உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 2/15 பக். 3-7
  • இது நம் ஆன்மீகச் சொத்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இது நம் ஆன்மீகச் சொத்து
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொக்கிஷமாய்ப் போற்ற வேண்டிய சொத்து
  • யெகோவா தம் வார்த்தையைப் பாதுகாத்துவந்திருக்கிறார்
  • யெகோவா தம்முடைய பெயரைப் பாதுகாத்துவந்திருக்கிறார்
  • யெகோவா சத்தியத்தைப் பாதுகாத்துவந்திருக்கிறார்
  • சத்தியத்துக்கு எதிரான தாக்குதலை யெகோவா தடுக்கிறார்
  • யெகோவா தன் பெயரை மகிமைப்படுத்துகிறார்
    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
  • கடவுளுடைய மகத்தான பெயரைக் கௌரவப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • கடவுளுடைய பெயரும்‘புதிய ஏற்பாடும்’
    கடவுளுடைய பெயர் என்றன்றுமாக நிலைத்திருக்கும்
  • நம்முடைய அருமையான ஆஸ்தி—அதை எப்படி கருதுகிறோம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 2/15 பக். 3-7
[பக்கம் 3-ன் படம்]

இது நம் ஆன்மீகச் சொத்து

“இதுவே யெகோவாவின் ஊழியர்களுடைய சொத்து.”—ஏசா. 54:17, NW.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

  • கடவுள் தம்முடைய வார்த்தையை எப்படிப் பாதுகாத்துவந்திருக்கிறார்?

  • தம்முடைய மக்கள் தம் பெயரைப் பயன்படுத்துவதற்காக யெகோவா அதை எப்படிப் பாதுகாத்துவந்திருக்கிறார்?

  • சத்தியத்திற்கு எதிரான தாக்குதல்கள் மத்தியிலும் கடவுள் அதை எப்படிப் பாதுகாத்துவந்திருக்கிறார் என்பதை விளக்குங்கள்.

1. மனிதர்களின் நன்மைக்காக யெகோவா எதை அன்போடு பாதுகாத்து வைத்திருக்கிறார்?

‘என்றென்றும் இருக்கிற உயிருள்ள கடவுளாகிய’ யெகோவா வாழ்வளிக்கும் செய்தியை மனிதர்களுக்காகப் பாதுகாத்து வைத்திருக்கிறார். அது ஒருபோதும் அழியாது; ஏனென்றால், “யெகோவாவின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 1:23-25) அந்த முக்கியமான செய்தியை அவருடைய வார்த்தையாகிய பைபிளில் அன்போடு பாதுகாத்து வைத்ததற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், அல்லவா?

2. கடவுள் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் எதைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்?

2 யெகோவா தம்முடைய பெயரைத் தம் மக்கள் பயன்படுத்த வேண்டுமென விரும்புகிறார்; அதற்காக, அதைப் பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். ‘வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாற்றை’ பற்றிய பைபிள் பதிவில்தான் “யெகோவா” என்ற பெயர் முதன்முதலில் காணப்படுகிறது. (ஆதி. 2:4, திருத்திய மொழிபெயர்ப்பு) பத்துக் கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகைகளில் யெகோவாவின் பெயர் பல தடவை அற்புதமாகப் பொறிக்கப்பட்டது. உதாரணமாக, அதன் முதல் கட்டளையில் ‘உன் கடவுளாகிய யெகோவா நானே’ என்ற வார்த்தைகள் காணப்படுகின்றன. (யாத். 20:1-17, தி.மொ.) கடவுளுடைய பெயர் என்றென்றும் இருக்கும்; அந்தப் பெயரையும் அவருடைய வார்த்தையையும் ஒழித்துக்கட்ட சாத்தான் என்னதான் முயற்சி செய்தாலும் அவர் அவற்றை இன்றுவரை பாதுகாத்து வைத்திருக்கிறார்.

3. உலகத்தில் பொய்மத போதனைகள் மலிந்திருந்தாலும் கடவுள் எதைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்?

