மனசார மன்னியுங்கள்
“நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.”—மத்தேயு 18:35.
1, 2. (அ) பாவி என நன்கு அறியப்பட்டிருந்தவள் இயேசுவிற்குத் தன் போற்றுதலை எப்படி காட்டினாள்? (ஆ) பதிலளிக்கையில் என்ன குறிப்பை இயேசு சொன்னார்?
அவள் ஒரு வேசி. சாதாரணமாக கடவுள் பக்தியுள்ளவர்களின் வீட்டில் அப்படிப்பட்டவர்களை நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். அவள் அங்கே இருப்பதைக் கண்டே சிலர் ஆச்சரியப்பட்டிருப்பார்கள் என்றால், அவள் செய்ததைப் பார்த்த போதோ வாயடைத்துப் போனார்கள். ஒழுக்கத்தின் சிகரமாய் திகழ்ந்த ஒருவரை அவள் அணுகி, அவருடைய ஊழியத்திற்கு தான் காட்டும் போற்றுதலாய் அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினாள், தன்னுடைய தலைமுடியால் துடைத்தாள்.
2 ஆனால் அம்மனிதரான இயேசு, ‘ஊரில் பாவியென அறியப்பட்ட’ இந்தப் பெண்ணின் செயலால் துளியும் வெறுப்படையவில்லை. ஆனால், அவ்வீட்டு சொந்தக்காரனாகிய சீமோன் என்ற பரிசேயன் அவள் ஒரு பாவி என்பதால் கவலைப்பட்டான். ஒருவனுக்குக் கடன்பட்டிருந்த இரண்டு மனிதர்களைப் பற்றி சொல்வதன்மூலம் இயேசு பதிலளித்தார். ஒருவனுக்கு ஏகப்பட்ட கடனிருந்தது; அது ஒரு வேலையாளின் சுமார் இரண்டு வருட சம்பளத்திற்குச் சமம். இன்னொருவனுக்கோ அதில் பத்தில் ஒரு பங்கே, அதாவது மூன்று மாத சம்பளத்திற்கும் குறைந்த தொகையே செலுத்த இருந்தது. அவர்கள் இருவராலும் தாங்கள் பட்ட கடனைத் திருப்பித் தர இயலாத நிலையில் கடன் கொடுத்தவர், ‘இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டார்.’ யாருக்கு அதிகம் மன்னிக்கப்பட்டதோ அவனே அதிகம் அன்புகாட்டுவதற்குக் காரணம் இருப்பது தெளிவானதே. அந்தப் பெண்ணின் கனிவான செயலோடு அதை ஒப்பிட்டு, “எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்” என்ற நியமத்தையும் அதனுடன் சேர்த்துச் சொன்னார் இயேசு. அதன்பின், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என அவளிடம் சொன்னார்.—லூக்கா 7:36-48.
3. நம்மைக் குறித்து நாமே சிந்திக்க வேண்டியது என்ன?
3 ‘நான் அந்தப் பெண்ணைப் போல் இருந்திருந்தால் அல்லது அவளுக்கு இருந்ததைப் போன்ற சூழ்நிலை எனக்கிருந்து, இரக்கம் காட்டப்பட்டிருந்தால் அதன்பின் நான் மற்றவர்களை மன்னிக்காமல் கடின மனதோடு நடந்துகொண்டிருப்பேனா?’ என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ‘நிச்சயமாக மாட்டேன்!’ என்பதே ஒருவேளை உங்கள் பதிலாக இருக்கலாம். எனினும், நீங்கள் மன்னிக்க மனமுள்ளவர்தான் என உண்மையிலேயே நம்புகிறீர்களா? உங்களுடைய குணமே அப்படித்தானா? எப்போதும் உடனடியாக மன்னிக்கிறவர்தானா, எல்லாரையும் மன்னிக்கிறவர் என நீங்கள் பெயரெடுத்திருப்பவரா? நாம் ஒவ்வொருவரும் ஏன் ஒளிவுமறைவற்ற, சுயபரிசோதனை செய்ய வேண்டும் என காணலாம்.
