கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா?
எல்லாரும் சொல்கிற பதில்கள்:
▪ “கடவுள் ரொம்ப பெரியவர், என்னுடைய பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.”
▪ “என்மேல் அவருக்கு அக்கறை இருக்கிற மாதிரி தெரியவில்லை.”
இயேசுவின் பதில்:
▪ “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (லூக்கா 12:6, 7) கடவுளுக்கு உண்மையிலேயே நம்மீது அக்கறை இருக்கிறது என்று இயேசு கற்பித்தார்.
▪ “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:31, 32) நமக்கு என்ன தேவை என்பது கடவுளுக்குத் தெரியுமென்று இயேசு நன்றாக அறிந்திருந்தார்.
கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்று பைபிள் ஆணித்தரமாகச் சொல்கிறது. (சங்கீதம் 55:22; 1 பேதுரு 5:7) அப்படியென்றால், இன்றைக்கு ஏன் நமக்கு இவ்வளவு கஷ்டம்? கடவுள் அன்புள்ளவர், சர்வ சக்தி படைத்தவர் என்றால், இன்னும் ஏன் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரவில்லை?
அநேகர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது, அதில்தான் இந்தக் கேள்விக்குரிய பதிலே இருக்கிறது. இந்தப் பொல்லாத உலகை பிசாசாகிய சாத்தான் ஆளுகிறான் என்பதே அந்த உண்மை. இயேசுவை சாத்தான் சோதித்தபோது, இவ்வுலகத்திலுள்ள எல்லா ராஜ்யங்களையும் அவருடைய கண்முன் காட்டி, “இவைகள் எல்லாவற்றின் மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.—லூக்கா 4:5–7.
அப்படியானால், சாத்தானை இந்த உலகத்திற்கு அதிபதியாக வைத்தது யார்? நமது முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் எப்போது சாத்தானுக்குக் கீழ்ப்படிந்து கடவுளுக்குப் புறமுதுகு காட்டினார்களோ அப்போதே சாத்தானை தங்களுடைய அதிபதியாக தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ஆனால் சாத்தானுடைய ஆட்சி தோல்வியைத்தான் தழுவும் என்பதை நிரூபிப்பதற்காக யெகோவா தேவன் அன்று முதல் இன்றுவரை பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறார். தம்மையே வணங்க வேண்டுமென யெகோவா யாரையும் வற்புறுத்துவதில்லை, ஆனால் தம்மிடம் வருவதற்கு வழியைத் திறந்து வைத்திருக்கிறார்.—ரோமர் 5:10.
கடவுள் நம்மீது அக்கறை வைத்திருப்பதால், சாத்தானுடைய ஆதிக்கத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காக இயேசு மூலம் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார். விரைவில் இயேசு ‘மரணத்திற்கு வழிவகுக்கிற பிசாசைத் தமது மரணத்தினாலே அழித்துவிடுவார்.’ (எபிரெயர் 2:14, NW) இவ்வாறு ‘பிசாசின் செயல்களை ஒழிப்பார்.’—1 யோவான் 3:8, NW.
இந்தப் பூமி பூஞ்சோலையாகப் பூத்துக்குலுங்கும். அந்தச் சமயத்தில், ‘[மனிதர்களுடைய] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோகும்.’—வெளிப்படுத்துதல் 21:4, 5.a (w09 2/1)
[அடிக்குறிப்பு]
a கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
இந்தப் பூமி பூஞ்சோலையாகப் பூத்துக்குலுங்கும்