3 யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் சத்தியத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறார். உலகத்தில் பொய்மத போதனைகள் மலிந்திருந்தாலும் கடவுள் நமக்கு ஆன்மீக ஒளியையும் சத்தியத்தையும் தந்ததற்காக நன்றி சொல்ல வேண்டும், அல்லவா? (சங்கீதம் 43:3, 4-ஐ வாசியுங்கள்.) பெரும்பாலான மனிதர்கள் இருளில் நடக்கிறார்கள், ஆனால் நாம் கடவுள் தந்த ஆன்மீக ஒளியில் சந்தோஷமாக நடந்துவருகிறோம்.—1 யோ. 1:6, 7.

பொக்கிஷமாய்ப் போற்ற வேண்டிய சொத்து

4, 5. 1931-ஆம் வருடத்திலிருந்து நமக்கு என்ன விசேஷ கௌரவம் கிடைத்திருக்கிறது?

4 ஒரு பகுதியில் வாழ்ந்துவருகிற மக்களிடம் ஒரே விதமான குணநலன்கள், பாரம்பரியங்கள், வாழ்க்கைமுறைகள் இருக்கலாம்; அதை அவர்கள் பரம்பரை பரம்பரையாகக் காப்பாற்றிவரலாம். அதை அவர்களுடைய சொத்து எனச் சொல்லலாம். யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கும் அதேபோன்ற ஒரு சொத்து இருக்கிறது. பைபிளைச் சரியாக புரிந்துகொள்ளவும், கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய சத்தியத்தைப் புரிந்துகொள்ளவும் அவர் தந்த பாக்கியம் அந்தச் சொத்தில் அடங்கியுள்ளது. அதுமட்டுமல்ல, அவருடைய பெயரால் அழைக்கப்படுகிற விசேஷ கௌரவமும் அதில் அடங்கியுள்ளது.

[பக்கம் 4-ன் படங்கள்]

1931-ல் நடந்த மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஆனந்தமாய் ஏற்றுக்கொண்டோம்

5 1931-ஆம் வருடம் அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ மாகாணத்தில், கொலம்பஸ் நகரத்தில் நடைபெற்ற மாநாட்டில்தான் முதன்முதலில் நாம் அவருடைய பெயரால் அழைக்கப்பட்டோம். அந்த மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் “ஜேடபிள்யு” (“JW”) என்ற ஆங்கில வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. அதைப் பற்றி ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “இந்த ‘ஜேடபிள்யு’ என்பது என்னவாயிருக்கும் என்று ஆளாளுக்கு ஊகிக்கத் தொடங்கினார்கள். சிலர் ‘ஜஸ்ட் வெய்ட்’ என்றார்கள், இன்னும் சிலர் ‘ஜஸ்ட் வாட்ச்’ என்றார்கள். வேறு சிலரோ, ‘ஜெஹோவாஸ் விட்னஸஸ்’ என்றார்கள்.” அதற்கு முன்பு, நாம் பைபிள் மாணாக்கர் என்றே அழைக்கப்பட்டோம்; ஆனால், 1931-ஆம் வருடம் ஜூலை 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். பைபிள் அடிப்படையிலிருந்த அந்தப் பெயரைக் கேட்டு எல்லோரும் பூரித்துப்போனார்கள். (ஏசாயா 43:12-ஐ வாசியுங்கள்.) அதைப் பற்றி இன்னொரு சகோதரர் சொல்லும்போது, “அங்கே கூடியிருந்தவர்கள், அரங்கமே அதிருமளவுக்குக் கைதட்டி ஆரவாரம் செய்ததை என்னால் மறக்கவே முடியாது” என்கிறார். இந்த உலகிலுள்ள வேறு யாருமே இந்தப் பெயரால் அழைக்கப்பட விரும்பவில்லை; ஆனால், கடந்த எண்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் பெயரால் அழைக்கப்படும் கௌரவத்தைக் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார். யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரால் அழைக்கப்படுவது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட கௌரவம்!