மன்னிப்பு தேவை—நமக்கு அளிக்கப்படுகிறது
4. நம்மைப் பற்றிய எந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்?
4 நீங்கள் அபூரணர் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். உங்களிடம் கேட்டால் சந்தேகத்திற்கிடமின்றி அதை ஒத்துக்கொள்வீர்கள்; “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” என 1 யோவான் 1:8-ல் உள்ள வார்த்தைகள் ஒருவேளை உங்கள் நினைவுக்கு வரலாம். (ரோமர் 3:23; 5:12) சிலருடைய விஷயத்தில் வினைமையான, வெறுப்பூட்டும் தவறுகள் மூலம் பாவத்தன்மை வெளிப்பட்டிருக்கலாம். அத்தகைய காரியங்களை நீங்கள் வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், அநேக தடவை, அநேக வழிகளில் நீங்கள் கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக நடக்கத் தவறியிருக்கிறீர்கள்; பாவம் செய்திருக்கிறீர்கள். சரிதானே?
5. நாம் எதற்காக கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
5 எனவே, அப்போஸ்தலனாகிய பவுல் விவரிப்பதற்கு இசைய உங்களுடைய நிலை இருக்கலாம். அவர் சொன்னதாவது: “உங்கள் மீறுதல்களினாலும் மாம்சத்தின் விருத்தசேதனமில்லாமையினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடு [இயேசுவோடு] உயிர்ப்பித்து, நமது மீறுதல்களெல்லாவற்றையும் மன்னித்[தார்].” (கொலோசெயர் 2:13, NW; எபேசியர் 2:1-3) ‘நமது மீறுதல்கள் எல்லாவற்றையும் மன்னித்தார்’ என்ற குறிப்பைக் கவனியுங்கள். அது அநேகத்தை உள்ளடக்குகிறது. தாவீதைப் போல மன்றாடுவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் நியாயமான காரணம் இருக்கிறது: ‘கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.’—சங்கீதம் 25:11.
6. மன்னிக்கும் குணத்தைக் குறித்ததில் யெகோவாவைப் பற்றி எதை நம்பலாம்?
6 நீங்களோ அல்லது நம்மில் ஒருவரோ மன்னிப்பை எப்படி பெற்றுக்கொள்ளலாம்? முக்கிய விஷயம் யெகோவா தேவன் மன்னிக்க மனமுள்ளவராக இருப்பதே. அது அவருடைய குணங்களிலேயே தனிச்சிறப்பு மிக்க ஒன்று. (யாத்திராகமம் 34:6, 7; சங்கீதம் 86:5) ஜெபத்தில் அவரை அணுகி, நம்மை பொறுத்தருளும்படி கேட்டு, மன்னிப்பை நாடும்படி கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. (2 நாளாகமம் 6:21; சங்கீதம் 103:3, 10, 14) அத்தகைய மன்னிப்பை வழங்குவதற்கு சட்ட அடிப்படையில் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்; அதுவே இயேசுவின் கிரய பலி.—ரோமர் 3:24; 1 பேதுரு 1:18, 19; 1 யோவான் 4:9, 14.
7. எந்த விதத்தில் நீங்கள் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்ற விரும்புகிறீர்கள்?
7 மன்னிக்க மனமுள்ளவராக கடவுள் இருக்கிறார்; நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை இவரது முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு [“தாராளமாய்,” NW] மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்பதை எழுதுகையில் பவுல் இவ்விஷயத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். (எபேசியர் 4:32) கடவுளுடைய முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்வதை பவுலுடைய குறிப்பு உட்படுத்துகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏனெனில், “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களா[குங்கள்]” என அடுத்த வசனம் தொடர்ந்து சொல்கிறது. (எபேசியர் 5:1) இடையே உள்ள தொடர்பை நீங்கள் காண முடிகிறதா? இதைச் சொல்ல பவுலுக்கிருந்த வலுவான காரணங்களைப் பாருங்கள்: யெகோவா தேவன் உங்களை மன்னித்தார், நீங்களும் அவருடைய மாதிரியைப் பின்பற்றி ‘மன உருக்கமாக இருந்து,’ மற்றவர்களை ‘தாராளமாக மன்னிக்க’ வேண்டும். ஆனால், ‘நான் அதைச் செய்கிறேனா? ஒருவேளை அது என் குணமல்லவென்றால் அதற்காக முயற்சிக்கிறேனா? மன்னிப்பதன்மூலம் கடவுளைப் பின்பற்ற உண்மையிலேயே கடும் முயற்சி செய்கிறேனா?’ என கேட்டுக்கொள்ளுங்கள்.
