கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக நடந்துகொள்ளுங்கள்!
“நற்செய்திக்குத் தகுதியானவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.”—பிலி. 1:27.
உங்கள் பதில்?
யார் மட்டுமே கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்க முடியும்?
கடவுளுடைய அரசாங்கத்தின் மொழியை, சரித்திரத்தை, சட்டங்களைக் கற்றுக்கொள்வது என்றால் என்ன?
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அவருடைய நெறிமுறைகளை நேசிப்பதை எப்படிக் காட்டுகிறார்கள்?
1, 2. பிலிப்பி சபையினருக்கு பவுல் கொடுத்த அறிவுரை விசேஷ அர்த்தத்தைத் தந்தது என்று ஏன் சொல்கிறோம்?
“நற்செய்திக்குத் தகுதியானவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” என்று பிலிப்பி சபையினரை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். (பிலிப்பியர் 1:27-ஐ வாசியுங்கள்.) “நடந்துகொள்ளுங்கள்” என்ற வார்த்தைக்கு பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, குடிமக்களாக நடந்துகொள்ளுங்கள் என்றும் மொழிபெயர்க்கப்படலாம். பிலிப்பி சபையினருக்கு இந்த வார்த்தைகள் விசேஷ அர்த்தத்தைக் கொடுத்தன. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், குறிப்பிட்ட சில நகரங்களுக்கே ரோம குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. அவற்றில் பிலிப்பி பட்டணமும் ஒன்றெனத் தெரிகிறது. பிலிப்பி பட்டணத்திலும் ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் இருந்தவர்கள் தங்களுக்கு இருந்த ரோம குடியுரிமையைக் குறித்து பெருமைப்பட்டுக்கொண்டார்கள். ரோம சட்டத்தின்கீழ் விசேஷப் பாதுகாப்பையும் பெற்றார்கள்.
2 ஆனால், பிலிப்பி சபையினர் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு அதைவிட முக்கியமான காரணம் இருந்தது. அவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்பதால் அவர்களது குடியுரிமை “பரலோகத்தில்” இருப்பதை பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டினார். (பிலி. 3:20) அவர்கள் பூமியிலுள்ள அரசாங்கத்தின் குடிமக்களாக அல்ல, கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருந்தார்கள். அதனால், எந்த நாட்டவருக்கும் கிடைக்காத பாதுகாப்பும் பலன்களும் அவர்களுக்குக் கிடைத்தன.—எபே. 2:19-22.
3. (அ) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக ஆகும் வாய்ப்பு யாருக்கெல்லாம் இருக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைக் குறித்து சிந்திப்போம்?
3 குடிமக்களாய் நடந்துகொள்ளும்படி பவுல் கொடுத்த அறிவுரை, முக்கியமாகக் கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிறவர்களுக்குப் பொருந்துகிறது. (பிலி. 3:20) ஆனால், கடவுளுடைய ஆட்சியின்கீழ் பூமியில் வாழும் குடிமக்களுக்கும் அது பொருந்துகிறது. எப்படி? உண்மைக் கிறிஸ்தவர்கள் அனைவருமே ஒரே ராஜாவுக்குத்தான், யெகோவாவுக்குத்தான் சேவை செய்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லாருமே ஒரே நெறிமுறைகளை, யெகோவாவுடைய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். (எபே. 4:4-6) இன்று, வளமான ஒரு நாட்டில் குடியுரிமை பெற மக்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக ஆவதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நாம் இன்னும் எந்தளவு உயர்வாய்க் கருத வேண்டும்! அந்தப் பாக்கியத்தின் மதிப்பை நன்கு புரிந்துகொள்ள இன்று ஒரு நாட்டில் குடியுரிமை பெறுவதற்கும்... கடவுளுடைய அரசாங்கத்தில் குடியுரிமை பெறுவதற்கும்... ஒருவரிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைப் பார்ப்போம். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டிய மூன்று காரியங்களைப் பற்றியும் சிந்திப்போம்.
குடிமக்களிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
4. சுத்தமான பாஷை எது, அந்த மொழியை நாம் எப்படி “பேசலாம்”?
4 மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் நாட்டில் குடியுரிமை பெற விரும்புகிறவர்கள் தேசிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று சில அரசாங்கங்கள் எதிர்பார்க்கின்றன. குடியுரிமை கிடைத்த பிறகும்கூட சிலர் அந்தப் புதிய மொழியை முழுமையாகக் கற்றுக்கொள்ள பல வருடங்கள் கடுமையாக முயற்சி செய்து வரலாம். அவர்கள் அந்த மொழியின் இலக்கணத்தைச் சீக்கிரமாகக் கற்றுக்கொள்ளலாம், ஆனால் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கக் காலம் எடுக்கலாம். அதேபோல், கடவுளுடைய அரசாங்கமும் அதன் குடிமக்கள் “சுத்தமான பாஷை” என்று பைபிள் குறிப்பிடும் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. (செப்பனியா 3:9-ஐ வாசியுங்கள்.) அது என்ன மொழி? கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி பைபிளிலுள்ள சத்தியமே அந்த மொழி. நம்முடைய நடத்தை கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் இசைவாக இருக்கும்போது நாம் அந்த மொழியை “பேசுகிறோம்.” கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் பைபிளின் அடிப்படை போதனைகளைச் சீக்கிரமாகக் கற்றுக்கொண்டு ஞானஸ்நானமும் எடுத்துவிடலாம். ஆனால், ஞானஸ்நானம் எடுத்த பின்பும் சுத்தமான பாஷையை இன்னும் தெளிவாக “பேச” அவர்கள் கடினமாய் முயற்சி செய்ய வேண்டும். எந்த விதத்தில்? பைபிள் நியமங்களை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடைப்பிடிக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.
5. யெகோவாவுடைய அமைப்பின் சரித்திரத்தைப் பற்றி நாம் ஏன் முடிந்தவரை எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்?
5 சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டின் குடிமகனாய் ஆக விரும்பும் ஒருவர் அந்நாட்டு அரசாங்கத்தின் சரித்திரத்தைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக ஆக விரும்புகிறவர்கள் அந்த அரசாங்கத்தைப் பற்றி முடிந்தவரை எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், பூர்வ இஸ்ரவேலர் மத்தியில் சேவை செய்த கோராகுவின் மகன்கள் நமக்கு முன்மாதிரியாய் இருக்கிறார்கள். எருசலேம் நகரத்தையும் அதன் வழிபாட்டு ஸ்தலத்தையும் அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அந்த நகரத்தின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவதில் பெருமைப்பட்டார்கள். எருசலேம் நகரமோ வழிபாட்டு ஸ்தலமோ அல்ல, அவை எதற்குப் படமாக இருந்தனவோ அதுவே அவர்களுடைய மனதைக் கவர்ந்தது. எருசலேம் ‘மகா ராஜாவின் நகரமாக’ ஆம், யெகோவாவின் நகரமாகத் திகழ்ந்தது. ஏனென்றால், அதுதான் உண்மை வழிபாட்டின் மையமாக இருந்தது. யெகோவா கொடுத்த திருச்சட்டம் அங்குதான் கற்பிக்கப்பட்டது. எருசலேம் ராஜா ஆட்சிசெய்த மக்களுக்குத்தான் யெகோவா அன்பும் கருணையும் காட்டினார். (சங்கீதம் 48:1, 2, 9, 12, 13-ஐ வாசியுங்கள்.) கோராகுவின் மகன்களைப் போல், பூமியில் யெகோவா பயன்படுத்தி வரும் அமைப்பின் சரித்திரத்தைத் தெரிந்துகொள்ளவும் அதைப் பற்றி மக்களிடம் பேசவும் நீங்கள் விரும்புகிறீர்களா? யெகோவாவின் அமைப்பைப் பற்றியும் தம்முடைய மக்களுக்கு அவர் பக்கபலமாக இருப்பதைப் பற்றியும் நீங்கள் எந்தளவு தெரிந்துகொள்கிறீர்களோ அந்தளவு அவருடைய அரசாங்கத்தை நிஜமான ஓர் அரசாங்கமாகக் கருதுவீர்கள். அந்த அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசை நாளுக்கு நாள் உங்களுக்குள் பெருகும்.—எரே. 9:24; லூக். 4:43.
6. யெகோவாவுடைய அரசாங்கத்தின் சட்டங்களையும் நியமங்களையும் நாம் அறிந்துகொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பது ஏன் நியாயமாக இருக்கிறது?
