் குறையும். மனதில் தெளிவு பிறக்கும். பிரச்சினைகளைப் புதுக் கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடியும்.
மனதிலுள்ளதைக் கடவுளிடம் கொட்டிவிடுங்கள். கடவுளிடம் வேண்டுவதெல்லாம் வெறும் மன திருப்திக்குத்தான் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. யெகோவா தேவன் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று சங்கீதம் 65:2 சொல்கிறது (பைபிளில் கடவுளின் பெயர் யெகோவா). அதோடு, ‘அவர் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்’ என்று 1 பேதுரு 5:7 சொல்கிறது. கடவுளை முழுமையாக நம்பியிருக்கும்படி பைபிள் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இதோ சில உதாரணங்கள்:
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.
“[யெகோவா] தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.” —சங்கீதம் 145:19.
“கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே நாம் அவர்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.”—1 யோவான் 5:14.
“துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.”—நீதிமொழிகள் 15:29.
உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிட்டீர்கள் என்றால், அவர் உங்களுக்கு உதவுவார். அதனால்தான் பைபிள் இப்படிச் சொல்கிறது: “எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.”—சங்கீதம் 62:8.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சகோதர சகோதரிகளைப் புரிந்துகொள்ளுங்கள்
10 நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வதன் மூலம் யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம். அதற்கு என்ன செய்யலாம்? கூட்டத்துக்கு முன்பும் பின்பும் சகோதர சகோதரிகளோடு பேசுங்கள், அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்கள், முடிந்தால் உங்களோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களைக் கூப்பிடுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஒரு சகோதரி உங்களிடம் நட்பாகப் பழகுவதில்லை என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவரோடு பழகிய பிறகு, அவர் கூச்ச சுபாவம் உள்ளவர் என்பது உங்களுக்குப் புரியவரலாம். ஒரு சகோதரர், பொருளாசை பிடித்தவர் என்ற நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவரோடு பழகிய பிறகு, அவர் தாராள குணமுள்ளவர் என்பது உங்களுக்குப் புரியவரலாம். ஒரு சகோதரி, தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கூட்டங்களுக்கு எப்போதும் தாமதமாக வருவதாக நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவரோடு பழகிய பிறகு, தன் குடும்பத்தில் அவர் எதிர்ப்பலைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவரலாம். (யோபு 6:29) ‘மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்களாக’ நாம் இருக்கக் கூடாது என்பது உண்மைதான்! (1 தீ. 5:13) அதேசமயத்தில், நம்முடைய சகோதர சகோதரிகளைப் பற்றியும், என்ன காரணத்தால் அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது.
அக்டோபர் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 8-10
“சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்”
கடவுளுக்கு பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியுமா?
யோபு தன்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அதெல்லாம் அநியாயம் என்று நினைத்தார். கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோமா இல்லையா என்றெல்லாம் கடவுள் பார்ப்பதில்லை என்று தவறாக நினைத்தார். (யோபு 9:20-22) தான் எந்த தப்பும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பினார். அதனால் அவர் பேசியதை கேட்ட நண்பர்கள், அவர் கடவுளைவிட தன்னை அதிக நீதிமானாக காட்டிக்கொண்டார் என்று நினைத்தார்கள்.—யோபு 32:1, 2; 35:1, 2.
யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?
