உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w18 பிப்ரவரி பக். 31-32
  • பொதுப் பேச்சுகள் அயர்லாந்தில் நல்ல செய்தியைப் பரப்பின

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொதுப் பேச்சுகள் அயர்லாந்தில் நல்ல செய்தியைப் பரப்பின
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
w18 பிப்ரவரி பக். 31-32
லூஸிட்டானியா கப்பலில் சகோதரர் ரஸல் நின்றுகொண்டிருக்கிறார்

நம் வரலாற்றுச் சுவடுகள்

பொதுப் பேச்சுகள் அயர்லாந்தில் நல்ல செய்தியைப் பரப்பின

அது மே 1910! பெல்ஃபாஸ்ட் லாக் என்ற கடற்கழியை நோக்கி படகு போய்க்கொண்டிருந்தது. சில பயணிகள் கப்பற்தளத்தில் நின்றுகொண்டு, விடியற்கால சூரிய ஒளியில் நனைந்துகொண்டிருந்த பச்சைப் பசேலென்ற குன்றுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் சார்ல்ஸ் டி. ரஸல்! அவர் ஐந்தாவது முறையாக அயர்லாந்துக்குப் போய்க்கொண்டிருந்தார். பிரமாண்டமாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த டைட்டானிக் மற்றும் ஒலிம்பிக் கப்பல்கள் அவர் கண்ணில் படுகின்றன.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கப்பல்கூடத்துக்குப் பின்னால், பன்னிரண்டு பைபிள் மாணாக்கர்கள் கப்பல்துறையில் நின்றுகொண்டு, அவருக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

உலகம் முழுவதும் நல்ல செய்தியைப் பரப்ப, மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்வதுதான் சிறந்த வழி என்று கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்பு சகோதரர் ரஸல் முடிவு எடுத்திருந்தார். அதனால், ஜூலை 1891-ல், அமெரிக்காவிலிருந்து தன்னுடைய முதல் பயணத்தை ஆரம்பித்தார், அதாவது சிட்டி ஆஃப் சிகாகோ என்ற கப்பலில் அவர் அயர்லாந்துக்குப் புறப்பட்டுப் போனார். கப்பலிலிருந்து பார்த்தபோது, குயின்ஸ்டவுனின் (இன்றைய கோவ் ஊரின்) கடலோரப் பகுதியும் அங்கே சூரியன் அஸ்தமிப்பதும் தெரிந்தது. அப்போது, அவருடைய அப்பா அம்மா தங்களுடைய சொந்த நாட்டைப் பற்றி வர்ணித்திருந்தது அவருடைய ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். நேர்த்தியான ஊர்களையும் அழகான கிராமப்புறங்களையும் சகோதரர் ரஸலும் அவரோடு சேர்ந்து பயணம் செய்தவர்களும் கடந்துபோனபோது, வயல் “அறுவடைக்குத் தயாராக இருப்பதை” உணர்ந்தார்கள்.

மொத்தம் ஏழு தடவை சகோதரர் ரஸல் அயர்லாந்துக்குப் பயணம் செய்தார். முதல் தடவை போனபோது அவர் கொடுத்த பேச்சு மக்களின் ஆர்வத்தைத் தூண்டியதால், அடுத்தடுத்த சந்திப்புகளின்போது நூற்றுக்கணக்கானவர்களும், சிலசமயங்களில் ஆயிரக்கணக்கானவர்களும் அவருடைய பேச்சைக் கேட்க வந்தார்கள். மே 1903-ல் அவர் இரண்டாவது தடவையாக அயர்லாந்துக்குப் போனபோது, பெல்ஃபாஸ்ட் மற்றும் டப்ளினில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டங்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்பட்டன. “உறுதிமொழியாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி” என்ற பேச்சை, “கூடிவந்திருந்தவர்கள் ரொம்ப கவனமாகக் கேட்டார்கள்” என்று ரஸல் சொன்னார். அந்தப் பேச்சு, ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றியும் மனிதர்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் விளக்கியது.