மன்னிக்கப் பழக வேண்டும்
8. நம்முடைய சபை எப்படிப்பட்டவர்களால் ஆனது என்பதைக் குறித்ததில் எதை நாம் உணர வேண்டியது அவசியம்?
8 கிறிஸ்தவ சபையில் மன்னிக்கும் குணத்தை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்கள் கிடைப்பது மிக மிக அரிது என்ற எண்ணம் ஏற்படுவது நியாயமானதே. ஆனால் உண்மை அதுவல்ல. கிறிஸ்துவினுடைய அன்பின் மாதிரியைப் பின்பற்ற நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் கடினமாக முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மைதான். (யோவான் 13:35; 15:12, 13; கலாத்தியர் 6:2) இந்தப் பொல்லாத உலகத்தில் சாதாரணமாக காணப்படும் பழக்கங்களை தங்களுடைய சிந்தனையிலும் பேச்சிலும் செயலிலும் தவிர்ப்பதற்கு அவர்கள் வெகு காலமாக முயன்று வந்திருக்கின்றனர், இன்னும் முயன்று வருகின்றனர். உண்மையிலேயே புதிய ஆள்தன்மையை வெளிக்காட்ட விரும்புகின்றனர். (கொலோசெயர் 3:9, 10, NW) என்றபோதிலும், உலகளாவிய சபையும் உள்ளூரிலுள்ள ஒவ்வொரு சபையும் அபூரண ஆட்களால் ஆனதே என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. மொத்தத்தில், ஒரு காலத்தில் இருந்ததைவிட நல்லவர்கள்தான், ஆனாலும் இன்னும் அபூரணர்களே.
9, 10. சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் எழுந்தால் நாம் ஏன் ஆச்சரியப்படக்கூடாது?
9 சபையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு மத்தியிலும் அபூரணத்தை எதிர்பார்க்கலாம் என பைபிளில் கடவுள் வெளிப்படையாகவே சொல்கிறார். “ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்குக் குறைசொல்வதற்குக் காரணமிருக்குமானால், மன்னியுங்கள். யெகோவா உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் மன்னியுங்கள்” என கொலோசெயர் 3:13-ல் (NW) பதிவுசெய்யப்பட்டுள்ள பவுலின் வார்த்தைகளை உதாரணத்திற்குக் கவனியுங்கள்.
10 கடவுள் நம்மை மன்னிப்பதற்கும் மற்றவர்களை நாம் மன்னிக்க வேண்டியதற்கும் இடையே உள்ள தொடர்பை பைபிள் இங்கே நினைப்பூட்டுவது குறிப்பிடத்தக்கது; அப்படிச் செய்வது நம்முடைய கடமை மட்டுமல்ல தேவையும்கூட. ஆனால் இது ஏன் கடினமானது? ஏனென்றால், சிலருக்கு மற்றொருவரின்மேல் ‘குறைசொல்வதற்குக் காரணமிருக்கலாம்’ என பவுல் ஒப்புக்கொண்டார். அத்தகைய காரணங்கள் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். முதல் நூற்றாண்டில், ‘பரலோகத்தில் தங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையை’ எதிர்நோக்கிய ‘பரிசுத்தவான்கள்’ மத்தியிலேயே அவை இருந்திருக்க வேண்டும். (கொலோசெயர் 1:2, 4) எனவே, ‘தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியரும்’ என்ற ஆவியின் அத்தாட்சியைப் பெரும்பாலான உண்மைக் கிறிஸ்தவர்கள் இன்று பெறாததால் நிலைமை இப்படி இருக்கிறதென நாம் யோசிக்கலாமா? (கொலோசெயர் 3:12) எனவே, நம்முடைய சபையில், உண்மையான அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ளப்பட்ட தவறுகளால் ஏற்படும் புண்பட்ட உணர்ச்சிகள் குறைசொல்வதற்குக் காரணமாய் அமைந்தால், நடக்கக்கூடாத ஏதோ பெரும் தவறு நடந்துவிட்டதென்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது.