6. எந்தத் தகவல்கள் நம் ஆன்மீகச் சொத்தில் அடங்கியுள்ளன?

6 கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிய திருத்தமான, முக்கியமான தகவல்களும் ஆன்மீகச் சொத்தில் அடங்கியுள்ளது. உதாரணமாக, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றோரை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவுக்குப் பிரியமாக நடப்பது எப்படி என்று இவர்கள் தங்களுடைய குடும்பத்தாரோடு நிச்சயம் கலந்துபேசியிருப்பார்கள். எனவே, யோசேப்பு, ‘தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாமல் இருப்பதற்காக’ ஒழுக்கக்கேடான காரியத்தைவிட்டு ஓடியதில் நமக்கு ஆச்சரியம் இல்லை. (ஆதி. 39:7-9) அதேபோல், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தெய்வீக விதிமுறைகளை மற்றவர்களுக்குச் சொன்னார்கள், அதன்படி வாழ்ந்தும் காட்டினார்கள். உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் நம் எஜமானருடைய இரவு விருந்தைப் பற்றிய தகவல்களைக் கிறிஸ்தவச் சபைகளுக்குத் தெரிவித்தார். (1 கொ. 11:2, 23) இன்றோ, கடவுளை ‘அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்’ வணங்குவதற்குத் தேவையான தகவல்கள் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவாகியுள்ளன. (யோவான் 4:23, 24-ஐ வாசியுங்கள்.) மனிதர்கள் அனைவருக்குமே பைபிள் ஆன்மீக அறிவொளி தரும்; ஆனால், யெகோவாவின் ஊழியர்களாகிய நாம்தான் அதை மிக உயர்வாய் மதிக்கிறோம்.

7. மனதைக் குளிர்விக்கிற எந்த வாக்குறுதி நம்முடைய ஆன்மீகச் சொத்தில் அடங்கியுள்ளது?

7 ‘யெகோவா நம் பட்சத்தில் இருக்கிறார்’ என்பதைக் காட்டுகிற சமீபகால சம்பவங்கள் நம் பிரசுரங்களில் வருகின்றன; இவையும் நம் ஆன்மீகச் சொத்தின் பாகமாக இருக்கின்றன. (சங். 118:7) இதனால், நாம் துன்புறுத்தப்பட்டாலும்கூட பயப்படாமல் தைரியமாக இருக்கிறோம். நம் ஆன்மீகச் சொத்தில் ஒரு வாக்குறுதி அடங்கியுள்ளது; நம் மனதைக் குளிர்விக்கிற அந்த வாக்குறுதி இதுவே: “‘உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் வெற்றிபெறாது; உனக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடுகிற எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்; இது யெகோவாவின் ஊழியர்களுடைய சொத்து. அவர்களை நான் நீதியுள்ளவர்களாகக் கருதுவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.” (ஏசா. 54:17, NW) சாத்தானுடைய எந்தவொரு ஆயுதமும் நமக்கு நிரந்தரத் தீங்கை ஏற்படுத்த முடியாது.

8. இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் எதைப் பற்றிப் படிப்போம்?

8 கடவுளுடைய வார்த்தையை அழிக்கவும், யெகோவா என்ற அவருடைய பெயரை அடியோடு நீக்கவும், சத்தியத்தை மூடிமறைக்கவும் சாத்தான் முயற்சி செய்திருக்கிறான். ஆனால், யெகோவாவுக்கு முன்னால் அவன் திட்டங்கள் எதுவுமே பலிக்கவில்லை. அவனுடைய எல்லாச் சதிவேலைகளையும் அவர் சின்னாபின்னமாக்கிவிட்டார். இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வோம்: (1) யெகோவா தம்முடைய வார்த்தையை எப்படிப் பாதுகாத்துவந்திருக்கிறார்? (2) யெகோவா தம்முடைய பெயர் அடியோடு மறைந்துபோகாமல் எப்படிப் பாதுகாத்துவந்திருக்கிறார்? (3) சத்தியத்தின் ஊற்றுமூலரான நம் பரலோகத் தகப்பன் இன்றுவரை சத்தியத்தை எப்படிப் பாதுகாத்துவந்திருக்கிறார்?