6 சட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும். தங்கள் குடிமக்கள் நாட்டின் சட்டதிட்டங்களை அறிந்துகொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று அரசாங்கங்கள் எதிர்பார்க்கின்றன. அப்படியென்றால், யெகோவாவும் தம்முடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அனைவரும் அதன் சட்டங்களையும் நியமங்களையும் அறிந்துகொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயம்தானே! (ஏசா. 2:3; யோவா. 15:10; 1 யோ. 5:3) மனிதர்களுடைய சட்டங்களில் பெரும்பாலும் ஓட்டைகள் இருக்கும். சிலசமயங்களில் அவை நியாயமற்றவையாகவும் இருக்கலாம். ஆனால், “யெகோவாவின் சட்டம் நிறைவானது.” (சங். 19:7, NW) யெகோவாவின் சட்டதிட்டங்களை நாம் மனதார நேசிக்கிறோமா? அவருடைய வார்த்தையைத் தினந்தோறும் வாசிக்கிறோமா? (சங். 1:1, 2) கடவுளுடைய சட்டதிட்டங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம்தான் முயற்சி எடுத்து அதைக் கவனமாக வாசிக்க வேண்டும். வேறு யாரும் நமக்காக அதை வாசிக்க முடியாது.
கடவுளுடைய நெறிமுறைகளை நேசிக்கிறார்கள்
7. கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் ஏன் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள்?
7 என்றென்றும் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாய் இருப்பதற்கு, அவருடைய நெறிமுறைகளை நாம் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, அவற்றை நேசிக்கவும் வேண்டும். தங்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் தாங்கள் கட்டுப்பட்டு நடப்பதாக நிறையக் குடிமக்கள் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், ஏதாவதொரு சட்டத்தைக் கடைப்பிடிப்பது தங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது... யாரும் தங்களைக் கவனிக்கவில்லை... என்றால் அதை மீறிவிடுகிறார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள், ‘மனிதர்களைப் பிரியப்படுத்துகிறவர்களாக’ இருக்கிறார்கள். (கொலோ. 3:22) ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அப்படியில்லை. யார் பார்த்தாலும் சரி பார்க்காவிட்டாலும் சரி, கடவுளுடைய சட்டங்களுக்கு நாம் மனதாரக் கீழ்ப்படிகிறோம். ஏன்? அந்தச் சட்டங்களை இயற்றியவரை நாம் நெஞ்சார நேசிக்கிறோம்.—ஏசா. 33:22; லூக்கா 10:27-ஐ வாசியுங்கள்.
8, 9. கடவுளுடைய சட்டங்களை நீங்கள் உண்மையிலேயே நேசிக்கிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?
8 கடவுளுடைய சட்டங்களை நீங்கள் உண்மையிலேயே நேசிக்கிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்? ‘இதெல்லாம் அவரவர் சொந்த விருப்பம்’ என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்தில், உதாரணத்திற்கு ஆடை அலங்காரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், உங்களுக்கு அறிவுரை கொடுக்கப்படும்போது நீங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமகனாக ஆகும் முன், நீங்கள் ஏனோதானோவென்று உடை உடுத்தியிருக்கலாம். அல்லது மற்றவர்களுடைய மனதில் சபலத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆடைகளை அணிந்திருக்கலாம். ஆனால், கடவுள் மீதான உங்கள் அன்பு வளர வளர, அவருக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் உடை உடுத்த நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். (1 தீ. 2:9, 10; 1 பே. 3:3, 4) இப்போது நீங்கள் அடக்கமாக உடை உடுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் உடை, கண்களை உறுத்துவதாகச் சபையிலுள்ள அநேகர் நினைக்கிறார்கள் என்று ஒரு மூப்பர் உங்களிடம் வந்து சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? ‘நான் ஒன்றும் அப்படி மோசமாக உடுத்துவதில்லையே’ என்று நியாயப்படுத்துவீர்களா... ‘இதில் என்ன இருக்கிறது?’ என்று கோபப்படுவீர்களா... அல்லது ‘என் இஷ்டப்படிதான் உடுத்துவேன்!’ என்று பிடிவாதம் பிடிப்பீர்களா? கடவுளுடைய அரசாங்கத்தின் ஓர் அடிப்படைச் சட்டம்... அதன் குடிமக்கள் அனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்பதே. (1 பே. 2:21) ‘கிறிஸ்து தமக்கே பிரியமாக நடக்கவில்லை’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அதேபோல் ‘நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களுக்கு நன்மை உண்டாகும்படி, அதாவது அவர்களைப் பலப்படுத்தும்படி, அவர்களுக்குப் பிரியமாக நடக்க வேண்டும்’ என்றார். (ரோ. 15:2, 3) சபையில் சமாதானம் தழைப்பதற்கு... முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவர் தன் பங்கில் தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தாலும் மற்றவர்களுடைய மனசாட்சியை மதித்து நடப்பார்.—ரோ. 14:19-21.