14 யெகோவாவின் மாறாத அன்பு அவரோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்கு எந்த ஆபத்தும் வராதபடி நம்மைப் பாதுகாக்கிறது. “நீங்கள் எனக்குப் புகலிடமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னை வேதனையிலிருந்து பாதுகாப்பீர்கள். எனக்கு விடுதலை தந்து, என்னைச் சுற்றிலும் சந்தோஷ ஆரவாரம் கேட்கும்படி செய்வீர்கள். . . . யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவனை அவருடைய மாறாத அன்பு சூழ்ந்துகொள்ளும்” என்று தாவீது யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (சங். 32:7, 10) பைபிள் காலங்களிலிருந்த நகரங்களைச் சுற்றிலும் மதில்கள் இருந்தன. அதனால், எதிரிகளிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லாமல் மக்களால் பாதுகாப்பாக இருக்க முடிந்தது. அதேபோல், யெகோவாவின் மாறாத அன்பு ஒரு மதில் மாதிரி நம்மைச் சூழ்ந்திருக்கும்போது அவரிடம் இருக்கிற பந்தத்துக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல, யெகோவாவிடம் மாறாத அன்பு என்ற குணம் இருப்பதால் அவர் பக்கமாக நம்மை இழுத்திருக்கிறார்.—எரே. 31:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘யெகோவாவுடைய சிந்தையை அறிந்தவன் யார்?’
19 யெகோவாவின் சிந்தையை’ பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்? பைபிளை ஆழ்ந்து படிப்பதன் மூலம், யெகோவாவின் சிந்தையைக் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளுதலைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய குறுகிய கண்ணோட்டதின்படியும், நெறிகளின்படியும், சிந்தையின்படியும் அவரை ஒருபோதும் நியாயந்தீர்க்கக் கூடாது. “நான் அவருக்குப் [கடவுளுக்குப்] பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே” என்று யோபு குறிப்பிட்டார். (யோபு 9:32) யெகோவாவின் சிந்தையை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளும்போது யோபுவைப் போல நாமும் உணர்ச்சிப்பொங்க இவ்வாறே சொல்வோம்: “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக் குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்”?—யோபு 26:14.
20 நாம் பைபிளில், யெகோவாவின் சிந்தை சம்பந்தமாகப் புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒரு பகுதியை வாசிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்தத் தகவலைக் குறித்து ஆராய்ச்சி செய்த பிறகும், சரியான பதில் கிடைக்காவிட்டால், யெகோவாமீதுள்ள நம் நம்பிக்கைக்கு வந்த ஒரு சோதனையாக அதை எடுத்துக்கொள்ளலாம். சில சமயங்களில், குறிப்பிட்ட சில பைபிள் பகுதிகளும்கூட யெகோவாவுடைய பண்புகளை எந்தளவு புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் அவருடைய செயல்களில் இப்பண்புகள் பளிச்சிடுவதை ஒத்துக்கொள்கிறோம் என்பதையும் காட்ட நமக்கு வாய்ப்பளிக்கின்றன என்பதை நினைவில் வையுங்கள். அவர் செய்கிற எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதைத் தாழ்மையோடு ஒத்துக்கொள்வோமாக. (பிர. 11:5) அதனால், அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள நாம் தூண்டப்படுவோம்: “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நியாயத்தீர்ப்புகள் ஆராய்ந்தறிய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை! ‘யெகோவாவின் சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு அறிவுரை வழங்குபவன் யார்?’ அல்லது, ‘அவரிடம் எதையாவது கொடுத்து வைத்திருந்து, அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டவன் யார்?’ அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவர் மூலமாகவே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன. அவருக்கே என்றென்றும் மகிமை உரியது. அப்படியே ஆகட்டும்.”—ரோ. 11:33-36.
அக்டோபர் 30–நவம்பர் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 11-12
“ஞானத்தை பெறவும் அதிலிருந்து நன்மையடையவும் மூன்று வழிகள்”
யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்த யோபு
17 உத்தமத்தைக் காத்திட யோபுவுக்கு எது உதவியது? யோபுவுக்குத் துயரங்கள் வருவதற்கு முன்பே யெகோவாவோடு அவர் நெருங்கிய பந்தத்தை வளர்த்திருந்தார். யெகோவாவிடம் சாத்தான் சவால்விட்டதைப் பற்றி யோபு அறிந்திருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; என்றபோதிலும் அவர் உண்மையோடிருக்கத் தீர்மானமாய் இருந்தார். “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று அவர் சொன்னார். (யோபு 27:5) யோபு எப்படி யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்திருந்தார்? அவர் தனது தூரத்து உறவினர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு கடவுள் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி தான் கேட்ட விஷயங்களைத் தன் மனதில் பதித்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, யெகோவாவின் படைப்புகளைக் கூர்ந்து கவனித்ததன் மூலம் அவருடைய அநேக குணங்களைத் தெரிந்துகொண்டார்.—யோபு 12:7-9, 13, 16-ஐ வாசியுங்கள்.
