ஜாஷுவாவின் விசுவாசம்—பிள்ளைகளின் உரிமைகளுக்கான வெற்றி
கனடாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
“அப்பீல் கோர்ட் அளவில் முதிர்ச்சியடைந்த மைனர் நியதி முதன்முறையாகப் பரிசீலிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பானது, நியூ ப்ருன்ஸ்விக்கிலுள்ளவர்களுக்கு மாத்திரமில்லாமல், ஒருவேளை, கனடாவின் இதர இடங்களிலுமுள்ள டாக்டர்களுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் திட்டவட்டமான வழிகாட்டுக் குறிப்புகளை அளிப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.”—கனடா நாட்டு மருத்துவ கழக இதழ், ஆங்கிலம்.
மேற்குறிப்பிடப்பட்ட இதழ், நியூ ப்ருன்ஸ்விக் மருத்துவ ஒப்புதலின் மைனர்களுக்கான சட்டத்தை உட்படுத்தும் ஒரு வழக்கைக் குறித்துப் பேசுகிறது; அது என்ன சொல்கிறதென்றால், 16 வயதுக்குட்பட்ட மைனரை முதிர்ச்சியடைந்தவராக இரண்டு டாக்டர்கள் தெரிவித்து, அந்த நபர் தன்னுடைய நோயையும் அதற்காகத் திட்டமிடப்பட்ட சிகிச்சையையும் விளங்கிக்கொண்டால், எந்தவொரு வயதுவந்த நபரும் செய்வதுபோல, மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ அவனுக்குச் சட்டப்பூர்வ உரிமை இருக்கிறது. தீவிரமான எலும்புமச்சை வெள்ளணுப்புற்று நோயையுடைய 15 வயது ஜாஷுவா வாக்கர் தொடர்பாக, நியூ ப்ருன்ஸ்விக்கிலுள்ள அப்பீல் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிய டபிள்யு. எல். ஹாய்ட் இவ்வாறு எழுதினார்: “ஜாஷுவா போதியளவு முதிர்ச்சியடைந்தவனாகவும், இந்த மாதிரியான சூழ்நிலைமையில், திட்டமிடப்பட்ட சிகிச்சையானது அவனுடைய சுகநலனுக்கும் அவனுடைய தொடர்ந்த ஆரோக்கியத்திற்கும் செளக்கியத்துக்குமே ஆகும் என்பதற்காக இங்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அத்தாட்சி மேலிடுகிறது. . . . [முதிர்ச்சியடைந்த மைனரெனத் தெரிவிக்கும்] இந்த மனு அவசியமில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.” தலைமை நீதிபதியாகிய ஹாய்ட் தன்னுடைய தீர்ப்பில், கனடா நாட்டு இயற்றாச் சட்டம் “முதிர்ச்சியடைந்த மைனரின் நியதியை அங்கீகரிக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.
ஜாஷுவாவின் வழக்கறிஞரில் ஒருவராகிய டேனியல் போல் என்பவர் என்ன சொன்னாரென்றால், அப்பீல் கோர்ட்டினால் எழுத்துமூலமாக்கப்பட்ட தீர்ப்பு “கனடா நாட்டில் வழிகாட்டுத் தீர்ப்பாக இருக்கப்போகிறது.” இது அசாதாரண வழக்காக இருந்ததால், கோர்ட்டானது வழக்கமான மூன்று நீதிபதிகளைக் கொண்டில்லாமல், ஐந்து பேரோடு அமர்ந்தது. “திருப்புமுனை சூழ்நிலைகளில் கோர்ட் முழுவதும் நீதிபதி அவையோடு அமரும். கனடா நாட்டுக்கு இந்தத் தீர்ப்பை முக்கியமானதாக அவர்கள் கருதியிருக்கலாம்,” என்று போல் சொன்னார். முன்மாதிரிக் கட்டளையானது, முதிர்ச்சியடைந்த மைனர்கள் சுய தீர்மானங்களை எடுத்துச் செயல்படுவதற்கு வழியைத் திறப்பதாகவும் “அது மீண்டும் கோர்ட்டுக்கு வருவதற்கு எந்தக் காரணமுமில்லை” என்றும் அவர் ஆலோசனை கூறினார். “அது இதர இளம் பிள்ளைகளுக்கு அதிகத்தைச் சாதித்திருக்கிறது.” இந்தக் கோர்ட் வெற்றியின் பெரும் மதிப்பை மேலும் வலியுறுத்துபவராக, போல் தெரிவித்தார்: “தங்களுடைய சரீரங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்ற முடிவெடுக்கும் திறனுள்ள இளம் ஆண்களின், இளம் பெண்களின் மேலும் பிள்ளைகளின் உரிமைகளைப் பெரும்படியாக நிலைநாட்டுவதாக இது இருக்கிறது.”