அயர்லாந்தில் இருந்த மக்கள் மிகவும் ஆர்வம் காட்டியதால், சகோதரர் ரஸல் தன்னுடைய மூன்றாவது ஐரோப்பிய பயணத்தின்போது அயர்லாந்துக்குப் போனார். 1908-ம் வருஷம், ஏப்ரல் மாதம், ஒருநாள் காலையில், பெல்ஃபாஸ்ட்டில் இருந்த கப்பல்கூடத்தில் வந்து இறங்கிய சகோதரர் ரஸலை ஐந்து சகோதரர்கள் வரவேற்றார்கள். விளம்பரம் செய்யப்பட்டிருந்தபடி, “சாத்தானின் சாம்ராஜ்யம் கவிழ்க்கப்படும்” என்ற தலைப்பில் ஒரு பொதுப் பேச்சு அன்று மாலை கொடுக்கப்பட்டது. “ஆர்வமுள்ள கிட்டத்தட்ட 300 பேர் அதைக் கேட்டார்கள்.” ஒருவர் எதிர்க்கேள்விகள் கேட்டார்; அப்போதே, அவருக்கு பைபிளிலிருந்து திறமையாகப் பதில் சொல்லப்பட்டது. டப்ளின் நகரத்தில், YMCA-வின் செயலாளராக இருந்த திரு. ஓகானர் இன்னும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். பேச்சைக் கேட்க வந்திருந்த 1,000-க்கும் அதிகமானவர்களை பைபிள் மாணாக்கர்களுக்கு எதிராகத் திருப்பிவிட முயற்சி செய்தார். ஆனால், என்ன நடந்தது?

நாம் அந்தச் சமயத்துக்குப் போகலாம், வாருங்கள்! ஒரு பொதுப் பேச்சைப் பற்றி தி ஐரிஷ் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் வருகிறது. பைபிள் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் ஒருவர், அந்தக் கூட்டத்துக்குப் போவதென்று முடிவெடுக்கிறார். அரங்கத்தில் கூட்டம் அலைமோதுகிறது, அவர் எப்படியோ ஒரு இருக்கையைக் கண்டுபிடித்து உட்காருகிறார். நரைமுடியும் தாடியும் கொண்ட ஒருவர்... நீளமான கருப்பு கோட் போட்டிருப்பவர்... அங்கே பேச்சுக் கொடுக்கிறார். மேடையில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே, சைகைகளோடும் முகபாவங்களோடும் பேசுகிறார். வசனங்களை அடுத்தடுத்து கோர்வையாக எடுத்துச் சொல்கிறார். அதை அந்த நபர் ரொம்ப உன்னிப்பாகக் கவனிக்கிறார். அதைக் கேட்க கேட்க அவருடைய மனக்கண்கள் திறக்கின்றன. ஒலிக் கருவிகள் எதுவும் இல்லாமலேயே அரங்கம் முழுவதும் பேச்சாளரின் குரல் எதிரொலிக்கிறது. வந்திருக்கிற எல்லாருடைய கவனத்தையும் 11/2 மணிநேரமாக அவர் ஈர்த்துப்பிடித்திருக்கிறார். பிறகு, கேள்வி-பதில் பகுதி ஆரம்பமாகிறது. ஓகானரும் அவருடைய நண்பர்களும் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால், பேச்சாளர் பைபிளிலிருந்து திறமையாகப் பதில் சொல்கிறார். வந்திருப்பவர்கள் கைதட்டி, தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். ஆரவாரம் அடங்கிய பிறகு, ஆர்வமுள்ள அந்த நபர் சகோதரர்களிடம் வந்து, இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாகச் சொல்கிறார். இப்படித்தான் நிறையப் பேர் சத்தியத்தைத் தெரிந்துகொண்டதாக, நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

மே 1909-ல், சகோதரர் ரஸல் நியு யார்க்கிலிருந்து மாரிட்டானியா என்ற கப்பலில் ஏறி, தன்னுடைய நான்காவது பயணத்தை ஆரம்பித்தார். பயணம் செய்யும் நேரத்தை வீணாக்காமல் காவற்கோபுர கட்டுரைகளை எழுத அவர் முடிவு செய்தார்; அதனால், தான் சொல்லச் சொல்ல அவற்றை எழுதுவதற்காக, சுருக்கெழுத்தரான (stenographer) சகோதரர் ஹன்ட்சிங்கரைக் கூட்டிக்கொண்டு போனார். பெல்ஃபாஸ்ட்டில் சகோதரர் ரஸல் கொடுத்த பொதுப் பேச்சைக் கேட்க உள்ளூரிலிருந்து 450 பேர் வந்திருந்தார்கள். இடம் இல்லாததால் அவர்களில் கிட்டத்தட்ட 100 பேர் நின்றுகொண்டே பேச்சைக் கேட்க வேண்டியிருந்தது.