11. எதைக் குறித்து சீஷனாகிய யாக்கோபு நம்மை எச்சரித்தார்?
11 நம்முடைய சகோதரர்களை மன்னிக்க வேண்டிய சூழ்நிலைகள் எப்போதாவது வருவதை நாம் எதிர்பார்க்க வேண்டும் என இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபின் வார்த்தைகளும் காட்டுகின்றன. “உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லாமலுமிருங்கள்.” (யாக்கோபு 3:13, 14) ‘கசப்பான வைராக்கியமும் விரோதமும்’ உண்மை கிறிஸ்தவர்களின் இதயத்திலிருந்தா பிறக்கின்றன? ஆம், அத்தகைய காரியங்கள் முதல் நூற்றாண்டு சபையில் தலைதூக்கின என்பதை யாக்கோபின் வார்த்தைகள் தெளிவாக குறிப்பிடுகின்றன; அவை இன்றும் தலைதூக்கும்.
12. பூர்வ பிலிப்பி சபையில் என்ன பிரச்சினை தலைதூக்கியது?
12 பவுலோடு சேர்ந்து கடுமையாக உழைத்த, நல்ல பெயரெடுத்திருந்த அபிஷேகம் செய்யப்பட்ட இரண்டு கிறிஸ்தவர்களை உட்படுத்திய உண்மை உதாரணம் இருக்கிறது. பிலிப்பி சபையிலிருந்த எயோதியாளையும் சிந்திகேயாளையும் பற்றி வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நடந்த விவரத்தை விரிவாக விவரிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்ததை பிலிப்பியர் 4:2, 3 சுட்டிக்காட்டுகிறது. யோசிக்காமல் பேசிய கடுகடுப்பான வார்த்தையால், உறவினர் ஒருவரை அவமரியாதையாக நடத்தியதால், அல்லது போட்டி பொறாமைக்கான ஏதோ சுவடு தெரிந்ததால் அது ஆரம்பமானதா? அது எப்படிப்பட்ட இயல்புடையதாக இருந்தாலும் விஷயம் ரோமிலிருந்த பவுலின் காதை எட்டுமளவுக்கு மோசமடைந்திருந்தது. அந்த ஆவிக்குரிய சகோதரிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசுவதையே நிறுத்திவிட்டிருக்கலாம், கூட்டங்களில் ஒருவரையொருவர் தவிர்ப்பதன் மூலம் பாரா முகம் காட்டும் அளவுக்கு சென்றிருக்கலாம் அல்லது தங்கள் நண்பர்களிடையே ஒருவரைப் பற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்திருக்கலாம்.
13. எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் இடையே சமாதானத்தை எது கொண்டுவந்திருக்கலாம், அது நமக்கு என்ன பாடம் புகட்டுகிறது?
13 அவற்றில் ஏதாவது, புதுமையானதாகத் தோன்றாமல், உங்கள் சபையில் சிலருக்கு இடையே சம்பவித்ததை அல்லது நீங்கள் உட்பட்டிருந்த ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதா? இப்போதும்கூட ஓரளவுக்கு அதே போன்ற பிரச்சினை இருக்கலாம். நாம் என்ன செய்யலாம்? அந்தப் பூர்வ கால சம்பவத்தில், ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்தச் சகோதரிகள் இருவரையும் ‘கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்கும்படி’ பவுல் ஊக்குவித்தார். தங்கள் பிரச்சினையைக் குறித்துப் பேசவும், ஒளிவு மறைவின்றி பேசி மனவேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளவும், இருவருக்கும் மன்னிக்க மனமிருப்பதை வெளிக்காட்டவும், அதன் பின் உண்மையாகவே யெகோவாவின் மன்னிக்கும் குணத்தைப் பின்பற்றவும் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கலாம். இப்படிச் செய்யாமல் எயோதியாளும் சிந்திகேயாளும் சமாதானமாகியிருப்பார்கள் என கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை; நாமும்கூட சமாதானமாய் இருக்க முடியும். அத்தகைய மன்னிக்கும் தன்மையைப் பின்பற்றி இன்றும் சமாதானமாய் இருக்க முடியும்.