ஆங்கில டெலிகிராஃப் இதழ், “ ‘வயதுவராத ஒரு நபரின்’ வெற்றி” என்ற தலையங்கத்தில் சொன்னது: “15 வயது ஜாஷுவா வாக்கருக்கு மருத்துவ சிகிச்சையை ஒப்புதல் தெரிவிக்க அல்லது மறுக்க உரிமை இருக்கிறது என்ற நியூ ப்ருன்ஸ்விக்கிலுள்ள அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பு, யெகோவாவின் சாட்சிகளுக்கு மாத்திரமில்லாமல் நம்மெல்லாருக்கும் ஒரு வெற்றியாகும். . . . சில சமயங்களில் ஒரு தனிநபர் எடுக்கும் தீர்மானங்கள் சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் கடினமானதாகத் தோன்றும்; விசேஷமாக ஓர் இளம் நபரின் உயிர் அச்சுறுத்தப்பட்டால் அவ்வாறிருக்கும். ஆனால், அதன் குடிமக்களின் சரீரத்தின்மீதான உரிமையையும் மனச்சாட்சிப்பூர்வமான உரிமையையும் தொடர்ந்து மீறக்கூடிய ஒரு சமுதாயம் இன்னும் கடினமாயிருக்கும். ஜாஷுவா வாக்கர் நம்மை அதிலிருந்து பாதுகாக்க தன் பங்கை வகித்திருக்கிறான்.”
ஒரு தைரியமுள்ள டாக்டர்
நோய்வாய்ப்பட்டதிலிருந்து, இரத்தயியலிலும் குழந்தை மருத்துவ புற்றுக்கட்டியியலிலும் நிபுணரான டாக்டர் மேரி ஃப்ரான்சஸ் ஸ்கல்லீ என்ற அம்மையார் நோயை நிர்ணயித்து, ஜாஷுவாவுக்குச் சிகிச்சையளித்து வந்தார். அவர்களுடைய அலுவலானது பிள்ளைகளுக்கு வரும் புற்றுநோயை நிர்ணயித்து, சிகிச்சையளிப்பதை உள்ளடக்கியது.
ஜாஷுவாவுக்கிருந்த வகையான வெள்ளணுப்புற்றுநோய்க்கு வழக்கமான சிகிச்சையானது கீமோதெரபியும் இரத்தமேற்றுதலுமே. ஜாஷுவாவின் குடும்பத்தினர் யெகோவாவின் சாட்சிகளாயிருந்ததால், வேதப்பூர்வ காரணங்களினிமித்தம் இரத்தமேற்றுதலை மறுத்தனர். கிறிஸ்தவர்களுக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள கட்டளையானது: “விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியி”ருங்கள். (அப்போஸ்தலர் 15:20, 29) ஆரம்பத்திலிருந்தே ஜாஷுவா, ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டும் என்கிற யெகோவாவின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியான நிலைநிற்கையை எடுத்தான்.
ஜாஷுவா இதைக் குறித்ததில் “மிகவும் விடாப்பிடியாக” இருந்தான் என்பதை டாக்டர் ஸ்கல்லீ அவனுடைய மருத்துவப் பதிவில் எழுதிவைத்தார். ஆஸ்பத்திரியின் வயதுவந்தோர் புற்றுக்கட்டியியல் துறையின் தலைவரான டாக்டர் டோலன், ஜாஷுவாவிடம் தனிப்பட்ட விதமாகப் பேசினார். அவரும் டாக்டர் ஸ்கல்லீயும் ஜாஷுவா ஒரு முதிர்ச்சிவாய்ந்த மைனர் என்ற முடிவுக்கு வந்தனர். வாக்கரின் குடும்ப மருத்துவரான டாக்டர் லார்டனும் ஜாஷுவாவை ஒரு முதிர்ச்சிவாய்ந்த மைனராகக் கருதினார். வெறும் இரண்டு பேர் சொல்வதோடு இல்லாமல் மூன்று டாக்டர்களும் ஜாஷுவா ஒரு முதிர்ச்சிவாய்ந்த மைனர் என்று தெரிவித்தது, அவன் தன்னுடைய சிகிச்சையைத் தெரிந்துகொள்வதற்கு மைனரின் மருத்துவ ஒப்புகை சட்டத்தின்பேரில் அதிகப்படியாகத் தகுதிவாய்ந்தவனாக இருந்தான். எந்த வழக்காடலும் இருந்திருக்க வேண்டியதில்லை.
வருத்தகரமாக, நிலைமை அப்போதிருந்த விதமாகவே நீடிக்கவில்லை. ஜாஷுவாவை முதிர்ச்சிவாய்ந்த மைனராக ஏற்கெனவே கருதிய அந்த ஆஸ்பத்திரி தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக ஒரு நீதிமன்றத் தீர்ப்பினால் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினது. ஒரு நீண்டநேர, கடுமையான கோர்ட் புலனாய்வு, ஜாஷுவா சிகிச்சையை மறுப்பதற்கு உரிமையில்லை என்று நீதிபதி தீர்ப்பளிப்பதில் விளைவடைந்தது. உடனடியாக, இந்தத் தீர்ப்பு இதற்கும் மேலான நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்யப்பட்டதால், எங்களுடைய ஆரம்ப பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகளைக் கண்டது.