9 அடுத்ததாக, செக்ஸ் மற்றும் திருமணத்தைப் பற்றி நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இல்லாதவர்கள் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கலாம், ஆபாசத்தை ஜாலியான பொழுதுபோக்காகக் கருதலாம், மணத்துணையை விட்டுவிட்டு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது... மணத்துணையை விவாகரத்து செய்வது... போன்றவையெல்லாம் அவரவர் சொந்த விஷயம் என்று நினைக்கலாம். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அவர்களைப் போல் பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காதவர்களும் அல்ல, மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களும் அல்ல. அவர்களில் பலர், முன்பு ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் இப்போது திருமணத்தையும் தாம்பத்தியத்தையும் கடவுள் கொடுத்த வரமாகக் கருதுகிறார்கள். யெகோவாவின் உயர்ந்த நெறிமுறைகளை அவர்கள் பொன்னெனப் போற்றுகிறார்கள். ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை விட்டு வெளியேவர மறுப்பவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். (1 கொ. 6:9-11) என்றாலும், இருதயம் திருக்குள்ளது, வஞ்சகமிக்கது என்ற உண்மையையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். (எரே. 17:9) எனவே, தொடர்ந்து உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் திட்டவட்டமான அறிவுரைகளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
எச்சரிக்கைகளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்
10, 11. கடவுளுடைய அரசாங்கம் உரிய நேரத்தில் என்ன எச்சரிக்கைகளை நமக்குக் கொடுக்கிறது, அந்த எச்சரிக்கைகளை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
10 நம்முடைய உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள உணவு, மருந்து விஷயத்தில் இன்றுள்ள அரசாங்கங்கள் சில சமயங்களில் நம்மை எச்சரிக்கலாம். உண்மைதான், எல்லா உணவுப் பொருள்களும் எல்லா மருந்து மாத்திரைகளும் கெடுதலானவை அல்ல. ஆனால், ஏதாவதொரு உணவோ மருந்தோ நம் உயிருக்கே உலை வைக்கும் எனத் தெரியவந்தால், குடிமக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் எச்சரிக்கை கொடுக்கலாம். அப்படி எச்சரிக்காவிட்டால், கவனக்குறைவாக இருந்ததற்காக அதன்மேல்தான் பழி சுமத்தப்படும். அதேபோல், கடவுளுடைய அரசாங்கமும் தார்மீக, ஆன்மீக ஆபத்துகளைக் குறித்து உரிய நேரத்தில் திட்டவட்டமான எச்சரிக்கைகளை அளிக்கிறது. உதாரணத்திற்கு, தகவல் தொடர்பிலும் கல்வித் துறையிலும் பொழுதுபோக்குத் துறையிலும் இப்போது இன்டர்நெட் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளுடைய அமைப்பும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி நிறைய நல்ல காரியங்களைச் செய்கிறது. இருந்தாலும், இன்டர்நெட்டில் உள்ள பல சைட்டுகள் ஒழுக்கங்கெட்ட காரியங்களில் ஈடுபடத் தூண்டுகின்றன, யெகோவாவிடம் உள்ள நம் பந்தத்தைக் கெடுத்துப் போடுகின்றன. ஆபாச வெப் சைட்டுகள் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களுடைய ஆன்மீக நலனுக்கு அச்சுறுத்தலாய் இருக்கின்றன. அப்படிப்பட்ட சைட்டுகளைப் பற்றி எத்தனையோ வருடங்களாக உண்மையுள்ள அடிமை வகுப்பார் நம்மை எச்சரித்து வந்திருக்கிறார்கள். நம்முடைய ஆன்மீக நலனைக் காப்பதற்காக அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கைகளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!
