வரலாற்றுச் சுவடுகள்
அன்றைய பில்கிரிம்களுடன் ஒரு பயணம்
“என்னால வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யவே முடியாது!” முன்பின் தெரியாத நபர்களிடம் போய் நற்செய்தியைச் சொல்ல வேண்டும் என்று வரும்போது... புதிதாக பைபிளைப் படிக்கும் பலர் இப்படிப் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், அனுபவம் வாய்ந்த ஒரு மேடை பேச்சாளர், ஒரு பைபிள் போதகர் இப்படிப் புலம்பினார் என்றால் நம்ப முடிகிறதா?
ஜயன்ஸ் உவாட்ச் டவரின் (ஆங்கிலம்) வாசகர்கள் பலர் சர்ச்சிலிருந்து விலகி வந்த பிறகு பைபிள் சத்தியங்களைத் தெரிந்துகொள்ள தங்களைப் போலவே ஆர்வமாய் இருந்தவர்களோடு கூட்டுறவுகொள்ள ஏங்கினார்கள். தங்களைப் போலவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிப்பதற்குத் தவறாமல் கூடிவரவும் இந்த உவாட்ச் டவர் பத்திரிகை வாசகப் பெருமக்களை உற்சாகப்படுத்தியது. இப்படிக் கூடிவந்த தொகுதியினரைச் சந்திக்க, உவாட்ச் டவர் சொஸைட்டி சுமார் 1894-ஆம் ஆண்டுமுதல் பயணப் பிரதிநிதிகளை அனுப்ப ஆரம்பித்தது. தங்களை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்ட தொகுதிகளையே அந்தப் பிரதிநிதிகள் போய்ச் சந்தித்தார்கள். பின்னர் பில்கிரிம்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் அனுபவசாலிகள், கடின உழைப்பாளிகள். இவர்களுடைய மென்மை, பைபிள் அறிவு, பேச்சுத் திறமை, கற்பிக்கும் திறன், மீட்புவிலையில் இவர்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை... ஆகியவற்றைப் பார்த்துத்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பயணப் பிரதிநிதியின் சந்திப்பு என்றால்... ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் படுபிஸியாக இருக்கும். ஒரு பில்கிரிமின் பொதுப் பேச்சுக்கான அழைப்பிதழை விநியோகித்தபோதுதான் அநேக பைபிள் மாணாக்கர்கள் முதன்முதலாக வெளி ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். சகோதரர் ஹ்யூகோ ரிமர் ஒருநாள் மாலை ஒரு பள்ளிக்கூடத்தில் பேச்சு கொடுத்த பின்பு... வந்திருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே இருக்க... ராத்திரி மணி 12-ஐயும் தாண்டிவிட்டது. அன்று அவர் பேசிப் பேசிக் களைத்துப் போயிருந்தாலும், அந்தக் கூட்டம் “அருமையாக” இருந்ததாக முகத்தில் சந்தோஷம் குறையாமல் சொன்னார். இவர் பின்பு ஆளும் குழுவின் அங்கத்தினராக ஆனார்.
சகோதர சகோதரிகளின் வீட்டில் கூட்டங்கள் நடத்தி, “விசுவாசக் குடும்பத்தாருக்கு” ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதே இந்த பில்கிரிம்களுடைய சந்திப்புகளின் “முக்கிய உத்தேசம்” என்று த உவாட்ச் டவர் பத்திரிகை கூறியது. சுற்றுவட்டாரத்தில் இருந்த பைபிள் மாணாக்கர்கள் பில்கிரிம்களின் சொற்பொழிவுகளைக் கேட்கவும் கேள்வி-பதில் கலந்தாலோசிப்புகளில் பங்குகொள்ளவும் வந்தார்கள். கூட்டம் முடிந்த பிறகு உணவு உபசாரம் நடைபெற்றது. அந்தச் சமயத்தில், சிறுமியாக இருந்த மாட் ஏபட் என்பவர் காலை சொற்பொழிவுக்கு எல்லாரும் கூடிவந்ததாகவும் அதன் பின்பு, சாப்பிடுவதற்காக தோட்டத்துப் பக்கம் அவர்கள் சென்றதாகவும், அங்கு