நீங்கள் தனியாக இல்லை, யெகோவா உங்களோடு இருக்கிறார்
10 சகோதர சகோதரிகளிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்யும்போது அவர்களிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒருவேளை, அவர்கள் உங்களைவிட பெரியவர்களாக இருக்கலாம், சிறியவர்களாக இருக்கலாம், கலாச்சாரமும் வேறாக இருக்கலாம். “வயதானவர்கள் ஞானம் உள்ளவர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 12:12) அதே சமயத்தில், வயதானவர்கள் இளைஞர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம். தாவீதையும் யோனத்தானையும் பற்றி யோசித்துப்பாருங்கள். தாவீது யோனத்தானைவிட ரொம்ப சின்னவர். இருந்தாலும், அவர்களிடையே ஒரு நெருக்கமான நட்பு இருந்தது. (1 சா. 18:1) அவர்களுக்கு எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். (1 சா. 23:16-18) “நம்ம சகோதர சகோதரிகள் உண்மையிலேயே நமக்கு அப்பா மாதிரி, அம்மா மாதிரி, கூடப்பிறந்தவங்க மாதிரி இருக்காங்க. அவங்கள பயன்படுத்தி யெகோவா நமக்கு உதவி செய்றாரு” என்று ஐரினா என்ற சகோதரி சொல்கிறார். அவருடைய குடும்பத்தில் அவர் மட்டும்தான் சத்தியத்தில் இருக்கிறார்.
11 ஒருவேளை, உங்களுக்குக் கூச்ச சுபாவம் இருந்தால், மற்றவர்களிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். ரத்னா என்ற சகோதரியும் கூச்ச சுபாவமுள்ள ஆள்தான். எதிர்ப்புகள் இருந்தாலும் அவர் சத்தியத்துக்கு வந்தார். “சகோதர சகோதரிகளோட அன்பும், ஆதரவும் எனக்கு தேவைங்கறத நான் புரிஞ்சுக்க வேண்டி இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். மனதில் இருப்பதை வெளிப்படையாக மற்றவர்களிடம் சொல்வது கஷ்டம்தான். ஆனால், அப்படிச் சொன்னால்தான் மற்றவர்களுக்கும் உங்களுக்கும் நெருக்கமான நட்பு உருவாகும். உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு எப்போதுமே உதவ வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், உங்களுக்கு என்ன மாதிரியான உதவி தேவை என்பது நீங்கள் சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும்.
12 நண்பர்களை உருவாக்குவதற்கு முக்கியமான ஒரு வழி, மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதுதான். “ஊழியத்தயும் யெகோவாவோட சேவையில இருக்கிற மத்த வேலைகளயும் சகோதரிகளோட சேந்து செய்ததால எனக்கு நிறைய நண்பர்கள் கிடச்சிருக்காங்க. இவங்கள எல்லாம் பயன்படுத்தி யெகோவா எனக்கு இவ்வளவு வருஷங்களா உதவியிருக்காரு” என்று நாம் ஏற்கெனவே பார்த்த கேரல் என்ற சகோதரி சொல்கிறார். நட்பை வளர்த்துக்கொள்ள நாம் எடுக்கிற முயற்சிகள் ஒருபோதும் வீண்போகாது. ஏனென்றால், தனிமையையும் மற்ற கஷ்டங்களையும் சமாளிப்பதற்கு இந்த நண்பர்களைப் பயன்படுத்தி யெகோவா நமக்கு உதவுகிறார்.—நீதி. 17:17.
