உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 1 பக். 8-13
  • மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்
  • எதார்த்தமாக இருங்கள்
  • காரணத்தைக் கண்டுபிடியுங்கள்
  • ஒழுங்கைக் கடைப்பிடியுங்கள்
  • சமநிலையாக இருங்கள்
  • உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்
  • முக்கியமானவற்றுக்கு முதலிடம் கொடுங்கள்
  • உதவி கேளுங்கள்
  • கடவுளின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
  • கவலையைக் குறைக்க . . .
    விழித்தெழு!—2010
  • நல்ல கவலை, கெட்டகவலை
    விழித்தெழு!—1998
  • அழுத்தத்தை நான் வெல்லமுடியுமா?
    விழித்தெழு!—1988
  • கவலையை—மேற்கொள்ள முடியுமே!
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 1 பக். 8-13
பெரிய நகரம் ஒன்றில் இருக்கும் ஒரு பெண் சந்தோஷத்தோடும் தன்னம்பிக்கையோடும் இருக்கிறாள்.

மன அழுத்தம் மறைந்திட...

மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்

மன அழுத்தத்திலிருந்து மீண்டுவர, முக்கியமான சில விஷயங்களைப் பற்றி நீங்கள் யோசித்துப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, உங்கள் ஆரோக்கியம், மற்றவர்களோடு நீங்கள் பழகும் விதம், உங்கள் லட்சியங்கள், வாழ்க்கையில் நீங்கள் முதல் இடம் தரும் விஷயங்கள் போன்றவை. மன அழுத்தத்தைச் சமாளிக்க சில ஆலோசனைகள் இதோ...

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்

ஒரு பெண் சந்தோஷத்தோடும் தன்னம்பிக்கையோடும் பெரிய நகரம் ஒன்றில் நடந்துபோகிறாள்.

“நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும்.”​—மத்தேயு 6:34.

அர்த்தம்: கவலைகள் வருவது சகஜம்தான். அதனால் நாளைக்காக இன்றே கவலைப்படாதீர்கள். இன்றைய நாளைப் பற்றி மட்டுமே யோசியுங்கள்.

  • மன அழுத்தம் கவலைக்கு விதை போடலாம். இதைச் செய்து பாருங்கள்: முதலில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எல்லா சூழ்நிலைகளையும் நம்மால் தவிர்க்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படித் தவிர்க்க முடியாத விஷயங்களை நினைத்து தேவையில்லாமல் கவலைப்படுவது மன அழுத்தத்தைக் கூட்டும். இரண்டாவது, நீங்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை எப்போதும் மோசமாக மாறாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எதார்த்தமாக இருங்கள்

‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் நியாயமானதாக இருக்கிறது.’​—யாக்கோபு 3:17.

அர்த்தம்: உங்களிடமும் சரி மற்றவர்களிடமும் சரி நூறு சதவீதம் எதிர்பார்க்காதீர்கள்.

  • எதார்த்தமாக இருங்கள், உங்களிடமும் மற்றவர்களிடமும் குறைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இப்படிச் செய்தால் உங்களுக்கும் சரி, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சரி, மன அழுத்தம் குறையும்; செய்யும் வேலைகள் வெற்றியில் போய் முடியும். நகைச்சுவை உணர்வோடு இருங்கள். எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும், நீங்கள் வாய்விட்டு சிரித்தால், டென்ஷன் விட்டுப் போகும்; புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

காரணத்தைக் கண்டுபிடியுங்கள்

“பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்.”​—நீதிமொழிகள் 17:27.

அர்த்தம்: எதிர்மறையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் இருந்தால் நம்மால் தெளிவாக யோசிக்க முடியாது; அதனால், பதட்டப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

  • மன அழுத்தம் எதனால் வருகிறது என்பதையும், அது ஏற்படும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதையும் யோசித்துப்பாருங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, என்னவெல்லாம் யோசிக்கிறீர்கள், எப்படியெல்லாம் உணருகிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். அதை நீங்கள் எழுதிகூட வைக்கலாம். மன அழுத்தத்தின்போது நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றி எந்தளவு அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ, அந்தளவு நன்றாக அதை உங்களால் சமாளிக்க முடியும். அதோடு, மன அழுத்தத்திற்கான காரணங்களைத் துடைத்தழிக்க வழி தேடுங்கள். அது நடக்காத காரியமாகத் தோன்றினால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழியைக் கண்டுபிடியுங்கள். உதாரணத்துக்கு, வேலைகளை ஒழுங்கமைப்பதோ நேரத்தைத் திட்டமிடுவதோகூட மன அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.