யெகோவா தம் வார்த்தையைப் பாதுகாத்துவந்திருக்கிறார்

9-11. பைபிள் பல தாக்குதல்களைத் தாக்குப்பிடித்து இன்றுவரை நிலைத்திருக்கிறது என்பதை எந்த உதாரணங்கள் காட்டுகின்றன?

9 தம்முடைய வார்த்தையை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் யெகோவா முறியடித்திருக்கிறார். கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “அல்பிஜென்ஸியர்களுக்கும் வால்டென்ஸியர்களுக்கும் இடையே சண்டை இருந்ததால், பாமர மக்கள் அவற்றை [தங்கள் மொழி பைபிள்களை] பயன்படுத்துவதை 1229-ஆம் ஆண்டில் டௌலூஸின் குழு தடை செய்தது. . . . 1234-ஆம் ஆண்டில் ஸ்பெயினிலுள்ள டாரகோனாவில் முதலாம் ஜேம்ஸின் தலைமையில் நடத்தப்பட்ட மாநாட்டில் இதேபோன்ற தடை விதிக்கப்பட்டது. . . . நான்காம் பவுலின் ‘இன்டெக்ஸ்,’ கார்டினல்களின் அனுமதியின்றி மற்ற மொழி பைபிள்களை அச்சடிப்பதையும் வைத்திருப்பதையும் தடை செய்தது; அதனால், 1559-ல் முதல்முறையாக ரோம பிஷப்பின் அலுவலகம் இதில் தலையிட்டது.”

10 பைபிள் பல தாக்குதல்களைத் தாக்குப்பிடித்து இன்றுவரை நிலைத்திருக்கிறது. சுமார் 1382-ஆம் வருடத்தில், ஜான் வைக்கிளிப்பும் அவருடைய தோழர்களும் சேர்ந்து பைபிளை ஆங்கில மொழியில் முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். வில்லியம் டின்டேல் என்பவர் பைபிளை மொழிபெயர்த்ததற்காக 1536-ல் மரண தண்டனை பெற்றார். கழுமரத்தில் கட்டப்பட்டிருந்தபோது, “ஆண்டவரே, இங்கிலாந்து ராஜாவின் கண்களைத் திறவுங்கள்” என்று மன்றாடினார். பின்பு, கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார்.

11 பைபிளை அழிப்பதற்கு மனிதர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியையே தழுவியிருக்கின்றன. உதாரணமாக, 1535-ஆம் வருடத்தில், மில்ஸ் கவர்டேல் மொழிபெயர்த்த ஆங்கில பைபிள் வெளியிடப்பட்டது. டின்டேல் மொழிபெயர்த்திருந்த “புதிய ஏற்பாட்டையும்” ஆதியாகமம்முதல் நாளாகமம்வரை உள்ள “பழைய ஏற்பாட்டையும்” கவர்டேல் பயன்படுத்திக்கொண்டார். பைபிளின் மற்ற பகுதிகளை லத்தீனிலிருந்தும் மார்டின் லூதருடைய ஜெர்மன் மொழி பைபிளிலிருந்தும் மொழிபெயர்த்தார். இன்று, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) மிகத் தெளிவாகவும் திருத்தமாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, ஊழியத்தில் நமக்கு உபயோகமாகவும் இருக்கிறது. இதற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! ஆம், யெகோவா தம் வார்த்தையைப் பாதுகாப்பதை பேய்களாலோ மனிதர்களாலோ தடுக்கவே முடியாது.

யெகோவா தம்முடைய பெயரைப் பாதுகாத்துவந்திருக்கிறார்

[பக்கம் 5-ன் படம்]

டின்டேலைப் போன்றோர் கடவுளுடைய வார்த்தைக்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள்

12. யெகோவாவின் பெயரை மக்கள் அறிந்துகொள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு எப்படி உதவியிருக்கிறது?

