உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lv பக். 246-பக். 249 பாரா. 1
  • இரத்தத்தின் சிறு கூறுகளும் அறுவை சிகிச்சை முறைகளும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரத்தத்தின் சிறு கூறுகளும் அறுவை சிகிச்சை முறைகளும்
  • ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • இதே தகவல்
  • இரத்தம்​—⁠கடவுள் சொல்வது என்ன?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • ஜீவனுள்ள தேவனுடைய வழிநடத்துதலை பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
lv பக். 246-பக். 249 பாரா. 1

பிற்சேர்க்கை

இரத்தத்தின் சிறு கூறுகளும் அறுவை சிகிச்சை முறைகளும்

இரத்தத்தின் சிறு கூறுகள். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகிய நான்கு முக்கிய பாகங்களிலிருந்து சிறு கூறுகள் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதப்பொருள் உள்ளது. மனிதர்களுடைய அல்லது மிருகங்களுடைய ஹீமோகுளோபினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், கடும் இரத்தசோகைக்கு அல்லது பெரும் இரத்த இழப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிளாஸ்மாவில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது; அதோடு, எண்ணற்ற ஹார்மோன்கள், கனிம உப்புகள், என்ஸைம்கள், தாதுக்களும் சர்க்கரையும் உட்பட்ட சத்துப்பொருள்கள் உள்ளன. இரத்தத்தை உறைய வைக்கும் பொருள்களும், நோயை எதிர்க்கும் பொருள்களும், ஆல்புமின் போன்ற புரதப்பொருள்களும்கூட பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. ஒருவருக்கு ஏதாவது வியாதி வந்தால், காமா குளோபுலின் (ஒருவகை புரதம்) ஊசி மருந்துகளை ஏற்றிக்கொள்ளும்படி மருத்துவர்கள் சிபாரிசு செய்யலாம். இது, அந்த வியாதிக்கான எதிர்ப்பு சக்தி உடையவர்களின் பிளாஸ்மாவிலிருந்து எடுக்கப்படுகிறது. வெள்ளை அணுக்களிலிருந்து இன்டர்ஃபெரான், இன்டர்லூகின் போன்றவை பெறப்படுகின்றன; சில வைரஸ் தொற்றுகளுக்கும் புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

இரத்தத்தின் சிறு கூறுகளைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளலாமா? இதைப் பற்றிய நுணுக்க விவரங்களை பைபிள் தருவதில்லை; ஆகவே, ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிக்கு ஏற்ப கடவுளுக்குமுன் முடிவெடுக்க வேண்டும். சிலர் எல்லா சிறு கூறுகளையுமே அடியோடு மறுத்துவிடலாம்; இரத்தத்தை “தரையில் ஊற்றிவிட வேண்டும்” என்று இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த கட்டளையை அவர்கள் சுட்டிக்காட்டலாம். (உபாகமம் 12:22-24) மற்றவர்களோ, முழு இரத்தத்தையும் அதன் முக்கிய பாகங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், சிறு கூறுகளைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சைகளை ஏற்றுக்கொள்ளலாம். இரத்தத்திலிருந்து சிறு கூறுகள் எடுக்கப்பட்டுவிட்டால் அதற்குமேலும் அது உயிரைப் பிரதிநிதித்துவம் செய்வதில்லை என அவர்கள் சொல்லலாம்.

இரத்தத்தின் சிறு கூறுகள் சம்பந்தமாக நீங்கள் தீர்மானம் எடுப்பதற்குமுன் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: எல்லா சிறு கூறுகளையும் ஏற்றுக்கொள்ள நான் மறுத்துவிட்டால், நோய்களை எதிர்க்கும் சில மருந்துகளையும் இரத்தத்தை உறைய வைத்து இரத்தக்கசிவை நிறுத்தும் சில மருந்துகளையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதை அறிந்திருக்கிறேனா? சிறு கூறுகளில் ஒன்றை அல்லது பலவற்றை நான் ஏன் மறுக்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்கிறேன் என்பதை மருத்துவரிடம் என்னால் விளக்க முடியுமா?