  • விஷயங்களை வேறு வேறு கோணத்தில் பார்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு விஷயம், வேறொருவருக்கு மன அழுத்தத்தைக் கொடுக்காமல் இருக்கலாம். நாம் யோசிக்கும் விதம்தான் அதற்குக் காரணம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவும் மூன்று குறிப்புகளைக் கவனியுங்கள்:

    1. ஒருவருடைய உள்நோக்கத்தைச் சந்தேகப்படாதீர்கள். உதாரணத்துக்கு, நீங்கள் நின்றுகொண்டிருக்கிற வரிசையில் ஒருவர் உங்களுக்கு முன்னால் புகுந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் செய்தது அநியாயம் என்று நீங்கள் நினைத்தால், அது உங்களுக்கு எரிச்சலைக் கிளப்பலாம். அதற்குப் பதிலாக, அந்த நபர் அப்படி நடந்துகொண்டதற்கு ஏதாவது நல்ல காரணம் இருக்கும் என்று நீங்கள் ஏன் யோசிக்கக்கூடாது? ஒருவேளை நீங்கள் நினைத்தது உண்மையாகக்கூட இருக்கலாம்!

    2. சூழ்நிலையின் கஷ்டமான பக்கத்தைப் பார்க்காதீர்கள். ஒருவேளை, மருத்துவமனையில் அல்லது விமான நிலையத்தில் ரொம்ப நேரம் காத்திருக்கும் சமயத்தை, எதையாவது வாசிப்பதற்கோ, வேலை பார்ப்பதற்கோ, ஈ-மெயில் அனுப்புவதற்கோ பயன்படுத்திக்கொண்டால் காத்திருக்கும் நேரம் கடுப்பாக இருக்காது.

    3. குறுகிய வட்டத்துக்குள் பார்க்காதீர்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நாளைக்கோ அடுத்த வாரமோ இந்த பிரச்சினை எனக்கு பெரிசா தெரியுமா?’ அதோடு, எவையெல்லாம் சிறிய பிரச்சினைகள் என்றும், எவையெல்லாம் பெரிய பிரச்சினைகள் என்றும் பிரித்துப் பாருங்கள்.

ஒழுங்கைக் கடைப்பிடியுங்கள்

ஃபோனைக் கையில் வைத்திருக்கும் ஒரு பெண், அட்டவணை போட உதவும் அப்ளிகேஷனை அதில் பயன்படுத்துகிறார்.

“எல்லா காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடக்க வேண்டும்.”​—1 கொரிந்தியர் 14:40.

அர்த்தம்: உங்களுடைய வாழ்க்கையில் ஒழுங்கைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

  • நம் வாழ்க்கையில் ஓரளவு ஒழுங்கு இருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம். ஒழுங்கு இல்லாமல் போவதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதற்கும் ஒரு காரணம் வேலைகளைத் தள்ளிப்போடுவது. இப்படிச் செய்வதால், முடிக்கப்படாத வேலைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகலாம். இதைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

    1. நடைமுறைக்கு ஒத்துவரும் அட்டவணையைப் போடுங்கள், அதை அப்படியே கடைப்பிடியுங்கள்.

    2. வேலைகளைத் தள்ளிப்போடுவதற்குக் காரணமாக இருக்கும் எண்ணத்தைக் கண்டுபிடித்து, அதைச் சரிசெய்யுங்கள்.

சமநிலையாக இருங்கள்

“ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்.”​—பிரசங்கி 4:6.

அர்த்தம்: வேலையே கதி என்று இருப்பவர்கள் ‘கஷ்டப்பட்டு வேலை செய்வதால்’ வரும் பலன்களை அனுபவிப்பதில்லை. அதை அனுபவிப்பதற்கு அவர்களுக்கு நேரமோ சக்தியோ இல்லாமல் போகலாம்.

  • வேலையையும் பணத்தையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள். நிறைய பணம் இருந்தால், சந்தோஷம் பூத்துக்குலுங்கும் என்றோ மன அழுத்தம் குறையும் என்றோ சொல்ல முடியாது. இதற்கு நேர்மாறான கருத்து வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். “ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் தூங்க முடியாமல் தவிப்பான்” என்று பிரசங்கி 5:12 சொல்கிறது. அதனால், ‘வரவுக்கு ஏற்ற செலவு’ என்பதுபோல் வாழ முயற்சி செய்யுங்கள்.

