அட்டைப்பட கட்டுரை | நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?
கடவுள் எப்படி கஷ்டங்களுக்கு முடிவுகட்டுவார்?
சாத்தானால் ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்க யெகோவாவும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. “பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகவே கடவுளுடைய மகன் [இயேசு] வந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:8) இன்று உலகை ஆட்டிப்படைக்கும் பேராசை, வெறுப்பு, அநியாயம் போன்ற எல்லா கெட்ட காரியங்களும் ஒழிக்கப்படும். “இந்த உலகத்தை ஆளுகிற” பிசாசாகிய சாத்தானை ‘வீழ்த்தப்போவதாக’ இயேசு வாக்கு கொடுத்திருக்கிறார். (யோவான் 12:31) சாத்தான் இல்லாத ஒரு நீதியுள்ள உலகமாக இந்தப் பூமி மாறப்போகிறது. அப்போது எல்லோரும் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள்.—2 பேதுரு 3:13.
ஆனால், ‘திருந்தவே மாட்டோம்’ என்று விடாப்பிடியாக இருக்கும் கெட்ட ஜனங்களுக்கு என்ன நடக்கும்? “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என்று பைபிள் நேரடியாகச் சொல்கிறது. (நீதிமொழிகள் 2:21, 22) பொல்லாத மனிதர்கள் இனி அங்கே இருக்க மாட்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியும் மக்கள் மட்டும்தான் சமாதானமான அந்த உலகில் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று எந்தக் குறையுமில்லாமல் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பார்கள்.—ரோமர் 6:17, 18; 8:21.
அந்தப் புதிய உலகில் கடவுள் எப்படிக் கெட்ட காரியங்களை ஒழித்துக்கட்டுவார்? சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை பறித்துக்கொள்ளவோ மனிதர்களை ஒரு ரோபோட் போல நடத்தவோ மாட்டார். அதற்குப் பதிலாக அவர்களுக்கு நல்வழி காட்டி, தம்முடைய நெறிகளை சொல்லித் தருவார். தவறான சிந்தனையையும் செயலையும் தவிர்க்க மக்களுக்கு உதவுவார்.
கஷ்டங்களுக்குக் காரணமாக இருக்கும் எல்லாவற்றையும் கடவுள் நீக்கப்போகிறார்
எதிர்பாராமல் நடக்கும் பேரழிவுகளைக் கடவுள் தடுத்து நிறுத்துவாரா? நிச்சயம் தடுத்து நிறுத்துவார். ஏனென்றால், சீக்கிரத்தில் தம்முடைய ஆட்சி இந்தப் பூமிக்கு வரப்போவதாகக் கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார். அதில் தம்முடைய மகன் இயேசு கிறிஸ்துவை ராஜாவாக நியமித்திருக்கிறார். இயேசுவால் வியாதிகளை எல்லாம் குணமாக்க முடியும். (மத்தேயு 14:14) அவரால் இயற்கை சக்திகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். (மாற்கு 4:35-41) ‘எதிர்பாரா வேளைகளில் நடக்கும் அசம்பாவிதங்களையும்’ அவரால் தடுக்க முடியும். (பிரசங்கி 9:11, NW) இயேசுவின் ஆட்சியில் மனிதர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது என்பது நிச்சயம்!—நீதிமொழிகள் 1:33.
சரி, பரிதாபமாக உயிரிழந்த லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் கதி என்ன? இறந்துபோன தம்முடைய நண்பன் லாசருவை உயிரோடு எழுப்பிய பின் இயேசு இப்படிச் சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.” (யோவான் 11:25) அப்படியென்றால், இறந்தவர்களையும் உயிரோடு எழுப்பும் சக்தி இயேசுவுக்கு இருக்கிறது!
நல்லவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராத ஓர் உலகில் வாழப்போவதை நினைத்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதா? அப்படியென்றால் அதைச் செய்யப்போகும் கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கத்தை பற்றியும் பைபிளிலிருந்து நீங்கள் படித்து தெரிந்துகொள்ளுங்களேன்! உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சாட்சிகளை நீங்கள் தொடர்புகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளரைத் தொடர்புகொள்ளுங்கள். ▪ (w14-E 07/01)