ஜாஷுவாவின் கடும் சோதனைமிக்க காலப்பகுதியினூடே, அவன் மனம்மாறி சம்மதமளித்தால் தவிர, டாக்டர் ஸ்கல்லீ எந்தச் சூழ்நிலைமைகளிலும் ஜாஷுவாவுக்கு இரத்தம் செலுத்தாமலிருப்பதில் உறுதிபூண்டவராக இருந்தார். இவ்வாறு அவர் சொல்வதாக, அவருடைய நிலைநிற்கையைப் பற்றி, கனடா நாட்டு மருத்துவ கழக இதழ் மேற்கோள் காட்டியது: “என்னுடைய பெரிய கவலை என்னவென்றால் ஜாஷுவாவோ அவனுடைய குடும்பத்தினரோ எந்த மாற்றுவகை சிகிச்சைகளும் இல்லாமல் விட்டு வெளியேறிவிடுவார்களோ என்பதே.” அந்தக் கட்டுரை பின்னும் சொல்கிறது: “நாங்கள் [ஜாஷுவாவுக்கு] சிகிச்சை அளிக்காமலே இருந்துவிட்டிருப்போம் என்று பிற மருத்துவர்கள் அவரிடம் பின்னர் சொன்னார்கள். என்றபோதிலும், அந்த எண்ணம் அவருடைய மனதில் வரவே இல்லை.” அவருடைய நியாயமான, கண்ணியமான நிலைநிற்கை ஜாஷுவாவுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் மிகுந்த உற்சாகமளித்தது.
ஜாஷுவா உயிரை விரும்பியவனாக இருதயங்களைத் தொட்டான்
ஜாஷுவா வாக்கர் உயிரை விரும்பினான்; அவனுக்கு சாகவே விருப்பமில்லை. அவனுடைய குடும்பம் அவன் சாகவேண்டும் என்று விரும்பவில்லை. அநேக தேசங்களிலுள்ள அவனுடைய ஆவிக்குரிய சகோதரர்களாகிய யெகோவாவின் சாட்சிகள் அவன் மீண்டும் குணமடைந்து வாழ்வான் என்று நம்பினர். ஜாஷுவா தன்னுடைய நிலைமையை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவனாக இருந்தான்; கடவுள்பேரில் அவன் கொண்டிருந்த விசுவாசம் தான் உயிர்த்தெழுதலில் திரும்ப வருவான் என்ற திடநம்பிக்கையை அளித்தது. இயேசுவின் வார்த்தைகள் அவனுக்கு உதவியாயிருந்தன: “ஞாபகார்ந்த கல்லறைகளிலுள்ள அனைவரும் [தேவகுமாரனுடைய] குரலைக் கேட்டு வெளிவரும் சமயம் வருகிறது.”—யோவான் 5:25, 28, 29, NW.
பல்வேறு இடங்களிலிருந்தும் அவனுக்கு ஆதரவு வந்தது. ஈவ்னிங் டைம்ஸ் குளோப் சொன்னது: “ஜாஷுவாவை கைவிட்டுவிடவில்லை என்று பெற்றோர் இருவரும் வலியுறுத்தினர். இரத்தமில்லாமல், முடிந்தளவு மிகச் சிறந்த சிகிச்சை பெறவேண்டி அவனை ரீஜ்னல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தனர். ‘அவன் சாகவேண்டும் என்று விரும்பியிருந்தால் நாங்கள் வீட்டிலேயே அவனை வைத்திருப்போம். ஜாஷ் சாக நாங்கள் விரும்பவில்லை. அவன் உயிரோடே வாழ்வதற்கு மருத்துவரீதியில் எல்லா காரியங்களையும் செய்கிறோம். பிரியப்பட்ட எவருக்குமே ஒருவர் அவ்வாறே செய்வார். அவன் சாகவேண்டியதைக் காண்பதற்காக நாங்கள் இங்கு இல்லை. அந்தப் பயல் குணமாவதற்கே இங்கிருக்கிறோம்; குணமானதும், நடமாடவும், தன்னுடைய பொம்மை டிரெய்ன்களோடு விளையாடத் தொடங்கவும் ராஜ்ய மன்றத்திற்கும் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் திரும்பச் செல்லத் தொடங்கவும் ஒருவேளை கொஞ்சம் கூடைப்பந்து விளையாடவும் திரும்பலாம்’ என்று அவனுடைய தந்தை வாதாடினார்.”