ஒரு நீண்ட மேஜை போடப்பட்டிருந்ததாகவும் சொல்கிறார். “நாட்டுப் பன்றித் தொடையின் உணங்கல், கோழி வறுவல், வகைவகையான பிரெட்டுகள், பணியாரம், கேக் என்று நாக்கில் எச்சில் ஊறவைக்கும் உணவுகள் அந்த மேஜையில் நிரம்பி வழிந்தன! எல்லாரும் மூக்குப்பிடிக்க சாப்பிட்டுவிட்டு, மதியம் சுமார் இரண்டு மணியளவில் இன்னொரு சொற்பொழிவைக் கேட்கக் கூடிவந்தோம்” என்றும் மாட் சொல்கிறார். ஆனால், “எல்லாரும் தூக்க மயக்கத்தில் இருந்தோம்” என்கிறார் மாட். ரொம்ப காலம் பில்கிரிமாகச் சேவை செய்து வந்த பென்ஜமின் பார்டன் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: ‘எனக்குப் பரிமாறப்பட்ட வகைவகையான உணவுகளையெல்லாம் நான் ஒரு வெட்டு வெட்டியிருந்தால், என்றைக்கோ மண்ணுக்குள் போயிருப்பேன்.’ கடைசியில் ஒருவழியாக பில்கிரிம்களை உபசரிப்பது சம்பந்தமாக அன்புள்ளம் படைத்த சகோதரிகளுக்கு ஆலோசனை வழங்கி புருக்லின் தலைமை அலுவலகம் கடிதம் எழுதியது. அதில், “தாங்கள் தினமும் சாப்பிடும் சாதாரண உணவை” பில்கிரிம்களுக்குச் சமைத்துக் கொடுத்து, அவர்கள் “நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க” வழிசெய்து தந்தாலே போதும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பில்கிரிம்கள் கற்பிப்பதில் கலைஞர்களாக இருந்தார்கள். வரைபடங்கள், மாடல்கள் அல்லது அவர்கள் கையில் இருந்த ஏதாவதொரு பொருளைப் பயன்படுத்தி மக்கள் மனதில் பதியும் விதத்தில் போதித்தார்கள். ஆர். எச். பார்பருடைய பேச்சுகள், “எப்போதும் சுவையாக, சுவாரஸ்யமாக இருந்தன.” டபிள்யூ. ஜே. தார்ன் பேச்சு கொடுத்தபோது... முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு பேசியது போல் இருந்தது. ஓர் அப்பாவுக்குரிய அன்பை அவரிடம் பார்க்க முடிந்தது. ஷீல்ட் டூட்ஜியன் என்ற சகோதரர் ஒருமுறை மாடல் ஏ ஃபோர்ட் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீரென்று “வண்டிய நிறுத்துங்க!” என்று கத்தினார். அவர் காரைவிட்டு இறங்கி, வழியில் இருந்த சில காட்டுப் பூக்களைப் பறித்துக்கொண்டு வந்து, காரில் இருந்தவர்களிடம் அவற்றைக் கொடுத்து யெகோவாவின் அற்புதமான படைப்பைப் பற்றித் திடீர் “பாடம்” நடத்தினார்.
பில்கிரிம் வேலையில் இருந்த பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் சமாளிப்பது பலருக்குச் சவாலாய் இருந்தது. முக்கியமாக, நடுத்தர வயதில் இருந்தவர்களுக்கும் அந்த வயதைத் தாண்டியிருந்தவர்களுக்கும் சவாலாய் இருந்தது. பில்கிரிம்களுடைய சந்திப்புகளின் முக்கிய நோக்கத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டபோது, அதை ஏற்றுக்கொள்வது சிலருக்கு மிகக் கடினமாக இருந்தது. அதுமுதற்கொண்டு வீட்டுக்கு வீடு ஊழியத்தை அவர்கள் முன்நின்று நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. உண்மைக் கிறிஸ்தவர்களின் “முக்கியமான வேலைகளில் ஒன்று அரசாங்கத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதாகும். அதற்காகவே பில்கிரிம்கள் அனுப்பப்படுகிறார்கள்” என்று மார்ச் 15, 1924 தேதியிட்ட உவாட்ச் டவர் பத்திரிகை குறிப்பிட்டது.
