‘காத்திருக்கும்’ மனப்பான்மையைத் தொடர்ந்து காட்டுங்கள்!
“என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்.”—மீ. 7:7.
1. நாம் ஏன் பொறுமை இழந்துவிடலாம்?
மேசியானிய அரசாங்கம் 1914-ல் நிறுவப்பட்டபோது, சாத்தானுடைய உலகத்திற்குக் கடைசி காலம் ஆரம்பமானது. பரலோகத்தில் நடந்த ஒரு போரின் விளைவாக, பிசாசையும் அவனுடைய பேய்களையும் இயேசு பூமிக்குத் தள்ளினார். (வெளிப்படுத்துதல் 12:7-9-ஐ வாசியுங்கள்.) இப்போது “தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறதென்று” சாத்தான் அறிந்திருக்கிறான். (வெளி. 12:12) என்றாலும், அந்த ‘கொஞ்சக் காலம்’ ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இதனால், இந்தக் கடைசி நாட்கள் நீண்டுகொண்டே போவதுபோல் சிலர் நினைக்கலாம். யெகோவா நடவடிக்கை எடுப்பதற்காகக் காத்திருக்கும் இவ்வேளையில், நாம் பொறுமை இழந்துவிடுகிறோமா?
2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
2 பொறுமை இழப்பது ஆபத்தானது; பொறுமை இல்லையென்றால், அவசரக்குடுக்கை போல நாம் நடந்துகொள்வோம். அப்படியென்றால், காத்திருக்கும் மனப்பான்மையை எப்படிக் காட்டலாம்? பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் அந்த மனப்பான்மையைத் தொடர்ந்து காட்ட இக்கட்டுரை நமக்கு உதவும்: (1) பொறுமையாக இருப்பது பற்றி மீகா தீர்க்கதரிசியின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2) நாம் காத்திருக்கும் காலம் முடிவடையப்போவதை என்னென்ன சம்பவங்கள் காட்டும்? (3) யெகோவாவின் பொறுமைக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?
மீகாவின் உதாரணம் கற்றுத்தரும் பாடம்
3. மீகாவின் நாட்களில், இஸ்ரவேலில் நிலைமை எப்படி இருந்தது?
3 மீகா 7:2-6-ஐ வாசியுங்கள். இஸ்ரவேலருடைய விசுவாசம் நாளுக்கு நாள் மோசமாகி வந்ததை மீகா தீர்க்கதரிசி கண்டார். பொல்லாத ராஜாவான ஆகாசின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய ஆன்மீக நிலைமை இன்னும் மோசமானது. விசுவாசதுரோகிகளான இஸ்ரவேலர்களை ‘முட்செடிகளுக்கும்,’ ‘நெரிஞ்சில்களுக்கும்’ மீகா ஒப்பிட்டார். முட்செடிகளும் நெரிஞ்சில்களும் பாதங்களை எப்படிப் பதம் பார்த்துவிடுமோ அப்படித்தான் பொல்லாத இஸ்ரவேலர்கள் சக மனிதரை ‘பதம் பார்த்தார்கள்.’ அக்கிரமம் அந்தளவு பெருகியதால், குடும்பப் பிணைப்புகள்கூட அறுந்துபோயின. நிலைமையைத் தன்னால் சரிசெய்ய முடியாது என்று உணர்ந்த மீகா தீர்க்கதரிசி, யெகோவாவிடம் தன் இருதயத்தைக் கொட்டினார். பின்பு, கடவுள் நடவடிக்கை எடுப்பதற்காகப் பொறுமையோடு காத்திருந்தார். ஏற்ற வேளையில் யெகோவா தலையிட்டு நிலைமையைச் சரிசெய்வார் என்பதில் மீகா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்.
4. நாம் என்ன சவால்களைச் சந்திக்கிறோம்?