அவனுடைய குடும்பத்தினர் உண்மையிலேயே அவனுக்குத் தேவையானதைச் செய்ய அங்கிருந்தனர். இதை ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டது: “ஜாஷுவாவோடு ஒருவர் மாறி ஒருவர் இருந்தபோது, குடும்ப அங்கத்தினர்களில் மற்றவர்கள், ஒரு சிறிய, அமைதியான அறையில் ஒதுங்கியிருந்தனர்; அவர்களில் சிலர் இன்னும் மேலாடைகளையும் தங்கள் கழுத்திலிருந்து தொங்கும் தளர்ந்த முகத்திரைகளையும் அணிந்திருந்தனர். மார்ச் 31 முதல், அதாவது ஜாஷுவா [அந்த] ஆஸ்பத்திரிக்கு வந்த முதல் நாளிலிருந்து அதே காட்சிதான் இருந்துவந்திருக்கிறது. மூன்று வாரங்களில், கொஞ்ச நேரங்கூட தன்னுடைய ஆஸ்பத்திரி அறையில் குடும்ப அங்கத்தினர் மேலாடையோ முகத்திரையோ இல்லாமல் ஜாஷுவாவோடு இருந்ததே கிடையாது. . . . பெரும்பாலும், ஜாஷுவாவோடு பெற்றோர் இருவரும் இரவில் தங்கியிருந்து, தங்களுடைய கடைசி மகனுக்குப் பக்கத்திலிருந்த படுக்கையில் உறங்கினர். [தாய் சொன்னார்,] ‘நாங்கள் இங்கு இருக்கவேண்டும், ஜாஷுக்கு, என்னுடைய பிள்ளைகளில் யாருக்காகிலும் நான் எதையுமே செய்வேன்.’ ‘வெளியே வாகனம் நிறுத்துமிடத்தில் உட்காரவேண்டியிருந்தாலும் நான் உட்கார்ந்திருப்பேன்,’ என்று தந்தை சொன்னார்.”
நம்பிக்கைக்குரிய விஷயங்களும் சம்பாஷணைகளும்
தாயோ தந்தையோ சாயங்காலங்களில் அவனோடு இருந்தபோது நெருக்கமான சம்பாஷணைகள் நடந்திருக்கின்றன. ஒரு இரவு அவன் சொன்னான்: “அம்மா, நான் சொல்வதைக் கொஞ்சம் எழுதுங்கள். இளைஞரே, நீங்கள் எல்லாரும் தயவுசெய்து யெகோவாவிடம் நெருங்கிவாருங்கள், ஏனென்றால், உங்களுக்கு ஏதாவது நேரிட்டதானால், நீங்கள் அவரிடம் உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வீர்கள். நான் சுகமானேனென்றால், யெகோவாவின் பெயரைப் பிரஸ்தாபிப்பதில் அதிகத்தைச் செய்வேன் என்று உறுதியாய்ச் சொல்கிறேன். ஆரோக்கியமுள்ள இளைஞரே, உங்களால் முடிந்தால் அதிகத்தைச் செய்யுங்கள்.”
ஜாஷ் ஆஸ்பத்திரியிலிருக்கையில், ஒரு நாள் இரவு இவ்வாறு சொன்னான்: “அம்மா, நீங்கள் குளியலறைக்குப் போகையிலோ அப்பாவை அழைத்துவர போகையிலோ டாக்டர்கள் என்னிடம் வந்து, ‘ஜாஷ், உனக்கு இரத்தம் ஏற்றவேண்டும். ஏற்றாவிட்டால், நீ சாவாய். நாங்கள் உனக்கு உதவ விரும்புகிறோம்,’ என்று அநேக தடவைகள் சொல்வார்கள். அதற்கு நான், ‘அப்படியென்றால் இரத்தம் சம்பந்தப்பட்டதில் என்னுடைய விருப்பங்களுக்கு மதிப்புக் காட்டுங்கள்,’ என்று அவர்களிடம் சொல்வேன். இரத்தம் எடுத்துக்கொள்ள இசைவிக்க நினைத்த ஒரு டாக்டரிடம் நான் சொன்னேன்: ‘நான் ஒரு பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் சிந்திக்கும் திறன்கள் எல்லாமே எனக்கு இருக்கின்றன. நான் இரத்தத்தின்பேரில் உள்ள யெகோவாவின் சட்டத்தின்படி வாழவே விருப்பப்படுகிறேன். நமக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிந்திருக்கிறார். உயிரின் புனிதத்தன்மையை மதிப்பதே நான் செய்கிற நல்ல காரியம்; சாக நேர்ந்தாலும் திரும்பவும் உயிர் வாழ்வேன்.’ ”
ஒரு டாக்டர், குழந்தை மருத்துவத் துறையின் தலைவராகிய டாக்டர் கேரி ஜாஷின் பெற்றோரிடம் சொன்னார்: “ஜாஷைக் குறித்து பெருமைப்படுங்கள். என்னுடைய வாழ்க்கையிலேயே முன்னொருபோதும் பார்த்திராத விசுவாசத்தை அவனிடத்தில் காண்கிறேன்.” இருவரையும் கட்டித்தழுவி, அவர் சொன்னார்: “உங்கள் குடும்பம் ஒரு தைரியமுள்ள குடும்பம்.”