12 தம்முடைய பெயர் தம் வார்த்தையாகிய பைபிளிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுவிடாதபடி யெகோவா தேவன் பார்த்துக்கொண்டார். புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது, கடவுளுடைய பெயரான யெகோவா மூலமொழியில் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் இருக்கும்படி சகோதரர்கள் உறுதிசெய்துகொண்டார்கள். எபிரெய வேதாகமத்தில் அந்தப் பெயர் 6,973 தடவையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 237 தடவையும் வருகிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு தற்போது 116-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது; 17,85,45,862-க்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன.

13. மனிதர்கள் ஆரம்பத்திலிருந்தே கடவுளுடைய பெயரை அறிந்திருந்தார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?

13 முதல் மனித ஜோடியான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுளுடைய பெயர் தெரிந்திருந்தது; அவர்கள் அதன் சரியான உச்சரிப்பை அறிந்திருந்தார்கள். நோவாவும் அதைப் பயன்படுத்தினார். ஜலப்பிரளயத்துக்குப் பின்பு, அவருடைய மகனாகிய காம் அவரை அவமானப்படுத்தியபோது, ‘சேமின் கடவுளாகிய யெகோவா ஸ்தோத்திரத்துக்குரியவர், [காமின் மகனாகிய] கானான் அவனுக்கு அடிமையாவானாக’ என்று அவர் சொன்னார். (ஆதி. 4:1; 9:26; தி.மொ.) பின்பு, “நானே யெகோவா, என் நாமம் இதுவே; என் மகிமையை மற்றவர்களுக்கு . . . கொடேன்” என்று கடவுளே சொன்னார். மேலும், “நானே யெகோவா, வேறொருவருமில்லை; என்னைத் தவிர வேறே தெய்வம் இல்லை” என்றும் சொன்னார். (ஏசா. 42:8; 45:5; தி.மொ.) யெகோவா பைபிளிலிருந்து தம்முடைய பெயர் அடியோடு நீங்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்; அதனால், பூமியிலுள்ள மக்கள் அதை அறிந்துகொள்ள வழி செய்திருக்கிறார். அவருடைய பெயரைப் பயன்படுத்துவதும் அவருடைய சாட்சிகளாகச் சேவை செய்வதும் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். அதனால், ‘நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோம்’ என்று சொல்வோமாக!—சங். 20:5, பொது மொழிபெயர்ப்பு.

14. பைபிளைத் தவிர வேறு எங்கெல்லாம் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது?

14 கடவுளுடைய பெயர் பைபிளில் மட்டுமே காணப்படுவதில்லை. உதாரணமாக, மோவாபியக் கல் என்றழைக்கப்படுகிற ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது; இந்தக் கல், சவக்கடலுக்குக் கிழக்கே 21 கி.மீ. தூரத்திலுள்ள திபான் என்ற இடத்தில் உள்ளது. இஸ்ரவேலின் ராஜாவாகிய உம்ரியைப் பற்றி இந்தக் கல் குறிப்பிடுகிறது; அதோடு, மோவாபிய ராஜாவாகிய மேசா இஸ்ரவேலருக்கு எதிராகக் கலகம் செய்ததைப் பற்றிச் சொல்லும் பதிவும் இதில் உள்ளது. (1 இரா. 16:28; 2 இரா. 1:1; 3:4, 5) மிக முக்கியமாக, இந்த மோவாபியக் கல்லில் கடவுளுடைய பெயர் அதன் நான்கெழுத்து வடிவில் காணப்படுகிறது. அதோடு, இஸ்ரவேலில் கண்டெடுக்கப்பட்ட லாகீஷ் கடிதங்கள் என்ற மண் ஓடுகளில் இந்த நான்கெழுத்து வடிவம் பல இடங்களில் காணப்படுகிறது.

15. செப்டுவஜின்ட் என்றால் என்ன, அது எப்படி உருவானது?

