உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 4/09 பக். 3-4
  • பணம்—⁠உங்கள் எஜமானா அடிமையா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பணம்—⁠உங்கள் எஜமானா அடிமையா?
  • விழித்தெழு!—2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரச்சினையின் மறுபக்கம்
  • பணம்தான் வாழ்க்கையா?
    விழித்தெழு!—2015
  • பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?
    பைபிள் தரும் பதில்கள்
  • பணத்தை நிர்வகிப்பது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • வரவுசெலவை சமாளிப்பது எப்படி?
    மணவாழ்வில் மகிழ்ச்சி மலர
மேலும் பார்க்க
விழித்தெழு!—2009
g 4/09 பக். 3-4

பணம்​—⁠உங்கள் எஜமானா அடிமையா?

பணப்பித்து நோய் உங்களைப் பீடித்திருக்கிறதா? இவ்வுலகில் வாழும் அநேகரை இந்நோய் பீடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சரி, அது என்ன நோய்?

“மனி சிக்னஸ் சின்ட்ரோம்” (பணப்பித்து கோளாறு) என்ற புது வார்த்தையைச் சமீபத்தில் கண்டுபிடித்தார் பிரிட்டன் நாட்டு மனநல ஆய்வாளர் டாக்டர் ராஜர் ஹென்டர்சன்; பணக் கவலையால் அவதிப்படுவோருக்கு உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் காணப்படும் அறிகுறிகளைக் குறிப்பதற்கு ராஜர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். மூச்சுத் திணறல், தலைவலி, குமட்டல், தோலில் தடிப்புகள், பசியின்மை, காரணமற்ற கோபம், பயம், எதிர்மறையான சிந்தனை போன்றவை இந்த அறிகுறிகளில் அடக்கம். “பணக் கவலையே மனக் கவலைக்கு முக்கியக் காரணம்” என்கிறார் ஹென்டர்சன்.

பணக் கவலைகளால் வரும் பிரச்சினைகளுக்குப் பலர் பலியாகி வருவதில் ஆச்சரியமேதும் இல்லை. சமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அநேக நாடுகளில் வாழும் மக்கள் தங்களுடைய வேலை, வீடு, சேமிப்பு ஆகிய அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். இதனால் பெரிய பெரிய நிதி நிறுவனங்களும் அடிவாங்கியிருக்கின்றன. நாட்டின் நிதிநிலை அடியோடு சரிந்துவிடுவதைத் தடுப்பதற்காக பணபலம் படைத்த நாடுகள்கூட அதிரடி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. வளர்ந்துவரும் நாடுகளில், உணவு மற்றும் அடிப்படை பொருள்களின் விலைவாசி விஷம் போல் ஏறியிருப்பது மிகுந்த கவலையை உண்டாக்கியிருக்கிறது.

பணம் ஏராளமாக புரளும் காலங்களிலும் பணத்தினால் பல துன்பங்கள் வருகின்றன. சமீப ஆண்டுகளில் பணப் புழக்கம் அதிகமாயிருந்த போதிலும் அநேகர் பணக் கவலைகளால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். உதாரணமாக, “கண்மூடித்தனமாகச் செலவழிக்கும் பழக்கமும், லாபம் ஈட்டுகிற வெறியும், அதீத பொருளாசையும் ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்போல் பரவியதாக தென் ஆப்பிரிக்க தினசரி, த விட்னஸ் கூறியது. “கடன், வீண்செலவு, வேலைப் பித்து, மனக்கவலை, அதிருப்தி, பொறாமை, மன அழுத்தம்” ஆகியவை இந்த “வியாதிக்கு” சில அறிகுறிகள் என்று அந்தச் செய்தித்தாள் சொன்னது. ஆப்பிரிக்காவில் மனித வாழ்க்கையின் தரம் தினம் தினம் சீரழிந்து வருவதற்குப் பணம்தான் காரணமெனச் சொல்லப்பட்டது.

இந்தியா சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டாலும் அதற்கு முன்பு அது பணத்தில் மிதந்தது. “பணத்தைச் செலவழிப்பதில்” இந்நாடு 2007-⁠ஆம் ஆண்டில் “புதிய உச்சநிலையை எட்டியதாக” இண்டியா டுடே இன்டர்நேஷனல் என்ற ஆங்கிலப் பத்திரிகை அறிவித்தது. என்றாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமைதியின்மைக்கும் வன்முறைக்கும்கூட வித்திடலாமென அச்சமயத்தில் அதிகாரிகள் அஞ்சினார்கள்.