  • ரிலாக்ஸாக இருக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களை நீங்கள் செய்யும்போது மன அழுத்தம் குறையும். ஆனால், மற்றவர்களுடைய படைப்பை மட்டுமே ரசிக்கும் பொழுதுபோக்கில், அதாவது டிவி பார்ப்பது போன்ற பொழுதுபோக்கில், ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைக்காமல் போகலாம்.

  • அளவுக்கு அதிகமாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஈ-மெயில், மெசேஜ், சமூக வலைதளங்கள் போன்றவற்றைப் அடிக்கடி பார்ப்பதைத் தவிருங்கள். தேவைப்பட்டால் தவிர, வேறு எந்தக் காரணத்துக்காகவும் லீவ் சமயத்தில் அல்லது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு வேலை சம்பந்தமான ஈ-மெயில்களைப் பார்க்காதீர்கள்.

உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்

ஓர் இளைஞர் புன்னகையோடு வெளியில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

“உடற்பயிற்சி . . . நன்மை தரும்.”​—1 தீமோத்தேயு 4:8.

அர்த்தம்: தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருக்க உதவும்.

  • நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வது புத்துணர்ச்சியைக் கொடுக்கும், மன அழுத்தத்தைச் சமாளிக்க உங்கள் உடலைத் தயார்படுத்தும். சத்தான உணவைச் சாப்பிடுங்கள்; வேளைத் தவறாமல் சாப்பிடுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள்.

  • தீர்வுகளாகத் தோன்றுகிற ஆபத்தான பழக்கங்களை, அதாவது புகைப்பிடிப்பது, போதைப்பொருள் எடுத்துக்கொள்வது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களை, தவிருங்கள். உடனடியாக இல்லையென்றாலும் காலப்போக்கில் இவை மன அழுத்தத்தை அதிகரிக்கும்; உங்கள் ஆரோக்கியத்தை சீரழித்துவிடும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைச் சுருட்டிவிடும்.

  • மன அழுத்தத்தைச் சமாளிக்கவே முடியவில்லை என்று தோன்றினால், உங்களுடைய மருத்துவரைப் பாருங்கள். இதுபோன்ற உதவியை எடுத்துக்கொள்வதால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம் கிடையாது.

    “மன அழுத்தத்தை விரட்டும் கருணை”

    “கருணையுள்ளவன் தனக்கு நன்மை செய்துகொள்கிறான். ஆனால், கொடூரமானவன் தனக்குக் கஷ்டத்தை தேடிக்கொள்கிறான்.”​—நீதிமொழிகள் 11:17.

    ஓவர்கமிங் ஸ்ட்ரெஸ் என்ற புத்தகத்திலுள்ள ஒரு அதிகாரத்தின் தலைப்பு, “மன அழுத்தத்தை விரட்டும் கருணை.” மற்றவர்களிடம் கருணையோடு நடந்துகொள்வது ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க உதவும் என்பது அந்தப் புத்தகத்தின் ஆசிரியரான டாக்டர் டிம் கான்டெஃபெரின் கருத்து. ஆனால், கல்நெஞ்சக்காரராக இருக்கும் ஒருவருக்குச் சந்தோஷம் கிடைப்பதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட ஒருவரை யாருக்கும் பிடிக்காது, அவரோடு யாரும் ஒட்டவும் மாட்டார்கள்.

    நம்மீதே நாம் கருணை காட்ட வேண்டும். அதுவும்கூட மன அழுத்தத்திலிருந்து விடுபட நமக்கு உதவும். உதாரணத்துக்கு, நம்மால் செய்ய முடியாத ஒன்றை, செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அதேசமயத்தில் நம்மை நாமே குறைவாக எடைபோடவோ மட்டம் தட்டவோ கூடாது. “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொன்னார்.​—மாற்கு 12:31.

முக்கியமானவற்றுக்கு முதலிடம் கொடுங்கள்

“மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்”​—பிலிப்பியர் 1:10.

அர்த்தம்: எவையெல்லாம் முக்கியமான காரியங்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்.

  • செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப்படுத்தி எழுதுங்கள். அப்படிச் செய்யும்போது, முக்கியமான வேலைகளுக்கு உங்களால் முழு கவனம் செலுத்த முடியும். அதோடு, எந்தெந்த வேலைகளைப் பிறகு செய்யலாம், வேறொருவரைச் செய்ய சொல்லலாம், அல்லது செய்ய வேண்டியதில்லை என்பதை முடிவெடுக்க முடியும்.

  • வாரம் முழுவதும் நீங்கள் நேரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள். அதை வைத்து, நேரத்தை இன்னும் நன்றாகப் பயன்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். நேரத்தை உங்கள் கைக்குள் வைத்துக்கொண்டால், மன அழுத்தம் குறையும்.

  • ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள். சின்னச் சின்ன இடைவேளைகள்கூட உங்களுக்குப் புதுத்தெம்பைக் கொடுக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும்.

ஓர் அப்பாவும் அம்மாவும் தங்களுடைய இளம் மகனோடும் மகளோடும் நேரம் செலவு செய்கிறார்கள்.

உதவி கேளுங்கள்

“கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும். ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.”​—நீதிமொழிகள் 12:25.

அர்த்தம்: கனிவும் கரிசனையும் நிறைந்த வார்த்தைகள் நம்மைத் தூக்கி நிறுத்தும்.

  • உங்களைப் புரிந்துகொள்ளும் ஒருவரிடம் மனதில் இருப்பதைக் கொட்டுங்கள். விஷயங்களை வேறொரு கோணத்திலிருந்து பார்க்க அவர் உங்களுக்கு உதவலாம். அல்லது, பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்க உதவலாம். மனதிலிருப்பதைக் கொட்டிவிட்டாலே போதும்! பாரம் குறைந்துவிடும்.

  • உதவி கேளுங்கள். வேலைகள் அதிகமாகும்போது, சிலவற்றைச் செய்யும்படி இன்னொருவரிடம் கேட்கலாம். அல்லது, நீங்களும் அவரும் சேர்ந்து செய்யலாம்.

  • கூட வேலை செய்பவர் உங்கள் மன அழுத்தத்தைக் கூட்டினால், அந்தச் சூழ்நிலையை நல்ல விதத்தில் மாற்ற முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு, அந்த நபர் செய்வது உங்களை எப்படிப் பாதிக்கிறது என்று கனிவோடு, அதேசமயத்தில் பக்குவமாக, அவரிடம் சொல்ல முடியுமா? (நீதிமொழிகள் 17:27) அதற்கும் அவர் ஒத்துவரவில்லை என்றால், அவரோடு செலவு செய்யும் நேரத்தை உங்களால் குறைத்துக்கொள்ள முடியுமா?

கடவுளின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்

வேலை செய்யும் இடத்தில் ஒருவர் ஜெபம் செய்கிறார்.

“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3.

அர்த்தம்: இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு ஆகியவை மட்டும்தான் நமக்குத் தேவை என்று சொல்ல முடியாது. நமக்குக் கடவுளுடைய வழிநடத்துதலும் தேவை. அவருடைய வழிநடத்துதல் நமக்கு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு, அதைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யும்போது நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்.

  • ஜெபம் செய்வது நமக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ‘கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடும்படி’ அவர் உங்களிடம் சொல்கிறார். (1 பேதுரு 5:7) ஜெபம் செய்யும்போதும் மனதுக்குத் தெம்பளிக்கிற விஷயங்களை யோசிக்கும்போதும் நம் மனம் லேசாகும்.—பிலிப்பியர் 4:6, 7.

  • கடவுளுடைய நண்பராக ஆக உதவும் விஷயங்களைப் படியுங்கள். அவை பைபிளில் இருக்கின்றன. இந்தப் பத்திரிகையில் நாம் பார்த்த குறிப்புகளும்கூட அதிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. பைபிள் நமக்கு ‘ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்கூட’ கொடுக்கிறது. (நீதிமொழிகள் 3:21) பைபிளை வாசிக்க நீங்கள் முயற்சி செய்யலாமே! பைபிளிலுள்ள நீதிமொழிகள் புத்தகத்திலிருந்துகூட நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

மன்னிப்பின் மகிமை

“விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும். தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை மன்னிப்பது அவனுக்கு அழகு.”​—நீதிமொழிகள் 19:11.

“மன அழுத்தம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும், மன்னிப்பது ஆரோக்கியத்தைக் கொடுக்கும்” என்று ஜர்னல் ஆஃப் ஹெல்த் சைக்காலஜி என்ற பத்திரிகையில் டாக்டர் லாரன் டுசைன்ட் சொல்கிறார். “நம் மனதைக் காயப்படுத்திய ஒருவரை மன்னிக்கும்போது, அவர்மேல் இருக்கும் கோபதாபங்கள் மறையும்; அவரிடம் கருணையோடு நடந்துகொள்வோம்” என்றும் அவர் சொல்கிறார். கடைசியாக, மன்னிக்கும் குணம் இருக்கும்போது “மன அழுத்தத்தினால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் குறையும்” என்று சொல்லி முடிக்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்