11 சமீப ஆண்டுகளில், இன்னொரு விதமான சைட் பிரபலமடைந்திருக்கிறது. அந்த சைட்டை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் அது பிரயோஜனமாக இருக்கும். ஆனால், சோஷியல் நெட்வொர்க்கிங் வெப் சைட்டுகள் என அழைக்கப்படும் இந்த சைட்டுகளிலும் நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. இந்த சைட்டுகளில் நமக்கே தெரியாமல் மோசமான ஆட்களோடு நாம் சகவாசம் வைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. (1 கொ. 15:33) இப்படிப்பட்ட சைட்டுகளைப் பயன்படுத்துகையில் ஜாக்கிரதையாக இருக்கும்படி கடவுளுடைய அமைப்பு நம்மை எச்சரிப்பதில் ஆச்சரியமேதுமில்லை. சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்டுகளைப் பற்றி உண்மையுள்ள அடிமை வகுப்பார் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் நீங்கள் வாசித்துவிட்டீர்களா? அந்தக் கட்டுரைகளையெல்லாம் வாசித்துப் பார்க்காமல் அந்த சைட்டுகளை நாம் பயன்படுத்தினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாக இருக்கும்!a அது எப்படி இருக்குமென்றால்... மருந்து பாட்டிலில் “எச்சரிக்கை:” என்பதன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவலை வாசிக்காமல் அதைச் சாப்பிடுவது போல் இருக்கும்.
12. எச்சரிக்கைகளை அசட்டை செய்வது ஏன் மடத்தனம்?
12 உண்மையுள்ள அடிமை கொடுக்கும் எச்சரிக்கைகளைக் காதில் போட்டுக்கொள்ளாதவர்கள் தங்களுக்கும் சரி தங்கள் அன்பானவர்களுக்கும் சரி, ஆபத்தைத் தேடிக்கொள்கிறார்கள். சிலர் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறார்கள் அல்லது பாலியல் முறைகேட்டில் விழுந்திருக்கிறார்கள். அதுமட்டுமா, தாங்கள் என்ன செய்தாலும் யெகோவா பார்க்க மாட்டார் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். நாம் செய்யும் தவறுகளை யெகோவாவிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்! (நீதி. 15:3; எபிரெயர் 4:13-ஐ வாசியுங்கள்.) அவர்கள் திருந்த வேண்டுமெனக் கடவுள் விரும்புகிறார். அவர்களுக்கு உதவி செய்ய மூப்பர்களைப் பயன்படுத்துகிறார். (கலா. 6:1) என்றாலும், குறிப்பிட்ட சில தவறுகளைச் செய்பவர்களின் குடியுரிமையை இன்றைய அரசாங்கங்கள் எப்படி ரத்து செய்துவிடுகின்றனவோ அப்படியே தம்முடைய நெறிமுறைகளை வேண்டுமென்றே மீறுகிறவர்களின் குடியுரிமையை யெகோவாவும் ரத்து செய்துவிடுவார்.b (1 கொ. 5:11-13) என்றாலும், யெகோவா கருணையுள்ளவர். மனந்திரும்பி வருகிறவர்களை அவர் மீண்டும் ஏற்றுக்கொள்வார். என்றென்றும் தம்முடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கவும் அவர்களுக்கு உதவி செய்வார். (2 கொ. 2:5-8) இப்படிப்பட்ட அன்பான அரசருக்கு நாம் சேவை செய்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
கல்வியின் மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள்
13. கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் கல்வியின் மதிப்பை உணர்ந்திருப்பதை எப்படிக் காட்டுகிறார்கள்?
13 அநேக அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்குக் கல்வி புகட்ட நிறைய முயற்சிகள் எடுக்கின்றன. பள்ளிக்கூடங்களையும், தொழிற்பயிற்சிக் கூடங்களையும் நடத்துகின்றன. கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் இந்தப் பள்ளிகளைப் பயன்படுத்திக்கொண்டு நன்றாக எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிறார்கள், சொந்தக் காலில் நிற்பதற்கு ஏதாவது வேலையைத் தேடிக்கொள்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாகத் தங்களுக்கு வழங்கப்படும் கல்வியை மற்ற எல்லாக் கல்வியையும்விட அதிகமாய் மதிக்கிறார்கள். கிறிஸ்தவச் சபை மூலம் யெகோவா தம் மக்களுக்குக் கல்வி புகட்டுகிறார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டும்படி தம் அமைப்பின் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஒவ்வொரு மாதமும் உண்மையுள்ள அடிமை வகுப்பார் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் மூலம் பைபிள் அடிப்படையிலான விஷயங்களை நிறையவே வழங்குகிறார்கள். நமக்குக் கல்விபுகட்ட கடவுளுடைய அரசாங்கம் முக்கியமாக இந்தப் பத்திரிகைகளைப் பயன்படுத்துகிறது. எனவே, ஒருநாளைக்கு ஓரிரு பக்கங்களை வாசித்தாலே போதும், அவற்றை முழுமையாகப் படித்து முடித்துவிடுவீர்கள். பூரணமாகப் பயனடைவீர்கள்.
