யாருடைய கைவண்ணம்?
பார்-டெயில் காட்விட் அதன் அதிசயப் பயணம்
பார்-டெயில் காட்விட் பறவையின் (The Bar-Tailed Godwit) இடப்பெயர்ச்சி, மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்கிறது. 11,000 கிலோமீட்டர் (7,000 மைல்) தூரத்தை அது ஏறக்குறைய எட்டு நாட்களில் கடக்கிறது. வேறெந்த பறவையும் இவ்வளவு தூரம் இடைவிடாமல் இடப்பெயர்ச்சி செய்வதாகத் தெரியவில்லை.
கவனியுங்கள்: சில வகை பறவைகள் தங்கள் மூளையில் ஏதோ ஒரு திசைமானி பொருத்தப்பட்டிருப்பதுபோல் இடம்பெயருவதாக, பூமியின் காந்த புலத்தை (magnetic field) பயன்படுத்தி இடம்பெயருவதாக, ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். காட்விட் பறவைகள் பகலில் சூரியனின் திசையை வைத்தும், இரவில் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்தும் பயணிக்கின்றன. கடுங்காற்று வீசப்போகிறது என்பதை காட்விட் பறவைகளால் முன்கூட்டியே அறிய முடியும் என்பதால் பின்காற்றின் அழுத்தத்தையும் அவை பயன்படுத்திக்கொள்கின்றன. என்றாலும், இந்தப் பறவைகளால் எப்படி இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது என்று சரியாகத் தெரியாமல் நிபுணர்கள் குழம்புகிறார்கள். “இந்தப் பறவைகளைப் பற்றி 20 வருஷமாக நான் ஆராய்ச்சி செய்கிறேன், ஆனாலும், அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாமல் மலைத்துப்போய் நிற்கிறேன்” என்கிறார் பாப் கில் என்ற உயிரியலாளர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவ்வளவு தூரம் இடப்பெயர்ச்சி செய்கிற திறன் காட்விட் பறவைக்கு தானாக வந்திருக்குமா அல்லது அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா? ◼ (g13-E 01)