ஒருநாள் சாயங்காலம், ஜாஷின் உடல் நிலையைக் குறித்து குடும்பத்துக்கு ஏதோவொரு துர்ச்செய்தி எட்டியபோது, ஆஸ்பத்திரியில் ஜெஃப் அண்ணனும் ஜேனிஸ் அக்காவும் அவனோடு இருந்தனர். ஜெஃப் அழுதுகொண்டிருந்தான், அப்போது ஜாஷ் அவரிடம்: “ஜெஃப்ரீ, அழுவதை நிறுத்து. இரண்டு விதத்திலும் எனக்கு வெற்றிதான். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.” அவன் அர்த்தப்படுத்தினது என்னவென்றால், சுகவீனத்திலிருந்து குணமடைந்தாலும், அவன் வெற்றிபெற்றவனாக இருந்தான்; குணமடையாமல் செத்து, பரதீஸிய பூமியில் உயிர்த்தெழுப்பப்பட்டாலும் அவன் வெற்றிபெற்றவனாகவே இருந்தான்!
எலும்புமச்சை மாற்றுப்பொருத்தம் செய்யப்படவேண்டும் என்ற பேச்சு நடந்தபோது, ஜெரி அண்ணன்தான் முதல் ஆளாக தன்னுடைய எலும்புமச்சையைக் கொடுப்பதற்கு முன்வந்தான். ஒரே சமயத்தில், அவன் அண்ணன்மார், ஜானும் ஜோவும் குட்நைட் என்று ஜாஷிடம் சொல்லி, அவனை முத்தமிட்டுச் செல்வார்கள். அவனுக்கு 13 வயது ஆனதும், அவர்கள் அப்படி செய்யவேண்டிய வயதில் தான் இல்லை என்பதை அவன் அம்மா மூலமாகத் தெரிவித்தான். ஆனால், அவன் நோய்வாய்ப்பட்டிருக்கையில், 15 வயதாயிருந்தபோதிலுங்கூட, அவர்கள் திரும்பவும் அவ்வாறு சொல்லி அவனைக் கட்டித்தழுவி, அவனோடு சேர்ந்து ஜெபிக்கையில், இப்போது பரவாயில்லை என்று ஜாஷ் தன் அம்மாவிடம் சொன்னான்; அவர்கள் அவனை நேசித்தனர் என்பதை அது காட்டியது.
சமுதாய உதவி
ஜாஷின் பெற்றோராகிய ஜெரியும் சான்ட்ராவும் என்ன சொல்கின்றனரென்றால் சமுதாய உதவி அதிகப்படியாகவும் விரிவானதாகவும் இருந்தது. மே 1994-ல், ஒரு செய்தித்தாள் சொன்னது: “ஜாஷுவா ஒரு நாளைக்குச் சராசரியாக 20 கார்டுகளைப் பெறுகிறான். ருமேனியா, மெக்ஸிகோ போன்ற தொலைவிடங்களிலிருந்தும் அவை வருகின்றன. ஆல்பெர்ட்டா, வாஷிங்டன் போன்ற தொலைவிடங்களிலிருந்தும் ஆஸ்பத்திரியில் அவனுக்கு ஃபோன்களும் ஃபாக்ஸுகளும் வந்திருக்கின்றன. இது எல்லாம் போக, சுமார் அரை டஜன் பழக்கூடைகளும் டஜன்கணக்கான மலர்களும் அனுப்பிவைக்கப்பட்டன. . . . அவனுடைய உடல்நிலை . . . முன்னேறியபோது, அவனைக் கெளரவப்படுத்துகிற வகையில், நர்ஸ்கள் கொண்டாடத்தக்க ஹவாய் நாட்டு விருந்தை ஏற்பாடு செய்தனர். குப்பை பைகளைக் கொண்டு புல் பாவாடைகளை உண்டாக்கி, அவன் அறையில் ஹுலா நடனத்தை ஆடிக் காண்பித்தனர். ‘அவன் விழுந்துவிழுந்து சிரித்ததால், அழத் தொடங்கிவிடுவானோ என்று நான் நினைத்தேன்,’ என சான்ட்ரா சொன்னார்.”