லூஸிட்டானியா கப்பலில் சகோதரர் ரஸல் நின்றுகொண்டிருக்கிறார்

லூஸிட்டானியா கப்பலில் சகோதரர் சி. டி. ரஸல்

ஆரம்பத்தில் சொன்ன ஐந்தாவது பயணத்திலும், எப்போதும் போலவே நடந்தது. டப்ளினில் சகோதரர் ரஸல் பொதுப் பேச்சு கொடுத்த பிறகு, ஓகானரால் கூட்டிக்கொண்டு வரப்பட்ட ஒரு பிரபலமான இறையியலாளர் கேள்விகள் கேட்டார்; சகோதரர் ரஸல் பைபிளிலிருந்தே சொன்ன பதில்களை எல்லாரும் ரசித்துக் கேட்டார்கள். அடுத்த நாள், தபால்களைக் கொண்டுபோகும் அதிவேகக் கப்பலில் ஏறி, லிவர்பூலுக்கு சகோதரர்கள் போனார்கள். பிறகு, புகழ்பெற்ற லூஸிட்டானியா கப்பலில் ஏறி, நியு யார்க் நகரத்துக்குக் கிளம்பினார்கள்.b—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

சகோதரர் ரஸல் கொடுத்த பொதுப் பேச்சை விளம்பரப்படுத்திய தி ஐரிஷ் டைம்ஸ் செய்தித்தாள்

மே 20, 1910 தேதியிட்ட தி ஐரிஷ் டைம்ஸ் செய்தித்தாளில், ஒரு பொதுப் பேச்சைப் பற்றி வெளிவந்த விளம்பரம்

1911-ல், சகோதரர் ரஸல் செய்த ஆறாவது, ஏழாவது பயணங்களின்போதும் பொதுப் பேச்சுகள் விளம்பரம் செய்யப்பட்டன. அந்த வருஷத்தின் வசந்த காலத்தில், பெல்ஃபாஸ்ட்டில் இருந்த 20 பைபிள் மாணாக்கர்கள், “மரணத்துக்குப் பின்” என்ற பேச்சுக்கு வந்திருந்த 2,000 பேரை வரவேற்று அவர்களைக் கவனித்துக்கொண்டார்கள். டப்ளினில் கொடுக்கப்பட்ட பேச்சுக்கு ஓகானர் இன்னொரு ஊழியரைக் கூட்டிக்கொண்டு வந்தார். அந்த ஊழியர் கேட்ட கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில் சொல்லப்பட்டதைக் கேட்டு, கூடிவந்திருந்தவர்கள் கைதட்டினார்கள். அதே வருஷத்தின் இலையுதிர் காலத்தில், மற்ற ஊர்களிலும் பேச்சுகள் கொடுக்கப்பட்டன. அதைக் கேட்கவும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். டப்ளினில் நடந்த கூட்டத்தில் கலவரத்தை உண்டாக்க மறுபடியும் ஓகானரும் 100 ரவுடிகளும் முயற்சி செய்தார்கள்; ஆனால், கூடிவந்திருந்த எல்லாரும் பேச்சாளருக்குத்தான் முழு ஆதரவு காட்டினார்கள்.

அந்தச் சமயத்தில் சகோதரர் ரஸல்தான் முக்கியமாகப் பொதுப் பேச்சுகள் கொடுத்துவந்தார்; ஆனாலும், “இது மனிதனுடைய வேலை அல்ல, கடவுளுடைய வேலை” என்பதால், “எந்த மனிதனும் முக்கியமல்ல” என்பதை அவர் புரிந்துவைத்திருந்தார். விளம்பரம் செய்யப்பட்ட பொதுப் பேச்சுகள், பொதுக் கூட்டத்தின் முன்னோடியாக இருந்தன. பைபிள் சத்தியங்களை விளக்குவதற்கு அவை அருமையான வழியாக இருந்தன. பொதுப் பேச்சுகளினால் அயர்லாந்தில் இருந்த எல்லா இடங்களுக்கும் நல்ல செய்தி பரவியது; அதோடு, நிறைய நகரங்களில் புதிய சபைகள் உருவாயின.—பிரிட்டனின் வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.

a இரண்டு வருஷங்களில் டைட்டானிக் மூழ்கிவிட்டது.

b மே 1915-ல், அயர்லாந்தின் தெற்குக் கரையோரத்தில், நீர்மூழ்கிக்குண்டினால் தாக்கப்பட்ட லூஸிட்டானியா கப்பல் கடலில் மூழ்கியது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்