15 ஆரம்பகால பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரைப் பாதுகாப்பதில் பங்கு வகித்தார்கள். கி.மு. 607-லில் இருந்து கி.மு. 537 வரை யூதர்கள் பாபிலோனில் கைதிகளாக இருந்தார்கள்; ஆனால், அதற்குப் பின்பு அவர்களில் அநேகர் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் திரும்பி வரவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் யூதர்கள் பலர் எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவில் வசித்தார்கள்; அன்றைக்கு உலக மொழியாக இருந்த கிரேக்க மொழியில் அவர்களுக்கு பைபிள் தேவைப்பட்டது. எனவே, எபிரெய வேதாகமம் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு செப்டுவஜின்ட் என்று அழைக்கப்படுகிறது, இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது. இதன் சில பிரதிகளில் யெகோவா என்ற பெயர் எபிரெய எழுத்துக்களில் காணப்படுகிறது.

16. 1640-ல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு ஒரு உதாரணம் தருக.

16 இங்கிலாந்திலுள்ள அமெரிக்கக் காலனிகள் முதலில் வெளியிட்ட இலக்கிய நூலான ‘பே சங்கீதம்’ புத்தகத்திலும் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது. 1640-ல் அச்சிடப்பட்ட அதன் மூலப் பிரதியில், சங்கீத புத்தகம் உள்ளது; அது எபிரெயுவிலிருந்து அன்றைய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதில் சில இடங்களில் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது. உதாரணமாக, சங்கீதம் 1:1, 2-ல் “கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவன்” பொல்லாதவர்களின் ஆலோசனைப்படி நடக்காமல் “யெகோவாவின் சட்டத்தில் அதிக சந்தோஷம் காண்கிறான்” என்று உள்ளது. கடவுளுடைய பெயரைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.

யெகோவா சத்தியத்தைப் பாதுகாத்துவந்திருக்கிறார்

17, 18. (அ) “சத்தியம்” என்றால் என்ன? (ஆ) ‘நற்செய்தியின் சத்தியத்தில்’ என்ன அடங்கியுள்ளது?

17 ‘சத்தியத்தின் கடவுளாகிய யெகோவாவுக்கு’ நாம் சந்தோஷமாய்ச் சேவை செய்கிறோம். (சங். 31:5, NW) சத்தியம் என்றால் என்ன? ஒன்றைப் பற்றிய உண்மைகள். பைபிளின் மூல மொழிகளில், ‘சத்தியம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள், உண்மையானது, நேர்மையானது, நம்பத்தக்கது என்ற அர்த்தங்களைக் கொடுக்கின்றன.

18 யெகோவா சத்தியத்தைப் பாதுகாத்துவந்திருக்கிறார்; அதை நாம் இன்று அதிகமதிகமாகக் கற்றுக்கொள்ளவும் வழி செய்திருக்கிறார். (2 யோ. 1, 2) “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது; ஆகவே, சத்தியத்தைப் பற்றிய அறிவொளி பிரகாசமடைந்து கொண்டே வருகிறது. (நீதி. 4:18) கடவுளிடம் ஜெபம் செய்தபோது, “உங்களுடைய வார்த்தையே சத்தியம்” என்று இயேசு சொன்னார்; அதை நாம் முழுமையாக ஒத்துக்கொள்கிறோம். (யோவா. 17:17) கடவுளுடைய வார்த்தையில், ‘நற்செய்தியின் சத்தியம்’ உள்ளது; அதாவது, கிறிஸ்தவ போதனைகள் அனைத்தும் அடங்கியுள்ளது. (கலா. 2:14) யெகோவாவின் பெயர், அவருடைய பேரரசுரிமை, இயேசுவின் மீட்கும் பலி, உயிர்த்தெழுதல், கடவுளுடைய அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகள் இவற்றில் அடக்கம். சத்தியத்தை மூடிமறைக்க சாத்தான் எத்தனையோ முயற்சி எடுத்திருந்தாலும் யெகோவா அதை எப்படிப் பாதுகாத்துவந்திருக்கிறார் என்பதை இப்போது பார்க்கலாம்.