14. (அ) நாம் என்ன பயிற்சியைப் பெறுகிறோம்? (ஆ) குடும்ப வழிபாடு சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட என்ன ஆலோசனைகளை நீங்கள் பயன்படுத்தி பயனடைந்திருக்கிறீர்கள்?
14 ஒவ்வொரு வாரமும் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் சபைக் கூட்டங்களில் பயிற்சி பெறுகிறார்கள். உதாரணத்திற்கு, கடவுளுடைய வார்த்தையைத் திறம்பட போதிக்க 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேவராஜ்ய ஊழியப் பள்ளி அவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்களா? சமீப வருடங்களாக, வாரத்திற்கு ஒருமுறை குடும்ப வழிபாட்டை நடத்தும்படி உண்மையுள்ள அடிமை வகுப்பார் நம்மை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஏற்பாடு குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கிறது. இது சம்பந்தமாக நம்முடைய பிரசுரங்களில் வெளிவந்த ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றியிருக்கிறீர்களா?c
15. நமக்குக் கிடைத்திருக்கும் பாக்கியங்களிலேயே மிகப் பெரிய பாக்கியம் எது?
15 இன்றைய அரசாங்கத்தின் குடிமக்கள் ஓர் அரசியல் கட்சியை ஆதரிக்க ஊர்வலம் போகிறார்கள், வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களோ உலக முழுவதிலும் தெருவில் நின்றும் வீடு வீடாகச் சென்றும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றி மும்முரமாய் அறிவிக்கிறார்கள். சொல்லப்போனால், முந்தைய படிப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டபடி யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கும் காவற்கோபுர பத்திரிகை இன்று உலகிலேயே அதிகமாய் விநியோகிக்கப்படும் பத்திரிகையாக இருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் பாக்கியங்களிலேயே மிகப் பெரிய பாக்கியம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பதாகும். இந்த வேலையில் நீங்கள் முழுமூச்சோடு ஈடுபடுகிறீர்களா?—மத். 28:19, 20.
16. கடவுளுடைய அரசாங்கத்தின் சிறந்த குடிமகனாக நடந்துகொள்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
16 சீக்கிரத்தில், இந்தப் பூமியைக் கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே ஆட்சி செய்யும். நம் தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அது கவனம் செலுத்தும். ஆம், அதன் குடிமக்களுடைய ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, சமூக வாழ்க்கையிலும் கவனம் செலுத்தும். அந்தச் சமயத்தில், கடவுளுடைய அரசாங்கத்தில் நீங்கள் ஒரு நல்ல குடிமகனாக இருப்பீர்களா? அதை நிரூபித்துக் காட்ட இதுதான் சமயம். ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன தீர்மானம் எடுத்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகச் செய்யுங்கள். அதன் மூலம் கடவுளுடைய அரசாங்கத்தின் சிறந்த குடிமக்களாக நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.—1 கொ. 10:31.
[அடிக்குறிப்புகள்]
a உதாரணத்திற்கு, விழித்தெழு! பத்திரிகையின் ஜனவரி-மார்ச் 2012 தேதியிட்ட இதழில் பக்கங்கள் 14-21-ஐயும், ஜூலை-செப்டம்பர் 2012 தேதியிட்ட இதழில் பக்கங்கள் 29-32-ஐயும் பாருங்கள்.
b மார்ச் 15, 2012 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 30-31-ஐப் பாருங்கள்.
c ஆகஸ்ட் 15, 2011 தேதியிட்ட காவற்கோபுர இதழில் பக்கங்கள் 6-7-ஐயும், ஜனவரி 2011 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கங்கள் 3-6-ஐயும் பாருங்கள்.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
இன்டர்நெட் சம்பந்தமாக உண்மையுள்ள அடிமை வகுப்பார் தரும் எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்களா?
[பக்கம் 12-ன் படம்]
கோராகுவின் மகன்களைப் போல உண்மை வழிபாட்டையும் அதன் சரித்திரத்தையும் நேசிக்கிறீர்களா?
[பக்கம் 15-ன் படம்]
நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் கடவுளுடைய அரசாங்கத்தின் சிறந்த குடிமக்கள் ஆவதற்கு குடும்ப வழிபாடு பெரிதும் உதவும்