சமாதானமாய் இருங்கள்—மன்னியுங்கள்
14. தனிப்பட்ட மனஸ்தாபத்தை வெறுமனே பொருட்படுத்தாமல் விட்டுவிடுவது பெரும்பாலும் சாத்தியமானதாயும் சிறந்ததாயும் ஏன் இருக்கிறது?
14 ஒரு கிறிஸ்தவரோடு உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறதென்றால் மன்னிப்பது உண்மையில் எதை உட்படுத்துகிறது? இதற்கு ஒரே ஒரு வழியை மட்டுமல்ல, சொல்லப்போனால், உதவியளிக்கும் பல உதாரணங்களையும் நடைமுறைக்குதவும் பல நல்லாலோசனைகளையும் பைபிள் அளிக்கிறது. ஏற்றுக்கொள்வதற்கும் பொறுத்துவதற்கும் எளிதான ஒன்றாய் இல்லாவிட்டாலும் சிபாரிசு செய்யப்படும் முக்கிய ஒரு வழி உள்ளது; அது, பிரச்சினையைக் கெட்ட கனவுபோல் நினைத்து மன்னித்து மறந்து, அதைப் பொருட்படுத்தாமல் கடந்துபோக விட்டுவிடுவதே. எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் இடையே எழுந்ததைப் போன்ற பிரச்சினை தலைதூக்கும்போது அடிக்கடி தன்னிடமல்ல மற்றவரிடமே தவறிருக்கிறது அல்லது தவறுக்கு முக்கிய காரணம் மற்றவரே என ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். அதுபோன்ற சூழ்நிலையில் அந்தக் கிறிஸ்தவரின் பேரிலேயே குற்றம் சுமத்த வேண்டும் அல்லது பெரும்பாலான தீங்கை அவரே செய்தார் என நீங்கள் நினைக்கலாம். எனினும் மன்னிப்பதன் மூலம் அப்பேச்சை அத்தோடு விட்டுவிட உங்களால் முடியுமா? அது உங்கள் முன் ஒரு பெரிய கேள்விக்குறியாகத்தான் தோன்றும். அதுவும் அந்தக் கிறிஸ்தவரே தவறுக்கு முதற்காரணம் அல்லது முற்றும் காரணம் என நீங்கள் உணர்ந்தால் மன்னிப்பது அவ்வாறு தோன்றலாம். இருந்தாலும் மன்னிப்பதன் மூலம் அவ்விஷயத்தைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிட்டு, முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் நீங்களே இருக்கிறீர்கள்.
15, 16. (அ) மீகா எப்படி யெகோவாவை விவரித்தார்? (ஆ) கடவுள் ‘குற்றத்தைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிடுபவராக’ இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
15 மன்னிப்பதில் கடவுள் நமக்கு முன்மாதிரியாய் இருப்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். (எபேசியர் 4:32-5:1) குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிடும் அவருடைய மாதிரியைக் குறித்து தீர்க்கதரிசியாகிய மீகா எழுதியதாவது: “தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற [“குற்றத்தைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிடுகிற,” NW] தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.”—மீகா 7:18.