சத்தியத்துக்கு எதிரான தாக்குதலை யெகோவா தடுக்கிறார்

19, 20. நிம்ரோது யார், அவன் காலத்தில் போடப்பட்ட எந்தத் திட்டம் குலைக்கப்பட்டது?

19 “கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்ற வழக்குச்சொல் பெருவெள்ளத்திற்குப் பின்பு தோன்றியது. (ஆதி. 10:9) நிம்ரோது யெகோவா தேவனுக்கு எதிராகச் செயல்பட்டதால் சாத்தானை வழிபட்டான் என்றே சொல்லலாம்; இயேசு தம்முடைய எதிரிகளிடம் ஒருசமயம், “பிசாசே உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள். .  .  . சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று சொன்னார்; அப்படித்தான் நிம்ரோதும் செயல்பட்டு வந்தான்.—யோவா. 8:44.

20 பாபேல் என்ற நகரத்தையும், டைகிரீஸ், யூப்ரடீஸ் ஆறுகளுக்கு இடையே இருந்த மற்ற நகரங்களையும் நிம்ரோது ஆட்சி செய்துவந்தான். (ஆதி. 10:10) சுமார் கி.மு. 2269-ல், அவனுடைய தலைமையில்தான் பாபேலையும் அதன் கோபுரத்தையும் கட்டும் பணி தொடங்கியிருக்கலாம். அந்தக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்கள், “நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். மனிதர்கள் பூமியெங்கும் பரவ வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கத்திற்கு அது எதிராக இருந்தது. அதனால், ‘பூமியெங்கும் வழங்கின பாஷையை” கடவுள் “தாறுமாறாக்கி” அவர்களைச் சிதறிப்போகப் பண்ணினார்; அவர்களுடைய திட்டம் குலைந்துபோனது. (ஆதி. 11:1-4, 8, 9) ஒருவேளை எல்லா மக்களும் தன்னையே வழிபடுகிற ஒரு மதத்தை உருவாக்க சாத்தான் திட்டம்போட்டிருக்கலாம்; ஆனால், அது தவிடுபொடியானது. மனிதன் படைக்கப்பட்டது முதற்கொண்டு, யெகோவாவின் வழிபாடே மேலோங்கிவந்திருக்கிறது, அது நாளுக்கு நாள் தழைத்தோங்குகிறது.

21, 22. (அ) பொய் மதம் என்றைக்குமே உண்மை மதத்திற்கு ஏன் அச்சுறுத்தலாக இருந்ததில்லை? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

21 பொய் மதம் என்றைக்குமே உண்மை மதத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. ஏன்? ஏனென்றால், மகத்தான போதகர் தம்முடைய வார்த்தையைப் பாதுகாத்துவந்திருக்கிறார், தம்முடைய பெயர் மறைந்துபோகாமல் பாதுகாத்துவந்திருக்கிறார், சத்தியத்தை அதிகமதிகமாகக் கற்றுக்கொள்ள வழிவகுத்திருக்கிறார். (ஏசா. 30:20, 21) சத்தியத்திற்கு இசைவாக கடவுளை வணங்கும்போது நம் மனதில் சந்தோஷம் பொங்கும். ஆனால், சத்தியத்தை மட்டுமே நம்பவும், யெகோவாவை முழுமையாகச் சார்ந்திருக்கவும், அவருடைய சக்தி வழிகாட்டுகிறபடி நடக்கவும் நாம் எப்போதும் கவனமாயிருக்க வேண்டும்.

22 சில பொய் போதனைகள் எப்படித் தோன்றின என்பதைப் பற்றி நாம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அவை பொய் என்பதை பைபிள் எப்படி வெட்டவெளிச்சமாக்குகிறது என்றும் பார்ப்போம். அதோடு, சத்தியத்தின் நிகரற்ற பாதுகாவலரான யெகோவா, உண்மை போதனைகளால் எப்படி நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்றும் பார்ப்போம்; இந்தப் போதனைகள் நம் ஆன்மீகச் சொத்தின் பாகமாக இருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்