இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுளா?
எல்லாரும் சொல்கிற பதில்கள்:
▪ “ஆமாம், இயேசுதான் சர்வ வல்லமையுள்ள கடவுள்.”
▪ “கடவுள்தான் இயேசுவாக பூமிக்கு வந்தார்.”
இயேசுவின் பதில்:
▪ “நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.” (யோவான் 14:28) தானும் தன்னுடைய அப்பாவும் சமமானவர்கள் அல்ல என்பதை இயேசுவே ஒத்துக்கொண்டார்.
▪ “என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்.” (யோவான் 20:17) தான்தான் கடவுள் என்று இயேசு சொல்லவில்லை, ஆனால் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றே சொன்னார்.
▪ “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேச வேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.” (யோவான் 12:49) இயேசுவின் போதனைகளெல்லாம் அவருடையது அல்ல, அவருடைய அப்பா கற்றுக்கொடுத்ததே.
இயேசு தம்மை கடவுளுடைய குமாரன் என்றுதான் சொன்னார், சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று சொல்லவில்லை. இயேசுதான் கடவுள் என்றால், பூமியிலிருந்தபோது அவர் யாரிடம் ஜெபம் செய்தார்? (மத்தேயு 14:23; 26:26–29) யாரோ ஒருவரிடம் பேசுவதுபோல் அவர் நடித்தாரா?
ஒருசமயம் அவருடைய சீடர்கள் இரண்டுபேர் அவரிடம் வந்து, அவருடைய ராஜ்யத்தில் தங்களுக்கு முக்கியமான ஸ்தானம் கொடுக்கும்படிக் கேட்டார்கள். அப்போது இயேசு என்ன பதில் சொன்னார் தெரியுமா? “என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்.” (மத்தேயு 20:23, பொது மொழிபெயர்ப்பு) அவர்கள் கேட்டதை கொடுப்பதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று இயேசு கூறியபோது பொய்யா சொன்னார்? இல்லவே இல்லை! அதற்குப் பதிலாக, அவர்கள் கேட்டதைக் கொடுப்பதற்கான அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை அவர் தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். ஏன், சில விஷயங்கள் தமக்கும் தெரியாது, தூதர்களுக்கும் தெரியாது, ஆனால் பிதாவுக்கு மட்டுமே தெரியுமென்றும் இயேசு சொல்லியிருக்கிறாரே.—மாற்கு 13:32.
இயேசு பூமியில் இருந்தபோது மாத்திரம்தான் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருந்தாரா? இல்லை. மரித்து உயிர்த்தெழுந்த பிறகும்கூட கடவுளுக்கு இயேசு கீழ்ப்பட்டிருக்கிறார் என்றுதான் பைபிள் சொல்கிறது. “கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். (1 கொரிந்தியர் 11:3) வருங்காலத்தில், “சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்” என்று பைபிள் கூறுகிறது.—1 கொரிந்தியர் 15:28.
இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுள் அல்ல என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அதனால்தான், தம் பிதாவை ‘என் தேவன்’ என்று இயேசு சொன்னார்.—வெளிப்படுத்துதல் 3:2, 12; 2 கொரிந்தியர் 1:3, 4.a (w09 2/1)
[அடிக்குறிப்பு]
a இந்த விஷயத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 201-204-ஐக் காண்க.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
சில விஷயங்கள் தமக்கும் தெரியாது, தூதர்களுக்கும் தெரியாது, ஆனால் பிதாவுக்கு மட்டுமே தெரியும் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே