இயேசுவைப் போல் தைரியமாக, விவேகமாக இருங்கள்
“நீங்கள் அவரைப் பார்த்ததே இல்லை என்றாலும், அவர்மீது அன்பு காட்டுகிறீர்கள். இப்போது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தாலும், அவர்மீது விசுவாசம் வைக்கிறீர்கள்.”—1 பே. 1:8.
1, 2. (அ) முடிவில்லா வாழ்க்கையைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) நம்முடைய பயணத்தில் திசை மாறி போய்விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் ஒரு பயணத்திற்கு ஒப்பிடலாம். நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால்தான், இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, முடிவில்லா வாழ்க்கையை பெற முடியும். இதை பற்றி இயேசு சொல்லும்போது, “முடிவுவரை சகித்திருப்பவனே மீட்புப் பெறுவான்” என்று சொன்னார். (மத். 24:13) “முடிவுவரை” சகித்திருக்க வேண்டுமென்றால் என்ன அர்த்தம்? இந்த கெட்ட உலகத்திற்கு முடிவு வருகிற வரைக்கும், இல்லையென்றால் நாம் சாகும் வரைக்கும் இந்த பயணத்தில் கடவுளுக்கு உண்மையோடு இருக்க வேண்டுமென்று அர்த்தம். இந்த பயணத்தில் திசை மாறி போய்விடாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். (1 யோ. 2:15-17) அதற்கு என்ன செய்ய வேண்டும்?
2 நாம் எல்லாரும் இயேசுவைப் போலவே வாழ முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், அவர்தான் நமக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். இயேசு எப்படி வாழ்ந்தார் என்று பைபிளில் படிக்கும்போது அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வோம், அவரை நேசிப்போம், அவர்மீது விசுவாசமும் வைப்போம். (1 பேதுரு 1:8, 9-ஐ வாசியுங்கள்.) “நீங்கள் [இயேசுவின்] அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பே. 2:21) இயேசுவைப் போல் வாழ்ந்தால்தான் முடிவுவரை நம்மால் சகித்திருக்க முடியும்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) போன கட்டுரையில், இயேசு எப்படி மனத்தாழ்மையாக, கனிவாக நடந்துகொண்டார் என்று பார்த்தோம். இந்தக் கட்டுரையில், அவர் எப்படி தைரியமாக, விவேகமாக நடந்துகொண்டார் என்று பார்க்கப் போகிறோம்.
இயேசு தைரியமாக இருந்தார்
3. தைரியமாக இருக்கிற ஒருவர் எப்படி இருப்பார், நமக்கு எப்படி தைரியம் கிடைக்கும்?
3 தைரியமாக இருக்கிற ஒருவர் கஷ்டங்கள் வரும்போது சோர்ந்து போய்விட மாட்டார், எல்லாவற்றையும் சகித்திருப்பார். எது சரியோ அதன் பக்கம் உறுதியாக நிற்பார். பிரச்சினைகள் வரும்போது பதட்டப்பட மாட்டார்; அந்த சமயத்திலும் கடவுளுக்கு உண்மையாக இருப்பார். தைரியம் எப்படி நம்பிக்கை, அன்பு, பயத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது என்று பார்க்கலாம். தைரியம் இருந்தால் மனிதபயம் இருக்காது, கடவுளுடைய மனதை கஷ்டப்படுத்திவிடக் கூடாது என்ற பயம் மட்டும்தான் இருக்கும். (1 சா. 11:7; நீதி. 29:25) யெகோவாமீது நம்பிக்கை இருந்தால் பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காமல் எதிர்காலத்தில் கிடைக்கப் போகிற நல்ல வாழ்க்கையை நினைத்து தைரியமாக இருப்போம். (சங். 27:14) நமக்கு சுயநலம் இல்லாத அன்பு இருந்தால் துன்புறுத்துதல்கள் மத்தியிலும் தைரியமாக இருப்போம். (யோவா. 15:13) யெகோவாவை நம்பி இருக்கும்போதும்... அவருடைய மகனைப் போல் நடக்கும்போதும்... நமக்கு தைரியம் கிடைக்கும்.—சங். 28:7.
4. ஆலயத்தில் இயேசு எப்படி தைரியமாக பேசினார்? (ஆரம்பப் படம்)
4 இயேசு சிறு வயதிலேயே எப்படி தைரியத்தை காட்டினார் என்று பாருங்கள். அவருக்கு 12 வயது இருந்தபோது ஆலயத்தில் ‘போதகர்கள் நடுவில் உட்கார்ந்து’ அவர்களிடம் தைரியமாக பேசிக்கொண்டு இருந்தார். (லூக்கா 2:41-47-ஐ வாசியுங்கள்.) அந்த போதகர்கள் திருச்சட்டத்தை கரைத்து குடித்திருந்தார்கள், யூத பாரம்பரியத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த பாரம்பரியத்தால் திருச்சட்டத்தை கடைப்பிடிப்பது மக்களுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த போதகர்களுக்கு அவ்வளவு விஷயம் தெரிந்திருந்தாலும் இயேசு அவர்களைப் பார்த்து கொஞ்சம்கூட பயப்படவில்லை. அவர்களிடம் ‘கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்.’ அவர் சிறு பிள்ளைகள் கேட்கிற மாதிரி கேள்விகளை கேட்கவில்லை, அவர்களை யோசிக்க வைக்கிற மாதிரி முக்கியமான கேள்விகளைக் கேட்டார். ஒருவேளை, அந்த மதப் போதகர்கள் இயேசுவை கேள்வி கேட்டு மடக்கிவிடலாம் என்று நினைத்திருந்தால் அது நிச்சயம் நடந்திருக்காது. ஏனென்றால், இயேசுவின் “புத்திக்கூர்மையைக் கண்டும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் அங்கிருந்த எல்லாருமே,” மதப் போதகர்களும்கூட, மலைத்துப் போனார்கள். அப்படியென்றால், இயேசு கடவுளுடைய வார்த்தையில் இருந்த உண்மைகளை எவ்வளவு தைரியமாக எடுத்து சொல்லியிருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்!
5. ஊழியத்தில் இயேசு எப்படி தைரியத்தை காட்டினார்?
5 ஊழியம் செய்யும்போது இயேசு எப்படியெல்லாம் தைரியத்தை காட்டினார்? மதத் தலைவர்களின் முகத் திரையை கிழித்தார்; பொய் போதனைகளால் அவர்கள் மக்களை ஏமாற்றினதை வெளிச்சம் போட்டு காட்டினார். (மத். 23:13-36) அதோடு, இந்த உலகத்தில் இருந்த எந்த விஷயமும் அவரை திசை திருப்ப அவர் விடவில்லை. (யோவா. 16:33) எவ்வளவுதான் எதிர்ப்பு வந்தாலும் அவர் ஊழியத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார். (யோவா. 5:15-18; 7:14) யெகோவாவின் ஆலயத்தை சந்தை கடையாக மாற்றி இருந்த வியாபாரிகளை இரண்டு தடவை விரட்டியடித்தார்.—மத். 21:12, 13; யோவா. 2:14-17.
6. பூமியில் வாழ்ந்த கடைசி நாள் அன்று இயேசு எப்படி தைரியத்தை காட்டினார்?
6 பூமியில் வாழ்ந்த கடைசி நாள் அன்றுகூட இயேசு எப்படி தைரியத்தை காட்டினார் என்று பாருங்கள். யூதாஸ் தன்னை காட்டிக்கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், பஸ்கா பண்டிகையின்போது யூதாசை பார்த்து, “நீ செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்று தைரியமாக சொன்னார். (யோவா. 13:21-27) அதற்குப் பிறகு கெத்செமனே தோட்டத்தில் படைவீரர்கள் அவரை கைது செய்ய வந்தபோது அவர் எங்கேயும் போய் ஓடி ஒளியவில்லை. ‘நீங்கள் தேடி வந்த இயேசு நான்தான்’ என்று அவர்களிடமே தைரியமாக சொன்னார். அவருடைய உயிர் ஆபத்தில் இருந்தபோதுகூட சீடர்களுடைய உயிரை காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். அதனால் அந்தப் படைவீரர்களை பார்த்து, “இவர்களைப் போகவிடுங்கள்” என்று சொன்னார். (யோவா. 18:1-8) அடுத்ததாக அவரை யூத உயர் நீதிமன்றத்திற்கு கொண்டுபோனார்கள். அங்கிருந்த தலைமை குரு இயேசுவை விசாரித்துக்கொண்டு இருந்தார். இயேசு சொல்கிற வார்த்தையை வைத்தே அவரை மாட்டிவிட வேண்டுமென்று சமயம் பார்த்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில்கூட இயேசு பயப்படவில்லை, ‘நான்தான் கிறிஸ்து, கடவுளுடைய மகன்’ என்று தைரியமாக சொன்னார். (மாற். 14:60-65) கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அதனால்தான், கழுமரத்தில் சாகும்போது “முடிந்துவிட்டது!” என்று சொல்லி அவருடைய கடைசி மூச்சை விட்டார்.—யோவா. 19:28-30.
நாம் எப்படி தைரியத்தை காட்டலாம்?
7. யெகோவாவின் சாட்சியாக இருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் தைரியமாக இருப்பதை எப்படி காட்டலாம்?
7 பள்ளியில். இளம் பிள்ளைகளே, உங்களுடன் படிக்கிற பிள்ளைகளும் மற்றவர்களும் கிண்டல் செய்தாலும் நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்கிறீர்களா? அப்படி சொன்னால் நீங்கள் தைரியமாக இருப்பதை காட்டுகிறீர்கள். அதோடு, யெகோவாவுக்கு சாட்சியாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுவதையும் காட்டுகிறீர்கள். (சங்கீதம் 86:12-ஐ வாசியுங்கள்.) பள்ளியில் சிலர், ‘கடவுள் இந்த பூமியை படைக்கல, எல்லாமே தானாவே வந்தது’ என்று அடித்து சொல்லலாம். ஆனால், கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. அதனால் உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களுக்கு, உயிரின் தோற்றம் சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிறுபுத்தகத்தில் இருந்து பதில் சொல்லுங்கள். (1 பே. 3:15) அப்படி செய்யும்போது நீங்கள் பைபிள் சத்தியத்தை ஆதரித்து தைரியமாக பேசியிருப்பதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள்!
8. தைரியமாக ஊழியம் செய்வதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
8 ஊழியத்தில். உண்மை கிறிஸ்தவர்களாக இருக்கிற நாம் எப்போதுமே ‘யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேச வேண்டும்.’ (அப். 14:3) அதற்கு மூன்று காரணங்களைப் பார்க்கலாம். முதலாவதாக, நாம் பைபிளில் இருக்கிற விஷயங்களைத்தான் பேசுகிறோம். ஏனென்றால், அதில் இருக்கிற விஷயங்கள்தான் உண்மை. (யோவா. 17:17) இரண்டாவதாக, நாம் கடவுளுடைய ‘சக வேலையாட்களாக’ இருப்பதால் அவருடைய சக்தியை நமக்கு கொடுத்திருக்கிறார். (1 கொ. 3:9; அப். 4:31) மூன்றாவதாக, நாம் யெகோவாமீதும் மக்கள்மீதும் அன்பு வைத்திருக்கிறோம். அதனால் மக்களுக்கு பைபிளில் இருக்கிற நல்ல செய்தியை சொல்ல ஆசைப்படுகிறோம். (மத். 22:37-39) நாம் தைரியமாக இருப்பதால் ஊழியம் செய்வதை எப்போதும் நிறுத்த மாட்டோம்! இன்று இருக்கிற நிறைய மதத் தலைவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுக்காமல் அவர்களுடைய மனதை ‘குருடாக்கி’ இருக்கிறார்கள். (2 கொ. 4:4) அதனால், பைபிளில் இருக்கிற உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டுமென்று நாம் உறுதியாக இருக்கிறோம். மற்றவர்கள் நம் செய்தியை கேட்காமல் போகலாம், நம்மை துன்புறுத்தலாம். இருந்தாலும் நாம் தொடர்ந்து ஊழியம் செய்துகொண்டே இருப்போம்.—1 தெ. 2:1, 2.
9. கஷ்டங்கள் வரும்போது நாம் எப்படி தைரியமாக இருக்கலாம்?
9 கஷ்டங்கள் வரும்போது. நாம் யெகோவாமீது நம்பிக்கை வைத்தால் கஷ்டங்களை சமாளிக்க நமக்கு விசுவாசத்தையும் தைரியத்தையும் அவர் தருவார். அதனால்தான், நமக்கு பிடித்தவர்கள் யாராவது இறக்கும்போது வேதனையாக இருந்தாலும் நம்பிக்கை இழந்துவிட மாட்டோம். ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவா நமக்கு சக்தி தருவார் என்று நம்புவோம். (2 கொ. 1:3, 4; 1 தெ. 4:13) நமக்கு ஏதாவது வியாதி வந்தாலோ விபத்தில் அடிபட்டாலோ யெகோவாவுக்கு பிடிக்காத சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள மாட்டோம். (அப். 15:28, 29) நாம் சோர்ந்து போயிருக்கிற சமயத்தில் “நம்முடைய இருதயம் நம்மைக் கண்டனம்” செய்யலாம். இருந்தாலும் நாம் சோகத்தில் மூழ்கிவிட மாட்டோம். ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபமாயிருப்பதால்’ அவர்மீது நம்பிக்கையாக இருப்போம்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—1 யோ. 3:19, 20; சங். 34:18.
இயேசு விவேகமாக நடந்துகொண்டார்
10. விவேகம் என்றால் என்ன, பேசும் விதத்திலும் நடந்துகொள்ளும் விதத்திலும் ஒருவர் எப்படி விவேகமாக இருக்கலாம்?
10 எது சரி எது தவறு என்று பகுத்தறிந்து கொண்டு அதாவது புரிந்துகொண்டு சரியானதை செய்வதுதான் விவேகம். (எபி. 5:14) விவேகமாக நடந்துகொள்கிற ஒரு கிறிஸ்தவர் யெகோவாவுக்கு பிடித்த தீர்மானங்களைத்தான் எடுப்பார். மற்றவர்கள் மனதை காயப்படுத்துகிற விதத்தில் பேச மாட்டார். அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசி யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்துவார். (நீதி. 11:12, 13) விவேகமாக இருக்கிற ஒருவர் ‘நீடிய சாந்தமுள்ளவராக’ இருப்பார். அதாவது, சீக்கிரத்தில் கோபப்பட மாட்டார். (நீதி. 14:29) அவர் ‘தன் நடக்கையைச் செம்மைப்படுத்துவார்.’ அதாவது, அவர் எல்லா சமயத்திலும் சரியான தீர்மானங்களை எடுப்பார். (நீதி. 15:21) நீங்கள் விவேகமாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், பைபிளைப் படித்து அதில் சொல்லி இருக்கிற விதமாகவே நடந்துகொள்ளுங்கள். (நீதி. 2:1-5, 10, 11) அதோடு, இயேசுவைப் போலவே நடக்க முயற்சி செய்யுங்கள்.
11. இயேசு எப்படி விவேகமாக பேசினார்?
11 பேசிய விதத்திலும் நடந்துகொண்ட விதத்திலும் இயேசு விவேகத்தை காட்டினார். பேசிய விதம். அவர் ஜனங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தபோது ரொம்ப கனிவாக பேசினார். ‘அங்கிருந்த எல்லாரும் அவர் பேசிய மனங்கவரும் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (மத். 7:28; லூக். 4:22) அவர் எப்போதுமே கடவுளுடைய வார்த்தையில் இருந்துதான் பேசினார். எந்த சூழ்நிலைமைக்கு எந்த வசனம் பொருந்தும் என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். (மத். 4:4, 7, 10; 12:1-5; லூக். 4:16-21) அதுமட்டுமல்ல, பைபிள் வசனங்களை அவர் விளக்கிய விதம் மக்களுடைய மனதை தொட்டது. உதாரணத்திற்கு, அவர் உயிர்த்தெழுந்து வந்தபோது எம்மாவு ஊருக்கு போய்க்கொண்டிருந்த இரண்டு சீடர்களிடம் பேசினார். தம்மைப் பற்றி பைபிளில் சொல்லி இருந்த வசனங்களை அவர்களுக்கு தெளிவாக விளக்கினார். அதனால்தான் அவர்கள், “வழியில் அவர் நம்மோடு பேசி, வேதவசனங்களை நமக்கு முழுமையாக விளக்கிக் காட்டியபோது நம்முடைய இருதயம் பரவசமடைந்தது அல்லவா?” என்று சொன்னார்கள்.—லூக். 24:27, 32.
12, 13. இயேசு சீக்கிரத்தில் கோபப்படவில்லை, நியாயமாக நடந்துகொண்டார் என்று எப்படி சொல்லலாம்?
12 உணர்ச்சியை வெளிப்படுத்திய விதமும் நடந்துகொண்ட விதமும். இயேசுவுக்கு விவேகம் இருந்ததால்தான் அவர் சீக்கிரத்தில் கோபப்படவில்லை. (நீதி. 16:32) அவர் ‘சாந்தமாக’ இருந்தார், தம்முடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினார். (மத். 11:29) சீடர்கள் தவறு செய்தபோதுகூட இயேசு கோபப்படாமல், அவர்களிடம் பொறுமையாகவே இருந்தார். (மாற். 14:34-38; லூக். 22:24-27) அவருடைய எதிரிகள் அவரை கேவலமாக நடத்தியபோதும் தம்முடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு சாந்தமாக இருந்தார்.—1 பே. 2:23.
13 அவருக்கு விவேகம் இருந்ததால், மக்களிடம் நியாயமாக நடந்துகொண்டார். திருச்சட்டத்தை அவர் நன்றாகப் புரிந்து வைத்திருந்ததால் மக்களை அன்பாக நடத்தினார். இதற்கு, ‘இரத்தப்போக்கினால்’ கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் உதாரணத்தை கவனியுங்கள். (மாற்கு 5:25-34-ஐ வாசியுங்கள்.) இயேசு நடந்து போய் கொண்டிருந்தது, அந்தப் பெண் கூட்டத்திற்குள் புகுந்து இயேசுவின் அங்கியை தொட்டாள், உடனே குணமானாள். ஆனால், திருச்சட்டத்தின்படி அவள் தீட்டானவளாக இருந்ததால் அவள் அப்படி செய்தது தவறு. (லேவி. 15:25-27) இந்த தவறுக்காக இயேசு அந்தப் பெண்ணை திட்டினாரா? இல்லை. அவள்மீது இரக்கப்பட்டு, “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ. உன்னைப் பாடுபடுத்திய நோயிலிருந்து விடுபட்டு நலமாயிரு” என்று சொன்னார். திருச்சட்டத்தை கறாராக கடைப்பிடிப்பதைவிட அது ‘குறிப்பிடுகிற இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான’ குணங்களை காட்டுவதுதான் ரொம்ப அவசியம் என்று இயேசு புரிந்து வைத்திருந்தார். (மத். 23:23) விவேகம் இருந்ததால்தான் இயேசு இவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்!
14. என்ன வேலை செய்ய இயேசு அவருடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார், கவனம் சிதறாமல் இருக்க என்ன செய்தார்?
14 வாழ்ந்த விதம். இயேசு வாழ்ந்த விதம் அவர் விவேகமாக இருந்தார் என்று காட்டுகிறது. எப்படி? ஊழியம் செய்வதற்குத்தான் இயேசு அவருடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தார். (லூக். 4:43) ஊழியத்தில் அவருடைய கவனம் சிதறாமல் இருக்கவும் அதை வெற்றிகரமாக செய்து முடிக்கவும் அவர் உறுதியாக இருந்தார். இதை மனதில் வைத்துத்தான் எல்லா தீர்மானங்களையும் எடுத்தார். உதாரணத்திற்கு அவருடைய நேரத்தையும், சக்தியையும் ஊழியத்தில் செலவு செய்வதற்காக அவருடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டார். (லூக். 9:58) அதோடு, அவர் இறந்த பிறகும் ஊழிய வேலை தொடர்ந்து நடக்க வேண்டுமென்று நினைத்தார். அதனால் ஊழியம் செய்ய மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். (லூக். 10:1-12; யோவா. 14:12) “உலகத்தின் முடிவுகாலம்வரை” சீடர்களுக்கு உதவி செய்வதாகவும் வாக்குக் கொடுத்தார்.—மத். 28:19, 20.
நாம் எப்படி விவேகமாக இருக்கலாம்?
எந்த விஷயங்கள் மக்களுக்கு ஆர்வமாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள், அதற்கு ஏற்ற மாதிரி பேசுங்கள் (பாரா 15)
15. நாம் எப்படி விவேகமாக பேசலாம்?