4 மீகாவைப் போல, நாமும் சுயநலமிக்க ஆட்களின் மத்தியில் வாழ வேண்டியிருக்கிறது. அநேகர் “நன்றிகெட்டவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, பந்தபாசம் இல்லாதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:2, 3) சக பணியாளர்களும் பள்ளித் தோழர்களும் அக்கம்பக்கத்தாரும் சுயநலவாதிகளாக இருப்பதைப் பார்க்கும்போது மனம் நொந்துபோகிறோம். கடவுளுடைய ஊழியர்கள் சிலர் அதைவிட பெரிய சவால்களையும் சந்திக்கிறார்கள். தம் சீடர்களுக்கு குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பு வருமென்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்; தம்முடைய செய்தி ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விளக்க மீகா 7:6-ல் சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். “தகப்பனுக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன். சொல்லப்போனால், ஒரு மனிதனுக்கு அவனுடைய வீட்டாரே எதிரிகளாக இருப்பார்கள்” என்று கூறினார். (மத். 10:35, 36) சொந்தக் குடும்பத்தாரே எதிர்க்கும்போது, கேலி செய்யும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும்! அப்படிப்பட்ட கஷ்டங்கள் வரும்போது குடும்பத்தாரின் அழுத்தத்திற்கு இணங்கிவிடாமல் இருப்போமாக. பிரச்சினைகளை யெகோவா சரிசெய்வதற்காக நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருப்போமாக. அவருடைய உதவிக்காகத் தொடர்ந்து மன்றாடும்போது, சகித்திருப்பதற்கான பலத்தையும் ஞானத்தையும் அவர் நிச்சயம் தருவார்.
5, 6. மீகாவுக்கு யெகோவா எப்படிப் பலனளித்தார், மீகா எதைப் பார்க்கவில்லை?
5 மீகாவின் பொறுமைக்கு யெகோவா பலனளித்தார். எப்படி? ஆகாசுக்கும் அவனுடைய ஆட்சிக்கும் முடிவு வந்ததை மீகா கண்கூடாகப் பார்த்தார். ஆகாசின் மகனான எசேக்கியா அரியணையில் அமர்த்தப்பட்டதையும் உண்மை வழிபாடு திரும்ப நிலைநாட்டப்பட்டதையும் பார்த்தார். அதுமட்டுமல்ல, இஸ்ரவேலின் வடக்கு கோத்திர ராஜ்யத்தை அசீரியர்கள் கைப்பற்றியபோது சமாரியாவுக்கு எதிராகச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியதையும் பார்த்தார்.—மீ. 1:6.
6 ஆனால், யெகோவா முன்னறிவித்த எல்லாத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தையும் மீகா பார்க்கவில்லை. உதாரணத்திற்கு, “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்” என்று மீகா எழுதியிருந்தார். (மீ. 4:1, 2) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு முன்னரே அவர் இறந்துபோனார். தன்னைச் சுற்றியிருந்தவர்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டாலும், கடைசிவரை யெகோவாவுக்குப் பற்றுமாறாமல் இருக்கத் தீர்மானமாய் இருந்தார். அதைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” (மீ. 4:5) யெகோவா தம்முடைய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்ற முழு நம்பிக்கை மீகாவுக்கு இருந்ததால்தான் கஷ்ட காலங்களில்கூட அவரால் பொறுமையாகக் காத்திருக்க முடிந்தது. ஆம், விசுவாசமிக்க அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவை முழுமையாக நம்பினார்.
7, 8. (அ) யெகோவாமீது நம்பிக்கை வைக்க நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன? (ஆ) நாட்கள் வேகமாக கடப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
7 யெகோவாமீது நமக்கும் அதேபோன்ற நம்பிக்கை இருக்கிறதா? அப்படி நம்பிக்கை வைக்க நமக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. மீகா முன்னறிவித்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆம், “கடைசி நாட்களில்” எல்லாத் தேசத்தையும் மொழியையும் இனத்தையும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ‘யெகோவாவின் பர்வதத்திற்கு’ திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் எதிரும்புதிருமான தேசங்களிலிருந்து வந்திருந்தபோதிலும், “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக” அடித்திருக்கிறார்கள். அவர்கள் ‘யுத்தத்தைக் கற்றுக்கொள்வதுமில்லை.’ (மீ. 4:3) யெகோவாவின் சமாதானமான மக்களில் நாமும் ஒருவராக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
8 உண்மைதான், இந்தப் பொல்லாத உலகத்திற்கு யெகோவா வெகு சீக்கிரத்தில் முடிவுகட்ட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். என்றாலும், நாம் பொறுமையோடு காத்திருப்பதற்கு, சில விஷயங்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்க வேண்டும். “தாம் நியமித்த ஒரு மனிதரைக் கொண்டு,” அதாவது, இயேசு கிறிஸ்துவைக் கொண்டு மனிதகுலத்தை நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். (அப். 17:31) ஆனால் அதற்குமுன், “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை” அடைவதற்கும், மாற்றங்கள் செய்வதற்கும், மீட்பு பெறுவதற்கும் பலதரப்பட்ட ஆட்களுக்கு அவர் வாய்ப்பளித்து வருகிறார். அநேகருடைய உயிர் இன்று ஆபத்தில் இருக்கிறது. (1 தீமோத்தேயு 2:3, 4-ஐ வாசியுங்கள்.) திருத்தமான அறிவைப் பெற மக்களுக்கு உதவுவதில் மும்முரமாக ஈடுபடும்போது மீந்திருக்கும் இந்த நாட்கள் படுவேகமாக கடந்துவிடும். சீக்கிரத்தில் யெகோவாவின் நாள் வரும்போது, அவருடைய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுவந்ததை நினைத்து நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம்!
