உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 4/1 பக். 3
  • கடவுள் தண்டிக்கிறாரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் தண்டிக்கிறாரா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • இதே தகவல்
  • இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    பைபிள் தரும் பதில்கள்
  • இயற்கைப் பேரழிவுகள் ஏன் இத்தனை இத்தனை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • இயற்கை பேரழிவுகள் கடவுளின் தண்டனையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • இயற்கைச் சேதங்கள் கடவுள் பொறுப்பாளியா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 4/1 பக். 3

கடவுள் தண்டிக்கிறாரா?

மார்ச் 2011-ல், ரிக்டர் அளவில் 9.0 எனப் பதிவான பூமியதிர்ச்சியும் அதைத் தொடர்ந்த சுனாமியும் ஜப்பானைத் தாக்கியபோது, ஒரு பிரபல அரசியல்வாதி இப்படிச் சொன்னார்: “இந்த இயற்கைப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் கண்ணீர் சிந்துகிறேன். இருந்தாலும், இது கடவுள் கொடுத்த தண்டனை என்றே நான் நினைக்கிறேன்.”

ஜனவரி 2010-ல், ஹெய்டியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சிக்கு 2,20,000-க்கும் மேலானவர்கள் பலியானபோது, டி.வி-யில் மதப் பிரசங்கம் செய்யும் பிரபல போதகர் இவ்வாறு சொன்னார்: அந்த ஊர் மக்கள் “சாத்தானோடு கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடவுள் பக்கம் திரும்ப” வேண்டியிருக்கிறது.

பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் 79 பேர், நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்தபோது, “நம்முடைய மனசாட்சி மரத்துப்போயிருக்கிறது, கடவுள் அதைத் தட்டியெழுப்ப விரும்புகிறார்” என்று அங்கிருந்த கத்தோலிக்க பாதிரியார் சொன்னார். தங்கள் நாட்டில் அடிக்கடி வரும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி ஒரு செய்தித்தாள் அறிக்கை இப்படிச் சொன்னது: “மனிதர்கள் மீதுள்ள கட்டுக்கடங்கா கோபத்தைக் கொட்டத்தான், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கடவுள் கொண்டுவருகிறார் என்று 21 சதவீத மக்கள் நம்புகிறார்கள்.”

கெட்டவர்களை அழிக்கவே கடவுள் இயற்கைப் பேரழிவுகளைக் கொண்டுவருகிறார் என்பது இன்றோ நேற்றோ தோன்றிய கருத்தல்ல. 1755-ல் அடுத்தடுத்து வந்த பூமியதிர்ச்சியும், நெருப்பும், சுனாமியும் போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் நகரைச் சின்னாபின்னமாக்கின. அதனால் கிட்டத்தட்ட 60,000 பேர் உயிரிழந்தார்கள். அப்போது வால்டேர் என்ற பிரபல தத்துவஞானி கேட்டார்: “காமக் களியாட்டங்கள் கொடி கட்டிப் பறக்கும் பாரிஸைவிடவா லிஸ்பன் கெட்டுப்போய்விட்டது?” இயற்கைப் பேரழிவுகள் எல்லாம் கடவுளுடைய தண்டனையாக இருக்குமோ என்று லட்சக்கணக்கானோர் நினைக்கிறார்கள். சொல்லப்போனால், நிறைய நாடுகளில் அதை தெய்வச் செயல் என்றே சொல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது, நமக்குச் சில கேள்விகள் வரலாம்: உண்மையிலேயே மக்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காகத்தான் இயற்கைப் பேரழிவுகளைக் கடவுள் கொண்டுவருகிறாரா? சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கிற எக்கச்சக்கமான பேரழிவுகளுக்கும் அதுதான் காரணமா?

இந்த அழிவுகளுக்கெல்லாம் கடவுள்தான் காரண கர்த்தா என்று சொல்கிற நிறைய பேர் அதற்கு பைபிள் பதிவுகளை உதாரணமாகக் காட்டுகிறார்கள்; ‘இயற்கைச் சக்திகளைப் பயன்படுத்தி அன்றைக்கு கடவுள் மக்களை அழித்தாரே’ என்று சொல்கிறார்கள். (ஆதியாகமம் 7:17-22; 18:20; 19:24, 25; எண்ணாகமம் 16:31-35) மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால், அந்தப் பதிவுகளை அலசிப் பார்த்தால், கடவுள் கொண்டுவந்த அழிவு வித்தியாசமாக இருந்தது தெரியும். அந்த ஒவ்வொரு அழிவிலும் பொதுவான மூன்று விஷயங்கள் இருந்தன. (1) அழிவைப் பற்றி முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டது. (2) திருந்தாத ஜனங்களையும் எச்சரிக்கைகளை அசட்டை செய்தவர்களையும் மட்டும்தான் கடவுள் அழித்தார். இன்று நடக்கும் பேரழிவுகளைப் போல நல்லவர்களையும் கெட்டவர்களையும் சேர்த்து அழிக்கவில்லை. (3) நல்லவர்கள் தப்பிப்பதற்காக கடவுள் முன்கூட்டியே வழி செய்தார்.—ஆதியாகமம் 7:1, 23; 19:15-17; எண்ணாகமம் 16:23-27.

எனவே, இன்று லட்சக்கணக்கான மக்களின் உயிரைச் சூறையாடியிருக்கும் இயற்கைப் பேரழிவுகளுக்குக் கடவுள் காரணமில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்படியென்றால், இன்று ஏன் இத்தனை அதிக இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன? பேரழிவுகள் வருவதற்கு முன்பும், வந்த பின்பும் நாம் என்ன செய்யலாம்? பேரழிவுகளே ஏற்படாத காலம் என்றைக்காவது வருமா? இந்தக் கேள்விகளுக்கு அடுத்தடுத்து வரும் கட்டுரைகள் பதிலளிக்கும். (w11-E 12/01)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்