அறுவை சிகிச்சை முறைகள். இரத்தச் செறிவைக் குறைத்தல் (hemodilution), இரத்தச் சுத்திகரிப்பு (cell salvage) ஆகிய இரண்டு சிகிச்சை முறைகள் உள்ளன. இரத்தச் செறிவைக் குறைத்தல் முறையில், உடலிலுள்ள இரத்தம் வெளியே திருப்பிவிடப்பட்டு, கன அளவை அதிகரிக்கும் திரவத்தால் மாற்றீடு செய்யப்பட்டு, பிற்பாடு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இரத்தச் சுத்திகரிப்பு முறையில், அறுவை சிகிச்சையின்போது வடியும் இரத்தம் சேகரிக்கப்பட்டு மீண்டும் உடலில் செலுத்தப்படுகிறது. அதாவது, காயத்திலிருந்து அல்லது அறுவை சிகிச்சையின்போது உடல் உறுப்பிலிருந்து வடியும் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு அல்லது வடிகட்டப்பட்டு, பின்பு நோயாளியின் உடலுக்குள் மீண்டும் செலுத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சை முறைகளை அளிக்கும் விதம் மருத்துவருக்கு மருத்துவர் வித்தியாசப்படலாம்; ஆகவே, தன்னுடைய மருத்துவர் எப்படிச் சிகிச்சை அளிப்பாரென ஒரு கிறிஸ்தவர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சிகிச்சை முறைகள் சம்பந்தமாக நீங்கள் தீர்மானம் எடுப்பதற்குமுன், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய இரத்தம் என் உடலிலிருந்து திருப்பிவிடப்பட்டு, சில நேரத்திற்கு ஓடாமல் நிறுத்தி வைக்கப்படும் என்றால், அந்த இரத்தத்தைத் “தரையில் [ஊற்றுவதற்கு]” பதிலாக மறுபடியும் என் இரத்தமாகவே நினைத்து உடலில் ஏற்றிக்கொள்ள என் மனசாட்சி அனுமதிக்குமா? (உபாகமம் 12:23, 24) சிகிச்சையின்போது என் இரத்தம் எடுக்கப்பட்டு, அதில் மருந்து கலக்கப்பட்டு, மீண்டும் என் உடலுக்குள் செலுத்தப்பட்டால், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சி உறுத்துமா? என் இரத்தத்தைப் பயன்படுத்தி அளிக்கப்படும் எல்லா சிகிச்சை முறைகளையும் நான் மறுத்துவிட்டால், இரத்தப் பரிசோதனையையும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஹீமோடையாலிஸிஸ் சிகிச்சையையும், இதய-நுரையீரல் இயந்திரத்திற்கு இரத்தம் திருப்பிவிடப்படும் சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அறிந்திருக்கிறேனா?’

பக்கம் 247-ன் வரைபடம்

ஒரு கிறிஸ்தவருடைய இரத்தம் அறுவை சிகிச்சையின்போது எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். மருத்துவ பரிசோதனைகள் விஷயத்திலும், ஒருவருடைய இரத்தத்தைக் கொஞ்சமாக எடுத்து, தேவைப்பட்டால் அதில் எதையாவது கலந்து, பின்பு மறுபடியும் அவர் உடலில் ஏற்றும் நவீன சிகிச்சை முறைகள் விஷயத்திலும் அவரே தீர்மானம் எடுக்க வேண்டும்.

டாக்டரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

அறுவை சிகிச்சையோ வேறு சிகிச்சையோ செய்யும்போது இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், உடல்நலப் பராமரிப்பு அட்டை (பல நாடுகளில் உடல்நலப் பராமரிப்பிற்குரிய நிரந்தர அதிகாரப் பத்திரம் [DPA]) போன்ற சட்டப்பூர்வ ஆவணத்தைப் பூர்த்தி செய்துவிட்டீர்களா எனப் பார்த்துக்கொள்ளுங்கள்; உங்களுக்கு இரத்தம் ஏற்றாமலிருக்கவே அது தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, உங்கள் மருத்துவரிடம் பின்வரும் கேள்விகளை நீங்கள் கேட்கலாம்:

  • ஒரு யெகோவாவின் சாட்சியாக, எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் இரத்தம் ஏற்றிக்கொள்ள மாட்டேன் (அதாவது, முழு இரத்தத்தை அல்லது சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா போன்ற இரத்தத்தின் பாகங்களை ஏற்றிக்கொள்ள மாட்டேன்) என்பது எனக்கு சிகிச்சை அளிக்கும் எல்லா மருத்துவப் பணியாளர்களுக்கும் தெரியுமா?

  • எனக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து, இரத்தத்தின் சிறு கூறுகளிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தால், அவற்றின் சதவீதம் என்ன? இந்த மருந்து எவ்வளவு கொடுக்கப்படும், எந்த முறையில் கொடுக்கப்படும்?

  • இரத்தத்தின் சிறு கூறுகளை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி ஒப்புக்கொண்டால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன? வேறு என்ன மாற்று சிகிச்சைமுறைகள் இருக்கின்றன?

இந்த விஷயங்களைத் தீர்மானிப்பதற்கு முன்பு உங்கள் மன சஞ்சலத்தை யெகோவாவிடம் தெரியப்படுத்துங்கள். விசுவாசத்தோடு ‘கேட்டுக்கொண்டே இருக்கிற’ எல்லாருக்கும், தேவையான ஞானத்தைக் கொடுப்பதாக அவர் வாக்குறுதி தந்திருக்கிறார்.—யாக்கோபு 1:5, 6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்