முடிவுக்குமுன் நடக்கும் சம்பவங்கள்
9-11. ஒன்று தெசலோனிக்கேயர் 5:3 நிறைவேறிவிட்டதா? விளக்குங்கள்.
9 ஒன்று தெசலோனிக்கேயர் 5:1-3-ஐ வாசியுங்கள். “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று சீக்கிரத்தில் தேசங்கள் அறிவிக்கும். இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சியடையாதிருக்க நாம் “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.” (1 தெ. 5:6) இப்போது, இந்த முக்கிய அறிவிப்பு வருவதற்குமுன் நடக்கப்போகிற சில சம்பவங்களைச் சுருக்கமாக மறுபார்வை செய்யலாம்.
10 முதல் உலகப் போருக்குப் பிறகும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும், சமாதானத்திற்காகத் தேசங்கள் கோஷமிட்டன. முதல் உலகப் போருக்குப்பின், சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக சர்வதேச சங்கம் நிறுவப்பட்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னும், பூமியில் சமாதான சூழலை உருவாக்குவதற்காக ஐக்கிய நாட்டுச் சங்கம் நிறுவப்பட்டது. இந்த அமைப்புகள் மனிதகுலத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவரும் என்று அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் முழுமையாக நம்பினார்கள். உதாரணத்திற்கு, 1986-ஆம் ஆண்டை சர்வதேச சமாதான ஆண்டு என ஐக்கிய நாட்டுச் சங்கம் விளம்பரப்படுத்தியது. அந்த வருடம், இத்தாலியிலுள்ள அஸிஸியில், ஏராளமான நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் கத்தோலிக்க சர்ச்சின் தலைவரோடு சேர்ந்து சமாதானத்திற்காக ஜெபங்களை ஏறெடுத்தார்கள்.
11 என்றாலும், சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான அந்த அறிவிப்போ அதுபோன்ற வேறு அறிவிப்புகளோ 1 தெசலோனிக்கேயர் 5:3-ன் நிறைவேற்றம் அல்ல. ஏன்? ஏனென்றால், முன்னறிவிக்கப்பட்டபடி ‘திடீர் அழிவு’ இன்னும் வரவில்லையே!
12. “சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
12 “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற முக்கிய அறிவிப்பை வருங்காலத்தில் யார் செய்யப்போகிறார்கள்? இதில் கிறிஸ்தவமண்டலத் தலைவர்களும் மற்ற மதங்களின் தலைவர்களும் என்ன பங்கு வகிப்பார்கள்? பல்வேறு அரசாங்கத் தலைவர்கள் இதில் எப்படி உட்பட்டிருப்பார்கள்? பைபிள் இதற்கெல்லாம் பதிலளிப்பதில்லை. அந்த அறிவிப்பு எவ்விதத்தில் செய்யப்பட்டாலும் சரி எந்தளவு நம்பகமானதாகத் தொனித்தாலும் சரி, அது வெறும் மேற்பூச்சாகத்தான் இருக்குமென்று நமக்குத் தெரியும். இந்தப் பொல்லாத உலகம், அந்த அறிவிப்பிற்குப் பிறகும் சாத்தானின் பிடியில்தான் இருக்கும். இப்போது இருக்கிறபடி, சரிசெய்ய முடியாதளவு சீரழிந்து... சீர்கெட்டு... சிதைந்துதான் இருக்கும். சாத்தானின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி நம் கிறிஸ்தவ நடுநிலைமையை விட்டுவிடுவது எவ்வளவு வேதனையானது!
13. தேவதூதர்கள் அழிவுண்டாக்கும் காற்றுகளை ஏன் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்?