16 ‘குற்றத்தைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிடுகிறவர்’ என யெகோவாவை விவரிக்கையில், தவறுகளை நினைவில் வைக்க முடியாதவர், மறதியுடையவர் என அவரை பைபிள் குறிப்பிடுவதில்லை. உதாரணத்திற்கு சிம்சோன், தாவீது ஆகியோருடைய விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இருவருமே வினைமையான பாவங்களைச் செய்தவர்கள். அவர்களுடைய பாவங்களை வெகு காலத்திற்குப் பிறகும் கடவுளால் நினைத்துப் பார்க்க முடியும்; பைபிளில் அவற்றை யெகோவா பதிவுசெய்து வைத்திருப்பதால் அவர்களுடைய பாவங்களில் சிலவற்றைப் பற்றி நமக்கும் தெரியும். இருந்தபோதிலும், மன்னிக்கும் மனம்படைத்த நம்முடைய கடவுள் அவர்களுக்கு இரக்கம் காட்டினார்; அவர்களுடைய விசுவாசத்தை நாம் பார்த்துப் பின்பற்றும்படி நமக்கு அவர்களை உதாரண புருஷர்களாக்கினார்.—எபிரெயர் 11:32; 12:1.
17. (அ) மற்றவர்களுடைய பாவங்களை அல்லது தவறுகளைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிட என்ன அணுகுமுறை நமக்கு உதவலாம்? (ஆ) அதைச் செய்ய முயலுகையில் நாம் எப்படி யெகோவாவை பின்பற்றுவோம்? (அடிக்குறிப்பைக் காண்க.)
17 ஆம், யெகோவாவால் குற்றங்களைப் ‘பொருட்படுத்தாமல் கடந்துபோகவிட’ a முடியும்; அதையே செய்யும்படி தாவீது அவரிடம் எப்போதும் வேண்டிக்கொண்டார். (2 சாமுவேல் 12:13; 24:10; NW) அபூரணர்களாக நம்முடைய உடன் ஊழியர்களின் அவமரியாதையான நடத்தையையும் வெறுப்பூட்டும் செயல்களையும் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிடுவதில் நாம் கடவுளைப் பின்பற்ற முடியுமா? உயரே எழும்புவதற்கு முன் ஓடுதளத்தில் விரைந்தோடும் ஜெட் விமானத்தில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். வெளியே பார்க்கையில் ஓடுதளத்திற்கருகே பரிச்சயமான பெண் ஒருத்தி அவமதிக்கும் விதத்தில் சிறுபிள்ளைத்தனமாக சைகை காட்டுவதைப் பார்க்கிறீர்கள். அவள் மனக்கலக்கம் அடைந்திருந்தது உங்களுக்குத் தெரியும்; உங்களை மனதில் வைத்தே ஒருவேளை அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம். அல்லது ஒருவேளை அவள் உங்களைப் பற்றி துளியும் நினைக்காமல் இருந்திருக்கலாம். எது எப்படியிருந்த போதிலும், வானில் வட்டமடித்து உயரே பறக்க விமானம் எழும்புகையில் அவளைப் பொருட்படுத்தாமல் கடந்து மேலே பறக்கிறீர்கள், அவளோ பார்ப்பதற்கு ஒரு தூசி போல் தோன்றுகிறாள். ஒரு மணிநேரத்தில் நீங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிறீர்கள், அவளுடைய புண்படுத்தும் செய்கை “முடிந்த கதையாய்” இருக்கிறது. அதே போன்று, நாம் யெகோவாவைப் பின்பற்ற முயன்று, புத்திசாலித்தனமாய் தவறைப் பொருட்படுத்தாமல் கடந்துபோக விட்டால் மன்னிக்க அது அநேக சமயங்களில் நமக்கு உதவும். (நீதிமொழிகள் 19:11) இப்போதிருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு அல்லது ஆயிரவருட ஆட்சியில் இருநூறு வருடங்களுக்குப் பிறகு அந்த அவமரியாதையான நடத்தை துச்சமாக தோன்றுமல்லவா? அதை பொருட்படுத்தாமல் கடந்துபோகவிட்டால் என்ன?
18. ஒரு தவறை நம்மால் மனதிலிருந்து அகற்ற முடியவில்லையென்றால் எந்தப் புத்திமதியை நாம் பின்பற்றலாம்?
18 எனினும், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் ஒரு விஷயத்தைக் குறித்து ஜெபித்திருக்கலாம், அதை மன்னித்து மறக்கவும் முயன்றிருக்கலாம்; ஆனாலும் அதை உங்களால் செய்ய முடியாமல் போயிருக்கலாம். அப்போது என்ன செய்வது? சமாதானமாய் இருக்க அந்த நபரிடம் தனித்துச் சென்று கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ள முயலும்படி இயேசு வலியுறுத்தினார். “ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”—மத்தேயு 5:23, 24.
