எல்லா வழிபாட்டு முறைகளையும் கடவுள் ஏற்றுக்கொள்வாரா?
எல்லாரும் சொல்கிற பதில்கள்:
▪ “எம்மதமும் சம்மதம்.”
▪ “யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாதவரை, எல்லா மதமும் நல்ல மதம்தான்.”
இயேசுவின் பதில்:
▪ “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) எம்மதமும் சம்மதம் என்று இயேசு சொல்லவில்லை.
▪ “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22, 23) தன்னைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் அனைவரையும் இயேசு ஏற்றுக்கொள்வதில்லை.
மதப்பற்றுள்ள பலர் தங்களுடைய நம்பிக்கைகளையும் பாரம்பரியங்களையும் பெரிதும் மதிக்கிறார்கள். ஆனால், அவை கடவுளுடைய வார்த்தையான பைபிளுக்கு இசைவாக இல்லையென்றால் என்ன பிரயோஜனம்? மனித பாரம்பரியங்களைப் பின்பற்றுவதால் வரும் ஆபத்துகளை இயேசு எடுத்துக்காட்டினார். “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள்” என அன்றைய மதத் தலைவர்களிடம் சொன்னார். அதோடு, “மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” என்று கடவுள் சொன்ன வார்த்தைகளை அவர்களிடம் சொன்னார்.—மத்தேயு 15:1–9; ஏசாயா 29:13.
வெறும் நம்பிக்கைகள் இருந்தால் மட்டும் போதாது, நடத்தையும் முக்கியம். கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொள்கிறவர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.” (தீத்து 1:16) சொல்லப்போனால், இன்றைய மனிதர்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது: “அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். . . . இவர்களிடமிருந்து விலகு.”—2 தீமோத்தேயு 3:4, 5, ஈஸி டு ரீட் வர்ஷன்.
யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமலிருப்பது நல்லதுதான், ஆனால் அது மட்டும் போதாது. ஏன்? ஏனென்றால் ஒருவர் எந்தக் கெடுதலும் செய்யாமலிருக்கலாம், ஆனால் அவர் தவறான நம்பிக்கையுடையவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே, கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு மிக மிக முக்கியம். (ரோமர் 10:2, 3) இப்படிப்பட்ட திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டு, பைபிளுக்கு இசைவாக நடந்தால் கடவுளுக்குப் பிரியமானவர்களாக இருக்க முடியும். (மத்தேயு 7:21) ஆகவே, சரியான உள்நோக்கம், சரியான நம்பிக்கை, சரியான செயல் ஆகியவை அடங்கியதுதான் உண்மையான மதம். சரியான செயல் என்பது கடவுளுடைய சித்தத்தை அனுதினமும் செய்வதைக் குறிக்கிறது.—1 யோவான் 2:17.
கடவுளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதன் பேரில் அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? வீட்டிலேயே இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள். (w09 2/1)
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
சரியான உள்நோக்கம், சரியான நம்பிக்கை, சரியான செயல் ஆகியவை அடங்கியதுதான் உண்மையான மதம்