13 வெளிப்படுத்துதல் 7:1-4-ஐ வாசியுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:3-ன் நிறைவேற்றத்திற்காக நாம் காத்திருக்கும் இவ்வேளையில், வல்லமைமிக்க தேவதூதர்கள் மிகுந்த உபத்திரவத்தின் அழிவுண்டாக்கும் காற்றுகள் வீசாதபடி இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள்? ஒரு முக்கியமான சம்பவம் நிறைவேறுவதற்காக, அதாவது ‘நம் கடவுளுடைய ஊழியர்களான’ பரலோக நம்பிக்கையுள்ளோரின் நெற்றிகளில் கடைசி முத்திரையைப் போடுவதற்காக, காத்திருக்கிறார்கள் என அப்போஸ்தலன் யோவான் விவரிக்கிறார்.a அந்தக் கடைசி முத்திரை போட்டு முடிக்கப்பட்டதுமே, தேவதூதர்கள் அழிவுண்டாக்கும் காற்றுகளை அவிழ்த்துவிடுவார்கள். அப்போது என்ன நடக்கும்?
14. மகா பாபிலோனின் அழிவு நெருங்கிவிட்டதை எது காட்டுகிறது?
14 பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோன் அதன் கோர முடிவைச் சந்திக்கும். ‘சமுதாயங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களால்’ இனி அவளுக்கு உறுதுணையாக இருக்க முடியாது. அதன் அழிவு நெருங்கிவிட்டதற்கான சில அடையாளங்களை நாம் இப்போதே பார்க்கிறோம். (வெளி. 16:12; 17:15-18; 18:7, 8, 21) சொல்லப்போனால், மதங்களும் மதத் தலைவர்களும் செய்கிற அட்டூழியங்களை இன்றைய ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. என்றாலும், மகா பாபிலோனின் தலைவர்கள் தங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்ற மிதப்பில் இருக்கிறார்கள். எவ்வளவு தவறான எண்ணம்! “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்புக்குப்பின், சாத்தானுடைய உலகத்தின் அரசியல் அமைப்புகள் பொய் மதத்திற்கு விரோதமாக எழும்பி அதை முற்றிலுமாக அழித்துவிடும். மகா பாபிலோன் மீண்டும் தலைதூக்காது! இப்படிப்பட்ட விறுவிறுப்பான சம்பவங்களைப் பார்க்க பொறுமையோடு காத்திருப்பது நிச்சயம் வீண் அல்ல!—வெளி. 18:8, 10.
கடவுளுடைய பொறுமைக்கு நன்றிபாராட்ட வழிகள்
15. யெகோவா ஏன் பொறுமையோடு காத்திருக்கிறார்?
15 தம் பெயருக்கு மக்கள் களங்கம் ஏற்படுத்தினாலும், தக்க சமயத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார். நல்மனமுள்ள எவரும் அழிக்கப்படுவதை அவர் விரும்புவதில்லை. (2 பே. 3:9, 10) நாமும் அவரைப் போலவே உணருகிறோமா? யெகோவாவின் நாள் வரும்முன், பின்வரும் வழிகளில் நாம் அவருடைய பொறுமைக்கு நன்றிபாராட்டலாம்.
16, 17. (அ) செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு நாம் ஏன் உதவ வேண்டும்? (ஆ) செயலற்ற பிரஸ்தாபிகள் யெகோவாவிடம் உடனடியாக திரும்பி வருவது ஏன் அவசரம்?
16 செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவுங்கள். காணாமல்போன ஓர் ஆடு கண்டுபிடிக்கப்படும்போது பரலோகத்தில் சந்தோஷம் ஏற்படுவதாக இயேசு சொன்னார். (மத். 18:14; லூக். 15:3-7) ஒருவர் தற்போது செயலற்றவராக இருந்தாலும், ஒரு காலத்தில் தம்மை நேசித்ததால் அவர்மீது யெகோவா ஆழ்ந்த அக்கறையோடுதான் இருக்கிறார். அப்படிப்பட்டவர்களைத் திரும்ப சபைக்கு வரவழைக்க நாம் முயற்சி செய்யும்போது யெகோவாவும் தேவதூதர்களும் சந்தோஷப்படுகிறார்கள்.