அதே காலக்கட்டத்தில், அமெரிக்காவின் இளம் தலைமுறை மத்தியில் ஆடம்பர பொருட்களுக்காக ஊதாரித்தனமாய்ச் செலவு செய்யும் போக்கு அதிகமாய்க் காணப்பட்டது. ஆனால், கணக்குவழக்கில்லாமல் செலவு செய்தாலும் அவர்களால் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியவில்லை. இந்தச் செல்வச் செழிப்புதான் அங்குள்ள இளைஞர்கள் மதுபானத்திற்கு அடிமையாவதற்கும், மன அழுத்தத்தினால் கஷ்டப்படுவதற்கும், தற்கொலை செய்துகொள்வதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் ஓர் உண்மை தெரியவந்தது: என்னதான் செல்வமும் செழிப்பும் கொட்டிக் கிடந்தாலும் ‘அமெரிக்கா வாசிகளில் மூன்றில் ஒருவர்கூட நாங்கள் ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறோம்’ என சொல்லவில்லை.

பிரச்சினையின் மறுபக்கம்

மறுபட்சத்தில், செழிப்பான காலங்களிலும் சரி நெருக்கடியான காலங்களிலும் சரி, அநேகர்—பணக்காரர்களும் ஏழைகளும்—பணத்தைக் குறித்தோ பொருளுடைமைகளைக் குறித்தோ அதிகமாய்க் கவலைப்படுவதில்லை. ஏன் இந்த முரண்பாடு?

பணத்தின் அர்த்தம் என்று தலைப்பிடப்பட்ட ஓர் ஆங்கில அறிக்கையில், ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “பணம் சிலரை ஆட்டிவைக்கிறது. சிலரை அடிமைப்படுத்திவிடுகிறது. இதனால் மனக்கவலைகளும் மனக்கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.” ஆனால், “பணத்தைக் கவனமாக பட்ஜெட் செய்கிறவர்கள் வாழ்க்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உணருகிறார்கள்; தங்களைக் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள். இவர்கள் பணத்திற்கு எஜமானர்கள், அடிமைகள் அல்ல . . . பணத்தைக் கவனமாய் பட்ஜெட் செய்கிறவர்களுக்கு மனக்கவலையும் குறைவு, அதனால் உண்டாகும் உடல்நல பாதிப்பும் குறைவு” என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொன்னார்கள்.

பணத்தைப் பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? ஊசலாடும் உலகப் பொருளாதாரம் உங்களை எப்படிப் பாதிக்கிறது? பணம் உங்களுடைய எஜமானா அல்லது அடிமையா? பணப் பித்துக்கான அறிகுறிகள் உங்களுக்கு ஒருவேளை இல்லாதிருக்கலாம். ஆனால், செல்வச்சீமான்களாக இருந்தாலும்சரி ஏழைபாழைகளாக இருந்தாலும்சரி, பணக் கவலைகளுக்கு பலியாகாதோர் யாருமே இல்லை. நிதியை நிர்வகிக்கும் விஷயத்தில் மாற்றங்கள் செய்தால் உங்கள் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் காண்பீர்கள். எப்படி? அடுத்த பக்கத்தைப் பாருங்கள். (g 3/09)

பணம் உங்கள் எஜமானாக இருந்தால் . . .

  • செலவினங்களைப் பற்றி பேச்செடுத்தால் உங்களுக்குத் தலைச்சுற்றும் என்பதால் அதைப் பற்றி பேசவே மாட்டீர்கள்

  • பணத்தின் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு வரும்

  • கணக்குவழக்கில்லாமல் செலவழிப்பீர்கள்

  • கடனைப் பற்றி சதா கவலைப்படுவீர்கள்

  • எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்றே உங்களுக்குச் சரியாகத் தெரியாது

  • எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்றும்கூட சரியாகத் தெரியாது

  • எவ்வளவு கடன் இருக்கிறது என்றும் சரியாகத் தெரியாது

  • உங்கள் ‘பில்’கள் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக இருக்கும்

  • ‘பில்’களை எப்போதும் தாமதமாகத்தான் கட்டுவீர்கள்

  • கிரெடிட் கார்டு ‘பில்’களுக்கு கொஞ்ச பணத்தைத்தான் உங்களால் கட்ட முடிகிறது

  • மற்ற காரியங்களுக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து ‘பில்’ கட்டுவீர்கள்

  • ‘பில்’ கட்டுவதற்காக ஓவர்டைம் செய்வீர்கள்

  • பழைய கடன்களை அடைக்க புதிய கடன்களை வாங்கியிருப்பீர்கள்

  • சேமிப்பிலிருந்து எடுத்து மாதாந்திர ‘பில்’ கட்டுவீர்கள்

  • மாதக் கடைசியில் கையில் காசு இல்லாமல் திண்டாடுவீர்கள்

  • பெரிய தொகையைச் சேர்த்து வைக்க வேண்டிய நெருக்கடியில் இருப்பீர்கள்

  • பணப் பிரச்சினையால் உடல்/உள ரீதியில் அவதிப்படுவீர்கள்

தகவல்: டாக்டர் ரோஜர் ஹெண்டர்ஸன் எழுதிய மனி சிக்னஸ் சின்ட்ரோம் நூலிலிருந்து

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்