இந்த மாற்றத்தை சில பில்கிரிம்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், பயண வேலையை அவர்கள் விட்டுவிட்டார்கள்; இன்னும் சிலர் தங்களுக்கு ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு சொந்தமாகச் சபைகளை உருவாக்கினார்கள். சிறந்த பேச்சாளராக விளங்கிய ஒரு பில்கிரிம், “எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மேடையிலிருந்து பேசுவதுதான், என்னால வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யவே முடியாது!” என்று சொல்லி புலம்பியதாக ரோபி டி. அட்கன்ஸ் சொன்னார். “அதற்கு அப்புறம் 1924-ல் ஒஹாயோ, கொலம்பஸில் நடந்த மாநாட்டில் அவரைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் சந்தோஷமாக இருக்க, இவர் மட்டும் தனியாக... பரிதாபமாக... ஒரு சிறிய மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். அதற்குப் பின் அவரை நான் பார்க்கவே இல்லை. கொஞ்ச நாட்களுக்குள் அவர் அமைப்பை விட்டே போய்விட்டார்” என்றார். இன்னொரு பக்கத்தில்... வீடு வீடாய்ச் சென்று நற்செய்தியை அறிவிக்க ஆர்வமாய் இருந்த “நிறையச் சகோதரர்கள் சிரித்த முகத்தோடு, தங்கள் கார்களில் வைப்பதற்காகப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.”—அப். 20:20, 21.
வீடு வீடாகச் சென்று பிரசங்கிப்பது அநேக பில்கிரிம்களுக்குப் படபடப்பாகத்தான் இருந்தது. இந்நிலையில், அதேமாதிரி பயந்துகொண்டிருந்த பிரஸ்தாபிகளுக்கு அவர்கள் பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. என்றாலும், அவர்கள் முழு மூச்சோடு ஊழியத்தில் ஈடுபட்டார்கள். ஜெர்மன் மொழி பேசிய மாக்ஸ்வெல் ஜி. ஃபிரெண்ட் ஃப்ரிஷல் என்ற பில்கிரிம், “வீட்டுக்கு வீடு ஊழியத்தால் பில்கிரிம் வேலையில் நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்றோம்” என்று எழுதினார். வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென அமைப்பு சொன்னபோது, கிட்டத்தட்ட எல்லாச் சகோதரர்களுமே அதை மனமார ஏற்றுக்கொண்டதாக ஜான் ஏ. போனெட் என்ற பில்கிரிம் சொல்கிறார். முன்நின்று ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆர்வக்கனல் பெரும்பாலோர் மனதில் தகித்துக்கொண்டிருந்ததாக அவர் சொல்கிறார்.
காலங்காலமாக, கடவுள் பயமுள்ள இந்தப் பயண ஊழியர்கள் சகோதர சகோதரிகளுக்கு உற்சாக ஊற்றாக இருந்திருக்கிறார்கள். நீண்ட காலமாகச் சத்தியத்தில் இருக்கும் நார்மன் லார்சன் என்பவர், “சின்ன வயசிலிருந்தே பில்கிரிம்களைப் பார்த்து வளர்ந்த நான்... அவர்களிடமிருந்து எத்தனையோ விதங்களில் பயனடைந்திருக்கிறேன், என்னைச் செதுக்கி சீர்படுத்த அவர்கள் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள்.” அன்றுமுதல் இன்றுவரை, “வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய எங்களால் முடியும்!” என்று சகோதர சகோதரிகள் தைரியமாகச் சொல்கிறார்கள் என்றால்... அதற்குக் காரணம், சுயதியாக மனம்படைத்த, உண்மையுள்ள இந்தப் பயணக் கண்காணிகள்தான்.
[பக்கம் 32-ன் சிறு குறிப்பு]
பில்கிரிம்களின் சந்திப்புகள்... மகிழ்ச்சி அளித்த தருணங்கள்!
[பக்கம் 31-ன் படம்]
1905-ஆம் ஆண்டில், பென்ஜமின் பார்டன் பயண ஊழியம் செய்தபோது சுமார் 170 சந்திப்புகள் செய்தார்
[பக்கம் 32-ன் படம்]
வால்டர் ஜே. தார்ன் ஒரு பில்கிரிம். ஓர் அப்பாவின் அன்பும், கிறிஸ்துவின் சுபாவமும் அவரிடம் இருந்ததால் பாப்பி என்று பிரியமாக அழைக்கப்பட்டார்
[பக்கம் 32-ன் படம்]
ஜே. ஏ. பிரௌன், 14 சிறிய தொகுதிகளைப் பலப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் சுமார் 1902-ல் ஜமைகாவுக்கு பில்கிரிமாக அனுப்பப்பட்டார்
[பக்கம் 32-ன் படம்]
பில்கிரிம் ஊழியம் சகோதர சகோதரிகளின் விசுவாசத்தை வலுப்படுத்தியது, ஒற்றுமையைப் பலப்படுத்தியது. அமைப்போடு சேர்ந்து செயல்படத் தூண்டியது