17 நீங்கள் ஏதாவதொரு காரணத்தினால் யெகோவாவைச் சேவிப்பதை நிறுத்தியிருக்கலாம். ஒருவேளை, சபையிலுள்ள ஒருவர் உங்களைப் புண்படுத்தியிருக்கலாம்; அதனால், யெகோவாவின் அமைப்போடு உள்ள தொடர்பைத் துண்டித்திருக்கலாம். இது நடந்து கொஞ்சக் காலம் கடந்திருக்கலாம். இப்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் வாழ்க்கை இப்போது முன்பைவிட நன்றாக இருக்கிறதா, அதிக சந்தோஷமாக இருக்கிறேனா? என்னைப் புண்படுத்தியது யெகோவா தேவனா அல்லது என்னைப் போன்ற சாதாரண மனிதனா? யெகோவா எந்த விதத்திலாவது எனக்குத் தீங்கு செய்திருக்கிறாரா?’ உண்மையில், யெகோவா நம் எல்லோருக்கும் எப்போதும் நன்மையைத்தான் செய்திருக்கிறார். நம்முடைய அர்ப்பணிப்புக்கு இசைய நாம் இப்போது வாழாவிட்டாலும், நல்ல நல்ல பரிசுகளை அவர் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். (யாக். 1:16, 17) யெகோவாவின் நாள் விரைவில் வரப்போகிறது. ஆகவே, நம் அன்புத் தகப்பனின் கரங்களில்... அவருடைய சபையில்... அடைக்கலம் புகுவதற்கு இதுவே சமயம். இந்தக் கடைசி நாட்களில் இதுவே நமக்குப் பாதுகாப்பான புகலிடம்.—உபா. 33:27; எபி. 10:24, 25.
செயலற்ற பிரஸ்தாபிகள் யெகோவாவிடம் திரும்பிவர அவரது மக்கள் எல்லா முயற்சியையும் எடுக்கிறார்கள் (பாராக்கள் 16, 17)
18. முன்நின்று வழிநடத்துபவர்களுக்கு நாம் ஏன் முழு ஆதரவு காட்ட வேண்டும்?
18 முன்நின்று வழிநடத்துபவர்களுக்கு முழு ஆதரவு தாருங்கள். அன்பான மேய்ப்பராகிய யெகோவா நம்மை வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார். அவர் தம் மகனை மந்தையின் பிரதான மேய்ப்பராக நியமித்திருக்கிறார். (1 பே. 5:4) அவர்கள் நியமித்த மூப்பர்கள், 1,00,000-க்கும் அதிகமான சபைகளிலுள்ள கடவுளுடைய ஆடுகளிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார்கள். (அப். 20:28) முன்நின்று வழிநடத்துகிற மூப்பர்களுக்கு நாம் முழு ஆதரவு தரும்போது, யெகோவாவும் இயேசுவும் நமக்குச் செய்திருக்கும் எல்லாவற்றுக்கும் நன்றி காட்டுகிறோம்.
19. நாம் எப்படி ஒருவரோடு ஒருவர் நெருங்கி வரலாம்?
19 ஒருவரோடு ஒருவர் நெருங்கி வாருங்கள். இதன் அர்த்தம் என்ன? நன்கு பயிற்சிபெற்ற ஒரு ராணுவப் படையை ஓர் எதிரி தாக்கும்போது, உடனே அந்தப் படைவீரர்கள் அனைவரும் நெருங்கி வந்து அரண்போல் நின்றுகொள்வார்கள். அதேபோல், யெகோவாவின் மக்களை எதிரியாகிய சாத்தான் இன்று அதிகமாக தாக்கிவருகிறான். அதைச் சமாளிக்க, நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் நெருங்கி வரவேண்டும். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவோ, ஒருவருடைய குறைகளை ஒருவர் பெரிதுபடுத்தவோ இது நேரமல்ல. மாறாக, யெகோவாமீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்கு இதுவே சரியான நேரம்.
சாத்தானையும் பேய்களையும் எதிர்த்து ஓர் அரண்போல் நிற்க வேண்டிய நேரம் இது (பாரா 19)
20. நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
20 எனவே, நாம் எல்லோரும் ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருப்போமாக... காத்திருக்கும் மனப்பான்மையை வெளிக்காட்டுவோமாக. “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்புக்காக பொறுமையோடு காத்திருப்போமாக. பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கடைசி முத்திரை போடப்படுவதற்காக எதிர்நோக்கியிருப்போமாக. அதன்பின், நான்கு தேவதூதர்கள் அழிவுண்டாக்கும் காற்றுகளை அவிழ்த்துவிடுவார்கள், மகா பாபிலோன் அழிக்கப்படும். இத்தகைய விறுவிறுப்பான சம்பவங்களை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், யெகோவாவின் அமைப்பிலுள்ள மூப்பர்களின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வோமாக. பிசாசையும் பேய்களையும் எதிர்த்து ஓர் அரண்போல் நிற்போமாக. ஆம், சங்கீதக்காரனின் பின்வரும் அறிவுரையைப் பின்பற்றுவதற்கு இதுவே ஏற்ற நேரம்: ‘யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.’—சங். 31:24.
a பரலோக நம்பிக்கையுள்ளோர் பெறுகிற ஆரம்ப முத்திரைக்கும் கடைசி முத்திரைக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள ஜனவரி 1, 2007 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 30-31-ஐப் பாருங்கள்.