ஜாஷின் தந்தையாகிய ஜெரி சில துணுக்குகளைச் சேர்த்தார்: “ஆஸ்பத்திரி அறைக்குள் பள்ளியிலிருந்து வந்து விஜயம்செய்த எல்லா பிள்ளைகளையும் எங்களால் அனுமதிக்க முடியவில்லை. ஆகையால் தலைமையாசிரியர் வந்து ஜாஷைப் பற்றிய அறிக்கைகளைப் பெற்றுச் சென்றார். மாணவர்கள் ஜாஷுக்கு ரெயில்பாதை காட்சிப் பற்றிய 1,000 விடுகதைகள் அடங்கிய ஒன்றை அனுப்பிவைத்தனர்—ஜாஷ் டிரெய்ன் பைத்தியமாயிருந்தான். சில செலவுகளைக் கவனித்துக்கொள்ளவேண்டி, போலீஸ் நடன நிகழ்ச்சி நடத்தி அவனுக்கு உதவிநிதியளிக்க ஆசைப்பட்டனர், நாங்களோ அதற்குச் சம்மதிக்கவில்லை. மக்கள் உரிமைகளைப் பற்றி, பள்ளியில் நடத்தப்பட்ட சமுதாயப் படிப்பு வகுப்பு சர்ச்சை செய்தது, அந்த வகுப்பிலிருந்த ஒவ்வொருவரும் ஜாஷின் உணர்ச்சிகளைப் பற்றி விளக்கி, ஓர் உரையாற்றப் போவதாக அவனுக்கு எழுதினர்.”
இந்தக் காலப்பகுதியில், செய்தித்தாளில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வெளிவந்தன; பல நாளிதழ்களின் முன் பக்கங்களில் படங்களோடு கூடிய அறிக்கைகள் வெளிவந்தன. பள்ளி தலைமையாசிரியர்கள் ஜாஷுவாவின் உடல்நிலையைப் பற்றி செய்தி அறிக்கைகளை விடுத்தனர். குணமடைந்த பிறகு, பேச்சுக் கொடுப்பதற்கான அழைப்புகளை அவன் பெற்றான், அவனுடைய நோயை விவரமாக விளக்கிக்காட்ட பள்ளிகளில் தனிநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
“இந்த நோய் தாக்கி, அவனுடைய வாழ்க்கையை அச்சுறுத்தியது முதல் நீங்கள் ஜாஷுவாவிடம் அதிகப்படியான மாற்றத்தைக் கவனித்தீர்களா?” என்று விழித்தெழு! விசாரித்தது. ஜாஷின் தந்தை ஜெரி சொன்னார்: “பெரும் மாற்றம் இருந்தது, அதுவும் கிட்டத்தட்ட ஒரே இரவில். ஜாஷ் முன்பு, எதையும் அலட்சியமாகக் கருதுகிற, கவலையேயில்லாத சிறிய பையனாக இருந்தான், சில வேளைகளில் 15 வயது இளைஞனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஆலோசனை தேவைப்பட்டது. நான் உட்கார்ந்துகொண்டு அவனை ஆச்சரியத்தோடு பார்த்ததுண்டு. கிட்டத்தட்ட ஒரே இரவில் வளர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. ஒரு நாள் சாயங்காலம் அவனுடைய வழக்கறிஞர் அவனோடு பேச விரும்பினார், ஜாஷுவா என்னை வெளியிலிருக்கும்படி சொன்னான். ஒரு நாள் வகுப்புக் கோமாளியாக இருந்தான்; திடீரென்று பார்த்தால் முதிர்ச்சியடைந்த ஆளாக, வழக்கறிஞர்களிடமும் நீதிபதிகளிடமும் பேசிக்கொண்டிருந்தான். ஓர் இக்கட்டான சூழ்நிலையானது, ஒருக்காலும் எதிர்பாராத காரியங்களை இருதயத்தின் ஆழங்களிலிருந்து மேலெழும்பச் செய்யப்படக்கூடும்.”
டாக்டர் ஸ்கல்லீ ஜாஷுவாவை அருமையாகப் புகழ்ந்து பேசினார். அவர் அவனுடைய தாயிடம் சொன்னார்: “நான் சிகிச்சையளித்த எல்லா நோயாளிகளிலும் அவனே மிகவும் சிநேகப்பான்மையானவனும் மிகவும் கரிசனையானவனும் மிகவும் மரியாதையானவனும் நான் எதிர்ப்பட்ட ஆட்களிலேயே மிகவும் இரக்கமானவனுமாக இருக்கிறான். மிகுந்த தைரியமுள்ளவனும் நாங்கள் மறக்கவே இயலாத இளம் மனிதனுமாவான். மிகுந்த அன்புள்ளவன். திருமதி வாக்கர் அவர்களே நீங்கள் அவனைக் குறித்து மிகவும் பெருமைப்படலாம்.”