15 இயேசுவைப் போல் நாம் எப்படி விவேகமாக இருக்கலாம்? பேச்சில். நம் சகோதர சகோதரிகள் சோர்ந்து போகும் விதத்தில் நாம் பேச கூடாது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலேயே பேச வேண்டும். (எபே. 4:29) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகிற போதும் “சுவையாக,” அதாவது பக்குவமாக, பேச வேண்டும். (கொலோ. 4:6) நாம் விவேகமாக இருந்தோம் என்றால் மக்களுக்கு என்ன தேவை, என்ன விஷயம் அவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசித்துப் பார்ப்போம். அதற்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசுவோம். நாம் அன்பாக, பக்குவமாக பேசினால் நாம் சொல்கிற செய்தியை மக்கள் காதுகொடுத்துக் கேட்கலாம், அது அவர்கள் மனதையும் தொடலாம். அதோடு, நாம் நம்புகிற விஷயங்களை பைபிளில் இருந்து காட்ட வேண்டும். ஏனென்றால் கடவுளுடைய வார்த்தைதான் நாம் பேசும் விஷயங்களுக்கு ஆதாரம். கடவுளுடைய வார்த்தையான பைபிளுக்கு அதிக சக்தி இருப்பதால், பைபிள் வசனங்களை எடுத்து காட்டும்போது அந்த செய்தி மக்களுடைய மனதை தொடும்.—எபி. 4:12.
16, 17. (அ) நாம் நியாயமாக நடந்துகொள்வோம், சட்டென்று கோபப்பட மாட்டோம் என்று எப்படி காட்டலாம்? (ஆ) ஊழியத்திற்கு அதிக கவனம் செலுத்த என்ன செய்வோம்?
16 உணர்ச்சியை வெளிப்படுத்துகிற விதத்திலும் நடந்துகொள்கிற விதத்திலும். நமக்கு விவேகம் இருந்தால், எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்போம், சீக்கிரத்தில் கோபப்பட மாட்டோம். (யாக். 1:19) யாராவது நம் மனதை காயப்படுத்துகிற மாதிரி பேசிவிட்டாலோ நடந்துகொண்டாலோ, அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். அப்படி செய்யும்போது அவர்களை மன்னிப்பது நமக்கு கஷ்டமாக இருக்காது, அவர்கள்மீது நமக்கு கோபமும் இருக்காது. (நீதி. 19:11) நமக்கு விவேகம் இருந்தால், நம் சகோதர சகோதரிகளிடம் நியாயமாக நடந்துகொள்வோம், அவர்களிடம் இருந்து அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்க மாட்டோம். அவர்களுக்கும் வாழ்க்கையில் நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது என்று புரிந்துகொள்வோம். அதோடு, அவர்கள் சொல்கிற கருத்துகளை காதுகொடுத்து கேட்போம், ‘நான் நினைச்சபடிதான் செய்யணும்’ என்று பிடிவாதமாக இருக்க மாட்டோம்.—பிலி. 4:5.
17 வாழும் விதம். பிரசங்க வேலை நமக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். அதனால், ஊழியத்திற்கு அதிக கவனம் செலுத்தும் விதமான தீர்மானங்களையே எடுப்போம். அதோடு, நம் வாழ்க்கையில் யெகோவாவுக்குத்தான் முதலிடம் கொடுப்போம். நம்முடைய நேரம், சக்தி எல்லாவற்றையும் ஊழியத்தில் செலவு செய்வதற்காக நம் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வோம்.—மத். 6:33; 24:14.
18. முடிவில்லா வாழ்க்கைக்கான பயணத்தில் திசை மாறி போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், நீங்கள் என்ன செய்ய முடிவு செய்திருக்கிறீர்கள்?
18 இயேசுவின் 4 குணங்களைப் பற்றி படித்ததே நமக்கு இவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்றால், அவருடைய மற்ற குணங்களைப் பற்றி படிக்கும்போது இன்னும் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்! அந்த குணங்களை எல்லாம் காட்டுவது எப்படி என்று தெரிந்துகொள்ளும்போது அது நமக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்! அதனால், இயேசுவைப் போலவே நடக்க நாம் எல்லாரும் உறுதியாக இருக்கலாம். அப்படி செய்தால் முடிவில்லா வாழ்க்கைக்கான பயணத்தில் திசை மாறி போகாமல் இருப்போம். யெகோவாவின் நண்பராகவும் இருப்போம்.
a ஒன்று பேதுரு 1:8, 9-ஐ பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்களுக்காக பேதுரு எழுதியிருந்தாலும், இதில் இருக்கிற விஷயங்கள் பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
b கஷ்டங்கள் வந்தபோது அதை தைரியமாக சமாளித்த சிலருடைய அனுபவத்தை, டிசம்பர் 1, 2000 காவற்கோபுரம் பக்கங்கள் 24-28, மே 8, 2003 விழித்தெழு! பக்கங்கள் 18-21, ஜனவரி 22, 1995 விழித்தெழு! பக்கங்கள் 11-15-ஐ பாருங்கள்.