ஜெபத்தைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?
“கடவுள் இருக்கிறாரானு எனக்கு சந்தேகமா இருந்தது. ஆனாலும் சிலசமயம் ஜெபம் பண்ணுவேன். என் ஜெபத்தை கேட்க யாரும் இல்லைனு தோணும். இருந்தாலும் யாராவது கேட்பாங்கனு நம்பினேன். ஏன் வாழ்றேன்னே தெரியல, சந்தோஷமும் இல்லை. தைரியமில்லாதவங்கதான் கடவுள நம்புவாங்கனு நெனச்சதுனால நான் கடவுள நம்பல.”—பெட்ரிஷியா,a அயர்லாந்து.
நீங்களும் பெட்ரிஷியாவைப் போலதான் நினைக்கிறீர்களா? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாவிட்டாலும் ஜெபம் செய்கிறீர்களா? உங்களைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள். பின்வரும் ஆய்வுகளைக் கவனியுங்கள்.
◼ 2,200 பிரிட்டிஷ் மக்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 22 சதவீதத்தினர் உலகத்தை உண்டாக்கிய கடவுள் இருக்கிறார் என்றும் அவர் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்றும் நம்புவதாகச் சொன்னார்கள். ஆனால், 55 சதவீதத்தினர் அவ்வப்போது ஜெபிப்பதாகச் சொன்னார்கள்.
◼ நான்கு கண்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 10,000 பேர் கலந்துகொண்டார்கள். அதில் 30 சதவீதத்தினர் நாத்திகர்கள், ஆனாலும் ஜெபம் செய்வார்களாம்.
ஏன் இந்தச் சந்தேகம்?
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் சொன்னார்: “கடவுள நான் நம்பல. ஏன்னா மக்கள கட்டுப்பாட்டுக்குள்ள வைக்கவும் பணம் சம்பாதிக்கவும்தான் மதத்தை கண்டுபிடிச்சாங்கனு நெனச்சேன். கடவுள் இருந்தா இவ்வளவு அநியாயம் நடக்குமானு யோசிப்பேன். ஆனாலும், சிலசமயம் அமைதியா உட்கார்ந்து ‘ஏதோ ஒன்னுகிட்ட’ பேசிட்டு இருப்பேன். அதோட, ‘நான் ஏன் இந்த உலகத்தில இருக்கேன்?’-னு என்ன நானே கேட்டுக்குவேன்.”
ஜெபத்தைக் கேட்க யாராவது இருக்கிறார்களா என்று சந்தேகிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. அநேகருடைய விஷயத்தில், கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது இந்தச் சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. அந்தக் கேள்விகளில் சில:
◼ படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா?
◼ அநியாயம் அக்கிரமம் நடப்பதற்கு மதம் ஏன் காரணமாக இருக்கிறது?
◼ கஷ்டத்தைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் நம்பிக்கையோடு ஜெபம் செய்வீர்கள், அல்லவா? (w12-E 07/01)
[அடிக்குறிப்பு]
a இத்தொடர் கட்டுரைகளில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.