ஒருசில வாரங்களில், வெள்ளணுப்புற்று நோயின் நிலை மாறியது. கொஞ்ச காலத்திற்கு தணிந்திருந்த புற்றுநோய் திரும்ப வந்தது. டாக்டர் ஸ்கல்லீ குடும்பத்தினருக்கு என்ன சொன்னாரென்றால் ஜாஷ் அதிக காலம் வாழமாட்டான்; ஒருசில வாரங்களோ ஒருசில மாதங்களோதான் வாழக்கூடும். அடுத்த நாள் சாயங்காலம், ஜாஷுவாவின் பெற்றோர் அவனோடு இருக்கும்போது, டாக்டர் ஸ்கல்லீ ஜாஷுவாவிடம் புற்றுநோய் திரும்ப வந்துவிட்டதாகவும் இப்போதைக்குள்ளாக அது வயிற்றிலும் வந்துவிட்டிருக்கும் என்றும் சொன்னார். ஜாஷுவா சொன்னான்: “இல்லவே இல்லை, அது ஒன்றும் திரும்ப வரவில்லை, வந்துவிட்டது என்று நீங்கள் நிச்சயமாயிருக்கிறீர்களா?” டாக்டர் ஸ்கல்லீ சொன்னார்: “ஜாஷ், உன்னுடைய இரத்தப் பரிசோதனை அவ்வளவொன்றும் சாதகமாயில்லை.” சிறிது நேரத்தில், ஜெரியும் பின்பு டாக்டர் ஸ்கல்லீயும் அறையைவிட்டுக் கிளம்பினார்கள்.
வேதனைப்படும் இருதயங்களிரண்டும் அமைதியைக் கண்டடைவது
ஜாஷின் தாயார் அந்தக் காட்சியை விவரிக்கிறார்: “அமைதி நிலவியிருந்தது. அவனுடைய படுக்கையையொட்டி நாற்காலியை இழுத்துப்போட்டு, கையை நான் பிடித்துக்கொண்டேன். டாக்டர் சொன்னதைப் பற்றி கவலைப்படுகிறானா மனச்சோர்வுள்ளவனாக இருக்கிறானா என்று கேட்டேன். அதற்கு அவன், ‘நான் இவ்வளவு சீக்கிரத்தில் இறந்து போய்விடுவேன் என்று நினைக்கவேயில்லை. அம்மா, நீங்களோ கலலைப்படாதிருங்கள். சாவதற்குப் பயப்படவுமில்லை, சாவைப் பற்றிய பயமும் இல்லை. சாகும்போது நீங்கள் என்னோடுகூட இருப்பீர்களா? நான் ஒண்டியாகச் சாக விரும்பவில்லை.’ நான் அவனை மார்போடு அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினேன். அவனும் அழுதுகொண்டு சொன்னான்: ‘அம்மா, யெகோவாவின் கைகளில் நான் இருக்கிறேன்.’ பின்னர், ‘உயிர்த்தெழுதலில் என்னை வரவேற்பதற்கு நீங்கள் எல்லாரும் சத்தியத்தில் நிலைத்திருக்கும்படி நான் விரும்புகிறேன். மிகவும் உறுதியாக இந்தக் காரியத்தை என்னால் சொல்ல முடியும் அம்மா: யெகோவா என்னை உயிர்த்தெழுதலில் கட்டாயம் திரும்பக் கொண்டுவருவார் என்பது எனக்குத் தெரியும். அவர் என் இருதயத்தை அறிந்திருக்கிறார், நானும் அவரை உண்மையில் நேசிக்கிறேன்.’
“திரும்பவும் நான் அழத் தொடங்கினேன். நாங்கள் எவ்வளவு அதிகமாக அவனை நேசித்தோம் என்றும் இந்த 16 வருடங்களாக அவன் இருந்ததில் எங்களுக்கு எவ்வளவு பெருமை என்றும் எல்லாரைப் பார்க்கிலும், யெகோவா எவ்வாறு அவனை அங்கீகாரப் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் அவனுக்குச் சொன்னேன். ‘வாஸ்தவந்தான் அம்மா,’ என்று அவன் சொன்னான். நான் அவனிடம்: ‘ஜாஷ், நீ பிரிவதைக் குறித்து நான் எவ்வளவுக்கெவ்வளவு ஆசைப்படவில்லையோ அவ்வளவுக்கவ்வளவு நீ இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புவதும் எங்களுடைய பங்கில் தன்னலமாகவே இருக்கும்.’ அவன் சொன்னான்: ‘சரிதான் அம்மா, போராடிப் போராடி நானும் ஓரளவு அலுத்துப்போய்விட்டேன்.’ ”
சட்டரீதியிலான விளைபயன்கள்
ஜாஷுவாவின் வழக்கறிஞர்களில் ஒருவரான டேனியல் போல், மற்ற வழக்கறிஞர்களோடு சேர்ந்து ஜாஷுவா வாக்கரின் வழக்குச் சம்பந்தமாக எழும்பிய கேள்விகளைக் கையாண்டார். மைனரின் மருத்துவ ஒப்புகை சட்டத்தின் பிரகாரம் முதிர்ச்சியடைந்த மைனர் யார்? சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவிப்பது அதை மறுக்கும் உரிமையையும் உட்படுத்துகிறதா? ஒருவர் தன்னாலேயே போதியளவு செயல்பட முடியாத பட்சத்தில் அரசு செயல்படும் பாரென்ஸ் பாட்ரியய் சர்ச்சை இங்குப் பொருந்துகிறதா? தன்னுடைய சொந்த சரீரத்திற்கு என்ன செய்யப்படவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு ஒரு நபருக்குச் சட்டப்பூர்வமான உரிமை இருக்கிறதா? தன் சரீரத்தின்மீதான உரிமை மீறப்படலாகாதா? கனடா நாட்டு இயற்றாச் சட்டத்தைப் பற்றியதிலென்ன? இந்த வழக்கில் அது பொருந்துகிறதா? கடைசியாக, முதன்முதலில் ஜாஷுவா வாக்கரின் வழக்குக் கோர்ட்டுக்கு வந்திருக்க வேண்டுமா?