19. நம்முடைய சகோதரரோடு சமாதானமாய் இருக்க விரும்பினால் நமக்கு என்ன மனநிலை இருக்க வேண்டும், என்ன மனநிலை இருக்கக்கூடாது?
19 உண்மையில் நீங்கள் செய்தது சரியே, அவர் பங்கிலேயே தவறிருக்கிறது என்பதைப் புரிய வைப்பதற்காக உங்கள் சகோதரனிடம் செல்லும்படி இயேசு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் தவறுசெய்திருக்கலாம். எப்படியிருந்தாலும், இரு தரப்பிலும் ஏதேனும் தவறு இருந்திருக்கலாம். ஆனாலும், மனம் ஒப்பாமல் மறுதரப்பினரைக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பது, சொல்லப்போனால் கூனிக்குறுக வைப்பது நோக்கமாக இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட மனநிலையோடு நீங்கள் கலந்துபேச அணுகினால், சமாதானத்திற்கு இடமில்லை என்பது நூறுசதம் உறுதி. உண்மையான அல்லது கற்பனை செய்துகொண்ட அந்தத் தவறைப் பற்றி அக்குவேறு ஆணிவேராக அலசியாராய்வதும் கண்டிப்பாக நோக்கமாக இருக்கக்கூடாது. கிறிஸ்தவ அன்பின் அடிப்படையில் அமைதியாக கலந்தாலோசிக்கையில், ஏதோ தவறாக புரிந்துகொண்டதன் காரணமாய் பிரச்சினை உருவாகியிருப்பது தெரியவந்தால் அதை இருவருமாக சேர்ந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கலந்தாலோசிப்பு முழுமையாக சமரசத்தில் போய் முடியாவிட்டாலும் அப்படிப்பட்ட ஒன்று அவசியமென நினைக்கிறீர்களா? நம்முடைய மன்னிக்கும் கடவுளை நீங்கள் இருவரும் உண்மையிலேயே வணங்க விரும்புவதால் உங்களுக்குள் ஒத்துப்போவது சிறந்ததல்லவா? நிஜத்தை அறிகையில், “நம்முடைய அபூரணத்தன்மைதான் இதற்கெல்லாம் காரணம், என்னை மன்னித்துவிடுங்கள். தயவுசெய்து, இனி இதை பொருட்படுத்தாமல் மறந்துவிடுவோம்” என மனப்பூர்வமாக சொல்வது இருவருக்குமே எளிதாக இருக்கும்.
20. அப்போஸ்தலர்களின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
20 அப்போஸ்தலர்களில் சிலர் முதன்மையான ஸ்தானத்தை விரும்பியபோது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (மாற்கு 10:35-39; லூக்கா 9:46; 22:24-26) அது இறுக்கமான சூழ்நிலையை, ஒருவேளை மனசங்கடங்களை, அல்லது உணர்ச்சியில் ஆழமான புண்படுத்துதலை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய மனவேறுபாடுகளை அவர்களால் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிடவும் ஒற்றுமையாய் சேர்ந்து தொடர்ந்து செயல்படவும் முடிந்தது. “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக் காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” என அவர்களில் ஒருவர் பின்னர் எழுதினார்.—1 பேதுரு 3:10, 11.
21. மன்னிப்பதைக் குறித்து என்ன நிறைவான புத்திமதியை இயேசு அளித்தார்?
21 முன்பு நாம் நியதியின் ஒரு பக்கத்தைப் பார்த்தோம், அது: கடந்த காலத்தில் நாம் செய்த அநேக பாவங்களை கடவுள் மன்னித்தார்; எனவே அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நாமும் நம் சகோதரர்களை மன்னிக்க வேண்டும். (சங்கீதம் 103:12; ஏசாயா 43:25) அந்நியதிக்கு மறுபக்கமும் இருக்கிறது. பரமண்டல ஜெபத்தைப் பற்றி குறிப்பிட்டபின், “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார்” எனவும் இயேசு சொன்னார். ஒரு வருடத்திற்குப் பின் தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கையில் மீண்டும் அக்கருத்தைக் குறிப்பிட்டார்: “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே.” (மத்தேயு 6:12, 14; லூக்கா 11:4) தம்முடைய மரணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, “நீங்கள் நின்று ஜெபம்பண்ணும் போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்” என இயேசு மேலும் சொன்னார்.—மாற்கு 11:25.