it-2-E பக். 1190 பாரா 2
ஞானம்
கடவுளுடைய ஞானம். யெகோவாவின் ஞானத்துக்கு எல்லையே கிடையாது. எல்லாவற்றையும்விட அவருடைய ஞானம்தான் உயர்ந்தது என்று பைபிள் காட்டுகிறது. இப்படி, “கடவுள் ஒருவர்தான் ஞானமுள்ளவர்.” (ரோ 16:27; வெளி 7:12) உண்மைகளை தெரிந்து வைத்திருப்பதுதான் அறிவு. நம் படைப்பாளரான யெகோவா “நித்திய நித்தியமாக” வாழ்ந்துகொண்டிருக்கிறார். (சங் 90:1, 2) அதனால், இந்த பிரபஞ்சத்தை பற்றி எல்லாமே அவருக்கு தெரியும். இயற்கை சட்டங்களையும் சுழற்சிகளையும் அவர்தான் ஏற்படுத்தினார். அதை அடிப்படையாக வைத்துதான் மனிதர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள், நிறைய விஷயங்களை கண்டுபிடிக்கிறார்கள். யெகோவா இவ்வளவு விஷயங்களை செய்திருப்பதால், அவர் கொடுக்கிற ஒழுக்க நெறிகள் தெளிவாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் நல்லபடியாக வாழ்வதற்கும் ரொம்ப முக்கியம். (உபா 32:4-6) அவரால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்று எதுவுமே இல்லை. (ஏசா 40:13, 14) சிலசமயங்களில், அவருடைய நீதியான நெறிகளுக்கு எதிரான விஷயங்கள் நடப்பதற்கும், தற்காலிகமாக வெற்றி பெறுவதற்கும் அவர் அனுமதிக்கிறார். இருந்தாலும், எதிர்காலம் அவருடைய கையில்தான் இருக்கிறது. அவர் சொன்ன விஷயங்கள் ‘நிச்சயம் நிறைவேறும்.’—ஏசா 55:8-11; 46:9-11.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
பருவ வயதினருடன் பேசுவது எப்படி?
▪ ‘வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறேனா?’ “வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப் பார்க்கிறதல்லவா?” என்று யோபு 12:11 சொல்கிறது. உங்களுடைய மகன் அல்லது மகள் சொல்வதை எப்போதையும்விட இப்போது நீங்கள் ‘சோதித்துப் பார்ப்பது’ அவசியம். பருவ வயது பிள்ளைகள் பொதுவாக எல்லாவற்றையும் மிகைப்படுத்தியே சொல்வார்கள். உதாரணத்திற்கு, உங்கள் மகன் அல்லது மகள், “நீங்கள் எப்பவும் என்னை சின்னப் பிள்ளை மாதிரிதான் நடத்துறீங்க!” அல்லது “நான் சொல்றத ஒருநாளும் நீங்கள் காதுகொடுத்து கேட்கிறதில்ல!” என்று சொல்லலாம். “எப்பவும்,” “ஒருநாளும்” போன்ற வார்த்தைகளை அப்படியே பிடித்துக்கொள்ளாமல், உங்கள் பிள்ளை உண்மையில் என்னதான் சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “நீங்கள் எப்பவும் என்னை சின்னப் பிள்ளை மாதிரிதான் நடத்துகிறீர்கள்” என்று சொல்லும்போது “உங்களுக்கு என்மீது நம்பிக்கையே இல்லாததுபோல் தோன்றுகிறது” என்று அவர்கள் அர்த்தப்படுத்தலாம். “நான் சொல்வதை ஒருநாளும் நீங்கள் காதுகொடுத்து கேட்டதில்லை” என்று சொல்லும்போது “என் மனசுல இருப்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்” என்று அவர்கள் அர்த்தப்படுத்தலாம். எனவே, வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.