அப்பீல் கோர்ட்டின் எழுத்துமூல தீர்ப்பில் இந்தக் கேள்விகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கின்றனவா? ஆம், தீர்வு கிடைத்திருக்கின்றன. விசாரணையின் முடிவில், ஐந்து நீதிபதியடங்கிய கோர்ட் ஓர் இடை ஓய்வுக்குப் பிறகு கோர்ட் அறைக்குத் திரும்பி நீதிபதிகளின் ஒருமனப்பட்ட தீர்மானத்தைப் பின்வருமாறு சொன்னது:
“அப்பீலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. டர்ன்புல் ஜெ. [கீழ்க் கோர்ட் நீதிபதி] என்பவரின் தீர்ப்பு செல்லத்தகாததாக்கப்பட்டது. மைனரின் மருத்துவ ஒப்புகை சட்ட நிபந்தனைகளின்படி ஜாஷுவா வாக்கர் முதிர்ச்சியடைந்த மைனராகத் தெரிவிக்கப்படுகிறான்; அவனுடைய சிகிச்சை சம்பந்தப்பட்டதில் அவனுடைய பெற்றோரின் ஒப்புகை அவசியமில்லை. எழுதப்படும் தீர்ப்பில் வழக்குத் தொடர்புக்கு உண்டான செலவுகள் பற்றிய கேள்வியும் சிந்திக்கப்பட்டிருக்கும்.”
இந்த வழக்கில் கனடா நாட்டு இயற்றாச் சட்டம் பொருந்துமா? பொருந்தும். விசாரணை சம்பந்தப்பட்ட அறிக்கை சொல்கிறது: “கனடாவில், இயற்றாச் சட்டம் முதிர்ச்சியடைந்த மைனரின், அதாவது, திட்டமிடப்பட்ட சிகிச்சையின் இயல்பையும் விளைவுகளையும் புரிந்துகொள்ளும் திறனுடையவரின் நியதியை ஏற்றுக்கொள்கிறது. . . . மைனரின் மருத்துவ ஒப்புகை சட்டம் என்பதில் கூறப்படும் அளவுக்கு இயற்றாச் சட்டத்தை நியூ ப்ருன்ஸ்விக் தொகுத்துரைத்திருக்கிறது.”
முடிவாக, சட்டரீதியில் இரத்தமேற்றுதலை மறுக்கச் செய்வதற்கு ஜாஷுவாவின் வழக்குக் கோர்ட்டுக்கு வரவேண்டுமா? வேண்டாம். “அந்தச் சட்ட நிபந்தனைகளுக்கு இசைந்திருக்கிற வரை, அத்தகைய மனுவைச் செய்யவேண்டிய அவசியமில்லை.”
டபிள்யு. எல். ஹாய்ட் என்ற தலைமை நீதிபதி முடிவாகச் சொன்னார்: “மனுவானது சட்டத்தை மனதில்கொண்டும் அதிக கவனமாகவும் கொடுக்கப்பட்டது. இருப்பினும், மனுவின் விளைவானது ஜாஷுவாவையும் அவனுடைய குடும்பத்தையும் அநாவசியமான விசாரணையில் ஈடுபடுத்துவதற்காக இருந்தது. இக்காரணத்தினால், என்னுடைய கருத்தில், வழக்காட உண்டான செலவுகளுக்கு அவர்கள் ஆஸ்பத்திரியிலிருந்து நிதிபெற உரிமையுள்ளவர்களாக இருக்கின்றனர்.”
ஜாஷுவா அக்டோபர் 4, 1994 அன்று இறந்தான்.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
‘இந்தத் தீர்ப்பானது, டாக்டர்களுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் திட்டவட்டமான வழிகாட்டுக் குறிப்புகளை அளிக்கிறது.’—கனடா நாட்டு மருத்துவ கழக இதழ்
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
“யெகோவாவின் சாட்சிகளுக்கு மாத்திரமில்லாமல் நம்மெல்லாருக்கும் ஒரு வெற்றியாகும்.”—டெலிகிராஃப் இதழ்
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
“இரத்தத்தின்பேரில் உள்ள யெகோவாவின் சட்டத்தின்படி வாழவே விருப்பப்படுகிறேன்.”—ஜாஷுவா வாக்கர்
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
“என்னுடைய வாழ்க்கையிலேயே முன்னொருபோதும் பார்த்திராத விசுவாசத்தை அவனிடத்தில் காண்கிறேன்.”—டாக்டர் கேரி