22, 23. நாம் மன்னிக்க மனமுள்ளவர்களாய் இருப்பது எப்படி நம் எதிர்காலத்தைப் பாதிக்கும்?
22 நாம் தொடர்ந்து கடவுளுடைய மன்னிப்பைப் பெறுவது, நம்முடைய சகோதரர்களை மன்னிக்க நாம் எந்தளவுக்கு மனமுள்ளவர்களாக இருக்கிறோமோ அதிலேயே பெருமளவு சார்ந்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கிடையே தனிப்பட்ட பிரச்சினை எழுகையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி: ‘ஏதோ சிறிய அவமரியாதையான நடத்தையை, ஏதோ சிறிய தப்பிதத்தை, அல்லது அபூரணத்தன்மையால் விளையும் ஏதோ செயலை செய்த சகோதரரை அல்லது சகோதரியை அவர்கள் செய்தது தவறென முக்கியமாய் நான் நிரூபிப்பதைக் காட்டிலும் கடவுளுடைய மன்னிப்பைப் பெறுவது அதிக முக்கியமானதல்லவா?’ இக்கேள்விக்கு பதில் உங்களுக்கே தெரியும்.
23 தனிப்பட்ட ஏதோ ஒரு சிறிய மனஸ்தாபமாக அல்லது பிரச்சினையாக இல்லாமல் விஷயம் அதிக வினைமையானதாய் இருக்குமானால் என்ன செய்வது? மத்தேயு 18:15-18-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் ஆலோசனையை எப்போது பின்பற்ற வேண்டும்? அடுத்து இவற்றை நாம் ஆராயலாம்.
[அடிக்குறிப்புகள்]
a மீகா 7:18-ல் உபயோகிக்கப்பட்டுள்ள எபிரெய உருவகம், “ஒரு பொருளுக்குக் கவனம் செலுத்த விரும்பாததால் அதைப் பொருட்படுத்தாது கடந்து செல்லும் ஒரு பயணியின் செயலிலிருந்து பெறப்பட்டது. அது, பாவத்தைக் கடவுள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார், அல்லது அவருக்கு அது பெரிய விஷயமோ முக்கியமானதோ அல்ல என்ற கருத்தை கொடுக்கவில்லை; மாறாக, குறிப்பிட்ட விஷயங்களைத் தண்டனைக்குரியதாய் எடுத்துக்கொள்வதில்லை; அவர் தண்டிக்காமல் அவற்றை மன்னிக்கிறார்” என ஒரு கல்விமான் சொல்கிறார்.—நியாயாதிபதிகள் 3:26; 1 சாமுவேல் 16:8.
நினைவிருக்கிறதா?
◻ மன்னிக்கும் விஷயத்தில் பின்பற்றத்தக்க முன்மாதிரியை நமக்கு யெகோவா எப்படி வைக்கிறார்?
◻ சபைகளில் இருப்பவர்களைக் குறித்து எதை நினைவில் வைக்க வேண்டும்?
◻ பெரும்பாலான விஷயங்களில், அவமரியாதையான நடத்தை அல்லது தவறுகளைக் குறித்ததில் நாம் என்ன செய்ய முடியும்?
◻ நம்முடைய சகோதரரோடு சமாதானமாய் இருக்க, தேவைப்பட்டால் நாம் என்ன செய்யலாம்?
[பக்கம் 15-ன் படம்]
ஒரு கிறிஸ்தவரோடு கருத்து வேறுபாடு ஏற்படுகையில் அதைப் பொருட்படுத்தாமல் கடந்துபோகவிட முயலுங்கள்; காலம் செல்ல செல்ல விஷயம் சுவடு தெரியாமல் மறையும்